தமிழ் அரங்கம்
Saturday, February 4, 2006
வக்கிரமடைந்த தலைமைத்துவம்
வக்கிரமடைந்த தலைமைத்துவமும், சமூக பண்பாட்டுக் கூறுகளும்
பி.இரயாகரன்
4.02.2006
முட்டாள்கள் முட்டாளாகவே நீடிப்பார்கள். ஒரு தலைமையே முட்டாளாகிவிட்டால், முட்டாள்தனமே சமூகத்தை குரூரமாக்குகிறது. இதுவே போராட்ட அமைப்பில் ஏற்பட்டுவிட்டால், எங்கும் வேதனையும், துன்பமும், தீமையும் சமூகத்தின் தலைவிதியாகி விடுகின்றது. சமூகம் எதையும் சுயமாக ஆற்றும் சமூக ஆற்றலை இயல்பாகவே இழந்து விடுகின்றது. சமூகம் சுய உணர்வை இழந்து, சுதந்திரத்தையே இழந்து விடுகின்றது. ஒடுக்கப்பட்ட மக்களின் பெரு மூச்சுக்கள் எந்தவிதமான இரைச்சலுமின்றி போகின்றது. வாய்விட்டு அழவும் முடியாத, பீதி கலந்த அச்சவுணர்வே சமூக உறவாகிவிடுகின்றது.
எமது சமூகத்தில் நாம் காண்பது எல்லாம், மனிதத்துவத்தை ஏறி மிதிக்கும் பண்பாட்டையே. ஈரமற்ற, பகுத்தறிவு அற்ற, எங்கும் எதிலும் வன்மமும் மூர்க்கமும் நிறைந்த பகைமைப் பண்புகளே, ஆட்சி செலுத்துகின்றன. இரண்டு மனிதர்கள் பண்புடன், மாண்புடன் சேர்ந்து கூடி வாழ்வது என்பது இன்று சாத்தியமா என்ற அளவுக்கு, வக்கிரம் கொண்ட சமூக உணர்வோட்டங்கள் எங்கும் எதிலும் எதிரொலிக்கின்றன. அடிக்கடி ஏற்படும் எமது சொந்த அனுபவங்கள் ஒருபுறம் கோபத்தையும், மறுபுறம் இந்த சமூகம் இந்த நிலையை அடைநத்தையிட்டு எம்மீதே எமக்கே எரிச்சலையே உருவாக்கின்றது. பரிதாபகரமான ஒரு சமூகமாக, எமது சமூகம் மாறிவிட்டது. சொந்த சமூக ஆளுமைகளை எல்லாம் இழந்து, சிதைந்து செல்லுகின்றது. சொந்த பகுத்தறிவை இழப்பதால், வழிபாட்டுக்குரிய ஒன்றை தலைக்கு மேல் தூக்கிவைத்திருப்பது என்பது எமது சமூகத்துக்கு ஏற்பட்ட ஒரு இழிநிலைதான். நாங்கள் எங்கே எந்த சமூகத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றோம். மிருகங்களின் நிலைக்கு எமது சொந்தப் பகுத்தறிவையே இழந்து, சுய உணர்வை இழந்து, மலடாகி புதியதொரு சமூகம் படைக்கும் சொந்தப் பிரமையில் வீறுநடை போடுகின்றோம். தனிப்பட்ட சொந்த பன்றித்தனத்தை சமூகத்தின் பன்றித்தனமாக மாற்றுகின்றோம். தனிப்பட்ட தலைமையின் வக்கிர குணங்களை சமூகத்தின் வக்கிரமாக மாற்றுவதில் வீறுநடை போடுகின்றோம்.
மறுபுறம் உலகெங்கும் வன்முறையையே பண்பாடாக கொண்ட இளையதலைமுறை உருவாகின்றது. எமது சமூகத்தில் இதற்கு இசைவாக தேசியம் என்ற பெயரில் சமூகத்தில் புரையோடிப்போகும் இழிந்த பண்பாட்டுக் கூறுகள், மிகவும் மூர்க்கமிக்கதாக மாறிவிட்டது. இழிவான சமூகக் கூறுகளை தேசியமாக்கி, அதுவே பாசிப் பண்பாடாக வெளிப்படுகின்றது. இந்த வகையில் இரண்டு பிரதானமான போக்கை ஒட்டியே, இக்கட்டுரை இச் சமூகத்தினை ஆராய முற்படுகின்றது.
1.பண்பற்ற புலித் தலைமைத்துவப் பண்பாடுகள்.
2.புலியை ஆதரிப்பவர்கள் உருவாக்கும் வக்கிரம் நிறைந்த பண்பாடுகள்.
இவற்றை நாம் இக்கட்டுரையில் ஆராயவுள்ளோம். நாம் எமது சமூகக் கூறுகளை இழந்து, ஒரு மனிதத்துவ சமூகப் பண்பாட்டுத் தளத்தை இழந்து, ஒரு இழிந்து போன மிகப் பின்தங்கிய ஒரு சமூகமாக மாறிக் கொண்டிருக்கின்றோம். இப்படி நான் கூறுவது உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம். தமிழ் மக்களின் தேசியவிடுதலைப் போராட்டம் என்பதே, சாராம்சத்தில் தேசிய (மனிதப்) பண்பாட்டை வளர்த்திருக்க வேண்டியதே, அதன் உள்ளடக்கமாகும். தேசியம் என்பது மக்களிடையே ஜக்கியத்தையும், சொந்த சமூக முரண்பாடுகளைக் களைந்து சமூக உயிரியாக மனிதனை மனிதனாக மாற்றியிருக்க வேண்டியது அவசியமாகும்.
ஆனால் அவை எதிரிடையில் நிலவிய இணங்கமான தேசிய பண்பாட்டையே அழித்தொழித்து, அதனிடத்தில் காட்டுமிராண்டித்தனமான இணக்கமற்ற சமூக உறவை உருவாக்கியது. இணக்கமான முரண்பாடுகளை களைந்து அதனிடத்தில் ஒரு உயர்ந்த தேசிய பண்பாட்டுக்கு பதில், எமது தேசிய பண்பாடுகளை பாசிசமாக்கியுள்ளது. இது சமூகத்தின் உள்ளே முரண்பாடுகளை ஆழமாக்கி, சமூகத்தை பிளந்து சின்னாபின்னமாக்கி வருகின்றது.
வேதனையான பொதுஜன வாழ்வு சார்ந்த தேசிய பண்பாட்டு மொழிக்கு பதில், வாழ்வு சாராத வன்மம்மிக்க மொழிப்பண்பாடே உருவாகியுள்ளது. இது மனிதனை மிருக நிலைக்கும் கீழாகவே இழிவுபடுத்தி தாழ்த்திவிடுகின்றது. சமூகம் நடைப்பிணமாக, செம்மறி மந்தைகளாக, வேலியிடப்பட்ட சிந்தனைச் சிறைக் கூடங்களில் பண்பாட்டு சிதைவின் எல்லையில் உயிருடன் வாழ்கின்றனர்.
இங்கு சமூகத்தையும், சமூக முரண்பாடுகளையும் புரிந்து கொள்ளாத, வன்முறை மூலம் ஆதிக்கம் பெற்ற கருத்துத் தளம் பலம்பெற்றுள்ளது. இது சமூக கூறுகளால் தன்னை நிலை நிறுத்தவில்லை என்றது உண்மையாக இருந்த போதும், ஒரு சிறு கும்பல் முழு சமூகத்தையும் இதற்குள் புணர்ந்து போடுகின்றது.
மனிதர்களையும், அவர்களின் சிந்தனைகளையும், முரண்பாடுகளையும் கூட துரோகி, எட்டப்பன், கைக்கூலி, தேசவிரோதி என்று பலவிதமாக ஒற்றைப் பரிணாமத்தில் தமது சர்வாதிகார பாசிச போக்குக்கு ஏற்ப அடையாளப் படுத்துகின்றனர். புலிகள் பற்றிய ஒரு மனிதனின் நிலைப்பாட்டில் இருந்து, இதைக் கட்டமைக்கின்றனர். தமிழ் தேசியத்தை தமிழ் மக்கள் சார்ந்து உயர்த்துவதையே தேசிய குற்றமாக்கிவிடுகின்றனர். அது கட்டமைக்கும் பண்பாடு வன்மம் மிக்கது. உண்மையான தமிழ்தேசியம் புலிக்கு முரணாக உள்ள நிலையில், புலி இயக்கம் தான் தனக்கு ஏற்ப கட்டமைக்கும் பண்பாடு, தனது சொந்த சர்வாதிகார பாசிசத்தின் இருப்பையே அடிப்படையாக கொண்டதாகவுள்ளது.
இது மனிதனின் முரணை பகைமுரண்பாடாகவும், முரண்பாட்டின் பிரதிபலிக்கும் நபரை வெட்டிக் கொல்லப்பட வேண்டும் என்றவாறு எமது பண்பாடு வக்கிரமடைந்து கிடக்கின்றது. இதுவே அங்கீகாரம் பெற்ற பண்பாடாகவுள்ளது. சாதாரணமாக ஒருவிடையத்தின் மீதான முரண்பாட்டைக் கூட விவாதிக்க முடியாதவர்களாகவே, மனநிலை குறைந்த மனிதர்களையே தேசியம் உற்பத்தி செய்கின்றது. சமூக அறிவை இழந்துபோன, வன்முறையை மட்டும் நம்பி வாழும் ஒரு லும்பன் கும்பலாகவே சீரழிந்துள்ளது. புலித் தேசியத்தை மட்டும் ஆதரிக்கும் இந்த கும்பலின் அறிவுபூர்வமற்ற வன்முறையே, சமூக ஆதிக்கமாக இன்று காணப்படுகின்றது. இதனிடையே மக்களின் தேசியத்தை உயர்த்துபவர்களை, இந்தக் கும்பல் சமூகத்தின் எதிரியாக காட்டுவது இங்கு நிகழ்கின்றது. ஆக்கமும், ஆக்கத் திறனும் அற்ற தலைமைத்துவம் மலடாகி நிற்கின்ற போது, இதுவே சமூக ஆதிக்கம் பெறுகின்றது. சமூக ஆக்கத்திறனை இழந்து, தன்னைத்தான் தக்கவைக்க உற்பத்தி செய்யும் வழிபாட்டு கூறுகளே, இதன் முக்கியமான சிதைவுக்கான அடிப்படையான காரணமாகும். இப்படி அடக்குமுறையின் பின்னால் எழும் குரல்கள் பாசிசத்தின் கோமாளித்தனத்தையே எப்போது வெளிப்படுத்துகின்றது.
