தமிழ் அரங்கம்

Wednesday, September 7, 2005

பெண்ணின் கற்புரிமையை...

பெண்ணின் கற்புரிமையை பாதுகாக்கும் போராட்டத்தில், உருவகமான ஆணாதிக்க 'கற்பு' என்ற அடித்தளத்தை தகர்ப்பது எப்படி?

''கற்பு'' என்ற சொல்லை கைவிடாமல் பாவிப்பவர்கள் என ''கேள்வி'' கடந்து கோட்பாடு அற்று விவாதிக்கின்றனர். இங்கு ''கேள்வி''யல்ல முடிவாக கூறும் போதுதான் இதன் அரசியல் வெட்ட வெளிச்சமாக புரிகின்றது. ''கற்பு'' என்பதை கருத்துமுதல்வாதமாக புரிகின்ற போது கருத்தால் மறுப்பது நிகழ்கின்றது. நேரடியாக பொருள் அல்லாத விளைவுகளில் கருத்துமுதல்வாதம், பொருள்முதல்வாதம் தொடர்பான விவாதத்தை இது கோருகின்றது. தேசியம், வர்க்கப்போராட்டம் போன்றன பொருள்முதல்வாதம் சார்ந்ததா? அல்லது கருத்துமுதல்வாதம் சார்ந்தா? என்ற கேள்வி எழுகின்றது. சமுதாயத்தில் உடன்பாடற்றவைகளை கருத்துமுதல்வாதமாக காட்டி விளக்குவது பொருள்முதல்வாதத்தை மறுப்பதாகும்.
மக்களிடம் அன்னியப்பட்ட புத்தியீவிகள், மக்களுக்கு அன்னியமான கோட்பாடு கொண்டோர் "கற்பழிப்பு"க்கு எதிராக "கற்பு" என்ற கோட்பாட்டை எதிர்த்து போராடுவதற்கு பதில் மொழியில் ஒளித்து (என்னதான் சொல்லை மாற்றினாலும் ஆணாதிக்க சமூக அமைப்பில் அச் சொல்லுக்குரிய அர்த்தங்கள் மாறிவிடுவதில்லை. மாறுவதாயின் சமூக அமைப்பு மாறவேண்டும்.) விளையாடுகின்றனர்.
"கற்பழிப்பில்" ஈடுபடும் ஒருவன் பெண்ணுக்கு "கற்பு"ரிமை உண்டு என்ற ஆணாதிக்க நிலையில் நின்று, அதை அழித்து சூறையாடும் போது, அதற்கு எதிரான ஆணாதிக்க நோக்கத்தை வெளிப்படுத்தும் குற்றத்தை (எப்போதும் சர்ச்சைக்கு உள்ளாவது கற்பழிப்பு குற்றத்துக்கு எதிராக எழுதும் போதே) வேறு எந்த சொல்லும் மாற்றீடு செய்யமுடியாது. இப்படி மாற்றீடுவது என்பது ஆணாதிக்க வெளிப்பாடான "கற்பழிப்பின்" நோக்கத்தை அதன் வக்கிரத்தையும் மழுங்கடித்து, "கற்பு" மீதான ஆணாதிக்க பொருள் சார்ந்த செயல் தளத்தை "தேசியம் கற்பிதம்" என்று கூறி (இங்கு "தேசியம்" முதலாளித்துவ கோரிக்கை.
"கற்பு"இன்று ஆணின் கோரிக்கை. ஆனால் பாட்டாளி வர்க்கம் தேசியத்தின் ஜனநாயக கோரிக்கையை ஆதரிக்கின்றது. இது போல் பெண்ணின் ஜனநாயக உரிமையாக பெண் உருவாக்கிய "கற்புரிமையை" ஆணாதிக்கத்திடம் பாதுகாக்க பெண் போராட வேண்டியுள்ளது. அதவாது இங்கு கற்புரிமை என்பது ஆணுக்கு எதிரான ஆணாதிக்க சமுதாயத்தில் பெண்ணின் தற்பாதுகாப்பு வடிவமாகவுள்ளது. இதைத்தான் எல்லா ஆணாதிக்கமும் சூறையாட விரும்புவதும் பெண்ணின் எதிர்ப்பும் ஆகும்.) தேசத்தை ஏகாதிபத்தியம் சூறையாடுவதை மூடிமறைப்பது போல், இன்று ஆண் உருவாக்கிய பெண்ணின் "கற்பை" கற்பிதமாக்கி ஆணாதிக்கம் சூறையாடுவதை பூசி மெழுக விரும்புகின்றனர். அதாவது ஒரு பெண் தனது சொந்த உடல் மீதும், உணர்வு மீதும் பாதுகாக்கும் தனித்துவத்தை ஆணாதிக்கம் சூறையாடும் போது அது பெண்ணின் கற்புரிமையாக பெண் முன் உள்ளது. ஆதிய சமூகங்களில் ஆண் - பெண் வரைமுறையற்ற புணர்ச்சியில் இருந்த போது பெண்தான் ஆணைத் தெரிவு செய்யும் தாய்வழி சமூகம் இருந்தது.

பின்னால் தனிச் சொத்துரிமையூடாக ஆண் சொத்துரிமையை பெற்று, சமூகம் மீது ஆதிக்கத்தை நிலை நிறுத்தத் தொடங்கிய போது, பெண்ணின் உரிமை படிப்படியாக பறிக்கப்பட்டு, பெண் மீது ஆணின் வரைமுறையற்ற சூறையாடல் சமூகத்தில் உருவானது. இந்த வளர்ச்சியில் பெண் தற்காப்பு நிலையெடுத்து குறித்த ஆணை சார்ந்திருக்க நிர்ப்பந்திக்கப்பட்டாள். இது பெண்ணின் கற்பாக இருந்தது. பெண் தான் விரும்பும் ஒரு ஆணுடன் மட்டும் உறவு கொள்ளும் எல்லைக்குள் இது இருந்தது. இந்த தற்காப்பை படிப்படியாக பெண்ணிடம் இருந்து ஒரு ஆண் தனது சலுகைக்குரிய, தனக்குரிய சொத்தாக மாற்றினான். பரஸ்பரம் இணைமணத்தில் ஆணைத் தெரிந்தெடுக்கும் தெரிவை, பெண் ஆணாதிக்க சூறையாடலுக்கு எதிராக தற்காப்பு நிலையில் பெற்றதை, தொடர்ச்சியில் ஆண் சார்ந்த தனிச்சொத்துரிமை பெண்ணை தனது சொத்துரிமையாக்கியது என்பது, வர்க்கப் போராட்ட வரலாற்றில் ஒரு முக்கியமான புதிய ஒடுக்குமுறையாகும். இந்த எல்லைக்குள் கூட கற்பு பெண்ணின் தற்காப்பு அரண்களை பிரதி செய்கின்றது. இன்று ஆணாதிக்க சமூகத்தில் வரைமுறையற்ற புணர்ச்சியை, ஒழுக்கத்தை மீளக் கோருவது ஆணாதிக்கமே ஒழிய பெண்ணியமல்ல. பெண்ணை விளம்பர பதுமையாக்கப்பட்டு அனைத்துதுறையிலும் சூறையாட அலைவதை நாம் காணமுடியும். இங்கும் பெண் தொடர்ந்து தற்காப்பு நிலையெடுப்பதும், உலகமயமாதல் பெண்ணை மேலும் மேலும் நிர்வாணமாக்குவதும் கண்கூடு.

