நர்மதைச் சமவெளியைப் பாதுகாக்க பழங்குடியின மக்கள் நடத்திவரும் போராட்டம் சட்டபூர்வ அமைதிவழிப் போராட்டங்களின் சாத்தியப்பாட்டைக் கேள்விக்குள்ளாக்கி விட்டது.
மத்தியப் பிரதேசம், குஜராத், மகாராஷ்டிரா மாநிலங்களின் வழியே ஓடும் நர்மதை மற்றும் அதன் கிளை ஆறுகளில் 30 பெரிய, 135 நடுத்தர மற்றும் 3000 சிறு அணைக்கட்டுகள் கட்டி, ம.பி., குஜராத், மகாராஷ்டிரா, இராசஸ்தான் ஆகிய மாநிலங்களுக்குப் பாசன குடிநீர் வசதிகள் உருவாக்கித் தரும் திட்டம் 1980களில் தீட்டப்பட்டது. இத்திட்டத்தில் சர்தார் சரோவர் மற்றும் நர்மதா சாகர் என்ற இரு அணைகள்தான் முக்கியமானவை.
குஜராத்தில் சர்தார் சரோவர் அணையைக் கட்டுவதற்காக மட்டும் இதுவரை ஏறத்தாழ 181 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். அக்கிராமங்கள் அனைத்தும் அந்த அணையில் தேக்கப்படும் நீரில் மூழ்கிவிட்டன. இந்த அணை தற்பொழுதுள்ள 110 மீட்டர் உயரத்தில் இருந்து 121.92 மீட்டர் உயரத்திற்கு எழுந்து நிற்கும்பொழுது, மேலும் 117 கிராமங்கள் நீரில் மூழ்கிவி டும் என்றும்; ஏறத்தாழ 35,000க்கும் அதிகமான குடும்பங்கள் அக்கிராமங்களில் இருந்து அப்புறப்படுத்தப்படும் என்றும் கூறப்படுகிறது.
சர்தார் சரோவர் அணையால் தங்களின் கிராமங்களை, நிலங்களை இழந்துவிட்ட நர்மதை சமவெளியைச் சேர்ந்த பழங்குடியின மக்கள், தங்க ளின் மறுவாழ்க்கைக்காக நர்மதை பாதுகாப்பு இயக்கம் எனும் அமைப்பின் கீழ் அணி திரண்டு, கடந்த இருபது ஆண்டுகளாகப் போராடி வருகின்றனர்.
இந்த அணை 90 மீட்டர் உயரத்தை அடைந்த பொழுது, இனியும் அணையின் உயரத்தை அதிகரிக்கக் கூடாது எனக் கோரி நர்மதை பாதுகாப்பு இயக்கத்தினர் 1995ஆம் ஆண்டு உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தனர். விசாரணை என்ற போர்வையில் வழக்கை ஐந்து ஆண்டுகள் இழுத்தடித்த உச்சநீதி மன்றம், 2000ஆம் ஆண்டில் அணையின் உயரத்தை அதிகரிக்க அனுமதி வழங்கித் தீர்ப்பளித்தது.
இப்பிரச்சினை தொடர்பாக 2002ஆம் ஆண்டில் உச்சநீதி மன்றம் வழங்கிய மற்றொரு தீர்ப்பில், ""அணையின் உயரத்தை ஐந்து ஐந்து மீட்டராக உயர்த்தலாம்; அணையின் உயரத்தை அதிகரிப்பதற்கு முன், அதிகரிக்கப்படப் போகும் உயரத்தால் பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கு மறுவாழ்வு அளித்திருக்க வேண்டியது கட்டாயமாகும்'' எனக் குறிப்பிட்டது.
மேலும் இத்தீர்ப்பின்படி, அணையின் உயரத்தை அதிகரிப்பது மறுவாழ்வு அளிப்பது ஆகியவற்றில் ஏதாவது பிரச்சினை உருவாகி, அப்பிரச்சினையைத் தீர்க்க முடியாமல் போகும் இக்கட்டான, இழுபறி நிலை உருவாகுமானால், அதில் தலையிட்டுத் தீர்க்கும் முழு அதிகாரமும் இந்தியப் பிரதமருக்கு வழங்கப்பட்டது.
குஜராத் அரசு, கடந்த ஐந்து ஆண்டுகளுக்குள் அணையின் உயரத்தை 90 மீட்டரில் இருந்து 110 மீட்டராகக் கிடுகிடுவென உயர்த்தி விட்டது. ஆனால், அணை உயர்த்தப்பட்டதால் வாழ்விழந்த பழங்குடி இன மக்களோ, எவ்வித மறுவாழ்வு உதவியும் கிடைக்காமல் நடுத்தெருவில் நிற்கின்றனர். நர்மதை பாதுகாப்பு இயக்கம், இப்பழங்குடி மக்களின் அவலத்தை பலமுறை மைய அரசிடம் முறையிட்டும் கூட, அவையனைத்தும் செவிடன் காதில் ஊதிய சங்காகிப் போனது.