வன்மமும் மூர்க்கமும் நிறைந்த புலிப் (புலித் தேசிய) பண்பாடு
வன்மமும் மூர்க்கமும் நிறைந்த புலிப் (தேசிய) பண்பாடு என்று நான் கூறும் போது, அதை யாரும் இயல்பாக எதார்த்தம் சார்ந்து மறுக்கமுடியாது. அனைவருக்கும் நன்கு தெரிந்த, சொந்த அனுபவவாயிலாக புரிந்து கொண்ட இந்த விடையத்தை, வீம்புக்கு ஒரு சிலர் விவாதிக்க முற்படலாம். அன்றாடம் நடக்கும் கொலைகள், கொலையிலும் வெளிப்படும் வக்கிரம், சித்திரவதைகள், பணம் அறவிட கையாளும் வன்மமிக்க நடத்தைகள், தங்களை தக்கவைக்க சமூகத்தை அணுகிக் கொள்ளும் முறைமைகள் … என எங்கும் எதிலும் இந்த பண்பாட்டுக் கூறு ஆற்றும் வக்கிரம், நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான். மனிதனும் மனிதமும் சந்திப்பது அச்சமும் பீதியும் கலந்த உளறல் தான். இந்த குரலே தேசியத்தின் இதைய வீணையாகின்றது.
நடத்தைகளும், அது உருவாக்கும் பண்பாடுகள் அந்த தேசத்தின் எதிர்காலத்தை தீர்மானிக்கின்றது. புலிகளின் நடத்தை உருவாக்கும் பண்பாடுகள், தேசத்தின் எதிர்காலத்தை சூனியமாக்குகின்றது. மனிதத்துவமற்ற பண்பாடுகள் காட்டுமிராண்டிச் சமூகத்தையே உருவாக்கும். இதை நாம் எல்லா சமூகக் கூறுகளிலும் இன்று காணமுடியும். இதன் விளைவு என்ன. உணர்ச்சியற்ற தேசியத்தில் வரட்டுத்தனத்தை உணர்ச்சியாக்குவது நிகழ்கின்றது. கூலிக்கு மாரடிப்பதும், மாரடிக்க மறுப்பவர்களை வெட்டிக் கொல்வது நிகழ்கின்றது. இதைத் தான் தேசியம், தேசிய பண்பாடு என்கின்றனர்.
ஆனால் எதிர்மறையில் புலிகளின் இந்த நடத்தைகளையும், அதன் உள்ளடகத்தையும் இல்லையென்று மறுப்பதே, தமிழ் மக்கள் முன் தேசியமாக காட்டப்படுகின்றது. எல்லோரும் உணர்வுபூர்வமாக புலியின் நடத்தையை உணர்ந்து தெரிந்து கொள்ளக் கூடிய நடைமுறைக்கு மாறாக, அவர்களின் நியாயவாதங்கள் மாரடிக்கப்படுகின்றது. இதற்கு பேரினவாதத்தின் இனவொடுக்குமுறையை எடுத்துக் காட்டுவதன் மூலம், சொந்த நடத்தைகளை அதற்குள் மூடி போட்டு மூடிவிட முனைகின்றனர். முழுப்பூசனிக்காயை சோற்றுக்குள் மூடிய முனைவது போல், இதையே மீண்டும் மீண்டும் செய்ய முனைகின்றனர். இதுவே புலித் தேசியத்தின் உயாந்தபட்ச அறிவியலாகும். இதுவே இன்றைய புலித் தேசிய பண்பாடு. இந்தப் பண்பாடு, விவாத முறைமையை மறுக்கின்றது. சமூக முரணை பார்ப்பதை, சிந்திப்பதை, அதைக் காண்பதை எல்லாம் மறுக்கின்றது. உலகை ஒற்றைப்பரிணாமத்தில், அதுவும் தவறாக சித்தரித்து, அதையே உலகமே நம்பக் கோருகின்றது. இப்படி நம்ப மறுப்பதையே, புலித்தேசிய குற்றமாக கருதுகின்றது. இதுவே இன்று ஆதிக்கம் பெற்ற, அதிகாரம் கொண்ட, வன்முறை கொண்ட பண்பாடாக எம் முன் எதார்த்ததில் உள்ளது.
இதை எப்படி உருவாக்குகின்றனர். பாசிசத்தின் சமூகக் கூறை அடிப்படையாக கொண்டு இது கட்டமைக்கப்படுகின்றது. மரண தண்டனையையும் சித்திரவதையையும் அன்றாட நிகழ்சி நிரலில் நடைமுறைப்படுத்தி, சமூகத்தின் சுயமான இயங்கியல் சமூகக்கூறை ஒழித்துக் கட்டுகின்றனர். சமூக அறிவற்ற ஒரு வழிபாட்டு சமூகத்தை வலிந்து திணிக்கின்றனர். சமூக கல்வியை பெறும் அனைத்து சமூக வழியையும் அடைத்து, கற்றுக் கொள்ளும் சூழலையும் கூட சிதைக்கின்றனர். பொதுமக்களிடம் கருத்தற்ற ஒரு நிலையை உருவாக்குகின்றனர். இதையே எமது சமூகத்தில் நீங்கள் தெளிவாக எங்கும் எதிலும் காணமுடியும்.
அங்கீகரிக்கப்பட்டவற்றை தலைகுனிந்து வணக்கம் செலுத்துவதுடன், சமூக இருத்தல் எல்லைப்படுத்தப்படுகின்றது. கிளிப்பிள்ளை போல் அடுத்தவனின் கருத்தை திருப்பிக் கூறுகின்ற மலட்டுத்தனமே, உயர்ந்தபட்ச பரிமாறிக் கொள்ளும் மொழியாகுகின்றது. மொழியின் பயன்பாடு என்பது சிலவற்றை நியாயப்படுத்தும் எல்லைக்குள் சுருங்கிப் போகின்றது. போலியான பளபளப்பான கவர்ச்சியான தனிமனித வாயப்பாடுகளே சமூகத்தின் ஆன்மீக உணர்வாகின்றது. சுய ஏமாற்றுதலில் தொடங்கி சமூகத்தை ஏமாற்றி மோசடி செய்வது வரை இயல்பான ஒன்றாக கட்டமைக்கப்படுகின்றது.
வளர்ப்பு மந்தைக்குரிய ஒரு செம்மறித்தனத்தில் சமூகத்தை இட்டுச் செல்லுகின்றனர். மேய்வதற்கு செம்மறிகளுக்கு ஒரு புல்வெளி எப்படி உண்டோ, அதே மாதிரி ஊடகத்துறையை தமது தேவைக்கு ஏற்ப வளைத்து அதையே மேயவிடுகின்றனர். அற்பத்தனத்தின் இழிநிலையில் சொந்த வாழ்வை பேணும் இழிந்த கும்பல் ஒன்று, இங்கு ஆதிக்கம் பெறுகின்றது. இதுவே சமூக ஆதிக்கம் பெற்ற ஒன்றாக மாறுகின்றது. இங்கு முட்டாள் தனத்தின் மேதைகள், தமது போக்கிரித்தனத்தை சமூகத்தின் மேல் புணருகின்றனர். அறநெறி அற்ற பாசிச வக்கிரங்களையே சமூகத்தின் மீது பீச்சி விடுகின்றனர். மனித உறவுகளின் கொடுமைகளை பார்க்கவிடாது சமூகத்தையே தடுக்கின்ற இச்சக்திகள், அடிப்படையில் நேர்மை எதுவுமற்றவர்கள். இவர்கள் யார்? இவர்களின் பண்பு என்ன?
கூலிக்கு மாரடிக்கும் எழுத்தாளர்கள், புகழுக்கு மாரடிக்கும் எழுத்தாளர்கள், அரசியல் சதிகாரர்கள், திறமையற்ற வாய்வீச்சாளர்கள், சமூகத்தில் தமக்கென இடம் கிடைக்காது அலைந்தவர்கள், பச்சோந்திகள் என்ற பலவகையான போக்கிடமற்றவர்கள் தான் இவர்கள். தமது ஆதிக்கத்தை புலியின் வன்முறை ஊடாக ஊடகத்துறையில் உருவாக்கி, அதில் தமது சொந்த பாசிசத்தை நியாயப்படுத்தும் எழுத்துக்களால் நிரப்புகின்றனர். இங்கு அறிவால் அல்ல, துப்பாக்கியால் அதாவது வன்முறையால் இது சாதிக்கப்படுகின்றது. உண்மையைப் பொய்யாக்கவும், நிகழ்சிகளை வளைக்கவும், அதைத் திரிக்கவும், நிகழ்ச்சிகளை மறைக்கவும் தெரிந்த, படுமோசமான கயவாளிக் கூட்டத்தின் கருத்தே, இன்று சமூக ஆதிக்கம் பெற்ற ஒன்றாக அரங்கில் உள்ளது. அறிவிலித்தனம், போலித்தனம், முட்டாள்தனம், போக்கிரித்தனம், எதேச்சதிகாரம், பணிவது, மழுப்புவது, ஏமாற்றுவது, வார்த்தைஐhலம், ரவுடித்தனம், கைக்கூலித்தனம், காட்டிக்கொடுத்தல் போன்ற இழிந்துபோன சமூகவிரோத நடத்தைகளைக் கொண்டு, ஊடகத்துறையில் இடம் பிடித்தவர்கள் தமது பினாமிக் கருத்துகளையே சமூகத்தில் மேல் திணித்து விடுகின்றனர். தமது தனிப்பட்ட பன்றித் தனத்தனத்தையே சமூகத்தின் பன்றித்தனமாக்கின்றனர்.
