தமிழ் அரங்கம்

Saturday, March 10, 2007

(கிழக்கு) மக்களின் பிரச்சனைகள் என்ன?

(கிழக்கு) மக்களின் பிரச்சனைகள் என்ன?

பி. இரயாகரன்
10.03.2007


கிழக்குவாழ் மக்களின் பிரச்சனைகளை அடிப்படையாக கொண்ட விமர்சனம், காலத்தின் முக்கியத்துவம் கருதி முன்வைக்கப்படுகின்றது. புலிக்கு பதிலாக கருணா என்ற ஒரு பாசிட், பேரினவாதத்தின் கூலிப்படையாக வெளிப்பட்டது முதல் அந்த அரசியல் இழிநிலையை அம்பலப்படுத்துவதை காலம் கோருகின்றது. புலியெதிர்ப்பு மற்றும் புலிக்கு மாற்றாக கருணா என்ற மற்றொரு பாசிட்டை முற்போக்காக காட்டுகின்ற வரலாற்று ஒட்டத்தின் ஆரம்பத்திலேயே, இதை அரசியல் ரீதியாக முறியடிக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது. யாழ் மேலாதிக்கத்துக்கு நிகராக கிழக்கு பிரதேசவாதத்தை முன்வைத்து, அந்த மக்களின் முதுகில் சவாரி செய்வதை அனுமதிக்க முடியாது. போலியாகவும் புரட்டாகவும் அரசியலை திரித்துப் புரட்டி, மக்கள் அரசியல் செய்வதாக பீற்றுகின்ற இந்த பாசிட்டுக்களை இனம் காண்பது அவசியமானது. இந்த வகையில் கிழக்கு மக்களின் வாழ்வு சார்ந்த பிரச்சனைகள் என்ன என்ற ஆய்வுடன் கூடிய விமர்சனம், உள்ளடக்கத்தில் முழு இலங்கை வாழ் மக்களுக்கும் பொருந்தி வரும் அம்சம் அதிகமானது.


புலிகள் என்ற வலதுசாரிய குறுந்தேசிய அமைப்பு அதன் அரசியல் நீட்சியில் இயல்பாகவே பாசிச வடிவத்தை எடுத்துக் கொண்டது. இதன் நீட்சியில் ஒரு கொலைகார, ஒரு கொள்ளைக்கார மாபியா கும்பலாக சீரழிந்தது. ஓட்டு மொத்த மக்களையும் தனக்கு அடிமைப்படுத்தி, அவர்களின் வாழ்வை சீரழித்து சிதைத்து சின்னாபின்னமாக்கியுள்ளது. இந்த வரலாற்று ஓட்டத்தில், அதன் அனைத்து பாசிச மாபியா நடத்தைகளில் தீவிர பங்கு கொண்ட அதன் முக்கிய புள்ளியாக செயல்பட்ட கருணா, அதிகார முரண்பாடுகளால் முரண்பட்ட போது பிளவு நிகழ்கின்றது. உண்மையில் புலிகளின் ஜனநாயகமின்மை, கருணாவின் தனிப்பட்ட அதிகார முரண்பாட்டால் ஏற்பட்ட பிளவு தவிர்க்க முடியாத ஒன்றாகியது. புலிகள் அமைப்பில் இது போன்ற பல உதிர்வுகளும், விலகல்களும் தொடர்ச்சியாக நடந்து வந்துள்ளது. இதற்கு அப்பால் துரோகியாகவும், இராணுவ மோதலில் வீர மரணங்களாகவும், திடீரென காணாமல் போன நிகழ்வுகள், பாசிச மாபியா கும்பலின் வளர்ச்சியுடன் ஓட்டிப் பிறந்ததாகவே காணப்படுகின்றது.


இந்த வகையில் உள் நிகழ்ந்த அதிகார மோதலில் தோற்ற கருணாவின் பிளவு, தவிர்க்க முடியாதது தான். உள்ளடகத்தில் அவரின் தனிப்பட்ட உரிமையும் கூட. பிளவு நிகழ்ந்த பின்பாக 14.3.2004, 20.03.2004 நாம் எழுதிய கட்டுரைகளில், சரியாகவும் தெளிவாகவும் இதை மதிப்பிட்டோம். (பார்க்க வடக்கு-கிழக்கு என்ற பிரதேசவாத பிளவு, ஏன் புலிக்குள் நடந்தது?


பாசிச அமைப்புக்குள்ளான கருணாவின் அதிகார நலன்கள், அதுவே தனிமனித பிளவாகிய போதும், அதற்குள் ஒரு ஜனநாயகக் கோரிக்கை இருந்தது. புலிகள் போன்ற பாசிச மாபியா இயக்க நடைமுறையில், உள்ளியக்க ஜனநாயக மறுப்புக்கு எதிரான உயிர்வாழ்வு சார்ந்த பிரச்சனை கூட ஜனநாயகக் கோரிக்கை தான். கருணா தனிநபர் அதிகார நலனை முன்வைத்து பிரிந்த அந்த அதிகார நலன் சார்ந்த அரசியல் உள்ளடகத்தை மறைத்து, அதை இயல்பாக காலகாலமாக நீடித்த யாழ் மேலாதிக்கத்துக்கு எதிரான பிளவாக தனது பிளவை சித்தரித்தார்.


இந்த வகையில் யாழ் மேலாதிக்கத்தை எதிர்த்து போராட வேண்டிய அரசியல் பணிக்கு இது உற்ற துணையாகவும், அதேநேரம் இதன்பால் ஆழமான அரசியல் தெளிவு ஏற்படும் போது கருணா போன்றவர்கள் கூட சரியான மக்கள் நிலையை எடுக்க முடியும் என்ற அரசியல் உண்மையை நாம் நிராகரித்து இருக்கவில்லை. இந்த வகையில் யாழ் மேலாதிக்கம் பற்றியும், மக்களின் நலனை முன்னிலைப்படுத்த வேண்டியதன் அவசியம் பற்றியும், நாம் விமர்சன ரீதியாக தொடர்ந்து இடித்துரைத்தே வந்தோம். ஆனால் கருணா மக்களுக்கு எதிராக அதே பாசிச வழியில், யாழ் மேலாதிக்கத்தை இனம் காணத் தவறி, வடக்கு மக்களை எதிரியாக சித்தரித்து, சொந்த மக்களையே ஒடுக்கத் தொடங்கினார். உள்ளடகத்தில் தனது அதிகாரத்தையும், அந்த அதிகார மேலாதிக்கத்தை பெறுவதற்காக யாழ் மேலாதிக்கத்தை முன்னிறுத்தி, பிரதேச பிளவை முன்தள்ளி, மக்களை எதிராக நிறுத்தி, ஒரு அதிகார வெறியன் என்பதை நிறுவியுள்ளார். புலிகளின் உள்ளான முரண்பாட்டில் எது அவரின் முரண்பாடோ, அதை இப்படி சாதித்துக் கொண்டார். அதே புலிப்பாசிச மாபியா வழியில், அந்த அரசியல் சாக்கடை மூலம் தன்னை நிறுவிக் கொண்டார். யாழ் மேலாதிக்கத்தை அரசியல் ரீதியாக இனம் காணத் தவறி, குறும் பிரதேச பிளவை முன்தள்ளிய கருணா, மக்களிடையே பிளவை விதைத்ததன் மூலம் மற்றொரு பாசிச மாபியா புலியை உருவாக்கினார். இப்படி கிழக்கு மக்கள் புதிய பாசிச புலிக்கு அடிமையாகி, தம் வாழ்வை இழக்கின்றனர். இந்த புலி பேரினவாதத்தின் எடுபிடி குண்டர் படையாக, கிழக்கு மக்கள் மத்தியில் தனது சூறையாடலை நடத்துகின்றது. கிழக்கு மக்களின் வாழ்க்கைக்கு எதிராக இந்த பாசிச மாபியா கும்பல் செயல்படுகின்றது.


இதை அம்பலப்படுத்துவது அனைவரினதும் உடனடிக் கடமையாக உள்ளது. அதன் ஆரம்பத்திலேயே இது இனம் காணப்பட்டு, அரசியல் ரீதியாக அழிக்கப்பட வேண்டும். இந்த வகையில் யாழ் மேலாதிக்கத்தை அரசியல் ரீதியாக அடையாளம் காண்பதும், கிழக்கு மக்களின் நலனை முன்னிலைப்படுத்தி போராடுவதும் அவசியமானது. இது மட்டும் தான் முற்போக்காக இருக்கும். அதுவே மக்களின் நலனை முன்னிலைப்படுத்தும். ஆனால் கருணா கும்பல் இதற்கு எதிராகவே செயல்பட்டது. படிப்படியாக மற்றொரு புலி பாசிட்டுக்களாக மாபியாவாகவே தன்னை வெளிப்படுத்த தொடங்கியது. இந்த நிலையில் பேரினவாதத்துடன் அங்குமிங்குமாக ஓட்டி உறவாடியது வெளிப்படத் தொடங்கியது. இந்தியாவின் கைக் கூலியாக அடையாளப்படுத்திக் கொண்ட நிகழ்ச்சிகள் நிகழ்ந்தன. அதேநேரம் இலங்கை இந்திய அரசுகளின் கூலி அமைப்புக்களாக, அவர்களின் வளர்ப்பில் வாழ்ந்த மக்கள் விரோத கும்பல்களுடன் தம்மை இணைத்துக் கொண்டு செயல்படுவதை அறிவித்தனர். இருந்த போதும் கூட, அதை விமர்சிப்பதில் தெளிவாகவும், ஆனால் மக்கள் நலனை முன்னிலைப்படுத்தி சரியான வழிக்கு வரும் வகையில், மென்மையான அணுகுமுறையை கையாண்டோம். குறைந்த பட்சம், மக்களின் அடிப்படையான வாழ்வியல் நலனை அவர்கள் முன்னெடுக்க வேண்டும் என்ற எமது ஆவல் காரணமாக, அதற்கு இசைவான வகையில் விமர்சன முறையைக் கையாண்டோம்.


ஆனால் கருணா கும்பல் மற்றொரு புலியாக, பேரினவாதத்தின் கூலிக் கும்பலாகவே, இந்தியாவின் அரசியல் எடுபிடிகளாகவே தன்னை அடையாளப்படுத்திக் கொண்டது. எந்த விதத்திலும் புலிக்கும், இந்த கிழக்கு புலிக்கும் இடையில் மக்கள் பற்றிய நிலைப்பாட்டில் வேறுபாடில்லை என்பதை மெய்ப்பித்து வந்தது. குறிப்பாக புலியை விட மோசமான அரசியல் நிலையை எடுத்து, எதிரியுடன் கூட்டு சேர்ந்து தனது பாசிசத்தை மக்கள் மேல் கையாண்டது. இந்த பாசிச மாபியா கும்பலை ஆதரிப்பதில் புலியெதிர்ப்பு கும்பல் முற்றுமுழுதாக முழுமூச்சாக செயல்படத் தொடங்கியது. இந்த அரசு சார்பு கும்பலின் பாசிச நடவடிக்கையை முற்று முழுதாக இருட்டடிப்பு செய்தலில், புலியெதிர்ப்பு கும்பலின் பங்கு முதன்மையானது. பல புலியெதிர்ப்பு நபர்கள் கருணா கும்பலின் பேச்சாளராக, பிரச்சாரகராகவும் மாறினர். கருணா அரசுடன் சேர்ந்து ஈடுபட்ட பாசிச நடிவடிக்கைகளை, மூடிமறைத்தபடி அதை முற்போக்காக காட்டத் தொடங்கினர். இந்த நிலையில் அதனை முழுமையாக அம்பலப்படுத்தும் வரலாற்று கால கட்டத்தில், நாம் தொடாச்சியாக அதனை அம்பலப்படுத்துகின்றோம்.


இந்த கருணா என்ற பாசிச மாபியா கும்பல் பேரினவாதத்தின் இராணுவத் தேவையை பூர்த்தி செய்யும் கூலிக்கும்பலின் செயல்களை நாம் புரிந்துகொள்ள, மக்களின் நலன்கள் என்ன என்பதை தெளிவுபடுத்துவதும் அவசியமாகின்றது.


மக்களின் நலன்கள் என்பது, அரசியல் ரீதியாக அதற்காக போராடுவதைக் குறிக்கின்றது. மக்களுக்காக போராடுவதாக கூறிக் கொள்ளும் யாரும், மக்களை நலனை இனம் கண்டு போராட மறுப்பது, உள்ளடகத்தில் மக்களுக்கு விரோதமான செயலை அடிப்படையாக கொண்டது. மக்களின் நலன்களை எப்படி இனம் காண்பது.


1. மக்கள் எப்படியான பொருளாதாரத்தில்,


2. எப்படியான சூழலில்


3. எந்த வகையான உழைப்பில்


4. எந்த வகையான உற்பத்தி உறவில்


5. எந்த வகையான சமூக முரண்பாடுகளில்


6. எந்த வகையான வர்க்க முரண்பாடுகளில்


7. எந்த வகையான அடக்குமுறைகளின் கீழ்


எப்படி வாழ்கின்றனர் என்ற தெளிவும், அதை களையும் போராட்டத்தையும் அடிப்படையாக கொண்டது. மக்களின் வாழ்வுசார் முரண்பாடுகளை தீர்க்கும் உள்ளடகத்தில் நின்று போராடுவது தான் மக்கள் போராட்டம். வர்க்க மற்றும் சமூக முரண்பாட்டின் அனைத்தும் தழுவிய உள்ளடகத்தில் போராட மறுப்பது மக்கள் விரோதத் தன்மை கொண்டது. இதில் ஒன்றை மட்டும் மையப்படுத்தி போராடுவது என்பது, உள்ளடகத்தில் பிற்போக்குக் கூறைக் கொண்ட ஒரு போராட்டமாகவே இருக்கும். இது படிப்படியாகவே சீரழியும்.


இந்த வகையில் கிழக்கு மக்களின் பிரச்சனைகள் இனம் காணப்பட்டு, அந்த மக்களின் வாழ்வுக்காக அவர்களுடன் இணைந்து நின்று யாரும் போராடவில்லை. கிழக்கு வாழும் மக்களின் 80 சதவீதத்துக்கும் மேற்பட்டவர்கள் மிகமிக வறிய மக்கள். அன்றாடம் ஒரு நேரக் கஞ்சிக்கே வாழவழியற்ற உழைக்கும் மக்களாவர். அன்றாடம் தனது தேவையை பூர்த்தி செய்யாத, உழைப்பு என்ற சகதிக்குள் உருத்தெரியாது மாண்டு போகின்றவர்கள். ஒரு உயிரின் தேவைகளைக் கூட வெளிப்படுத்த முடியாத வகையில், அவர்களின் அடிமைத்தனம் காணப்படுகின்றது. இந்த விளைவால் குழந்தைகளின் எதிர்காலம் முதல் நவீன அறிவியல் கண்டு பிடிப்புகள் என எதையும் நுகரமுடியாத, உலகமயமாதல் சமூக அமைப்பில் உயிர்வாழ்வதற்கு அவசியமற்ற ஒரு உறுப்பாக வாழ்பவர்கள்.


இந்தளவுக்கும் அந்த மக்கள் வாழும் பூமி அதீதமான இயற்கை வளம்கொண்டது. ஆனால் அந்த மக்கள் வாழ முடியாத அவலம். ஒரு நேர கஞ்சிக்காக அவர்கள் விடும் கண்ணீர், வற்றாத நதிகளாகவிட்டன. ஒருபுறம் சொந்த நிலத்தைக் கொண்டு வாழமுடியாத அவலம், மறுபக்கம் கூலிக்குச் சென்று வாழமுடியாத அவலம். பெரும்பாலான கிழக்கு மக்களின் நிலை இது. மக்களின் வாழ்க்கை அனைத்தும் இந்த சகதிக்குள் தான் உழலுகின்றது.


ஆனால் அரசியல் செய்தவர்கள், செய்பவர்கள் இந்த உண்மையை மறுத்தபடி, தமது வெட்கக் கேடான இழிந்து போன அரசியலை செய்கின்றனர். இந்த மக்கள் மத்தியில் அரசியல் செய்பவர்களின் வாழ்க்கை முறையோ, இதற்கு நேர்மாறானது. பகட்டுத்தனங்கள், ஆடம்பரங்கள் முதல் அனைத்தும் இந்த மக்களின் இரத்தத்தை உறிஞ்சி வாழ்கின்றவர்களின் சொகுசு வாழ்க்கை தான், அவர்களின் அரசியலாகி நிற்கின்றது.


பேரினவாதம் தமிழ் மக்களை ஒடுக்குகின்றது என்பதை மேலெழுந்தவாரியாக இனம் கண்ட ஒரு போராட்டம், அந்த குறித்த சமூக முரண்பாட்டினுள் மக்களின் வாழ்வு சார்ந்த நிலையை மறுதலித்து அதை முன்னெடுக்கவில்லை. மாறாக இதை பயன்படுத்திக் கொண்டு, அந்த மக்களை ஒடுக்குகின்ற ஒன்றாகவே மாறியது. இது உள்ளடகத்தில் யாழ் மேலாதிக்கமாகவும் அடையாளம் காணப்பட்டது. இதை மறுப்பதாக கூறிக் கொண்டு யாழ் மேலாதிக்கத்தை எதிர்ப்பதாக பாசாங்கு செய்தவர்கள், அதை வெறும் பிரதேச ரீதியாக வரையறுத்தனர். யாழ்மேலாதிக்கத்தை எதிர்ப்பதின் பின் உள்ள மக்கள் வாழ்வு சார்ந்த வாழ்வியலை நிராகரித்தது. மக்களின் மற்றொரு எதிரியுடன், மற்றைய சமூக முரண்பாடுகளை களையமறுத்து, அந்த முரண்பாட்டின் ஒடுக்குமுறைக்கு சார்பாக நின்று, மக்களை ஒடுக்குவதில் தான் இவர்களின் அரசியலே அடங்கிக் கிடக்கின்றது. மக்களின் உழைப்பிலான செல்வத்தை உறிஞ்சுவதில் தான், இவர்களின் அரசியல் அடங்கிக்கிடக்கின்றது. அந்த மக்களை அடக்கியொடுக்கி, அவர்களின் உழைப்பைப் புடுங்கி வாழும் வாழ்க்கையைத்தான், அவர்களின் வாழ்க்கையின் பின்னணியில் காண்கின்றோம். தமக்காக, தமது வாழ்வை மேம்படுத்துவதற்காக மக்களின் பெயரில் போராடுகின்றனர்.


மக்களின் வாழ்வு சார்ந்த வறுமையும், அதனுடன் கூடிய இழிநிலைமை என்பது, இலங்கை தழுவிய சமூக பொருளாதார சுரண்டல் ஆட்சி அமைப்பினால் உருவானது. ஏகாதிபத்திய நலனை பூர்த்தி செய்யும் தரகு முதலாளிகளையும், நிலப்பிரபுக்களையும் கொண்ட இலங்கை அரசு, இலங்கை பூராகவும் மக்களின் வாழ்வை அழித்து வாழ்பவர்களின் நலனைத் தான் ஜனநாயகம் என்கின்றது. பொதுவான இந்த நிலைமையால் ஏற்படும் விளைவு, பிரதேசத்துக்கு பிரதேசம் வேறுபடுகின்றது. ஒப்பீட்டளவில் கிழக்கு மக்களின் நிலைமையும், அவர்களின் வாழ்க்கைத் தரமும், மற்றைய மாவட்டங்களுடன் ஒப்பிடும் போது மிகவும் கீழ்நிலைப் பாத்திரத்தை வகிக்கின்றது. கிழக்கு மக்களின் வாழ்வில் ஒரு விடுதலை வேண்டும் என்றால், அது இலங்கை அரசுக்கு எதிரான போராட்டத்தை அடிப்படையாக கொண்டது. இது உள்ளடகத்தில் அனைத்தும் தழுவிய வகையில் நடத்தப்பட வேண்டும். இதை மறுக்க முனைவதே அபத்தம்.


இந்த நிலையில் தமிழ் மக்கள் மேல் இனவொடுக்கு முறையை பேரினவாதம் கையாண்ட போது, அந்த மக்கள் இரண்டு பிரதானமான ஒடுக்குமுறையைச் சந்தித்தனர், சந்திக்கின்றனர்.


1. பொதுவாக இலங்கை முழுவதுமாக காணப்படும் சுரண்டலும், சூறையாடலும்


2 .இனவொடுக்குமுறை ஊடாக காணப்படும் அடக்குமுறையும் சூறையாடலும்


இரண்டாவதை மட்டும் எதிர்த்து போராடி தலைமைகள் இயல்பாகவே சுரண்டும் முதலாவது போக்குடன் இணங்கிச் சென்றன. தமிழ் ஆதிக்க சுரண்டும் பிரிவுகளின் போராட்டமாக மாற்றியதால், கிழக்கு மக்கள் மூன்றாவது மற்றும் நான்காவது ஒடுக்குமுறையைச் சந்தித்தனர்.


3. அது யாழ் மேலாதிக்கமாக, குறுந் தேசியமாக, சொந்த மக்களை அடக்கியொடுக்கி சூறையாடும் ஒரு போராட்டமாக மாறியது.


4. கிழக்கு மக்கள் பிரதேச ரீதியான இழிவாடலையும், சமூக ரீதியான புறக்கணிப்பையும், வெறுமனே பயன்படுத்துப்படுவதையும், பிரதேசரீதியான புறக்கணிப்பையும், மற்றைய இன மக்களுடன் சேர்ந்து வாழ வேண்டிய நிலையில் இணக்கமற்ற தொடர் மோதலையும், இது போன்று பலவற்றை சந்தித்தனர்.


இப்படி தமிழ் மக்கள் மூன்று சிறப்பான ஒடுக்குமுறையையும், கிழக்கு மக்கள் மேலதிகமான நாலாவது சிறப்பு ஒடுக்குமுறைiயும் ஒரே நேரத்தில் அனுபவித்தனர். இந்த மக்களின் மேலான ஒடுக்குமுறைகளை இனம் கண்டு போராடத் தவறுகின்ற எந்த தலைமையும், எந்த அரசியலும் அந்த மக்களுக்கே எதிரானது. இதில் ஒன்றை அல்லது பலவற்றை ஒருங்கே கொண்டு மக்களை அடக்கியொடுக்கும் செயல் தான் கிழக்கில் நடக்கின்றது. உண்மையில் எந்த மக்களுக்காக போராடுவதாக பீற்றிக்கொள்கின்றனரோ, அந்த மக்களின் மேலான ஒடுக்குமுறையை, இவர்கள் மக்களுக்கு அடையாளம் காட்டுவது கிடையாது. ஒன்றை முதன்மைப் படுத்தி, இதன் ஒரு பக்கத்தை மட்டும் முன்னிலைப்படுத்தி, மக்களை ஒடுக்குவது தான் இவர்களின் அரசியலாகும்.


இந்த மக்களின் விடுதலைக்காக குறித்த பிரதேசத்தை உள்ளடக்கிய யாழ் மேலாதிக்கமோ, கிழக்கு மேலாதிக்கமோ போராடவில்லை. தேசியம் என்ற பெயரில் சிங்கள மக்களை எதிரியாக காட்டி வந்த யாழ் மேலாதிக்கம் போல், யாழ் மேலாதிக்கம் என்ற பெயரில் வடக்கு மக்களை கிழக்கு மேலாதிக்கம் எதிரியாக காட்டுகின்றது. உள்ளடகத்தில் மக்களை எதிரியாக காட்டி, மக்களிடையே பிளவை விதைத்து அதில் சிலர் தத்தம் நலனையே அடைகின்றனர்.


ஒரு தேசம், தேசிய மக்கள், பிரதேச மக்கள் என்று எந்தக் கோட்பாடும், மக்களின் இந்த அவல நிலைக்கு காரணமான அரசை எதிர்த்துப் போராடவில்லை. மாறாக அந்த அரசின் பெயரில் மக்களை இழிவாக்கி, சுரண்டுகின்ற அதே கொள்கையை அடிப்படையாக கொண்டு, மக்களுக்காக போராடுவதாக கூறுவது நகைப்புக்குரியது. உண்மையில் இவர்கள் எல்லோரும் மக்களின் அடிமைத்தனத்தில், வாழவிரும்புகின்ற ஒரு வர்க்கத்தின் நலனை மட்டும் தான், இந்த மக்கள் விரோதக் கும்பல் கையிலெடுக்கின்றது.


ஒரு பிரதேச மக்களின் வாழ்க்கை என்பது வர்க்க முரண்பாடுகளால், சமூக முரண்பாடுகளால் சின்னாபின்னப்படுத்தப்படுகின்றது. இப்படித் தான் இலங்கையில் மக்கள் கூட்டம் வாழ்கின்றது. இந்த மக்களை பிரதிநித்துவம் செய்வதாக கூறிக் கொள்வோர் முதல் அரசியல் செய்வோர் ஒவ்வொருவரும், நிச்சயமாக இந்த வர்க்க மற்றும் சமூக முரண்பாட்டின் ஒரு பிரிவை சார்ந்து நிற்கின்றனர். இந்த வகையில் தான் யாழ் மேலாதிக்கம் முதல் கருணாவின் பிரதேசவாதம் வரை, ஒரு வர்க்கத்தின் நலனை பிரதிநிதித்துவம் செய்கின்றது. இந்த இரண்டும் சுரண்டும் வர்க்கத்தின் நலனை அடிப்படையாகக் கொண்டு, பெரும்பான்மை மக்களின் உழைப்பைச் சுரண்டும் ஒரு பிரிவுக்கு தலைமை தாங்குகின்றது. பரந்துபட்ட மக்களின் வர்க்க நலனையும் கணக்கிலெடுத்து, அந்த மக்களை பிளக்கும் சமூக ஒடுக்குமுறைகளை இது களைவதில்லை. இந்த வகையில் தான் இது உண்மையில் காணப்படுகின்றது. இதனிடம் மக்கள் நலன் என எதையும் எதிர்பார்க்க முடியாது. மக்களைச் சுரண்டி வாழ்கின்ற, யுத்தம் மூலம் உருவாகும் அராஜகவாத புதுப் பணக்காரக் கும்பலாகத்தான் இருக்கின்றது. அத்துடன், அந்த யுத்த பொருளாதார மூலம் உருவாகும் புதுப்பணக்கார ரவுடிகளின் பாசிச நலனை அடிப்படையாக கொண்டு இயங்குகின்றது. இந்த புதுப் பணக்கார வர்க்கம் மக்களின் அவலத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்தி, அவர்களை மிகக் கோரமாகவே சுரண்டி உருவான ஒரு இழிந்த அராஜகவாத வர்க்கம். இந்த வகையில் உருவான வர்க்கத்தின் உருவாக்கத்துக்கும் இருப்புக்கும், பாசிசமே அதன் சமூக விதியாக இருந்தது.


இந்த நிலையில் இந்த வர்க்கத்தின் சார்பாக போராடிய இந்தக் கும்பல்கள், சமூகத்தில் இழையோடிப் போயுள்ள வர்க்க முரண்பாட்டை சமூக முரண்பாட்டைக் கண்டு கொள்வதில்லை. அப்படி ஒன்று சமூகத்தில் இருப்பதாக கருதுவதைக் கூட அங்கீகரிப்பதில்லை. மாறாக இவர்கள் எதை ஆயுதமாக எடுக்கின்றனர் என்றால், சமூக முரண்பாட்டின் ஒன்றை ஒற்றைப்பரிணாமத்தில் முன்னெடுக்கின்றனர். அதன் முழுமையையும், மற்றைய முரண்பாடுகளையும் கண்டு கொள்வதில்லை. யாழ் மேலாதிக்கம் தமிழ் தேசியத்தில் பேரினவாதமாகவும், கிழக்கு மேலாதிக்கம் பிரதேசவாதத்தில் யாழ் மேலாதிக்கமாகவும் உள்ளது.


இந்த இரண்டும் அந்த மேலாதிக்க உள்ளடகத்தில் உள்ள, வர்க்க முரண்பாட்டையும், மற்றைய சமூக முரண்பாடுகளையும் கூட நிராகரிக்கின்றது. தன்னளவிலும், அதாவது தனக்குள்ளும் எதரிக்குள்ளும் உள்ள வர்க்க முரண்பாட்டை மறுதலிக்கின்றது. இது தனக்குள் உள்ள வர்க்க முரண்பாட்டை மட்டும் மறுக்கவில்லை, எதிரிக்குள் உள்ள வர்க்க முரண்பாட்டையும் மறுதலிக்கின்றது. போராடுபவன் மட்டுமின்றி, எதிரியும் கூட, இதைத்தான் தனது அரசியலாக கொள்கின்றான். மாறாக ஒரு மக்கள் கூட்டத்தை, இன்னொரு மக்கள் கூட்டத்துக்கு எதிராக நிறுத்தி, வழிநடத்த முனைகின்றனர். இது தான் சிங்கள மேலாதிக்கம், யாழ் மேலாதிக்கம் மற்றும் கிழக்கு மேலாதிக்கத்தின், நடைமுறை சார்ந்த அரசியல் நிலையாகும். சொந்த மக்களை வர்க்க மற்றும் சமூக முரண்பாட்டில் ஒடுக்கியபடி, மற்றைய மக்கள் கூட்டத்தை எதிரியாக காண்பித்து கற்பிக்கின்றது.


இந்த வகையில் தான் குறிப்பாக புலியெதிர்ப்பும் செயல்படுகின்றது. இந்தப் பிரிவு மேற்கூறிய பிரிவுகளினால் கழித்துவிடப்பட்ட அல்லது அந்த போக்கில் அதிகாரத்தை பெறமுடியாது தோற்றவர்கள் முதலாக கொண்ட, சுயமாக மக்கள் நலனை முன்னெடுக்க, ஆதரிக்க முடியாதவர்களின் தங்குமிடமாகும். இது அறவே மக்களின் வர்க்க முரண்பாட்டையும், சமூக முரண்பாட்டையும் நிராகரிக்கின்றது. ஏதாவது ஒரு சமூக முரண்பாட்டில் பகுதியாக தொங்கிக் கொண்டு, அனைத்தையும் புலியாக காண்கின்றது. இலங்கையில் வாழும் அனைத்து மக்களின் எதிரியாக இனம் காணப்பட்ட ஏகாதிபத்தியம், பிராந்திய ஆதிக்க சக்தியான இந்தியா, இலங்கை ஆளும் பேரினவாத அரசு முதல் அரசியல் ரீதியாக இலங்கை இந்திய அரசின் கூலிக் குழுக்களாக உள்ளவர்களை சார்ந்து நிற்கின்றனர் அல்லது அவர்களின் கருத்தை முன்னிலைப்படுத்துகின்றனர். மக்களின் வாழ்வை அழிக்கும் வர்க்க முரண்பாடு, சமூக முரண்பாட்டை நிராகரிக்கின்றனர். இதை அரசியலாக கொண்ட மேற்கொண்ட பிரிவுகளின் அரசியல் தேவையை முன்னெடுப்பவர்களின் அரசியல் தான் புலியெதிர்ப்பாகும். இவர்கள் புலியை நிராகரிக்கும் போது கூட, புலியை வர்க்க ரீதியாகவோ, சமூக ரீதியாகவோ அம்பலப்படுத்துவது கிடையாது.


இந்த வகையில் முரணற்ற வகையில் ஒடுக்கப்பட்ட வர்க்கங்களை, ஒடுக்கப்பட்ட சமூக முரண்பாடு பிரிவுகளை இவர்கள் சார்ந்து நிற்பதில்லை. மாறாக ஒடுக்கும் வர்க்கத்தையும், ஒடுக்கும் சமூக பிரிவுகளையும் சார்ந்து நிற்கின்றனர். புலியின் நடத்தைகள் மீதும், ஏகாதிபத்திய வரையறைகளை அடிப்படையாக கொண்டு, தமது அரசியல் தளத்தை தக்கவைக்கின்றனர்.


மறுபக்கத்தில் இவர்கள் சார்ந்து நிற்கின்ற பிரிவுகளின் நடத்தைகளை விமர்சிப்பதில்லை. ஜனநாயக வேஷதாரிகளாக காட்டிக்கொள்ளும் நிர்ப்பந்தம் காரணமாக, புலியல்லாத தரப்புகளின் செயல்பாட்டை மென்மையாக அணுகுகின்றனர். இந்தவகையில் இவர்களின் இணைய இணைப்புகள், கருத்துகளை வெளியிடுவது முதல் ஒன்றாக விவாதிப்பது வரை, ஒன்றை ஒன்று சார்ந்து செயல்படுகின்றது. மக்களின் எதிர்காலம் பற்றி இவர்கள் அனைவரும் ஒன்றாக ஒரே இடத்தில், ஒரு நோக்கத்தில் கூடி மக்களுக்கு எதிராக விவாதிக்க முடிகின்றது. இந்த விவாதங்களில், சமூகத்தின் உள்ளான வர்க்க முரண்பாட்டை பற்றியோ, சமூக முரண்பாடுகளைப் பற்றியோ அதாவது ஒடுக்கப்பட்ட மக்கள் சார்பாக எதுவும் விவாதிப்பதில்லை. புலிகளை வர்க்கத்துக்கு அப்பாலான ஒரு சக்தியாக நிலைநிறுத்துவதும், கூடுவோர் வர்க்கங்கள் மற்றும் சமூக முரண்பாடுகள் கடந்த ஒரு நிலையில் புலி எதிர்ப்பில் மிதப்பதுமாக கும்மாளமிடுகின்றனர்.


மக்களின் பிரச்சனைகள் என்ன என்பதை இனம்காண மறுக்கின்றனர். அதை ஒவ்வொன்றாக இனம் கண்டு, அதை முன்னிலைப்படுத்தி போராட மறுக்கின்றனர். இந்த வகையில் இந்த புலியெதிர்ப்பை தெளிவாக, அரசியல் ரீதியாக அடையாளப்படுத்த முடியும், முடிகின்றது. இந்த வகையில் கிழக்கு மேலாதிக்கத்தையும், புலிகளை எதிர்க்கும் சகல பிற்போக்கு கூறுகளையும் ஆதரித்து நிற்கின்றது. மக்களின் ஐக்கியத்தை முன்னிலைப்படுத்துவதை எதிர்க்கும் இவர்கள், பிளவை அகலமாக்குகின்றனர். இலங்கையில் வாழும் அனைத்து மக்களிடையேயான ஜக்கியம், ஜக்கியத்துக்கு எதிரான அனைத்துக்குமான முன்நிபந்தனையாகும். மக்களிடையே ஐக்கியத்தை உருவாக்குவது, இதனடிப்படையில் சமூகங்கள் இணங்கி வாழும் வழிவகைகளை உருவாக்குவது அவசியமானது. இதை சிங்கள மேலாதிக்கம், யாழ் மேலாதிக்கம், கிழக்கு மேலாதிக்கம் முதல் புலி எதிர்ப்பு வரை மறுதலிக்கின்றது.


உண்மையில் சமூகத்தின் வர்க்க முரண்பாடுகளை, சமூக முரண்பாடுகளை ஒட்டு மொத்தமாக மறுத்தபடி, மக்களின் ஐக்கியத்துக்கான முன்னிபந்தனைகளை மறுத்தபடி தான், இந்தப் பிரிவுகள் செயல்படுகின்றது. இந்த அடிப்படையில் மக்கள் நலன் என்று எதையும், இதனிடம் தோண்டியும் எடுக்கமுடியாது. இந்த கும்பலுக்கு இடையிலான அதிகார மோதல்கள் எதுவும், மக்களுக்கான எந்த நலனையும் பிரதிபலிப்பதில்லை.


மக்கள் இடையேயான வர்க்க முரண்பாடு, உள்ளடகத்தில் சுரண்டலை அடிப்படையாகக் கொண்டது. பெரும்பகுதி மனிதர்களின் உழைப்பை, சிறிய பகுதி திருடி வாழ்வது தான் சுரண்டல். இதன் போதான உற்பத்தி உறவுகள், ஒருவருக்கு எதிராக மற்றவரை நிறுத்துகின்றது. இதன் மூலம் ஒருவனின் உழைப்பை சுரண்டி மற்றொரு பிரிவு வாழ்கின்றது. மனித இனத்தின் அடிமைத்தனம் இதனூடாக கட்டமைக்கப்படுகின்றது. சமூகத்தில் வறுமையும், இல்லாமையும் பெருகுகின்றது. சமூகத்தின் கடைக்கூறில் எஞ்சிக் கிடக்கும் ஜனநாயகத் தன்மை படிப்படியாக சீரழிக்கப்படுகின்றது. உலகம் தழுவிய இந்த நிகழ்வால், சமூக உறுப்புகள் எதையும் சுயமாக நுகர முடியாது. உதாரணமாக சுரண்டப்படும் குடும்பத்தைச் சேர்ந்த குழந்தையும், சுரணடும் குடும்பத்தின் குழந்தையும் ஒரேவிதமான ஒரே கல்வியை, ஒரே கல்விச் சூழலில் பெறமுடியாது. ஓரேவிதமான பொழுதுபோக்கை அனுபவிக்கவோ, நுகரவோ முடியாது. பண்பாடு கலாச்சாரம் என அனைத்தும் இரண்டு துருவமாக வேறுபடுகின்றது. எப்படி பிரதேசங்களுக்கு இடையில் பண்பாடுகள், கலாச்சாரங்கள் வேறுபடுகின்றதோ, அப்படித்தான் ஒரு சமூகத்தினுள்ளும் உள்ளார்ந்த வர்க்க வேறுபாடுகள் காணப்படுகின்றது. இது ஒருபுறம்.


மறுபுறம் இதன் காரணமாக சமூக முரண்பாடுகள் காணப்படுகின்றது. மனிதர்களை பிளந்து புதிது புதிதாக கற்பிக்கப்படுகின்றது. அது இனவாதமாக, நிறவாதமாக, பிரதேசவாதமாக, ஆணாதிக்கமாக, சாதியமாக, மதவாதமாக, பற்பல வகையில் காணப்படுகின்றது. இவற்றுக்கான உள்ளார்ந்த தோற்றுவாய்க்கான மூலங்களுக்கு அப்பால், சக மனிதனை ஒடுக்கி, அடக்கி வாழ்கின்ற உள்ளடகத்தில், அவர்களின் உழைப்பு சுரண்டப்படுகின்றது என்பதே உண்மை. இந்த ஒடுக்குமுறைகள் மீதான சமூக இழிவுகள் மீதான போராட்டத்தை முன்னெடுக்க தவறுகின்ற, இதற்குள்ளான முரண்பாட்டை முன்னெடுக்க தவறுகின்ற அனைத்தும் மக்கள் விரோதமானவை. அதாவது இன்று இவைகள் எதையும் முன்னெடுக்க தவறுகின்ற யாழ் மேலாதிக்கம் முதல் கிழக்கு மேலாதிக்கம் வரை, உள்ளடகத்தில் படு பிற்போக்கானவை. இந்த எல்லைக்குள் தான் புலியெதிர்ப்பும் அரங்கேறுகின்றது.


மக்கள் பிரச்சனைகள் இதற்குள் தான், முழுமையாக காணப்படுகின்றது. இந்த மக்களின் பிரச்சனைகளை நிராகரித்துவிட்டு வௌவெறு அதிகாரப் பிரிவுகள், தத்தம் பாசிச முகத்துடன் ஒன்றையொன்று எதிராக காட்டி முட்டி மோதிக் கொள்வதன் மூலம், தத்தம் குறுகிய நலனை மட்டும் அடைவதை நோக்கமாக கொணடது. இதன் பின்னால் எந்த மக்கள் நலனும் இருப்பதில்லை. இந்த வகையில் சிங்கள மேலாதிக்க தேசியமோ, யாழ் மேலாதிக்க தேசியமோ, கிழக்கு மேலாதிக்க பிரதேசவாதமோ, உள்ளடகத்தில் மக்கள் நலனை அடிப்படையாக கொண்டதல்ல. அனைத்தும் ஒரே அரசியலைக் கொண்டதும், ஒன்றுபடவே மக்கள் விரோதத்தையே அடிப்படையாக கொண்டது. இந்த வகையில் இவை அனைத்தும் புழுத்துக் கிடக்கின்றது.


சின்னசின்ன மக்களின் அன்றாட துயரங்கள் மீதும் கூட அக்கறை காட்டுவதில்லை. இந்த நிலையில் இலங்கை பேரினவாதத்துக்கு எதிரான யாழ் மேலாதிக்கம், யாழ் மேலாதிக்கத்துக்கு எதிரான கிழக்கு மேலாதிக்க போக்குகள் முதன்மை பெற்ற ஒரு முரண்பாடாக முன்னிலைப்படுத்தப்பட்டு, ஒடுக்குமுறைகள் உச்சத்தில் காணப்படுகின்றது. இதிலிருந்து மக்களை மீட்பதாக கூறிக் கொள்வது என்பதுவும், அனைத்தையும் பூசி மெழுகி நடத்திய மோசடிகளும் அம்பலமாகி சிதைந்து சின்னாபின்னமாகி வருகின்றது. உண்மையில் தாம் போராடுவதாக கூறிக் கொள்ளும் சிங்களப் பேரினவாதமாகட்டும், யாழ் மேலாதிக்கமாகட்டும், அதை ஒழித்துக் கட்டும் எந்த போராட்டத்தையும், இவர்கள் கோட்பாட்டு ரீதியாகவோ, நடைமுறை ரீதியாகவோ கொண்டிருக்கில்லை. சிங்கள பேரினவாதம் என்பதை சிங்களவனின் ஆதிக்கமாக விளக்குவதும், யாழ் மேலாதிக்கம் என்பதை யாழ்ப்பாணத்தானின் ஆதிக்கமாக விளக்குவதும், கிழக்கு மேலாதிக்கத்தை கிழக்கு மக்களின் ஆதிக்கமாக காட்டுவதும் நிகழ்கின்றது. உண்மையில் இதன் மூலம், இதை ஒழித்துக்கட்ட முடியாது. எந்த சமூக சார் மேலாதிக்கத்தையும், முழுமையாக சமூக பொருளாதார அரசியல் ரீதியாக மக்களை அணிதிரட்டி, அந்த மக்களின் தலைமையில் போராடாத வரை இதை ஒழிக்கமுடியாது. மாறாக சில சமூகம் சார்ந்த பொறுக்கிகளின் சுயநலனுக்கான போராட்டமாக எஞ்சுகின்றது.


இது ஆயுதம் ஏந்தும் போது இயல்பாகவே, பாசிச மாபியா குழுக்களின் நலனுக்கானதாக மாற்றம் காண்கின்றது. தத்தம் சொந்த தனிமனித அதிகாரத்துக்கான, தமது பொருளாதார நலனுக்காக, மக்கள் கூட்டங்களை எதிராக காட்டியபடி மனித உறவுகளை சிதைக்கின்றனர். இதுதான் இலங்கையில் ஆதிக்கம் பெற்ற அரசியலாக உள்ளது. இதற்குள் மக்கள் நலன், மனித நேயம் என எதையும் பூதக்கண்ணாடி வைத்துக் கூட, நாம் தேடமுடியாது.


ஒரு மக்கள் கூட்டத்தில் இருக்கின்ற படுபிற்போக்கான பாசிச ஆதிக்கப் பிரிவுகளை, மற்றைய ஆதிக்க பிரிவு அகற்றுவது, அந்த மக்களின் விடுதலையை குறிப்பதாக கூறுவதே, அனைத்து மேலாதிக்க சக்திகளின் அரசியலாக உள்ளது. இந்த கோட்பாட்டாளர்கள் அரசியல் ரீதியாக செய்வது, உண்மையில் அந்த மக்களின் அடிமைத்தனத்தை மற்றைய ஆதிக்க குழுவின் கையில் தாரைவார்ப்பதைத்தான். இதன் மூலம் சில எலும்புகள் கிடைக்கும் என்ற ஒரே காரணத்தினால், மக்களுக்கு எதிராக குலைக்கின்றனர்.


கிழக்கு மக்களின் விடுதலையை மறுக்கும் உள்ளார்ந்த முதன்மை எதிரி, கருணா என்ற பாசிட்டே


கருணா புலியில் இருந்த போதும் சரி, இன்று இலங்கை அரசின் கைக் கூலியாக புது அவதாரம் எடுத்து தனித்துவம் பெற்ற போதும் சரி, கிழக்கு மக்களின் உள்ளார்ந்த பிரதான எதிரி கருணாவாக இருந்தது, இருப்பது வெளிப்படையானது. கிழக்கு மக்களுக்கு எதிராக அன்று யாழ் மேலாதிக்கத்தின் கோவணமாக இருந்தவர், இன்று சிங்கள மேலாதிக்கத்துக்கு கோவணமாக இருக்கின்றார். இப்படித்தான் கிழக்கு மக்கள் அங்குமிங்குமாக, கருணா என்ற பொறுக்கியின் தலைமையில் மிகக் கேவலமாக இழிவாடப்பட்டனர், இழிவாடப்படுகின்றனர்.


கிழக்கை எடுத்தால் தேசியத்தின் பெயரில் இயங்கிய யாழ் மேலாதிக்க பாசிச மாபியா கும்பலிடமிருந்து, கிழக்கு மேலாதிக்க கருணா என்ற மாபியாக் கும்பலிடம் அதிகாரத்தை இடம்மாற்றுவதன் மூலம், அந்த மக்களுக்கு எதுவும் கிடைக்கப்போவதில்லை. சொந்த உள்ளுர்வாசி என்ற அடையாளத்தைத் தவிர, வேறு எதையும் புதிதாக மக்கள் அனுபவிப்பதில்லை. கிழக்கு மக்களுக்கு மாற்றம் வரும் என்று நம்ப வைப்பவர்கள், அவரின் பிறப்பை வைத்து (கிழக்கைச் சேர்ந்தவர் என்பதால்) அரசியல் மாற்றத்தை எதிர்வு கூறுகின்றனர். என்ன அரசியல் மக்களுக்கு சேவை செய்யும் என்பது பற்றி, எந்த சமூக அக்கறையும் இவர்களிடம் கிடையாது.


கிழக்கு மக்கள் என்று நாம் கதைத்தால், அன்றாடம் உழைத்து வாழும் கிழக்கு மக்களின் அன்றாட வாழ்வியல் பிரச்சனைக்கு தீர்வுகளை முன்வைக்க வேண்டும். அந்த மக்களின் சொந்த அதிகாரத்தை ஏற்படுத்துகின்ற எந்த அரசியல் வேலைத்திட்டத்தையும் முன்வைக்காத யாரும், மக்களின் எதிரிகள் தான். கடந்த எமது 30 வருட போராட்ட காலத்தில், உள்ளியக்க முரண்பாடுகளிலும், இயங்கங்கள் முன்வைத்த அரசியல் கருத்துக்களில் திட்டங்களில் மக்கள் நலன் சார்ந்த சிறிய முளைகள் இணங்காணக் கூடியவை. குறைந்தபட்சம் அதைக் கூட முன்னிறுத்த முடியாத, புதிய செயல்பாடுகள் பழையபடி பாசிசத்தின் வழியில் தொடர்வதை அங்கீகரிக்க முடியாது. கடந்தகாலத்திய மக்கள் நலன் சார்ந்த கூறுகளை இனம் காண்பதே, முதல்படியாக இருக்க வேண்டும்.


கருணா புலிகளில் இருந்து பிரிந்த பின்னால், தான் இருந்த இயக்கமே பாசிச மாபியா இயக்கம் என்பதையோ, அது ஒரு மக்கள் விரோத இயக்கம் என்பதையோ, இன்று வரை ஏற்றது கிடையாது. மாறாக அதில் சில தனிநபர்கள் தான், பிரச்சனைக்குரியவராக காட்டப்பட்டனரே ஒழிய அதன் அரசியல் அல்ல. இன்று வரை அது தான் கருணா குழுவின் நிலையாகும். எந்த அரசியல் மாற்றமும் கிடையாது.


தமக்கு இடையிலான அதிகார மோதலில் சம்பந்தப்பட்டவர்களை எதிரியாக காண்பதும், அவர்களை மக்களின் எதிரியாக காட்டுவதே அரசியலாக உள்ளது. புலிகளை அரசியல் ரீதியாக காணமறுப்பதும், அந்த அரசியலை மறுபடியும் முன்னெடுப்பதும் வெளிப்படையானது. கூறப் போனால் புலிகளில் இருந்து பிரிந்த போது காணப்பட்ட ஜனநாயக உரிமை சார்ந்த ஜனநாயகக் கூறு கூட, அர்த்தமிழந்து சிதைந்து விடுகின்றது.


முதலில் பிரிந்து வந்த இயக்கத்தை அரசியல் ரீதியாக விமர்சிக்க தவறுகின்ற யாராலும், புதிதாக ஒன்றை உருவாக்க முடியாது. புலிகள் பாசிச மாபியா இயக்கமாக இருந்ததை அரசியல் ரீதியாக விமர்சிப்பது தான், சுயவிமர்சனமாக இருந்திருக்கும். இதற்கு வெளியில் சுயவிமர்சனம் என்று எதுவும் கிடையாது. இதைச் செய்ய மறுத்தவர்கள், சுயவிமர்சனத்தை எப்படி செய்ய முன்வரவில்லையோ, அப்படி கடந்தகால மக்கள் விரோத அரசியலையே இன்றும் கொண்டிருப்பது தெளிவானது.


மாறாக தான் இருந்த காலத்தை மக்கள் இயக்கமாக பீற்றிக் கொள்கின்றனர். அண்மையில் வெளியாகிய அவரின் தொலைக்காட்சி பேட்டியில், தான் பிரிந்த பின்பாகத்தான் அது மக்கள் இயக்கமாக இல்லாமல் போனது என்கின்றார். தாங்கள் இப்போது ஒரு மக்கள் இயக்கம் என்கின்றார். கடைந்தெடுத்த பாசிட்டுகளுக்கே உரிய அரசியல் வக்கிரம்.


கடந்தகாலம் முழுக்க அதாவது தொடக்கம் முதலே மக்களுக்கு எதிராகவே செயல்பட்ட ஒரு இயக்கம், எப்படி மக்கள் இயக்கமாகும். இவை மக்கள் இயக்கமல்ல என்பது 1970 அடிப்படையாக கொண்ட பத்தாண்டுகளின் இறுதியிலேயே கடுமையான விமர்சனம் இருந்து வந்தது. இதனடிப்படையில் நடந்த முதலாவது புலிக்குள்ளான பிளவு, மக்கள் இயக்கம் தொடர்பான விவாதத்தில் நிகழ்ந்தது. தனிமனித சர்வாதிகாரம் ஆரம்பம் முதலாகவே அதன் பின்னால் கட்டமைக்கப்பட்டது. கருணா இதற்கெல்லாம் ஒத்தேதான் அந்த இயக்கத்தில் ஒட்டிக் கொண்டு, இதைத் தீவிரமாக கடைப்பிடித்ததன் மூலம் தளபதியானவர். முதன்மையான மக்கள் விரோதிகள் தான், தலைமைக்கு வரமுடியும். இது புலி இயக்கத்தின் பாசிச விதி. இப்படித்தான் கருணா என்ற பாசிட் புலிகளின் அம்மானாகி தளபதியானவர்.


புலிகள் இயக்கம் தொடக்கம் முதலாகவே அதன் அரசியல் பொருளாதார கூறுகள் அனைத்தும், மக்கள் விரோதமாகவே இருந்து வந்துள்ளது. அதை அரசியல் ரீதியாக விமர்சிக்க முடியாதவர்கள், கட்டுகின்ற இயக்கமும் அதே வழிப்பட்டதே. புலிகளின் மக்கள் விரோத தலைவர்களின் இழிசெயல்களை கவுரவப்படுத்த வழங்கப்படும் 'அம்மான்" என்ற அடையாளத்தை தக்கவைத்தபடி, அண்மையில் சிங்கள தொலைக்காட்சிக்கு வழங்கிய பேட்டியின் பின்னணியில் உள்ள கார்த்திகைப் பூ செடியும் எதைக்காட்டுகின்றது. கடந்தகால மக்கள் விரோத இயக்கத்தின் அடையாளங்களைக் கூட துறக்க மறுக்கின்ற, சுய தற்பெருமை பேர்வழிகளின் வக்கிரம் தான் பிரதிபலிக்கின்றது.


மக்கள் இயக்கம் வேறு, பாசிச இயக்கம் வேறு என்பதை பிரித்தறிய முடியாதவர்கள், ஒருபுறம் மக்கள் மேல் கும்மாளம் அடிக்கலாம். கருணா குறித்த பேட்டியில் குறிப்பிடும் போது, பாசிசத்துக்கு ஒரு ஒப்பீட்டைச் செய்தார். கம்பூச்சியாவின் பொல்பொட்டை பிரபாகரனுக்கு ஒப்பிட்டார். கடைந்தெடுத்த வலதுசாரிய பொறுக்கிகளின், பாசிச நாற்றங்கள் தான் இவை.


பாசிச படுகொலையையே ஜனநாயமாக கொண்ட வலதுசாரிகள், வரலாற்றில் இடதுசாரிகள் மீது சேறு அடிப்பதே அதன் அரசியலாகும். இன்றைய ஜனநாயக உலகில் வருடம் 10 கோடி பேர் மருந்தும், நீரும், உணவுமின்றி இது போன்ற காரணங்களால் கொல்லப்படுகின்றனர். எந்த பாசிட்டுகளால் இவை நடக்கின்றது. இப்படி வரலாறு இருக்க, இந்த அரசியல் பொறுக்கிகளுக்கு பொல்பொட் தேவைப்படுகின்றது.


கண்ணுக்கு முன்னால் நன்கு தெரிந்த சம்பவங்கள் உண்டு. சொந்த நாட்டில் அதாவது இலங்கையில் 1970க்கு பின் குறைந்தது 2 லட்சம் மக்களை இந்த சிங்கள அரசு இலங்கையிலேயே கொன்றுள்ளது. 1990க்கு பிந்தைய ஈராக்கில் அமெரிக்க தலைமையிலான நாடுகள் விதித்த பொருளாதாரத் தடையின் மூலம் 20 லட்சம் ஈராக்கிய குழந்தைகளை கொன்றுள்ளது. ஈராக்கில் ஆக்கிரமிப்பில் ஈடுபட்ட பின் குறைந்தபட்சம் 5 லட்சம் ஈராக்கியரின் மரணத்துக்கு காரணமாக இருந்துள்ளது. சமகாலத்தில் உங்கள் எஜமானர்களின் சொந்த இரத்தக் கறை படிந்த உதாரணங்கள் நிறைய இருக்க, அதை மூடிமறைத்த அவர்களின் வாரிசுகள் பொல்பொட்டை வாந்தி எடுக்கின்றனர்.


கடைந்தெடுத்த பொறுக்கிகள். மக்களுக்காக உண்மையில் போராடியவர்கள் மீது சேறு அடிப்பதே, இந்த கயவாளிப் பயல்களின் அரசியல் நடத்தையாகும். நீ கொன்று குவித்த கிழக்கு மக்கள், முஸ்லீம் மக்களின் எண்ணிக்கை எத்தனை? யாருக்கு கதை சொல்லுகின்றீர்கள். கம்பூச்சியாவில் பொல் பொட் தலைமையிலான ஆட்சியில் மனிதப்படுகொலைகள் நடந்தாக கூறுவது, அடிப்படையற்ற ஆதாரமற்ற ஒன்று. அமெரிக்க ஆக்கிரமிப்புக்கு எதிராக நடந்த போரில் கொல்லப்பட்டவர்கள், அதன் பின்னர் அமெரிக்கா உள்ளிட்ட சோவியத் ஏகாதிபத்திய பொருளாதார தடையால் கொல்லப்பட்டவர்கள் (பார்க்க ஈராக்கை), பட்டியலை கூட்டியள்ளி பொல் பொட்டின் தலையில் அரைக்கின்றனர்.


உண்மையில் அந்த மக்களின் நலனுக்காக போராடியவர் பொல் பொட். தவறு இழைத்தாரா எனின், ஆம் பல தவறுகள் இழைத்தார். குறிப்பாகவும் முக்கியமாகவும் அமெரிக்க இராணுவ ஆக்கிரமிப்பு நடந்த காலத்தில், கிராமங்கள் மீதான அமெரிக்காவின் கொடூரமான தாக்குதலுக்கு பயந்து, நகரங்களை நோக்கி குவிந்த இளைஞர்கள் விடையத்தில் தவறு இழைத்தார். கடுமையான பொருளாதாரத் தடை, யுத்தத்தில் இருந்து நாட்டை மீட்டு கட்டியெழுப்ப வேண்டிய நிலையில் பொல் பொட் பதவி ஏற்றார். இந்த நிலையில் உழைப்பே அறியாது அமெரிக்க இராணுவ பொருளாதாரத்தில் பொறுக்கி வாழ்ந்தபடி உதிரியாக சிதறிக் கிடந்த இளைஞர்களை, மறுஉழைப்புக்கு கொண்டு செல்வதில் கடுமையான தவறு நிகழ்ந்தது. உழைப்பவனுக்குத் தான் உணவு. அந்த வகையில் பொல்பொட் தலைமையிலான அரசு இந்த இளைஞர்களை கிராமங்களுக்கு திரும்பிச் செல்லவும், உழைப்பில் ஈடுபடவும் கோரியது. நகர்ப்புற உதிரிகள் தமது அராஜகத்தை அடிப்படையாக கொண்டு மறுத்தலித்து. உடல் உழைப்பையே அறியாது பொறுக்கி வாழ்வதையே வாழ்க்கையாக கொண்ட இந்த இளைஞர்களை, மீண்டும் உழைப்பில் ஈடுபடுத்த முனைந்த போது, அதை எதிர்த்து அவர்கள் கிராமங்களுக்குச் திரும்பிச் செல்ல மறுத்த போது, ஒடுக்குமுறை ஊடாக உழைப்பை பெற முனைந்தனர். இதன் போது பலர் கொல்லப்பட்டனர். இதை வைத்துத் தான், அமெரிக்க ஆக்கிரமிப்பாளன் நடத்திய கொலை எல்லாம் மூட்டை கட்டி, அதை பொல்பொட் தலையில் காறி துப்புவது கடைந்தெடுத்த வலதுசாரிய நாற்றமாகும். அக்காலத்தைய கம்பூச்சிய மக்கள் தொகைக் கணக்கெடுப்புகள் கூட, இந்தப் பொய் புனைவை மறுதலிக்கின்றது.


கருணா அனைத்து குற்றத்தையும் பிரபாகரனின் தலைமையில் சுமத்தி தான் நடத்திய கொலையை மறுப்பது போல், ஏகாதிபத்திய சதிக் கதைகள் தான் இவை. இந்த நிலையில் அதை கருணா என்ற பாசிட், பொல்பொட்டை பிரபாகரனுக்கு ஒப்பிட்டு வக்கரிக்கின்றான். கிழக்கு தமிழ் மக்களையும், முஸ்லீம் மக்களையும் கொன்று அம்மான் என்ற கவுரவ அந்தஸ்துடன் பிரதேச தளபதியாகியவர், தன்னையும் தனது கடந்தகால கொலைகார வரலாற்றையும் சுயவிமர்சனம் செய்யவில்லை. மாறாக ஏகாதிபத்தியம் அரைத்து வைத்த பொல்பொட் கதையை, பிரபாகரனுக்கு ஒப்பிட்டு, தனது கொலைகார முகத்தை மினுக்க முனைகின்றார். அன்று நீங்கள் செய்த கொலைகள், இன்றும் நாள் தோறும் தொடருகின்றது.


அண்மையில் அம்பாறையில் புலிகளின் முகாமில் இருந்து இராணுவம் கைப்பற்றிய கம்பியிலான சிறைகள் அனைத்தும் கருணா காலத்தவை கூட. இன்றும் சித்திரவதையையும், சிறைக் கூடத்தையும் கொண்டு வாழ்கின்றவர்களே நீங்கள், உங்களுக்கு எதிரான மக்களின் கண்ணீரையும் அவர்களின் அவலங்களையும் சதா கேட்கின்றோம்.


நீங்கள் எல்லாம் கிழக்கு மக்களின் வாழ்வுக்காக போராடுவதாக நடிப்பது, கடைந்தெடுத்த அயோக்கியத்தனம். இந்த வகையில் கிழக்கு மக்களின் பொருளாதார வளர்ச்சியை அடிப்படையாக கொண்ட கல்வி மற்றும் அவர்களின் அபிவிருத்திக்காக செயல்படப் போவதாக அதே பேட்டியில் கூறுகின்றார். எப்படி என்கின்றீர்களா? அவரே கூறுகின்றார், பேரினவாத சிங்கள அரசு இதற்காக நிதி ஒதுக்க வேண்டும் என்கின்றார். ஒரு கேள்வி. இடையில், நீ ஏன் இருக்கவேண்டும். அதில் ஒரு பகுதியை விழுங்கவா! சிங்கள அரசிடம் இவற்றைக் கோருவதே நகைப்புக்குரிய ஒரு வாதம். இங்கு இதுதான் கிழக்கு மக்களின் பிரச்சனையாக காட்ட முனைகின்றார். அவர் இதன் மூலம் கிழக்கு மக்களின் பிரச்சனைகளைத் தீர்க்க முடியும் என்கின்றார்.


இலங்கையில் கிழக்கின் நிலையில் தான் பெரும்பாலான மாவட்டங்கள் உள்ளன. இதில் வடக்கின் சிலபகுதிகள் முதல் தென்னிலங்கையின் பல பகுதிகள் இப்படித்தான் உள்ளது. இலங்கையின் மக்கள் விரோத அரசாங்கம் இரங்கி ஒதுக்கும் பணத்தில், கிழக்கை முன்னேற்ற முடியும் என்ற கருணாவின் அலட்டல், நகைப்புக்குரிய ஒன்று. சிங்கள பேரினவாத அரசு இனவாதத்துடன் சிங்களவனுக்கு அதிக சலுகையுடன் ஒதுக்கிய பணத்தில் கூட, சிங்கள மக்களின் கல்வி மற்றும் பொருளாதார வளர்ச்சி என்பதே, ஒப்பீட்டளவில் கிழக்கின் நிலையில் தான் காணப்படுகின்றது. அந்த மக்களின் பிரச்சனையை தீர்க்க முடியாது இருக்க, கிழக்குக்கு பணத்தை ஒதுக்கி இந்த பிரச்சனைகளை தீர்க்க முடியும் என்று கூறுவது, கேடுகெட்ட அரசியல் பிழைப்பாகும்.


பிரச்சனைக்கான தீர்வும் வழியும் வேறு எங்கோ இருக்க, அரசு ஒதுக்கும் நிதி உதவி தான் தீர்வு என்று கூறுவது மக்களின் அடிமைத்தனத்தில் சவாரி விடுவதாகும். ஏன் சிங்கள மாணவர்களின் கல்வியை, இந்த அரசு எந்தவிதத்தில் கிழக்குக்கு மாறாக பூர்த்தி செய்துள்ளது. நீங்கள் எப்படி மாற்றாக பூர்த்தி செய்வீர்கள். சிங்கள மண்ணில் பொருளாதாரம் அந்த மக்களை வளப்படுத்தி உள்ளதா? இனங்களையும், பிரதேசங்களையும் பிளந்து அரசியல் செய்யும் வக்கிரம் பிடித்த கூட்டத்துக்கு, இவையெல்லாம் தமது பணப் பையை நிரப்பும் பொற்காசுகள் தான். மக்களுக்கு இவர்கள் கொடுப்பதோ அடக்குமுறையுடன் கூடிய மனித அவலத்தைத் தான்.


கிழக்கு மக்களின் கல்வி வளர்ச்சிக்காக உழைக்கப் போவதாக பீற்றி அலம்பும் கருணா, முழு இலங்கையிலும் அது முரணற்ற வகையில் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதா என்ற அடிப்படைக் கேள்விக்கு பதிலளிக்க வேண்டும். அதை விடுத்து சினிமா பாணியில் கதாநாயகர் வேசம் போட்டு ஆடுவது அபத்தமாகும்.


இலங்கை வாழ் மாணவர்கள் அனைவருக்கும் அடிப்படைக் கல்வியையும், கல்விக்கான பொது சூழலையும் பூர்த்தி செய்கின்ற வகையிலான சமூக பொருளாதார அமைப்பை கோருவதன் மூலம் தான், குறைந்தபட்சம் கிழக்கு மக்களின் கல்வியை பூர்த்தி செய்யமுடியும். பல்கலைக்கழக அனுமதி பெற தகுதியான அனைத்து மாணவர்களுக்கும் கல்வியை வழங்கும் உரிமையை மறுக்கும் இந்த அரசு, அதை நியாயப்படுத்தும் தமிழ் குறுந்தேசிய மற்றும் பிரதேசவாத வக்கிரங்களே மாணவர்களுக்கு எதிராக அரங்கேறுகின்றது. இலங்கையில் அனைத்து பல்கலைக்கழக தகுதியுடைய மாணவர்களுக்கும் கல்வியை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏன் இவர்கள் உயர்த்த முடிவதில்லை. இதற்கு மாறாக தரப்படுத்தல், அதி திறமைக்கு மட்டும் கல்வி என்ற நிலைப்பாடும், அதை நியாயப்படுத்துதலும் உண்மையில் மக்கள் சார்ந்தவையா? எந்த வகையில்!