இந்த நிலையில், நர்மதை கட்டுப்பாடு ஆணையம் கடந்த மார்ச் மாதம் முதல் வாரத்தில் அணையின் 110 மீட்டர் உயரத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் மறுவாழ்வும், நிவாரணமும் வழங்கப்பட்டு விட்டதாகக் கூறிவிட்டு, அணையின் உயரத்தை 121 மீட்டர் அளவிற்கு உயர்த்திக் கொள்ள குஜராத் அரசிற்கு அனுமதி அளித்தது. இந்தத் திமிர் பிடித்த ஆணையை எதிர்த்து, நர்மதை பாதுகாப்பு இயக்கத்தின் தலைவர் மேதா பட்கரும், அவ்வியக்கத்தைச் சேர்ந்த இரு பழங்குடியினரும் உண்ணாவிரதப் போராட்டத்தை மார்ச் இறுதியில் தில்லியில் தொடங்கினர்.
பாதிக்கப்பட்ட மக்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதைவிட, இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை எப்படியாவது தடுத்து நிறுத்திவிடும் முயற்சியில் படுதீவிரமாக இறங்கியது மன்மோகன் சிங் அரசு. மேதா பட்கர், தங்களின் கோரிக்கை நிறைவேறாமல் உண்ணாவிரதத்தைக் கைவிட மறுக்கவே, ஏப்ரல் 5 அன்று நள்ளிரவில் 1,000க்கும் அதிகமான போலீசாரை ஏவி, அவரைக் குண்டுகட்டாகத் தூக்கி வந்து, அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழக மருத்துவமனையில் ""சிறை'' வைத்தது. மேதா பட்கர் மீது தற்கொலை முயற்சி வழக்கு போடப்பட்டதோடு, நர்மதை பாதுகாப்பு இயக்கத்தைச் சேர்ந்த தொண்டர்கள் மீது ஆறு பிரிவுகளில் கிரிமினல் வழக்குகள் தொடரப்பட்டன.
மைய அரசின் இந்த மிரட்டலுக்குப் பணியாமல், மேதா பட்கர் மருத்துவமனையிலேயே உண்ணாவிரதத்தைத் தொடர்ந்தார். நர்மதை பாதுகாப்பு இயக்கத்தைச் சேர்ந்த பழங்குடியின மக்கள், எழுத்தாளர் அருந்ததி ராய் உள்ளிட்ட பல்வேறு அறிவுஜீவிகள், ஜனநாயக இயக்கங்களின் ஆதரவோடு நர்மதை கட்டுப்பாடு ஆணையத்தின் உத்தரவை ரத்து செய்யக் கோரி, ""தர்ணா'' போராட்டத்தை நடத்தி வந்தனர்.
மன்மோகன் சிங் அரசு தனது ""மனித முகமூடி''யைக் காப்பாற்றிக் கொள்ளும் பொருட்டு, மத்திய நீர்வளத் துறை அமைச்சர் சைபுதீன் சாஸ் தலைமையில் ஒரு அமைச்சர் குழுவை, மறுவாழ்வுப் பணிகளை ஆய்வு செய்ய அனுப்பி வைத்தது. ம.பி. மாநிலத்தில் ஆறு இடங்களை மட்டும் பார்வையிட்ட இக்குழு, அந்த இடங்களில் மறுவாழ்வுப் பணிகள் மயிரளவிற்குக் கூட நடக்கவில்லை என்ற உண்மையை ஒப்புக் கொண்டது.
இந்த நிலையில், நர்மதை பாதுகாப்பு இயக்கத்தினர் கோரியபடி நர்மதை கட்டுப்பாடு ஆணையத்தின் உத்தரவை ரத்து செய்வதுதான் நியாயமான நடவடிக்கையாக இருக்க முடியும். ஆனால், இராசஸ்தான், குஜராத், ம.பி. மாநில பா.ஜ.க. முதல்வர்கள், அணையின் உயரத்தை அதிகரிக்கும் கட்டுமானப் பணிகளை நிறுத்த மறுத்துவிட்டனர். இந்தச் சிக்கலை தீர்க்க வேண்டிய பொறுப்பில் உள்ள பிரதமர் மன்மோகன் சிங்கோ, பிரச்சினையை மீண்டும் உச்சநீதி மன்ற விசாரணைக்குத் தள்ளி விட்டுவிட்டுத் தப்பித்துக் கொண்டார்.