சமகாலத்திய சமூக உறவுகளின் அனைத்து கொடுமைகளினதும் காவலராக உள்ளனர். மனிதம், மனிதத்துவம் என்பது இவர்களின் அறிவுத்தளத்தில் அhத்தமற்ற ஒன்றாக சித்தரிப்பதே, இவர்களின் அரசியல் ஒழுக்கமாகின்றது. உண்மையில் அறியாமை யாருக்கு உதவுவதில்லை என்பதை அடிப்படையாக கொண்டு, கற்பிழந்த சமூகத்தையே மீண்டும் மீண்டும் தமது சொந்த பலத்காரத்தால் புணருகின்றனர். தமிழ், தமிழ் தேசியம் எல்லாம் இவர்களைப் பொறுத்த வரையில், இழிந்து போன தமது அற்பத்தனத்தை நியாயப்படுத்தும் ஒரு கருவியாகிவிட்டது. எந்தவிதமான தர்க்க நியாயமுமற்ற கருத்துகளை, துப்பாக்கிகள் இன்றி சமூகத்தின் மேல் நியாயப்படுத்த முடியாத அறிவிலிகளாக முட்டாள்களாக இவர்கள் உள்ளனர். பாசிச அதிகாரத்தில் நம்பிக்கை, குருட்டுத்தனமாக கீழ்படிதல், முன்னரே தயாரிக்கப்பட்ட அனுமானங்கள் கருத்துகள் தீர்மானங்கள் என எங்கும் எதிலும் சுயாதீனமற்ற அடிமைகளாக மாறி, சமூகத்தை தீhமானகரமான அழிவுக்கு இவர்கள் இட்டுச்செல்லுகின்றனர்.
ஒன்றைப் பற்றி தீர்ப்பு அளிக்கும் எந்த சமூகத் தகுதியும் இவர்களிடம் கிடையாது. ஆனால் இவர்கள் தான் தீர்ப்பளிக்கின்றனர். அன்றாடம் ஆயிரம் ஆயிரம் விடையங்கள் மீதான இவர்களின் சொந்தத் தீர்ப்புகள், சமூகத்தின் அவலத்தையே சமூக மயமாக்குகின்றது. சமூக பெருமூச்சுகளின் ஈனமான குரல், இதயமற்ற புலித் தேசியத்தில் மரணதண்டனைக்கு உள்ளாகுகின்றது. குருட்டுத்தனம், முட்டாள்தனம், போக்கிரித்தனம் சமூகத்தின் இதயமாக, ஒழுக்கக்குறைவும், அடிமைத்தனமும், கீழ்மையான ஒழுக்கமுமே பண்பாகிவிடுகின்றது. யாரும் எதையும் எதிர்த்து கேள்வி கேட்டுவிட முடியாது.
எங்கும் எதிலும் உருத்திராட்சைக் கொட்டைகளை உருட்டியபடி உருப்போடும் ஒரு வக்கிரம் பிடித்த கும்பல் தான், புலித் தேசியத்தின் முன்னணிப் பிரிவாகும். இதுவே தமிழ் சமூகத்தை வழி நடத்துகின்றது. இதனிடம் சமூக நடத்தையையிட்டு, எந்த நன்நடத்தையும் நன்நெறியும் கிடையாது. சமூக அடிமைத்தனத்தின் மீது, சிம்மாசனத்தை நிறுவும் நன்நெறியற்ற வக்கிரத்தில் காலம் தள்ளுபவர்கள். இதற்காக எந்த நன்நடத்தையையும் துரோகமாக தூற்றி புணரத் தயாரானவர்கள் தான் இவர்கள். சமூகத்தில் இவர்களின் பாத்திரம் என்ன?
இதன் பெரும் பகுதி தாங்கள் ஆதரிக்கும் இயக்கத்துக்கு தமது உழைப்பில் இருந்து பணம் கொடுக்காதவர்கள். மற்றவனை ஏமாற்றி பணம் வசூலிப்பதையே தொழிலாகக் கொண்டவர்கள். இவர்களின் பெரும்பான்மையானோர், வட்டிக்கு பணம் கொடுத்து சமூகத்தையே ஈவிரக்கமின்றி ஒட்ட உறுஞ்சுபவர்கள். தமது வட்டித் தொழிலுடன் இதை இணைத்து, இயக்கத்துக்கு பணம் திரட்ட அலைபவர்கள். இதில் பெரும்பான்மையானோர் தனது சொந்தக் குடும்பத்தையே முழுமையாக நாட்டைவிட்டு நாடு கடத்துபவர்கள். புலிகளின் பகுதியிலிருந்து வெளியேறியவர்கள், வெளியேற சதா துடிப்பவர்கள். தமது சொந்த குழந்தை போராட்டத்துக்கு செல்வதை அனுமதிக்காதவர்கள். இதைப் பயன்படுத்தி வர்த்தகத்தை விருத்தி செய்பவர்கள். சமூகத்தில் இடம் கிடைக்காது அலைந்தவர்கள். இயக்கத்தைப் பயன்படுத்தி பிழைக்க வழிதெரிந்தவர்கள். சினிமா கதாநாயகர்களுக்கு இரசிகர் மன்றம் அமைக்கும் பாணியிலான இரசிகப் பெருமக்கள். சண்டைக்காட்சியை இரசிப்பவர்கள். உழைப்பில் ஈடுபடாத லும்பன்கள். மந்த புத்தி கொண்டவர்கள். வாழ்வில் ஒழுக்கமற்றவர்கள். வன்னியில் தமது சொத்துகளை முதலிட மறுபவர்கள். கொழும்பில் வீடு வாங்குபவர்கள். தமது சொந்தப் பாதுகாப்புக்கு எதிரியின் பிரதேசத்தில் இடம் தேடுபவர்கள். முன்பு தமது குடும்பத்தில் ஒரு உறுப்பினரையாவது பலிகொடுத்தவர்கள். அதன் பெயரால் தம்மையும் தமது வாழ்வையும் தக்கவைப்பவர்கள். இயக்கத்தில் முக்கிய உறுப்பினர்களின் உறவினர்கள். இப்படி பலவிதமானவர்கள் தான் இயக்கத்தின் செயற்பாட்டாளராக உள்ளனர். இவர்கள் தான் இயக்கத்தின் ஆன்மாவாக உள்ளனர். இதை நீங்கள் தனித்தனியாகவே எங்கும் எதிலும் இனம் காணமுடியும்.
இவர்களின் பலம் எப்படி உருவாகுகின்றது. அதிகாரத்தினால் அல்லது நம்பிக்கையினால் அல்லது பாரம்பரியத்தினால் ஏற்றுக் கொண்ட தமது சொந்த அற்பத்தனத்தைக் கொண்டு, சமூகத்தை இழிவாடி அதில் தான் இவர்கள் மிதப்பாகின்றனர். தேசத்தையும், மக்களையும், தேசியத்தையும் அறிவு பூர்வமாக உணர்ந்து, உணர்வு பூர்வமாக விளக்க முடியாதவர்கள் தான் இவர்கள். தாங்கள் என்ன செய்கின்றோம் என்று எதையும் சொல்ல தெரியாதவர்கள் இவர்கள். சினிமா இரசிகர் மன்றத்தின் வழியில், தேசத்தையும் தேசியத்தையும் புரிந்து கொண்டவர்கள் இவர்கள். முட்டாள்தனமாக விதண்டாவாதமாக வக்கரிக்கத் தெரிந்தவர்கள் இவர்கள். அதை சமூக விரோத வன்முறை ஊடாக சாதிக்கத் தெரிந்த, நியாயப்படுத்த தெரிந்த ஒழுக்கம் கெட்டவர்கள் தான் இவர்கள். எதையும் உருபோடுவதை தவிர, வேறு ஏதும் சுயமாக சிந்திக்கத் தெரியாதவர்கள் இவர்கள். சமூகத்தின் முரண்பட்ட கருத்தை காண்பது, கேட்பது, வாசிப்பதைக் கூட சகிக்க முடியாத முட்டாள்கள் இவர்கள். முரண்பட்ட செயல்பாட்டை வன்முறை மூலம் ஒடுக்குவதை கண்ணை மூடி ஆதரிக்கும் அடியாட் கும்பல் தான் இவர்கள். சமூக விடையங்களை விவாதிக்க, பதிலளிக்க தெரியாதவர்கள் இவர்கள். இப்படிப்பட்டவர்கள் தான், புலியின் முன்னணியாளர்கள். அதாவது புலிப் பினாமிகள். ஆனாலும் புலிகளாக இருக்க முடியாதவர்கள். புலிகளின் அடிமட்டத்தில் உள்ளவர்களின் தியாக மனப்பான்மை எதுவுமற்றவர்கள். தியாகத்தையே புரிந்து கொள்ளமுடியாத சமூகத்தில் இழிந்து போன சுயநல விரும்பிகள் இவர்கள். தெரு நாய்களைப் போல் ஊளையிட்டு, கூச்சல் போடத் தெரிந்தவர்கள் இவர்கள்.
உளவு சொல்லவும், படுகொலையை ஆதரிக்கவும், மனிதத்துவத்தை ஏறி மிதிக்கவும் தெரிந்த இவர்களுக்கு, கருத்துக்கு பதில் முத்திரை குத்தி விடையத்தை முடித்துவிடவே விரும்புகின்றவர்கள் இவர்கள். படுகொலைகளை நியாயப்படுத்தி ஆதரிப்பது முதல் தேசியத்தின் பெயரில் தூசணத்தால் தாராளமாக புணரத் தெரிந்தவர்கள் இவர்கள். இவர்கள் தான் புலித் தேசியத்தின் முன்னணிப் பினாமிகள். மற்றவனின் பின்னால் நின்று கொக்கரிப்பதே இவர்களின் பலமாக உள்ளது. இதுவே இவர்களின் அரசியலாகும். தனக்கென கருத்தற்ற இவர்கள் தமக்கென ஒரு தோலைப் போர்த்திக் கொண்டு, விண்ணாதிவிண்ணராக புலம்புவது நிகழ்கின்றது. இலஞ்சம் மற்றும் ஊழலுக்கு பணிந்து சிரம் தாழ்த்தி இழிந்து போன நிலையில் சமூகத்தை புணர்ந்தே இவர்கள் வாழ்கின்றனர்.
அதிகமான தனிமனித நம்பிக்கை கொண்ட போக்கிரிகளாக சமூகத்தை தனிமனிதனுக்கு நிகராக நிறுத்துகின்றனர். இதில் அனுபவமுள்ள பகட்டாளர்களாக மாறி, மக்களை விலங்குகளின் நிலைக்கு இழிவு படுத்துகின்றனர். பணத்துக்காக விபச்சாரம் செய்யும் விபச்சாரியாக, தமிழ் தேசியத்தையே புலித் தேசியமாக கொண்டுவந்து நிறுத்துகின்றவர்கள் இவர்கள் தான். பணம் கண்ணுக்கு தெரியும் கடவுளாக எப்படி இருக்கின்றதோ, அது போல் தான் இரத்த வெறிபிடித்த மக்கள் விரோத நடத்தைகளையே தமிழ்தேசியம் என்று புணர்ந்து காட்டுகின்றவர்களும் இவர்கள் தான்.
