தமிழ் அரங்கம்

Tuesday, March 21, 2006

தமிழக தேர்தல்:பதவியைப் பிடிக்க லாவணி!

தமிழக தேர்தல்:பதவியைப் பிடிக்க லாவணி!ஏகாதிபத்திய சேவையில் ஓரணி!

நன்றி புதிய ஐனநாயகம் மார்ச்

வமானம்! தமிழகம் மிகப்பெரும் அவமானத்தைச் சுமந்து நிற்கிறது. தனது""பணப்புழக்க'' ஆட்சியில், போராடிய விவசாயிகளையும் தொழிலாளர்களையும் அரசு ஊழியர்களையும் மிருகத்தனமாக ஒடுக்கி வந்த பாசிச ஜெயா, தேர்தல் நெருங்கிவிட்டதும் இப்போது சலுகைகளை வாரியிறைக்கிறார். கடன்சுமை தாளமுடியாமல் தஞ்சை விவசாயிகள் தற்கொலை செய்து கொண்ட போது, ""வைப்பாட்டி வைத்திருந்த விசயம் வெளியே தெரிந்து விட்டதால் தற்கொலை செய்து கொண்டதாக'' அவதூறை அள்ளி வீசிய அதே ஜெயா, இப்போது விவசாயிகள், நெசவாளர்கள், மாணவமாணவியர், சிறுபான்மையினர், அரசு ஊழியர்கள் என அனைவருக்கும் கோடிகளில் திட்டங்களை அறிவித்து இழுக்கப் பார்க்கிறார். அடுத்தகட்டமாக லாட்டரி, சாராயம், மணல் குவாரி, தனியார் பேருந்து முதலானவற்றைத் திறந்து விடுவதற்குக் காய்களை நகர்த்துகிறார்.

""தமிழர்கள் சூடு சொரணையற்ற நாய்கள். எட்டி உதைத்தாலும் எலும்பை வீசினால் வாலாட்டும் இழிபிறவிகள்'' என்று பார்ப்பனபாசிசத் திமிரோடும் கான்வெண்ட் கொழுப்போடும் தமிழக மக்களை மீண்டும் இச்சலுகை அறிவிப்புகள் மூலம் இழிவுபடுத்தி வருகிறது பாசிச ஜெயா கும்பல். ""எல்லோரையும் விட சர்வ வல்லமைமிக்க மக்கள் கூட்டணியைக் கட்டிக் கொண்டுள்ளதாக'' அறிவித்துக் கொண்டு, பண பலம்சாதிய பலம் கிரிமினல் பலத்துடன் சட்டமன்றத் தேர்தலைச் சந்திக்கக் கிளம்பியுள்ளது; ""அன்னபூரணி, எம்மைப் பாரு நீ!'' என்று டிஜிட்டல் பேனர்களை வைத்து, எடுபிடிகள் தமது விசுவாசத்துக்குக் கருணை காட்டுமாறு "அம்மா'வுக்கு வேண்டுகோள் விடுத்து, தேர்தல் திருவிழாவைச் சூடேற்றுகின்றனர்.

தமிழகத்தின் அவமானகரமான இந்தப் பாசிசப் பேயாட்சிக்கு எதிராகப் போராடாமல் ஐந்தாண்டு காலம் முடங்கிக் கிடந்த எதிர்க்கட்சிகள், மக்களின் அதிருப்தியைச் சாதகமாக்கிக் கொண்டு தமது ஏழு கட்சி கூட்டணி பலத்தோடு தேர்தலைச் சந்திக்கக் கிளம்பியுள்ளன. கடந்த நாடாளுமன்றத் தேர்தல் வெற்றியைப் போலவே, இப்போது சட்டமன்றத் தேர்தலிலும் வெற்றிக் கனி பாலில் விழுந்து தம் வாயில் வந்து விழுந்து விடும் என்று தி.மு.க. தலைமையிலான எதிர்கட்சி கூட்டணி நம்புகிறது.