உச்சநீதி மன்றமோ, தான் அளித்த தீர்ப்புக்குத் தானே நியாயமாக நடந்து கொள்ள மறுத்துவிட்டது. ஒருபுறம், பிரச்சினையை மீண்டும் மன்மோகன் சிங்கிடம் தள்ளிவிட்டு, தனது பொறுப்பைத் தட்டிக் கழித்தது. இன்னொருபுறமோ, அணையின் கட்டுமானப் பணிகளை நிறுத்த மறுத்துவிட்டு, அடுத்த மூன்று மாதங்களுக்குள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மறுவாழ்வு உதவிகளைக் கொடுத்துவிட வேண்டும் என அறிவுரை வழங்கியது.
ஏழை மக்களைப் பந்தாடும் ஆளும் கும்பலின் இந்த விளையாட்டால் ஏமாற்றமடைந்த நர்மதை பாதுகாப்பு இயக்கத்தினர் 21 நாட்கள் கழித்துத் தங்களின் போராட்டத்தை முடித்துக் கொண்டனர். தங்களின் போராட்டத்தால், தங்களின் பிரச்சினையை இந்தியா முழுவதும் தெரிவித்து விட்டோம் என்ற திருப்தியைத் தவிர, வேறு எதனையும் பெற முடியாமல் அவர்கள் தோற்கடிக்கப்பட்டனர்.
இந்தப் போராட்டத்தை குஜராத் மக்களுக்கு எதிரானதாகச் சித்தரித்திருந்தார் மோடி. ஆனால், உண்மையென்ன? சர்தார் சரோவர் அணையில் தற்பொழுது தேக்கப்படும் தண்ணீரின் ஒரு பகுதியை எடுத்து, 3178 கிராமங்களுக்குக் குடிநீர் விநியோகிக்கப் போவதாகப் பீற்றிக் கொண்டு, அதற்கு குஜராத் மாநில பா.ஜ.க. அரசு 464.77 கோடி ரூபாய் செலவழித்தது. நிர்ணயிக்கப்பட்ட இலக்கில் பாதியளவு கிராமங்களுக்குக் கூட இன்னும் குடிநீர் கிடைக்கவில்லை. அப்படியென்றால், அந்தத் தண்ணீரெல்லாம் எங்கே மாயமாய் போகிறது?
ஒருபுறம் குடிநீர் வழங்குவதை மட்டுமின்றி, ஆறுகளையே தனியார்மயப்படுத்தும் பொருளாதாரக் கொள்கையை நடைமுறைப்படுத்திக் கொண்டு, இன்னொருபுறம் சர்தார் சரோவர் அணையை மக்களின் குடிநீர் தேவைக்காகக் கட்டுகிறோம் என்பது நம்பக்கூடியதாக உள்ளதா?
நாடெங்குமே விவசாயம் நசிவடைந்து, விவசாயிகள் நிலத்தைவிட்டு வெளியேறிக் கொண்டிருக்கும் பொழுது, சர்தார் சரோவர் அணையால், எந்த விவசாயி பலன் அடையப் போகிறார்? ஏழை விவசாயியா? இல்லை, விவசாயத்தில் புகுந்துள்ள நவீன பணக்கார விவசாயிகளும், தரகு முதலாளித்துவ நிறுவனங்களுமா?
இந்தப் போராட்டம், மக்களின் பெயரால் போடப்படும் வளர்ச்சித் திட்டங்களின் பின் மறைந்துள்ள கோர முகத்தை மட்டும் அம்பலப்படுத்தவில்லை. மக்கள், தங்கள் உரிமைகளுக்காகச் சட்டபூர்வமான, அமைதியான வழிகளில்கூட இனி போராட முடியுமா? அதை ஆளுங்கும்பல் சகித்துக் கொள்ளுமா? என்ற கேள்விகளையும் எழுப்பியிருக்கிறது.
காந்திய வழியில் உண்ணாவிரதம் இருந்த மேதா பட்கரை திகார் சிறையில் அடைத்தால் தனது ஜனநாயக விரோதத் தன்மை அம்பலமாகி விடும் என்பதால்தான், அவரை மருத்துவமனையில் ""சிறை'' வைத்தது, மைய அரசு. அருந்ததி ராய் போன்ற பிரபலமான புள்ளிகளைத் தவிர, தனது இயக்கத்தைச் சேர்ந்த தொண்டர்களைச் சந்திப்பதற்குக் கூட மேதா பட்கர் அனுமதிக்கப்படவில்லை. மேதா பட்கரோடு கைது செய்யப்பட்ட 300 பேர் அவரைப் போல ""மருத்துவமனைக்கு'' அழைத்துச் செல்லப்படவில்லை.