மதத்தில் கடவுளின் சர்வவல்லமை எப்படி மனிதனை அடிமையாக்குகின்றதோ, அப்படி தேசியத்தில் புலிப்பாசிட்டுகளை கடவுளின் நிலைக்கு உயர்த்துகின்றனர். தனிநபரை ஆதரிப்பதன் மூலம், மேல் மட்டத்திடம் கீழ்மட்டம் அளவுக்கு அதிகமான நம்பிக்கை உருவாக்குகின்றனர். கார்ல் மார்க்ஸ் கூறியது போல் ~~.. உச்சியில் இருப்பவர்கள் விவரங்களைப் புரிந்து கொள்வதைக் கீழ்நிலையில் இருப்பவர்களிடம் ஒப்படைக்கிறார்கள். பொதுவானவற்றை உச்சியிலிருப்பவர்கள் புரிந்தது கொண்டிருப்பதாகக் கீழ்நிலையில் இருப்பவர்கள் கருதுகின்றார்கள். ஆகவே எல்லோரும் பரஸ்பரம் ஏமாற்றப்படுகின்றனர். என்றார். இதுதான் இங்கும் நிகழ்கின்றது. உண்மையில் அறிவற்ற தலைமையின் முட்டாள்தனம், சமூக முட்டாள் தனத்தை விதைகின்றது.
இதுவே இயல்பில் தனிமனிதனை போற்றி வழிபடும் அரசியலாகி, தனிமனிதனுக்கு எதிராக எல்லாவிதமான குற்றத்தையும் நியாயப்படுத்துகின்றது. சமூகத்தின் ஒவ்வொரு தனிமனிதனையும் குற்றவாளியாக காணத் துடிக்கின்றது. அதேநேரம் தன்னைத்தான் தூய்மையானதாக பிரகடனம் செய்கின்றது. உண்மையில் இது எதிர்மறையில் செயற்படுகின்றது. தனிநபரை ஆதரிப்பதன் மூலம் தனிநபரை கீழ் இறக்குகின்றது. தனிமனிதன் பற்றிய பிரமை இயல்பில் மற்றைய தனிமனிதனை கீழ்மைப்படுத்துகின்றது. தனிநபர் சொந்தக் கருத்தை வைத்திருக்கும் உரிமையையே மறுக்கின்றது. இதன் மூலம் தேசிய உணர்ச்சியை அதிகரிக்கும் போது, தேசியத்தை இழிவுபடுத்துவது நிகழ்கின்றது. காhல் மார்க்ஸ் கூறியது போல் ~~தேசிய இனத்தை அவமதிக்கின்ற கருத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றது என்பது, எமது புலித் தேசியத்தில் எதார்த்தமாகவே உள்ளது.
கார்ல் மார்க்ஸ் கூறியது போல் ~~ஒரு தந்திரமுள்ள அரசியல் கோஷ்டியின் தீங்கான மனம் மட்டுமே ~~பழிவாங்கும் சட்டங்களை, கருத்துகளுக்கு எதிரான சட்டங்களை கண்டுபிடிக்கின்றது என்ற அரசியல் எதார்த்தம், புலித் தேசியத்தில் படுகொலைகளாக சித்திரவதைகளாக மாறுகின்றது. துரோகி, எட்டப்பன், கைக்கூலி... போன்ற அர்த்தமிழந்து செல்லும் புலி அடைமொழிகள், வசைபாடலாகி சம்பந்தப்பட்ட தனிமனிதனை வெட்டிப்போடும் புலித் தேசிய பண்பாடாக தேசியம் புணரப்படுகின்றது.
இதை காவிச் செல்பவர்கள் வெகுளித்தனமான அறிவு மந்தத்தில், முரட்டுத்தனமான வன்முறையை உருப்போட்டு வழிபடுபவர்கள் இவர்கள். தமது சொந்த வயிற்றுக்காக எதையும் செய்ய தயாரான இவர்கள், சமூகத்தின் வாழ்வை புரிந்து கொள்வது கிடையாது. சமூகத்தின் வாழ்வுக்கு எதிராக நஞ்சிடுபவராக உள்ளனர். சுய கற்பனை, சுய பிரமைகள், சுய திருப்தியில் மனித குலத்தையே ஏளனமாகவே எள்ளி நகையாடுகின்றனர். சுதந்திரம் வேண்டுமென்ற இவர்கள், தாம் சுதந்திரமாக இருப்பதாக கற்பனை செய்கின்றனர். ஆனால் மக்களின் சுதந்திரம், ஜனநாயகம் என்பதெல்லாம் எதிரியின் சதி என்று முத்திரை குத்தி அதை மக்களுக்கு மறுக்கின்றனர். தமிழ் மக்களின் தேசியம் என்று பீற்றும் இவர்கள், மக்கள் பற்றி மூக்கால் சிந்தும் இவர்கள், தேசியத்தில் மக்களின் உரிமையை மறுக்கின்றனர். தமக்குள்ள உரிமை மற்றவனுக்கு கிடையாது என்கின்றனர். மனித குலத்தின் ஒரு மனிதனுக்கு எவையெல்லாம் பெற உரிமை உண்டோ, அதை மற்றவனுக்கு இல்லை என்று மறுப்பதே இவர்களின் பாசிச தேசியமாகும். மனிதனுக்குரிய அனைத்தும் அனைவருக்குரியது என்பதை இவர்கள் மறுக்கின்றனர். பிரபாகரனுக்குரிய உரிமை, தமிழ் மக்களின் ஒவ்வொருவருக்கும் கிடையாது என்பதே, இவர்கள் துப்பாக்கி முனையில் சொல்லும் அன்றாட செய்தியாக உள்ளது. இதைத் தான் தமிழீழத் தாகம் என்கின்றனர்.
தலைமைத்துவப் பண்பாடு
~~மனிதகுல முன்னேற்றத்துக்குப் பாடுபடு என்று மாhக்ஸ் கூறியது போல், ஒரு தலைமையும் அதன் பண்பாடும் இதை நடைமுறையில் கொண்டிருக்காத எவையும், மக்களுக்கான தலைமைப் பண்பாட்டைக் கொண்டிருப்பதில்லை. மக்களை நேசிப்பவர்கள், நேசிக்கும் மக்கள் தொடர்புடைய பிரகடனங்கள் முதல் அனைத்தையும் சந்தேகிக்க வேண்டியவராகவே உள்ளனர். ஒவ்வொன்றையும், ஒவ்வொரு துளியையும் மனிதகுல முனனேற்றத்துடன் இணைத்து பார்க்க வேண்டியவராக நாம் உள்ளோம். இங்கு இதில் இருந்து தான் தலைமைத்துவப் பண்பாட்டை விமர்சனத்துக்குள்ளாக்க வேண்டியுள்ளது. ஒரு தலைமை என்பது தனது சொந்த வாழ்வு சார்ந்த நலன்கள மற்றும் சுயநலங்களுக்காக தலைமையைத் தக்கவைக்காது, மனித நலன்களை முதன்மைப் பண்பாக முன்னிறுத்தி போராடவேண்டும். மனிதனின் துன்ப துயரங்களை நீக்கும் அக்கறையுடன் போராட வேண்டும். இதன் மூலம் மக்கள் தாங்களாகவே நேசிக்கும் ஒரு தலைமையை, தலைமைப் பண்பைப் பெறவேண்டும்.
தலைமைத்துவம் என்பது ரவுடித்தனத்தால் வன்முறையால் பெறமுடியாது. சமூக விரோத ரவுடியும் கூட, ஒரு சமூகக் கூறில் தனது ரவுடித்தனத்தால் பலாத்காரத்தால் அச்சத்தை உருவாக்கி தலைமைத்துவத்தை எதிர்மறையில் பெறத்தான் செய்கின்றான். இது அந்த மக்களால் வெறுக்கப்படுகின்ற, உள்ளடகத்தில் எப்போதும் எதிர்நிலையில் பணியாற்றுகின்றது. இதேபோன்று அச்சம், பீதி, ஈவிரக்கமற்ற அரக்கத்தனத்தை சமூகத்தில் விதைத்து, பின் தலைமையை தக்கவைப்பது தான் தேசிய தலைமையா?
வளமுள்ளதும் மனித ஜீவனுள்ளதுமான வாழ்வை மக்களுக்கு வழங்கமறுத்து, அதை சிலர் மட்டும் அனுபவிப்பது தான் தலைமையா? அதுதான் தேசியமா? சமூக அவநம்பிக்கையை உருவாக்கி, கோழைத்தனத்தை உற்பத்தி செய்து அதில் குளிர்காய்ந்தபடி தலைமையை தக்கவைப்பதா தேசியம்! அறிவு நாணயத்துடன் சமூகத்தின் உணர்வுடன் ஒன்று கலந்து, மனித விடுதலைக்கு போராடி ஒரு தலைமையை பெற மறுப்பது ஏன்? எமது சமூகத்தின் தலைவிதி இப்படி மூளை கெட்டு முட்டாள் தனத்தில் மண்டிக் கிடப்பது ஏன்? இந்தக் கேள்வியை கேட்பதன் மூலம் தான், மக்களின் தலைமையை நேர்மையாக இனம் காணமுடியும்.
புலித்தேசியமும், புலித்தலைமையும் உருவான நாள் முதல் இன்று அதை கட்டிப் பாதுகாக்கும் வடிவம் வரை காணப்படுவது என்ன? மக்களின் தலைமைக்குரிய எந்த சமூகப் பண்பாடும் அதனிடம் கிடையாது. மாறாக அவர்கள் தாங்களாகவே, தம்மை சிருஷ்டித்துக் கொண்ட ஒன்றே அது. ஆரம்பத்தில் பத்து பேர் அந்த இயக்கத்தில் இருந்த போதே, தலைவர் பிரபாகரன் என்ற பெயர் போட்டு ஆரம்பித்த இயக்கத்தின் தலைமை, எப்படி எங்கு எப்போது எதனால் தமிழ் மக்களின் தலைமையானது? மக்கள் நலன் என்று எதைத்தான் நடைமுறைப்படுத்தினர்.
துப்பாக்கி முனையில் மனித பிணங்களின் மேலாக, இராணுவ வீரசாகசங்கள் மூலம் தமது தலைமையை தக்கவைக்கின்றனர். இந்த தக்கவைப்பு கடந்த காலத்தில் தலைவர் என்று போட்ட அதே வழியில், தமக்குத் தாமே பட்டங்கள் சூடிக் கொண்டும், அடைமொழியில் மகுடங்களையே சூட்டிக் கொண்டு புகழுக்கும் சொத்துக்கும் ஆசைப்பட்டு பவனி வருகின்றனர். தமிழ்மக்கள் அனுபவிக்கவே முடியாத விசேடமான எதிர்மறையான வாழ்வை அனுபவிக்கின்றனர். அதைத் தமிழ்மக்களின் வாழ்வில் இருந்து அபகரித்துக் கொள்கின்றனர். இதைத் தமிழ் மக்கள் ஒவ்வொருவரும் அனுபவிக்கும் உரிமையை மறுப்பதே, புலித் (தமிழ்) தேசியமாகிவிட்டது. இதைத் தமிழ் மக்கள் ஒவ்வொருவரும் கோருவது கூட தேசிய குற்றமாகிவிட்டது.
இப்படி உருவான எமது தலைமை எப்போதும் மக்களுடன் நெருங்கிப் பழகியதே கிடையாது. இயக்கம் ஆரம்பித்தது முதலாக, பிழைப்புக்காகவே மக்களை ஏமாற்றி அரசியல் செய்த கூட்டணி யாரை எல்லாம் எதிரி, துரோகி என்று முத்திரை குத்தியதோ, அவர்களை தேடிச் சுட்டதே இயக்கத்தின் ஆரம்ப கால அரசியல் வரலாறாகும். தமிழர் கூட்டணிக்கு ஒரு கூலிக் கும்பலாகவும் பினாமியாகயும் வளர்ச்சியுற்றவர்கள், எப்போதும் மக்களுடன் நெருங்கி பழகாது ஒளித்துக் கொண்டவர்கள் தான் இவர்கள். மக்களுடன் நெருங்கி தமது நோக்கம் கொள்கையை முன்வைத்தவர்கள் அல்ல இவர்கள். அவர்கள் வெளியில் வருவதே, யாரையாவது சுடுவதற்கு அல்லது கொள்ளை அடிப்பதற்கு என்ற நிலையிலேயே, இயக்கத்தின் அரசியல் செயல்பாடுகள் அமைந்திருந்தன. இப்படி படுகொலை அரசியலில் தொடங்கிய இயக்கங்கள், தலைமைகள் மனித உழைப்பில் இருந்து முற்றாக அன்னியமாகினர். மற்றவன் உழைப்பிலும், கொள்ளை அடிப்பதிலும் தங்கியிருக்கும் லும்பன் நிலைமை உருவானது. ஒரு லும்பன் தனமான வாழ்வியலை அரவணைத்துக் கொண்டு, பதுங்கிக் கிடக்கும் ஒரு நிலைக்குச் சென்றனர். இந்த லும்பன்களுக்கு இடையில் அதிகாரப் போட்டிகள், தலைமைப் போட்டிகள் அடிக்கடி உருவானது. இப்படியான ஒரு சூழலில் தான் புலிகளின் தலைவர் பிரபாகரன் என்று வலிந்து போடப்பட்டது. எந்த நிலையிலும் மக்களின் தலைமையாக உருவாவதற்கான சூழலை, அவர்கள் நெருங்கிக் கூடப் பார்க்கவில்லை. எந்த மக்களைப்பற்றி பேசி போராடுகின்றனரோ, அந்த மக்களின் வாழ்வியலுடன் சம்பந்தப்படாத ஒரு தலைமையை நிறுவினர். தாங்கள் சுதந்திரமுள்ளவராக, எதையும் எப்படியும் கூறத் தகுதியுள்ளவராக, எதையும் எப்படியும் செய்யும் தகுதி உடையவராக தம்மைத் தாம் மாற்றிக் கொண்ட இவர்கள், அதை அந்த மக்களுக்கு மறுப்பதே கடந்தகால படுகொலைக்கான சமூக அடிப்படையாகும். மக்கள் இதற்கு வெளியில் வாழ்வுக்கான சொந்தப் போராட்டத்தை இவர்களுக்கு வெளியில் நடத்திக் கொண்டிருந்தனர். மக்கள் தமது வாழ்வுக்கான போராட்டத்தில் கிடைப்பதில் ஒரு பகுதியை, இவர்களுக்கு இலவசமாக கொடுக்க நிர்ப்பந்திக்கப்பட்டனர்.
மக்களின் சொந்த அபிப்பிராயங்கள் துப்பாக்கி முனையில் அடக்கப்பட்டன. தமிழ் மக்களின் தலைமையாக தம்மைத் தாம் வலுக்கட்டாயமாக மக்கள் மேல் திணித்துக் கொண்டனர். துப்பாக்கி முனையில் இதைச் செய்தவர்கள், மக்களின் உழைப்பை கட்டாயமாக அறவிடும் ஒரு நிலைமையை உருவாக்கி கொண்டனர். தமிழ் தேசியம் என்று தொடங்கிய காலத்தில் மக்கள் யாரையும் கண்டு அஞ்சியது கிடையாது. யாருக்கும் பணம் கொடுத்ததும் கிடையாது. ஆனால் இன்று தமிழ் தலைமைகளை கண்டு அஞ்சவும், பணம் கொடுக்கவும் நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர். இன்று போராட்டத்தில் உள்ள பகுதி உழைப்பில் ஈடுபடாதது மட்டுமின்றி, மனித உழைப்பையே அறியாதது. மக்களின் உழைப்பை பறித்தெடுத்து, அதைக் கொண்டு லும்பன்தனமான வாழ்வை வாழ்கின்றனர். இதற்குள்ளும் ஒரு பகுதி அதிதமான சொகுசுடன் கூடிய வாழ்க்கையை வாழ்கின்றனர். மக்களிடமிருந்து அறவிடும் பணம் (செல்வம்) அதிகரிக்கும் போது மக்கள் மேலான அடக்குமுறை அதிகரிக்கின்றது. அதேநேரம் சொகுசுடன் கூடியதும், மக்கள் அனுபவிக்க முடியாத வாழ்வின் வக்கிரமும் அந்த அடிமை மக்களின் முதுகின் மேல் அரங்கேறுகின்றது.
மக்களின் நிலை என்ன? அவர்களின் சொந்த உணர்வுகள் தேசியத்தின் பெயரில் அல்ல. பங்களிப்பு சுயத்தில் அல்ல. மாறாக பயத்தில் அடங்கி போன நிலையில், நிசப்தத்தில் அனைத்தும் அவர்கள் பெயரால் நிகழ்த்தப்படுகின்றது. தலைமைத்துவத்தின் சமூக இருத்தல் இப்படித்தான் கட்டமைக்கப்படுகின்றது. கார்ல் மார்க்ஸ் கூறியது போல் ~~அதிகார வர்க்கத்தின் பொது உணர்ச்சி இரகசியம் மர்மம் என்பதற்கு ஏற்ப, புலிகள் ஒரு விடுதலை இயக்கமாக அல்ல மக்களை அடக்கியொடுக்கும் அதிகார வர்க்க கும்பலாக உள்ளது. இரகசியம், மர்மம் வாழ்வின் அனைத்தையும் ஈவிரக்கமின்றி நாசமாக்குகின்றது. நாம் வலிந்து உருவாக்கிய தமிழீழத்தில் ஒரு மனிதன் ஏன் எதற்காக வீதிகளில் கழுத்தை வெட்டி போடுகின்றனர் என்பது கூட மர்மான இரகசியமான விடையமாகிவிட்டது. எந்த நீதிக்கும் சட்டத்துக்கும் வெளியில் இயங்கும் வதைமுகாங்கள் இயங்குவதையும், அங்கும் உயிருள்ள மனிதர்கள் கொல்லப்படுவதைக் கூட தமிழீழச் சட்டமே கேள்வி கேட்கமுடியாது. இதுவே நீதி பற்றி, தலைமையின் தலைமைத்துவ ஒழுக்கப் பண்பாடாகும்.
தலைமையும் அதைச் சுற்றியுள்ள கும்பலின் வாழ்வின் மீதும் யாரும் எதுவும் கேட்கவும் முடியாது, விமர்சிக்கவும் முடியாது. காhல் மாhக்ஸ் கூறியது போல் ~~ஆகவே அதிகாரம் அதன் அறிவின் அடிப்படை, அதிகாரத்தைக் கடவுளாக உயர்த்துவது அதன் பற்றுறுதி இந்த ஒழுங்கில் அனைத்தும் கட்டமைக்கப்படுகின்றது. அறிவு என்பது அதிகாரத்தை தக்கவைக்கும் எல்லைக்குள் கூனிக்குறுகி ஐhலம் போடத் தொடங்குகின்றது. அதை முன்னிறுத்தி வழிபடுவது தேசியமாகிவிடுகின்றது. சொந்த அதிகாரம், புகழ் இதுவே அனைத்தினதும் தாரகமந்திரமாகிவிடுகின்றது. இதுவே கடவுளின் பூசைக்குரிய மந்திரமுமாகிவிடுகின்றது. இலட்சியங்கள் என்று கூறியவை சிதைந்து புதிய வகையில் தனிமனித நலன்களுக்குள் வக்கிரமடைகின்றன.
இந்த நிலையில் புலிகளை தமது சமூக பொருளாதார விடிவிற்கான தலைவர்களாக தமிழ் மக்கள் ஏற்றுக் கொண்டார்களாவெனின், ஒரு நாளும் இல்லை. தமது சொந்தச் சமூக பொருளாதார வாழ்வுக்கு தடையாகவே புலிகளைக் எப்போதும் காண்கின்றனர். மனிதனின் ஒவ்வொரு உழைப்பிலும் இருந்து தமது வாழ்வை புலிகள் உறுஞ்சிக் கொழுப்பதைக் காண்கின்றனர். அதைக் கொண்டு தன்னை அடக்குவதையும், ஒவ்வொரு மனிதனும் தனது சொந்த அனுபவத்தில் புரிந்து கொள்கின்றான். மக்கள் தமது சொந்த வாழ்வுடன், புலிகள் இணங்கி நிற்பதாக, காண்பதேயில்லை. தமது சொந்த வாழ்வுக்கு ஆதாரமாக, புலிகள் இருப்பதாக மக்கள் கருதுவது கிடையாது. தமது சொந்த வாழ்வை புலிகள் ஆழமாக சிதைக்கும் போக்கைக் கண்டு, வாய் திறக்க முடியாத நிலையில் மக்கள் மனதால் குமுறுகின்றனர். இதயமற்ற இந்த தேசியத்தில், தமது சொந்த இதயத்தில் அனைத்தையும் பூட்டிவைத்து மக்கள் புலம்புகின்றனர்.
