தமிழ் அரங்கம்

Sunday, April 9, 2006

தமிழகத்தைத் திரும்பிப் பார்க்க வைத்த ஆர்ப்பாட்டம்

'போர்க் குற்றவாளி ஜார்ஜ் புஷ்ஷே, திரும்பிப் போ!"
-தமிழகத்தைத் திரும்பிப் பார்க்க வைத்த புரட்சிகர அமைப்புகளின் ஆர்ப்பாட்டம்


ஜார்ஜ் புஷ் கடந்த மாதம் இந்தியாவிற்கு வந்து சென்றபொழுது, எந்தவொரு அமெரிக்க அதிபரும் சந்தித்திராத எதிர்ப்பை எதிர்கொள்ள வேண்டியிருந்தது.

நக்சல்பாரி புரட்சிகர அமைப்புகளான ம.க.இ.க., பு.மா.இ.மு., வி.வி.மு., பு.ஜ.தொ.மு. ஆகிய அமைப்புகள் ஒன்றிணைந்து, பிப்ரவரி 27ஆம் தேதி தொடங்கி, புஷ் அமெரிக்காவிற்குத் திரும்பிச் செல்லும் வரை, புஷ் எதிர்ப்பு இயக்கத்தைத் தமிழகத்தின் பல்வேறு நகரங்களிலும், கிராமப்புறங்களிலும் நடத்தின. ""உலக மேலாதிக்கப் போர் வெறியன் புஷ்ஷே திரும்பிப் போ! சர்வதேச பயங்கரவாதி போர் குற்றவாளி புஷ்ஷைத் தூக்கில் போடுவோம்'' என்ற முழக்கங்களை முன் வைத்து சுவரொட்டிகள், பிரசுரங்கள், விளம்பரத் தட்டிகள், கண்டன ஊர்வலம், ஆர்ப்பாட்டம், பேருந்துப் பிரச்சாரம் எனப் பல்வேறு வடிவங்களில் இவ்வியக்கம் மேற்கொள்ளப்பட்டது.

கண்டன ஊர்வலங்களிலும், பேருந்து பிரச்சாரத்தின் பொழுதும், பொது மக்கள் கூடும் இடங்களிலும் புஷ்ஷைப் போல முகமூடி அணிந்த ஒருவரை, நாய்ச் சங்கிலியால் கட்டி, செருப்பில் அடிப்பது போன்ற காட்சி விளக்கத்துடன் இவ்வியக்கம் நடந்தது.

புஷ் இந்தியாவில் காலடி எடுத்து வைத்த மறுநிமிடமே, புஷ்ஷின் உருவ பொம்மையை, பொதுமக்கள் கூடும் இடங்களில் தூக்கில் கட்டித் தொங்கவிட்டு, அதன் கீழே, ""சர்வதேச பயங்கரவாதி போர் குற்றவாளி புஷ்ஷைத் தூக்கில் போடுவோம்'' என்ற முழக்கம் முன்வைக்கப்பட்டது.

இந்த எதிர்ப்பு இயக்கம், நமது நாட்டை அமெரிக்க அடிமைத்தனத்தில் இருந்து விடுதலை செய்ய இன்னுமொரு சுதந்திரப் போராட்டம் நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்துவதாக அமைந்தது.

சென்னையில் மதுரவாயல் பகுதியில் அமைந்துள்ள வெங்காயமண்டியில் இருந்து ஊர்வலம் தொடங்குவதற்கு பு.ஜ.தொ.மு. அனுமதி கோரியிருந்தது. இதற்கு முதலில் அனுமதி அளித்த போலீசார், ஊர்வலம் நடைபெறவிருந்த பிப்.28 காலையில் அனுமதி மறுத்து விட்டனர். இதுபற்றி மாநகர ஆணையரிடம் முறையிட்டதற்கு, ""இது அரசு உத்தரவு, நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது'' எனக் கைவிரித்து விட்டார். இத்தடையை மீறி கண்டன ஊர்வலம் நடத்துவதற்கு தோழர்கள் வெங்காயமண்டியில் கூடியவுடனேயே, அதைத் தடுப்பதற்கு மாவட்ட போலீசு கண்காணிப்பாளர் பறந்து வந்தார். அந்த அதிகாரியிடம் பு.ஜ.தொ.மு. தோழர்கள், ""இது எங்களின் ஜனநாயக உரிமை'' என விடாப்பிடியாகப் போராடி, கண்டன ஆர்ப்பாட்டத்தை வெற்றிகரமாக நடத்தினர்.

கோவையில் 01.03.06 அன்று நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த ஆர்ப்பாட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்துவிட்டனர். எனினும், அப்பகுதி தோழர்கள் புஷ் வருகையை எதிர்த்து வெளியிடப்பட்ட 2,000 துண்டுப் பிரசுரங்களைப் பொதுமக்கள் மத்தியில் கொடுத்து பிரச்சாரம் செய்தனர். அன்றே, நகரின் முக்கியமான 30க்கும் மேற்பட்ட இடங்களில் புஷ்ஷின் உருவ பொம்மையைத் தூக்கிலிட்டு, ஆயிரக்கணக்கான பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தனர்.