விபச்சாரத்தில் பெண் எதை காசுக்கு விற்கின்றாள். உடலையல்ல சொந்தக் கற்புரிமையை என்பது பல பெண்ணியல் வாதிகளுக்கு புரிவதில்லை. ஆண் மட்டுமே இங்கு உடலை அனுபவிக்கின்றான். பெண் சொந்தக் கற்புரிமையை தன்மானம் கடந்து விற்க நிர்ப்பந்திக்கப்படுகின்றாள். ஆணாதிக்கம் பெண்ணை உடல் சார்ந்து அணுகுவதால் ஆணாதிக்க மொழியில் தான் பெண் உடலை விற்கின்றாள் என்ற கருத்தமைவு புனையப்படுகின்றது.
ஏங்கெல்ஸ் என்ன கூறுகின்றார் எனப் பார்ப்போம். "... பொதுமகளிர் முறை நேரடியாகக் குழு மணத்திலிருந்து வந்ததாக, கற்புரிமையை வாங்குவதற்குச் செலுத்தும் காணிக்கை என்ற முறையில் பெண்கள் உடலுறவுக்குத் தம்மை ஒப்படைத்ததிலிருந்து வந்ததாக அடையாளம் கண்டு கொள்ளமுடியும். பணத்துக்காக உடலுறவுக்குத் தம்மை ஒப்படைத்ததிலிருந்து வந்தாக அடையாளம் கண்டு கொள்ளமுடியும். பணத்துக்காக உடலுறவுக்கு உடன்படுதல் முதலில் ஒரு மதச் சடங்காக இருந்தது. அந்தச் சடங்கு காதல் தெய்வத்தின் ஆலயத்தில் நடைபெற்றது." முதல் விபச்சாரம் பணத்தைக் கொடுத்து தொடங்கிய போது பெண்ணின் கற்புரிமையை கடவுளின் பெயரில் ஆணாதிக்கம் வாங்கிக் கொண்டது. பெண்ணின் சுதந்திரத்தை விலை பேசிய அந்த நிமிடமே, பெண்ணின் கற்புரிமையை பெண் உடல் உரிமையில் இருந்து இழந்து விடுகின்றாள். பெண் தனது தெரிவைவிட பணத்தைப் பெற்று இழப்பது உடல் உரிமையையல்ல கற்புரிமையையே என்பதே இங்கு அடிப்படையான உள்ளடக்கமாகும்.
உடல் என்பது மனிதனில் வெறும் உறுப்புகளின் பிம்பமல்ல. மாறாக ஒவ்வொரு மனிதனிலும் உடல் என்பது உள்ளார்ந்த தனித்துவமிக்க புற உலகை புரிந்து வெளிப்படுத்தும் தன்மைதான் மனிதனின் உள்ளடக்கமாக உருவாகின்றது. அதாவது உடல் எல்லா மனிதனுக்கும் பொதுவானதாக உறுப்புகளின் தொகுதியாக இருக்கும் அதே நேரம், வெளிப்படுத்தும் வடிவம்தான் வேறுபடுகின்றது. ஒரு விபச்சாரிக்கும், விபச்சாரி அல்லாத பெண்ணுக்கும் உள்ள வேறுபாடு உடலுரிமையை விற்பதில் அல்ல கற்புரிமையை விற்பதில் தொடங்குகின்றது. இது பெண்ணின் நிலையில் ஆணாதிக்கம் விதிந்துரைக்கும் கற்பையல்ல, மாறாக அப்பெண்ணால் தீர்மானிக்க முடியாமல் சூறையாடப்படும் கற்புரிமையைத்தான். இதை அவள் விரும்பி அல்ல, சமூக நிலைமையால் அவளை மீறி இது செயல்படுகின்றது.

அ.மார்க்ஸ் தேசியத்தை கற்பிதம் என்றார். தேசியவிடுதலைப் போராட்டம் தான் தேசத்தை உருவாக்குகின்றது என்றார். ஆனால் தேசம் முன்கூட்டியே இருப்பதை மறுத்து, அதில் இருந்தே போராட்டம் தொடங்குகின்றது என்பதை மறுப்பது அடிப்படையிலேயே கருத்துமுதல்வாதமாகும். இது இயங்கியலின் வரலாற்று வளர்ச்சி விதிகளை மறுக்கின்றது. பொருள் முன்கூட்டியே தோன்றுவதும், அதில் இருந்தே அடுத்த கட்ட பாய்ச்சல் நிகழ்வது இயங்கியல் ஒழுங்காகும். இதை மீறமுடியாது. இதை மறுத்து தேசியத்தை கற்பிதமாக கூறுவது, ஏகாதிபத்திய பொருளாதார அமைப்பை ஏற்றுக் கொள்வதில் இருந்து உதிக்கின்றது. பூ வருமுன்பு விதை பெறமுடியாது. வசனம் மக்கள் பேச முன் வசனம் மொழியில் வரமுடியாது. ஆனால் இது பின் ஒழுங்கமைக்கப்படுகின்றது. அது முந்திய வடிவிலும், திரிந்த வடிவிலும் கூட மாற முடியும். பூ விதையாக மாறும் போது இயங்கியல் ஒழுங்கிலும், பூ பித்தெறியும் போது திரிந்த வடிவிலும் மாறுகின்றது, மாற்றப்படுகின்றன.
தேசிய விடுதலைப் போராட்டம் இருக்கும் தேசத்தில் இருந்து அரசை உருவாக்குகின்றது. அல்லாது திரிந்த வடிவில் தரகாக துரோகம் செய்யமுடியும். இதுபோல்தான் கற்புரிமை பற்றிய வாதங்களும்.
பெண் தனது பாலியல் நடத்தை மீதான சொந்த தெரிவை தெரிந்த போதே கற்புரிமை பொருள் வடிவம் பெறுகின்றது. ஆனால் அது ஆணாதிக்கத்தால் முதிர்ச்சி பெற்ற போது கற்புரிமையின்; அர்த்தம் திரிகின்றது. இதனால் பொருளில் திரிபடைந்து மாற்றம் காண்கின்றது. அதே நேரம் பழையது தொடாந்து இருப்பதை மறுக்கின்ற போது, பெண்ணின் சுதந்திரத் தெரிவை மறுப்பதை அடிப்படையாக்குகின்றது. கற்புரிமை மொழிக்கு முன்னமே யதார்த்தத்தில் இருக்கின்றது. அதன் பின்புதான் மொழி வருகின்றது. இந்த மொழி திரிபடைவது பின்னால் நிகழ்கின்றது. ஆனால் பலர் இயங்கியலின் உட்கூறைக் கண்டு கொள்ள முடியாத இயங்கியல் மறுப்பாளராக இருக்கின்றனர்.
எங்கெல்ஸ் இயங்கியல் வளர்ச்சியை மறுப்பது பற்றி கூறிய கருத்துகள் இந்த இடத்தில் சிறப்பாக பொருந்துகின்றது. " 'வசனம்' என்ற சொல் தோன்றுவதற்கு நெடுங்காலத்திற்கு முன்பே அவர்கள் வசனம் பேசியது போன்று." எனக் குறிப்பிட்ட போதே வசனம் முன் கூட்டியே மக்களால் பேசப்பட்டது. வசனம் வந்த பின்பு அதன் அர்த்தம் மாறிவிடுவதில்லை. அது எந்த மொழியில் இருந்தாலும் பொருந்தும். உண்மையில் இந்த சொல் என்பது கற்பனையானவையல்ல. சொல் என்பது பொருளைக் குறித்து அடையாளப்படுத்துவதுதான். பொருளை அடையாளப்படுத்தவது என்பது மக்களிடையே இருந்த தூரம், காலம், சூழல்... போன்ற இயற்கையின் விளைவாலும், சேர்க்கையான உழைப்பின் ஏற்றத்தாழ்வான வளர்ச்சியாலும் ஒரு பொருளைக் குறித்த அடையாளப்படுத்தல், மொழியின் உச்சரிப்பில் வேறுபட்டாலும் அதன் அடையாளப்படுத்தல் ஒன்றையே குறிக்கின்றது. இந்த ஒன்றைக் குறித்து அடையாளப்படுத்தலை வந்தடைந்த பாதை வேறுபட்டு, அதன் விரிவான அர்த்தம் மற்றும் பயன் பாட்டின் தன்மை வேறுபாடுகள் இருந்த போதும் பொருள் குறித்த அடையாளப்படுத்தல் பொது சாராம்சத்தில் ஒன்றையே குறிக்கின்றது. இது உலகில் காணப்படும் பல்வேறு ஒரே பொருளுக்கும் பொருந்தும்.
உதாரணமாக நெல் இனத்தை எடுத்தால் அதில் பலவகையானவை, பலதன்மையுடன் இருந்த போதும் அது ஒன்றைக் குறித்து நெல்லாகின்றது. இதன் பொது சாராம்சம் இதை தெளிவாக நிர்ணயிக்கின்றது. எங்கெல்ஸ்சின் இந்த வளர்ச்சி விதியை விளக்கும் போது ". எனவே நிலைமறுப்பு நிலைமறுக்கப்படல் என்பது யாது? மிகவும் பொதுவான, இந்தக் காரணத்தால் மிகவும் பரந்த செயல்விளைவுடைய மற்றும் முக்கியமான இயற்கை, வரலாறு, சிந்தனை ஆகியவற்றினுடைய வளர்ச்சியின் விதியாகும். ... ..இயங்கவியல் இயற்கை, மனித சமுதாயம், சிந்தனை ஆகியவற்றினுடைய இயக்கம் மற்றும் வளர்ச்சியின் பொது விதிகளைப் பற்றிய விஞ்ஞானமே தவிர வேறு எதுவுமன்று.. இயங்கியல் விதிகளை மூன்றாகச் சுருக்கலாம்.
1.அளவுநிலை பண்பு நிலையாகவும் பின்சொன்னது முன்சொன்னதாகவும் மாறுபாடு அடைவது என்னும் விதி.
2.எதிர்நிலைகள் பரஸ்பரம் ஊடுருவல் என்னும் விதி.
3.நிலைமறுப்பு நிலைமறுக்கப்படல் என்னும் விதி"
இதை மறுத்தே சொல்லின் பொதுசாராம்சத்தை கொச்சைப்படுத்தமுடிகின்றது.

