தமிழ் அரங்கம்

Friday, November 10, 2006

சமூக ஆற்றலற்ற மலட்டுதனம் கொலைகளாகவே தீர்வாகின்றது

சமூக ஆற்றலற்ற மலட்டுதனம் கொலைகளாகவே தீர்வாகின்றது

பி.இரயாகரன்
10.11.2006

கொலைகளையே தமது அரசியல் பரிகாரமாக சிந்திக்கின்ற எமது சொந்த மன உணர்வுகள், மனிதத்தின் சகல கூறுகளையும் மலடாக்கிவிடுகின்றது. எமது சிந்தனை முறையும், வாழ்வியல் முறையும், மற்றவனின் மரணம் மூலம் தீர்க்கப்படலாம் என்று நம்புகின்றது எமது அறிவு. அப்படித்தான் அதை விளக்குகின்றது. அப்படித்தான் அதை நடைமுறைப்படுத்துகின்றது. இப்படி சிந்திக்கின்ற காட்டுமிராண்டிகளைக் கொண்ட ஒரு சந்ததிகளின் காலத்தில், நாம் உயிருடன் வாழ்கின்றோம்.


மக்கள் மேலான கூட்டுப்படுகொலைகள், தனிநபர்கள் மேலான பழிக்கு பழிவாங்கல்கள் என்று எங்கும் எல்லாத் தளத்திலும், இதுவே அரசியலாகி புளுக்கின்றது. புலிகள் முதல் அரசு வரை ஏன் கருணா தரப்பு கூட, இதற்காக சொந்த தர்க்கவாதத்தையே கொட்டித் தீர்க்கின்றனர். மனிதமோ அனுதினமும் செத்து மடிகின்றது.


ஏன் எதற்கு நாம் கொல்கின்றோம், ஏன் அதை நாம் நியாயப்படுத்துகின்றோம் என்றால், அதற்கு எந்த சுயவிளக்கமும் கிடையாது. துரோகி தியாகி, பயங்கரவாதி என்று பல பட்டங்களை மொட்டையாக சூட்டி, கொலைகள் மூலம் தீர்வு காணும் மலட்டு அரசியலே எம் மண்ணில் வக்கரித்து கிடக்கின்றது. காட்டுமிராண்டிகளின் கொலைவெறி தேசத்தில், இதுவே மனிதப் பண்பாகி, அதுவே ஒழுக்கமாகி, அதுவே வாழ்வாகிவிட்டது.


கொலைகளுக்கு எதிரான மனித உணர்வுகளைக் கூட, நேர்மையாக வெளிப்படுத்துவது கிடையாது. ஒன்றை மட்டும் சார்பு நிலையில் கண்டிப்பது, மற்றையதை நியாயப்படுத்துவது, இதுவே இன்றைய அறிவுத்துறையின் ஒழுக்கமாகிவிட்டது. சமுதாயத்தில் புரையோடிக் கிடக்கும் இந்த வக்கிரம் ஆதிக்கம் பெற்ற கருத்தாகிவிட்டது. இதையே பத்திரிகைத் துறையும், ஒளி ஒலி ஊடகமும், ஏன் எழுத்து துறையும் கூட ஆக்கிரமித்துள்ளது. நெருப்பு கொம், நிதர்சனம் கொம் முதல், அந்த அரசியல் பின்னணி இசையில் பிழைக்கும் ஓட்டுண்ணி இணையங்கள் அனைத்தும் இந்த அரசியல் ஆபாசத்தில் தான் பூத்துக் குலுங்குகின்றது.


இதையேதான் பேரினவாத அரசும் செய்கின்றது. வாகரை தாக்குதல் பற்றி அரசின் உத்தியோகப+ர்வ தகவல் அப்பட்டமான பொய்களை அடிப்படையாக கொண்டது. ராடார் மூலமும், உளவுத் தகவல் மூலமும் புலிகள் தாக்கும் நிலையைக் கண்டறிந்து, ஓன்றுக்கு இரண்டு முறை பரிசோதித்த பின் தாக்கியதாக கூறுவது அப்பட்டமான ஆபாசமான பொய்யாகும். ஒன்றுக்கு இரண்டுமுறை சரிபார்த்த தகவலில், உளவுத் தகவல் அங்கே மக்கள் அகதியாக கூடி வாழ்கின்றனர் என்று கூறவில்லையோ? யாரை ஏமாற்றுகின்றீர்கள்.


இது எந்த விதத்திலும் புலிகள் மக்கள் மத்தியில் இருந்து தாக்கமாட்டார்கள் என்று அர்த்தமாகாது. புலிகள் மக்கள் மத்தியில் இருந்து திட்டமிட்டு தாக்குபவர்கள் தான். மலிவான பிரச்சாரத்துக்கும், இலகுவாக மனித உணர்வுகளை விலைபேசி பணம் திரட்டுவதற்கும் இது போன்ற கொலைகள் உதவுவதால், அதைத் திட்டமிட்டு தூண்டக் கூடியவர்கள் தான் புலிகள். கொலைகள் அனைத்தையும் ஆபாசமான பொய்கள் மூலம் நியாயப்படுத்துவது அல்லது மூடிமறைப்பது பொதுவாக அனைத்து தரப்பிலும் அரங்கேறுகின்றது. இப்படி தான் அரசு என்றால், புலிகள் முதல் கருணா தரப்புவரை பொய்களாலும் புரட்டுகளாலும் கொலைகளை நியாயப்படுத்தி, வக்கிரப்படுத்தி, அதை விளம்பரம் செய்து தமக்கு உரமாக்குகின்றனர்.