போலித்தனமும் உளுத்துப் போன அரசியல் வக்கிரமும் மக்களின் வாழ்வையே அரித்துத் தின்கின்றது. நேர்மை என்பது சொல்லுக்கு கூட கிடையாது. எந்த அறிக்கையிலும் நேர்மையான எதார்த்தம் கிடையாது. மக்களை அடக்கியாளும் பாசிச வெறிபிடித்த இந்த நடத்தைகளை தமது போலித்தனத்தால் விளம்பரப்படுத்துகின்றனர். அதீதமான நம்பிக்கையை விதைத்து, அதில் தங்கியிருக்கும் வகையில் மக்களை நிர்பந்திக்கின்றனர். வாழ்வுடன் கூடிய எந்த எதார்த்தமும் தீர்வும் கிடையாது. அதைக் கோருவது மரண தண்டனைக்குரிய குற்றமாகும்.
மரணங்களை விதைத்து அதையே மீண்டும் மீண்டும் அறுவடை செய்யும் புலிகளின் முன்னால் மக்களை மண்டியிடவைத்து, வலிந்த ஒரு உபதேசத்தைச் செய்கின்றனர். தமது தியாகம் பற்றி மக்களுக்கு உபதேசிக்கின்றனர். இதன் மூலம் தியாகம் செய்தது மக்கள் அல்ல, புலிகள் என்கின்றனர். மக்களுக்கு முன்னால் ஒரு மோசடியையே அரங்கேற்றுகின்றனர். தமது வாழ்வுடன் சம்பந்தமில்லாத ஒரு போராட்டத்தின் பெயரில் மக்கள் தமது சொந்தக் குழந்தையை, சொந்த உழைப்பை, சொந்த உயிரை தாம் சுயமாக தேர்ந்தெடுக்காத ஒரு வழியில், வலிந்து தியாகம் செய்ய வைத்துள்ளனர். புலிகள் வாழ்க என்று கோசம் போடச் செய்கின்றனர். புலிகளின் கட்டுபாட்டிலும், புலிகள் படுகொலை செய்யக் கூடிய ஆதிக்கம் பெற்ற பிரதேசங்களில் வாழும் மக்களுக்கும், புலிக்கும் இடையில் உள்ள உறவு தலைமறைவானது. அது கொரில்லா தாக்குதல் வகைப்பட்டது. மக்கள் மனத்தில் ஒன்றும், வெளியில் ஒன்றுமாக நடமாடும் பிணங்களாக வாழ்கின்றனர்.
மக்கள் கூனிக்குறுகி கைகட்டி வாய்பொத்தி உணர்வின்றி பிணங்களாக பணிந்து வாழும் சமூகத்தின் முன்நின்று, தம்மைத்தாம் தலைவர்களாக காட்டிக் கொள்வதில் புலிகள் முனைப்பு கொள்கின்றனர். சமூக அறிவோ, கல்வியறிவோ அற்ற இவர்கள் தான், சமூகத்தின் தலைவர்களாக தம்மைத்தாம் பிரகடனம் செய்கின்றனர். சமூகத்தின் முன்னணி செயல்பாட்டு கூறுகளை எல்லாம் துப்பாக்கி முனையில் அடக்கியும், தம்மால் படுகொலை செய்யப்பட்ட பிணங்களைக் காட்டி அச்சுறுத்தியும், அவர்களை அடிபணியத் செய்கின்றனர். இதில் ஒருபகுதியை தனக்கு விசுவாசமான பினாமியாக, கைக்கூலிகளாக, தமது பூட்சை மண்டியிட்டு நக்குபவர்களாக மாற்றி வைத்துக் கொண்டு, செய்தித்துறையை கட்டுப்படுத்தி தம்மைத் தாம் தலைவர்களாக எழுதிக் கொள்கின்றனர். இந்த பினாமிகள் கூட உள்ளொன்றும், வெளியொன்றுமாக கூட நக்கிப்பிழைக்கின்றனர்.
இந்தவகையில் புலிக்குள் உள்ள இரண்டாம் மட்டத் தலைமை முதலாம் மட்டத் தலைமையை எப்படிப் புகழ்வது என்று தமக்கு இடையில் போட்டியில் ஈடுபடுகின்றது. ~மேதகு, ~தலைவர், ~பிரபானிசம், ~தேசியத் தலைவர், ~மதியுரையர் ~அம்மான் போன்ற அடைமொழிகள் ஊடாக போற்றும் வழிபாட்டு முறைமை எதுவும், மக்கள் மத்தியில் இயல்பாக கிடையாது. கிளிப்பிள்ளைகள் போல் சமூகத்தின் முன் மீண்டும் மீண்டும் கூறிய போதும், மக்களுக்கு முன்னால் உருபோடப்பட்ட வார்த்தைகளை ஒப்புவித்த போதும், மக்கள் மத்தியில் உணர்வுபூர்வமான தலைமை பற்றிய நல்லதொரு சொந்த நிலைப்பாடு எதுவும் கிடையாது.
மாறாக இதை யார் செய்கின்றனர். புலிகளும், புலிப்பினாமிகளும், புலி வால்களும், புலிக்கு பின்னால் நின்று துதிபாடுபவர்களும், புலியைப் பயன்படுத்தி வியாபாரம் செய்பவர்களும் மட்டும் இதைச் சொல்லுகின்றனர். சமூக ஆதிக்கமுள்ள கூறுகளில் அச்சத்தினை விதைத்து, நிர்ப்பந்திக்கப்பட்ட வடிவங்களில் வலிந்து இவை புகுத்தப்படுகின்றது.
இவை எல்லாம் எதைக் காட்டுகின்றது. உண்மையில் மக்களின் தலைவனாக தாங்கள் இருக்க விரும்புவதும், புகழையடைய விரும்பும் விருப்பத்தைக் காட்டுகின்றது. ஆனால் இந்த வழிமுறை மக்களின் விருப்பாந்தமான ஒன்றாக அல்லாது, எதிர்நிலைப் பாத்திரத்தையே வகிக்கின்றது.
மக்களின் தலைவன் எப்படி இருக்க வேண்டும்?
இது ஒன்று மந்திர தந்திரம் கிடையாது. மக்களுக்காக அவர்களின் சொந்த சந்தோசத்துக்காக யார் தம்மை முழுமையாக அர்ப்பணிக்கின்றனரோ அவர்கள் தான் மக்களின் தலைவர்கள். சொந்த சுயநலத்தைக் கடந்து, மக்களின் துன்ப துயரங்களை யார் உணர்ந்து போராடுகின்றனரோ அவர்கள் தான் மக்களின் தலைவர்கள். வாழ்வை தனது சொந்த நலனில் இருந்தே சிந்திப்பவன், சொந்த நலனை முன்னிலைப்படுத்துவன் மக்கள் தலைவன் அல்ல. மக்களின் சமூக பொருளாதார உறவுடன், அதன் விடுதலைக்காக போராட முடியாத யாரும், மக்களின் தலைவராக ஒரு நாளுமே இருப்பதில்லை.
மக்களுக்காக போராடுவது என்பது சொந்த வாழ்வை தியாகம் செய்ய வேண்டும். மக்களின் நல்வாழ்வுக்காக சொந்த உடல் நடத்தையை, மகிழ்ச்சியை, குடும்பத்தை எல்லாம் தியாகம் செய்யும் உயர்பண்பு வேண்டும். சொந்தக் குடும்பம், சொந்த மகிழ்ச்சியை அந்த மக்களின் பொதுவோட்டத்தில் அந்த எல்லைக்குள் அடைய வேண்டும். மகிழ்ச்சி என்பது மக்களுக்கான போராட்டமே. சொந்த தனிப்பட்ட சுக துக்கங்களை கடந்து, மக்களின் சுக துக்கங்களில் ஒன்றுகலக்க வேண்டும். கார்ல் மார்க்ஸ் கூறி வாழ்ந்து காட்டியது போல் ~~விஞ்ஞானத்தில் ராஜபாட்டை என்பது கிடையாது. அதன் செங்குத்தான பாதைகளில் களைப்போடு எறிச் செல்வதற்குத் தயங்காதவர்களுக்கு மட்டுமே அதன் பிரகாசமான சிகரங்களை எட்டுகின்ற சந்தர்ப்பம் கிடைக்கும் என்றார். ஒரு மனிதனின் புகழுக்குரிய சொந்த வாழ்வு, இந்த வர்க்க அமைப்பில் கடுமையான துன்பத்துக்குரியது. இவர்கள் மட்டும் தான் மக்களின் தலைவர்களாகின்றனர்.
மக்களுக்கு உண்மையாக நேர்மையாக வெளிப்படையாக இருத்தல் முதலாவது அடிப்படையாகும். மக்களுக்கான வெளிப்படையான நேர்மையான செயற்பாடுகள் அற்ற எதுவும், மக்களுக்கு உண்மையாக இருக்க முடியாது. கார்ல் மார்க்ஸ் கூறியது போல் ~~ஒரு நபர் தனக்காக மட்டுமே பாடுபட்டால், ஒரு வேளை பிரபலமான அறிவாளியாகலாம், மிகச் சிறந்த கவிஞராகலாம், ஆனால் அவர் ஒரு குறையில்லாத உண்மையிலேயே மாபெரும் மனிதராக முடியாது பிறருக்காக வாழ்தல், தனது சொந்த வாழ்வை அதற்காகவே அர்பணித்தல் என்பது தலைமைக்குரிய பண்பாட்டில் முதன்மையானது. இதுவே தியாகத்தின் முதன்மைப் பண்பு. இதை விடுத்து மரணமல்ல. வாழ்வில் அதை வாழ்ந்து காட்டுவதன் மூலம் தலைவனாக வேண்டும்.
மக்களின் உணர்வை அதிகமான மனசாட்சியுடன் தலைமை தாங்குபவன் தான் தலைவன். மக்களின் உணர்வை அடக்கியொடுக்கி, அவர்களின் வாழ்வை பறித்து ஆள்பவர்கள் உண்மையில் மக்களின் தலைவர்கள் அல்ல. அவர்கள் தமக்காகவும், தம்மைச் சுற்றி உள்ள கும்பலுக்காகவும், மூலதனத்துக்காகவும் மக்களை ஒடுக்கும் மிலேச்சர்கள். இதனால் நெஞ்சில் ஈரமற்ற, கருணை சிறிதும் அறியாத ஈவிரக்கமற்ற கொலைகாரராக உருவாகின்றனர். இப்படி இரக்கமில்லாது இருப்பவர்கள் அதில் மகிழ்;சியடைகின்றனரே ஒழிய, மக்களின் தலைவனாக இருப்பதில்லை. சக மனிதனை துன்புறுத்தி அவன் மீது ரசனைமிக்க வக்கிரத்துடன் அதிகாரத்தை செலுத்தி தலைமையைத் தக்கவைப்பது இயல்பான ஒன்றாக கூட புனையப்படுகின்றது. அடக்குமுறையை துப்பாக்கி முனையில் உருவாக்கி அந்த சிம்மாசனத்தில் ஏறி அமர்ந்து கொண்டு, தம்மைத் தாம் தலைவராக காட்டிக் கொள்கின்றனர்.
கார்ல் மார்க்ஸ் கூறியது போல் ~~அநியாயமான முறைகள் அவசியமாக இருக்கின்ற குறிக்கோள், நியாயமான குறிக்கோள் அல்ல மிகச் சிறப்பாக, எமது போராட்டத்தின் மக்கள் விரோதத் தன்மையை இது அம்பலமாக்குகின்றது. அவசியமானது என்று கருதுகின்றவை நியாயமானவை அல்ல. மாறாக அவை அநியமானவையாக உள்ளன. எமது சமூகம் சந்திக்கும் நியாயமற்ற அநியாயங்களையே அவசியமானதாக புணர்ந்து காட்டுகின்றனர். ஒரு கொடூரமான நிலையை இது உருவாக்கின்றது. தலைமைத்துவப் பண்பாட்டையே மறுதலிக்கின்றது. சமூகப் பண்பாட்டை வக்கிரம் கொண்ட வன்மப் புத்தியாக்கின்றது.
மனித விடுதலை என்பது கற்பனையான சூக்குமம் அல்ல. தலைவர்களின் மண்டைக்குள் அவை நிரந்தரமாக ஒளித்திருப்பதல்ல. அங்கு அவை சக்குப் பிடிப்பவையல்ல. மனித விடுதலை என்பது தலைவர்களின் தனிப்பட்ட விருப்பு சார்ந்தவையல்ல. மக்களின் வாழ்வில் தான் விடுதலையும், விடுதலைத் தத்துவமும் உண்டு. ஆவியை எழுப்பவும் பூசாரியின் சுபிசேட்சத்துக்காக மக்கள் யாரும் காத்திருப்பதில்லை. மக்கள் விடுதலை என்பது, சொந்தப் போராட்டத்தை உள்ளடக்கியது. கார்ல் மார்க்ஸ் கூறியது போல் ~~ஒவ்வொரு ரகத்தையும் சேர்ந்த அடிமைத்தனத்தை நொருக்காமல் மனிதவிடுதலை என்பதே கிடையாது. எல்லாவிதமான மனித அடிமைத்தனத்தையும் முன்னிறுத்தி போராடாத, போராட வழிகாட்டாதவர்கள், யாரும் எங்கும் மக்களின் தலைவராகிவிட முடியாது. மக்கள் ஒடுக்கப்படும் நிலையில், ஒடுக்குபவனுக்கு துணை போகும் ஒருவனை, தலைவனாக மக்கள் ஒரு நாளுமே ஏற்றுக் கொள்வது கிடையாது. மக்களின் கையில் விலங்கையிட்டுவிடும் எந்த முயற்சிக்கும் துணை போபவர்கள், எப்படி மக்கள் தலைவனாக முடியும். இது சாத்தியமற்றது.
மாறாக தலைவனாக வேடமிட்டு நடிக்க முடியும். உண்மைக்குபுறம்பாக வாக்குறுதிகளை வாரி வழங்க முடியும். தனிமனித நம்பிக்கையை, கேள்வியற்ற விசுவாசத்தை கொண்டு சமூகத்தையே அடக்க முடியும்;. வன்முறை கொண்ட அதிகாரத்தின் மூலம், சமூகத்தையே பீதிக்குள்ளாக்கி தலைவர்களாக சொந்த பாதுகாப்பில் மட்டும் ஒரு இயந்திரமாகவே நடமாடமுடியும். மக்களைக் கண்டு அஞ்சும் இவர்கள், மக்ளை நெருங்குவது கிடையாது. சொந்த அகம்பாவம், மக்களின் வாழ்வின் மீதான விளையாட்டுத்தனம், மலிவான உணர்ச்சி பசப்புகள், கூலிப்புத்தி வளர்த்தல், வீரப் பெருங்கதைகளை பீற்றுதல் மூலம், ஒரு தேசத்தின் வாழ்வை கற்பழிப்பது, மக்கள் விரோதத் தலைமையின் முக்கியமான நடைமுறையாகும். சமூகத்தின் உயிரோட்டமுள்ள எந்த முன்முயற்சியையும் ஒடுக்குவது இதன் சிறப்பான வெளிப்பாடாகும்.
மக்களின் உயிரோட்டமுள்ள உண்மையான உணாச்சிபூர்வமான செயலுக்கு வழிகாட்ட விமர்சனம் சுயவிமர்சனம் அவசியமானது. கார்ல் மாhக்ஸ் கூறியது போல் ~~..விமர்சனம் என்பது அறிவின் உணர்ச்சியல்ல, அது உணர்ச்சியின் அறிவு. அது சிறு கத்தியல்ல, அது ஒரு ஆயுதம் என்றார். இந்த கூறு சமூகத்திலின்றி, எதுவும் உணர்வு பூர்வமானவையல்ல. மாறாக கைதேர்ந்த நடிப்பே உறவின் விழுமியங்களை உருவாக்கின்றது. இது புலிகள் மட்டுமல்ல, புலிகள் பற்றி மக்களும் இதை எதிர்நிலையில் கையாளுகின்றனர். ஏன் புலிக்குள்ளான உறவுகள் கூட இப்படித் தான் உள்ளது. காhல் மாhக்ஸ் கூறியது போல் ~~...அடிமைத் தனத்தின் எல்லா உறவுகளும்; இந்த உறவின் உருத்திரிபுகளும் விளைவுகளுமே என்றார்.
எமது தேசத்தில் மனித உறவுகள் சார்ந்த பண்பாடுகள் கூட, இந்த எல்லைக்குள் உருக்குலைந்து சிதைந்து விடுகின்றது. புலித் தேசியத்தில் பரஸ்பர உறவுகள் உருத்தெரியாது சிதைந்து தலைமறைவான ஒன்றாகிவிடுகின்றது. எதுவும் நேர்மையான உறவாக இருப்பதில்லை. உறவுகளில் உள்ள சந்தேகம் அனைத்தையும் அரித்தெடுக்கின்றது. சந்தேகம் அனைவரையும் சிறுவராக, பலவீனமானவராக, மன உறுதி இல்லாதவராக, எதற்கும் லாயக்கற்றவராக மாற்றிவிடுகின்றது. பிரமைபிடித்த உறவும், கண்ணை மூடி வழிபாட்டு உறவும் எங்கும் எதிலும் கொலோசுகின்றது. காய் அடிக்கப்பட்ட சமூகமாக, சமூக உறவாகவே மாறிவிடுகின்றது. எல்லாவகையான ஆன்மீக நம்பிக்கைகளையும் இல்லாததாக்கி விடுகின்றது. அவநம்பிக்கையே சமூகத்தில் புரையோடிப் போகின்றது. தனக்குத் தானே போலியாக இருத்தல் என்பதே எப்போது உணரப்படுகின்றது. மக்கள் தலைவர்கள் என்று கூறிக் கொள்பவர்கள் கூட தமக்கும் தாம் போலியாகவே வாழ்கின்றனர். எதிலும் உண்மையாக, நேர்மையாக இருப்பதில்லை. இவர்களின் வார்த்தையை நம்புவதற்கு உலகத்தில் யாரும் இருப்பதில்லை.
அந்தளவுக்கு தலைவர்களின் போலித்தனமான பசப்பல்கள், நேர்மையற்ற செயல்கள் உண்மையை குழிதோண்டி புதைத்துவிட்டது. சமூகம் எதையும் நம்பத் தயாரற்ற நிலையை அடைந்துவிட்டது. ஊகங்கள் உடன் அதிருப்த்தியுற்று ஊமையாகின்றனர்.
சமூகத்துக்கு வழிகாட்டும் வகையில் சுதந்திரமான அபிப்பிராயம், துணிகரமான கற்பனை பாய்ச்சல், பிரச்சனைக்கு முடிவு காண்பதில் தற்சிந்தனையான அணுகுமுறையற்ற தலைமைகள், ஆயுதம் ஏந்திய கூலிப் படைகளை நம்பியே வாழ்கின்றனர். அதன் நலன் தான் தன் நலன் என்ற அடிப்படையில், தன்னைச் சுற்றியே வேலியிடுகின்றனர். சுய திருப்தியில் திளைத்துப் போகின்றனர். போலியான வாழ்வையே உண்மையான சமூக வாழ்வாக காட்டி வாழத் தொடங்குகின்றனர். மக்கள்விரோத செயல்கள் மூலம் தனது கோஸ்டியை அதற்கு வெளியில் நிறுத்திக் கொள்கின்றது. தாம் உருவாக்கிய சொந்தச் சட்டத்துக்கு, தாமே கட்டுப்படுவதில்லை.
அவர்கள் செய்ய நினைப்பது எல்லாம் மக்களின் உழைப்பு வழங்கும் வற்றாத செல்வத்தை, அபகரிப்பதிலேயே அதிகமான அக்கறை காட்டுகின்றனர். எப்போதும் தம்மை பணத்தால் நிரப்ப வேண்டும் என்ற வேட்கையில், தனது காலத்தையும் சொந்த அரசியல் நடத்தையையும் தீர்மானிக்கின்றனர். இதில் ஈவிரக்கமற்ற வகையில், கல்நெஞ்சக்காரராக மாறி மனிதத்துவத்தையே குதறுகின்றனர். மக்களையிட்டு ஒரு கணம் கூட இந்தத் தலைமைகளால் சிந்திக்க முடிவதில்லை. சொந்த மூளையில் மக்கள் நலன் பற்றி எதுவும் இருப்பதில்லை. இதயமற்ற தேசியத்தை கொண்டு இதயமுள்ள சமூகத்தை புணருகின்றனர். தீமையை அல்லது நன்மையை ~~புறநிலை உறவுகளில் விளைவுகளில் காண வேண்டும் என்றார் கார்ல் மார்க்ஸ். எமது சமூகத்தில் புறநிலை மனித உறவுகள் தீமையின் பிறப்பிடமாகவே உள்ளது. மனிதத்துவம் எதுவுமற்ற வரண்ட உறவுகளிடையே எமது சமூகத்தின் சிசிலமடைந்த வன்மத்தையே நாம் காண்கின்றோம். ஆக்கமும், ஆக்கத்திறனுமற்ற வழிகாட்டல், அழிவையும் அழிவுத்திறனையும் வழிகாட்டுகின்றது. எமது தலைமையும் அது வழிகாட்டும் ஆற்றலும் மனிதத்தை வென்றல்ல அடக்கியாள்வதில் தான் வெளிப்படுகின்றது.
இதற்கு மாறாக மக்கள் தலைவன் என்பது சொந்த தியாகத்தை அடிப்படையாக கொண்டது. மற்றவனின் நலனை முன்னிறுத்தி, தன்னை அதற்காக அர்பணித்துப் போராடுவதாகும். இதை நாம் எமது தலைமைகளிடம் எங்கே தேடுவது. கார்ல் மார்க்ஸ் கூறியது போல் ~~மனிதகுலத்தின் நன்மைக்காக நாம் சிறப்பாகப் பாடுபடுவதற்குரிய வேலையை நாம் தேர்ந்தெடுத்துவிட்டால், அதன் எந்தச் சுமையும் நம்மை அழுத்த முடியாது, ஏனென்றால் அது எல்லோருடைய நன்மைக்காகவும் செய்யப்படுகின்ற தியாகம் இது தான் உண்மையான தியாகம். சமூகத்துக்காக தன் வாழ்வை தியாகம் செய்வதே தியாகம். இதை எந்த தலைமையிடம் நாம் இன்று இதைக் காணமுடியும். தியாகங்கள் குறுகிய சொந்த நலனுக்காக, ஒரு குறிப்பிட்டவர்களின் நலனுக்காக தியாகங்கள் கூட திருட்டுத்தனமாக திருடப்படுகின்றது. இதுவே எமது மண்ணில் நடக்கின்றது.
தம்மைத் தாம் தலைவராக காட்டிக் கொள்பவர்கள், எந்த சமூகச் சுமையையும் சுமந்து கொள்ளாது வாழ முற்படுகின்றனர். சொகுசான சொந்த ஆடம்பரத்தில், மற்றவனின் உழைப்பில் வாழ்வதற்காக, உயிர்ப்புள்ள சமூகத்தை மலடாக்குகின்றனர். சமூகத்தை கண்டு ஏற்படும் பீதி, சொந்த கோழைத்தனத்தை உருவாக்குகின்றது. இதனால் அதற்கு இசைவான சமூக விழுமியங்களை திணிக்கின்றனர். கார்ல் மாhக்ஸ் குறிப்பிடுவது போல் ~~கோழைத்தனத்தினால் தூண்டப்படுகின்ற சட்டங்களில் குறிப்பிடத்தக்க பண்பு கொடுஞ்செயல் ஏனென்றால் கோழைத்தனம் கொடுமையாக நடந்து கொள்கின்ற போது மட்டுமே சுறுசுறுப்பாக இருக்கும் என்றார்.
கொடுமையாகவும், ஈவிரக்கமற்ற வகையில் செய்யும் கொடுஞ்செயல்களில் ஒரு தலைமை ஈடுபடுகினறது என்றால், அதன் பின்னால் ஒரு கோழைத்தனம் உள்ளது. அந்தக் கோழைத்தனம் என்பது மக்களின் நலன்களையிட்டு அக்கறைப்படாத நிலையில் ஏற்படும் சொந்த பீதிதான் அது. சொந்த நலனை மட்டும் இட்டு அக்கறைப்படும் போது, மக்களுக்கு எதிரான கொடூரமான வக்கிரபுத்தி கொண்ட வன்முறையை ஏவிவிடுவது குறித்த தலைமைகளின் தனிச்சிறப்பான பண்பாகும். இதை பின்னால் அவர்கள் ரசிக்கத் தொடங்கி, அதையே தொழிலாக கொள்கின்றனர். இதை நியாயப்படுத்த கோட்பாடுகளை, கோசங்களை கண்டறிவதன் மூலம், சமூகத்தின் உதிரி வர்க்கத்தை தன் பின்னால் திரட்டிக் கொண்டு பாசிச வெறியாட்டத்தையே சமூகம் மீது நடத்துகின்றனர்.
கார்ல் மார்க்ஸ் கூறியது போல் ~~சுயநலத்தின் தர்க்கத்தைக் காட்டிலும் பயங்கரமானது வேறு எதுவுமில்லை என்றார். சமூகத்தின் நலனை மறுத்து, சுயநலத்தின் நலனை முன்னிறுத்தும் வாதங்கள் கோட்பாடுகள் தர்க்கங்கள் மிகவும் பயங்கரமானவை. ஈவிரக்கமற்ற, கோழைத்தனமான வன்முறையைக் கொண்டு, உயிருள்ள சமூகங்களின் மீது உயிரற்ற இதுவே பாய்ந்து குதறுகின்றது. இப்படி வாழ்பவர்கள் எப்படி தலைவராக முடியும்? எப்படி தான் மேதைகளாக முடியும்? எந்த மக்கள் இதை அங்கீகரிப்பார்கள்?
காhல் மாhக்ஸ் கூறியது போல் ~~எது மிருகத் தன்மையோ அது மனிதனுக்கு உரியதாகிறது. எது மனிதத் தன்மை உடையதோ அது மிருகமாகின்றது எவ்வளவு சரியான ஒரு கூற்று. மனிதத்தை இழந்து, மனிதத்துவத்தை இழந்த வன்மம் கொண்ட ஒரு இழிந்த மிருகமாக நாம் நடத்தும் வெறிக் கூத்துக்கு மேல், எம்மை நாமே தலைவர்கள் என்கின்றோம், மேதைகள் என்கின்றோம். கார்ல் மார்க்ஸ் கூறுகின்றார் ~~இரண்டு மக்களினங்கள் தீர்க்க முயன்று கொண்டிருக்கிற பிரச்சினைகளை ஒரேயொரு சொற்றொடரில் தீர்த்துவிடுகின்ற கலையை நாம் கற்கவில்லை என்கின்றார். ஆனால் பிரபானிசம் ஒரேயொரு சொற்தொடரில் தீர்க்க முனைகின்றது. துப்பாக்கியால் சுடுவதே அது. இதை பிரபானிச தலைமை சொந்த மக்களுக்குள்ளும் இதைத் தான் தீர்வாக வைக்கின்றது. சமூகங்களை கையாள்வதிலும், மனித முரண்பாடுகளை கையாள்வதிலும் உள்ள அணுகுமுறை கூட எங்கும் எதிலும் படுகொலை அரசியலே. இதற்குத் தான் பிரபாகரன் தலைவனாக இருக்கின்றார் என்றால், எப்படி ஒரு இனத்தின் தலைவனாக இருக்க முடியும்?
பரஸ்பர நம்பிக்கை இல்லாத அனைத்தும் மலட்டுத்தனமானது. இங்கு உணர்ச்சி பூர்வமான உணர்வுகள் வெளிப்படுவதில்லை. உருபோட்ட நம்பிக்கைகள், விசுவாசங்கள், இதுவே சமூகத்தை இழிநிலைக்குள்ளாக்கியபடி வழிநடத்துகின்றது. மக்கள் விரோதச் செயல்களை, அதாவது சட்டவிரோத செயல்களை சட்டமாக்கி, அதையே ஒழுக்கம், தியாகம், பண்பாடாக புணர்ந்து சமூகத்தின் வேதனையில் தன்னை உயிர்ப்புள்ளதாக காட்டி நடிக்கின்றனர்.
மக்களின் பெரு மூச்சை மோந்து கண்காணிக்கும் அடிவருடிக் கும்பல்கள், பெருமூச்சு வார்த்தையாக வருவதை அனுமதிப்பதில்லை. மீறி வெளி வந்தால் ~துரோகி, ~கைக்கூலி ~பொம்பளைப் பொறுக்கி , போன்ற அடைமொழிகள் மூலம் புணர்ந்து கொன்று விடுகின்றனர். இப்படித் தான் தலைமை, தன்னையும் தனது சொந்த இருப்பபையும் பாதுகாக்கின்றது. அடுத்தவனின் கழுத்தை வெட்டுவதன் மூலம், தம்மைத்தாம் தலைவர்கள் என்கின்றனர். இதுவே இன்றைய எமது எதார்த்தம். முட்டாள்கள் முட்டாள்களாகவே நீடிப்பர்.
குறிப்பு: இக்கட்டுரை தமிழ் மக்களின் தேசிய விடுதலைக்கான சமூக ஒடுக்குமுறைகளை ஒழிக்கும் போராட்டத்தை முன்னெடுப்பதாக பீற்றும் புலிகள பற்றி குறிப்பாக விசேடமாக ஆராய்கின்றது. இது பேரினவாத பாசிச சிங்கள ஆட்சியாளர்களையோ, அதனுடன் கூடி நிற்கும் அரசியல் கட்சிகளையே, அரசியல் ரீதியாக தமிழ் மக்களுக்கு துரோகம் செய்த துரோகக் குழுக்களையே இந்த விமர்சனம் எந்தவிதத்திலும் பாதுகாக்க முற்படவில்லை. ஏன் சர்வதேச ரீதியாக ஏகாதிபத்தியங்களுடன் ஜனநாயகத்தின் பெயரில் கூடிக்கூலவும் உதிரிகளும், சிறுகுழுக்கழும் கூட விதிவிலக்கற்ற மக்கள் விரோதிகள் தான். சமூகத்தின் மீது சவாரிவிடும் இந்த மக்கள் விரோதிகள் புலிக்கு நிகாரனவர்கள். சந்தர்ப்பங்கள் சூழ்நிலைக்கு ஏற்ப வேஷம் கட்டி நாடகமாடும் கயவர்கள் தான் இவர்கள். ஈவிரக்கமற்ற மக்கள் விரோதிகள் இவர்கள். மக்களுக்காக எதையும் உண்மையாக சொல்ல நேர்மையற்ற பொறுக்கிகள் தான் இவர்கள். எனது இக்கட்டுரை குறிப்பாக புலிகள் பற்றி ஆராய்ந்த போதும், இது உலகம் தழுவிய மக்கள் விரோத சக்திகளின் பொதுவான கட்டமைப்பை அடிப்படையாக கொண்டு விவாதிக்கின்றது.
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
test
Post a Comment