ம.க.இ.க.வும் தோழமை அமைப்புகளும் இணைந்து திருச்சியில், பிப்ரவரி 27ஆம் தொடங்கி 3.3.06 முடிய புஷ் எதிர்ப்பு இயக்கம் மேற்கொண்டன. புஷ் முகமூடி அணிந்த ஒருவரைச் சங்கிலியால் கட்டிப் பிணைத்து, ஒவ்வொரு பேருந்திலும் ஏற்றி, ""இவன்தான் கொலைகாரன்; இவனை இந்தியாவிற்குள் நுழையவிடக் கூடாது'' என்ற வகையில் பேருந்து பிரச்சாரம் நடத்தப்பட்டது. பிப்ரவரி 28ஆம் தேதி அண்ணாசிலை அருகேயும், மார்ச் 1 அன்று புத்தூர் நாலு ரோட்டிலும், 3.3.06 அன்று திருவரம்பூர் பேருந்து நிலையத்திலும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.

பிப். 28 அன்று ஆழ்வார் தோப்பில் நடைபெற்ற தெருமுனைக் கூட்டத்தின் பொழுது புஷ் முகமூடி அணிந்திருந்த தோழரைச் சூழ்ந்து கொண்ட 50 சிறுவர்கள், ""புஷ்ஷை எங்களிடம் விட்டுவிடுங்கள்; நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்'' என ஆவேசமாகக் கூறினர். அத்தெருமுனைக் கூட்டம் முடியும் வரை அச்சிறுவர்கள் தோழர்களுடன் இணைந்து முழக்கமிட்டனர்.

திருச்சியின் புறநகர் பகுதியான இலால்குடி, புள்ளம்பாடி ஆகிய ஊர்களில் விவசாயிகள் விடுதலை முன்னணி, ஆட்டோ ஓட்டுநர் பாதுகாப்பு சங்கம், ஓட்டல் தொழிலாளர் பாதுகாப்பு சங்கம் ஆகிய அமைப்புகள் இணைந்து, 13 இடங்களில் புஷ்ஷின் உருவபொம்மையைத் தூக்கிலிட்டன.

முஓசூரில் பு.ஜ.தொ.மு., வி.வி.மு., ஆகிய அமைப்புகள் இணைந்து பிப். 28 அன்று நடத்திய கண்டன ஊர்வலம் பொதுமக்களின் கவனத்தை ஈர்க்கும்படி சிறப்பாக நடந்தது. ""இந்த ஊர்வலம் பொதுமக்கள் விழிப்படையும் வகையில் நடந்ததாக'' பலரும் பாராட்டினர். ஊர்வலத்தின் பொழுது ரூ. 1,350/ நிதி வசூலானது. இது ஒன்றே, புஷ்ஷை எவ்வளவு தூரம் உழைக்கும் மக்கள் வெறுக்கிறார்கள் என்பதற்கும், ஏகாதிபத்திய எதிர்ப்பை எவ்வளவு தூரம் ஆதரிக்கிறார்கள் என்பதற்கும் சான்றாக உள்ளது. ஊர்வலத்தின் முடிவில் காந்தி சிலை அருகே, ஏறத்தாழ 1 மணி நேரத்திற்கும் மேலாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஓசூர் நகரில் நான்கு இடங்களில் தூக்கில் தொங்கவிடப்பட்ட புஷ் உருவ பொம்மைகளுள், ஒன்றினை மட்டும் போலீசார் எடுத்துச் சென்றுத் தங்களின் அமெரிக்க விசுவாசத்தைக் காட்டிக் கொண்டனர். ஓசூர் தொழிற்பேட்டையில், ""புஷ்ஷே திரும்பிப் போ'' என்ற முழக்கத்தை முன்வைத்து, தெருமுனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டன.

இந்த இயக்கம் முடிந்து, மார்ச் மாத பு.ஜ. இதழை விற்பனைக்கு எடுத்துச் சென்றபொழுது, ""புஷ்ஷைக் கட்டி இழுத்து வந்தது நீங்க தானே; புஷ்ஷைத் தூக்கில் தொங்கவிட்டது நீங்க தானே'' எனப் பலரும் குறிப்பிட்டுச் சொன்னது, இந்த இயக்கத்தின் வெற்றிக்குச் சான்றாக அமைந்தது.

பென்னாகரத்தில் புஷ் வருகையை எதிர்த்து பரவலாக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. தருமபுரியில் சுவரொட்டிகளை ஒட்டிக் கொண்டிருந்த இரண்டு தோழர்களைக் கைது செய்து, ஒருநாள் சட்டவிரோதக் காவலில் வைத்திருந்து, பின்னர் வீட்டிற்கு அனுப்பி வைத்தது, தருமபுரி போலீசு.