மக்கள் மீதும், அரசியலில் ஈடுபடுபவர்கள் மீதுமான படுகொலைகள் கொடுக்கும் விளைவு மிகப்பெரிய மனித அவலத்தையே விதைக்கின்றது. விதைவைகள் கொண்ட ஒரு தேசம் உருவாக்கப்படுகின்றது. ஆணாதிக்க அமைப்பில் பெண்கள் தான் நசிந்தவர்கள், நலிந்தவர்கள். ஒவ்வொரு கொலையும் பெண்ணின் வாழ்வையே நாசமாக்கி அவளையே அழிக்கின்றது. இந்தப் பெண்களின் வயிற்றில் பிறந்த குழந்தைகளின் எதிர்காலமோ சூனியமாகின்றது. எமது தமிழ் இனம் எந்தளவுக்கு சீரழிய முடியுமோ, அந்தளவுக்கு கொலைகாரர்களால் சீரழிகப்படுகின்றது. இதைச் செய்பவர்கள், அதை நியாயப்படுத்துபவர்கள், தாம் தான் தமிழ் மக்களின் பாதுகாவலர் என்று தம்மைத் தாம் பீற்றிக்கொள்கின்றனர். அதற்காகவே கொல்கின்றனராம்.


அரசை ஆதரிப்போரும், புலிகளை ஆதரிப்போரும் விதிவிலக்கின்றி கொலைகளை ஆதரித்து ஆபாசமாக கூச்சலிட்டு கூத்தடிக்கின்றனர். ரவிராஜ் ஆக இருக்கலாம், கேதிஸ் ஆக இருக்கலாம் அல்லது வாகரை படுகொலை முதல் கெப்பிற்றிக்கல படுகொலை எல்லாமே காட்டுமிராண்டித்தனத்தையே தெளிவாக பறைசாற்றுகின்றது. கொலையை புலிகள் செய்தது, அரசு செய்தது, கருணா செய்தது என்று பிரித்து பார்த்து கண்டிப்பது, அதை ஆதரிப்பது என்பதற்கு எந்த அரசியல் தர்க்க நியாயவாதமும் கிடையாது.


அரசியல் ரீதியாக முரண்பட்டவர்கள், மாற்று அரசியலைக் கொண்டவர்கள், அவர்கள் யாராக இருந்தாலும், அவர்களை அரசியல் ரீதியாக அணுக மறுக்கின்றனர். இது கொலை செய்கின்ற அலுக்கோசுகளின் நிலையல்ல. மாறாக அரசியல் பேசும் இவர்கள் தமக்கு இடையில் கூட, அடாவடித்தன பேர்வழிகளாக ரவுடிகளாக, கொலையை தூண்டுபவர்களாக, அதற்கு துணை செய்பவர்களாக, அதை நியாயப்படுத்துபவராகவே உள்ளனர்.


பழிக்குப் பழி என்ற குறுகிய குதர்க்க அரசியல் மூலம், சமூகத்தை இழிவாக இழிவாடி இவர்கள் வழிநடத்துகின்றனர். கொலைகள் மூலம், இதுதான் சமூகத்தின் தீர்வு என்று பறைசாற்ற முனைவதை நாம் ஒருநாளும் மன்னிக்கவே முடியாது.


இது போன்ற தொடர் கொலைகளை கடமைக்கு கண்டிப்பது, பிழைப்புக்கு இதை பயன்படுத்த புலம்புவது, சுயநலத்துக்கு பயன்படுத்துவது, குறுகிய அரசியல் வக்கிரத்தை கொட்டித் தீர்க்க விபச்சாரம் செய்து, எல்லாம் எம் மத்தியில் இரத்தமும் சதையுமாகவே அரங்கேறுகின்றது. கொலைகளை சார்புத் தன்மையில் விபச்சாரம் செய்து ஆதரிப்பது, எதிர்ப்பது என்ற அரசியல் விபச்சாரம் மிக கீழ்நிலைப் பாத்திரத்தை வகிக்கின்றது.


கொலைகளை உணர்வுபூர்வமாக மனித உள்ளடகத்தில் எதிர்கொண்டு, எதிர்த்துப் போராடும் அரசியல் வளமே எம்முன் அவசியமானது. மக்களை சிந்திக்கவும், மனிதத் தன்மையை கற்றுக் கொள்ளும் வழியில் நாம் போராட வேண்டியுள்ளது. மனிதனை மனிதனாக நேசிக்க கற்றுக்கொள்வதைத் தவிர வேறு எதுவும் இதற்கு மாற்றுத் தீர்வாகாது.


துப்பாக்கியும் கையுமாக மட்டுமின்றி கழுத்தை வெட்டிச் முண்டத்தை எடுத்துச் செல்லும் வெறிகொண்ட ஒரு கொலைகாரக் கூட்டம், நன்கு பயிற்றப்பட்டு கொலைக்களத்தில் அலுக்கோசுகளாக இறக்கிவிடப்பட்டுள்ளனர். அன்றாடம் அதிர்ச்சியூட்டும் கொலைகள், விதவிதமான கொலைகள் எல்லாம் எமது தமிழினத்தின் விடுதலையின் பெயரில் நடக்கின்றது. இந்தக் கொலைவெறி பிடித்த அலுக்கோசுகள் தான், தமிழ் சமூகத்தின பாதுகாவலராம். ஆளாளுக்கு நியாயம் தர்க்கம். இதுவே எமது தேசிய வரலாறு முழுக்க வக்கிரமடைந்து கிடக்கின்றது. மனித மூளைகளை மலடாக்கி, அவர்களை கழுவிலேற்றுகின்ற இந்த அலுக்கோசுகளின் உலகத்தில், மனித சிந்தனையை துளிர்விட வைப்பதன் மூலம் தான், நாம் மனிதனாக மீண்டும் மீள முடியும். இதன் மூலம் தான் நாம் மனிதனாக இருக்க கற்றுக்கொள்ள முடியும். இரத்தமும் சதையுமாகிப் போன எமது சமுதாயத்தில், இதைவிட இதற்கு மாற்று எதுவும் கிடையாது. இது மட்டும் தான் மனிதனைச் சார்ந்ததும், நடைமுறையில் செயல்பூர்வமானதுமாகும்.