ஏழு கட்சி கூட்டணி தி.மு.க.வுக்கு பலம் என்றால், அதுவே அதன் பலவீனமாகவும் உள்ளது. கூட்டணியிலுள்ள கட்சிகள் அனைத்தும் அதிகப்படியான இடங்களைக் கேட்கின்றன. தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை அமைப்பது, கூட்டணிக் கட்சிகளின் எதிர்பார்பையும் நிறைவேற்றுவது எப்படி என்று புரியாமல் தடுமாறுகிறது தி.மு.க.

தொகுதிகளைக் கேட்பதில் தியாக உணர்வு தேவை என்று கூட்டணி கட்சிகளுக்கு உபதேசித்தார் கருணாநிதி. இதை ஏற்க மறுத்து, ""கூட்டணியில் மூன்றாவது பெரிய கட்சி நாங்கள்தான்; நாங்கள் கூட்டணி சேரும் கட்சிதான் ஆட்சியமைக்க முடியும்; எனவே, சட்டப் பேரவையில் கௌரவமான பிரதிநிதித்துவம் கிடைக்கும் வகையில் இடங்கள் ஒதுக்கப்பட வேண்டும்'' என்று வைகோ பத்திரிகைகள் மூலமாகக் கோரிக்கை வைத்தார். அவருக்கு அடுத்தநிலையில் உள்ள ம.தி.மு.க. தலைவர்களோ, தி.மு.க.வை மறைமுகமாகச் சாடி மேடைகளில் பேசிவந்தனர். அதற்கு ஏற்றார்போல அ.தி.மு.க. அவைத் தலைவர் காளிமுத்து, வெளிப்படையாகவே வைகோவுக்கு அழைப்பு விடுத்தார். இத்தனைக்கும் பிறகும் நடப்பது எதுவுமே தெரியாததைப் போல மவுனம் காத்தும், ஈரோட்டமாகவும் மதில் மேல் பூனையாகவும் நின்றார் வைகோ. கடந்த சில வாரங்களாக நடந்த இந்தக் கண்ணாமூச்சி ஆட்டம் முடிவுக்கு வந்து, தாம் தி.மு.க. கூட்டணியில் நீடிப்பதாக வைகோ இப்போது அறிவித்துள்ளார். இந்தக் கொள்கை மறவரின் சந்தர்ப்பவாதத்தையும் ஊசலாட்டத்தையும் மூடி மறைத்து இதையே போர்த் தந்திரம், வியூகம் என்று பெருமைப்பட்டுக் கொள்கிறது, அக்கட்சி.

கூட்டணி முடிவான போதிலும் தொகுதிப் பங்கீடுகள் இன்னும் முடிவாகவில்லை. தேர்தலுக்கு இன்னும் அவகாசம் இருப்பதால், ம.தி.மு.க. உள்ளிட்டு எந்தக் கட்சியும் எந்தப் பக்கமும் அணி மாறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. கடைசியில், கொள்கைக்கான கூட்டணி என்பதெல்லாம் காலாவதியாகி, இத்தனை தொகுதிகள் கொடுத்தால் இந்தக் கூட்டணி; இல்லையேல் அந்தக் கூட்டணி என்பதாக ஓட்டுக் கட்சிகளின் பிழைப்புவாதம் நாறத் தொடங்கிவிட்டது. இதை நன்குணர்ந்த பாசிச ஜெயா, ""கூட்டணிக்கான கதவுகள் திறந்தே இருக்கின்றன. என் அனுபவத்தில் கூட்டணி கடைசி நேரத்தில்தான் முடிவாகிறது'' என்று பிழைப்புவாத பொறுக்கி அரசியலின் மகிமையைச் சந்தி சிரிக்க வைக்கிறார். "கொள்கையாவது, வெங்காயமாவது! எல்லாமே சூட்கேசில் அடக்கம்!' என்று பா.ம.க.வின் 3 எல்.எல்.ஏ.க்களை விலை பேசியும், திண்டிவனம் ராமமூர்த்தி கும்பலை வைத்து காங்கிரசை உடைத்தும் கொக்கரிக்கிறார் பாசிச ஜெயா. நடிகர் விஜயகாந்த் ஒரு கட்சியைத் தொடங்கி நடத்துமளவுக்கு தமிழகத்தின் பிழைப்புவாத பொறுக்கி அரசியல் புதிய பரிமாணத்தை எட்டியிருக்கிறது.