இந்தப் போராட்டம் நடந்து கொண்டிருந்த பொழுதே, குஜராத் முதல்வர் மோடி, ""சர்தார் சரோவர் அணையால் பாதிக்கப்படுபவர்களைப் பற்றி நான் அதிகம் கவலைப்படுவதில்லை'' எனத் திமிரோடு சொன்னார்.
இது பா.ஜ.க.வின் பாசிச முகம் மட்டுமல்ல; காங்கிரசு அரசின் "மனித முகமும்' இதுதான். உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல், ""பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வு கொடுக்கக் கூடிய அளவிற்கு அரசிடம் சக்தி இல்லை'' என்றார். இப்படிப்பட்ட பாசிசப் பேர்வழிகளிடம் மறுவாழ்வு கொடுங்கள் என எத்தனை முறை கெஞ்ச முடியும்?
பாதிக்கப்பட்ட மக்கள் சார்பாக மேதாபட்கர் நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்துக்கு எதிராக மோடியின் 51 மணி நேர உண்ணாவிரத எதிர்போ ராட்ட வக்கிரக் கூத்தைக் கண்டிக்க முன்வராத உச்சநீதி மன்றம், நர்மதை இயக்கத்தினரின் சட்டபூர்வ போராட்டத்தை ""ஆத்திரமூட்டக் கூடிய நடவடிக்கை'' என்றது. இது போன்ற போராட்டங்கள் ""நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு ஆபத்தாக முடியும்'' எனப் பீதியூட்டியது.
""மக்கள் கூடும் இடங்களில் பொதுக் கூட்டமோ ஆர்ப்பாட்டமோ நடத்தக் கூடாது; முக்கிய சாலைகளின் வழியே ஊர்வலம் போகக் கூடாது; அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தங்களில் ஈடுபடக் கூடாது. ""பந்த்'' போன்ற போராட்டங்கள் சட்டவிரோதமானவை'' என ஏற்கெனவே பல சட்டபூர்வ ஜனநாயக உரிமைகளை நீதிமன்றங்கள் தட்டிப் பறித்ததை நினைத்துப் பார்த்தால், உச்சநீதி மன்றத்தின் பீதியூட்டல் நமக்கு வியப்பைத் தராது.
தனியார்மயம் தாராளமயம் என்ற பெயரில் நாடு மறுகாலனியாக்கப்படுவதற்கு ஏற்றவிதத்தில் சட்டபூர்வ உரிமைகள் ஒவ்வொன்றாக பறிக்கப்பட்ட பின், ""சட்ட விரோதமான'' வழிகளில் போராடுவதைத் தவிர வேறு வழி என்ன இருக்கிறது?
பணி பாதுகாப்புக்காகப் போராடிய ஹோண்டா தொழிலாளர்கள், அரியானா போலீசாரால் இரத்தம் சொட்ட சொட்ட அடிக்கப்பட்டனர்.
போஸ்கோ என்ற பன்னாட்டு நிறுவனத்திற்காக தங்களின் நிலங்களை இழக்க முடியாது எனப் போராடிய ஒரிசாவின் பழங்குடி இன மக்கள் ஒரிசா போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
மக்களின் போராட்டங்களை எதிர்க்கும் எதிரிகள் ஆயுதபாணியாக நிற்கும் பொழுது, மக்களும் தங்களின் தற்காப்புக்காக ஆயுதம் ஏந்தித் தானே தீரவேண்டும். மயிலே மயிலே என்றால் இறகு போடாது என்பது வெற்று பழமொழி அல்லவே!
மு சுடர்
2 comments:
//மக்களின் போராட்டங்களை எதிர்க்கும் எதிரிகள் ஆயுதபாணியாக நிற்கும் பொழுது, மக்களும் தங்களின் தற்காப்புக்காக ஆயுதம் ஏந்தித் தானே தீரவேண்டும். மயிலே மயிலே என்றால் இறகு போடாது என்பது வெற்று பழமொழி அல்லவே!?//
வன்முறை, தீவிரவாதம் என கூப்பாடு போடும் அரசுகள் மக்களின் அடிப்படை பிரச்னைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை என்றால் ஆயுத போராட்டங்களும் தவிர்க்க முடியாததாகிவிடும்.சரியான ஒரு அலசல்.துயரப்படும் ஏழைகளுக்காக எழுதப்பட்ட இப்பதிவுக்கு நன்றி.
//உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல், ""பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வு கொடுக்கக் கூடிய அளவிற்கு அரசிடம் சக்தி இல்லை'' என்றார்.//
கொடுமை!!
தனது சொந்த மக்களையே பாதுகாக்க முடியவில்லை என்று சாட்சி அளிக்கிறார்.
Post a Comment