Thursday, November 9, 2006

விவசாயிகளை வேட்டையாடும் புதிய கத்துவட்டிக் கும்பல்

சுய உதவிக் குழுக்கள் :
விவசாயிகளை வேட்டையாடும் புதிய கத்துவட்டிக் கும்பல்


காராஷ்டிரா மாநிலத்தின் விதர்பா பிராந்தியத்தில் கடன்சுமை தாளாமல் பருத்தி விவசாயிகள் அன்றாடம் தற்கொலை செய்து கொண்டு வரும் கொடுமை தொடரும் அதேவேளையில், அண்மைக்காலமாக ஆந்திராவிலும் இதேபோல கடன்சுமை தாளாமல் விவசாயிகள் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்டு மாண்டு வருகிறார்கள். கடந்த 3 மாதங்களில் மட்டும் குண்டூர், பிரகாசம், கிருஷ்ணா, கிழக்கு கோதாவரி மாவட்டங்களில் 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் கடன் சுமையாலும் அநியாய வட்டிக் கொடுமையாலும் மாண்டு போயுள்ளார்கள். இது இன்னும் பல மாவட்டங்களுக்குப் பரவுமோ என்ற மரணபயம் ஆந்திரத்தைப் பிடித்தாட்டுகிறது.


தாராளமயத்தால் வாழ்விழந்த விதர்பா விவசாயிகள் கந்து வட்டிக்காரர்களிடம் கடன் வாங்கி வட்டிக் கொடுமை தாளாமல் தற்கொலை செய்து கொள்கிறார்கள். ஆந்திர விவசாயிகளோ, சுயஉதவிக் குழுக்கள் மூலம் நுண்கடன் நிறுவனங்களிடம் கடன் வாங்கி வட்டிக் கொடுமை தாளாமல் தற்கொலை செய்து கொண்டு வருகிறார்கள். விதர்பாவில் கந்து வட்டிக்காரர்களின் கொள்ளை. ஆந்திராவில் தன்னார்வத் "தொண்டு' நிறுவனங்களின் கொள்ளை. பலியாவதோ ஏழைநடுத்தர விவசாயிகள்!


இந்தியாவிலுள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட நுண்நிதி நிறுவனங்களில் ஆகப் பெரும்பாலானவை தன்னார்வக் குழுக்களால் (NGOs) நடத்தப்படுகின்றன. பாதுகாப்புத் தொகையாக கணிசமான சேமிப்பைக் கொண்டுள்ள சுயஉதவிக் குழுக்களைக் கண்டறிந்து, அக்குழுக்களுக்கு வங்கிகளிலிருந்து இத்தன்னார்வக் குழுக்கள் கடன் வாங்கித் தருகின்றன. வங்கிகளுக்கும் சுயஉதவிக் குழுக்களுக்கும் இடையிலான கொடுக்கல் வாங்கல் விவகாரங்களை ஒருங்கிணைத்து முறைப்படுத்தும் கங்காணி வேலையையும் இத்தன்னார்வக் குழுக்கள் செய்கின்றன.


சுய உதவிக் குழுக்களுக்கு வங்கிகள் மூலம் கிடைக்கும் கடனுதவியை நுண்கடன் என்றழைக்கின்றனர். இக்கடனை வைத்து ஊறுகாய், அப்பளம், மசாலா பொடி, சோப்பு, கைவினைப் பொருட்கள், வீட்டு உள் அலங்கார பொருட்கள், ஊதுபத்தி, கவரிங் நகைகள் முதலான தொழில்களில் சுய உதவிக் குழுக்கள் முதலீடு செய்கின்றன. இத்தகைய தொழில்களே நுண்தொழில்கள் எனப்படுகிறது. இதுதவிர மலர்ப்பண்ணை, மூலிகைப் பண்ணை, கால்நடை வளர்ப்பு முதலான சற்று விரிவான அளவிலும் இக்கடன்கள் சுய உதவிக் குழுக்களால் முதலீடு செய்யப்படுகின்றன.


""போண்டியாகிப் போன விவசாயிகள், சமூகத்தின் விளிம்பு நிலையிலுள்ள ஏழைஎளிய மக்கள், அதிலும் குறிப்பாக பெண்கள் இத்தகைய நுண்கடன் நுண்தொழில் மூலம் கணிசமாக சம்பாதிக்க முடியும்; சொந்தக் காலில் நிற்க முடியும். வறுமையை விரட்ட முடியும்; எழுத்தறிவின்மை, பெண்ணடிமை, சாதிய ஒடுக்குமுறை முதலான சமூக பொருளாதாரப் பிரச்சினைகளிலிருந்து விடுபட முடியும். தன்னம்பிக்கை, தொழில் முனைப்பு, கூட்டுறவு, நிர்வாகத் திறன் முதலானவை ஒடுக்கப்பட்ட மக்களிடம் வளரும்'' என்றெல்லாம் சர்வரோக நிவாரணியாக இந்த நுண்கடன் நுண்தொழிலை ஆட்சியாளர்களும் தன்னார்வக் குழுக்களும் தொடர்ந்து பிரச்சாரம் செய்தன. ஐ.நா. மன்றத்தின் ஆலோசனைப்படி 2005ஆம் ஆண்டை நுண்கடன் ஆண்டாக அறிவித்து நாடெங்கும் பல கருத்தரங்குகளும் விழாக்களும் கொண்டாடப்பட்டன. கடந்த 2005ஆம் ஆண்டில் நுண்கடன் திட்டத்துக்காக நிதியமைச்சரால் வளர்ச்சி நிதியும் சிறப்புக் கமிட்டிகளும் அமைக்கப்பட்டன.


அத்தனையும் மிகப் பெரிய மோசடி, ஏழை விவசாயிகளைக் கொள்ளையிடுவதற்கான இன்னுமொரு ஏகாதிபத்திய சதி என்பதை ஆந்திர விவசாயிகளின் சாவுகள் மீண்டும் நிரூபித்துக் காட்டி விட்டன. சுயஉதவிக் குழுக்களில் உறுப்பினராகச் சேர்ந்து நுண்கடன் பெற்ற விவசாயிகள், அநியாய வட்டியால் அவதிப்பட்டு, அவமானப்பட்டு, விரக்தியுற்று தற்கொலை செய்து கொண்டுள்ளார்கள். நுண்கடன் மூலம் வறுமையிலிருந்து விடுபடலாம் என்ற தன்னார்வக் குழுக்களின் வஞ்சக வார்த்தைகளை நம்பி ஏமாந்த விவசாயிகள், மேலும் வறுமைக்கும் கடன்சுமைக்கும் தள்ளப்பட்டு வாழ்விழந்து நிற்கிறார்கள்.


தன்னார்வக் குழுக்களின் நுண்நிதி நிறுவனங்களுக்கு வங்கிகள் 8.5 முதல் 15 சதவீத வட்டிக்குக் கடன் கொடுக்கின்றன. நுண்நிதி நிறுவனங்களோ இக்கடனை வாங்கி 20 முதல் 36 சதவீத வட்டிக்கு சுயஉதவிக் குழுக்களுக்குக் கொடுக்கின்றன. சுயஉதவிக் குழுக்களோ, மேலும் கணிசமான வட்டி வைத்து தமது குழு உறுப்பினர்களுக்குக் கடனாகக் கொடுக்கின்றன. வங்கிகளிடமிருந்து புதிய கடன் வாங்க வேண்டுமானால், வாங்கிய கடனை இச்சுய உதவிக் குழுக்கள் முறையாக வட்டியுடன் திருப்பி அடைக்க வேண்டும். இதனால் கடன் வாங்கிய உறுப்பினர்களைக் கண்காணிப்பதும், கடன் தவணையை வட்டியுடன் முறையாகச் செலுத்த நிர்பந்திப்பதுமாக சுயஉதவிக் குழுக்கள் மாறி விட்டன. கடனை அடைக்கத் தவறிய உறுப்பினர்களின் வீட்டிலுள்ள பொருட்களை ஜப்தி செய்யும் கொள்ளையர்களாக தன்னார்வக் குழுக்கள் வளர்ந்து விட்டன.


இத்தன்னார்வக் குழுக்கள், சுயஉதவிக் குழுக்கள் மூலம் கறாராக வட்டியை வசூலித்து முறையாகக் கடனைத் திருப்பிச் செலுத்துவதால், வங்கிகளுக்கு உத்தரவாதமான இலாபம் கிடைக்கிறது. வங்கிகள் தரும் இதர கிராமப்புற கடன்களைவிட, நுண்கடன் மூலம் கூடுதலாக இலாபமும் முறையாக கடன் திருப்பிச் செலுத்தப்படுவதும் நடப்பதால், அரசு வங்கிகள் மட்டுமின்றி பன்னாட்டு ஏகபோக வங்கிகளும் நிதிநிறுவனங்களும் கிராமப்புற ஏழைகளைக் கொள்ளையிட களத்தில் குதித்துள்ளன. 1992ல் ஊரக மற்றும் விவசாய வளர்ச்சி வங்கி ஆதரவுடன் 225 சுய உதவிக் குழுக்களுடன் தொடங்கப்பட்ட நுண்கடன் நுண்தொழில் திட்டம் இன்று பூதாகரமாக விரிவடைந்துள்ளது. ஏறத்தாழ ரூ. 50,000 கோடி அளவுக்குப் புரளும் இந்திய நுண்கடன் நுண்தொழில் எனப்படும் கந்துவட்டி தொழிலில், நூற்றுக்கணக்கான வங்கிகளும் 12 இலட்சத்துக்கும் மேற்பட்ட சுய உதவிக் குழுக்களும் ஈடுபட்டுள்ளன.


உள்ளூர் அளவில் ஆதிக்கம் செலுத்தும் கந்துவட்டிக்காரர்கள், நிலப்பிரபுக்களை போலவே, அதே தன்மையுடன் புதிய வடிவில் கிராமப்புற ஏழை மக்களைச் சுரண்டும் புதிய கொள்ளைக் கூட்டமாக வங்கிகளும், நுண்நிதி நிறுவனங்களும் தன்னார்வக் குழுக்களும் புதிய பரிணாம வளர்ச்சியை எட்டியுள்ளன. 5 வட்டிக்கும் 10 வட்டிக்கும் சுயஉதவிக் குழுக்கள் மூலம் கடன் வாங்கி, வட்டிக்கு வட்டி பெருகி அவமானத்துக்கும் சமூகப் புறக்கணிப்புக்கும் ஆளாகி அற்ப உடமைகளும் ஜப்தி செய்யப்பட்டு வாழ வழியின்றிப் போகும் விவசாயிகள், வேறு வழியின்றி தற்கொலை செய்து கொள்கிறார்கள்.