இப்பிழைப்புவாத பொறுக்கி அரசியல் லாவணியில் பாசிச ஜெயா சசிகலா கும்பல் அடித்த கொள்ளை, டான்சி வழக்கு, சொத்துக் குவிப்பு வழக்கு, அரசு ஊழியர் போராட்டம், போக்குவரத்துத் தொழிலாளர் போராட்டம், தஞ்சை வறட்சி பட்டினிச் சாவுகள், நெசவாளர்கள் வாழ்விழந்து கஞ்சிக்குக் கையேந்தி நின்ற அவலம், காவிரி நீரில் தமிழகத்தின் உரிமை தொடர்ந்து மறுக்கப்படும் அநீதி, சுனாமி மற்றும் வெள்ளப் பேரழிவுகள், வெள்ள நிவாரணப் படுகொலை என அனைத்தும் கடந்தகால நினைவுகளாக மாற்றப்பட்டு விட்டன.

பாசிசப் பெருச்சாளியைத் தப்பவிட்டு எலிப் புழுக்கைகளை அடித்தவன் கதையாக, தேர்தல் நெருங்கிவிட்டதால், டாஸ்மாக் கடைகளை ஆக்கிரமித்துள்ள மிடாஸ் கோல்டன் டிஸ்லரி என்ற சாராயக் கம்பெனி சசிகலாவுக்குச் சொந்தமானது என்றும், சிப்காட் நில விற்பனையில் ரூ. 200 கோடி ஊழல் நடந்துள்ளது என்றும் ஜெயா கும்பலுக்கு எதிராகக் குற்றம் சாட்டினார், கருணாநிதி. ஜெயாவின் கணக்குத் தணிக்கையாளர், மருத்துவர் வீடுகளில் மைய அரசின் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

இதற்குப் பதிலடியாக, ஏகபோகமாகக் கொள்ளையடித்து வந்த கருணாநிதி குடும்பத்தின் சுமங்கலி கேபிள் விஷன் உள்ளிட்ட சில எம்.எஸ்.ஓ.க்களை தமிழக அரசு கையகப்படுத்தும் சட்டத்தை உடனே நிறைவேற்றினார், பாசிச ஜெயா. அவ்வளவுதான்! கருணாநிதி வாய்மூடிக் கொண்டார். ஜெயா அறிவித்த கேபிள் டி.வி. சட்டமும் செயல்வடிவம் பெறவில்லை. "நீ என்னைச் சீண்டாதே! நான் உன்னைச் சீண்டமாட்டேன்' என்று இருபெரும் கோடீசுவரர்களும் எழுதப்படாத ஒப்பந்தம் போட்டுக் கொண்டு, இந்த விவகாரத்தை நீர்த்துப் போகச் செய்து விட்டார்கள். இந்த விவகாரம் மட்டுமின்றி, நாட்டை அடிமைப்படுத்தும் மறுகாலனியாக்க கொள்கைகளை விசுவாசமாக செயல்படுத்துவதிலும், மக்களை ஒடுக்குவதிலும் ஆளுங்கட்சிக்கும் எதிர்க்கட்சிகளுக்குமிடையே எழுதப்படாத ஒப்பந்தம்தான் நிலவுகிறது.

விவசாயத்தையும் கைத்தறியையும் ஒழிப்பது முதல் ரேசன் கடைகளை மூடுவது வரை அனைத்துமே உலகவங்கியின் ஆணைகள். கல்விக் கட்டண உயர்வு முதல் பேருந்துக் கட்டண உயர்வு வரை எல்லாமே உலக வர்த்தகக் கழகத்தின் நிபந்தனைகள். வேலை நிறுத்தத் தடைச் சட்டம் முதல் பொடா சட்டம் வரை அனைத்துமே அமெரிக்காவின் பன்னாட்டுக் கம்பெனிகளின் கட்டளைப்படி போடப்படும் கருப்புச் சட்டங்கள்.