பல சிக்கலான செயல்களின் தொகுப்பில் தான் பொருள் உண்டாகின்றது, நிலைக்கின்றது, நீடிக்கின்றது, மாறுகின்றது, சிதைகின்றது, மீளவும் உருவாகின்றது. ஓரு பொருள் ஒரு இயக்கம் என அனைத்தும் சிக்கலான பல இயக்கங்களின் விளைவுகளாகத் தான் நடந்தன, நடந்து கொண்டிருக்கின்றன. இது தொடர்ந்து மாறிக் கொண்டுள்ளது. இது பொருளின் பொதுத் தன்மையை குறித்த அக்கணத்துக்கே உரியவகையில் எந்த நிலையிலும் (அது வினாடியாக இருந்தாலும் நீடித்த பல கோடி வருடங்கள் ஆனாலும்) கொடுக்கின்றது. வளிமண்டலத்தை எடுத்தால் ஓட்சிசன் (O2)இ நைதரசன் (N2), காபனீர் ஒட்சைட் (CO2) ...... போன்ற வாயுக்கள் ஊடான ஒரு பொது உண்மையை, அது சார்ந்த சாராம்சத்தை பூமி எங்கும் கொண்டு உள்ளது. சுரண்டலை எடுத்தால் உழைப்பைச் சுரண்டும் பொதுச் சாராம்ச உண்மை, உலகெங்கும் பொதுவாக உள்ளது. பெண்ணை எடுத்தால் ஆணாதிக்க சுரண்டல் சாராம்ச உண்மை உலகளவில் பொதுவாக உள்ளது. சாதியை எடுத்தால் சாதி ஒடுக்கு முறையுடன் கூடிய சுரண்டல், சாதி உள்ள நாடுகளில் பொதுவாக உள்ளது. இது எல்லா இயக்கத்திற்கும், பொருளிற்கும், சிந்தனைக்கும் பொதுவான உண்மையானதாக உள்ளது. இது மாற்றத்துடன் புதிய சாராம்சத்தை தொடர்ந்து பிரதிபலிக்கின்றது. தொடர்ந்தும் மாற்றத்துக்குள்ளாகின்றது.

மாற்றம் என்பது வெற்றிடத்தில் நிகழமுடியாது. ஒன்றுக்கு மேற்பட்ட பொருட்களுக்கிடையில்தான் மாற்றம் நிகழமுடியும். கற்பு என்ற சொல் வெற்றிடத்தில் இருந்து உருவாகியதல்ல. அது போல் மாற்றமும் வெற்றிடத்தில் நிகழமுடியாது. நிகழமுடியும் எனின் அது கருத்துமுதல்வாதமாகும்;. கற்பு என்பது கற்பிதமல்ல. அப்படி இருக்கவும் முடியாது. சொல்லுக்குரிய அர்த்ததில் கற்பு பற்றிய எதிர் கண்ணோட்டத்தில் கற்பிதம் எனக் கூறுவது அல்லது அதை மறுத்து எழுதுவது இலகுவானதாகும், இது புரட்சிகர வாய் வீச்சாகின்றது. கற்புக்கு இரண்டு பக்கங்கள் உண்டு. வரலாற்று ரீதியாக இயற்கையில் மாறிவந்த மனித சமூகசாரம் கற்பை பற்றிய வரையறைக்கு, மாறுபட்ட வரலாற்று வளர்ச்சியுடன் விளக்கத்தை கொண்டிருந்தது. இது பொருளாதார அமைப்பில் ஏற்பட்ட வரலாற்று வளர்ச்சி விதியுடன் ஒன்று ஆளுமை பெற்றது. மற்றயது உள்ளுராக நீடித்ததுடன் முரண்பட்டு போராடியது. கற்பு பற்றிய ஆணாதிக்க ஒழுக்கம் ஏகாதிபத்தியத்தால் மறுப்புக்குள்ளாகும் போது, அங்கு கற்புரிமை பற்றிய பெண்ணின் நியாயமான உரிமை அரங்குக்கு வருகின்றது.

"கற்பு", "கற்பழிப்பு" மொழியியல் ரீதியில் திரிக்கப்பட்டவை. தமிழ் லெக்சிக்கன் கற்பு என்பதை "களவுக் கூட்டத்துக்குப் பின் தலைவன் தலைவியை விதிப்படி மணந்த இல்லறம் புரியும் ஒழுக்கம்" என்று வரையறுத்துள்ளது. கற்பு பற்றிய தொல்காப்பியர் தொல் பொருள் 142 இல் கூறுவதைப் பார்ப்போம்.

"கற்பென ப்படுவது கரணமொடு புணரக்
கொள்ளற்குரி மரபிற் கிழவன் கிழத்தியைத்
கொடைக்குரி மரபினோர் கொடுப்பக் கொள்வதுவே"

அன்று திருமணத்துக்கு முந்திய களவுக் காதல் அனுமதிக்கப்பட்டிருந்த எல்லையில், கற்பு திருமணத்துக்கு பின் ஆண் பெண் விசுவாசத்தை கோரப்பட்டது. அதாவது வாரிசுரிமை ஒருதார மணத்தை வரையறுத்த போது, திருமணத்துக்கு முந்திய உறவு நிபந்தனையாவதை தடுக்கின்றது. ஏனெனின் ஆண் தனது குழந்தை என்பதை உறுதி செய்யும் திருமணத்தினூடாக கோரிய கற்பு மட்டுமே நிபந்தனையாக இருந்தது. ஆனால் திருமணத்துக்கு முந்திய கன்னியில் உடலுறவு மூலம் கருத்தரிக்கின்ற போதும், அல்லது திருமணம் முடிந்தவுடன் முந்திய உறவால் குழந்தை உருவாகின்ற நிலைமையில் இருந்து, அப்பெண் பெறும் குழந்தை மீதான வாரிசுரிமையை ஆண் ஏற்க மாறுக்கின்ற போது அல்லது திருமணமே நடக்காத போதே 'கற்பு' கன்னியிலும் பாதுகாப்படுவதை நிபந்தனையாக படிப்படியாக கோருகின்றது.
கன்னியில் உடலுறவுச் சுதந்திரம் இருந்ததையும், இது மாறிவந்த சமுதாயத்தையும் துல்லியமாக சங்க இலக்கியம் கோடு இட்டுக் காட்டுகின்றது. மேலும் தொல் காப்பியர் தொல்பொருள் 99 இல்
"அச்சமும் நாணும் மடனும் முத்துறத் நிச்சமும் வெண்பாற்குரிய என்ப" என்கின்ற போது பெண்ணின் அடிமைத்தனத்தை உறுதி செய்கின்றார். ஆணுக்கு விதிவிலக்காக்கியதன் மூலம் ஆணாதிக்க தனிச்சொத்துரிமையை உறுதி செய்கின்றார்.