தன்னார்வக் குழுக்களை நம்பி மோசம் போன ஆந்திர விவசாயிகள், அடுத்தடுத்து நடக்கும் தற்கொலைச் சாவுகளுக்குப் பிறகு மெதுவாக விழிப்புற்று, மாண்டுபோன விவசாயிகளின் சடலங்களோடு ஊர்வலமாக வந்து ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகிறார்கள். விவசாயிகளின் கோபத்தையும் போராட்டங்களையும் கண்டு பீதியடைந்துள்ள ஆந்திர அரசு, இரு பெரும் நுண்கடன் நிறுவனங்களின் 50 கிளைகளை உடனடியாக மூடுமாறும், கடன் "சேவை'யை நிறுத்தி வைக்குமாறும் உத்தரவிட்டுள்ளது. ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி, ""நுண்கடன் நிறுவனங்கள் கந்துவட்டிக்காரர்களைவிட மிக மோசமாக நடந்து கொள்கின்றன. 5060 சதவீத வட்டி வாங்கி ஏழைகளைக் கொள்ளையடிக்கின்றன'' என்று பகிரங்கமாகவே குற்றம் சாட்டி முதலைக் கண்ணீர் வடிக்கிறார். விவசாயிகளின் தற்கொலைச் சாவுகளைப் பற்றி விசாரிக்கத் தனிச்சிறப்பான விசாரணைக் கமிஷனையும் அவர் நியமித்துள்ளார்.


ஆனால், ஏகாதிபத்தியவாதிகளால் உருவாக்கப்பட்டு சர்வகட்சி ஆட்சியாளர்களின் ஆதரவோடு நடைமுறைப்படுத்தப்படுவதுதான் நுண்கடன் திட்டம். அதற்காகவே ஆந்திராவில் பல லட்சக்கணக்கான சுயஉதவிக் குழுக்கள் உருவாக்கப்பட்டன. அரசியல் செல்வாக்கைக் கொண்டு இக்குழுக்களுக்கு நுண்கடன் வழங்கி, அவற்றை எல்லா கட்சிகளும் ஓட்டு வங்கிகளாக மாற்றிக் கொண்டு ஆதாயமடைந்தன. நுண்கடன் நிறுவனங்களின் அநியாய வட்டிக் கொள்ளையையும் சட்டவிரோத கொடுஞ்செயல்களையும் வாய்மூடி அங்கீகரித்து வந்தன. இப்போது நிலைமை விபரீதமானதும், விவசாயிகளின் காவலனாகக் காட்டிக் கொண்டு ஒப்பாரி வைக்கின்றன. இவ்வளவு சாவுகளுக்குப் பின்னரும் நுண்நிதி நிறுவனங்கள் எவ்வளவு வட்டிக்கு கடன் தரவேண்டும் என்பதற்கான வரைமுறையைக் கூட ஆட்சியாளர்கள் அறிவிக்கவில்லை. விவசாயிகளைக் கொள்ளையடித்து தற்கொலைக்குத் தள்ளிய கொலைகார தன்னார்வக் குழுக்கள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை.


ஆந்திராவுக்கு அடுத்தபடியாக, அதிகஅளவில் சுயஉதவிக் குழுக்களைக் கொண்டுள்ள மாநிலம் தமிழகம்தான். ஆந்திராவைத் தொடர்ந்து தமிழகத்தில் விவசாயிகளின் தற்கொலைச் சாவுகள் நடக்கும் முன்னே, வஞ்சக வலை விரிக்கும் தன்னார்வக் குழுக்களையும் நுண்கடன் நுண்தொழில் என்ற பெயரில் தொடரும் கந்துவட்டிக் கொள்ளையையும் உடனடியாக உழைக்கும் மக்களிடம் அம்பலப்படுத்தி முறியடிக்க வேண்டும்; புரட்சிகர ஜனநாயக சக்திகள் இன்னும் விரைவாகச் செயல்பட்டு, தமிழகம் இன்னுமொரு மயானபூமியாவதைத் தடுத்து நிறுத்த வேண்டும்.


பாலன்

Tuesday, November 7, 2006

மரணதண்டனைக்குரிய முதல் குற்றவாளியே புஸ் தான்

மரணதண்டனைக்குரிய முதல் குற்றவாளியே புஸ் தான்

பி.இரயாகரன்
06.11.2006


குற்றவாளிகளும், கிரிமினல்களும், கொள்கைக்காரர்களும் கூட்டாக கொள்ளையடிக்க நடத்திய நாடகம் தான், சதாம்குசைன் மீதான நீதி விசாரணை. அமெரிக்காவின் பாசிச கேலிக் கூத்தே, சதாமின் மீதான மரணதண்டனை. முன்கூட்டியே தண்டனை தீர்மானிக்கப்பட்டு, அமெரிக்காவின் தேர்தல் வெற்றிகளை அடிப்படையாக கொண்டு தீர்ப்புகள் வெளிவருகின்றது. ஈராக் மீதான ஆக்கிரமிப்பாளன் நடத்துகின்ற தொடர் கொலைவெறியாட்டத்தில், சதாமின் உயிரும் அடங்குகின்றது. கடந்த மூன்று வருடத்தில் இரண்டு இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்களின் மரணத்துக்கு காரணமான ஆக்கிரமிப்பாளன் அமெரிக்காவுக்கும், பிரிட்டனுக்கும் உரிய தண்டனையைத் தான், சதாமுக்கு வழங்கப்படுகின்றது. ஈராக் எண்ணை வயல்களை சூறையாடும் ஆக்கிரமிப்பாளனின் கொலைவெறியாட்டம், சதாமின் மீதாக பாய்கின்றது. அப்பட்டமான ஒரு படுகொலை தீர்ப்பாகின்றது.


கூலிக்கு மாரடிக்கும் கைக்கூலி பொம்மை நீதிமன்றங்களில், சர்வதேச நீதிக்கு புறம்பான வகையில் தான் சதாம் விசாரணை செய்யப்பட்டார். ஏகாதிபத்தியம் தான் உருவாக்கிய சர்வதேச நீதிமன்றத்தில் கூட, சதாம்குசனை விசாரி;க்க மறுத்தது. நீதிக்கு புறம்பான ஒரு சதியை நீதியாக நடத்தியது. கொலைகாரர்களும் கொள்ளைக்காரர்களும் நீதிபதியாக இருக்கவே, இந்தக் கேலிக் கூத்து அரங்கேறியது.


சதாம்குசைனை ஓரு சர்வாதிகாரியாக, மனித விரோதியாக ஈராக்கில் ஆட்சியில் ஏற்றியதே இந்த அமெரிக்கா தான். 10 இலட்சம் பேரைக் கொன்ற ஈரான் யுத்தம் முதல் அனைத்தையும் வழிநடத்தியது இந்த அமெரிக்கா தான். இரசாயன ஆயுதங்களையும், அழிவுகரமான ஆயுதங்களையும் அள்ளியள்ளி வழங்கி, கொலையெறியாட்டத்தை ஊக்குவித்து நடத்துவித்ததும் இந்த அமெரிக்கா தான். மிகப்பெரிய மனிதப்படுகொலைகளை சதாம் நடத்திய போது, அதை உலகுக்கு மூடிமறைத்து பாதுகாத்ததும் அமெரிக்கா தான்;.


குற்றவாளிகள் ஜனநாயக வேஷம் போட்டு படுகொலைகளை ஈராக்கில் நடத்துகின்றனர். ஈராக்கில் கற்பழிப்பு முதல் படுகொலைகள் வரை நடத்தும் அமெரிக்கா எந்த நீதி மன்றத்தின் முன்னாலும் நிறுத்தப்படுவதில்லை. இன்றைய பொம்மை ஆட்சி நடத்தும் கொலைகள் அனைத்தும் ஜனநாயக கொலைகளாக சித்தரிக்கப்படுகின்றது.


ஈராக்கில் அமெரிக்கா பிரிட்டிஸ் எண்ணைக் கம்பனிகள், அந்த மக்களின் தேசிய வளத்தை சூறையாட நடத்தும் பாசிச நாடகங்களே இவை. இந்த எண்ணைக் கம்பனி முதலாளிகளும், ஆயுதக் கம்பனி முதலாளிகளும் தான், அமெரிக்காவின் அதிகாரத்தில் உள்ள பெரும்பாலான அரசியல்வாதிகள். அவர்கள் தமது நலன் சார்ந்து ஈராக்கை ஆக்கிரமித்து யுத்தம் செய்கின்றனர். இதில் சதாம் மீதான விசாரணை ஒரு கேலிக் கூத்தாகின்றது.


சதாம் மீதான விசாரணை மூலம் சதாமின் குற்றங்கள் மூடிமறைக்கப்படுகின்றது. சதாம் தியாகியாகி தண்டனையில் இருந்து தப்பிச் செல்லமுடிகின்றது. சதாமின் குற்றத்தினை தூண்டி, அதற்கு துணையான பிரதான குற்றவாளிகள் தண்டனையில் இருந்து தப்பிவிடுகின்றனர். சதாமுக்கு மரணதண்டனையை வழங்கி, குற்றத்தை எண்ணி வருந்துவதற்குரிய அனைத்துச் சூழலையும் இல்லாததாக்கிவிடுகின்றனர். மக்கள் நீதிமன்றங்கள் மட்டும் தான், உண்மையான நேர்மையான விசாரணையை நடத்தி தண்டனையையும் வழங்கும். இது அல்லாத அனைத்தும் அமெரிக்காவின் எண்ணைக் கொள்ளைக்கான கேலிக் கூத்துதான்.


ஈராக்கில் என்ன நடக்கின்றது? அமெரிக்காவின் ஜனநாயகம் அங்கே எப்படி செயற்படுகின்றது. இதைத் தெரிந்து கொள்ள உள்ளே செல்லுங்கள்.


1. வியட்நாம் மைலாய்! ஈராக்கில் ஹதிதா! அமெரிக்காவில் தொடரும் போர்குற்றங்கள்


http://www.tamilcircle.net/Bamini/puthiyajananayagam/2006/july_2006/bam_july_2006_01.html


2 .வியட்நாம், ஈராக் மீதான ஆக்கிரமிப்புப் போரில் அமெரிக்கச் சதிகள்


http://www.tamilcircle.net/Bamini/puthiyakalacharam/2005/dec_2005/dec_05_2005.htm


3. அமெரிக்காவின் போர் குற்றங்கள:; அன்று வியட்நாம் இன்று ஈராக்


http://www.tamilcircle.net/Bamini/puthiyajananayagam/2005/dec_2005/Dec_17_05.htm


4.அமெரிக்கர்களின் மனசாட்சியை உலுக்கும் ஒரு தாயின் போராட்டம்!


http://www.tamilcircle.net/Bamini/puthiyajananayagam/2005/sept_2005/sept_01.htm


5. அமெரிக்கா வழங்கிய ஜனநாயகம் அல்லற்படும் ஈராக்கிய மக்கள்


http://www.tamilcircle.net/Bamini/puthiyajananayagam/2005/june_2005/puthi_13.htm


6.அபு கிரைப் சித்திரவதையின் நோக்கம்


http://tamilcircle.net/puthiyakalasaram_usa/abu_grib.htm


http://tamilcircle.net/iraq/iraq_photos.htm



































Sunday, November 5, 2006

நீதி கிடைக்குமா?

மாலேகான் குண்டு வெடிப்பு :

நிவாரணம் கிடைக்கலாம், நீதி கிடைக்குமா?