உலக வர்த்தகக் கழகத்தின் ஆட்சியை, உலக வங்கியின் அதிகாரத்தை எந்த ஓட்டுக்கட்சியும் எதிர்ப்பதில்லை. நான் ஹ_ண்டாயை அழைத்து வந்தேன், நான் நோக்கியாவை இழுத்து வந்தேன் என்று பன்னாட்டுக் கம்பெனிகளுக்கு போட்டிப் போட்டுக் கொண்டு சேவை செய்யும் இக்கட்சிகள் அனைத்தும் ஏகாதிபத்திய எடுபிடிகள்; உலக வர்த்தகக் கழகத்தின் கங்காணிகள்; உலக வங்கியின் அடிமைகள்.

எனவேதான், மைய அரசில் ஆளுங்கட்சியாகவும் மாநிலத்தில் எதிர்க்கட்சிகளாகவும் உள்ள தி.மு.க., பா.ம.க., ம.தி.மு.க. இடதுவலது கம்யூனிஸ்டுகளும் காங்கிரசும், ஜெயலலிதாவை எதிர்க்கின்றனவே தவிர, ஜெயலலிதாவின் மறுகாலனியாக்க நடவடிக்கைகளை எதிர்ப்பதில்லை. அதேபோல கருணாநிதியையும் காங்கிரசையும் எதிர்க்கும் ஜெயா, மைய அரசின் மறுகாலனியாக்கக் கொள்கைகளை எதிர்ப்பதில்லை. நெல்லையில் கொலைகார கோக்கின் கொள்ளைக்கு பாசிச ஜெயா அரசு பாதுகாப்பு கொடுத்துள்ளதை எதிர்த்து இக்கட்சிகள் வாய்திறக்காமல் நழுவிக் கொள்கிறதென்றால், சிறு வியாபாரிகளை ஒழித்துக்கட்ட சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டுக்கு தாராள அனுமதி அளித்துள்ள மைய அரசுக்கு எதிராக ஜெயா வாய் திறக்க மறுக்கிறார். ஏழு கட்சி கூட்டணி, மக்கள் கூட்டணி என்ற வார்த்தைகளுக்கு பின்னே மக்கள் விரோத மறுகாலனியாதிக்கக் கூட்டணி ஒன்றுதான் உள்ளது.

கல்வி இல்லை வேலை இல்லை மருத்துவம் இல்லை உணவு இல்லை; தண்ணீர் இல்லை வாழ்வு இல்லை. வாழ்விழந்த விவசாயிகளும் வேலையிழந்த தொழிலாளர்களும் பலகோடிப் பேராக உள்ள நிலையில் தமிழகத்தின் உயிராதாரமான இப்பிரச்சினைகளுக்குக் காரணம் என்ன என்பதைப் பற்றி எந்த ஓட்டுக்கட்சியும் வாய் திறப்பதில்லை. விவசாயம் நசிந்து போனதற்கும், கைத்தறி விசைத்தறி சிறுதொழில்களின் சிதைவுக்கும், பஞ்சம் பிழைக்க மக்கள் ஊரை விட்டு ஓடும் அவலத்திற்கும் இந்தத் தேர்தலுக்கும் என்ன உறவு? மறுகாலனியாக்கத்துக்கும் விவசாயம் சிறுதொழில்களின் அழிவுக்கும் என்ன உறவு? இவையனைத்தும் ஓட்டுக் கட்சிகளாலும் செய்தி ஊடகங்களாலும் திட்டமிட்டே இருட்டடிப்பு செய்யப்படுகின்றன. அரசியலற்ற அற்ப விவகாரங்களும் கிசுகிசுக்களும் வதந்திகளும் ஊகங்களுமே அரசியலாக ஊதிப் பெருக்கிக் காட்டப்படுகின்றன.

இதனால்தான், எந்தவொரு ஓட்டுக் கட்சிக்கும் ஆதரவு அலை வீசவில்லை; எதிர்ப்பு அலையுமில்லை. ஓட்டுக்கட்சிகளுக்கும் முன்நிறுத்திப் பேச முக்கிய விசயமும் இத்தேர்தலில் இல்லை. வென்றாலும் தோற்றாலும் இந்த ஓட்டுப் பொறுக்கிகள் எதையும் இழக்கப் போவதில்லை; எந்தக் கூட்டணி வென்றாலும் தமிழக மக்கள் எதையும் பெறப்போவதுமில்லை.

வசந்தன்

No comments: