தமிழ் அரங்கம்

Saturday, March 17, 2007

காஷ்மீர்:இந்திய இராணுவத்தின் கொலைக்களம்!

காஷ்மீர்:

இந்திய இராணுவத்தின் கொலைக்களம்!


""ஜம்முகாசுமீர் போலீசு சிறப்பு நடவடிக்கை அதிரடிப் படையும், மத்திய ரிசர்வ் போலீசு படையும் இணைந்து பாகிஸ்தானைச் சேர்ந்த தீவிரவாதி ஒருவனைச் சுட்டுக் கொன்றதோடு, அத்தீவிரவாதியிடமிருந்து ஆயுதமொன்றையும் கைப்பற்றினர்'' இப்படியொரு முதல் தகவல் அறிக்கை டிச.9, 2006 அன்று, ஜம்முகாசுமீர் மாநிலத்தில் உள்ள கந்தேர்பால் போலீசு நிலையத்தில் பதிவு செய்யப்பட்டது. இந்த முதல் தகவல் அறிக்கையே, மறுநாள் பத்திரிகைகளில் செய்தியாகவும் வெளிவந்தது.


இந்தச் சம்பவம் நடந்து முடிந்து இரண்டு மாதங்கள் கழித்து, இந்த "மோதல் கொலை'யின் பின்னே உள்ள உண்மை, அந்தத் "தீவிரவாதி'யின் கல்லறையில் இருந்து தோண்டி எடுக்கப்பட்டுள்ளது. சிறப்பு நடவடிக்கை அதிரடிப் படையாலும், துணை இராணுவப் படையாலும் சுட்டுக் கொல்லப்பட்டவர் பாக். தீவிரவாதி இல்லை என்பதும்; அவர், ஜம்முகாசுமீர் மாநிலத்தில் உள்ள லர்னூ கிராமத்தைச் சேர்ந்த அப்துல் ரஹ்மான் பத்தர் என்ற தச்சுத் தொழிலாளி என்பதும் தற்பொழுது அம்பலமாகியிருப்பதோடு, இப்போலி மோதல் கொலை காசுமீர் பள்ளத் தாக்கில் பெரும் போராட்டப் புயலையே உருவாக்கி விட்டது.


அப்துல் ரஹ்மான் பத்தர், தனது நண்பனும், சிறப்பு நடவடிக்கை அதிரடிப் படையில் தலைமைக் காவலராக வேலை பார்த்துவரும் ஃபரூக் அகமது பத்தரிடம், காசுமீர் மாநில போலீசு துறையில் தனக்கு ஏதாவது ஒரு வேலை வாங்கித் தருவதற்காக, 75,000/ ரூபாய் இலஞ்சம் கொடுத்திருந்தார். நாட்கள் நகர்ந்ததேயொழிய, அப்துல் ரஹ்மான் பத்தருக்கு போலீசு துறையில் வேலை எதுவும் கிடைக்கவில்லை. இதனால் அப்துல் ரஹ்மான் பத்தர், தான் இலஞ்சமாகக் கொடுத்தப் பணத்தைத் திருப்பிக் கொடுத்துவிடும்படி போலீசுக்காரன் ஃபரூக் அகமதுவிடம் கேட்கத் தொடங்கினார். இதனையடுத்து, ஃபரூக் அகமது, தன்னை டிச.8, 2006 அன்று சிறீநகரில் வந்து சந்திக்கும்படி அகமது ரஹ்மானுக்குத் தகவல் கொடுக்க, அவரும் ஃபரூக் அகமதுவைச் சந்திக்கக் கிளம்பிச் சென்றார். அந்தப் பயணமே, அப்துல் ரஹ்மான் பத்தரின் இறுதிப் பயணமாகி விட்டது.


சிறீநகருக்குக் கிளம்பிச் சென்ற அப்துல் ரஹ்மான் பத்தர் ஆறு நாட்கள் கழிந்த பிறகும் வீடு திரும்பாததையடுத்து, அவரது உறவினர்கள் சிறீநகர் தெற்கு மண்டல போலீசு கண்காணிப்பாளரிடம் புகார் செய்தனர். அப்துல் ரஹ்மான் பத்தர் காணாமல் போனது பற்றிய விசாரணை ஒரு பெரும் பூதத்தைக் கிளப்பிவிடப் போவதை அறியாமலேயே, போலீசாரும் விசாரணையை நடத்தினர்.


அப்துல் ரஹ்மானின் செல்போன் எண்ணைத் தொடர்பு கொண்டபொழுது, அது செயல்படாமல் முடங்கிப் போயிருப்பது தெரிய வந்தது. எனினும், பாரத் சஞ்சார் நிகாம் நிறுவனத்தைச் சேர்ந்த ஊழியர், அப்துல் ரஹ்மானின் செல்போன் எண் முடங்கிப் போய்விட்ட பிறகும், அவரது செல்போன், வேறொரு எண்ணில் இயங்கி வருவதைக் கண்டுபிடித்து, போலீசுக்குத் தகவல் கொடுத்தார். அப்துல் ரஹ்மானின் செல்போனை வைத்திருந்த அப்துல் ரஷீத் வாகே என்பவரை போலீசார் விசாரித்தபொழுது, அவர், தான் அந்த செல்போனை, கந்தேர்பால் நகரில் தீவிரவாத எதிர்ப்பு போலீசு பிரிவில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றும் ஃபரூக் அகமது குட்டுவிடமிருந்து வாங்கியதாக கூறினார். தீவிரவாத எதிர்ப்பு போலீசு உதவி ஆய்வாளர் குட்டு விசாரிக்கப்பட்ட பொழுது, பூதம் வெளியே வந்தது.


""அப்துல் ரஹ்மான் பத்தர், ஃபரூக் அகமது பத்தர் கூறியபடி, டிச.8, 2006 அன்று ஃபரூக்கைப் பார்க்க சிறீநகருக்கு வந்து, ஃபரூக்கின் வீட்டில் தங்கியிருந்ததாகவும்; அன்று மதியம் தனது தலைமையில் ஒரு போலீசு படை

ஃபரூக்கின் வீட்டிற்குச் சென்று, அப்துல் ரஹ்மான் பத்தரை அங்கிருந்து கந்தேர்பாலுக்குக் கடத்திச் சென்று மறுநாள் சுட்டுக் கொன்றுவிட்டு, கையோடு சடலத்தைப் புதைத்து விட்டதாகவும்; அதன்பிறகு பாக். தீவிரவாதியைச் சுட்டுக் கொன்றதாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ததாகவும்'' தீவிரவாத எதிர்ப்பு உதவி ஆய்வாளர் ஃபரூக் அகமது குட்டு, போலீசிடம் ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருக்கிறார்.


இலஞ்சப் பணத்தைத் திருப்பிக் கேட்டதற்காக, அப்துல் ரஹ்மான் பத்தர் சுட்டுக் கொல்லப்படவில்லை. காசுமீர் பள்ளத்தாக்கில் தீவிரவாதிகளை வேட்டையாடுவதற்காக இறக்கி விடப்பட்டிருக்கும் இராணுவம் துணை இராணுவப் படைகள் சிறப்பு அதிரடிப் படைகள் தங்களுக்குள் கூட்டணி வைத்துக் கொண்டு, அப்பாவிகளை இரகசியமாகக் கடத்திக் கொண்டு போய் போலி மோதலில் சுட்டுக் கொன்றுவிட்டு, அவர்களை பாக். தீவிரவாதிகள் என்றோ, அடையாளம் தெரியாத தீவிரவாதி என்றோ முத்திரை குத்தி முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துவிட்டு, இந்தக் கொலைக்கு கிடைக்கும் பரிசுப் பணத்தையும், பதவி உயர்வையும் பங்கு போட்டுக் கொள்ளும் கொலை திட்டத்தை வெகு காலமாகவே நடத்தி வருகின்றன. அப்துல் ரஹ்மான் பத்தரைப் போலி மோதலில் சுட்டுக் கொன்றதன் மூலம், சிறப்பு அதிரடிப் படை மற்றும் மத்திய ரிசர்வ் போலீசு படையைச் சேர்ந்த அரசு பயங்கரவாதிகள் பங்கு போட்டுக் கொண்ட பரிசுத் தொகை ரூ. 1,30,000/


ஒவ்வொரு மாதமும் இத்தனை தீவிரவாதிகளை "மோதலில்' சுட்டுக் கொன்றிருக்கிறோம் எனக் கணக்குக் காட்டுவதற்காகவே, இராணுவமும் போலீசும் அப்பாவி முசுலீம்களை போலி மோதலில் சுட்டுக் கொல்வதை சர்வ சாதாரணமாக நடத்தி வருகின்றன. போலீசாரால் புதைக்கப்பட்டு, இப்பொழுது மறு பிரேதப் பரிசோதனைக்காகத் தோண்டி எடுக்கப்படும் "தீவிரவாதிகளின்' பிணங்கள் இந்த உண்மையை மீண்டும் நாறடித்து விட்டன.


· 13ஆவது தேசிய துப்பாக்கிப் படை பிரிவைச் சேர்ந்த சிப்பாய்களும், போலீசாரும் இணைந்து நடத்திய தாக்குதலில் ஜெய்ஷ்இமுகம்மது தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த, ஜாஹித் அலி என்ற பாக். பயங்கரவாதி இறந்து போனதாக அக்.5, 2006 அன்று சும்பல் போலீசு நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. "மோதலில்' கொல்லப்பட்ட அந்த பாகிஸ்தான் பயங்கரவாதி, தோடா மாவட்டத்தில் உள்ள பனிஹல் கிராமத்தைச் சேர்ந்த ஷெளகத் கான் என்பது தற்பொழுது அம்பலமாகியிருக்கிறது.


· 5ஆவது தேசிய துப்பாக்கி படைப்பிரிவு சிப்பாய்களும், போலீசும் இணைந்து அடையாளம் தெரியாத தீவிரவாதியைச் சுட்டுக் கொன்றுவிட்டதாகவும்; அந்தத் தீவிரவாதியிடமிருந்து ஒரு ""ஏ.கே.'' இரக துப்பாக்கி, ஒரு கைத்துப்பாக்கி மற்றும் வெடி மருந்து பொருட்களைக் கைப்பற்றியதாகவும் பிப்.17, 2006 அன்று கந்தேர்பால் போலீசு நிலையத்தில் முதல் தகவல் பதிவாகி இருக்கிறது.


அடையாளம் தெரியாத அந்தத் தீவிரவாதி சிறீநகர் தெருக்களில் நறுமணத் திரவியங்களை விற்கும் நஸிர் அகமது தேகா என்ற நடைபாதை வியாபாரி என்றும்; அவர் கோகேர்நாக் பகுதியைச் சேர்ந்தவர் என்றும் தற்பொழுது அடையாளம் காணப்பட்டிருக்கிறது. அவர் நறுமணத் திரவியங்களைத் தெருத்தெருவாக எடுத்துச் சென்று விற்பதற்காகப் பயன்படுத்தி வந்த பெட்டி, துணை ஆய்வாளர் ஃபரூக் அகமது குட்டுவின் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளது.


· மார்ச் 14, 2006 அன்று 24ஆவது தேசிய துப்பாக்கிப் படை சிப்பாய்களால் சுட்டுக் கொல்லப்பட்ட அடையாளம் தீவிரவாதி, துணி வியாபாரியான குலாம் நபி வானி என்பதும்; மார்ச் 8, 2006 அன்று 24ஆவது தேசிய துப்பாக்கிப் படை சிப்பாய்களால் சுட்டுக் கொல்லப்பட்ட அடையாளம் தெரியாத தீவிரவாதி, ஜம்முகாசுமீர் மாநில அரசில் கடைநிலை ஊழியர் அலி முகம்மது பத்தர் என்பதும் தற்பொழுது நிரூபணமாகியிருக்கிறது.


···


""போலி மோதல் கொலைகளை உடனடியாக நிறுத்த வேண்டும்; ஜம்முகாசுமீர் மாநில போலீசு துறையைச் சேர்ந்த சிறப்பு நடவடிக்கைகள் அதிரடிப் படையை முழுமையாகக் கலைக்க வேண்டும்; ஜம்மு காசுமீரில் இருந்து இராணுவமும் துணை இராணுவமும் வெளியேற வேண்டும்'' எனப் போராடிக் கொண்டிருக்கும் அம்மாநில மக்களின் ஆத்திரத்தில் இருந்து தப்பித்துக் கொள்வதற்காக, இந்த ஐந்து போலி மோதல் கொலைகள் பற்றி நீதி விசாரணை நடத்தப்படும் என அறிவித்திருக்கிறது, காங். கூட்டணி ஆட்சி. சிறப்பு நடவடிக்கைகள் அதிரடிப் படையைச் சேர்ந்த முதுநிலை போலீசு கண்காணிப்பாளர், துணை போலீசு கண்காணிப்பாளர் உள்ளிட்டு ஐந்து காக்கிச் சட்டை கிரிமினல்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இக்கொலைகள் பற்றி இராணுவத்திற்குள் விசாரணை நடத்தப்படும் என்று இராணுவ அமைச்சரும், இராணுவ அதிகாரிகளும் அறிவித்துள்ளனர். அரசாங்கம் இப்படி முண்டா தட்டுவதை வைத்துக் கொண்டு அரச பயங்கரவாதக் குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டு விடுவார்கள் என நம்பிவிட முடியுமா?


பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள தெலினா என்ற ஊரைச் சேர்ந்த மன்சூர் அகமது மிர், செப்.7, 2003 அன்று, தேசிய துப்பாக்கிப் படைப் பிரிவைச் சேர்ந்த கேப்டன் ஷர்மாவால், அவரது வீட்டில் இருந்து இழுத்துச் செல்லப்பட்டார். அதன்பிறகு மன்சூர் அகமது மிர் ""காணாமல்'' போய்விட்டார். மூன்று ஆண்டுகள் கழித்து, தெலினாவில் ஒரு மருத்துவமனை கட்டுவதற்காக அஸ்திவாரம் தோண்டப்பட்ட பொழுது, அந்த இடத்தில் மிர் புதைக்கப்பட்டதற்கான ஆதாரங்கள் கிடைத்தன. மிர்ரின் படுகொலைக்கு நீதி கேட்டு காசுமீர் மக்கள் 15 நாட்கள் போராடிய பிறகு, காங். கூட்டணி ஆட்சி நீதிமன்ற விசாரணைக் கமிசனை அமைத்தது. இந்த கமிசன் அமைக்கப்பட்டு எட்டு மாதங்கள் கழிந்து விட்டாலும், விசாரணை ஒரு அங்குலம் கூட முன்னேறவில்லை.


""இராணுவம் விசாரணை நடத்த ஒத்துழைக்க மறுக்கிறது; குறைந்த பட்சம், கேப்டன் ஷர்மா இப்பொழுது எங்கு இருக்கிறார் என்ற தகவலைக் கூடச் சொல்ல மறுக்கிறது'' என ஜம்மு காசுமீர் மாநில தலைமை போலீசு அதிகாரியே குற்றஞ் சுமத்தியிருக்கிறார்.


2002ஆம் ஆண்டு சிட்டிசிங்புரா என்ற கிராமத்தில், ஐந்து அப்பாவி முசுலீம்களை, பாக். பயங்கரவாதிகள் என முத்திரை குத்தி இந்திய இராணுவம் கொன்றொழித்தது. இந்தப் படுகொலை அம்பலமாகி மக்கள் போராடிய பிறகு, மையப் புலனாய்வுத் துறையின் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. இராணுவத்தின் இழுத்தடிப்பால், சி.பி.ஐ. விசாரணையை முடிக்கவே நான்கு ஆண்டுகளாகி விட்டது. கடந்த ஆண்டு மே மாதம், இப்படுகொலை தொடர்பாக, சி.பி.ஐ. ஐந்து இராணுவ அதிகாரிகள் மீது குற்றப் பத்திரிகைத் தாக்கல் செய்துவிட்டாலும், கடந்த ஒரு ஆண்டில், அந்த ஐந்து அதிகாரிகள் ஒருமுறை கூட நீதிமன்றத்தின் குற்றவாளிக் கூண்டில் ஏறி நிற்கவில்லை.


ஜம்முகாசுமீர் மாநிலத்தில் தீவிரவாதிகளை ஒழிப்பது என்ற பெயரில் போலி மோதல்களை நடத்தியிருக்கும் அரசு பயங்கரவாதிகளை விசாரித்துத் தண்டிப்பதில், இந்திய ஆளுங் கும்பல் காட்டி வரும் "அக்கறைக்கு' இவை போல ஆயிரத்தெட்டு வழக்குகளை உதாரணமாக எடுத்துக் காட்டலாம். அம்மாநில மனித உரிமை கமிசனின் தலைவராக நியமிக்கப்பட்ட நீதிபதி அலி முகம்மது மிர், ""இந்த கமிசன் சர்வதேச சமூகத்தை முட்டாளாக்குவதற்கான கண்துடைப்பு நடவடிக்கை தவிர, வேறொன்றுமில்லை'' எனக் குறிப்பிட்டுப் பதவி விலகியதை, மனித உரிமை மீறல் பற்றிய ஆளும் கும்பல்களின் பசப்பல்களுக்கு முத்தாய்ப்பாகக் குறிப்பிடலாம்.


தற்பொழுது அம்பலமாகியுள்ள இந்த ஐந்து படுகொலை நடவடிக்கைகளிலும், தேசிய துப்பாக்கிப் படையைச் சேர்ந்த மூன்று படைப் பிரிவுகள் பங்கெடுத்துக் கொண்டிருப்பது நிரூபணமாகியிருக்கிறது. இப்படிப்பட்ட போலி மோதல் கொலைகளை, ""தாளிப்பு நடவடிக்கை'' எனப் பெயரிட்டு அழைக்கிறது, இராணுவம். ""1989ஆம் தொடங்கி இன்று வரை, ஏறத்தாழ 10,000 அப்பாவிகள் பாதுகாப்பு படைகளால் இழுத்துச் செல்லப்பட்ட பின் காணாமல் போய்விட்டதாக''க் குறிப்பிடுகிறது. ""காணாமல் போனவர்களின் பெற்றோர் அமைப்பு.'' காசுமீரில் தீவிரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகள் தொடங்கிய பிறகு 60 பேர் மட்டுமே காணாமல் போயிருப்பதாகக் கூறி வந்த காங்.கூட்டணி ஆட்சி, இப்பொழுது 1,017 அப்பாவிகள் காணாமல் போய் விட்டதாகக் கணக்குக் காட்டுகிறது.


ஜம்முகாசுமீர் போலீசு துறையைச் சேர்ந்த ""சிறப்பு நடவடிக்கைகள் குழு'' என்ற அதிரடி படைப் பிரிவு, இரகசிய கொலைக் குழுவாகவே செயல்பட்டு வருகிறது. இராணுவமும், துணை இராணுவமும் ஆள் காட்டி வேலை செய்வதற்காகவே சரணடைந்த போராளிகளைப் பயன்படுத்தி வருகின்றன. தீவிரவாதி என முத்திரை குத்திவிடுவோம் என மிரட்டியே அப்பாவி மக்களிடம் பணம் பறிப்பதை, ஒரு தொழிலாகவே இராணுவமும், துணை இராணுவமும் நடத்தி வருகின்றன. ஜம்முகாசுமீர் மாநிலத்தில் மட்டுமின்றி, பனி படர்ந்த சியாச்சின் மலைப் பகுதியில் எல்லைப் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருக்கும் இராணுவத்தினர் கூட, பரிசு பணத்திற்காகவும், பதவி உயர்வுக்காகவும் போலி மோதல் நடவடிக்கைகளை நடத்தி வருவதும் ஏற்கெனவே அம்பலமாகி நாறியிருக்கிறது.

···

""அடையாளம் தெரியாத தீவிரவாதி'' என பாதுகாப்பு படைகள் முத்திரை குத்துகின்றனவே, அதைவிட அயோக்கியத்தனம் வேறெதுவும் இருக்க முடியாது. ஒருவரின் அடையாளமே தெரியாத பொழுது, அவரை எப்படி தீவிரவாதியாக முத்திரை குத்த முடியும்? இந்தக் கேள்வியை எழுப்பும் பொழுது, இராணுவம் போலீசின் கட்டுக்கதையும், மோதல் நாடகமும் உடனடியாக அம்பலத்துக்கு வந்து விடும். ஆனால், பத்திரிகைகள் தொடங்கி நீதிமான்கள் வரை ஒருவரும் இந்தச் சாதாரண கேள்வியை எழுப்ப மறுக்கிறார்கள்.


மாறாக, ""பாதுகாப்புப் படைகள் கடுமையான சூழ்நிலையில் பணியாற்றிக் கொண்டிருக்கின்றன; இந்தக் கொலைகளுக்காக பாதுகாப்புப் படையினரை விசாரித்தால் தீவிரவாதத்தை எதிர்த்துப் போராடும் அவர்களின் முனைப்பு மழுங்கிவிடும்'' என ""சோ'' முதலான பாசிஸ்டுகள் இராணுவத்தின் இந்தக் கொலைவெறியைப் பொது மக்களிடம் நியாயப்படுத்துகிறார்கள். அரசாங்கமோ, பரிசுப் பணம், பதவி உயர்வு என்ற தீனியைப் போட்டு, இந்தக் கொலைவெறியை வளர்த்து விடுகிறது. மேலும், இப்படிப்பட்ட கொலைகளில் ஈடுபடும் இராணுவத்தினரை விசாரணை தண்டனையில் இருந்து பாதுகாக்க ""ஆயுதப் படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை'' நடைமுறைப்படுத்தி வருகிறது.

சட்டபூர்வமாகவே கிடைக்கும் இந்தப் பாதுகாப்புதான், ஜம்முகாசுமீர் மாநிலத்தில் யாரையும், எந்த இடத்திலும், எந்த நேரத்திலும் குருவி சுடுவது போல சுட்டுக் கொல்லலாம் என்ற பாசிசத் திமிரை இராணுவத்திற்கும் போலீசிற்கும் வழங்கியிருக்கிறது.


""ஜம்முகாசுமீர் மாநிலத்தில் பாதுகாப்புப் படைகள் நடத்திவரும் அட்டூழியங்களை, பிற மாநில மக்கள் ஏன் கண்டிப்பதில்லை?'' என்ற கேள்வியை முன்வைக்கிறார், பெர்வேஸ் இம்ரோஸ் என்ற வழக்கறிஞர். நேர்மையான மனசாட்சி கொண்ட ஒவ்வொருவரும் எதிர்கொள்ள வேண்டிய கேள்வி இது. ஆனால், இதற்குப் பதில் சொல்ல வேண்டிய நடுத்தர வர்க்கமோ குருட்டு தேசபக்தியில் மூழ்கிப் போய் கிடக்கிறது. கூலிக்குக் கொலை செய்யும் கிரிமினல் மாஃபியா கும்பலைப் போலச் சீரழிந்துவிட்ட இந்திய இராணுவத்தை, இந்த குருட்டு தேசபக்திதான் புனிதப்படுத்தித் தண்டனையில் இருந்து பாதுகாக்கிறது. ஜம்முகாசுமீர் மக்களின் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டத்தை, பயங்கரவாதம் என நாக்கூசாமல் அவதூறு செய்கிறது.

· செல்வம்

Thursday, March 15, 2007

அரசியல் அமைப்பு முழுவதும் புரையோடிப் போனது!


இந்தியாவிலுள்ள சத்தீஸ்கர் மாநிலத்திலுள்ள மாவோயிஸ்ட் கிளர்ச்சிக்காரர்கள் பற்றி பி.பி.சி யின் ஒலி பரப்பு
அரசியல் அமைப்பு முழுவதும் புரையோடிப் போனது!டுத்தர வர்க்கத்தினர், எப்போதுமே மற்ற வர்க்கத்தினரை விட அறிவாளிகளாகத் தங்களை எண்ணி சுயதிருப்தியில் மிதக்கிறார்கள். ஆனால், உண்மையில் அவர்கள் அற்பவாதிகள். அவர்கள் அறிவோ மிகவும் மேலோட்டமானதுதான்; ஆழமானதல்ல. சமீபத்தில் வெளியான சில வழக்குமன்றத் தீர்ப்புகளைக் கண்டதும், தமது அரசியலற்ற பார்வையுடன் துள்ளிக் குதிக்கத் தொடங்கிவிட்டார்கள். ""பார்த்தீர்களா, எல்லாம் அரசியல்வாதிகளால்தான் நாடே கெட்டுப் போகிறது. இதை நீதிமன்றம் மீண்டும் நிரூபித்து விட்டது'' என்று கூச்சல் போடுகின்றனர்.

பிரியதர்சினி மட்டூ, மற்றும் ஜெசிகாலால் கொலை வழக்குகளில் அரசியல் தலையீடு காரணமாக குற்றவாளிகள் முதலில் விடுவிக்கப்பட்டனர். பின்னர் செய்தி ஊடகம் மற்றும் சமூக அமைப்புகளின் முயற்சிகள் காரணமாக நீதி நிலைநாட்டப்பட்டு, குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டனர். இவ்வளவு காலமும் அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்திக் கொலைக்குற்ற வழக்கிலிருந்த தப்பிவந்த மத்திய நிலக்கரி அமைச்சரும், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவருமான சிபு சோரன், சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தால் குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டு, ஆயுள் தண்டனை பெற்றுள்ளார். பாரதீய ஜனதா கட்சியின் எம்.பி.யும் பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரருமான நவஜோத்சிங் சித்து ஒருவரை அடித்துக் கொன்ற வழக்கில் மூன்றாண்டு கடுங்காவல் தண்டனை பெற்றுள்ளார்.

""மேற்கண்ட வழக்குகளில் தாமதமாகத் தீர்ப்புகள் வந்தாலும் நீதி நிலைநாட்டப்பட்டு விட்டது. நீதித்துறையின் மீது மக்கள் நம்பிக்கை, உறுதியாகி விட்டது'' என்கிறார்கள் நடுத்தர வர்க்க அறிவுஜீவிகள். ""இவை அரசியல்வாதிகள் மீது நீதித்துறை அடைந்த வெற்றி'' என்கின்றனர். இதற்குத் துணையாக இன்னொரு சான்றையும் எடுத்துக் காட்டுகிறார்கள். ""ஓட்டுவங்கியை நோக்கமாகக் கொண்டு இடஒதுக்கீடு அதிகரிப்பு, இசுலாமியர்களுக்கு இடஒதுக்கீடு போன்ற நடவடிக்கைகளை அரசியல்வாதிகள் மேற்கொள்வதை எதிர்த்து நீதிமன்றங்கள் தீர்ப்புகள் கூறுகின்றன. நாடாளுமன்ற முடிவுகளை நீதிமன்றப் பரிசீலனைக்குட்படுத்துவதைத் தடுக்கும் ஒன்பதாவது பிரிவின் கீழ் சட்டங்கள் இயற்றுவதை உச்சநீதி மன்றம் எதிர்த்துள்ளது. ஆகவே, அரசியல்வாதிகள் ரொம்பவும் ஆட்டம் போட முடியாதவாறு மூக்கணாங்கயிறு போடுகிறது, உச்சநீதி மன்றம்'' என்று நடுத்தர வர்க்க அறிவுஜீவிகள் குதூகலிக்கின்றனர்.

இவர்கள் படித்த அறிவுஜீவிகள்தாம்; ஆனால், இவர்களுக்கு அரசியல் என்றால் என்னவென்று தெரியவில்லை. படிக்காத பாமரர்களைப் போன்றே இந்த விசயத்தில் சிந்திக்கிறார்கள். உள்ளூராட்சி முதல் நாடாளுமன்றம் வரை நடக்கும் பல்வேறு வகைத் தேர்தல்கள் சம்பந்தப்பட்ட விவகாரங்கள் மட்டும்தான் அரசியல்; அவற்றில் பங்கேற்கும் கட்சிகள், அமைப்புகள் தாம் அரசியல் கட்சிகள், அரசியல் அமைப்புகள்; அவற்றின் பிரமுகர்கள், தலைவர்கள்தாம் அரசியல்வாதிகள் என்று நினைக்கிறார்கள்.

அதிகார வர்க்கம், போலீசு, இராணுவம், சிறைச்சாலை, நீதிமன்றம் மற்றும் இவை சார்ந்த அனைத்துத் துணை நிறுவனங்களும் அரசு அமைப்புதான். இப்போது புதிதாக ""அரசு சாரா தொண்டு நிறுவனங்கள்'' என்ற பெயரில் அவதாரம் எடுத்துள்ள அமைப்புகளும் உண்மையில் அரசியல் அமைப்புகள்தாம். இந்த நிறுவனங்கள் அமைப்புகள் சம்பந்தப்பட்ட எல்லா விவகாரங்களும், நடவடிக்கைகளும் அரசியல்தான். இவற்றில் பங்கேற்கும் எல்லா நபர்களும் அரசியல்வாதிகள்தாம். ஆனால், இவையெல்லாம் நிர்வாக அமைப்புகள், நேர்மையாகவும், தூய்மையாகவும் இயங்கக் கூடியனவென்றும், மக்களின் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவை அதாவது மற்ற யாரும் இவற்றின் மீது குறைகூறக் கூடாது என்றும், தேர்தல் அரசியல்வாதிகள்தாம் கேடானவர்கள்; எல்லாவிதமான அரசியல் தவறுகளுக்கும் காரணமானவர்கள் என்றும் படித்த அறிவுஜீவிகள் கருதுகின்றனர். இந்த வாதத்துக்கு ஆதாரமாக சிபு சோரன், சித்து போன்றவர்கள் நீதிமன்றங்களால் தண்டிக்கப்பட்டதைக் காட்டுகிறார்கள்.

ஆனால், உண்மையோ வேறுவிதமாக உள்ளது. இராணுவ அமைப்புதான் நாட்டிலேயே மிகப்பெரிய மக்கள் விரோத ஊழல் அமைப்பு; நாட்டிலுள்ள சிறைச்சாலைகள் எல்லாம் தண்டிக்கப்பட்ட குற்றவாளிகளின் பாதுகாப்பான சொர்க்க புரிகளாக உள்ளன. நாட்டிலேயே மிக உயர்ந்ததாகப் போற்றப்படும் போலீசு அமைப்பான சி.பி.ஐ.யும், உச்சநீதி மன்றமும் நாடறிந்த குற்றவாளிகளுக்குத் துணை செய்யும் அமைப்புகளாகவே உள்ளன. இதற்கான ஆதாரங்களை வேறு எங்கும் தேட வேண்டியதில்லை. சிபு சோரன், சித்து விவகாரங்களிலேயே புதைந்துள்ள உண்மை இதுதான்.

சிபு சோரனுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்படுவதற்குக் காரணமாக அமைந்த குற்றம் நடந்தது 1994ஆம் ஆண்டு. நவஜோத் சிங் சித்துவுக்கு மூன்றாண்டு சிறைத் தண்டனை வழங்குவதற்குக் காரணமாக இருந்த குற்றம் நடந்தது 1988ஆம் ஆண்டு. இதற்கிடையே சிபு 12 ஆண்டுகளாக நாடாளுமன்ற உறுப்பினராகவும், சில ஆண்டுகள் மத்திய அமைச்சராகவும் இருந்துள்ளார். சித்துவோ, இந்தியக் கிரிக்கெட் அணி வீரராகவும், வானொளியில் விமர்சகராகவும், பின்னர் எம்.பி. ஆக சில ஆண்டுகளும் இருந்து கோடிகோடியாக சம்பாதித்து சுதந்திரமாக வாழ்ந்துள்ளார். ""தாமதமாக வழங்கப்படும் நீதி, உண்மையில நீதி மறுக்கப்படுவதாகும்'' என்று படித்த அறிவுஜீவிகள் அடிக்கடி பிதற்றும் வசனம் இந்த வழக்குகளுக்குப் பொருந்தாதா? போலீசும் நீதித்துறையும் தானே இதற்குக் காரணம்! ""அரசியல்'' தலையீடுதான் தாமதத்திற்குக் காரணமென்றால் முதுகெலும்பில்லாத போலீசுக்கும், நீதித்துறைக்கும் படித்த அறிவுஜீவிகள் ஏன் வக்காலத்து வாங்கவேண்டும்?

1994ஆம் ஆண்டு, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா எம்.பி.யாக இருந்த சிபுசோரனும் மற்றும் நான்கு பேரும் சேர்ந்து அவரது தனிச்செயலாளராக இருந்த சசிநாத் ஜா என்பவரை புதுதில்லியிலிருந்து கடத்தி ராஞ்சி நகரின் ஒரு குடியிருப்புக்குக் கொண்டுபோய் கொன்றுவிட்டனர். கொல்லப்பட்டவரின் சகோதரர் கொடுத்த புகாரின் பேரிலும் அவரது தாயார் தொடுத்த வழக்கில் தில்லி உயர்நீதி மன்றத்தின் தீர்ப்பின்படியும், வழக்கு சி.பி.ஐ. விசாரணைக்குப் போனது. நான்காண்டுகளுக்குப் பிறகு, அதாவது 1998இல் குற்றப் பத்திரிக்கை தாக்கலாகியது; கொலை நடந்த 12 ஆண்டுகளுக்குப் பிறகு, அதாவது 2006 டிசம்பரில் கொலையாளிகளுக்கு ஆயுள் தண்டனை வழங்கித் தீர்ப்பளித்துள்ளது, சி.பி.ஐ.யின் சிறப்பு நீதிமன்றம்.

இந்த விவகாரத்தில் மிக முக்கியமாகக் கவனிக்க வேண்டியது, கொலைக்கான காரணம், பின்னனி என்னவென்பதுதான். 1993ஆம் ஆண்டு, நரசிம்ம ராவ் தலைமையிலான காங்கிரசின் சிறுபான்மை அரசுக்கு எதிராக வலதுசாரி பா.ஜ.க. மற்றும் சி.பி.எம். தலைமையிலான இடதுசாரிகள் ஆகியோர் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்தனர். அரசு நிச்சயம் கவிழ்ந்துவிடும் என்ற நிலை இருந்தது. ஆனால், பல கோடி ரூபாய் இலஞ்சம் பெற்றுக் கொண்டு சிபு சோரன் தலைமையிலான ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவின் சிபு, மகத்தோ உட்பட ஐந்து எம்.பி.க்கள் நரசிம்மராவ் அரசுக்கு ஆதரவாக வாக்களித்து, நம்பிக்கையில்லாத் தீர்மானம் தோற்கடிக்கப்பட்டது. காங்கிரசுக்கும் ஜா.மு.மோ.வுக்கும் இடையிலான இரகசிய பேரம் பற்றிய உண்மைகளை அறிந்திருந்த சிபு சோரனின் தனிச் செயலர் சசிநாத் ஜா, இலஞ்சத் தொகையில் பங்கு கேட்டிருக்கிறார். அப்போது தான் இலஞ்சம் வாங்கியது எங்கே அம்பலமாகிவிடுமோ என்று அஞ்சிய சிபுசோரன் தனது தனிச் செயலாளரை தில்லியிலிருந்து கடத்திக் கொண்டு போய் ராஞ்சியில் வைத்துக் கொன்றுவிட்டார்.

இந்தக் கொலைக்கு மூலகாரணமாக இருந்த இலஞ்ச விவகாரம் பின்னர் அம்பலமாகியது. நரசிம்மராவின் ஆட்சிக் காலமும் முடிந்துவிட்ட பிறகு நரசிம்மராவ், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா எம்.பி.க்கள் மற்றும் முன்னாள் பிரதமர் சரண் சிங்கின் மகன் அஜித் சிங் மீது கிரிமினல் இலஞ்ச ஊழல் வழக்குப் போட்டது, பின்னர்வந்த ஐக்கிய முன்னணி அரசு. சி.பி.ஐ. நடத்திய இந்த வழக்கில், இலஞ்சம் வாங்கியதை மறுக்க முடியாத நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கருத்துரிமை மற்றும் வாக்குரிமை மீது கிரிமினல் வழக்குப் போடமுடியாது என்று வாதிட்டனர். சி.பி.ஐ. நீதிமன்றமும், தில்லி உயர்நீதி மன்றமும் இந்த வாதத்தை நிராகரித்தன.

ஆனால், நரசிம்மராவுக்கு எதிராக சி.பி.ஐ. நடத்திய வழக்கில் இலஞ்சம் வாங்கியவர் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் அங்கு பேசியதற்கும் ஓட்டளித்ததற்கும் வழக்குப் போட முடியாது; அது அவரது சிறப்புரிமை என்றும் இலஞ்சம் கொடுத்தவர் மீது மட்டும் வழக்குப் போடலம் என்றும் உச்சநீதி மன்றத்தின் அரசியல் சட்ட அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பின் அடிப்படையில் சிபு சோரன் மற்றும் அவரது கட்சி எம்.பி.க்கள் மீதான வழக்கை சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. ஆனால், தனது தீர்ப்பின்படியேகூட, இலஞ்சம் கொடுத்த நரசிம்மராவின் மீது எந்த நடவடிக்கையும், தண்டனையும் விதிக்கவில்லை. மேலும் பல இலஞ்ச ஊழல் தில்லுமுல்லு மோசடி வழக்குகளில் இருந்து நரசிம்ம ராவை விடுதலை செய்தது.

இந்த வழக்கில் உச்சநீதி மன்றம் மேலும் கோமாளித்தனமான தீர்ப்பு வழங்கியது. இலஞ்சம் பெற்றவர்கள் குற்றவாளிகள் அல்லவென்று விடுவிக்க வகை செய்த உச்சநீதி மன்றம், இலஞ்சம் வாங்கியதற்காக அஜித் சிங் மீது குற்ற விசாரணை நடத்தலாம் என்று அனுமதித்தது. இலஞ்சம் பெற்றுக் கொண்டு நாடாளுமன்றத்தில் வாக்களிப்பதில் இருந்து அவர் விலகி இருந்தார் என்று காரணம் கூறியது, உச்சநீதி மன்றம்; அவர் ஓட்டுப் போடவில்லை; ஆதலால் வாங்கிய இலஞ்சம் அவரது ஓட்டைப் பாதிக்கவில்லை என்று வினோதமான விளக்கம் வேறு கொடுக்கப்பட்டது. இத்தீர்ப்பை மறுபரிசீலனை செய்யும்படி அஜீத்சிங் கோரியதையும் உச்சநீதி மன்றம் நிராகரித்தது. இதே வாதத்தின் அடிப்படையில் சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றமும் அஜித் சிங் மீதான குற்றவிசாரணையிலிருந்து அவரை விடுவிக்க மறுத்துவிட்டது.

ஆனால், உச்சநீதி மன்றத்தின் அடிமுட்டாள்தனத்தை, அறிவுநேர்மையற்ற செயலை அஜித் சிங் விவகாரம் மேலும் நிரூபித்து விட்டது. அதாவது நரசிம்மராவிடம் இலஞ்சம் வாங்கிய அஜித் சிங் நம்பிக்கையில்லாத் தீர்மானம் வந்தபோது உச்சநீதி மன்றம் கூறியதைப்போல வாக்களிக்காமல் இருந்து விடவில்லை. அத்தீர்மானத்தை ஆதரித்து, இலஞ்சம் கொடுத்த நரசிம்மராவுக்கு எதிராக வாக்களித்திருக்கிறார். இந்த உண்மையைச் சொல்லி தனது தீர்ப்பை மறுபரிசீலனை செய்யக் கோரியபோதும் உச்சநீதி மன்றம் நிராகரித்து விட்டது. அதாவது இலஞ்சம் வாங்கிக் கொண்டு ஒப்பந்தப்படி வாக்களித்தவர்கள்மீது குற்றவிசாரணை நடத்த முடியாது; இலஞ்சம் வாங்கிக் கொண்டு ஒப்பந்தப்படி வாக்களிக்காமலோ எதிர்த்து வாக்களித்தாலோ அவர்மீது குற்ற விசாரணை நடத்த வேண்டும் என்பதுதான் உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பின் சாரம். மொத்தத்தில், இலஞ்சம் கொடுத்தவருக்கு இலஞ்சம் வாங்கியவர் விசுவாசமாக இருக்கவேண்டும்; வேறுவிதமாக நடக்கக் கூடாது என்பது உச்சநீதி மன்றம் போட்டுள்ள புதிய சட்டம்!

நாடாளுமன்ற விவாதங்களில் பயமின்றி அதன் உறுப்பினர்கள் பேசவும், வாக்களிக்கவும் அதற்காக அவர்கள் மீது சிவில் மற்றும் கிரிமினல் வழக்குத் தொடுக்க முடியாது என்று தடைவிதிக்கிறது 105 (2)வது சட்டப் பிரிவு. ஆனால், இதை 1998ஆம் ஆண்டு உச்சநீதி மன்றம் வழங்கிய இத்தீர்ப்பு கையுங்களவுமாகப் பிடிபட்ட இலஞ்ச ஊழல் பேர்வழிகளைத் தப்புவிப்பதற்காகப் பயன்படுத்திக் கொண்டது, உச்சநீதி மன்றம். அதே உச்சநீதி மன்றம்தான் 2006ஆம் ஆண்டு இறுதியில் வழங்கிய ஒரு தீர்ப்பில் இதையே புரட்டிப் போட்டுப் பேசுகிறது. நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்பதற்கு இலஞ்சம் வாங்கியதற்காக, பதவி நீக்கம் செய்யப்பட்ட பதினொரு எம்.பி.க்கள் அதற்கு எதிராக வழக்குப் போட்டனர். அந்த வழக்கைத் தள்ளுபடி செய்த உச்சநீதி மன்றம் இலஞ்சம் வாங்கிக் கொண்டு கேள்வி கேட்ட எம்.பி.க்களைப் பதவி நீக்கம் செய்தது சரிதான் என்று தீர்ப்புக் கூறியது. அதன்பிறகு வேறொரு வழக்கில் நீதிமன்ற விசாரணைக்கு அப்பால் வைக்கும் சட்டப்பிரிவு ஒன்பதின் கீழ் வைக்குமாறு நிறைவேற்றப்படும் சட்டங்களையும் நீதிமன்றம் விசாரிக்க உரிமை உண்டு என்று தீர்ப்புக் கூறியுள்ளது.

அப்போது, இலஞ்ச ஊழல் பேர்வழிகளான நரசிம்ம ராவ் மற்றும் அவரது கூட்டாளிகளுக்குச் சாதகமாக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான சிறப்பு உரிமைகளை வளைத்துத் தீர்ப்புச் சொன்ன உச்சநீதி மன்றம், இப்போது அந்த சிறப்பு உரிமைகளை ஏற்க முடியாது, தலையீடு செய்வோம் என்கிறது. ஏனென்றால் இப்போது, நாடாளுமன்றம் கொண்டு வரும் இடஒதுக்கீடு போன்ற ஒடுக்கப்பட்ட மக்களுக்கான சில்லரை சீர்திருத்தங்களைக் கூட சகித்துக் கொள்ளாது நாடாளுமன்றத்துக்குள்ள சிறப்பு உரிமைகளையும் மறுப்போம் என்கிறது உச்சநீதி மன்றம்.

நடுத்தர வர்க்க அறிவுஜீவிகளில் மிகமிகப் பெரும்பான்மையினர் காங்கிரசு மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை (இடது சாரி கூட்டணியும் இதில் அங்கும்) ஆதரிப்பவர்கள் அல்லது ஆர்.எஸ்.எஸ். பா.ஜ.க. மற்றும் அதன் கட்டணி கட்சிகளை ஆதரிப்பவர்கள். நரசிம்மராவ், இந்திரா, ராஜீவ் உட்பட காங்கிரசுத் தலைவர்கள் பலரின் இலஞ்ச ஊழல் அதிகார முறைகேடுகளில் உச்சநீதி மன்றம் துணை போயிருக்கின்றது.

சிபு சோரன் அவரது கூட்டாளிகள் சம்பந்தப்பட்ட வழக்குகளில் பெருங்கூச்சல் போடும் ஆர்.எஸ்.எஸ். பா.ஜ.க. கட்சியோ சிபு சோரனுடன் சேர்ந்து இலஞ்சம் வாங்கிய மகத்தோ என்ற ஜா.மு.மோ.வின் இன்னொரு எம்.பி.யை இலஞ்சம் கொடுத்து விலைக்கு வாங்கியது. அவர் பேரங்கள் படியாமல் ஒரு சில மாதங்களிலேயே பா.ஜ. கட்சியை விட்டு வெளியேறினார். குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டவர்கள் பதவி விலக வேண்டும் என்று சிபு சோரன் உட்பட எதிர்த்தரப்பினர் விவகாரங்களில் கூச்சல் போட்டு நாடாளுமன்றத்தைச் செயல்படவிடாமல் முடக்கி வைக்கும் ஆர்.எஸ்.எஸ். பா.ஜ.க. ""யோக்கியவான்கள்'' நவஜோத் சிங் சித்து விவகாரத்தில் பொது இடத்தில் கார் நிறுத்தும் தகராறில் ஒருவரை அடித்துக் கொன்ற வழக்கு 1988இல் இருந்து நடந்தபோதும் அவரை எம்.பி. ஆக்கினர். இப்போது கொலைவழக்கில் மூன்றாண்டு சிறைத் தண்டனை பெற்ற சித்து, பெயருக்குப் பதவி விலகி, உச்சநீதி மன்றத்தில் தண்டனையை நிறுத்தி வைக்கும் உத்தரவு பெற்றவுடன், மீண்டும் பா.ஜ.க.வால் எம்.பி. தேர்தலில் நிறுத்தப்படுகிறார்.

பா.ஜ.க. ஆளும் இராஜஸ்தான் மாநிலத்தில் ஒரு ஜெர்மானியப் பெண்ணைக் கற்பழித்துவிட்டான், அதன் கூட்டணி கட்சி ஆளும் ஒரிசா மாநில போலீசு பொது இயக்குநர் (டி.ஜி.பி.) மகன். அதற்காக ஏழாண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட தன் மகனை சொந்த ஜாமீனில் பரோலில் அழைத்து வந்த ஒரிசா டி.ஜி.பி அவனை தலைமறைவாக வைத்துக் கொண்டிருக்கிறார். சுமார் இரண்டு மாதங்களாகியும் டி.ஜி.பி.யையும் பதவி நீக்கம் செய்யாமல், குற்றவாளியையும் பிடிக்காமல் இரு மாநில அரசுகளும் ஆட்டங்காட்டி வருகின்றன. புத்தாண்டு கேளிக்கையில் கலந்து கொண்டு, பெண்களிடம் தகாத முறையில் நடந்த இரண்டு இராணுவ அதிகாரிகளைக் கடந்தமாதம் கைது செய்தது கொல்கத்தா போலீசு. உடனே இராணுவப் படையொன்று போலீசு நிலையத்துக்குள் நுழைந்து சூறையாடி, போலீசுக்காரன்களையும், அடித்து நொறுக்கிவிட்டு குற்றவாளிகளான இராணுவ அதிகாரிகளை மீட்டுச் சென்றது இப்போது மத்திய மாநில அரசுகள் (சி.பி.எம். அரசுதான்) சமரசம் செய்து விவகாரத்தை மூடி மறைக்க எத்தணிக்கின்றன.

இதுவரை பார்த்த விவரங்கள் காட்டுவது என்னவென்றால், தேர்தல் கட்சிகளும், அதன் பிரமுகர்கள் தலைவர்கள் மட்டுமல்ல உச்சநீதி மன்றம் உட்பட நீதிதுறையும் போலீசும், இராணுவமும் மொத்தத்தில் ஒட்டு மொத்த அரசு எந்திரமே செல்லரித்துப் போயிருக்கின்றன. இதில் ""அரசியல்வாதிகளை'' மட்டும் குறைகூறி, ஒட்டு மொத்த அரசு அமைப்பைப் பாதுகாக்க எத்தணிப்பது பச்சையான மோசடியும் பித்தலாட்டமும் ஆகும்.

· மாணிக்கவாசகம்

Wednesday, March 14, 2007

கொலைகார பாபாவை வள்ளலாக்கும் நரித்தனம்

மு.க-சாய்பாபா சந்திப்பு

கொலைகார பாபாவை வள்ளலாக்கும் நரித்தனம்


சென்னைக்கு ஆந்திரமாநிலத்தின் கிருஷ்ணா ஆற்றில் இருந்து குடிநீர் கொண்டு வரும் கால்வாயைப் பலப்படுத்த 200 கோடி ரூபாயை வழங்கிய மர்மச் சாமியார் சாய்பாபாவுக்குப் பாராட்டு விழா சென்னையில் இவ்வாண்டு ஜனவரியில் நடந்துள்ளது. இதை முன்னிட்டு சென்னை வந்த சாய்பாபா கோபாலபுரம் சென்று "பகுத்தறிவு'ப் பாரம்பரியத்தில் வந்த கருணாநிதியைச் சந்தித்தார்.அங்கே, பகுத்தறிவு திராவிடத்துக்குத் திவசம் நடத்திவிட்ட கருணாநிதியின் முன்பாகவே, அவரின் மனைவி தயாளு அம்மாள் சாய்பாபாவின் காலில் விழுந்து வணங்கினார். இதனை இந்து முன்னணி தலைவர் இராமகோபாலன் வரவேற்றுள்ளார்.சாய்பாபா தனது ஆன்மீக சக்தியால் தங்களுக்கு மோதிரம் வரவழைத்துத் தந்தார் என்று துரைமுருகனும், தயாநிதி மாறனும் சாய்பாபாவைப் பாராட்டி நடத்தப்பட்ட கூட்டத்தில் கூறியுள்ளனர். அந்த மோதிரத் தங்கத்துக்கு வரி கட்டப்பட்டுள்ளதா? இல்லை கடத்தல் தங்கமா என்று தெரியவில்லை.தனது அமைச்சர் ஒருவர் தீக்குழி இறங்கியபோது, அதனைக் காட்டுமிராண்டித்தனம் எனச் சரியாக விமர்சித்த கருணாநிதி, இப்போதோ மவுனம் சாதிக்கிறார்.""பகுத்தறிவு என்பதே மோசடிதான்'' என்றும், ""பகுத்தறிவால் ஒரு பிரயோஜனமும் இல்லை. காரணம் ஜாதகம், ராசி, விதி என எல்லாமே உண்டு'' என்று சொல்கிறார், பெண்ணடிமைத்தனத்தையும் பார்ப்பனீயத்தையும் தமிழ் நாடெங்கும் பரப்பிக் கொண்டிருக்கும் ""சோ'' ராமசாமி என்கிற உலக மகா அறிவாளி!தயாளு அம்மாள் சாய்பாபாவின் காலில் விழுந்த மூடத்தனத்தையோ, துரைமுருகன், தயாநிதி மாறனின் "ஆன்மீக அற்புத' உளறல்களையோ கருணாநிதி கண்டிக்காமல் இருந்தது அவரின் கொள்கை சமரசத்தைக் காட்டுகிறது. இதன் மூலம் ""சோ'' போன்ற காட்டுமிராண்டிகளும், பகுத்தறிவு என்பதை மோசடி எனச் சொல்லி முற்போக்காளர்கள் அத்தனை பேரையும் அவதூறு செய்ய வாய்ப்பை வழங்கியிருக்கிறார்.உண்மையிலே கருணாநிதி நேர்மையான பகுத்தறிவாளர்தானா? பெரியாரின் இயக்கமும், தாங்களும் இரட்டைகுழல் துப்பாக்கிகள் என்று சொல்லிக் கொண்டே "ஒன்றே குலம்; ஒருவனே தேவன்' என்று கொள்கைக் கோவணத்தைக் காற்றில் பறக்கவிட்டவர்கள்தான் கருணாநிதியும், அவரின் வழிகாட்டி அண்ணாதுரையும்."பிள்ளையாரையும் உடைக்க மாட்டோம்; பிள்ளையாருக்குத் தேங்காயும் உடைக்கமாட்டோம்' என்று வெட்கமின்றிப் பேசிய பாரம்பரியத்தை சேர்ந்த கருணாநிதியோ, தனது மணிவிழாவில் அன்பழகன் முன்னிலையில் தனது துணைவியார் ராஜாத்திக்கு தாலியை இரண்டாம் முறையாகக் கட்டி, ஆயுளைக் கூட்டும் மூடநம்பிக்கை சடங்கை செய்தவர்தான்.மனைவியார் தயாளு சாயிபாபாவின் காலில் விழுகிறார் என்றால், துணைவியார் ராஜாத்தியோ மயிலை முண்டகக்கன்னி அம்மன் கோவிலில் அதிகாலைப் பனியில் உருகி நிற்கிறார்.""குங்குமம்'' என்று "மங்களகரமான' பெயரை தன் குடும்பம் நடத்தும் பத்திரிகைக்கு வைத்துக் கொண்டு, ஆண்டுதோறும் பத்திரிகை அலுவலகத்தில் ஆயுதபூசை நடத்துவதும், மூடத்தனங்களை பிரச்சாரம் செய்யும் ஆபாச தொலைக்காட்சித் தொடர்களை தன் குடும்ப தொலைக்காட்சிகளில் ஒளிபரப்புவதும்தான் கருணாநிதியின் குடும்பம் செய்யும் பகுத்தறிவுப்பணி!பராசக்தி போன்ற திரைப்படங்கள் மூலம் போலிச் சாமியார்களின் முகத்திரையை அன்று கிழித்தெறிந்த கருணாநிதி, இன்று மாடிவீட்டு ஏழையாகி தென்னகமெங்கும் வியாபார சாம்ராஜ்யம் கட்டி, மத்தியிலும், மாநிலத்திலும் பதவி ருசியை அனுபவிக்கும்போது அதே போலிச் சாமியார்களை ""ஆண்டவனுக்கே ஒப்பானவர்கள்'' என்றும் புகழ ஆரம்பித்துள்ளார்.பகுத்தறிவாளர்கள் பலரும் கருணாநிதியின் இச்செயலைக் கண்டிக்கத் தொடங்கியதும் மெல்ல முடியாமலும், விழுங்க முடியாமலும் கருணாநிதி தவித்தபோது, சங்கராச்சாரிக்கு வரவேற்புக் கொடுத்து மார்க்சியத்தை அடகு வைத்த போலி கம்யூனிஸ்டுகளின் ""தீக்கதிர்'' நாளேடு அவரின் செயலை நியாயப்படுத்தி ஒரு கட்டுரையை வெளியிட்டது. வேலிக்கு ஓணான் சாட்சி. கருணாநிதிக்கு சி.பி.எம். சாட்சி. போலிகளின் சித்தாந்த குருவாகிய இ.எம்.எஸ். நம்பூதிரிபாடு, தனது மனைவியுடன் கோவிலுக்குப் போன முற்போக்கு ஜனநாயகத்தை உதாரணம் காட்டி, கருணாநிதி தன் குடும்பத்துடன் ஜனநாயக உறவு வைத்திருப்பதாய்க் கண்டுபிடித்துக் கட்டுரை தீட்டியுள்ளது, அந்நாளேடு. இப்படியெல்லாம் ""தீக்கதிர்'' தனது "பகுத்தறிவை'ப் பறைசாற்றி அரசியல் உணர்வூட்டி வருவதால்தான், சி.பி.எம்.மின் தொண்டர்கள் கொத்துக் கொத்தாய் "மாபெரும் புரட்சிக் கலைஞரின்' கட்சியான தே.மு.தி.க.வில் போய்ச் சேருகின்றனர்.ஜால்ராவை ஓங்கி ஒலிக்கும் கி.வீரமணியின் ""விடுதலை''யும் ""சாய்பாபா கருணாநிதி வீடு தேடி வந்தது பெரியார் கொள்கைக்கு கிடைத்த வெற்றி'' எனப் பெரியாரின் பகுத்தறிவையும் பலி கொடுத்தது. உடனே கருணாநிதிக்கு தெம்பு வந்துவிட்டது. ""மரியாதையின் பேரில் பெரியவர்கள் காலில் விழுவது தவறில்லை. என் மனைவி சாய்பாபாவின் காலில் விழுந்ததும் அவ்வாறே'' என்று இந்த மானங்கெட்ட செயலை நியாயப்படுத்திப் பேசியுள்ளார். "இனமானப் பேராசிரியர்' கருணாநிதியை விட வயதில் மூத்தவர்தானே! பேராசிரியரின் பிறந்தநாளில் என்றைக்காவது கருணாநிதியோ அல்லது அவரின் குடும்பமோ காலில் விழுந்து வணங்கியது உண்டா என்று கேட்டால், இந்தப் போலி பகுத்தறிவுவாதியிடம் பதில் இருக்காது.கருணாநிதியின் குடும்பத்தினராலும் துரைமுருகனாலும் நற்சான்றிதழ் வழங்கப்படும் சாய்பாபாவின் யோக்கியதைதான் என்ன?தந்திரங்கள் பலவற்றைக் கற்றுக் கொண்டு, வாயில் இருந்து லிங்கம் வரவழைப்பது, வெறும் கைகளில் இருந்து மோதிரம், விபூதி வரவழைப்பது போன்றவற்றைச் செய்து, இவற்றை எல்லாம் ஆன்மீக சக்தி என்று மோசடி செய்யும் கோடீசுவர கருப்புப் பணப் பேர்வழிதான் சாய்பாபா. பகுத்தறிவுச் சிந்தனையாளரான டாக்டர் கோவூர் இந்த விளையாட்டுகளை எல்லாம் சாய்பாபா முன்னிலையில் தன்னாலும் செய்து காட்ட முடியும் என்று சவால் விட்டு பாபாவை பொதுமேடைக்கு வருமாறு சவால் விட்டு பல ஆண்டுகளுக்கும் மேலாகி விட்டது. மோசடி பாபா, இந்தச் சவாலுக்கு இன்று வரை முகம் கொடுத்ததில்லை.பாபா, மோதிரங்கள் போன்றவற்றை எவ்வாறு வரவழைக்கிறார் என்பதை ""ரீவைண்டு'' செய்து பார்த்த அவரின் வீடியோ படங்கள் தெளிவுபடுத்தி விட்டன. மக்கள் பாடகரான கத்தார் கூட ""சிவலிங்கம் வரவழைக்கும் பாபா! திண்ண, பூசணிக்காய் வரவச்சு தாதா!'' என்று தனது பாடலில் கேட்கிறார். பி.பி.சி. ஒளிபரப்பின் தமிழாக்க குறுந்தகட்டின் மூலம் மேட்டூர் அணையைச் சேர்ந்த பெரியார் படிப்பகத்தினர் பாபாவின் உண்மை முகத்தை அம்பலப்படுத்தி வருகின்றனர்.இந்த மோசடி மன்னனுக்கு உள்நாட்டில் மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் பலர் சீடர்களாகி அன்னாரின் ஆசிரமத்தில் வந்து தங்கி இருந்தார்கள். அப்படிப்பட்ட சீடர்களில் ஒருவர் பாபாவின் ஓரினப்புணர்ச்சி அசிங்கங்களை பி.பி.சி. தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் அம்பலப்படுத்தி இருக்கிறார்.அவரின் மர்ம ரகசியங்களை அம்பலப்படுத்த முயன்ற ஆறு மாணவர்களை பாபாவின் ஆசிரமத்தில் 1993ஆம் ஆண்டு சுட்டுக் கொன்று விட்டு "பாபாவைக் கொல்ல முயன்ற அறுவர் சுட்டுக் கொலை' என்று அக்கொலைகளை மூடி மறைத்தனர்.கிரிமினல் பின்னணி, மோசடித்தனம், ஓரினப்புணர்ச்சி எனும் கழிசடைத்தனம் ஆகியவற்றின் கூட்டுக்கலவையான சாய்பாபாவை ஏன் கருணாநிதி, பகுத்தறிவுவாதத்தை எல்லாம் கை கழுவி விட்டு ஆதரிக்கிறார்?திடீர்ப் பணக்காரர்களின் கருப்புப் பணத்தை மடைமாற்றி விடுவதற்கென்றே அமிர்தானந்தமாயி, சாய்பாபா போன்ற ஆன்மீகப் பித்தலாட்டக்காரர்கள் உருவாகி உள்ளனர். உண்மையிலேயே சாய்பாபா 200 கோடி நிதி உதவி செய்தார் என்றால், தமிழக அரசே விழா எடுத்திருக்கலாமே? பொதுவாகவே நன்றி சொல்பவர்கள், நன்றிக்கு உரியவர்களைத் தேடிச் சென்று நன்றி சொல்வதுதானே உலக வழக்கம். நன்றிக்குரியவராய் சித்தரிக்கப்படும் பாபாவே நன்றியைப் பெற்றுக் கொள்ள கோபாலபுரம் ஏன் போனார்? ஏன் அந்தச் சந்திப்பின் போது அரசு அதிகாரிகள் உடன் இருக்கவில்லை? என்ற கேள்விகளுக்கெல்லாம் சரியான பதில் அரசிடம் இல்லை.மேலும் மக்களுக்குக் குடிநீர் வழங்க வேண்டிய தன்னுடைய அரசின் பொறுப்பைத் தட்டிக் கழித்து விட்டு, அதனைச் செய்யச் சொல்லி இம்மோசடிச் சாமியாரிடம் மண்டியிடுகிறார் கருணாநிதி. அரசின் கடமைகளில் ஒன்றுதான் குடிநீர் விநியோகம் எனும் அடிப்படையைப் பற்றி மக்களைச் சிந்திக்க விடாமல், "மந்திரத்தில் மோதிரம் வரவழைத்த' விசயத்தைப் பேச வைத்துப் பிரச்சினையைத் திசை திருப்புகிறார்.பொதுமக்களுக்குக் குடிநீர் வழங்க வேண்டியது அரசின் கடமையா? கிரிமினல் சாயிபாபாவின் கடமையா? என்று ""தீக்கதிருக்கும்'' சிந்திக்கத் தெரியவில்லை. ""ஒரு மாநிலத்தின் குடிநீர்த் திட்டத்துக்கு உதவிய ஒருவரை அவர் சந்நியாசியாக இருப்பினும் பாராட்டுவது அரசின் கடமை; அதைத்தான் முதலமைச்சர் கலைஞர் செய்துள்ளார்'' என்று கலைஞருக்கு அது முதுகு சொறிந்துள்ளது.உலகவங்கி, கோக், பெக்டல் போன்ற பன்னாட்டு பகாசுரக் கம்பெனிகளும் நம் மக்களின் குடிநீர்ப் பஞ்சத்தைப் போக்குவதாகக் கூறிக் கொண்டுதான் இங்கு சுத்திகரிப்பு, விநியோகம், விற்பனை ஆகியவற்றில் நுழைகின்றன. இதற்காக "மார்க்சிஸ்டு' கட்சி உலக வங்கியையும், பன்னாட்டு நிறுவனங்களையும் இனிப் பாராட்டிக் கூட்டம் நடத்தினாலும் ஆச்சரியம் இல்லை.பார்ப்பனியத்துடன் சமரசம் செய்து கொள்ளாமல் தன் வாழ்வுவசதிகளை மேம்படுத்திக் கொள்ள முடியாது எனும் உண்மையைத் தெளிவாகத் தெரிந்து கொண்ட கருணாநிதி போன்ற பிழைப்புவாதிகள், தனக்கு லாபம் கிடைக்கும்போது அடிப்படைக் கொள்கைகளைக் கூட நீர்த்துப் போகச் செய்கிறார்கள். இவர்களுக்கெல்லாம் பெரியார், சுயமரியாதை எனும் வார்த்தைகள் எல்லாம், பதவிக்கு வரும் ஏணிகள் மாதிரிதான்.வீரமணி, தீக்கதிர், பார்ப்பனப் பத்திரிக்கைகள் என எல்லோருமே சாய்பாபா விசயத்தின் பின்னால் இருக்கும் குடிநீர் அரசியலைப் பற்றிப் பேசாமல் அதை ஆத்திகநாத்திகப் பிரச்சினையாக மாற்றி ஒட்டு மொத்த தமிழகத்தையே ஏமாளிகளாக்குகின்றனர். இயற்கையின் கொடையான குடிநீரை விற்பனைப் பண்டமாக்கும் உலகமயமாக்கலின் சதியில் நம்மை வீழ்த்துகினறனர். நம்மிடம் வரியை மட்டும் வசூலித்துக் கொண்டு நம் தாகத்தைத் தீர்க்கவும், சென்னையில் நாறும் கூவத்தைச் சுத்தம் செய்யவும் சாய்பாபாவிடம் மண்டியிடச் சொல்கிறது மு.க. அரசு.வரி வசூலிப்பதும், போலீசுக்கு தீனிபோடுவதும் மட்டும்தான் அரசின் வேலை என்றால், அந்த அரசு நீடிக்கத்தான் வேண்டுமா?· கவி

ஆர்.எஸ்.எஸ்.இன் சட்டபூர்வ அடியாள்! போலீசு

போலீசு:

ஆர்.எஸ்.எஸ்.இன் சட்டபூர்வ அடியாள்! போலீசு


ர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த மங்களூர் நகரிலும்; அதன் புறநகர்ப் பகுதிகளிலும்; அந்நகரையொட்டி அமைந்துள்ள உல்லால், கோனாஜே ஆகிய ஊர்களிலும் கடந்த அக்டோபர் மாதத்தின் முதல் வாரத்தில் தொடர்ந்து ஐந்து நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்ட நேரங்களில் கூட, அப்பகுதிகளில் 144 தடையுத்தரவு அமலில் இருந்தது.


மங்களூர் நகரம் அமைந்துள்ள தெற்கு கன்னட மாவட்டத்தின் பல பகுதிகளில், அக்.4ந் தேதி தொடங்கி 6ந் தேதி முடிய பஜ்ரங்தள், ராமா சேனை ஆகிய இந்து மதவெறி அமைப்புகள் நடத்திய முசுலீம் எதிர்ப்புக் கலவரங்கள்தான் இதற்குக் காரணம். அந்தக் கலவரத்தில் இரண்டு முசுலீம்கள் படுகொலை செய்யப்பட்டனர்; முசுலீம்களுக்குச் சொந்தமான கடைகளும், வர்த்தக நிறுவனங்களும் குறி வைத்துத் தாக்கப்பட்டன; கொள்ளையடிக்கப்பட்டன. கலவரத்தை அடக்குவது என்ற பெயரில் நூற்றுக்கணக்கான முசுலீம்கள் கைது செய்யப்பட்டனர்.


அரசோ, போலீசோ எதிர்பாராமல், திடீரென்று நடந்துவிட்ட தாக்குதல் அல்ல இது. 1992இல் பாபர் மசூதி இடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்து மதவெறி அமைப்புகள் சிறிதும், பெரிதுமாக பல கலவரங்களை கர்நாடக மாநிலத்தில் நடத்தி வந்துள்ளன. இதன் மூலம் தங்களின் செல்வாக்கை வளர்த்துக் கொண்டுள்ள இந்து மதவெறி அமைப்புகள், 2004 சட்டமன்றத் தேர்தலில் தெற்கு கன்னட மாவட்டத்தில் மட்டும் 11 சட்டமன்றத் தொகுதிகளைக் கைப்பற்றிக் கொண்டன.


""பசு வதையைத் தடுத்து நிறுத்துவது; மதமாற்றம் நடைபெறுவதைக் கண்காணித்துத் தடுப்பது; முசுலீம் இளைஞர்கள், இந்துப் பெண்களுடன் பேசுவதைக் கூடத் தடை செய்வது'' ஆகிய மூன்று சனாதனக் கட்டளைகளை நடைமுறைப்படுத்துவதில், இந்து மதவெறி அமைப்புகள், இம்மாவட்டத்தில் இணையான அரசாங்கத்தையே நடத்தி வருகின்றன. முசுலீம்களின் வழிபாட்டுத் தலம் அமைந்துள்ள பாபா பூதான்கிரி மலையை, ""இந்து'' வழிபாட்டுத் தலமாக மாற்ற முயற்சித்து வரும் இந்து மதவெறி அமைப்புகள், இதனை, ""தெற்கு அயோத்தி'' என அறிவித்துள்ளன. இந்தப் பின்னணியில் வைத்துதான், இந்து மதவெறி அமைப்புகள் அக்டோபரில் நடத்திய தாக்குதலைப் பார்க்க வேண்டும்.


மங்களூர் நகரின் புறநகர் பகுதியான பாஜ்பே எனுமிடத்தில், இந்துமதவெறி அமைப்புகள், அக். 3ந் தேதியன்று துர்க்கை அம்மன் ஊர்வலத்தை, பாஜ்பே மசூதி அமைந்துள்ள வீதி வழியாக நடத்தத் திட்டமிட்டன. இந்த ""மத'' ஊர்வலம், மசூதி வழியாக செல்வதற்கு முசுலீம்களிடமிருந்து எதிர்ப்பு வரவில்லை. எனினும், அவர்கள் இந்த ஊர்வலத்தில் பப்பா பேரி என்ற பெயர் கொண்ட முசுலீம், துர்க்கையை வணங்குவது போன்ற படத்தை எடுத்துச் செல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து, போலீசிடம் புகார் மனு கொடுத்தனர்.


நெடுங்காலத்திற்கு முன்பு, மங்களூர் வட்டாரத்தில் பேரி மொழி பேசும் பப்பா என்ற முசுலீம் வணிகர் வாழ்ந்து வந்ததாகவும், அவர் ஒருநாள் ஆற்றில் படகில் சென்று கொண்டிருக்கையில், அந்த ஆறு இரத்தமாக மாறி, அவரது படகு மேலே செல்ல முடியாமல் நின்று விட்டதாகவும்; அவரது கனவில் துர்க்கை அம்மன் தோன்றியதையடுத்து, அவர் துர்க்கை அம்மனின் பக்தராக மாறி விட்டதாகவும் ஐதீகக் கதையொன்று இப்பகுதியில் வாழும் இந்துமுசுலீம் மக்களிடையே நிலவி வருகிறது. மதச்சகிப்புத்தன்மை, மத நல்லிணக்கத்தின் அடையாளமாக இருந்துவரும் இந்தக் கதையை, இந்து மதவெறியர்கள் இப்பொழுது முசுலீம்களை நக்கல் செய்யப் பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக, துர்க்கை ஊர்வலத்தில், பப்பா பேரி என்ற பெயரில், ஒரு ஏழை முசுலீம் மதகுரு துர்க்கையிடம் இறைஞ்சுவது போன்று வரைந்து, முசுலீம்களை மதரீதியாகப் புண்படுத்த முயன்றனர்.


இந்தப் படத்தை ஊர்வலத்தில் எடுத்து செல்வோம் என இந்து மதவெறிக் கும்பல் பிடிவாதமாக இருந்ததால், ""குறைந்தபட்சம் ஊர்வலம் மசூதிக்கு அருகே வரும் பொழுதாவது, அந்தப் படத்தை காட்சிக்கு வைக்கக்கூடாது'' என முசுலீம்கள் வேண்டுகோள் வைத்தனர். இந்து மதவெறியர்கள் இந்தச் சமரசத்திற்கு ஒப்புக் கொள்ள மறுத்துவிட்டனர்.

""இந்தப் பிடிவாதம் ஒரு கலவரத்திற்குத் தூபம் போடும் சதிச் செயல்'' என நன்கு தெரிந்திருந்தும் கூட, அதிகாரவர்க்கம் ஊர்வலத்திற்கு எந்தக் கட்டுப்பாடும் விதிக்காமல், பப்பா பேரி படத்தோடு ஊர்வலம் மசூதி வழியாகச் செல்ல அனுமதித்தது.


போலீசு அதிகாரிகளின் இந்த ஒத்துழைப்பு, கள் குடித்த (இந்து மதவெறி) குரங்குகளுக்கு, தேள் கடித்த நிலையை உருவாக்கிவிட்டது. ஊர்வலத்தின்பொழுதே, 1,000 பேர் கொண்ட இந்து மதவெறிக் கும்பலொன்று, கைகளில் வாள், குண்டாந்தடி, சோடா பாட்டில்களைத் தூக்கிக் கொண்டு, ஏழு முசுலீம் கடைகளுக்குள்ளும், இரண்டு இந்து கடைகளுக்குள்ளும் புகுந்து கொள்ளையடித்தது. (கொள்ளையடிக்கும் பொழுதுதான் ஆர்.எஸ்.எஸ்.க்கு மதச்சார்பின்மை நினைவுக்கு வரும் போலும்) முகம்மது ஹனிஃப் என்பவருக்குச் சொந்தமான துணிக் கடையில் மட்டும் 15 இலட்ச ரூபாய் பணம் ரொக்கமாக இந்தக் கும்பலால் கொள்ளையடிக்கப்பட்டது.


ஆறு துணை ஆய்வாளர்கள், மாவட்ட போலீசு கண்காணிப்பாளர், மாவட்ட போலீசு கமிசனர் ஆகிய அதிகாரிகள் அடங்கிய 200 பேர் கொண்ட போலீசுப் பட்டாளமே இக்கொள்ளைக்குச் சாட்சியாகவும், பாதுகாப்பாகவும் இருந்தனர். நடந்தது மத ஊர்வலம் அல்ல; இந்து மதவெறியர்கள் நடத்திய பகற்கொள்ளை என்பதற்கு ஒளிப்பேழை பட ஆதாரங்கள் இருந்தபோதும், முதலாளித்துவப் பத்திரிகைகளோ, தமிழ்நாட்டு தினமலர் பாணியில், ""மத நல்லிணக்கத்தின் குறியீடான, பப்பா பேரி துர்க்கை அம்மனை வணங்கும் படத்திற்கு முசுலீம்கள் எதிர்ப்பு தெரிவித்ததோடு, மத ஊர்வலத்தையும் தடுத்து நிறுத்திவிட்டதாக'' அவதூறையே, செய்தியாக வெளியிட்டன.


அக்.3 அன்று பாஜ்பேயில் நடத்தப்பட்ட கலவரத்தை, பல பகுதிகளுக்கும் விரிவாக்கும் நோக்கத்தோடு, ராமசேனை என்ற இந்து மதவெறி அமைப்பு அக்.6 அன்று கடையடைப்புப் போராட்டத்தை நடத்தியது. அன்று மங்களூர் நகருக்கு அருகில் உள்ள உல்லால் பகுதியில், மூன்று "இந்து'க் கடைகள் தீ வைத்துக் கொளுத்தப்பட்டன. இச்சம்பவம் பற்றி முறையான விசாரணை நடத்தாமல், முசுலீம்கள் மீது குற்றம் சுமத்திய போலீசார், இதற்குத் தண்டனையாக உல்லால் முசுலீம்கள் அனைவரின் மீதும் அரசு பயங்கரவாதத்தை ஏவிவிட்டனர்.


அன்று மாலை, ரமலான் நோன்பை முன்னிட்டு ஆண்கள் மசூதிக்குச் சென்றிருந்த நேரமாகப் பார்த்து, முசுலீம்களின் வீடுகளுக்குள் அத்து மீறி, அதிரடியாக, கதவை உடைத்துக் கொண்டு உள்ளே நுழைந்த போலீசார், வீட்டில் இருந்த பெண்களையும், சிறுவர்களையும், முதியவர்களையும் காட்டுமிராண்டித்தனமாகத் தாக்கினர். ""தீவிரவாதிகளை''ப் போல முகத்தை மூடிக் கொண்டு வீடுகளுக்குள் நுழைந்த போலீசு கும்பல், கையில் எடுத்துச் செல்லக் கூடிய பொருட்கள் செல்ஃபோன்கள், தங்கநகைகள், ரொக்கப்பணம் அனைத்தையும் கொள்ளையடித்தனர். கமுக்கமாக எடுத்துச் செல்ல முடியாத பொருட்களை தொலைக்காட்சி, குளிர்சாதனப் பெட்டி அடித்து நொறுக்கினர்.


இந்தச் சட்டவிரோதத் தாக்குதலையும், திருட்டையும் ""தேடுதல் வேட்டை'' என்ற பெயரில் மூடி மறைக்கும் முகமாக, 70 பேரை அவர்களுள் பெரும்பாலோர் சிறுவர்கள் கைது செய்து, பொய் வழக்கு போட்டு, மங்களூரில் இருந்து 400 கி.மீ தொலைவில் உள்ள பெல்லாரி சிறையில் அடைத்தனர். ""கைது'' செய்யப்பட்ட முசுலீம்களை ஏற்றிச் செல்வதற்கு கொண்டு வரப்பட்ட பேருந்தில் இருந்த காலியிடங்களை நிரப்புவதற்காகவே மீண்டும் ""தேடுதல் வேட்டை'' நடத்தப்பட்டு, ஆறு முசுலீம்கள் கைது செய்யப்பட்டனர். போலீசிடம் நிரம்பி வழியும் முசுலீம் வெறுப்புக்கு இதுவொரு சான்று.


முசுலீம்களின் காலனியாகக் கருதப்படும் பந்தரில், தாக்குதலோ, எதிர்த்தாக்குதலோ நடக்காதபொழுதும், அக்.8 அன்று நள்ளிரவில் பந்தர் பகுதியில் வசிக்கும் பேரி மொழி பேசும் முசுலீம்களின் வீடுகளுக்குள் நுழைந்த போலீசார், வீட்டில் இருந்த ஆண்கள் அனைவரையும் சட்டவிரோதமாகக் கைது செய்தனர். அப்படி கைது செய்யப்பட்ட முசுலீம்களுள், அப்துல் ரஷீத், முகம்மது இம்ரான் என்ற இரு இளைஞர்களை பொய் வழக்கில் இருந்து விடுதலை செய்ய வேண்டும் என்றால், ""அவர்கள் இருவரும், மங்களூர் நகரின் பல இடங்களில் நடந்த கலவரங்களை அந்நகர மேயர் அஷ்ரஃப்தான் தூண்டிவிட்டதாக எழுதித்தர வேண்டும்'' என போலீசாரே பேரம் நடத்தினர்.


மங்களூர் நகரின் புறநகர் பகுதியான ஃபைசல் நகரில், அப்துல் காதர் நடத்தி வரும் ""ஏ.கே.ஸ்டோர்ஸ்'' என்ற மளிகைக் கடை, அக்.6 அன்று, இந்து மதவெறியர்களால் சூறையாடப்பட்டு, கொள்ளையடிக்கப்பட்டது. இது பற்றி அப்துல்காதர் கொள்ளையடித்தவர்களின் பெயர்களைக் குறிப்பிட்டு புகார் கொடுத்த பிறகும், போலீசார் குற்றவாளிகளுள் ஒருவரையும் கைது செய்யவில்லை.


மாறாக, அன்று மாலை அப்துல்காதரின் வீட்டுக்குள் அதிரடியாகப் புகுந்த போலீசார், அவரின் இரண்டாவது மகன் பர்வேஷைக் கைது செய்தனர். அப்துல்காதரின் இரண்டாவது மருமகள் போலீசாரின் அத்துமீறலை எதிர்த்து நின்று கேள்வி கேட்ட பொழுது, அதற்கு போலீசார், ""உங்க வீட்டு வாலிப பசங்களுக்குக் கொள்ளையடிக்கவும், பொதுச் சொத்தை நாசப்படுத்தவும் ஏன் கற்றுக் கொடுக்கிறீர்கள்?'' என ஆர்.எஸ்.எஸ். பாணியில் அவதூறு செய்து அவமானப்படுத்தினர்.


ஃபைசல் நகரில் வசித்து வரும் இந்துக்களில் சிலரது வீடுகள் அக்.6 அன்று முசுலீம் இளைஞர்களால் தாக்கப்பட்டன. போலீசார், இந்தத் தாக்குதலைக் காட்டி, இந்துக்களின் உயிருக்கும், உடமைக்கும் ஆபத்து நெருங்கி விட்டதாகப் பீதியூட்டி, அந்நகரைச் சேர்ந்த 30 இந்து குடும்பத்தினரை, வீராநகருக்கு இடம் பெறச் செய்தனர்.


கர்நாடகா மத நல்லிணக்க மன்றம் என்ற அமைப்பு, இந்த இடப்பெயர்ச்சி குறித்து விசாரித்தபொழுது, அந்த "இந்து'க்கள் ""போலீசின் அச்சுறுத்தல், நிர்பந்தத்தினால் தான் தாங்கள் வீரா நகருக்கு இடம் பெயர்ந்திருப்பதாக''த் தெரிவித்தனர். ஆனால், பத்திரிகைகளும், தொலைக்காட்சி நிறுவனங்களும் இந்த உண்மையை மூடி மறைத்து விட்டு, ""இடம் பெயர்ந்த இந்துக்களை அடிக்கடி காட்டி'' ஆர்.எஸ்.எஸ்.இன் சமூக விரோதக் கலவரத்திற்குத் தூபம் போட்டன.


இந்து மதவெறிக் கும்பல் கடையடைப்புப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்த மறுநிமிடமே, பஜ்ரங் தள்ஐச் சேர்ந்த 100 குண்டர்கள், கூதினாபாலி என்ற இடத்தில் மூடப்பட்டிருந்த 11 முசுலீம் கடைகளின் கதவுகளை உடைத்துக் கொண்டு உள்ளே புகுந்து அக்கடைகளைச் சூறையாடினர். கூதினாபாலி போலீசு நிலையத்தில் இருந்து 100 மீட்டர் தொலைவில் பட்டப்பகலில் பலர் கண் முன்னால் இந்தக் கொள்ளை நடந்த போதிலும் போலீசார் இதனைத் தடுத்து நிறுத்த முயலவில்லை.


மாறாக, அக்.13 அன்று கூதினாபாலியில் உள்ள ""பி.சி.சாலை பேருந்து நிலையம்'' அருகே ஒரு குண்டு வெடித்தவுடன், அன்று மாலையே முசுலீம் குடியிருப்புக்குள் புகுந்து, பெண்கள், குழந்தைகளைக் கூட விட்டு வைக்காமல் தாக்கியதோடு, பீடி சுற்றி பிழைக்கும் 20 முசுலீம் தொழிலாளர்களைக் கைது செய்தனர்.


கூதினாபாலியில் பஜ்ரங்தள் நடத்திய பகற்கொள்ளையை மதக் கலவரமாகப் பூசி மெழுகி எழுதிய பத்திரிகைகள், அங்கு நடந்த குண்டு வெடிப்பை ""முசுலீம் தீவிரவாதம்'' எனப் பீதியூட்டி எழுதின.


ஆர்.எஸ்.எஸ். நடத்திய இந்தக் கலவரத்தில், அதற்குத் துணையாக போலீசார் நடந்து கொண்டு, முசுலீம்களைத் தாக்கியதை வெறும் மனித உரிமை மீறல் பிரச்சினையாகச் சுருக்கிப் பார்க்க முடியாது. ஆர்.எஸ்.எஸ்.இன் முசுலீம் எதிர்ப்பு இந்து மதவெறி பாசிச அரசியல், போலீசு துறை முழுவதும் வேரோடி போயிருப்பதைத்தான் இது எடுத்துக் காட்டுகிறது. 1992இல் நடந்த மும்பய் கலவரத்திலும்; 2002இல் நடந்த குஜராத் இனப்படுகொலையிலும்; 1987இல் நடந்த மீரட் கலவரத்திலும் இந்த உண்மை ஏற்கெனவே அம்பலமாகியிருக்கிறது. இராணுவம், நீதித்துறை, போலீசுத் துறை என அரசின் முக்கிய உறுப்புகள் அனைத்தும் காவிமயமாகி வரும் வேளையில், இந்திய அரசை மதச்சார்பற்ற அரசாகக் கருத வாய்ப்பே இல்லை. ஆர்.எஸ்.எஸ்.இன் இந்து மதவெறி அரசியலை நடைமுறைப்படுத்த, அக்கட்சிதான் ஆட்சியில் இருக்கவேண்டும் என்ற கட்டாயமும் இல்லை!


·கவி


Monday, March 12, 2007

ஆங்கிலேய காலனியாதிக்கம் தந்த அவமானச் சின்னம்

சென்னை மாநகர போலீசு

ஆங்கிலேய காலனியாதிக்கம் தந்த அவமானச் சின்னம்


சென்னை போலீசு துறை ஆரம்பிக்கப்பட்டு 150ஆவது ஆண்டு நிறைவடைவதை ஒட்டி ஜனவரி 5ஆம் நாளன்று சென்னையில் கோலாகலமான விழாவைத் தமிழக அரசு கொண்டாடியது. அரசுத் தலைவர் அப்துல் கலாம் நேரில் வந்திருந்து சிறப்பித்து, போலீசாரை ஒன்பது உறுதிமொழிகள் ஏற்க வைத்தார். சாகச நிகழ்ச்சிகள், கண்காட்சி மற்றும் போலீசுக்கு பதக்கங்கள், புது வீடுகள் என மக்கள் வரிப்பணத்தில் மஞ்சள் குளித்தது போலீசு. இக்கொண்டாட்டங்களுக்கெல்லாம் தகுதியானதுதானா தமிழக போலீசுதுறை?சென்னை போலீசு துறையின் வரலாறே, அன்னிய ஆட்சிக்கு எடுபிடி வேலை செய்வதில் இருந்து தொடங்குகிறது. 150 ஆண்டுகளுக்கு முன்னர் கிழக்கிந்திய கம்பெனி, சென்னப் பட்டணக் கோட்டையின் பின்புறம் ஒரு மார்க்கெட்டை நடத்தி வந்தது. அம்மார்க்கெட்டைக் கண்காணிக்க உருவாக்கப்பட்ட "போலீசு' எனும் அமைப்பே பின்னாளில் ஆங்கிலேய அதிகாரிகளின் தலைமையில் "சென்னை போலீசு துறை'யாகப் பரிணமித்தது. காலனி ஆட்சியாளர்களின் நலனைக் காக்கவும், விடுதலைக்காகக் குரல் எழுப்பிய சொந்த நாட்டு மக்களின் குரல்வளையை நெறிக்கவும் பாசிச முறையில் பயிற்றுவிக்கப்பட்ட அத்துறை இன்னமும் காலனியத்தின் நீட்சியாகவே திகழ்கின்றது.சொந்த நாட்டு மக்களைச் சந்தேக வட்டத்துக்குள்ளே வைத்திருக்கவும், அவர்களைத் தேவைப்படும்போது ஒடுக்கி வதைக்கவும் தயாரிக்கப்பட்ட இப்பாசிசப் படை, 1947க்குப் பிறகும், மாற்றம் ஏதுமின்றி ஆட்சியாளர்களால் மேலும் கொம்பு சீவி விடப்பட்டு, நம் நாட்டு மக்களின் வெறுக்கத்தக்க எதிரியாகவே இன்றும் திகழ்கிறது. ஆட்சியாளர்களின் அநீதிக்கு எதிராக மக்கள் திரளும்போதெல்லாம், அரசின் உறுப்பான இராணுவத்துக்கு நிகராய் போலீசும், போராடும் மக்களை மிருகத்தனமாகச் சித்திரவதை செய்து ஒடுக்குகிறது. போலி மோதல்கள் மூலம் கம்யூனிசப் புரட்சியாளர்களையும், தேசிய இனங்களின் விடுதலைக்காகப் போராடுபவர்களையும் கொன்றொழிப்பதில் முன்னிலையில் இருக்கின்றது.அரசு பணத்திலிருந்து இவர்களுக்குத் தீனி போடவென்றே மது விலக்குப் பிரிவு, கியூ பிரிவு, வரதட்சணைக் கொடுமைப் பிரிவு, தீண்டாமை ஒழிப்புப் பிரிவு, திருட்டு விசிடி பிரிவு என ஆயிரத்தெட்டு பிரிவுகளாகப் பிரித்து, நூற்றுக்கணக்கான பதவிகளை ஏற்படுத்தியும், மேலும் பலருக்குப் பதவி தருவதற்கென்றே மாவட்டங்களைப் பல துண்டுகளாகப் பிரித்தும், ஆட்சியாளர்கள் இந்த மிருகத்தை செல்லப் பிள்ளையாக வளர்த்து விடுகின்றனர்.இவ்வாறு வளர்க்கப்பட்ட மிருகம், அவசரநிலை பாசிச ஆட்சிக் காலத்தில் தனது முழு அதிகாரத்தை மக்கள் மீது ஏவி வெறியாட்டம் போட்டது. ஓட்டுக் கட்சித் தலைவர்களும் இதில் இருந்து தப்ப இயலவில்லை. நெருக்கடி நிலைக்குப் பின்னர் ஆட்சிக்கு வந்த பாசிச எம்.ஜி.ஆரோ, தேவாரம் போன்ற கொலைகார போலீசு கும்பலுக்கு அளவு கடந்த அதிகாரமும், சுதந்திரமும் தந்து, வேலைநிறுத்தம் செய்யும் தொழிலாளர்களைத் துப்பாக்கிச் சூட்டில் கொல்வது, நக்சல்பாரி இயக்கத்தின் ஆதரவாளர்களைக் கூட விட்டு வைக்காமல் கடத்திச் சென்று கொல்வது போன்ற ஜனநாயக விரோத நடவடிக்கைகளை நிரந்தரமாக்கினார்.அதன் பின்னர் மாறி மாறி ஆட்சிக்கு வந்த கருணாநிதியும், ஜெ.வும் போலீசுக்கு போட்டிப் போட்டுக் கொண்டு எண்ணற்ற சலுகைகளை வாரி வழங்கியும், அவர்கள் மேலும் சம்பாதித்துக் கொள்வதற்கு என்றே கந்துவட்டித் தடை சட்டம் போன்ற புதுப்புதுச் சட்டங்களையும் உருவாக்கித் தருகின்றனர்.நாளடைவில், சமூக விரோதச் செயல்களைச் செய்ய, தனியாகக் கும்பல் ஒன்று இயங்கி வந்த நிலைமை மாறிப் போய், போலீசே அதன் பாத்திரத்தை ஏற்பதுதான் அதிகரித்துள்ளது. தணிக்கைக்கு உட்படாத பெருந்தொகையைக் கொண்டு பொதுமக்களிடையே ஆட்காட்டிகளை உருவாக்குவதும், இருவேறு ரவுடிகளிடையே உள்ள பகையை வளர்த்து விடுவதும், அவர்களில் ஒரு பிரிவை தனக்கும், ஆட்சியாளர்களுக்கும் பயன்படுத்திக் கொண்டு, தேவை நிறைவேறியதும் "போலி மோதல்' மூலம் ஆளைத் தீர்த்துக் கட்டுவது என்பதுமாக நவீன கிரிமினலாக தமிழகப் போலீசு சீரழிந்துள்ளது.150ஆவது ஆண்டு விழாவின்போது அப்துல்கலாம், ""பொது மக்களின் நண்பனாக இருப்பேன்'' என உறுதிமொழி ஏற்கச் சொன்ன அதே போலீசுதான், "வீரப்பனைத் தேடுகிறோம்' என்ற பேரால் மலைவாழ் மக்களில் நூற்றுக்கணக்கானோரைச் சித்திரவதை செய்து பலரை ஊனமாக்கியது. பலரைக் கொன்று எரித்துத் தடயமே இல்லாமல் சாம்பலாக்கியது. பல பெண்களை வன்புணர்ச்சிக்குள்ளாக்கியது. அதன் வக்கிரம் உச்சத்துக்குப் போய், பெற்ற தாயையும், மகனையும் அம்மணமாக்கி, அவர்களைப் பலர் முன்னால் உறவு கொள்ளச் செய்து ரசித்தது.அந்தியூர் விஜயா, அண்ணாமலை நகர் பத்மினி என நூற்றுக்கணக்கான அபலைப் பெண்களைக் கொடூர முறையில் வன்புணர்ச்சி செய்து வக்கிர விளையாட்டு ஆடிய போலீசு துறையிடம் போய் ""பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தடுக்கப்பட வேண்டும்'' என்று உரையாற்றுகிறார் அரசவைக் கோமாளி கலாம்.ஷேர் ஆட்டோ ஓட்டுநர்கள், கால் சென்டரில் பணிபுரியும் பெண்ணைக் கடத்திப் பாலியல் வன்முறை செய்ய முயல்வதாகவும் அவ்வோட்டுநர்களை "என்கவுண்டர்' செய்து கொன்று, பெண்ணின் கற்பைக் காப்பாற்றுவதாகச் சித்தரித்து, உழைக்கும் ஆட்டோ தொழிலாளரை இழிவுபடுத்திடும் வகையில் ""காவலர் உங்கள் சேவகர்'' என்ற சினிமாவைத் தயாரித்த போலீசுதான், சமீபகாலமாக ""கள்ளத் தொடர்பு காரணமாக, மதுரை இன்ஸ்பெக்டர் மனைவியிடம் விளக்குமாத்துப் பூசை வாங்கிய பெண் எஸ்.ஐ.', "ஜெயலட்சுமியுடன் குடும்பம் நடத்திய டஜன் கணக்கான போலீசார்'' என வணிகப் பத்திரிகைகளிலேயே தலைப்புச் செய்தியாகிப் பல்லை இளித்து நிற்கிறது."மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக' இருக்கவும், "லஞ்ச லாவண்யம் இல்லாமல்' செயல்படவும் போலீசிடம் வேண்டுகோள் வைத்த அப்துல்கலாமுக்கு, ஆதம்பாக்கத்தில் பொதுஜனம் ஒருவரிடம் 1000 ரூபாய் பறிக்க ஒரு போலீசு முயன்றபோது, அங்கே வந்த மற்றொரு போலீசு "என் ஏரியாவில் வந்து எப்படி வாங்கலாம்' என்று பணத்தைப் பங்கிடப் போய், நடுரோட்டில் கட்டிப் புரண்டு சண்டை போட்டதும், எழும்பூர் அல்சாமாலில் நிறுவன அதிபர் ஒருவரிடம் லஞ்சம் வாங்க முயன்ற போலீசு இன்ஸ்பெக்டர், லஞ்ச ஒழிப்புப் போலீசாரிடமிருந்து தப்பித்துத் தெருவில் ஓடியதும் தெரிந்திருக்குமா?

கோவை நகைக்கடை ஊழியர்களிடம் தங்கக் கட்டியைக் கொள்ளையிட்ட சென்னை போலீசு, சென்னைக்கு வந்து நகைகளைக் கொள்ளையிட்ட மதுரை போலீசு, பெசண்ட்நகர் கடற்கரையில் நாலாயிரம் ரூபாயை வழிப்பறி செய்த சென்னை போலீசு, ஓடும் பேருந்தில் பெண்ணைக் கேலி செய்து பொதுமக்களிடம் தர்மஅடி வாங்கிய சென்னை போலீசு, குற்றாலத்தில் குடிபோதையுடன் வெறும் ஜட்டியுடன் குளிக்க முயன்று தகராறு செய்த நெல்லை போலீசு, பொதுமக்களின் புகார்களை ஏற்க மறுத்து சென்னை உயர்நீதி மன்றத்தின் கண்டனத்திற்கு ஆளாகியுள்ள போலீசு, வடசென்னையிலுள்ள கழிப்பறைகளை பினாமிகளை வைத்து கைப்பற்றி, ரௌடிகளைக் கொண்டு அடாவடி கட்டணக் கொள்ளையடிக்கும் போலீசு எனப் பல அவதாரங்களை எடுத்து வருகிறது தமிழ்நாடு போலீசு. இவர்களின் கேடுகெட்ட இத்தகைய செயல்களை முழுமையாகச் சொல்ல வேண்டுமானால், இதற்கென்றே தனியாக சிறப்பு மலர்தான் வெளியிட வேண்டும்.

பாசிச முறையில் பயிற்றுவிக்கப்பட்ட தமிழகப் போலீசு மிருகம் 1995இல் கொடியங்குளத்தில், தலித் மக்களின் உடைமைகளைச் சூறையாடியும், குழந்தைகள், வயோதிகர்களை வன்மமாய்த் தாக்கியும், அவர்களின் குடிநீர்க் கிணற்றில் மலத்தைப் போட்டு நிரப்பியும் தனது கோரமான சாதிவெறியைக் காட்டியது. நியாயமான கோரிக்கைகளுக்காகப் போராடிய மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் 17 பேரை, 1999இல் ஜாலியன்வாலாபாக் படுகொலைக்கு இணையாக ஆதிக்க சாதிவெறியுடன் தாக்கிக் கொன்று தாமிரபரணி ஆற்றில் வீசி எறிந்தது. குண்டுபட்டி கிராம மக்கள் தேர்தலைப் புறக்கணித்தபோது அந்த ஊரையே தாக்கிச் சூறையாடியது.கோயம்புத்தூரில் 1997 நவம்பரில் இந்து முன்னணிக் குண்டர்களுடன் கை கோர்த்துக் கொண்டு, 19 முஸ்லிம்களைக் கொன்றும், அவர்களின் உடைமைகளைக் கொளுத்தியும், தனது இந்துவெறிப் பாசிசத்தை உலகுக்குக் காட்டியது, தமிழக போலீசு. பாபர் மசூதி தகர்க்கப்பட்ட 1992ஆம் ஆண்டு தொடங்கி, முஸ்லிம்கள் பெருவாரியாய் வாழும் கோவை கோட்டைமேடு பகுதியை "அறிவிக்கப்படாத திறந்தவெளிச் சிறைக் கொட்டடி' யாக்கி தடுப்பரண்கள், சோதனைச் சாவடிகள் அமைத்து ஒட்டு மொத்த முஸ்லிம் சமூகத்தையும் தினமும் வாட்டி வதைத்து வருகிறது.அன்னிய செலாவணி மீது கட்டுப்பாடுகள் பல விதித்து வந்த காபிபோசா, ஃபெரா போன்ற சட்டங்கள், உலகமயப் பொருளாதார கொள்கைக்கு ஏற்ற வண்ணம், 1990க்குப் பின்வந்த ஆட்சியாளர்களால் திருத்தப்பட்டன. சில சட்டங்கள் விட்டொழிக்கப்பட்டன. தனியார்மய, தாராளமய நோக்கங்களுக்கேற்றவாறு தொழிலாளர் நலச் சட்டங்கள் திருத்தப்பட்டன. ஆனால் 150 ஆண்டுகளாக ஒரே மாதிரியான வேலையைச் செய்து வரும் போலீசுக்கு என்று போலீசு சட்டங்களில் எந்தவிதத் திருத்தமும் அரசுக்கு தேவையாய் இருக்கவில்லை.அன்னியன் அஞ்சி நடுங்கிடக் கப்பல் விட்ட சிதம்பரனாரை "ராஜதுரோகி'யாகப் பார்த்த போலீசு துறைதான், இன்று அந்நிய "கோக்'கை எதிர்த்திடும் தேசபக்தர்களையும் தேசத்துரோகிகளாகப் பார்க்கிறது. "கோக்'கிற்கு எதிராகப் போராடுபவர்களை "பயங்கரவாதிகள்' என மக்களிடம் போலீசே பிரச்சாரம் செய்கிறது.பிரிட்டிஷாரை எதிர்த்துக் கூடிய ஆயிரக்கணக்கானோரை ஜாலியன் வாலாபாக்கில் சுட்டு வீழ்த்திய பிரிட்டிஷ் இந்திய போலீசுக்கும், குர்கானில் ஜப்பான் நாட்டு ஹோண்டா நிறுவனத்தில் வேலை நிறுத்தம் செய்த தன் சொந்த நாட்டுத் தொழிலாளர்களின் மண்டையைப் பிளந்த இந்திய போலீசுக்கும் "ஏகாதிபத்திய நலன் காக்கும்' செயலில்தான் எவ்வளவு ஒற்றுமை!நாளை, தமிழ்நாட்டில் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் போன்ற ஏகாதிபத்திய நலன்காக்கும் திட்டங்களுக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுந்து போராடினால், அவர்களை அடித்து நொறுக்கத்தான், இன்றே தமிழக போலீசுக்கு 100 சொகுசு கார்களை ஹூண்டாய் நிறுவனம் "எலும்புத் துண்டாக'க் கொடுத்துள்ளது.வெள்ளை ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போரிட்டு, இந்திய சிப்பாய்கள் மாண்ட முதல் சுதந்திரப் போரின் 150வது ஆண்டையும் கொண்டாடுகிறது, அரசு. அதேநேரத்தில் இந்த நாட்டில் ஆங்கில ஏகாதிபத்தியம் தொடங்கி வைத்து இன்னமும் ஏகாதிபத்திய நலன் காத்து வரும் அடியாள் படையான போலீசுக்கும் 150வது ஆண்டையும் அதே அரசுதான் கொண்டாடுகிறது. இதுதான் வேற்றுமையில் ஒற்றுமைபோலும்! இதைவிட பித்தலாட்டம் எதுவும் இருக்க முடியாது; ஏகாதிபத்திய எதிர்ப்பு அரசியல் புரட்சியை முன்னெடுக்காமல், ஏகாதிபத்திய நலன் காக்கும் அடியாள் படையான தமிழகப் போலீசு எனும் வக்கிர மிருகத்தைத் தாக்கி அழிக்கவும் முடியாது.

· இரணியன்