காராஷ்ரா மாநிலத்திலுள்ள மாலேகான் நகரில், செப்டம்பர் 8 அன்று அடுத்தடுத்து நடந்த நான்கு குண்டு வெடிப்புகளில் 31 பேர் கொல்லப்பட்டனர்; 200க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர். வெள்ளிக்கிழமை தொழுகை முடியும் நேரத்தில், குறிப்பாக, முசுலீம்கள் இறந்து போன தங்களின் உறவினர்களை நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்தும் நாளில், ஹமீதியா மசூதி, படா காபரிஸ்தான் (முசுலீம்களின் மயானம்) ஆகிய இடங்களில் இந்தக் குண்டு வெடிப்புகள் நடந்துள்ளதால், இதனை நன்கு திட்டமிட்டு நடத்தப்பட்ட பயங்கரவாத நடவடிக்கையாகவே கருத முடியும்.


ஏற்கெனவே, முசுலீம் பகுதி, இந்து பகுதி என மதரீதியாகப் பிளவுண்டு கிடக்கும் மாலேகான் நகரில் நடந்துள்ள இந்தக் குண்டு வெடிப்புகள், மீண்டுமொரு மதக் கலவரத்தைத் தூண்டிவிடுமோ என்ற பீதி மகாராஷ்டிரா மாநிலத்தையே ஆட்டிப் படைத்தது. அந்நகரைச் சேர்ந்த முசுலீம் மதப் பெரியோர்களின் முன்முயற்சியால் கலவரம் மூளுவது தடுக்கப்பட்டுவிட்டபோதிலும், அந்தப் பீதி மட்டும் இன்றும் அந்த நகரைவிட்டு விலகி விடவில்லை.


குண்டு வெடிப்பில் காயமடைந்தவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க முடியாத அவல நிலையில் அரசு மருத்துவமனை இருந்ததால், படுகாயமடைந்த பலரை மாலேகானில் இருந்து 55 கி.மீ. தொலைவில் உள்ள துலியா நகருக்குத் தூக்கிக் கொண்டு ஓட நேர்ந்தது. குண்டு வெடிப்பை விட, அதிகார வர்க்கத்தின் இந்த அலட்சியம்தான் மாலேகான் முசுலீம்களை ஆத்திரம் கொள்ள வைத்தது. சோனியா தலைமையில் மாலேகானுக்கு வந்த காங். கும்பல் நட்டஈட்டை வீசியெறிந்து, அவர்களின் கோபத்தைத் தணித்துவிட முயன்றது. ஆனால், பாதிக்கப்பட்ட பலரும் நட்டஈட்டை வாங்க மறுத்து, ஆட்சியாளர்களின் முகத்தில் கரியைப் பூசிவிட்டனர்.


இந்தக் குண்டு வெடிப்பு தொடர்பாக இதுவரை யாரையும் போலீசார் கைது செய்யவில்லை என்றும்; இந்தக் குண்டு வெடிப்பை யார் / எந்த அமைப்பு செய்தது என்பது பற்றி சிறிய தடயம் கூட போலீசாருக்கு கிடைக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.


அதேசமயம் முசுலீம்களைக் குறி வைத்து இந்தப் பயங்கரவாதத் தாக்குதல் நடைபெற்றிருப்பதால், இதற்குப் பின்னணியில் இந்து தீவிரவாத அமைப்புகள் இருக்கலாம் என்ற ஊகம் பொதுமக்களிடையே இருந்து வருகிறது. ஆனால், மகாராஷ்டிரா போலீசோ, ஆர்.டி.எக்ஸ். வெடிகுண்டுகளை இயக்கும் அளவிற்கு இந்துமத தீவிரவாத அமைப்புகள் திறன் பெற்றவை அல்ல என நற்சான்றிதழ் வழங்கி, அந்தத் திசையில் விசாரணை நடத்தக் கூட மறுத்து வருகிறது. ஆனால், இந்த ஊகத்தை முன்வைக்கும் பத்திரிகையாளர்கள் கூட, (தி ஹிந்து, 9.9.06,

பக். 13) நந்தேடில் நடந்த குண்டு வெடிப்பையும்; ஜல்னா, பர்பானி ஆகிய சிறு நகரங்களில் மசூதிகளைக் குறிவைத்து நடத்தப்பட்ட குண்டு வெடிப்புகளையும் ஆதாரமாகக் காட்டுகிறார்கள்.


மகாராஷ்டிராவில் நந்தேட் மாவட்டத்திலுள்ள தரோடா கிராம பஞ்சாயத்தைச் சேர்ந்த ராஜ்கோண்ட்வர் என்பவரது வீட்டில் கடந்த ஏப்ரல் 6 அன்று நடந்த குண்டு வெடிப்பில் ஹிமான்ஷû பான்ஸே, நரேஷ் ராஜ்கோண்ட்வர் என்ற இரு இளைஞர்கள் குண்டு வெடித்த இடத்திலேயே உடல் சிதறி இறந்து போனார்கள். யோகேஷ் தேஷ்பாண்டே, மாருதி வாக், குருராஜ் துப்தேவர் என்ற இரு இளைஞர்கள் படுகாயமடைந்தனர். குண்டு வெடித்த சத்தம் இரண்டு கிலோ மீட்டர் சுற்றளவிற்குக் கேட்டது.


ஆனால், நந்தேட் மாவட்ட போலீசு கண்காணிப்பாளரோ, நடந்தது குண்டு வெடிப்பு அல்ல என்றும்; அந்த வீட்டில் இருந்த பட்டாசுகள் எதிர்பாரதவிதமாக வெடித்துச் சிதறியதால் ஏற்பட்ட விபத்து என்றும் பூசி மெழுகினார். குண்டு வெடித்த மறுநாள் போலீசாரோடு பொதுமக்களும், பத்திரிகையாளர்களும், சில அரசியல் கட்சித் தலைவர்களும் ஒன்றாகச் சென்று, குண்டு வெடிப்பு நடந்த வீட்டைச் சோதனையிட்டபொழுது, ஒரு வெடிக்காத குண்டு கண்டுபிடிக்கப்பட்டது. இதன்பிறகுதான், மகாராஷ்டிரா மாநில அரசின் சிறப்பு ஐ.ஜி. அந்த வீட்டில் இருந்த இளைஞர்கள் சக்தி வாய்ந்த வெடிகுண்டு தயாரிக்க முயன்றதை ஒப்புக் கொண்டார்.


காயம் அடைந்தவர்களிடம் நடத்திய முதல்கட்ட விசாரணையில், அந்த வீட்டில் வெடிகுண்டுகள் தயாரிப்பது நீண்ட நாட்களாக நடந்து வருவதும்; பர்பானி, புர்னா, ஜல்னா ஆகிய ஊர்களில் மசூதிகளின் மீது நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலுக்குத் தொடர்பிருப்பதும் தெரிய வந்தது. மேலும், இறந்து போன இளைஞர்களும்; காயம் அடைந்தவர்களும் ஆர்.எஸ்.எஸ்., பஜ்ரங்தள், விசுவ இந்து பரிசத்தின் அமைப்புகளின் தீவிர உறுப்பினர்கள் என்பதை ஆர்.எஸ்.எஸ். தலைமையே ஒப்புக் கொண்டது.


ஆனால், மகாராஷ்டிரா போலீசோ இக்குண்டு வெடிப்பின் பின்னணியில் உள்ள இந்து பயங்கரவாதத்தை அம்பலப்படுத்தாமல், அக்குண்டு வெடிப்பை, உள்ளூர் கிரிமினல் சம்பவமாகச் சித்தரித்து மூடிவிட்டது. குறிப்பாக, இக்குண்டு வெடிப்பிற்கும், சங்கப் பரிவார அமைப்புகளுக்கும் இடையே உள்ள தொடர்பை மகாராஷ்டிரா போலீசார் விசாரணைக்கே எடுத்துக் கொள்ளவில்லை.


முசுலீம் தீவிரவாதிகள் மீது பொடாபோன்ற பாசிசச் சட்டங்களை ஏவிவிடும் ஆளுங்கும்பல், இக்குண்டுவெடிப்பில் கைது செய்யப்பட்டவர்கள் மீது சாதாரண கிரிமினல் சட்டங்களின் கீழ் தான் வழக்குத் தொடர்ந்தது. குறிப்பாக, கைது செய்யப்பட்ட இந்து பயங்கரவாதிகள் மீது, மகாராஷ்டிரா மாஃபியா நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை மகாராஷ்டிரத்தை ஆளும் காங்கிரசு கூட்டணி கண்டு கொள்ளவேயில்லை. தனது ""இந்து'' ஓட்டு வங்கியை, பா.ஜ.க. சிவசேனா கும்பல் கைப்பற்றிவிடக் கூடாது என்பதற்காகவே, காங்கிரசு கூட்டணி அரசு இந்து பயங்கரவாதிகளிடம் மென்மையாக நடந்து கொண்டது.

முசுலீம் தீவிரவாதம் குறித்து ஆய்வுக் கட்டுரைகள் எழுதிவரும் பிரவீண் சுவாமி என்ற பத்திரிகையாளர், ""நந்தேட், பர்பானி, ஜல்னா ஆகிய இடங்களில் நடந்த குண்டு வெடிப்புகளைப் பார்க்கும்பொழுது, இந்துமதத் தீவிரவாத அமைப்புகளின் குண்டு தயாரிக்கும் திறன் அதிகரித்து வருவதாகக் குறிப்பிடுகிறார். ஆனால், மகாராஷ்டிர மாநில அரசின் தீவிரவாத எதிர்ப்பு போலீசு பிரிவோ, மாலேகானைச் சேர்ந்த 20 ""இந்து'' இளைஞர்களைப் பிடித்துப் போய், ஒப்புக்காக ஒரு விசாரணை நடத்திவிட்டு, விடுவித்து விட்டது.


மும்பய் ரயில் குண்டு வெடிப்புகளுக்குப் பின்னே, இந்திய முசுலீம் மாணவர் இயக்கத்தைச் சேர்ந்த முன் னாள் ஊழியர்களைக் கூட விட்டு வைக்காமல், கைது செய்து விசாரணை நடத்திய மகாராஷ்டிரா போலீசார் மாலேகான் குண்டு வெடிப்பில், எந்தவொரு இந்துமத பயங்கரவாதியின் மீதும் கைகூட வைக்கவில்லை.

இது ஒருபுறமிருக்க, மும்பய் ரயில்களில் வெடித்த குண்டுகளும் மாலேகானில் வெடித்த குண்டுகளும் ஒரே மாதிரியானவை; எனவே, முசுலீம் தீவிரவாத அமைப்புகள் கூட, மதக் கலவரத்தைத் தூண்டிவிடும் எண்ணத்தோடு, இந்தக் குண்டு வெடிப்பை நடத்தியிருக்கக் கூடும் என்ற ஆதாரமற்ற ஊகத்தை பத்திரிகைகள் மூலம் போலீசு பரப்பி வருகிறது.


இப்படி எதிரும், புதிருமான சந்தேகங்களை, ஊகங்களை முறையாக விசாரிக்காமல் இழுத்தடித்தால், மாலேகான் நகரைச் சேர்ந்த இந்துக்களுக்கும், முசுலீம்களுக்கும் இடையே நிலவி வரும் பகையும், வெறுப்பும் அதிகரிக்கத்தான் செய்யும்; அந்நகரைப் பிடித்தாட்டும் மதக்கலவர பீதி அணைந்துவிடாமல் ஊதிவிடப்படும். ஆர்.எஸ்.எஸ். இந்து பயங்கரவாதிகள், முசுலீம் தீவிரவாதிகள் மட்டுமின்றி, "மதச்சார்பற்ற' காங்கிரசும் இந்தப் பிளவைத்தான் விரும்புகிறது.


தனபால்