கிழக்கில் இது எப்படி கல்வியை, வேலை வாய்ப்பை மேம்படுத்தும். கிழக்கில் கல்வி வாய்ப்பை மேம்படுத்த வேண்டும் என்றால், அந்த மக்களின் பொருளாதார வாழ்வு மேம்பட வேண்டும். இதற்கான அவரின் வேலைத்திட்டம் என்ன? குறைந்தபட்சம் இந்த பிற்போக்கான மக்கள் விரோத உள்ளடகத்தில் கூட, எந்த வேலைத் திட்டமும் இந்த பாசிச கும்பலிடம் கிடையாது. இவர்கள் மக்கள் நலன் பற்றி நகைப்புக்குரிய வகையில் புலுடா விடுகின்றனர். கிழக்கு மக்களின் கல்வி பொருளாதார முன்னேற்றத்துக்கு உழைக்க அரசை நம்பி இருப்பதாக கூறுவதன் மூலம், இவர்களின் அரசியல் வேலைத் திட்டமும் இது தான்.


தாங்கள் ஜனநாயகத்துக்கு வந்துள்ள சட்டப்படியான கட்சி என்கின்றனர். சரி அந்த கட்சியின் அரசியல் வேலைத்திட்டம் என்ன? எங்கே இவர்களால் வைக்க முடியுமா? வைக்க முடியாது. மக்கள் நலன் எதுவுமற்ற எந்த பாசிச கும்பலிடமும் எதுவும் இருப்பதில்லை. மாறாக இருப்பது பாசிசமும் மாபியாத்தனமும் தான். நெருக்கடிகளில் இருந்து தப்ப, வார்த்தை ஜாலங்களை அள்ளி எறிகின்றனர். புலிகளின் அதே பாசிசம் அதே உத்தி.


கருணா என்ற குழுவின் அரசியல் பேச்சாளர், தம் மீதான குற்றச்சாட்டுக்கு அடிக்கடி மறுப்பு விடுகின்றார். இதையே தான் தமிழ்ச்செல்வனும் செய்கின்றார். இருவருக்கும் இடையில் என்ன வேறுபாடு?


ஒரு மக்கள் இயக்கம் தனது அரசியல் வேலைத்திட்டத்தில் புலிகளை அரசியல் ரீதியாக விமர்சிக்க வேண்டும். அதை விடுத்து மேலெழுந்தவாரியாக பூசிமெழுகித் திரிவது, தமது பாசிச வழியை முன்வைப்பதாகும். கிழக்கு பிரிவினை பற்றி அப்பேட்டியில் கேட்டபோது, மகிந்த சொன்ன அதே வழிதான் தமது என்கின்றார்.


மகிந்த கிழக்கு மக்களின் விரும்பம் தான், தனது விரும்பம் என்கின்றார். இதுவே தனதுமென்கின்றார் கருணா. நீங்கள் ஒன்றாகி ஒரு கூலிக்குழுவாகிய பின் இப்படிச் சொல்வது ஆச்சரியமல்ல. கிழக்கு மக்களை பிரிப்பதில் யாழ் மேலாதிக்கத்துக்கு எந்தளவு முக்கிய பங்கு இருந்ததோ, அந்தளவுக்கு சிங்கள மேலாதிக்கத்துக்கும் முக்கிய பங்கு இருந்தது.


இந்த வகையில் இதை பிரதேச பிளவாக்கியதில் கருணாவின் பங்கு மிக முக்கியமானது. புலியில் இருந்தது முதல், அரசின் ஒரு கூலிக் குழுவாக வெளிவந்தது வரையிலான அவரின் பங்கு தனித்துவமானது. கிழக்கு மக்களுக்கு எதிராக கடந்த 15 வருட காலத்திய அனைத்து செயல்பாட்டிலும், கருணாவின் பங்கு தனித்துவமானது. இவை தான் இன்றைய பிளவுக்கு வழிகாட்டியது.


அதை அறுவடை செய்பவனும் அதே கயவாளிப்பயல்தான். இன்று அதை கிழக்கு மேலாதிக்கமாக்கி, பிளவை விதைப்பதில் கருணா கும்பலின் பங்கும் பணியும் முக்கியமானது. இவை அனைத்துக்கும் பின்னாலும், கிழக்கு மக்களின் நலனின் அடிப்படையில், இந்த கிழக்கு மக்களின் விருப்பம் எதையும் இந்த அரசியல் சூழ்ச்சிகள் கொண்டிருப்பதில்லை. மாறாக குறுகிய நலன்கள் முதன்மை பெற்று, தமிழ் இனத்தில் அழிப்பு என்ற பேரினவாத சதி இங்கு யாழ் மேலாதிக்கம் ஊடாக அரங்கேறுகின்றது. அதை கருணா சொன்னாலும் ஒன்று தான், மகிந்த சொன்னாலும் ஒன்றுதான்.


இலங்கையில் இனப்பிரச்சனை முதன்மையான முரண்பாடு என்ற அடிப்படையில், இனங்களின் பிரச்சனையை தீர்ப்பதற்கு பதில், புதிய முரண்பாடுகளால் மக்கள் கூட்டத்தை பிளந்து வாழ நினைக்கும் கும்பல்களின் சதிகளே அரங்கேறுகின்றது. அவை தான் இன்றைய மொழியாக, கூக்குரலாக ஆதிக்கம் பெற்று நிற்கின்றது. எல்லா மக்கள் விரோத பிற்போக்கு வாதிகளும் இதைத் தான் செய்கின்றனர். கருணா குறித்த பேட்டியில் தாம் பேரினவாதத்தின் கூலிக் குழுவாக சேர்ந்து இயங்கவில்லை என்கின்றார். இந்தக் கூற்றே எவ்வளவு பெரிய பொய் என்பதை அனைவரும் அறிவர். இவர்களின் நேர்மையை இவைகள் மூலம் சாதாரணமாக உரசிப்பார்க்க முடியும்..


இதில் உள்ள முரண்பாடே, இந்த போலிகளின் கபட வேடத்தை தெளிவாக்குகின்றது. ஆயுதங்களுடன், பெரும் குண்டர் படையாக உள்ள இவர்களின் இருப்பை எப்படி இராணுவம் அனுமதிக்கின்றது. பேரினவாதத்துடன் கூட்டு, கூலித்தனமும் தெளிவானது. மக்களுக்காக போராடும் ஓரு இயக்கம், மக்களுக்கு எதிரான இராணுவத்துடன் இணங்கி செயல்படுவது என்பதும், பரஸ்பர இருப்பை அங்கீகரிப்பது என்பதுவும் எந்தவகையில் சாத்தியமானது!


எதிர்காலத்தில் இராணுவத்துடன் எலும்புக்கான சண்டையை கருணாதரப்பு நடத்தினால் கூட, அங்கு மோசடியும் சுயநலமும் தான் அடிப்படையாக இருக்கும். புலிகளின் அதே உத்தி தான். அமைதி சமாதானம் என்று பெயரில் நடத்துகின்ற நரித்தனங்கள், சூழ்ச்சிகள் பரஸ்பரம் இணையானவை. மக்களை நேசிப்பதில் நேர்மையற்ற பொறுக்கித்தனம், மக்கள் அரசியலாகிவிடாது. மக்கள் எப்படி புலிகளை இன்று கிழக்கில் தோற்கடிக்கின்றனரோ, அப்படி கருணா கும்பலை தோற்கடிப்பர்.


மாற்று சினிமாவிற்கான தேடல்...ஈரானியத்திரைப்படம்



மாற்று

சினிமாவிற்கான

தேடல்...

ஈரானியத்திரைப்படம்

அனைவரையும் தேடலிற்கு அழைக்கிறேம் இடம்: ஸ்காபரோ சிவிக் சென்ரர்


தமிழர் வகைதுறை வள நிலையம் -தேடகம்


காலம்: பங்குனி 11. 2007, மாலை: 5:00 மணி


மேலதிக விபரங்களுக்கு: 647 891 8597

தமிழ் மக்கள் இசைவிழா : விடுதலைப் போரின் வீரமுழக்கம்

காலனியாதிக்க எதிர்ப்பு மரபு! மறுகாலனியாக்கம் எதிர்த்து முழங்கு!!"

தமிழ் மக்கள் இசைவிழா :
விடுதலைப் போரின் வீரமுழக்கம்


றுகாலனிய, பார்ப்பனிய பண்பாட்டு ஆக்கிரமிப்புக்கு எதிரான போர் முழக்கமாக மக்கள் கலை இலக்கியக் கழகம் நடத்தி வரும் தமிழ் மக்கள் இசைவிழாவுக்கு இது 14வது ஆண்டு. கடந்த இரண்டு ஆண்டுகளில் சுனாமி மற்றும் வெள்ளப் பேரழிவையொட்டி மேற்கொள்ளப்பட்ட நிவாரணப் பணிகள் காரணமாக தமிழ் மக்கள் இசைவிழா ரத்து செய்யப்பட்டிருந்தது. இவ்வாண்டு மிகுந்த ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட இசைவிழா பிப்ரவரி 24ஆம் தேதி மிகச் சிறப்பாக நடந்தேறியது.


ஒரு மக்கள் விழாவாகவும், மாற்று அரசியல் கருத்துக் கொண்டோரும் விருப்பத்தோடு கலந்து கொள்ளும் நிகழ்வாகவும் பரிணாமம் பெற்றிருக்கும் தமிழ் மக்கள் இசை விழாவின் இவ்வாண்டு நிகழ்வு, "காலனியாதிக்க எதிர்ப்பு மரபு! மறுகாலனியாக்கம் எதிர்த்து முழங்கு!' என்ற முழக்கத்தின்கீழ் நடைபெற்றது.


1806 வேலூர் சிப்பாய் புரட்சியின் 200வது ஆண்டு, 1857 வட இந்திய சுதந்திரப் போரின் 150வது ஆண்டு, 1906 வ.உ.சிதம்பரனார் சுதேசிக் கப்பல் கம்பெனி துவக்கியதன் நூற்றாண்டு மற்றும் 1906இல் பிறந்த ஏகாதிபத்திய எதிர்ப்புச் சிங்கம் பகத்சிங்கின் பிறந்தநாள் நூற்றாண்டு.


பெயரளவு சுதந்திரத்தையும் இழந்து நாடே மீண்டும் அடிமைப்பட்டு வரும் சூழலில், காலனியாதிக்க எதிர்ப்பு மரபின் வரலாற்று உணர்வை மக்களிடையே கொண்டு செல்வதன் மூலம் இன்றைய மறுகாலனியாதிக்கத்துக்கு எதிரான போராட்டத்திற்கு செயலூக்கம் வழங்கும் வகையில் இவ்வாண்டு நிகழ்ச்சிகள் வடிவமைக்கப்பட்டிருந்தன.


விழாவின் முதல் நிகழ்வாக பறையொலி அதிர ம.க.இ.க., வி.வி.மு., பு.மா.இ.மு., பு.ஜ.தொ.மு. தோழர்கள் கீழவாசல் காமராசர் சிலையிலிருந்து பேரணியாய்ப் புறப்பட்டனர். செம்பதாகைகள் காற்றில் அசைய, அவற்றின் நடுவே உயர்ந்த காலனியாதிக்க எதிர்ப்புப் போராளிகளின் உருவச் சித்திரங்கள், அந்தப் போராளிகளின் உண்மையான வாரிசுகள் நக்சல்பாரிப் புரட்சியாளர்களே என்பதைப் பறைசாற்றின.


""வேலூர் சிப்பாய் தியாகிகளே, விடுதலை மரபின் விடியல்களே, காளையார் கோயில் காடுகளே, காலனி எதிர்ப்பு ஓடைகளே, வீரவணக்கம் வீரவணக்கம்'' என்ற முழக்கம் நமது வீரமரபின் பெருமிதத்தையும் நெகிழ்ச்சியையும் ஒருங்கே தோற்றுவித்தது. ""பகத்சிங்கின் மண்ணிலே மன்மோகன் சிங் அவமானம்'', ""வ.உ.சிதம்பரம் வாழ்ந்த மண்ணில் ப.சிதம்பரம் வெட்கக்கேடு!'' என்ற முழக்கங்கள் நிகழ்காலத் துரோகிகளை அம்பலப்படுத்தின. ""திப்பு, மருது, கட்டபொம்மன் வாழ்ந்த வாழ்வைப் பாரடா; துப்பு கெட்ட நடிகனுக்கு ரசிகனா, நீ கூறடா'' என்ற முழக்கம் இளைய தலைமுறையின் வருந்தத்தக்க நிலையை உரிமையுடன் இடித்துரைத்தது. இரு மருங்கும் திரண்டு நின்ற மக்களை இசைவிழாவை நோக்கி ஈர்த்தவாறே பேரணி திருவள்ளுவர் திடலை வந்தடைந்தது.


விடுதலைப் போராட்டத் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்திய ம.க.இ.க. மையக் கலைக்குழுவின் உணர்ச்சிபூர்வமான பாடலுடன் காலை அமர்வு தொடங்கியது.


இசைவிழாவின் வழக்கமான எளிமைக்கும் கம்பீரத்துக்கும் பதிலாக பகட்டைப் பறைசாற்றும் விதத்தில் அரங்கம்அமைய நேர்ந்ததற்கான விளக்கத்தைத் தன் வரவேற்புரையில் கூறினார் தோழர் காளியப்பன். பிப்ரவரி 22ஆம் தேதியன்று முதலமைச்சர் கருணாநிதி பங்கேற்ற அரசு விழாவுக்காக உருவாக்கப்பட்ட பிரம்மாண்டமான அரங்கத்தைப் பிரித்து முடித்த பின்னர், புதிதாக பந்தல் போட்டு நாம் நிகழ்ச்சி நடத்துவது என்றால், அதற்காகவே இசைவிழாவைத் தள்ளி வைக்க வேண்டியிருக்கும் என்ற சூழலில், வேறு வழியின்றி இந்த அரங்கிலேயே நடத்திக் கொள்வது என்று முடிவெடுக்க நேர்ந்ததை விளக்கினார்.


ம.க.இ.க.வின் மா.செ.கு. உறுப்பினர் தோழர் கதிரவன் தலைமையில் கருத்தரங்கம் துவங்கியது. தமது எழுச்சிகரமான தலைமையுரையில் 1800-01 காலகட்டத்தின் தென்னக சுதந்திரப் போராட்ட வீரர்களை நினைவு கூர்ந்த தோழர் கதிரவன், அத்தியாகிகளின் வரலாறு இருட்டடிப்பு செய்யப்பட்டிருப்பதையும், இன்றைய மறுகாலனியச் சூழலில் அவர்களை நினைவு கொள்ள வேண்டிய அவசியத்தையும் எடுத்துரைத்தார். தென்னிந்திய வரலாற்றை அலட்சியப்படுத்துவது, இசுலாமியர்களை புறக்கணிப்பது என்ற இந்து தேசியக் கண்ணோட்டத்தின் காரணமாக 1800-01 போராட்டம், முதல் இந்திய சுதந்திரப் போராக அங்கீகரிக்கப்படாமலிருப்பதைச் சுட்டிக் காட்டி, அவ்வாறு அதிகாரபூர்வமாக அங்கீகரிக்கப்பட வேண்டும்; பாடநூல்களில் பாடமாக சேர்க்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.


"தென்னிந்தியக் கிளர்ச்சி 1800-01, முதல் சுதந்திரப் போர்' என்ற ஆங்கில நூலின் ஆசிரியரும், தென்னிந்திய வரலாற்றுப் பேராயத்தின் முன்னாள் தலைவருமான பேரா.ராஜய்யன், போதிய ஆய்வாதரங்களுடன் தனது நூல் 1971இலேயே வெளியிடப்பட்டிருந்த போதிலும், இந்நூலை அரசு அலட்சியப்படுத்தியது குறித்து எடுத்துரைத்தார். 1800-01 கிளர்ச்சி, முதல் இந்திய சுதந்திரப் போராக அரசு அறிவிக்க வேண்டும் என 1980இல் தான் வழக்கு தொடுத்ததையும், உயர்நீதி மன்றம் இவ்விசயத்தில் தலையிட மறுத்து விட்டதையும் தெரிவித்தார். இந்த வரலாற்று உண்மையை நிலைநாட்ட உங்களைப் போன்ற புரட்சிகர அமைப்புகள் முயலவேண்டுமெனவும் கேட்டுக் கொண்டார்.


அவரைத் தொடர்ந்து பேசிய பெங்களூர் திப்பு சுல்தான் பிரச்சார சமிதியின் தலைவரான தலகாடு சிக்கே ரங்க கவுடா அம்மாபெரும் வரலாற்று நாயகனின் பன்முகப்பட்ட ஆளுமையை அறிமுகப்படுத்தினார். ஆங்கிலேயர்களை விரட்டியடிப்பதையே தமது வாழ்க்கை இலட்சியமாக திப்பு கொண்டிருந்ததையும், அதனால் மராத்திய பேஷ்வா மன்னர்கள், ஹைதராபாத் நிஜாம், திருவிதாங்கூர் சமஸ்தானம் முதலிய மன்னர்களோடு ஒரு ஐக்கிய முன்னணியை கட்ட முயன்றதையும் குறிப்பிட்டார். ஆனால், அவர்கள் "மதவேறுபாடின்றி' கிழக்கிந்தியக் கம்பெனிக்கு விசுவாசமாக இருந்ததையும் திப்புவுக்கு எதிராக இருந்ததையும் குறிப்பிட்டார். மேலும், மூன்று உக்கிரமான போர்களுக்கு இடையிலும் அவர் அயராது சமூகத்தில் மேற்கொண்ட சீர்திருத்தங்களை எடுத்துக்காட்டுக்களுடன் விளக்கினார். குறிப்பாக, பல்லாயிரக்கணக்கில் நிலங்களை வளைத்துக் கொண்ட பார்ப்பனர்களின் கொட்டத்தை ஒடுக்கிய திப்பு சுல்தான் அந்நிலங்களை அவர்களிடமிருந்து பறித்தெடுத்து நிலமற்ற கூலிஏழை விவசாயிகளிடம் அவற்றை விநியோகித்ததை விளக்கினார். மேலும், ராக்கெட் ஏவுகணைகளை உலகிலேயே முதன்முறையாக உருவாக்கிய திப்பு சுல்தான், அவற்றை தமது போர்க்களங்களில் பயன்படுத்தி கிழக்கிந்தியக் கம்பெனியைத் திகிலுறச் செய்ததையும், உலகளாவிய ராக்கெட் ஏவுகணை தொழில்நுட்ப வல்லுனர்கள் இன்றளவும் திப்பு சுல்தானது முன்முயற்சியையும், பங்களிப்பையும் வியந்து போற்றுவதையும் குறிப்பிட்டார். சிறீரங்கப்பட்டினம் கைப்பற்றப்பட்டவுடன், முதற்கணமாக வெள்ளையர்கள் திப்புவின் நூலகத்தைக் கைப்பற்றி அவரது நூல்கள், ஆவணங்கள், குறிப்புகள் முதலானவற்றை கவர்ந்து சென்றதைக் குறிப்பிட்டார். மதத்தின் சாயல் இம்மியளவும் இன்றி ஆட்சி புரிந்த திப்புவை இன்று இசுலாமிய மதவெறியராக சித்தரிக்க முயன்று வரும் பார்ப்பனர்களின் பொய்ப் பிரச்சாரங்களை புள்ளி விவரங்களோடு அம்பலப்படுத்தினார்.


"அடிமை மோகம் அழியும் வரையில் விடிவு இல்லை, விடுதலையும் இல்லை!' என்ற தலைப்பில் உரையாற்றிய ம.க.இ.க. தோழர் துரை.சண்முகம், விடுதலைப் போராட்ட வீரர்களின் வீர மரபுக்கு நேர் எதிராக இன்று சமூகத்தில், குறிப்பாக இளைஞர்களிடத்தில் குடிகொண்டிருக்கும் பிழைப்புவாதத்தையும், கோழைத்தனத்தையும் வேதனையோடு குறிப்பிட்டார். மறுகாலனியத்தின் விளைவாக உணவு, உடை, கலை ரசனை, வாழ்க்கைக் கண்ணோட்டம் என ஒவ்வொரு அம்சத்திலும் அடிமைத்தனம் கோலோச்சுவதை எள்ளலும், சினமும் பொங்க குறிப்பிட்ட அவர், கல்வி அமைப்பும், அனைத்து நிறுவனமயமாக்கப்பட்ட அமைப்புகளும் கட்சிகளும், ஏன் போலி கம்யூனிஸ்டுகளும் கூட இச்சூழலை மாற்றுவதற்கான அடிப்படைக் கண்ணோட்டமின்றி இருப்பதையும், இதற்கான மாற்று மார்க்சிய லெனினிய மாவோ சிந்தனை கொண்ட புரட்சிகர அமைப்புகள்தாம் என்பதை அறைந்து கூறினார். நாட்டுப்பற்றும், மான உணர்வும் கொண்ட மாணவர்களும், இளைஞர்களும் இத்தகைய புரட்சிகர அமைப்புகளின் அணிதிரள வேண்டுமென அறைகூவல் விடுத்தார்.


மதிய அமர்வின் முதல் உரையாக தில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகப் பேராசிரியரும், "பகத்சிங் ஆவணங்களின் முழுமையான தொகுப்பு' நூலாசிரியருமான பேரா.சமன்லால், பகத்சிங்கின் அரசியல் ஆளுமை உருவான வரலாற்றுச் சூழல் குறித்து விரிவாக எடுத்துரைத்தார். சேகுவேராவுக்கு இணையான ஆளுமையாக பகத்சிங் விளங்கிய போதும், அவரது கருத்துக்கள் மக்களிடம் விரிவாக கொண்டு செல்லப்படாததை குறிப்பிட்டார். அவ்வகையில் இசை விழா குறித்த தமது மகிழ்ச்சியை வெளியிட்ட அவர், தமது குறுகிய வாழ்விற்குள்ளாக காதல், சாதி, மதம், ஏகாதிபத்தியம், மார்க்சியம் என பல தலைப்புகளில் தீர்க்கமான கருத்துக்களை பகத்சிங் வழங்கியிருப்பதையும், அவற்றை மேலும் விரிவாக மக்களிடம் கொண்டு செல்வதன் அவசியத்தையும் விளக்கினார். சாதி, மத எல்லைகளைத் தாண்டி நின்ற பகத்சிங்கிற்கு மட்டுமே நமது நாட்டு மக்களின், குறிப்பாக இளைஞர்களின் நாயகனாக கொண்டாடப்படுவதற்கான தகுதி உண்டு என்பதையும், ஏகாதிபத்தியம் கோரத் தாண்டவமாடும் இன்றைய சூழலில், இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ள உண்மையான பகத்சிங்கை மக்களிடம் கொண்டு செல்வதன் மூலம் மட்டுமே விடுதலைக்கு வழிகோல இயலும் என்பதையும் வலியுறுத்தினார்.


"மறுகாலனியாக்கம் விடுதலைப் போர் இன்னும் முடியவில்லை' என்ற தலைப்பில் உரையாற்றிய ம.க.இ.க. பொதுச்செயலர் தோழர் மருதையன், இரண்டு நூற்றாண்டு முந்தையதும், மிகச் சமீபத்தியதுமான விடுதலை வீரர்களின் இந்த வரலாறு இருட்டடிப்பு செய்யப்படுவதும், துரோகிகளின் வாரிசுகள் கொண்டாடப்படுவதும் தற்செயல் நிகழ்வுகள் அல்ல என்பதையும், துரோகிகளின் வாரிசுகளே இன்றைய ஆளும் வர்க்கத்தினர் என்பதையும் அம்பலப்படுத்தினார். வரலாற்று உணர்வு என்பது ஏன் அவசியம் என்பது விளக்கியதுடன் தியாகிகளின் வரலாற்றுப் பாத்திரத்தைப் புரிந்து கொள்வதென்பது அவர்களைத் துதி பாடுவதற்காக அல்ல, அவர்கள் வழியில் இன்றைய நமது வரலாற்று கடமையை ஆற்றுவதற்குத்தான் என்பதை வலியுறுத்தினார். பகத்சிங் என்ற 23 வயது இளைஞனின் சிறப்பு, இந்திய விடுதலையை, தான் ஏற்றுக்கொண்ட தனிப்பட்ட பொறுப்பாகவே கருதி அவன் செயல்பட்டதுதான் என்று குறிப்பிட்ட அவர், அத்தகையதொரு பண்பைத்தான் இன்றைய சூழல் இளைஞர்களிடம் கோருகிறது என்று கூறி முடித்தார்.


மாலை 7.00 மணியளவில் கலை நிகழ்ச்சிகள் துவங்கின. துவக்க உரையாற்றிய திரைப்பட இயக்குனர் இராம்ஜி எஸ்.பாலன், மிகவும் இயல்பாகவும் மனம் திறந்தும் பேசினார். ம.க.இ.க.வின் பாடல் ஒலிப்பேழைகள் தனது அரசியல் பார்வையையும் வாழ்க்கைக் கண்ணோட்டத்தையும் மாற்றியதை விளக்கினார். விழாவுக்கு வந்திருக்கும் ஒவ்வொருவரும் ம.க.இ.க.வின் பேழைகளைப் பரவலாகக் கொண்டு செல்வதை ஒரு பணியாகச் செய்வதன் மூலமே பல்லாயிரக்கணக்கானோரை அணிதிரட்டி விடமுடியும் என்று தான் ஆணித்தரமாக நம்புவதாகக் கூறினார். பிற அரசியல் கலாச்சார அமைப்புகளின் சீரழிந்த நிலையை குறிப்பிட்டு, இச்சூழலில ம.க.இ.க. மற்றும் அதன் தோழமை அமைப்புத் தோழர்களின் குன்றாத உணர்வையும், உறுதியையும் கண்டு தான் வியந்து போனதாகவும், இத்தகைய அமைப்பு இன்று நம் நாட்டை விழுங்கிக் கொண்டிருக்கும் மறுகாலனியத்தை நிச்சயம் முடிவுக்கு கொண்டு வரும் எனத் தான் உறுதிபட நம்புவதாகவும் குறிப்பிட்டார்.


முதல் நிகழ்ச்சியாக ரெட்டிப்பாளையம் வீரசோழத் தப்பாட்டக் குழுவினரின் தப்பாட்டம், அரங்கம் அதிர்ந்த போர் முழக்கமாக துவங்கியது. பிறகு புதுக்கோட்டை இ.எம்.பாஷா குழுவினர் கிழக்கிந்தியக் கம்பெனியை குலை நடுங்க வைத்த மாமன்னர்கள் ஹைதர் அலி, திப்பு குறித்த உணர்ச்சிபூர்வமான பாடல்களை இசைத்தனர். ஆதிக்கச் சாதிப் பிழைப்புவாதிகள் மருதிருவருக்குச் சாதிச்சாயம் பூசி சிறுமைப்படுத்தி வரும் இன்றைய சூழலில், சின்னமருதம்பட்டியைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட மக்கள் நிகழ்த்திய மருதிருவர் கும்மி, அந்தப் போராளிகளின் உண்மையான ஆளுமையை வெளிப்படுத்துவதாக அமைந்தது.


"மருதுவின் போர்க்களம்' எனும் மேடை நாடகம் ஊமைத்துரையின் பாளையங்கோட்டை சிறை உடைப்பு சாகசம் முதல் மருது தூக்கிலிடப்பவது வரையிலான கொந்தளிப்பான நிகழ்வுகளை இன்றைய சூழலுக்குப் பொருத்தப்பாடுடைய எள்ளலான வசனங்களோடு காட்சிப்படுத்தியது. ""உடம்பில் ஐரோப்பியனின் இரத்தம் ஓடாத அனைவரும் ஒன்று சேருங்கள்!'' என்ற சின்ன மருதுவின் பிரகடனம் இன்றைய சூழலில் மக்களைச் செயலில் இறங்கக் கோரும் அறைகூவலாக ஒலித்தது. 1806 வேலூர் புரட்சியை மக்கள் மத்தியில் பரப்புவதில் பெரும்பங்கு ஆற்றிய இசுலாமிய நாடோடிப் பாடகர்களைக் கண்முன் கொண்டு வந்தது, வேலூர் ஃபக்கீர்களின் குழு. அரங்கத்தை அதிரச்செய்த அந்தப் பறையொலியின் வலிமை, அன்று வேலூர் சுற்று வட்டாரம் முழுவதும் ஒலித்து கிளர்ச்சியை மூண்டெழச் செய்த காட்சி மனக்கண் முன் விரிந்தது.


கட்டபொம்மனையும், சுந்தரலிங்கத்தையும், பூலித்தேவனையும், ஒண்டி வீரனையும் எதிர்எதிராக நிறுத்தி அவர்களை சாதி அடையாளங்களாக சிறுமைப்படுத்திவரும் இன்றைய சூழலில், அவர்களை மீட்டெடுக்கும் முயற்சியாக அமைந்தது தூத்துக்குடி கைலாசமூர்த்தி குழுவினர் நிகழ்த்திய "வீரத்திற்கு ஏது சாதி' என்ற ஒயிலாட்டம். அந்தச் சிறுவர்களின் ஒயிலும் கம்பீரமும் மக்களின் பலத்த கரவொலியைப் பெற்றது.


ஜிம்ப்ளா மேளம் என அழைக்கப்படும் எருது கட்டும் மேளத்தின் போர்க் குணமும், சிதம்பரம் அன்பரசன் குழுவினரின் தமுரு மேளமும், தீரன் சின்னமலையின் வீரத்தைப் போற்றிய உடுக்கடிப் பாடலும், வ.உ.சி.யின் தியாக வரலாற்றைச் சொல்லும் வில்லுப்பாட்டும் கூடியிருந்த மக்களின் வரவேற்பைப் பெற்றன. தமிழ் நாடக வரலாற்றில் நாட்டுப் பற்றும், மொழிப் பற்றும் கூடிய நாடகக் கலைஞராக விளங்கிய விஸ்வநாததாசின் நினைவோடு விடுதலைப் போரின் வீரநினைவுகளை வழங்கிய பாவலர் ஓம்.முத்துமாரி குழுவினரின் நிகழ்ச்சி, பின்னிரவின் கண் அயர்ச்சியையும் கலைத்து, அரங்கத்துக்கே புத்துணர்வு ஊட்டியது.


மெத்த படித்த மேதாவிகள் தமது வீடுகளில் தொலைக்காட்சி பெட்டிகளில் சரணடைந்து கிடக்கையில், "வெட்டரிவாள் எடடா' என சிறுவர்கள் தமது கலைநிகழ்ச்சியில் உரத்துக் குரலெழுப்பியது உணர்ச்சியைத் தூண்டுவதாக இருந்தது.


உழைக்கும் மக்களைக் கருவறுக்கும் மறுகாலனியாக்கத்தின் கொடூரத்தையும், அமெரிக்க பயங்கரவாதத்தையும், பார்ப்பனியக் கோர முகத்தையும், ஏகாதிபத்திய அடிமைத்தனத்தையும், எள்ளலோடும் ஆவேசத்தோடும் தீயில் கிழித்த வரிகளாக வழங்கியது ம.க.இ.க. மையக்கலைக் குழுவின் புரட்சிகர கலை நிகழ்ச்சி.

ம.க.இ.க. வழங்கிய "தூக்குமேடை' இசைச்சித்திரத்தில், தூக்குமேடை ஒரு இரத்த சாட்சியமாக, திப்புசுல்தான் முதல் பகத்சிங் வரை நீடிக்கும் வீர மரபை, செயல் வடிவம் பெறாத கனவின் மீட்டப்படாத இசையை வழங்கி பார்வையாளர்களை உறையச் செய்தது. இந்நிகழ்ச்சி நிறைவுற்ற பின்னும் அரங்கில் நிரம்பி நின்ற மௌனம் தமிழ் மக்கள் இசை விழாவின் நோக்கம் வெற்றி பெற்றதை பறைசாற்றியது.


இறுதியாக கிழக்கிந்தியக் கம்பெனி ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்த 1857 வட இந்திய சுதந்திரப் போர் குறித்த மையக் கலைக்குழுவினரால் இசைக்கப்பட்ட பாடல், இன்று ஆட்சிபுரியும் பல நூறு கிழக்கிந்தியக் கம்பெனிகளை முழுமையாக விரட்டியடிப்பதற்கான இறுதிச் சுதந்திரப் போர் துவங்கி விட்டது என்பதை அறிவிக்கும் போர் முரசாக அரங்கில் நிறைந்தது.


பச்சை மூங்கில்களால் அமைக்கப்பட்ட எளிமையும் கம்பீரமும் கொண்ட நுழைவாயில், உள்ளே நுழைந்தவுடன் பார்வையாளர்களை வரவேற்கும் சின்ன மருதுவின் போர்ப் பிரகடனம், விடுதலை வீரர்களையும் அவர்களுடைய போர்க்களங்களையும் சித்தரித்து அரங்கின் உட்புறமெங்கும் வைக்கப்பட்டிருந்த ஓவியங்கள், மறுகாலனியாக்கத்தின் வக்கிரமான வெளிப்பாடான தண்ணீர் தனியார்மயத்தையும், அதன் கோரமுகங்களில் ஒன்றான கோக்கோகோலாவையும் அம்பலப்படுத்தும் ஓவியக் காட்சி, இன்னொரு புத்தகக் கண்காட்சியோ என்று வியக்கும் வண்ணம் அரங்கில் விரவியிருந்த புத்தகக் கடைகள், தரமான மலிவான உணவு, தொலைவில் அமர்ந்திருப்போருக்கும் மேடை நிகழ்ச்சிகளைக் கண்டு ரசிக்கும் வண்ணம் அரங்கில் ஆங்காங்கே அமைக்கப்பட்டிருந்த தொலைக்காட்சி திரைகள், பல்லாயிரக்கணக்கில் திரண்டிருந்தும் எத்தகைய சலசலப்பும் இல்லாமல் பொறுப்புணர்ச்சியுடன் தொடர்ச்சியாக 16 மணி நேரம் நிகழ்ச்சிகளைக் கண்டு ரசித்த மக்கள் கூட்டம்...


விழாவிற்குரிய மகிழ்ச்சியையும் போர்க்களத்தின் கட்டுப்பாட்டையும் ஒருங்கே வெளிப்படுத்திய தமிழ் மக்கள் இசைவிழா, விடுதலைப் போரில் முதல் குரலெழுப்பிய தமிழகம் மறுகாலனியாக்கத்துக்கு எதிரான போராட்டத்திலும் முன் நிற்கும் என்ற நம்பிக்கையைத் தோற்றுவித்தது.

— பு.ஜ.பு.க. செய்தியாளர்கள்

Friday, March 9, 2007

திசைதவறிய தேசிய விடுதலைப் போர்

அசாம்-உல்ஃபா :

திசைதவறிய தேசிய விடுதலைப் போர்


டந்த ஜனவரி 58 ஆகிய நான்கு நாட்களில் எழுபதிற்கும் மேற்பட்டவர்களை அசோம் ஐக்கிய விடுதலை முன்னணியினர் (உல்ஃபா) கொன்றிருக்கிறார்கள். கொல்லப்பட்டவர்கள் அனைவரும் பீகாரிலிருந்து பிழைப்புக்காக அசாமுக்குப் போய் அசாமிய மற்றும் அங்குள்ள வங்காளி ""பாபு''க்களுக்குச் சேவைசெய்யும் பீகாரி உழைப்பாளிகள். இப்போது அந்தப் பீகாரி தினக்கூலிகள் சாரை சாரையாக கண்ணீரும் கம்பலையுமாக பீகாருக்குத் திரும்புகின்றனர். இந்தக் கொலைகளுக்கு "உல்ஃபா'வினர் உரிமை பாராட்டிக் கொள்ளவில்லை. அதேசமயம் "உல்ஃபா' துணைத் தலைவர் பிரதீப் கோகோய், ""இந்தக் கொலைகள் எல்லாமே அசாம் அரசாங்கமே செய்தவைதாம். சமாதான முயற்சியில் உல்ஃபாவுக்கு அக்கறையில்லை என்று காட்டி, அந்த அமைப்பின்மீது அவதூறு கிளப்புவதற்காகச் செய்யப்படும் சதியின் ஒரு பகுதி"" என்றும் கூறியுள்ளார். ஆனால், உல்ஃபாவின் அதிகாரபூர்வ ஏடான ""சுதந்திரம்'' அசாமுக்குள் நுழையும் இந்திபேசும் மக்களைக் கடுமையாக எச்சரித்திருக்கிறது. ""அசாமிய மண் குட்டி ராஜஸ்தானாகவும், குட்டி பீகாராகவும், குட்டி கொல்கத்தாவாகவும் மாறி வருகிறது; இந்தியக் காலனியவாதிகளுக்கும் அசாம் மக்களுக்கும் இடையே போர் நடந்து வரும் இந்தச் சமயத்தில் அசாமுக்குள் பிற மாநிலத்தவர்கள் வருவதால் ஏற்படும் இழப்புகளுக்கு அவர்கள்தாம் காரணமும் பொறுப்பும் ஏற்க வேண்டும்'' என்று அந்த ஏடு எச்சரித்திருக்கிறது. இந்த எச்சரிக்கையையும், கடந்த கால அனுபவங்களையும் வைத்துப் பார்க்கும்போது, தற்போதைய பீகாரிகள் படுகொலைகளுக்குக் காரணம் "உல்ஃபா'தான் என்றே கருத வேண்டியுள்ளது. இப்படிப்பட்ட கொலைகள் 2003ஆம் ஆண்டுக்குப் பிறகு இரண்டாவது முறையாக இப்போது நடக்கின்றன.


அசாமில் இருந்து அந்நியர்களை வந்தேறிகளை வெளியேற்றும் இயக்கம் தொடங்கி கால் நூற்றாண்டுக்கும் மேலாகிறது. காலனி ஆட்சிக் காலத்திலேயே வங்காளிகளும் மார்வாடி குஜராத்திகளும் அசாமில் பெருமளவு குடியேறி பொருளாதார ஆதிக்கம் பெற்றனர். வங்கதேசப் போரின்போது பெருமளவு கிழக்கு வங்க அகதிகள் இலட்சக்கணக்கானோர் குடியேறினர். இத்தகைய வரலாற்று நிகழ்வுகளால் அசாமிய மக்கள் தமது தேசிய இன அடையாளத்தை இழப்பதாகக் குமுறினர். இதன் விளைவாக 1980களின் ஆரம்பத்தில் அனைத்து அசாம் மாணவர் சங்கத்தின் தலைமையில் ""அந்நியர்களை வெளியேற்றும்'' போர்க்குணமிக்க போராட்டங்கள் வெடித்து, இந்திய அரசையே கலங்கடிக்கச் செய்தன. அந்தப் போராட்டங்களை வங்கதேச அகதிகளுக்கு எதிராக மட்டுமல்ல, குறிப்பாக எல்லா இசுலாமியர்களுக்கும் எதிராகத் திருப்பிவிட ஆர்.எஸ்.எஸ். பா.ஜ.க. பார்ப்பனபாசிச கும்பல் எத்தணித்தது. பார்ப்பன பனியா தரகு முதலாளிய ஏகாதிபத்திய நலன்களுக்காக, அரச பயங்கரவாதத்தை ஏவி பல்வேறு தேசிய இனங்களையும் அடக்கி ஒடுக்கி ஏக இந்திய அரசியல் அமைப்பைக் கட்டிக் காத்து வருகிறது, காந்திநேரு பரம்பரை காங்கிரசு. ""அந்நியர்களை வந்தேறிகளை வெளியேற்றும்'' போராட்டம் அசாமிலுள்ள இசுலாமியர்களுக்கும், போடோ முதலிய தேசிய சிறுபான்மை பழங்குடி இனங்களுக்கும் எதிரானதென்று திரித்து, பிளவுபடுத்தி மோதவிட்டு இரத்தம் குடித்தது; இந்திய உளவுப் படையான ""ரா'' மூலம் ஆயுதங்களும் பயிற்சியும், நிதியுமளித்து மத்திய அரசுக்கெதிரான போராட்டங்களை அசாமியர்களுக்குள்ளேயான சிவில் யுத்தமாக மாற்றியது.


பல ஆயிரம் பேரைப் பலிகொண்ட இந்தப் பிரச்சினையில் இரண்டு போக்குகள் ஏற்பட்டன. தலைமையில் ஒரு பிரிவு மத்திய ஆட்சியாளர்களாகயிருந்த ராஜீவ் கும்பலுடன் சமரச ஒப்பந்தம் செய்து கொண்டது; அசாம் கண பரிசத் என்ற அரசியல் கட்சி அமைத்துக் கொண்டு தேர்தலில் குதித்து சில ஆண்டுகள் ஆட்சி நடத்தி, இலஞ்ச ஊழலில் மூழ்கி மேலும் மேலும் பிளவுற்று பலவீனமடைந்து விட்டது. இரண்டாவது பிரிவு, இந்திய காலனிய ஆட்சியிலிருந்து பிரிந்து செல்லும் தேசியஇனப் போராட்டமாக இயக்கத்தை வளர்த்தெடுத்து, அதற்காக அசோம் ஐக்கிய விடுதலை முன்னணி என்ற தலைமறைவு அமைப்பைக் கட்டி ஆயுதப் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்தியது. தேசிய முதலாளிய சக்தியால் தலைமையேற்கப்பட்ட தேசிய இன விடுதலைப் போராட்டம், தனது இலட்சியத்தையும் அதற்கேற்ற வழிமுறையையும் கைவிட்டு தமிழீழ விடுதலைப் புலிகளைப் போல, பஞ்சாபின் காலிஸ்தானிகளைப் போல குறுகிய இனவெறி இயக்கமாகவும், சுத்த இராணுவவாதிகளாகவும் சீரழிந்து போயிருப்பதையே, பிற தேசிய இன உழைக்கும் மக்களைப் படுகொலை செய்வதும், நியாயப்படுத்த இயலாத கொலைகள் புரிவதுமான நிகழ்வுகள் காட்டுகின்றன. நியாயமான தேசிய இனக் கோரிக்கையைக் கையிலெடுத்து, ஒடுக்கும் பெருந்தேசிய அரசுக்கு எதி ராக ஆயுதப் போராட்டம் நடத்துகிறார்கள் என்பதற்காக இவ்வாறு சீரழிந்த இயக்கங்களை ஆதரிப்பது குறுகிய தேசிய இனவெறி பாசிசத்துக்குத் துணைபோவதாகும்.

அமெரிக்காவின் மேலாதிக்கத் திமிரும் இரட்டை வேடமும்

சதாம் படுகொலை!

அமெரிக்காவின் மேலாதிக்கத் திமிரும் இரட்டை வேடமும்



மெரிக்கா என்றால் நாகரிகம்; அமெரிக்கா என்றால் ஜனநாயகம் என அப்பாவித்தனமாக நம்பிக் கொண்டிருப்பவர்களின் பித்தைக் கூடத் தெளிய வைக்கும் வகையில், சதாமின் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டிருக்கிறது. சதாம் அவமானப்படுத்தப்பட்டுத் தூக்கில் தொங்கவிடப்பட்டதைத் தொலைக்காட்சியில் பார்த்தவர்களுக்கு, அமெரிக்காவின் வன்மமும், திமிரும் புரிந்திருக்கும். அந்தக் காட்சியைப் பார்த்த பிறகும், அமெரிக்காவின் வக்கிரமான கொலைவெறியைப் புரிந்து கொள்ள முடியாதவர்களுக்குப் புரிய வைப்பதற்காக, ஜார்ஜ் புஷ், ""சதாமின் தூக்கு, ஈராக்கின் ஜனநாயகத்தை நோக்கிய பயணத்தில் இன்னொரு மைல் கல்'' என்ற பொன்மொழியை உதிர்த்தார். ஈராக்கின் ஜனநாயகத்தை மதிப்பிட வேண்டும் என்றால், அங்கு அமெரிக்கா நடத்திவரும் படுகொலைகளைக் கணக்கிட வேண்டும் போலும்!


முசுலீம்களுக்கு உரிய புனிதமான நோன்பு நாளில் சதாமைத் தூக்கில் போட்டதன் மூலம், ஜார்ஜ் புஷ், தனது முசுலீம் எதிர்ப்பு கிறித்தவ மதவெறியை மீண்டும் பகரங்கமாக உலகிற்குக் காட்டிக் கொண்டிருக்கிறார். இந்த மதச் சகிப்புத்தன்மையற்ற காட்டுமிராண்டித்தனத்துக்கு எதிராக உலகெங்கிலும் கண்டனக் குரல்கள் எழுந்தது ஒருபுறமிருக்க, தூக்கு தண்டனையை சதாம் எதிர்கொண்ட விதமும்; தன்னை ஏளனம் செய்தவர்களை சதாம் மடக்கிய விதமும், பொதுமக்கள் மத்தியில் அவர் மீதான மதிப்பையும், அனுதாபத்தையும் உயர்த்திவிட்டது. சதாமின் சர்வாதிகார ஆட்சியை எதிர்த்து ஜனநாயகத்திற்காகப் போராடிய ஈராக்கியர்கள் கூட, சதாமிற்கு அமெரிக்கா வழங்கிய தூக்கு தண்டனையை ஆதரிக்க மறுத்துள்ளனர். சதாமின் தூக்கு, தனது முகத்தில் இப்படிக் கரியைப் பூசிவிடும் என ஜார்ஜ் புஷ்ஷே எதிர்பார்த்திருக்க மாட்டார்.


""ஒரு நாடு இன்னொரு நாட்டை ஆக்கிரமிக்கும் பொழுது, ஆக்கிரமிக்கப்பட்ட நாட்டின் அதிபரை, ஆக்கிரமித்த நாடு விசாரிக்கக் கூடாது'' என போர் பற்றிய ஜெனிவா ஒப்பந்தம் குறிப்பிடுகிறது. ஜார்ஜ் புஷ் இந்தச் சர்வதேச ஒப்பந்தத்தை மயிரளவிற்குக் கூட மதிக்கவில்லை என்பது ஒருபுறமிருக்க, சதாமைத் தூக்கில் போட வேண்டும் என்ற நோக்கத்திற்காகவே, ஈராக் கிரிமினல் உச்சநீதி மன்றத்தையும் அதற்கான விதிகளையும் உருவாக்கினார்.


போர்க் குற்றங்களை விசாரிப்பதற்காகவே இந்தச் சிறப்பு நீதிமன்றம் உருவாக்கப்பட்டதாகக் கூறப்பட்டாலும், ""ஜூலை 17, 1968க்கும், மே 1, 2003க்கும் இடைபட்ட காலங்களில் நடத்தப்பட்ட போர்க் குற்றங்களை, மனித குலத்துக்கு எதிரான குற்றங்களை மட்டுமே விசாரிக்கும் அதிகாரம் கொண்டதாக,'' இந்நீதிமன்றத்தின் அதிகார வரம்பை மட்டுப்படுத்தும் சட்டம் உருவாக்கப்பட்டது.


ஈராக் மீது அமெரிக்கா தொடுத்த இரண்டாவது வளைகுடா போர் மே 1, 2003 அன்றோடு முடிவடைந்துவிட்டதாக ஜார்ஜ் புஷ் அறிவித்தார். எனவே, அந்த தேதிக்குப் பிறகு, ஈராக்கை ஆக்கிரமித்துத் தங்கியிருக்கும் அமெரிக்கப் படைகள் நடத்தி வரும் போர்க் குற்றங்களை, படுகொலைகளை ஈராக்கின் எந்தவொரு நீதிமன்றமும் விசாரிப்பதைத் தடுப்பதுதான் இந்தச் சட்டத்தின் நோக்கம்.


சதாமின் ஆட்சியின்பொழுது, ஈரானுக்கு எதிராகவும், குர்து இன மக்களுக்கு எதிராகவும் நடத்தப்பட்ட போர்க் குற்றங்களின் பின்னே அமெரிக்காவின் கை இருந்தது என்பது உலகமே அறிந்த உண்மை. எனவே, சதாமின் போர்க் குற்றங்களை விசாரிக்கும் பொழுது, அக்குற்றங்களோடு தொடர்புடைய அமெரிக்கர்களை விசாரிப்பதைத் தடுப்பதற்காக, போர்க் குற்றம் சுமத்தப்பட்ட நபர், ஈராக்கில் வசிப்பவராக இருந்தால் மட்டுமே, நீதிமன்றம் விசாரிக்க முடியும் என்ற விதியும் உருவாக்கப்பட்டது.


அமெரிக்காவின் நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக உருவாக்கப்பட்ட இந்தச் சிறப்பு நீதிமன்றத்தில், ஈராக்கிலுள்ள துஜைல் கிராமத்தைச் சேர்ந்த 148 ஷியா முசுலீம்கள், சதாம் ஆட்சியின் பொழுது படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது. இவ்வழக்கில் சதாமும், அவரது அரசாங்கத்தைச் சேர்ந்த ஏழு அதிகாரிகளும் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டிருந்தனர். ஷியா முசுலீம் நாடான ஈரானுக்கு எதிராக, அமெரிக்கா ஆதரவோடு சதாம் போர் நடத்தி வந்தபொழுதுதான் இப்படுகொலை நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.


ஏறத்தாழ ஒரு ஆண்டுகாலம் நடந்த இந்த வழக்கை விசாரிக்க மூன்று நீதிபதிகள் அடுத்தடுத்து நியமிக்கப்பட்டனர். இந்நீதிபதிகளுக்கு இவ்வழக்கை எப்படி நடத்துவது என்பது குறித்து இங்கிலாந்தில் பயிற்சி அளிக்கப்பட்டது. எனினும், முதலாவதாக நியமிக்கப்பட்ட ""நீதிபதி'' ரிஸ்கர் முகம்மது அமின் வழக்கை விசாரிப்பதில் சற்று தாராளமாக நடந்து கொண்டதால், பதவியில் இருந்து விலகி விடுமாறு நிர்பந்திக்கப்பட்டார். இரண்டாவதாக நியமிக்கப்பட்ட ""நீதிபதி'', ""என்ன காரணத்தினாலோ'' பதவியை ஏற்றுக் கொள்ளவே மறுத்துவிட்டார். மூன்றாவதாக நியமிக்கப்பட்ட குர்து இனத்தைச் சேர்ந்த ""நீதிபதி'' ராஃப் அப்துல் ரஹ்மான் வெளிப்படையாகவே ஒருதலைப்பட்சமாக நடந்து கொண்டார். ஈராக்கின் அமெரிக்கத் தூதரகத்தில் இருந்து கொண்டு செயல்பட்டு வரும் ""கிரிமினல் குற்றங்கள் விசாரணை அலுவலகம்'' இவ்வழக்கு விசாரணையைக் கண்காணித்து வந்தது.


சதாம், தான் விருப்பப்படும் வழக்குரைஞர்களை நியமித்துக் கொள்ள கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. அதேவேளையில், சதாமுக்காக வாதாடிய வழக்குரைஞர்களுள் இரண்டு பேர் மர்மமான முறையில் கொல்லப்பட்டனர். சாட்சிகளைக் குறுக்கு விசாரணை செய்ய சதாம் அனுமதிக்கப்படவில்லை. இந்தக் குறைபாடுகளைச் சுட்டிக் காட்டியதோடு, ""இந்த வழக்கு விசாரணையே கயவாளித்தனமானது'' எனப் புகழ் பெற்ற அமெரிக்க மனித உரிமை வழக்குரைஞர் ராம்ஸே கிளார்க் சாடியதால், (சதாமுக்காக வாதாடிய) அவர், விசாரணை நடந்து கொண்டிருந்தபொழுதே "நீதிமன்றத்தில்' இருந்து வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தப்பட்டார்.


துஜைல் படுகொலையில் சதாமுக்கு நேரடி தொடர்புண்டு என அமெரிக்கா சுமத்தியிருந்த குற்றச்சாட்டு, போதிய சாட்சிகளோடும், ஆதாரங்களோடும் நீதிமன்ற விசாரணையில் நிரூபிக்கப்படவில்லை. எனினும், இப்படுகொலை தொடர்பாக அவருக்கு அதிகபட்ச தண்டனை மரண தண்டனை விதிக்க வேண்டும் என்பதற்காகவே, ""சதாம் அளவுக்கு அதிகமான பலப் பிரயோகத்தைப் பயன்படுத்தினார்'' என்ற வாதம் முன் வைக்கப்பட்டது. இந்த வாதப்படி சதாமுக்கு மரண தண்டனை விதிக்கலாம் என்றால், ஈராக்கில் 1,30,000 துருப்புகளை இறக்கிவிட்டு போர்க் குற்றங்களைப் புரிந்துவரும் ஜார்ஜ் புஷ்ஷûக்கும் மரண தண்டனை விதிக்கலாம்.


""உள்நோக்கத்தோடு திட்டம் போட்டு குடிமக்களைக் கொல்லவில்லை என்ற வாதத்தை முன்வைத்து சதாமின் போர்க் குற்றங்களை நியாயப்படுத்த முடியாது'' என சதாமை விசாரித்த நீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது. சதாமுக்கு இந்த வாதம் பொருந்தாது என்றால், ஈராக்கில் அமெரிக்கப்படை நடத்தி வரும் போர்க் குற்றங்களில் இருந்து தப்பிக்க, இதே வாதத்தை ஜார்ஜ் புஷ் கேடயமாகப் பயன்படுத்தி வருவதையும் அனுமதிக்க முடியாது.

···

சதாமுக்கு மரண தண்டனை அளிக்கப்படுவதற்குச் சில நாட்கள் முன்னதாக, ஈராக்கின் ""பிரதமர்'' நௌரி அல்மாலிகி, ""அமெரிக்காவின் ஒப்புதல் இன்றி, தனது அரசால் ஒரு படையணியைக் கூட நகர்த்த முடியாது'' என்று கூறி, ஈராக்கின் இறையாண்மையை வெட்ட வெளிச்சமாக்கினார். இப்படிப்பட்ட ஒரு பொம்மை அரசு, அமெரிக்காவின் சம்மதமும், உத்தவும் இன்றி சதாமுக்கு மரண தண்டனை வழங்கியிருக்க முடியுமா?


சதாம் தூக்கு தண்டனை கூடத்திற்குள் அனுப்பி வைக்கப்பட்ட கடைசி நிமிடம் வரை அமெரிக்க இராணுவக் கைதியாகத்தான் வைக்கப்பட்டிருந்தார். சதாம் இறந்த பிறகு, அவரது சடலத்தைக் கூடத் தனது கட்டுப்பாட்டின் கீழ் எடுத்துக் கொண்டது, அமெரிக்க இராணுவம். நீதிமன்ற விசாரணை தொடங்கி சதாமின் சடலம் மண்ணுக்குள் போடப்பட்டு மூடப்படும் வரை, அனைத்துமே அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கண்காணிப்பின் கீழ் நடந்திருக்கும் பொழுது, சதாம் தூக்கு மேடையில் ஷியா முசுலீம்களால் அவமதிக்கப்பட்டது மட்டும் அமெரிக்காவின் சம்மதம் இன்றி நடந்திருக்க முடியுமா?


""சதாம் தூக்கு மேடையில் கண்ணியமாக நடத்தப்பட்டிருக்கலாம்'' என முதலைக் கண்ணீர் வடிக்கிறார், ஜார்ஜ் புஷ். ஆனால், கண்ணியத்தையும், பண்பாட்டையும், மனித உரிமைகளையும் பற்றிப் பேச, அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு என்ன தகுதி இருக்கிறது?


சதாம் அமெரிக்க இராணுவத்தால் பிடிக்கப்பட்ட பொழுது, பரிசோதனை என்ற பெயரில், அவர் தலையில் பேன் ஊறுகிறதா என்பது தொடங்கி, அவரை நிர்வாணப்படுத்தாதது மட்டும்தான் பாக்கி என்ற வகையில் அமெரிக்க ஏகாதிபத்தியம் அவரை அவமானப்படுத்தியது.


சதாமின் ஆட்சியின்பொழுது, ஈராக் மீது அமெரிக்கா திணித்த பொருளாதாரத் தடையுத்தரவால் ஐந்து இலட்சத்திற்கும் அதிகமான ஈராக்கிய குழந்தைகள் இறந்து போயின. இந்தப் பிஞ்சுக் குழந்தைகளின் சாவை, ""ஈராக் கொடுக்கத்தக்க விலைதான்'' என்று கூறி வக்கிரமாக நியாயப்படுத்தியது, கிளிண்டன் ஆட்சி.


அமெரிக்க இராணுவம் அபுகிரைப் சிறைச்சாலையில் நடத்திய வக்கிரமான சித்திரவதைகள், ஃபலுஜா, ஹதிதா நகரங்களில் நடத்திய பச்சைப் படுகொலைகள் இவையெல்லாம் ஒருபுறமிருக்க, கடந்த மூன்று ஆண்டுகளில் அமெரிக்க ஆக்கிரமிப்பினாலும், அது தூண்டிவிட்டு நடத்தி வரும் இனக் கலவரத்தாலும் ஏறத்தாழ ஆறரை இலட்சத்துக்கும் அதிகமான ஈராக்கியர்கள் அநியாயமாகக் கொல்லப்பட்டுள்ளனர். 18 இலட்சம் ஈராக்கியர்கள் நாட்டைவிட்டு வெளியேறி, அண்டை நாடுகளில் தஞ்சமடைந்துள்ளனர். 16 இலட்சம் ஈராக்கியர்கள் சொந்த நாட்டிலேயே அகதிகளாக அலைகின்றனர்.


அறிவுத்துறையினர் என்ற வர்க்கமே ஈராக்கில் இருக்கக்கூடாது எனக் கங்கணம் கட்டிக் கொண்டு அலைகிறது, அமெரிக்க ஏகாதிபத்தியம். பேராசிரியர்கள், மருத்துவர்கள், விஞ்ஞானிகள், பத்திரிகையாளர்கள் என அறிவுத்துறையின் பல்வேறு பிரிவைச் சேர்ந்த 592 அறிஞர்கள், அமெரிக்க இராணுவத்தாலும், அதன் கூலிப் படைகளாலும் கொன்றொழிக்கப்பட்டுள்ளனர். ""ஈராக்கியர்களைக் கொன்று குவிப்பதில் சதாமைச் சுண்டைக்காயாக்கி விட்டார், ஜார்ஜ் புஷ்'' என்கிறார் ஹாய்தா ஜங்கானா என்ற நாவலாசிரியர்.


ஈராக்கின் மீது ஆக்கிரமிப்புப் போரை நடத்துவதற்காகவே ""பேரழிவு ஏற்படுத்தும் ஆயுதங்கள்'' என்ற பொய்யை, அமெரிக்க கோயபல்சுகள் கட்டியமைத்தனர். அந்தப் புளுகு அம்பலமான பிறகு, ஆக்கிரமிப்பை தொடர்வதற்காக, ""சதாம் அல்காய்தாவின் தோழனாகவும், உலக அமைதியின் வில்லனாகவும்'' அமெரிக்காவால் சித்தரிக்கப்பட்டார். சதாமின் கதையும் முடிந்த பிறகு, ""மேற்காசியா முழுவதுமே அமெரிக்காவைத் தாக்குவதற்கான உந்துவிசைப் பலகையாக மாறி வருவதால், அமெரிக்கப் படைகளை உடனடியாக விலக்கிக் கொள்வது சாத்தியம் இல்லை'' என ஆக்கிரமிப்பு தொடர்வதை நியாயப்படுத்துகிறார், ஜார்ஜ் புஷ்.


ஆங்கிலேய காலனியாதிக்கவாதிகள் இந்தியாவை ஆளப் பிரித்தாளும் சூழ்ச்சியைப் பயன்படுத்தியதைப் போல, அமெரிக்க ஏகாதிபத்தியம் ஈராக்கில் ஷியாசன்னி முசுலீம்களிடையே இனமோதலைத் தூண்டிவிட்டு நடத்தி வருகிறது. இந்த இனமோதலை மேலும் ஊதிவிடும் நோக்கத்தோடுதான், சதாம் ஷியா முசுலீம்களால் தூக்கில் போடப்படுவதையும்; தூக்கு மேடையில் அவர் ஷியா முசுலீம்களால் அவமானப்படுத்தப்பட்டதையும் அனுமதித்ததோடு, அக்காட்சியை ஒளிபரப்பவும் செய்தது, அமெரிக்கா. ஈராக்கின் எண்ணெய் வயல்களை அமெரிக்கப் பன்னாட்டு நிறுவனங்களின் தனிச் சொத்தாக மாற்றுவதற்காகவே, ஈராக் நாட்டை, ஷியாசன்னி குர்து பகுதிகளாகக் கூறுபோடவும் சதி செய்து வருகிறது.


ஈராக் மட்டுமின்றி லெபனானில் ஹிஸ்புல்லா போராளிகளுக்கு எதிராகப் போராட, அந்நாட்டின் அரசுக்கும், ஹிஸ்புல்லா எதிர்ப்புக் குழுக்களுக்கும் சி.ஐ.ஏ., மூலம் பணத்தைக் கொடுத்துக் கொம்பு சீவிவிடுகிறது; பாலஸ்தீனத்தில் ஹமாஸ் குழுவினருக்கு எதிராக ஃபதா குழுவினருக்கு ஆதரவும் ஆயுதமும் வழங்கி வருகிறது. இதன் மூலம், மேற்காசியாவில் நடந்துவரும் அமெரிக்க ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டங்களைச் சகோதர யுத்தங்களாக மாற்றிவிடச் சதி செய்து வருகிறது, அமெரிக்கா.


அமெரிக்க நாடாளுமன்றத்துக்கு நடந்த தேர்தலில், குடியரசுக் கட்சி தோல்வியடைந்ததையடுத்து, ஜார்ஜ் புஷ் தனது ஈராக் கொள்கையை மாற்றிக் கொண்டு விடுவார் என முதலாளித்துவப் பத்திரிகைகள் அனைத்தும் ஆருடம் கூறி வந்தன. ஆனால், ஜார்ஜ் புஷ், ஈராக்குக்கு மேலும் 20,000 துருப்புகளை அனுப்ப உத்தரவிட்டிருப்பதன் மூலம் அமெரிக்க ஜனநாயகத்தின் மாயையை உடைத்தெறிந்து விட்டார். மேலும் சோமாலியாவைத் தாக்கியதன் மூலம் "தீவிரவாதத்துக்கு எதிரான போரை' ஆப்பிரிக்கா கண்டத்துக்கும் ஏற்றுமதி செய்துள்ளார்.


அமெரிக்க மக்களின் ஈராக் போர் எதிர்ப்பை ஓட்டுக்களாக அறுவடை செய்து கொண்ட ஜனநாயகக் கட்சியோ, இந்த ஆக்கிரமிப்பு போருக்கு ஒரு மனித முகமூடியை மாட்டிவிடும் நரித்தனத்தில் இறங்கியிருக்கிறது. ஈராக் எண்ணெய் வயல்களை அமெரிக்கப் பன்னாட்டு நிறுவனங்கள் ஏக போகமாக்கிக் கொள்ளும் வண்ணம், அந்நாட்டின் எண்ணெய் வயல்களை அரசிடமிருந்து பிடுங்கித் தனியார்மயமாக்கிவிட்டு, அதன் பிறகு மெல்ல மெல்ல அமெரிக்கப் படைகளை விலக்கிக் கொள்ள வேண்டும் என்பதுதான் எதிர்த்தரப்பின் திட்டம்.


அமெரிக்க ஏகாதிபத்தியம், தனது முன்னாள் கூட்டாளியான சதாமை, ""கண்ணியமற்ற முறையில்'' தூக்கில் போட்டதன் மூலம், தனது ""நட்பு நாடுகளுக்கு'' மறைமுகமாக எச்சரிக்கை விட்டிருக்கிறது. அதனால்தான், இந்தியா உள்ளிட்ட அதன் அடிவருடி நாடுகளின் ஆளும் வர்க்கங்கள் அனைத்தும் அமெரிக்காவின் மேலாதிக்க திமிரைக் கண்டிப்பதில் அடக்கியே வாசிக்கின்றன.


எனவே, உலகெங்கிலும் சுதந்திரத்தையும், ஜனநாயகத்தையும் விரும்பும் உழைக்கும் மக்கள், ஏகாதிபத்திய எதிர்ப்பு போராளி அமைப்புகள், கம்யூனிசப் புரட்சியாளர்கள் தலைமையில் அணிதிரண்டு, ஆயுதமேந்திப் போராடினால் மட்டுமே, அமெரிக்காவின் மேலாதிக்கப் போர்வெறியை முறியடிக்க முடியும்; இரண்டாம் உலகப் போர் தொடங்கி இன்றுவரை; கொரியா ஆக்கிரமிப்புப் போர் தொடங்கி ஈராக் ஆக்கிரமிப்புப் போர் வரை, அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகள் நடத்தியிருக்கும் போர்க் குற்றங்களை விசாரித்து, அக்குற்றங்களுக்குப் பொறுப்பானவர்களைக் ""கண்ணியமான'' முறையில் தண்டிக்கவும் முடியும்!

· அழகு

Thursday, March 8, 2007

மறுகாலனியாக்கத்திற்கு எதிராக மாடுகள் நடத்திய ஊர்வலம்

மறுகாலனியாக்கத்திற்கு எதிராக மாடுகள் நடத்திய ஊர்வலம்

தை மாட்டுப் பொங்கல் திருநாளில் மாடுகளுக்குப் பொங்கல் வைத்து, மாலையில் மாடுகளை அலங்கரித்து ஊர்வலமாக அழைத்து வருவதும் குலவையிடுவதும் தமிழக விவசாயப் பெருமக்களின் பண்பாடாக உள்ளது. உசிலம்பட்டி வி.வி.மு. தோழர்கள், இம்மாட்டுப் பொங்கல் விழாவை மறுகாலனியாக்கத்திற்கெதிரான விழிப்புணர்வுப் பிரச்சாரமாக மாற்றி மாடுகளின் ஊர்வலத்தை நடத்தியுள்ளனர்.


மாட்டுப் பொங்கலன்று மாலையில், ""மறுகாலனியாக்கத்திற்கு எதிராக மாடுகள் நாங்க பொங்கப் போறோம்! மனுசங்க நீங்க...? என்ற கேள்வியுடன் கொம்புகளுக்கிடையே கட்டப்பட்ட அட்டையுடன் மாடுகளை ஊர்வலமாக அழைத்து வந்த வி.வி.மு. தோழர்கள், மாட்டின் முதுகின் இருபுறமும், ""அமெரிக்கா, ஜப்பானில் மாட்டுக்கு மானியம் பல ஆயிரம் ரூபாய்; இங்கே ஒன்றுமில்லை. தீனியில்லாம நாங்க சாகறோம். பால் பவுடர் இறக்குமதியால பாலுக்குக் கொள்முதல் விலை குறையுது. மாடுகளாகிய நாங்க நசிகிறோம். மறுகாலனியாக்கத்தால விவசாயம் அழியுது. விவசாயிங்க தவிக்கிறாங்க. அதனால, ஐந்தறிவு உள்ள மாடுங்க நாங்க மறுகாலனியாக்கத்துக்கு எதிராகப் போராடப் போறோம். ஆறறிவு உள்ள நீங்க...?'' என்ற முழக்கங்களை எழுதி கருக்கட்டான்பட்டியலிருந்து உசிலம்பட்டி வரை இந்தப் புதுமையான ஊர்வலத்தை நடத்தினர்.


வழியெங்கும் உழைக்கும் மக்கள் திரண்டு வரவேற்க, அவர்களது சந்தேகங்களுக்குத் தோழர்கள் அளித்த விளக்கம் தெருமுனைக் கூட்டங்கள் போல நடந்து புதுமையான பிரச்சாரமாக அமைந்தது. பொங்கல் விழா என்ற பெயரில் ஓட்டுக்கட்சிகளும் இதர அமைப்புகளும் கூத்தடித்துக் கொண்டிருந்த வேளையில், நாடும் மக்களும் எதிர்கொண்டுள்ள மையமான பிரச்சினைகளை முன்வைத்துப் புதிய பாணியில் நடந்த இந்தப் பிரச்சாரம் இப்பகுதிவாழ் மக்களிடம் பெருந்தாக்கத்தையும் புதிய நம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது.


பு.ஜ. செய்தியாளர்கள்.

Wednesday, March 7, 2007

விஜிதரன் போராட்டம்

விஜிதரன் போராட்டம்








Tuesday, March 6, 2007

மூதூர் வெளியேற்றம் 01 August 2006

மூதூர் வெளியேற்றம் 01 August 2006

Monday, March 5, 2007

சிறுநீரகத்திருட்டு

சிறுநீரகத்திருட்டு
அன்று கொன்றது சுனாமி!
நின்று கொல்கிறது அரசு!


சுனாமியால் பாதிக்கப்பட்ட மீனவர்களின் வாழ்க்கை அவலமான நிலையில் இருப்பதை, சென்னை பகுதி மீனவர்களிடம் நடந்துள்ள சிறுநீரகத் திருட்டு அம்பலப்படுத்திக் காட்டிவிட்டது. பட்டினியில் இருந்தும், கடனில் இருந்தும் தப்பித்துக் கொள்வதற்காகவே, தங்களின் சிறுநீரகங்களை விற்று விட்டதாக மீனவப் பெண்கள் கூறியிருக்கிறார்கள்.



மேகலா என்ற மீனவப் பெண்ணுக்கு உயர் இரத்த அழுத்த நோய் இருந்ததால், அவரின் சிறுநீரகத்தை விலைக்கு வாங்கத் தனியார் மருத்துவமனைகள் மறுத்துவிட்டன. இதனால், அவர் தனது தலைமுடியை ரூ. 500க்கு விற்று, நிலைமையைச் சமாளித்திருக்கிறார். ""முடி வளர்ந்த பிறகு மீண்டும் விற்பேன்'' என்கிறார், அவர். மானத்தைத் தவிர, மற்ற எதையும் விற்று வாழ வேண்டிய கட்டாயத்தில் மீனவர்களின் வாழ்க்கை தள்ளப்பட்டுள்ளது.



சுனாமிக்குப் பிறகு, தமிழக அரசால் வட சென்னையில் உருவாக்கப்பட்ட சுனாமி நகரில்தான் சிறுநீரகக் கொள்ளை கொடி கட்டிப் பறந்து வருகிறது. எனினும், சுனாமிக்கும் சிறுநீரகக் கொள்ளைக்கும் தொடர்பில்லை என்று காட்டுவதற்காக, சிறுநீரகத்தை விற்றுள்ள 30 பெண்களுள் 4 பெண்கள்தான் சுனாமிக்குப் பிறகு சிறுநீரகத்தை விற்றிருப்பதாக, ஒரு சொத்தையான வாதத்தை தமிழக அரசு முன் வைத்துள்ளது.



தமிழகத்தை சுனாமி தாக்கியவுடனேயே, ஜெயா தலைமையில் இருந்த தமிழக அரசும்; தி.மு.க. அங்கம் வகிக்கும் மைய அரசும் போட்டி போட்டுக் கொண்டு நிவாரண உதவிகளை அறிவித்தன. இதோடு, அரசு சாரா நிறுவனங்களும் நிவாரணப் போட்டியில் குதித்தன. மேலும், மீனவர்களுக்கு வீடுகளைக் கட்டிக் கொடுப்பதற்காகவும்; அவர்களின் சமூக மேம்பாட்டுக்காகவும் உலக வங்கி, ஆசிய வளர்ச்சி வங்கிகளிடம் கடன் வாங்க ஒப்பந்தங்கள் போடப்பட்டன. இரண்டு ஆண்டுகள் கழிந்த பிறகு, கூட்டிக் கழித்துப் பார்த்தால், மீனவர்களிடம் சிறுநீரகக் கொள்ளை நடந்திருப்பதும்; தற்காலிகக் குடியிருப்புகள் என்ற பெயரில் மாட்டுக் கொட்டகைகளைவிட கேவலமான இடங்களில் அவர்கள் தங்க வைக்கப்பட்டிருப்பதும்தான் கண் முன் தெரிகிறது.



தமிழகத்தில் சுனாமியால் 66,400 வீடுகள் சேதமடைந்ததாக அரசின் புள்ளி விவரம் கூறுகிறது. சுனாமி தாக்கி இரண்டு ஆண்டுகள் முழுமையாக முடிந்த பிறகும் கூட, வீடு வாசலை இழந்தவர்களுள் மூன்றில் ஒரு பகுதியினருக்குக் கூடத் தமிழக அரசால் புதிய வீடுகள் கட்டிக் கொடுக்க முடியவில்லை. கட்டி முடிக்கப்பட்ட தொகுப்பு குடியிருப்புகளில் கூட அடிப்படையான வசதிகள் முழுமையாக செய்து தரப்படவில்லை.



""கட்டி முடிக்கப்பட்ட வீடுகளுக்கு குடிநீர் வசதியும், கழிவுநீர் வெளியேற்றும் வசதியும் செய்து கொடுக்கப்படவில்லை. புதிய குடியிருப்புகளில் பள்ளிக்கூட வசதிகள், மருத்துவ சுகாதார வசதிகள்; அக்குடியிருப்புகளை நகரத்தோடு இணைக்கும் போக்குவரத்து வசதிகள் செய்து தரப்படவில்லை'' எனத் தமிழக அரசே ஒப்புக் கொண்டுள்ளது. (தி இந்து, 26.12.07, பக்.5)



சென்னை மெரீனா கடற்கரையையொட்டி வாழ்ந்து வந்த மீனவர்களை, கூலித் தொழிலாளர் குடும்பங்களை நகரில் இருந்து 2530 கி.மீ. தள்ளி துரைப்பாக்கம், செம்மஞ்சேரி போன்ற பகுதிக ளில் குடியமர்த்தினார், ஜெயா. துரைப்பாக்கத்தில் குடியமர்த்தப்பட்டவர்கள் போக்குவரத்து வசதி கோரி சாலை மறியலில் ஈடுபட்ட பொழுது, போலீசை ஏவிவிட்டு அவர்களின் மண்டையை உடைத்தார், ஜெயா. ஆட்சி மாறிய பிறகும், இந்த அவல நிலை மாறவில்லை.



செம்மஞ்சேரியில் குடியமர்த்தப்பட்டவர்கள் நகருக்கு வர பேருந்தைப் பிடிக்க வேண்டும் என்றால், தங்களின் வீடுகளில் இருந்து 3 கி.மீ. தூரம் நடந்து வர வேண்டும். அடையாறு, திருவான்மியூர், புரசைவாக்கம் ஆகிய பகுதிகளுக்கு அன்றாடம் கூலி வேலை தேடிச் செல்லும் தொழிலாளர்கள், காலை 9 மணிக்குள் அந்தப் பகுதிக்குச் செல்லவில்லை என்றால் அவர்களுக்கு வேலை கிடைக்காது. ""வேலைக்காக, பல நேரங்களில் பேருந்தை நம்பாமல், 50 ரூபாய் கொடுத்து ஆட்டோ பிடித்துச் செல்வதாகக் கூறுகிறார்'' ராஜாமணி என்ற தச்சுத் தொழிலாளி.



வடசென்னையில் சுனாமி நகரில் தங்க வைக்கப்பட்டுள்ள மீனவர்கள், தொழிலுக்குச் செல்ல வேண்டும் என்றால் 5 கி.மீ தள்ளியுள்ள காசிமேடு கடற்கரைக்கு, அதிகாலை 23 மணிக்குள் செல்ல வேண்டும். அந்த நேரத்தில் போக்குவரத்து வசதி இருக்காது. ஆட்டோவில் செல்ல வேண்டும் என்றால் குறைந்தது முப்பது ரூபாய் வேண்டும். இதன் காரணமாகவே, பல மீனவர்கள் தங்களின் பரம்பரைத் தொழிலையே கைகழுவி விட்டதாகக் கூறப்படுகிறது.



மீனவ சமுதாயத்தில், குடும்பத்தை நடத்துவதில், ஆணின் வருமானத்தைவிட, பெண்ணின் வருமானத்திற்கு முக்கியப் பங்குண்டு. ஆண், தனது வருமானத்தைக் குடியிலும், சீட்டாட்டத்திலும் தொலைத்துவிட்டால் கூட, மீனவப் பெண்கள், அன்றாடம் சந்தைக்கு மீனை எடுத்துக் கொண்டு போய் விற்றுக் கிடைக்கும் வருமானத்தில் குடும்ப வண்டியை ஓட்டி விடுவார்கள். ஆனால், சுனாமிக்கு பிறகு மீனவக் குடும்பங்கள் கடற்கரையில் இருந்து வெகு தொலைவில் விசிறியெறியப்பட்டு விட்டதால், மீனவப் பெண்களின் வருமானம் நின்று போய்விட்டது. இதனால்தான், மீனவப் பெண்கள், வாங்கிய கடனை அடைக்கவோ, பட்டினியில்லாமல் குடும்பத்தை நடத்தவோ, தங்களின் சிறுநீரகங்களை விற்க வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டுவிட்டனர்.



தென் சென்னைப் பகுதியில் புதிது, புதிதாக முளைத்துவரும் கால்சென்டர் நிறுவனங்களின் வசதிக்காக, பல கோடி ரூபாய் செலவில், பளபளப்பான அகன்ற தார்சாலைகளைப் போட்டுத் தரும் தமிழக அரசு, துரைப்பாக்கத்திலும், செம்மஞ்சேரியிலும், சுனாமி நகரிலும் குடியமர்த்தப்பட்ட மீனவர்களும், தொழிலாளர்களும் வேலைக்குப் போய் திரும்புவதற்கு ஒரு பேருந்தைக் கூட விட மறுக்கிறது. இதன் மூலம், அவர்களின் வேலை வாய்ப்பினைத் தட்டிப் பறித்துவிட்டு, இன்னொருபுறம் நிவாரணம், உதவி எனப் பேசுவதெல்லாம் மோசடித்தனமாகாதா? தமிழகத் தலைநகர மீனவர்களின் வாழ்க்கையே இவ்வளவு மோசமானதாக இருக்கும்பொழுது, பிற பகுதி மீனவர்களின் வாழ்க்கை வேறெப்படி இருந்து விட முடியும்?



தமிழகத்தில் நடந்துள்ள சுனாமி நிவாரணப் பணிகளை ஆய்வு செய்திருக்கும் இந்தியத் தலைமை தணிக்கை அதிகாரியே, நிவாரணம் என்ற பெயரில் மோசடிகள் நடந்தியிருப்பதை ஒப்புக் கொண்டிருக்கிறார்.



· சுனாமியால் பெரிதும் பாதிக்கப்பட்ட நாகப்பட்டிணம் மாவட்டத்தில், பாதிக்கப்பட்டவர்களுக்குக் கட்டப்பட்ட வீடுகள், பள்ளமான நீர் தேங்கும் பகுதிகளில் இருந்ததால், எவரும் அதில் குடியேறவில்லை. இதனால் பாழான தொகை இரண்டரை கோடி ரூபாய்.



· விழுப்புரம் மாவட்டத்தில் கட்டப்பட்ட 3,026 தற்காலிக வீடுகளில் ஒருவரும் குடியேறாததால், ஒன்றே முக்கால் கோடி ரூபாய் விரயமானது.



· சுனாமியால் இறந்து போனவர்களின் சடலங்களைப் புதைப்பது தொடங்கி, உணவுப் பொருட்கள் வழங்குவது வரையான ஒவ்வொரு நிவாரண நடவடிக்கையிலும் நடந்துள்ள மோசடிகள், குளறுபடிகளை அந்த அறிக்கை பட்டியல் இட்டுள்ளது.



சுனாமிக்குப் பிறகு, தமிழகக் கடற்கரைப் பகுதிகளில் மீன் பிடிக்கப் பயன்படுத்தப்படும் படகுகளின் எண்ணிக்கை அதிகரித்த அளவிற்கு, பிடிக்கப்படும் மீன்களின் அளவு அதிகரிக்காததால், மீனவ சமுதாயத்தின் பொருளாதார நிலைமை நசிந்து கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால், படகு வாங்குவதற்குக் கொடுக்கப்பட்ட கடன் குட்டி போட்டதுதான் கண்ட பலன் என்கிறார்கள் மீனவர்கள்.



உலக வங்கி உத்தரவுப்படி மீனவர்களை கடற்கரையில் இருந்து அப்புறப்படுத்தவும்; மீனவ சமுதாயத்தில் அரசு சாரா நிறுவனங்கள் ஊடுருவி வேலை செய்யவும்; அதிகாரிகள் இலஞ்சம் ஊழல் மோசடிகளில் ஊறித் திளைக்கவும்தான் சுனாமி நிவாரணம் பயன்பட்டிருக்கிறது. மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை, அப்பல்லோ மருத்துவமனை போன்ற தனியார் ஐந்து நட்சத்திர மருத்துவமனைகள், மீனவர்களின் இந்த அவல நிலையைப் பயன்படுத்திக் கொண்டு, சிறுநீரகத் திருட்டு வியாபாரத்தை நடத்தி வருகின்றன. அரசு, தனது அலட்சியத்தை மூடி மறைக்க, இந்தத் தனியார் மருத்துவமனைகள் மீது பாயப் போவதாக ""பாவ்லா'' காட்டுகிறது. மீனவர்களோ, தங்கள் சிறுநீரகங்களை இதைவிட நல்ல விலைக்கு வாங்க யாராவது வருவார்களா எனக் காத்துக் கிடக்கிறார்கள்!

Sunday, March 4, 2007

முல்லைப் பெரியாறு: தீர்வு என்ன?

முல்லைப் பெரியாறு: தீர்வு என்ன?

ழை பொய்த்துப் போகும் காலங்களில்தான் காவிரியில் நீர்கேட்டு கர்நாடகாவிடம் கையேந்தும் நிலைமை உள்ளது என்றால், நல்ல மழை பெய்தும் கூட, தமிழகமே கட்டிப் பராமரித்து வரும் முல்லைப் பெரியாறு அணையில் அதன் கொள்ளளவு நீரைத் தேக்கி வைத்துப் பயன்படுத்தும் உரிமையைக் கூட அடாவடியாக மறுக்கிறது, கேரள அரசு. இப்படியே போனால் பாலாறு, காவிரி ஆகியவற்றைத் தொடர்ந்து வைகையும் வறண்டு போய் தமிழ்நாட்டின் பெரும்பாலான நிலப்பரப்பு பாலைவனமாகிவிடும் என்பதில் சந்தேகமில்லை.


இருப்பினும், தேர்தல் நலனுக்காக ஓட்டுக் கட்சிகளும் தமிழக நலனில் அக்கறையுள்ள சில சிறிய அரசியல் அமைப்புகளும் கட்சிகளும் மட்டுமே இது குறித்துப் பேசி வருகின்றன. தமிழகத்தின் பெரும்பான்மையான மக்கள் இது குறித்து அதிகம் தெரிந்து கொண்டு அக்கறைப்படுவதாகத் தெரியவில்லை. இதற்குக் காரணம், தமிழக மக்களிடம் அதிகம் செல்வாக்கு செலுத்தும் ஓட்டுக் கட்சிகளும் செய்தி ஊடகங்களும் இந்த எரியும் பிரச்சினையை பரந்துபட்ட மக்களிடம் கொண்டு செல்வதில்லை.


அதே நேரத்தில் கேரளத்து அரசியல் கட்சிகளோ (இடதுசாரிகள் உட்பட) இப்பிரச்சினையை அடித்தட்டு மக்களிடம் திரித்துச் சொல்லி தேசியஇனவெறியைக் கிளப்பி விட்டுள்ளனர். தமிழக அரசியல் கட்சிகளோ, இப்பிரச்சினையை குறைந்தபட்சம் சாமான்ய மக்களுக்குப் புரிய வைக்கவும் முயலவில்லை. இது எப்படி இருக்கிறது என்றால், ""பறித்தவன் பதறியதும், பறிக் கொடுத்தவன் ஊமையாகி விட்டான்'' என்ற வாய்மொழிக்கேற்ப தமிழக ஓட்டுக் கட்சிகளும் அமைதியாகி விட்டன.


முல்லைப் பெரியாறு பிரச்சினையில், உச்சநீதி மன்றத் தீர்ப்பான 142 அடி நீர் அளவு உயர்த்த வேண்டும் என்ற ஆணையை கேரள அரசு நிராகரித்து விட்டது.உச்சநீதி மன்ற தீர்ப்புக்கு பிறகு ஆட்சிக்கு வந்த கருணாநிதியும் சரி, அதற்கு முன்பிருந்த ஜெயாவும் சரி இது குறித்து எந்த நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. இவர்கள் மௌனம் சாதிப்பது ஏன்? பேசி தீர்க்கலாம் என்று இழுத்தடிப்பது ஏன்?


தேசிய இனவெறியைக் கிளப்பிவிடும், நீதிமன்றத் தீர்ப்பை அவமதிக்கும் கேரள அரசு மீது உச்சநீதி மன்றம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நடவடிக்கை எடுக்கும்படி மத்திய அரசையும் வலியுறுத்தவும் இல்லை. மத்திய அரசும் இதில், "கழுவும் மீனில் நழுவும் மீனாகவே' செயல்பட்டு தமிழகத்தின் நியாயமான உரிமையைப் புறக்கணித்து வருகிறது.


அப்படி என்றால் இதில் நமக்கு உரிமையில்லையா? முழு உரிமை உண்டு. இதில் சந்தேகத்திற்கே இடமில்லை. இதன் உண்மை நிலவரம் தான் என்ன?


ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் பருவ மழையானது, அடிக்கடி பெய்யாமல் போனதால், விவசாயம் பாதிக்கப்பட்டது. இப்பாதிப்பைப் போக்க, அன்றைய ஆங்கிலேய அரசு அதாவது, சென்னை மாகாண அரசு, மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து உருவாகும் நீரானது, வீணாக அரபிக்கடலில் கலப்பதைத் தடுத்து, தென் மாவட்டங்களின் நீரின் தேவையைப் பூர்த்தி செய்ய முடிவு செய்தது.


இதற்கான இடத்தைத் தெரிவு செய்து, திருவிதாங்கூர் மன்னருடன் சென்னை மாகாண அரசு ஒரு ஒப்பந்தம் போட்டது. (அணை இருக்கும் இடம் திருவிதாங்கூர் மன்னனுக்கே சொந்தமில்லை என்பது வேறு விசயம்). இதனடிப்படையில் உறுதி செய்து கொண்ட பின்பே சென்னை மாகாண அரசு அணையைக் கட்ட முடிவு செய்தது. பென்னி குக் என்ற ஆங்கிலேய பொறியாளர் தலைமையில் 1874ஆம் ஆண்டு முல்லைப் பெரியாறு அணையைக் கட்ட துவங்கியது.


1895இல் கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்பட்ட இந்த அணையின் நீரை, ஒரு குகையின் மூலமாக திருப்பி, தமிழகத்தின் தென் மாவட்ட விளைநிலங்களுக்கு பயன்படுத்தி கொள்ளும் உரிமையை 999 ஆண்டுகள் வரை 1886இல் அக். 9ஆம் தேதி திருவிதாங்கூர் மன்னருக்கும் சென்னை மாகாண அரசுக்கும் இடையே போடப்பட்ட ஒப்பந்தம் மூலம் உறுதி செய்யப்பட்டது.


முல்லைப் பெரியாறு நீர் தமிழ்நாட்டில் நுழையும் இடத்தில் மின்சாரம் உற்பத்தி செய்யத் திட்டமிட்டது தமிழக அரசு. அதனடிப்படையில், கேரள அரசுடன் 1970 மே 29இல் தமிழக அரசானது, பழைய ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஒரு புதிய ஒப்பந்தத்தை செய்து கொண்டது. இந்த புதிய ஒப்பந்தத்தின் போது, கேரள அரசோ, ஒரு கோரிக்கையை முன் வைத்தது.


அதாவது, ஏற்கெனவே போட்ட முதல் ஒப்பந்தத்தில் அணைக் கட்டுவதால் நீரில் மூழ்கும் 8000 ஏக்கர் நிலத்திற்கு வாடகையாக, ஒரு ஏக்கருக்கு
ரூ. 5 வீதம் ரூ. 40,000த்தை தமிழக அரசு செலுத்தி வந்தது. அதை தற்போது ஒரு ஏக்கருக்கு ரூ. 30 வீதம் உயர்த்தி தரும்படி கேரள அரசு கோரியது. தமிழக அரசும் இதற்கு ஒப்புக் கொண்டு நீரில் மூழ்கும் 8000 ஏக்கருக்கு ரூ. 30 வீதம் 2,40,000 ரூபாயை ஆண்டுதோ றும் இன்றுவரை செலுத்தி வருகிறது.


இந்த ஒப்பந்தத்திற்கு பிறகு, கேரள அரசோ, 1976இல் தமிழகத்திற்கு வரும் நீரை தடுத்து நிறுத்தி, அதைதானே எடுத்து செல்லும் நோக்கத்தில், 1976இல், 555 அடி உயரத்தில் (முல்லைப் பெரியாறு அணையை விட 7 மடங்கு பெரியது) இடுக்கி அணையைக் கட்டியது.


இடுக்கி அணைக்குப் போதிய நீர் கிடைக்காததால், முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 136 அடியாகக் குறைக்க, கேரள மின்வாரியத் தலைமைப் பொறியாளர் அறிவுறுத்தியுள்ளார். இடுக்கி அணையில் தேக்கி வைக்கப்படும் நீரைக் கொண்டு மின்சாரம் உற்பத்தி செய்யலாம் என்றும் ஆலோசனைக் கூறியுள்ளார். இடுக்கி அணைக்குத் தேவையான அளவு நீரைப்பெறும் நோக்கத்தில் தான் கேரள அரசு பல சதிவேலைகளையும், புரளியைக் கிளப்புவதையும் செய்கின்றது.


இடுக்கி அணைக்கு நீரைக்கொண்டு செல்வதற்காக தமிழக வனப் பகுதியில் இருந்த செண்பகவள்ளி அணையை சதித்தனமாக உடைத்து விட்டது, கேரள அரசு. நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகு மீண்டும் அந்த அணையைக் கட்டித் தர ஒப்புக் கொண்டு அதற்காக தமிழக அரசிடமிருந்து பணமும் பெற்றுக் கொண்டு இன்னமும் அணையைக் கட்டித் தராமல் ஏய்த்து வருகிறது.


இடுக்கி அணைக்கு நீரைக்கொண்டு செல்வதற்காக பெரியாறு அணைக்கான இயற்கையான நீர்வரத்துப் பாதையை மறித்து கெவி அணை, பம்பா அணை, ஆணைத்தோடு அணை, கட்கி அணை ஆகிய புதிய சிறு அணைகளை கட்டி இயற்கை நீரோட்டத்திற்கு எதிராக உயரமான இடங்களுக்கு இராட்சத "பம்பு'கள் கொண்டு மலைகளைத் தாண்டி நீரேற்றி இடுக்கி அணைக்கு நீரைக் கொண்டு சென்றது. முல்லைப் பெரியாறு அணையைப் பலப்படுத்தும் ஒப்பந்தத்தை மீறி கட்டுமான பணிகளில் ஈடுபட்டிருந்த ஊழியர்கள், பொறியாளர்களைக் கைது செய்தும் வழக்குப் போட்டும் வாகனங்களை பறிமுதல் செய்தும் தொடர்ந்து தொல்லைகள் கொடுத்துக் கொண்டேயிருந்தது. இருந்தபோதும் எம்.ஜி.ஆர்., கருணாநிதி, ஜெயலலிதா ஆகிய ஆட்சியாளர்கள் பொறியியலாளர்கள், அதிகாரிகளின் முறையீடுகளை கண்டு கொள்ளாது தொடர்ந்து கேரள அரசுக்குத் துணையாக தமிழகத்திற்கு துரோகமிழைத்தே வந்திருக்கின்றனர். அணையை இயக்குவது, படகு விடுவது, அணைக்கான பாதைகளை பயன்படுத்துவது — என்று பல உரிமைகளை தாரை வார்த்திருக்கின்றனர்.


அணை பலவீனம் அடைந்து விட்டதாகக் காரணம் காட்டி, கேரள அரசும் தமிழக அரசும் போட்ட ஒப்பந்தபடி அன்றைய எம்.ஜி.ஆர். அரசு முல்லைப் பெரியாறு அணையைப் பலப்படுத்த 1.6 கோடி ரூபாயை ஒதுக்கி, 1241 அடி நீளம் கொண்ட அணைக்கு 10 அடிக்கு ஒரு பில்லர் வீதம், 125 அழுத்தமானப் பில்லர்களை உள்பக்கம் எழுப்பி, 55 அடி அகலம், 155 அடி உயரத்தில், ஒரு சப்போர்ட் அணையை (பேபி டேம்) கட்டி உபரியாக 3 செட்டர்களையும் பொருத்தி மேலும் பலப்படுத்தியது. அவ்வப்போது ஏற்படும் கசிவையும் நிறுத்த சுண்ணாம்பு, சிமெண்டுப் பாலை அணையின் உட்புறத்தில் இறக்கி தொடர்ந்து பலப்படுத்தியும் வந்துள்ளது.


இதை மைய மண் இயங்கியல் வல்லுநர்கள் (இந்த வல்லுநர் குழுவில் கேரள அரசு சார்பில் எம்.கே.பரமேஸ்வரன் இருந்தார்) அதிநவீன கருவிகள் கொண்டு ஆய்வு செய்து பேபி டேமுக்கு வலிமை இருக்கிறது என்று 14 ஜூன் 2000த்தில் சான்றும் அளித்தனர். இதனடிப்படையில் அணையின் நீர்மட்டத்தை 142 அடி உயர்த்திக் கொள்ள சான்றும் அளித்து விட்டது.


இந்த சான்றை ஏற்றுக் கொண்ட உச்சநீதி மன்றம் 142 அடி நீரை உயர்த்தலாம் என்று .2006இல் தீர்ப்பும் அளித்து விட்டது. நீதிமன்ற தீர்ப்பை ஏற்க மறுத்து, தீர்ப்பை மறுசீராய்வு செய்யும்படி மனு ஒன்றை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது, கேரள அரசு. மனு செய்தவர்கள் அதன் தீர்ப்பு எதுவாக இருந்தாலும் அதை ஏற்பது தானே நியாயமானது. சாதகமாக இருந்தால் ஏற்பது, இல்லையெனில் மறுப்பது என்பது அயோக்கியத்தனம் இல்லையா? மேலும் அனைத்துக் கட்சிகளின் கூட்டத்தை கூட்டி, கேரள நீர்ப் பாசனம் நீர் சேமிப்புச் சட்டம் என 2003இல் திருத்தம் கொண்டு வந்தது மோசடி இல்லையா?


இந்த மனுவையும் தள்ளுபடி செய்துவிட்டது உச்சநீதி மன்றம். உச்சநீதி மன்ற தீர்ப்பை ஏற்க மறுப்பதோடு, தமிழகத்தின் நியாயமான பாதிப்பைக் கூடப் பார்க்க மறுக்கிறது.


136 அடியாக நீர் குறைப்பதால், தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய நீர்வரத்து குறைந்து, 1,25,000 ஏக்கர் விளைநிலங்கள் தரிசாகி விட்டன. மின்சாரமும் 140 மெகாவாட் மின் உற்பத்தியானது 56 மெகாவாட் மின் உற்பத்தியாக குறைந்து விட்டது. இதனால் தமிழகத்திற்கு 130.80 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டதோடு 1980 முதல் 2006 வரை ஏறக்குறைய ரூ. 3561.6 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளது.


மேலும், இந்த நிலத்தையே நம்பி வாழ்ந்து வந்த மதுரை, தேனி, இராமநாதபுரம் மாவட்டத்து மக்களும் வயிற்றுப் பிழைப்புக்காக அண்டை மாநிலங்களைத் தேடி ஓடுகின்றனர். ஆனால், கேரள மக்களுக்காக, தமிழகம் உற்பத்தி செய்து அனுப்பும் உணவுப் பொருட்களுக்கு தேவையான நீரின் அளவோ 511 டிஎம்சியாகும். அந்த நீரையாவது தரவேண்டுமென்ற எண்ணம் கூட இவர்களுக்கு இல்லை.


உலகத் தொழிலாளர்களை ஒன்றுபடச் சொல்லும் மார்க்சிய கோட்பாட்டை சொல்லிக் கொண்டே, இந்திய தொழிலாளர்களைப் பிளவுப்படுத்தும் முதலாளித்துவ தேசிய இனவெறியைப் புகுத்தி கொண்டதன் விளைவுதான் இது என்பதை இவர்கள் உணர மறுக்கின்றனர்.


இவர்களின் தேசிய இனவெறிக்கு ஒத்து ஊதும் வேலையைத்தான் தமிழக சி.பி.எம். நாடாளுமன்ற உறுப்பினர் மோகன் அவர்களும், "உச்சநீதி மன்ற தீர்ப்பை நாடாளுமன்றத்தில் விவாதிப்பது தேசிய ஒருமைப்பாட்டிற்கு குந்தகம் விளைவிக்கும்' என்கிறார். இதற்கு சபாநாயகரும் ஒத்து ஊதுகிறார். அதேபோல் தமிழ் மாநிலத் தலைவர்கள் வரதராஜனும், எம்.பாலகிருஷ்ணனும் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு பிறகும் பேசி தீர்க்க வேண்டும் என்று மடையை மாற்றி விடுகின்றனர்.


படித்தவர்கள் நிரம்பிய கேரள மக்களிடையே அறிவியல்பூர்வமான ஆதாரங்களை மறுத்து, மேலோட்டமான சில வாதங்களை முன் வைத்து பீதியூட்டும் பிரச்சாரம் நடக்கிறது. முல்லைப் பெரியாறு அணை கட்டி முடிக்கப்பட்டு 102 ஆண்டுகளாகி விட்டன; பழங்கால தொழில்நுட்பத்தைக் கொண்டு கட்டப்பட்டது; பூமி அதிர்ச்சி நிகழ வாய்ப்புள்ள பகுதியில் உள்ளது; அணை உடைந்தால் கேரளத்தின் ஐந்து மாவட்டங்களில் வாழும் 35 இலட்சம் மக்களின் உயிரும், பல ஆயிரம் கோடி சொத்துக்களும் அழியும் என்று கூறுகிறார்கள்.


உலகின் எல்லாப் பகுதிகளிலுமே ஏதாவது ஒரு அளவு அதிர்ச்சிக்குள்ளாகும் வாய்ப்புள்ளது; ஆனால் முல்லைப் பெரியாறு அணைக்கு அவ்வாறான வாய்ப்பிருப்பதாக யாரும் நிரூபிக்கவில்லை. மகாராட்டிரம் கொய்னா அணைப்பகுதியில் பல கிராமங்களை விழுங்கிய பூமி அதிர்ச்சி நிகழ்ந்துள்ள போதிலும் அந்த அணை இடிக்கப்படவில்லை, பழமையான தொழில் நுட்பங் கொண்ட அணைகள் இடிக்கப்பட்டதற்குச் சான்றுகள் இருப்பதைப் போலவே, ஆயிரம் ஆண்டுகளாகியும் பாதுகாப்பாகவும் உறுதியாகவும் தற்போதும் உள்ள அணைகளுக்கும் சான்றுகள் உள்ளன.


ஒப்பந்த காலமான 999 ஆண்டுகளுக்கு, நூறு சதவீதம் எந்தவித ஆபத்தும் பாதிப்பும் இல்லாமல் முல்லைப் பெரியாறு அணை நீடித்திருக்கும் என்று எந்த முட்டாளும் வாதிட மாட்டான். அதேசமயம் நிபுணர்களின் ஆய்வு முடிவுப்படி 152 அடி உயரத்துக்கு நீரைத் தேக்கினாலும் உடனடி ஆபத்தில்லை என்பதுதான் உண்மை. உலகிலுள்ள எல்லா அணைகளுக்கும், பலநூறு மாடிகள் கொண்ட வானுயரக் கட்டிடங்களுக்கும் கூட இது பொருந்தும். சொல்லப் போனால் மனிதனின் கட்டுமானங்கள் எல்லாமே காலத்தாலும் இயற்கை பேரழிவுகளாலும் பாதிக்கப்படக் கூடியவைதாம். எரிமலைப் பூமியாகிய ஜப்பானில், குறிப்பாக டோக்கியோவில் எந்த உத்திரவாதத்தில் வானுயரக் கட்டுமானங்களும் அணு உலைகளும் நிர்மாணிக்கப்படுகின்றன. நவீன காலத்தில் ஆபத்து விளைவிக்கக் கூடிய கட்டுமானங்கள் எல்லாமே நிபுணர்களால் கண்காணிக்கப்படுவதும், தேவையானபோது தகுந்த பாதுகாப்பு ஏற்படுத்தப்படுவதும்தான் நடைமுறையாக உள்ளது.


அந்த வகையில் முல்லைப் பெரியாறு அணையும் கருத்தப்பட வேண்டும்; ஆனால் கேரள மக்களிடையே மூட நம்பிக்கை வகையிலான பீதியூட்டப்படுகிறது. முல்லைப் பெரியாறு அணை தகுதியுடைய நிபுணர்களைக் கொண்டு ஆய்வு செய்யப்பட்டுள்ளதால், 152 அடி உயரத்துக்கு ஆபத்தின்றி நீரைத் தேக்க முடியும். இதுதவிர தகுதியுடைய பொறியியலாளர்களால் கண்காணிக்கப்பட்டு, இயக்கப்படுகிறது. தேவையான பலப்படுத்தும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 15 கோடி கன அடி கொள்ளளவு கொண்ட அணையில் ஏதாவது ஆபத்து ஏற்படுமானால் தேவையான அளவு நீரை தகுந்தநேரத்தில் சீராக வெறியேற்றவும் முடியும்; பெரியாறு அணைக்கு கீழே அதைவிட ஐந்து மடங்கு அதிகமான கொள்ளளவு கொண்ட இடுக்கி அணையும் உள்ளது. இரண்டு அணைக்கும் இடையுள்ள 48 கிலோ மீட்டர் தூரத்திற்கு பல சிறிய தடுப்பணைகள் கட்டி மேலும் உத்தரவாதமாக்கிக் கொள்ள முடியும். எதிர்காலத்தில் கூட, 999 ஆண்டுகளுக்கு தற்போதுள்ள முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக நீடிக்காது என்றாலும், தேவையான போது மாற்று அணைகட்டிக் கொள்ளவும் 1886ஆம் ஆண்டு ஒப்பந்தப்படி உரிமையுண்டு.


ஆனால் யோக்கியவான்களாகக் காட்டிக் கொள்ளும் சிலர், தற்போதுள்ள முல்லைப் பெரியாறு அணைக்குப் பதிலாக புதியதொரு அணையைக் கட்டிவிடலாம் என்று யோசனைக் கூறுகிறார்கள். இப்படிக் கூறுவது தற்போதுள்ள அணை பாதுகாப்பற்றது என்ற கேரளாவின் நிலையை எவ்வித தொழில்நுட்ப ஆதாரமுமின்றி ஆதரிப்பதாகும். அப்படிப் புதிய அணையைக் கட்டி, பழைய ஒப்பந்தத்திற்குப் பதிலாக புதிய ஒப்பந்தம் போட்டுக் கொண்டு, இடுக்கி அணைக்குத் தேவையான அளவு தண்ணீரைப் பெறுவதை நிபந்தனையாக்குவது; எஞ்சிய தண்ணீரைத் தமிழ்நாட்டிற்கு விற்பது என்ற கேரளாவின் உள்நோக்கத்தையும் ஆதரிப்பதாக உள்ளது. புதிய அணை கட்டினால், தற்போதுள்ள முல்லைப் பெரியாறு அணையில் 152 அடி உயரத்திற்கு நீரைத் தேக்குவதால் தமிழ்நாட்டிற்கு கிடைக்கும் அதே அளவு தண்ணீரையும் மின்சாரத்தையும் எவ்வித நிபந்தனையுமின்றி வழங்குவதாக கேரளா உறுதி கூறவில்லை என்பது முக்கியமானது.


கேரளம், கர்நாடகம் ஆகிய இரண்டு மாநிலங்களுமே தமிழ்நாட்டிற்கு தண்ணீரைத் தானம் செய்வதைப் போலவும், ஆகவே தமிழகம் அதை உரிமையாகக் கோர முடியாது; யாசகமாகத்தான் கோர முடியும் என்பதைப் போலவும் நடந்து கொள்கின்றன. காவிரிப் பிரச்சினையில் நீர்ப் பிடிப்பு மேல்கை பகுதியைக் கர்நாடகம் கொண்டிருந்தாலும், சர்வதேச நதிநீர் விதிகளின்படி, கடைமடைப் பகுதியான தமிழகத்திற்கு இயற்கையான உரிமையுண்டு. முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் 1886ஆம் ஆண்டு ஒப்பந்தப்படி தமிழகத்திற்கு உரிமை உண்டு. மேலும் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை ஏற்றுக் கொண்டுள்ள கேரளமும் கர்நாடகமும் அதன்படியான நடுவர்மன்றம் மற்றும் உச்சநீதி மன்றத் தீர்ப்புகளை ஏற்று அமலாக்கியே தீரவேண்டும்.


நடுவர்மன்ற மற்றும் உச்சநீதி மன்றத் தீர்ப்புகளை அமலாக்க மறுக்கும்போது, மத்திய அரசு அம்மாநில அரசுமீது இராணுவ நடவடிக்கைகள் உட்பட எல்லாவிதமான நடவடிக்கைகளையம் மேற்கொள்ள வேண்டும்; இதை மத்திய அரசு செய்யாதபோது, மத்திய அரசின் எல்லா அதிகாரங்களையும் தமிழகம் ஏற்க மறுப்பதற்கு எல்லாவித நியாயமும் உரிமையும் உண்டு. இந்த நியாயத்தையும் உரிமையையும் உறுதி செய்வதுதான் பிரிந்து போகும் உரிமையுடன் கூடிய சுயநிர்ணய உரிமையாகும். இதுவொன்றுதான் இரு வேறு தேசிய இனங்களைக் கொண்ட அண்டை மாநிலங்களுக்கிடையிலான சிக்கல்களை நிரந்தரமாகத் தீர்ப்பதற்கான வழியாகும். அவ்வாறின்றி, ""இந்திய தேசிய ஒருமைப்பாட்டை காக்கும் வகையில் மாநில மக்கள் அமைதித் தீர்வு காணவேண்டும்'' என்று பாதிக்கப்படும், பாதிப்பை ஏற்படுத்தும் இரண்டு தரப்பையும் பார்த்து ""தேசிய வாதிகள்'' உபதேசம் செய்கின்றனர்.


பிரிந்து போகும் உரிமையுடன் கூடிய சுயநிர்ணய உரிமை என்னும் ஆயுதத்தைக் கையிலெடுப்பது ஒரு நிரந்தர, நீண்டகாலத் தீர்வாக இருக்கும் அதேசமயம் கேரளம், கர்நாடகம் ஆகிய இரண்டு மாநிலங்களுக்கும் எதிராக, பொருளாதார முற்றுகை, பரம்பிக் குளம், ஆழியாறு, மண்ணாறு போன்ற ஆறுகள் வழியே கேரளத்துக்குச் செல்லும் தண்ணீரை மறுப்பது, சபரிமலை உட்பட கேரளாவுக்கான சாலை மற்றும் இரயில் பாதைகளை மறிப்பது போன்ற நடவடிக்கைகளை தமிழக மக்கள் மேற்கொள்ள வேண்டும். அண்டை மாநிலங்களில் இருந்து வரும் தண்ணீர் தமிழகத்திற்கு எவ்வளவு அவசியமோ அதைப்போலவே தமிழகத்திலிருந்து அம்மாநிலங்கள் அடையும் பொருளாதார உதவிகள் அவற்றுக்கு அவசியமானவை என்பதை உணர்த்தியே தீரவேண்டும். இது பழிவாங்கும் செயலல்ல; படிப்பிக்கும் செயலாகும்.

· ஆர்.கே.