மேலும் அவர் தொல் பொருள் 111 இல் " நாணம் உயிரினும் சிறந்தது" என்றும் "நாணினும் செயிர்தீர் காட்சிக் கற்புச் சிறந்தது." என்று கூறியதுடன் கற்பின் தன்மையை மூன்று வகையாக பிரிக்கின்றார். "மூதானந்தம் (கணவன் இறந்ததை அறிந்தவுடன் இறக்கும் பெண்), புறக்காடு (உடன் கட்டை ஏறும் பெண்), தாபநிலை நோன்பை வழுவாது பேணுபவன்)" என வகுத்துள்ளார்.

புறம் 196 இல் "சாந்தம், அமைதி, மென்சொல், பேச்சில் துடுக்கை தவிர்த்தல், போன்ற பண்புகள் கற்புடைய பெண்ணின் குணங்களாக அமைந்தன" என்று மாறிவந்த சமுதாய விளக்கம் போதித்தது. வாரிசுரிமையில் ஆணின் இரத்த வழியில் உறுதி செய்ய பெண்ணை கட்டுப்படுத்த, அடக்கி ஆளவேண்டிய வடிவில் இந்த நிபந்தனைகள் கற்பு வடிவில் முன்வைக்கப்பட்டு கோரப்படுகின்றது. இதில் இருந்தே மேலும் உடல் சார்ந்து கோருவதுடன், மற்றயவை முந்தியவை பெண்ணின் பொதுவான இயல்பாக நடைமுறைக்கு வந்துவிடுகின்றது. புறம் 198 இல் "கடவுள் சான்ற கற்பு" என்று மேலும் விளக்கம் பெற்ற போது கற்பு கோலோச்சி பெண்ணை அடக்கி ஆள்வதைக் காட்டுகின்றது.

ஆணாதிக்கம பெண்ணின் கற்புரிமையை உள்வாங்கி பெண் மீது திரித்து, திணித்த போது, இதன் சமூகப் பெறுமானம் பெண்ணை இழிவு படுத்தியது. இது போல் பறை, பறையன் என்ற சொல்லையும் எடுக்க முடியும். பறை என்ற இசைக் கருவியை திரித்து அந்த இசையையும் சாதிப் பண்பாட்டால் பொருளாகப்பட்ட பறை தீட்டு படுத்தப்பட்டது. இங்கு இவ் இசைக் கருவி இழிவுக்குள்ளானது. பறை, பறையன் சாதி ரீதியாக இழிவுக்குள்ளாகும் போது அவ் இசைக்கருவியினை நாம் மறுக்கமுடியுமா? பார்ப்பனியம் அதைத்தான் கோருகின்றது. ஆனால் இசைக் கருவியான பறையை பாதுகாக்கவும், அதன் மீதான சாதிக் கறையையும் அகற்றப் போராட வேண்டியுள்ளது. பறை மீது கறைபடிந்திருக்கும் சமூக மதிப்பீடுகளை மீளவும் புரட்சியுடாக புரட்டி எடுப்பதன் மூலம் அதன் இயல்பான இயற்கையான நிலைக்கு மாற்றீடு செய்யப்படவேண்டும்;. இது போல் நடைமுறை சார்ந்து பல திரிபடைந்துள்ளது.

"கற்பு", "கற்பழிப்பு" இது போன்றவையே, தனிமனிதன் முதல் மக்கள் மீதான அத்துமீறல்களின் போது அதை எதிர்த்த போராட்டத்தில் கற்புரிமை என்ற பதம் அடிப்படையான போராட்டத்தை குறித்து நின்றது. சமூகத்தின் வாழ்வு பண்பாட்டை பாதுகாக்கும் இந்த கற்புரிமை என்ற வரைமுறை எல்லா காலத்திலும் அடிப்படையானதாக இருந்தது. ஒரு தேசம் கற்பழிக்கப்பட்டது என்று குறிப்பிடும் போது அதன் அர்த்தம் ஒடுக்கு முறைக்கு எதிரான குரலாக ஓங்கி ஒழீக்கின்றது. தனிச் சொத்துரிமை சமுதாய விழுமியங்களையும், தனிமனித உரிமைகளையும் பறித்த போது, பறிகொடுத்தவன் தனது உரிமையை கற்புரிமையாக அடையாளம் காண்பதும் போராடுவதும் வழக்கில் வந்தது. மொழியியல் ரீதியில் இதன் அர்த்தம் ஒடுக்கப்பட்டவனின் குரலாக, சொந்த உரிமைக்கு ஆதரவுhன குரலாகவும் பரிணாமித்தது.

சொத்துரிமைச் சமூகம் சொத்துக் குவிப்பதை பொது பண்பாடாக உரிமையாக்கிய போது இந்த சொல்லின் இயற்கையான அர்த்தத்தை தனது சொத்துரிமை மீதான "கற்பாக" கண்டது. பெண்ணை அடிமையாக்கி தனது சொத்துரிமையாக்கிய சுரண்டும் வர்க்கம், பெண்ணின் உரிமை மீது கற்பை நிலை நாட்டிக் கொண்டனர். பெண் மீதான ஆணின் உரிமை பெண்ணின் மீதான வேலியாக "கற்பு" சிறையிட்டது. சொத்துரிமையை வாரிசாக்கும் ஓரே பாதுகாப்பு வேலி இந்த கற்புதான் என்பதை ஆணாதிக்கம் கண்டது.

ஆனால் கற்புரிமை தனிச் சொத்துரிமை வளர்ச்சியூடாக பெண் மீதான ஆணின் பொருளாதார மேலாதிக்க பாலியல் ஆதிக்க நாட்டத்தை தடுக்க, பெண்ணின் தற்காப்பின் உரிமையாக இருந்தது.. பெண் தான் தெரிவு செய்யும் ஆணுடன் உறவு கொள்ளும் உரிமையை பாதுகாக்க, பெண்ணின் உரிமை கற்புரிமையாக பெண்ணுக்கு இருந்தது. ஓருதார மணத்தை முதலில் தனது தற்காப்பில் பெண் தெரிவு செய்த போது, ஒருதாரமணம் இன்று இருப்பதில் இருந்து வேறுபட்டு பெண்ணின் இணை மணமாகவே இருந்தது. ஆனால் தனிச் சொத்துரிமை வளர்ச்சி பெற்று வளர்ந்த போது பெண்ணின் தற்காப்பு ஒருதாரமணத் தெரிவை, ஆணாதிக்கம் தனது பொருளாதார ஆதிக்கத்துடன் குறித்த ஆணுக்கு மட்டமானதாக திரித்து இறுக்கிய போது கற்புரிமையும் அதற்குள் சிக்கிக் கொண்டது.