புஷ் முகமூடி அணிந்து கொண்டு நடத்தப்பட்ட பேருந்து பிரச்சாரத்தைத் தடுப்பதற்காக முனைந்த போலீசார், ""இம்முகமூடியைப் பார்த்துக் குழந்தைகள் பயப்படுவதாக'' ஒரு புளுகு மூட்டையை அவிழ்த்துவிட்டது. ஈராக்கில் ஐந்து இலட்சம் குழந்தைகள் சாவுக்கு காரணமான இவனை அம்பலப்படுத்தவில்லை என்றால், இன்னும் பல இலட்சம் குழந்தைகள் இறந்து போக நேரிடும் எனத் தோழர்கள் பதிலடி கொடுத்தவுடன் மறு பேச்சில்லாமல் வாயை மூடிக் கொண்டனர்.

புஷ் உருவ பொம்மை தூக்கில் தொங்கவிடப்பட்டிருந்ததைப் புரியாமல் பார்த்தவர்களுக்கு பொதுமக்களில் சிலரே, ""இன்று ஜார்ஜ் புஷ் இந்தியாவிற்கு வருகிறான்; அவனுக்கு எதிர்ப்பு தெரிவித்து வி.வி.மு. தோழர்கள் தூக்கில் இட்டுள்ளனர்'' என விளக்கம் அளித்தனர்.

புஷ் தூக்கில் தொங்கவிடப்பட்ட செய்தி கிடைத்தவுடனேயே, தோழர்களைக் கைது செய்ய போலீசு நாயாய் அலைந்தது. தூக்கில் தொங்கவிடப்பட்ட புஷ் உருவ பொம்மைகளைப் போலீசார் அவிழ்க்க முயன்றதைப் பொதுமக்கள் வேடிக்கை பார்க்கக் கூடியது, இவ்வியக்கத்திற்கு நல்ல பிரச்சாரமாகவும் அமைந்தது.

கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூரில், மையப் பேருந்து நிலையத்திலேயே புஷ் உருவ பொம்மை தூக்கில் இடப்பட்டதோடு, ""புஷ் ஒரு சர்வதேச பயங்கரவாதி; போர்க் குற்றவாளி'' என அங்கு கூடியிருந்த மக்களிடையே பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. பேருந்து நிலையத்தைச் சேர்ந்த முசுலீம் வியாபாரிகள், ""இவனை இப்படித்தான் தூக்கில் போட வேண்டும்'' எனக் கருத்துக் கூறினார்கள். புஷ் வருகையை எதிர்த்துப் பகுதியெங்கும் சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டன.

தஞ்சையில் ம.க.இ.க. பு.மா.இ.மு. சார்பாக 28.2.06 அன்று நடத்தப்பட்ட பேரணியின் பொழுது, ஜார்ஜ் புஷ் வேடமிட்ட ஒருவர், மன்மோகன் சிங், ப.சிதம்பரம் வேடமிட்ட இருவரை நாய்ச் சங்கிலியால் கட்டிக் கொண்டு நடந்து வருவது போலவும்; ஓட்டுக் கட்சிகளின் சின்னம் அணிந்தவர்கள் அதற்குப் பாதுகாப்பாகச் சுற்றி இருப்பது போலவும் செய்து காட்டப்பட்ட காட்சி விளக்கம் பொதுமக்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது. ஊர்வலத்தின் இறுதியில் பனகல் கட்டிடம் எதிரே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தஞ்சைக்கு ஆளுநர் பர்னாலா வந்திருந்ததையொட்டி பலத்த போலீசு பாதுகாப்பு இருந்த போதிலும், நகரில் மூன்று இடங்களில் புஷ் உருவ பொம்மைகள் தூக்கில் இடப்பட்டன. மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தூக்கில் தொங்கிக் கொண்டிருந்த புஷ் உருவ பொம்மை ஆயிரக்கணக்கான பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தது. பேருந்து நிலையம் அருகே தொங்கவிடப்பட்டிருந்த புஷ் உருவ பொம்மையை, போலீசார் படாதபாடுபட்டு அறுத்துப் போட்டதை உள்ளூர் தொலைக்காட்சி நிலையம் ஒளிபரப்பியது.

இந்த நகரங்கள் தவிர்த்து, சேலம், கரூர், இராணிப்பேட்டை, மதுரை, கடலூர், உசிலம்பட்டி உள்ளிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பேரணி, ஆர்ப்பாட்டம், பேருந்து பிரச்சாரம், புஷ் உருவ பொம்மையைத் தூக்கில் தொங்கவிடுதல் ஆகிய வடிவங்களில் புஷ் எதிர்ப்பு இயக்கம் நடத்தப்பட்டது.

— ம.க.இ.க. வி.வி.மு.
பு.ஜ.தொ.மு. பு.மா.இ.மு., தமிழ்நாடு.

No comments: