தமிழ் அரங்கம்

Thursday, July 13, 2006

இட ஒதுக்கீடு: தமிழகமெங்கும் ஆர்ப்பாட்டம்

இட ஒதுக்கீட்டை எதிர்க்கும் பார்ப்பன மேல்சாதி வெறியை முறியடிப்போம்!'' — தமிழகமெங்கும் ஆர்ப்பாட்டம்


மைய அரசின் உதவி பெறும் இந்திய தொழில்நுட்பக் கழகம் (ஐ.ஐ.டி.), இந்திய மேலாண்மைக் கழகம் (ஐ.ஐ.எம்), அனைத்திந்திய மருத்துவ அறிவியல் மையம் (எ.ஐ.ஐ.எம்.எஸ்), ஜிப்மர் முதலான உயர் கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீத இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தவிருப்பதாக மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சர் அர்ஜுன் சிங் அண்மையில் அறிவித்தார். இந்த அறிவிப்பு வெளியான உடனேயே பார்ப்பனமேல்சாதி வெறியர்கள் தலைநகர் டெல்லியில் கலகத்தைத் துவங்கி விட்டனர்.


காலங்காலமாக கல்வி, நிலவுடைமை, அரசு அதிகாரம் அனைத்தையும் ஏகபோகமாக அனுபவித்து வந்த பார்ப்பனமேல்சாதி வெறியர்கள், அவையெல்லாம் சிறிது சிறிதாக பறி போவதால் வெறிகொண்டு அலைகிறார்கள். இந்தச் சாதிவெறிக் கும்பலுக்குப் பன்னாட்டு நிறுவனங்களும், தரகு முதலாளிகளும் வெளிப்படையாகவே ஆதரவு தெரிவிக்கின்றனர். இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தி, டாடா, மிட்டல் போன்ற தரகு முதலாளிகள், தகுதிதிறமை பற்றி மிகுந்த கவலையுடன் பேட்டியளிக்கின்றனர். தங்களின் கட்டுப்பாட்டில் உள்ள செய்தி ஊடகங்களின் மூலம், "இடஒதுக்கீட்டினால் இந்தியாவே அழிந்துவிடும்' என்ற மாயையை ஓயாமல் பிரச்சாரம் செய்கின்றனர்.


இந்நிலையில் பார்ப்பனத் திமிரை எதிர்த்தும், சமூகநீதி பேசும் ஓட்டுக் கட்சிகளின் சமரசத்தை அம்பலப்படுத்தியும் பல்லாயிரக்கணக்கில் துண்டுப் பிரசுரம் வெளியிட்டு பிரச்சாரம் செய்ததோடு, தமிழகத்தின் பல்வேறு நகரங்களிலும் 22.5.06 என்று ம.க.இ.க., வி.வி.மு., பு.மா.இ.மு., பு.ஜ.தொ.மு ஆகிய புரட்சிகர அமைப்புகள் இணைந்து எழுச்சிமிகு ஆர்ப்பாட்டத்தை நடத்தின.


சென்னையில், வள்ளுவர் கோட்டம் அருகே, பு.மா.இ.மு. இணைச் செயலர் தோழர் கணேசன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் ""சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்க'' பொதுச் செயலர் டாக்டர் ஜி.ஆர்.இரவீந்தர்நாத் மற்றும் பு.ஜ.தொ.மு. மாநிலப் பொருளாளர் தோழர் விஜயகுமார் ஆகியோர் கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்திற்கு மருத்துவக் கல்லூரி மாணவர்கள் உட்பட பல்வேறு கல்லூரிகளின் மாணவர்களும் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.


ஓசூரில், காந்தி சிலை அருகில் பு.ஜ.தொ.மு. தோழர் இரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், தோழர் பரசுராமன், சின்னசாமி மற்றும் வி.வி.மு. பென்னாகரம் வட்டச் செயலர் தோழர் அருண் ஆகியோர் கண்டன உரையாற்றினர். பார்ப்பன மேல்சாதி ஆதிக்க வெறியர்கள், மலம் அள்ளும் வேலைக்கும், பிணம் எரிக்கும் வேலைக்கும் இடஒதுக்கீடு கேட்பார்களா? அரசுதான் இடஒதுக்கீட்டைத் தீர்மானிக்குமா? என்று கண்டன உரையில் கேள்வி எழுப்பியது பார்வையாளர்களிடம் பெருத்த வரவேற்பைப் பெற்றது.


நாமக்கலில், அண்ணாசிலை அருகில் வி.வி.மு. தோழர் அசோகன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் பெண்கள், குழந்தைகள் உட்பட திரளான உழைக்கும் மக்கள் கலந்து கொண்டனர்.


கோவையில், செஞ்சிலுவை சங்கம் முன்பாக, பு.ஜ.தொ.மு. தோழர் விளவை இராமசாமி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் வழக்கறிஞர் கார்க்கி மற்றும் ம.க.இ.க. கோவை கிளைச் செயலர் தோழர் மணிவண்ணன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.


திருச்சியில், சிந்தாமணி அண்ணாசிலை அருகில் பு.மா.இ.மு. திருச்சி மாவட்டச் செயலாளர் தோழர் தண்டபாணி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ம.க.இ.க. திருச்சி கிளைத் தோழர் இராசா கண்டன உரையாற்றினர். மாணவர்கள், இளைஞர்கள் உள்ளிட்டு திரளான உழைக்கும் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


கடலூரில் உழவர் சந்தை அருகே பு.மா.இ.மு. தோழர் பாலு தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், விவசாயிகள் விடுதலை முன்னணியின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ஜெயகாந்த்சிங் கண்டன உரையாற்றினார். அரசுப் பணியாளர் சங்கத்தைச் சார்ந்தவர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் என பல பிரிவைச் சார்ந்த உழைக்கும் மக்களும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு சிறப்பித்ததுடன் நிதியளித்தும் உதவினர்.


தஞ்சையில், பனகல் கட்டிடம் எதிரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், ம.க.இ.க. தஞ்சைக் கிளைச் செயலர் தோழர் இராவணன் தலைமையில் பு.மா.இ.மு. மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் பரமானந்தம், ம.க.இ.க. மாநில இணைச் செயலர் தோழர் காளியப்பன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.


மதுரையில், மேலமாசி வீதி வடக்கு மாதி வீதி சந்திப்பில், காலை 11 மணியளவில், தோழர் கருணாமூர்த்தி தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் மதுரை மாவட்டச் செயலர் தோழர் லயோனல் அந்தோணிராசு, உசிலை வி.வி.மு. தோழர்கள் குருசாமி, சிவகாமு, பு.மா.இ.மு தோழர் செந்தில் குமார் மற்றும் சிவகங்கை தோழர்கள் கண்டன உரையாற்றினர்.


சாத்தூரில், வட்டாட்சியர் அலுவலகம் முன்பு 26.05.06 அன்று மாலை 5 மணியளவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சாத்தூர் பகுதித் தோழர் கணேசன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் மதுரை மாவட்டச் செயலர் லயோனல் அந்தோணி ராசு கண்டன உரையாற்றினார்.


கண்டன அறிக்கை, மனித சங்கிலி என்ற வரம்போடு அடையாள எதிர்ப்பு காட்டிவிட்டு சமூக நீதி பேசும் கட்சிகள் முடங்கிவிட்ட நிலையில், பார்ப்பனிய எதிர்ப்பை தமிழகமெங்கும் வீச்சாகக் கொண்டு சென்ற புரட்சிகர அமைப்புகளின் இந்த ஆர்ப்பாட்டம் உழைக்கும் மக்களிடம் புதிய நம்பிக்கையை விதைத்துள்ளது.


– பு.ஜ. செய்தியாளர்கள்

5 comments:

Sivabalan said...

இச்செய்தியை இங்கே கொடுத்தமைக்கு மிக்க நன்றி.

என்னத சொல்ல... இங்கே நடுநிலைவாதிகள் என சொல்லிக் கொள்வோர்கள் கூட இடஒதுக்கீட்டை ஆதரிக்க மாட்டேன் என்று சொல்கிறார்கள்..

அதற்கு காரனம் ஊடங்கள் தான்..

என்னமோ போங்க... ம்ம்ம்ம்ம்ம்

ரவி ஸ்ரீநிவாஸ் said...

It is easy to label all those who oppose this reservation as this and that.But have you tried to
understand the issue first before
start blaming the opponents of this
reservation.

பாலசந்தர் கணேசன். said...

இட ஒதுக்கீடு என்பது அநியாயமாக ஒதுக்கி வைக்கபட்ட பெரும்பான்மையான மக்களுக்கு வழங்க படுகின்ற நீதி. இது சலுகையாகவோ, உரிமையாகவோ நான் பார்க்கவில்லை. இது நீதி, நியாயம் என்றே நான் உணருகிறேன்.

Sivabalan said...

Sir,

Please Check the tittle? Is it right? Do you want to convey something?

Thanks

Sivabalan

தமிழரங்கம் said...

தலைப்பு மாற்றப்பட்டுள்ளது. சுட்டிக்காட்டியமைக்கு மிக நன்றி சிவபாலன்.
இடஒதுக்கீட்டை எதிர்க்கும் ஆர்ப்பாட்டங்களை எதிர்க்கும் அதாவது இட ஒதுக்கீட்டை ஆதரிக்கும் ஆர்ப்பாட்டங்கள் தான் கருப்பொருளாயிருப்பினும் இட ஒதுக்கீட்டை எதிர்க்கும் ஆர்ப்பாட்டத்தை முரண்நிலையில் கட்டுரை அம்பலப்படுத்துகின்றது என்ற வகையில் இடஒதுக்கீ;ட்டை எதிர்க்கும் ஆர்ப்பாட்டம் என்ற அத்தலைப்பும் பொருந்தக்கூடியது தான். ஆனால் குழப்பங்களை தவிர்த்தல் நலமென்பதால் தலைப்பு மாற்றப்பட்டுள்ளது.

நன்றி