ஏங்கெல்ஸ் ஆய்வுகளில் மிகவும் குறிப்பிடத்தக்க முக்கியமான விடயத்தைப் பார்ப்போம். "--- 'பொதுமகளிர் முறையிலிருந்து ஒருதார மணத்துக்கு மாற்றமடைந்த காலம் நெடுகிலும் அந்த மாற்றத்தைக் கொண்டுவந்தவர்கள் பெண்களே என்று பாஹாஃபென் கூறுவது மீண்டும் முற்றிலும் சரியானதே. பொருளாதார நிலைமைகளின் வளர்ச்சியின் விளைவாக, அதாவது பழைய பொதுவுடமை முறை பலவீனமடைந்து மக்கள்தொகையின் அடர்த்தி அதிகரித்ததன் விளைவாகப் பழைய சம்பிரதாய பாலியல் உறவுகள் தமது வெகுளித்தனமான, பூர்வீகமான காட்டுத் தன்மையை இழந்து வர வர அந்த உறவுகள் மேன்மேலும் தரக்குறைவாக, ஒடுக்குபவையாகப் பெண்களுக்குத் தோன்றியிருக்க வேண்டும். அவர்கள் கற்புரிமைக்கு, விடுதலை என்ற முறையில் குறிப்பிட்ட ஒரு நபரைத் தற்காலிகமாக அல்லது நிரந்தரமாகத் திருமணம் செய்து கொள்வதில் வேட்கை கொண்டிருந்திருக்க வேண்டும். இந்த முன்னேற்றம் ஆண்களிடமிருந்து தோன்றியிருக்க முடியாது. அவர்கள் நடைமுறைக் குழுமணத்தின் இன்பங்களைக் கைவிடுவதற்கு ஒருபோதும்-இன்றைய நாள் வரையிலும் கூட- கனவு கூடக் கண்டதில்லை என்ற காரணமே இதற்குப் போதும். பெண்கள் முயன்று இணை மண முறை நோக்கி மாற்றம் கண்ட பிறகுதான் ஆண்கள் கண்டிப்பான ஒருதார மணத்தை - அது பெண்களுக்கு மட்டுமே என்பதைச் சொல்ல வேண்டியதில்லை - புகுத்த முடிந்தது.'' ஏங்கெல்ஸ்சின் இந்த ஆய்வுகளை இன்று பலர் மறுக்கின்றனர்.
அதுவும் ஏகாதிபத்திய பெண்ணிய வாதிகளும், அராஜக வாதிகளும் இதை மறுப்பதில் மிகுந்த அக்கறையாக இருக்கின்றனர். ஒருதார மணத்தை ஏன் பெண் தெரிவு செய்தாள் என்ற அடிப்படையான காரணத்தை மறுப்பதும், அதே நேரம் கற்புரிமையை அதாவது பெண்ணின் சுதந்திரமான செயல்ப்பாட்டை மறுத்து சூறையாடுவதை மூடிமறைப்பதும், இன்றைய பெண்ணியத்தின் ஆணாதிக்கமாகவுள்ளது. கட்டற்ற விபச்சாரத்தை அதாவது ஆணைப் போல் ஈடுபடும் உரிமையை பெண்ணியமாக காண்போர் எங்கெல்ஸ்சின் குறித்த ஆயு;வுகளை மூடிமறைத்தபடி விபச்சாரத்தை சமூக மயமாக்க துடிதுடிக்கின்றனர்.
இந்த இடத்தில் ஏங்கெல்ஸ்சின் குறிப்பு ஒன்றைப் பார்ப்போம். "ஆண்களுடைய வழக்கமான ஒழுக்கக் கேட்டைப் பெண்கள் சகித்துக் கொண்டிருக்கும் படி கட்டாயப்படுத்துகின்ற பொருளாதார நோக்கங்கள் - தமது வாழ்க்கையைப் பற்றிய கவலை, அதற்கும் மேலாக, தமது குழந்தைகளின் எதிர்காலத்தைப் பற்றிய கவலை - மறைகின்ற பொழுது ஏற்படுகின்ற ஆண், பெண் சமத்துவம் பெண்கள் பல கணவர் முறைக்குப் போய் விடுவதை விட ஆண்கள் உண்மையிலேயே ஒருதார மணத்தைக் கடைப்பிடிப்பதற்குப் பேரூதவி செய்யும்..." என்ற கூற்றில் இன்றைய பெண்ணியச் சிதைவைக் காணமுடியும்.
ஆண் பெண் சமத்துவத்தை அடையாது ஆணாதிக்க சலுகையில் வெம்பிய விடுதலைகள், பெண்களை பல கணவர் முறைக்குள் ஆணாதிக்க வழியில் சிதைவதைக் காட்டுகின்றது. ஆண் பெண் சமத்துவத்தை சொத்துரிமை ஒழிப்பில் சாதிக்காத நிலையில், கிடைக்கும் சலுகைகள் ஆணாதிக்க வழியில் பல கணவர் முறைக்குள் சென்று விபச்சாரத்தை பெண்களுக்கு பொது சாராம்சமாக்குகின்றது. சுதந்திரமான விபச்சாரம் பெண்ணின் கற்புரிமையை மறுக்கின்றது. அது ஒருதார மணத்தையும் இணை மணத்தையும் மறுத்து, விபச்சாரத்தை வரைமுறையற்ற புணர்ச்சியில் வைக்கின்றது. எனவே மொழியில் கற்புரிமையை முதலில் மூடிமறைக்கின்றது. அதை ஆணாதிக்க புரிதலின் அடிப்படையில் பார்க்கின்றனரே ஒழிய, பெண்ணிய நோக்கில் அதன் தெரிவில், அதன் வரலாற்று காரணத்தில் காண்பதில்லை.
பறை இசைக் கருவிக்கு எது நடந்ததோ அது கற்புரிமைக்கும் நடந்தது. சமூகத்தை இருக்கும் (ஏகாதிபத்திய) ஜனநாயக வடிவில் புரிவதும், அதன் அடிப்படையை பார்க்க மறுப்பதும், ஏகாதிபத்திய எல்லைக்குள் பொத்தென கவிழ்ந்து விழுவதேயாகும். இன்று தேசத்தின் பொருளாதாரத்தை சூறையாடும் போது தேசத்தின் கற்புரிமையை எப்படி அர்த்தமற்றதாக மாற்றுகின்றனரோ, அதுபோல் பெண்ணின் கற்புரிமைக்கும் நிகழ்கின்றது.

கற்புரிமையை சமூகமும், பெண்ணும் தெரிவு செய்த போது இருந்த அர்த்தம் திரிபடைந்து ஆணாதிக்க பொருளாதார மொழிக் கொள்கைக்குள் புதிய வடிவத்தை பெற்றது. இதுதான் பறைக்கும் நிகழ்ந்தது. வரலாற்றில் எத்தனையோ திரிபுகள் இயற்ககைக்கு புறம்பாக பொருளாதார மாற்றங்களுடன் தோன்றி உறுதிப்பட்டுள்ளது. இதை அது மாறிவந்த வழியாக அடையாளம் கண்டு, அந்த பொருளாதார வடிவத்தை தகர்ப்பதன் மூலமே இதன் தோற்றத்தை ஒழிக்கவும், சிலதை மீளவும் பழைய இயற்கை வடிவில் மீட்டெடுக்கவும் முடியும். கற்புரிமை வாரிசுரிமையூடாக திரிபடைந்து கற்பான போது, அங்கு அதன் நோக்கம் தனிச் சொத்துரிமையை இரத்த வழியில் ஆண் உறுதி செய்வதை நிபந்தனையாக்கியது. ஆண் தனது குழந்தை என்பதை உறுதி செய்ய 'கற்பு' அவசியமாக இருந்தது. இந்த ஆணாதிக்க 'கற்பு' தனிச் சொத்துரிமையிலான வாரிசுரிமையில் உருவானதால், அதை ஒழிக்கமால் 'கற்பு' ஒழிக்கப்படுகின்ற போது அங்கு விபச்சாரமே கற்பை அழிக்கின்றது.

ஆனால் இன்று "கற்பு" சொற் பிரயோகத்தை பாவிப்பதை எதிர்த்து குரல் கொடுப்பவர்கள் எதற்காக இதை கையாளுகின்றனர். அராஜகவாத கோட்பாட்டில் சிக்கி கொண்டவர்கள்தான் இதை கோருகின்றனர். ஏங்கெல்ஸ் அராஜகவாதிகளுக்கு எதிரான போராட்டத்தில் எப்படி எதிர்த்து போராடுகின்றார் எனப் பார்ப்போம். "விஷயங்களின் பெயர்களை மாற்றிவிட்டால் விஷயங்களையே மாற்றி விட்டதாக இந்தக் கனவான்கள் நினைக்கிறார்கள். மிகவும் ஆழமான இச்சிந்தனையாளர்கள் இப்படி மொத்த உலகத்தையுமே கேலி செய்கிறார்கள்" இந்த மாதிரி மொழியில் ஒளித்து புரட்சி செய்பவர்களை ஏங்கெல்ஸ், மார்க்ஸ் உள்ளிட்டோர் எப்படி அடையாளம் காண்கின்றனர் எனப் பார்ப்போம். "பிரிவுகளின் சுயாட்சி, சுயாட்சி உடைய கோஷ்டிகளின் சுதந்திரமான சம்மேளனம், எதேச்சாதிகார-எதிர்ப்பு, அராஜகவாதம்- இவை அனைத்துமே 'வர்க்கத்தினின்று இழிந்தவர்கள்', 'கதியற்றவர்கள்', 'பதவி முன்னேற்றமோ வாய்ப்புகளோ இல்லாதவர்கள்'.. ......." இவர்கள்தான் அராஜகவாதக் கோட்பாடுகளின் அடிப்படையானவர்கள். லெனின் 'அரசும் புரட்சியும்' என்ற நூலிலில் ஏங்கெல்ஸ்சின் மேற்கோளைப் பயன்படுத்தும் போது, அரசு அதிகாரம் தொடர்பாக 'அதிகாரம்' என்ற சொற்தொடர் மீது அராஜகவாதிகளின், வாய் வீச்சை அம்பலப்படுத்த பயன்படுத்திய வாதங்களைப் பார்ப்போம. "... ஒரு பொருளின் பெயரை மாற்றுவதன் மூலம் அப்பொருளையே மாற்றி விடுவதாய் நினைத்துக் கொள்ளுகின்றார்கள்... உண்மைகளை எல்லாம் பார்க்காமலே கண்களைக் கெட்டியாய் மூடிக் கொண்டு ஆவேசமாய் இச்சொல்லை எதிர்த்துப் போராடுகிறார்கள்... என்பது தெரியாமமே பேசிக் கொண்டிருக்கிறார்கள் - அப்படியானால் அவர்கள் குழப்பம் உண்டாக்குவதைத் தவிர வேறு எதுவும் செய்யவில்லை அல்லது அவர்கள் தெரிந்தே பேசுகிறார்கள் என்றால், பாட்டாளி வர்க்கத்தின் இலட்சியத்துக்குத் துரோகம் புரிகின்றனர். இரண்டில் எதுவாயினும் , அவர்கள் பிற்போக்குக்குப் பணியாற்றுவோரே ஆவர்."

சிங்கள தேசிய இனப் பாசிசம் தமிழ் தேசியத்தை சிதைத்த போது உருவான தேசியவிடுதலைப் போராட்டம், மறுதளத்தில் எந்தளவுக்கு பாசிசமாக வளர்ச்சி பெற்றதோ, அந்தளவுக்கு சமூகத்தை விட்டோடும் ஓடுகாலிகளை உருவாக்கியது. சமூக அவலங்களுக்குரிய மாற்றத்தை மக்களை திரட்டி போராட முடியாதவர்கள், அராஜகவாதத்தை தமது புரட்சியாக பிரகடனம் செய்கின்றனர். அதை உயர்ந்தபட்ச புரட்சியாக காட்டி மாற்றுகின்றனர். மக்களின் பிரச்சனைக்காக அணிதிரட்டி போராட முடியாத புலிகளும் மற்றய இயக்கங்களும், ஒரு குண்டு வெடிப்பு மூலம் புரட்சி செய்வதை பிரகடனம் செய்கின்றனர். இதன் மூலம் மக்களின் மேல் ஏறி உட்கார்ந்து கொள்கின்றனர். இது இன்றுவரை பொது அரசியலாக, பூர்சுவா வர்க்கத்தின் இயல்பான ஆதரவுக் கண்ணோட்டமாகவுள்ளது.

இதில் தோற்றுப் போனவர்கள், இதற்குள் பதவியை பிடிக்க முடியாதவர்கள், வர்க்கத்தில் இருந்து அன்னியமானவர்கள், வர்க்க கோட்பாட்டில் இருந்து விலகியவர்கள், தன்னவர்குழுவின் கோட்பாட்டாளர்கள் என்று சமுதாயத்தில் மக்களை அணிதிரட்டி சமூகத்தை மாற்றுவதை கைவிட்டு இழிந்து போன பிரிவுகளின் சமூக தளமே, அராஜக வாதத்தின் ஊற்று மூலமாகின்றது. இது ஒரு வெடி குண்டு போல் புரட்சி கற்பனையில் மூழ்கிப் போகின்றது. இது பல்வேறு துறையில் புரட்சி பற்றி சொற்களின் ஊடாக, சிலவரிகளூடாக வாய்யடித்தல் செய்கின்றது. இதையொட்டி மார்க்ஸ் ஏங்கெல்ஸ் "...ஒரு தத்துவஞானி ஏதாவதொரு வகையில் விமர்சனம் செய்த உடனே அது செத்துவிட்டதாகக் கருதப்படும், வரலாற்றின் பக்கங்களிலிருந்து அகற்றப்படும், அதோடு எல்லா செய்முறைக் காரியங்களுக்கும் கூட ஒழிக்கப்பட்டுவிடும்." என்று புரட்சி பேச தயங்குவதில்லை. இதில் ஒன்றுதான் "கற்பு" என்ற சொல்லை மாற்றி வேறு சொற்களை போடுவது. சொற்களில் உலகத்தையும், சொந்த மக்களையும் ஏமாற்ற முயன்று, அராஜகவாத அரசியல் ஆதரவுடன் தன்னை மக்களுக்கு மேல் நிலைநிறுத்துகின்றது. "கற்பு"க்கு எதிராக நடைமுறையில் மக்களை அணிதிரட்டி போராடுவதுக்கு தயாரற்ற பிரிவுகள், சொற்களில் புரட்சியை செய்துவிட கனவுகாண்கின்றது. இதை மறுத்து மக்களை அணிதிரட்டி போராடி ஒழிக்க கோரும் பாட்டாளி வர்க்கத்துக்கு எதிராக புரட்சிகர வசனம் பேசுகின்றது. இது எப்படி மக்களிடையே மாற்றத்தை ஏற்படுத்தும் என்று கேட்டால் பதில் அளிக்க யாரும் இருப்பதில்லை. ஆனால் மொழியில் தன்னை புரட்சியாளனாக நிலைநிறுத்தி பிழைக்க முயல்கின்றது.
மொழி என்பது பொருளாதார வடிவத்துக்கு உட்பட்டதென்ற இயங்கியல் வளர்ச்சியை மறுக்கும் கண்ணோட்டத்தை அடிப்படையாக கொண்டு அராஜகத்தை, இயங்கியல் மறுப்பில் கோருகின்றனர். சொற்கள் பொருளில் இருந்து தோன்றுகின்றது என்பதை மறுக்கும் இயங்கியல் மறுப்பு, அடிப்படையில் மொழியில் கருத்துமுதல்வாதத்தை திணிக்கின்றது. "யதார்த்தமான உறவுகளுக்குப் பதிலாக சித்தம் புரட்சியின் முக்கியமாக சித்தரிக்கப்படுகின்றது." அதனால் சமூகத்தில் பொருள் உறவு எப்படி உள்ளது என்பதை ஆராயமறுக்கின்றது.

பொருளாதார உறவே சமூக உறவாக பரிணாமிக்கின்றது. பெண் ஒரு ஆணுடன் வாழும் போது அதைத் தாண்டி (இங்கு தாண்டல் என்பது பரஸ்பர விசுவாசத்தை துரோகம் செய்வதாகும். இது ஆண் செய்தாலும் பொருந்தும்) கள்ள உறவு கொள்ளும் போது அல்லது திருமணத்துக்கு முன் உறவு கொண்டு ஏமாற்றப்படும் (இங்கு எப்போதும் ஆணாதிக்கம் பெண்ணை ஏமாற்றியும், விருப்பத்துடனும் பெண்ணின் தற்காப்பு கற்புரிமையை கற்பழிக்கின்றனர்.) போது ஆணாதிக்கம் இது போன்றவைகளை கற்பாக வேறு விளக்கம் செய்து, பெண்ணின் மீது மட்டும் இதை நிபந்தனையாக்குகின்றது. திருமணம் செய்து வாழ்வை இழந்த அல்லது விவாகரத்து பெற்ற பெண் மீள திருமணம் செய்யும் போது கற்பிழந்தவளாக சமூகம் அடையாளப்படுத்துவதில்லை. ஆனால் மறைமுகமான வகையில் மறு திருமணம் இதை எல்லைப்படுத்துகின்றது. அடையாளப்படுத்தல் எல்லாம் சமூக ஒழுக்க விழுமியத்துக்குள் உட்பட்ட பொருளாதார வடிவத்தால் மட்டும் வரையறுக்கின்றது. எனவே "கற்பு" என்பது எல்லா நேரமும் இரண்டாவது ஆணுடன் கொள்ளும் பெண்ணின் புணர்ச்சிக்குள் வரையறுப்பதில்லை. மாறாக நிலப்பிரபுத்துவ பண்பாட்டு மீறலின் போதே வரையறுக்கப்படுகின்றது. இது ஒரு நிலையில் பெண்ணுக்கு தற்காப்பு ஆயுதமாகவும் மறுதளத்தில் ஆணாதிக்கத்தின் சூறையாடலாகவும் வழக்கில் நீடிக்கின்றது.

பெண்ணின் "கற்பு"க்கு லட்சணமாக பெண்மீதான ஒழுக்கம் எதைக் கோருகின்றது. இந்து மதப் புராணங்களில் நளாயினி தனது புருஷன் குஷ்டரோகியாக இருந்தபடி அவன் தாசி வீட்டுக்கு போக வேண்டும் என்று சொன்னால், அவனை கழுவி கூடையில் வைத்து தலையில் தூக்கிச் சென்று தாசி வீட்டில் விடவேண்டும். இதைப் போல் தாசி வீட்டில் இருந்து மீண்டும் தூக்கிவரவேண்டும். இதுதான் பெண்ணின் "கற்பு"க்கு ஆணாதிக்கம் கொடுத்த விளக்கம். பெண் இதை செய்ய மறுக்கும் போது "கற்பு" இழந்தவளாக கருதப்பட்டாள். "கற்பு" பற்றிய விளக்கங்கள் ஆணின் தேவையை பூர்த்தி செய்வதில் கோரப்பட்டது. இது மறுக்கப்படும் போது பெண்ணின் கற்புரிமையாக இது இருக்கின்றது. அது இன்று குறிப்பாக பெண்ணின் உடல் சார்ந்ததாக மட்டும் எஞ்சிப் போயுள்ளது.

பெண் மீதான வன்முறையூடாக அல்லது ஏமாற்றி கைவிடப்படும் போது அல்லது இரண்டாவது உறவு கொள்ளும் போதும் "கற்பிழ"ந்தவளாக ஆணாதிக்கம் விளக்கம் கொடுக்கின்றது. "கற்பு" ஆண்களால் பெண்கள் மீது மட்டும் நிபந்தனையாக்கிய சமூக அமைப்பு பொருளாதார அமைப்பால் ஒரு சமூக இயக்கமாக, அதனை ஒரு பொருளாக மாற்றிய நிலையில் இது கற்பிதமல்ல. மாறாக இது ஒரு சமூக பொருளாதார அமைப்பால் இறுக கட்டப்பட்டுள்ளது. இந்த சமூகப் பொருளாதார அமைப்பு நிலப்பிரபுத்துவத்தின் வடிவமாக உள்ளது. இந்த நிலப்பிரபுத்துவம் பாட்டாளி வர்க்க ஆட்சியால் அல்லது ஏகாதிபத்திய உலகமயமாதல் மூலம் என இரண்டு சமூக பொருளாதார நிலைகளில் மட்டும் தகரும் போது "கற்பு" கோட்பாடு தகர்ந்துபோகும். இதில் ஏகாதிபத்தியம் சார்ந்து "கற்புரிமையை ஆணாதிக்கம் சார்ந்த ஆண் வேட்கையிலும், பாட்டாளிவர்க்கம் பெண் சார்ந்த ஆணாதிக்க "கற்பை" பெண் ஆண் சார்ந்து கற்பிதமாக்கும்.
ஏகாதிபத்தியம் பெண்ணின் கற்புரிமையை ஒழிக்கும் போது பெண்ணை விபச்சார தளத்துக்குள் அதை ஒழிக்கின்றது. பாட்டாளி வர்க்கம் "கற்பை" ஒழிக்கும் போது பரஸ்பரம் சேர்ந்து வாழும் சுயேட்சையான சுயநிர்ணய எல்லைக்குள் ஒழிக்கின்றது. இது இரண்டுக்கிடையிலான அடிப்படைவேறுபாடு. ஏகாதிபத்தியம் கற்புரிமையை­ ஒழிக்கும் போது அனைத்து சமூக பொருளாதார துறையிலும் மனிதனின் கற்புரிமைத் தனத்தை ஒழித்து தனது சூறையாடலுக்கு ஏற்ற விபச்சார தனத்தை ஏற்படுத்துகின்றது. பாட்டாளிவர்க்கம் மனித வாழ்வின் அடிப்படையான மனிதப் பண்பாட்டை ஆணாதிக்க "கற்பை" ஒழிப்பதன் ஊடாக மனிதனின் கற்புரிமையை அதாவது தன்மானத்தை பாதுகாத்து நிலைநிறுத்துகின்றது.

எப்போதும் "கற்பு" மீதான போராட்டம் என்பது பெண்ணுக்கு கற்பு உண்டு என்கின்ற ஆணாதிக்கம் மீது "கற்பு"க்கு எதிரான போராட்டத்தை கோருவதும், கற்பு என்ற ஒன்று இல்லை என்பதை நிறுவுவதன் ஊடாக, இது பொதுவாக "கற்பு இழந்தவள்"' என்ற பொருளின் ஊடாக வருவதால் "­கற்பை" கற்பிதமாக்க சமூகத்தை மாற்ற போராட வேண்டும். கற்பழிப்பு போன்ற குற்றத்தில் கற்புரிமை அழிப்புக்கு எதிரான எழுத்துக்களை போராட்டங்களை கற்பழிப்பு (இங்கு கற்பிழந்தவளாக பொதுவில் கருதாமல் இந்த வன்முறைக்கு எதிராக கற்பழிப்புக்கு எதிரான பெண்ணின் கற்புரிமையின் குரலாக உள்ளது) மீது எழுதியும், போராடியும் பெண்ணின் கற்புரிமை மீது கற்பிதமாக்க வேண்டும். இது மட்டுமே நடைமுறை சார்ந்த மக்கள் சார்ந்த ஓரே செயல்தள நடைமுறையாகும். இதை மறுத்து, சரிநிகரில் (தன்னவர் நிதியில் வரும் பத்திரிகை அல்லவா) தொடக்கிய இச்செயல், யதார்த்தத்தில் மக்களால் ஆணாதிக்க கண்ணோட்டத்தில் பொருளாக்கப்பட்டுள்ள, "கற்பு"க்கு எதிரான போராட்டத்தை மறுதலிக்கும் செயலாக இதுமாறியுள்ளது.
"கற்பு", "கற்பழிப்பு" போன்ற சொற்கள் ஆணாதிக்க பொருளாதார கட்டமைப்பால் அதிகாரம் பெற்றுள்ளதால், அது மக்களுக்குள் உருவகம் சார்ந்து பொருள் சார்ந்து போயுள்ளது. இதற்கு எதிரான போராட்டத்தை மறுதலித்த, சொற்களை மாற்றிய விளையாட்டுக்கள் அதற்கு எதிரான போராட்டத்தை மழுங்கடிக்கவே செய்கின்றது. முன்பு காந்தி தாழ்ந்த சாதிகளை "அரிஜன்" என அழைத்து சொற்களை மறைத்தது போல், இன்று "தலித்" என்று சொற்களை மறைத்தபடி சாதிகளின் ஒழிப்புக்கு பதில் நீடிப்பை சொற்களுக்குள் எப்படி பாதுகாக்கின்றனவோ, அதேபோல்தான் "கற்பு", "கற்பழிப்பு" சொற்களுக்கும் நிகழ்கின்றது. அரிஜன் என்று காந்தி அழைத்த போது எப்படி சமூகம் தன்னளவில் சோடை போனதோ, அதேதான் தலித்தின் பின்னும் நிகழ்கின்றது. தாழ்ந்தசாதிகள் அதன் அடையளத்துடன் புதுப் பெயர் பெற்று விளங்கியதே எஞ்சியது.
இதே போன்று இந்தியா இலங்கையில் சேரி எல்லாவற்றையும் காலணியாக்கி புது வாசனை (சென்ர்) காட்டிய போதும், சேரி சேரியாகவே தொடர்கின்றது. காலணி அதே அர்த்தத்தை பெற்று புது சேரியானது. இதுபோல்தான் கற்பும் புதுவாசனை பெற்று, அதன் அர்த்தத்தில் மயக்கத்தை ஏற்படுத்தி போராட்டத்தை மட்டுப்படுத்தி சிதைக்கின்றது. இதை எல்லாம் எதிர்த்து நடைமுறையில் ஈடுபட, மாற்ற தயார் அற்றவர்களின் வாயடிப்புதான் இந்த மொழியில் மாற்றும் விளையாட்டுகள். மக்களுக்குள் இதன் அர்த்தங்கள் இச்சமூக அமைப்பின் அதே வழியில் தொடர்ந்து உயிர்வாழ்வதும், மாற்றங்கள் மாறுகின்ற பொருளாதார வடிவங்கள் அதன் மீதான போராட்டத்தால் மட்டுமே நிகழ்கின்றன.
ஒடுக்கும் வர்க்கத்தால் "கற்பிக்கப்பட்ட" கற்பனை புனைவுகள், ஒரு பொருளாதார அமைப்பால் உருவகம் பெற்று பாதுகாக்கப்படும் போது அதற்கு எதிரான போராட்டத்தால் மட்டுமே இல்லாது ஒழிக்கமுடியும். இல்லாது சமூகத்தில் இருந்து அன்னியப்பட்ட, நடைமுறையில் செயல்ப்பட தயார் அற்றவர்கள், அதற்கு தெளிவான கோட்பாடு இன்றி "நடுநிலை", "கேள்வி", "பரிசீலனை"யின் பின் அரசியல் பேசுவோர், தம்மை எழுத்தாளராக காட்டிக் கொள்ள விரும்பும் புத்தியீவிகளின் கோட்பாடுகள் ஒடுக்குபவன் சார்ந்து சொற்களை ஒழித்துக் காட்டுவதன் மூலம் பாதுகாக்கின்றனர்.

இது இன்று மட்டுமல்ல அன்றும் இருந்தன என்பதற்கு மார்க்ஸ்சின் மூலதனம் பாகம் 1.2 இல் பக்கம் 722 இல் "தத்துவத்தின் வறுமை" என்ற நூலில் எழுதியதை மீள மார்க்ஸ் எடுத்துக்காட்டியதைப் பாhப்போம். ..., ஓர் உருவக வழக்குதான் அடித்தளம் என்றாகிறது. சமுதாயம் தன்னைப் பீடித்துள்ள 'கேடுகளை எல்லாம் ஒழித்துக் கட்ட' விரும்புகிறதா? சரி, ஓசைக்கேடான சொற்களை எல்லாம் ஒழித்துக் கட்ட வேண்டியதுதான், மொழியை மாற்ற வேண்டியதுதான். சமுதாயம் இதற்காக வேண்டி அறிஞர் பேரவைக்கு விண்ணப்பம் செய்து அதன் அகராதிக்கு ஒரு புதிய பதிப்பை வெளியிடுமாறு கேட்டால் போதும்" என புரட்சியை மழுங்கடிக்க, பிரச்சனையை திசைதிருப்ப சொற்களை மாற்றி வித்தை காட்டிய அறிஞர் புத்திஜீவிகளுக்கு அன்று மார்க்ஸ் பதிலளித்தது இன்றும் அச்சொட்டாக அதையே மீளச் செய்வோருக்கும் பொருந்துகின்றது.

"கற்பு" என்பதை நாம் எப்படி அணுகுகின்றோம்?

1.நிலப்பிரபுத்துவ மற்றும் மதவாத கோட்பாடுகளில் "கற்பு" பற்றிய அனைத்து ஒழுக்கங்களையும் எதிர்ப்பதிலும், அதை கண்டித்து போராடுவதிலும் பாட்டாளி வர்க்கம் தன்னை முன்நிறுத்துகின்றது.

2.ஏகாதிபத்திய உலகமயமாதலின் வளர்ச்சியில் நிலப்பிரபுத்துவம் தகர்கின்ற போது கற்புரிமைக் கோட்பாடு தகர்ந்து விபச்சாரமாக மாறுகின்றது

பாட்டாளி வர்க்கம் பெண்ணின் நிலையை இவ்விரண்டிலும் இருந்து வேறுபடுத்துகின்றது. காட்டுமிராண்டித்தனமான "கற்பு" கோட்பாட்டு நடைமுறையை எதிர்த்தும், விபச்சார வாழ்முறையை எதிர்த்தும் என இரு தளத்தில் போராடுகின்றது. முதலாவது தளத்தில் நிலப்பிரபுத்துவ கற்பை எதிர்த்து போராடும் போது பெண்ணின் சுயநிர்ணயத்தை முன்நிறுத்துகின்றது. ஒரு பெண் ஒரு ஆணுடன் சேர்ந்து வாழ்வது பிரிந்து வாழ்வது அவளின் உரிமையாக கற்புரிமையை முன்வைக்கின்றது. இது சமுதாயத்தின் சுதந்திரத்தில் எல்லைப்படுத்துகின்றது. மறுதளத்தில் பெண் சமுதாய சுதந்திரத்துக்கு எதிரான தனிமனித சுதந்திரத்தில் தனது தனித்துவத்தை விபச்சார நிலைக்கு நகர்த்தும், ஏகாதிபத்திய கற்புரிமை அழிப்பு கோட்பாட்டை எதிர்த்து பெண்ணின் தனித்துவத்தை உரிமையை தற்காப்பாக கோருகின்றது.

பெண் மீதான ஆணாதிக்க சூறையாடலை தற்காப்பதிலும், பெண் ஆணாதிக்கத்துக்கு எதிராக தான் தெரிவு செய்த கற்பரிமையை பாதுகாக்க, (உதாரணமாக டிஸ்கோ பாலியல், ஒரே நேரத்தில் பலரை காதலித்து உறவு கொள்வது, திருமணத்துக்குள் இருந்தபடி வெளியில் பலருடன் உறவு கொள்வது, கணவன் மனைவியை மாற்றி உறவு கொள்வது, காதலை கைவிட்டு நுகர்வை அடிப்படையாக கொண்ட பலகணவன் உறவுகள்... போன்றன) இந்த ஏகாதிபத்திய சகாப்த்ததில் ஏகாதிபத்தியத்துக்கு எதிராக பாட்டாளி வர்க்கம் தலைமையில் முன்நிறுத்துகின்றது. பெண்ணுக்கு மட்டும் இருக்கின்ற ஒருதார மணத்தை மறுத்து, பெண் சுயமான வகையில் பிரிந்தும் சேர்ந்தும் வாழும் எல்லையால் பெண் தன்னை தற்காத்து கொள்ளும் கற்புரிமையை கோருவதாகும். மறுதளத்தில் பெண் மீதான ஆணாதிக்க கட்டுப்பாட்டுக் கற்பை எதிர்த்து (உதாரணமாக மறுமணம், குடும்பத்தில் இருந்து விலகி மீள திருமணம் செய்தல், காதலித்து தோல்வி பெறும் பட்சத்தில் மீள் காதலித்தல், ஏமாற்றப் படும் போது மீளவும் காதலித்து வாழும் உரிமை, பலாத்காரம் செய்யப்பட்ட நிலையில் சாதாரணமாக வாழும் உரிமை... போன்றவற்றில் காணப்படும் ஆணாதிக்க ஒருதார மணத்தில் உள்ள கற்புக் கோட்பாட்டை எதிர்த்து போராடுதல்) பெண்ணின் சுயநிர்ணயத்தை கற்புரிமையில் முன்வைக்கின்றது. அதாவது தேசியத்தில் நிலப்பிரபுத்துவத்தை எதிர்த்தும், ஏகாதிபத்தியத்தை எதிர்த்தும் சொந்த தேசியத்தை கோருவது போல், பாட்டாளி வர்க்கம் கற்புரிமை மீது தன்னை நிலை நிறுத்துகின்றது. இதை மறுக்கின்ற இரண்டையும் எதிர்த்து தன்னை அரசியல் மயமாக்கி ஆயதபானியாக்குகின்றது.

6 comments:

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Sri Rangan said...

Only those who recognise the good in its abundance,will properly understand the bad.;)-Admitting to being wrong proves that we have grown wiser!

Regards
P.V.Sri Rangan

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...
This comment has been removed by a blog administrator.