தமிழ் அரங்கம்

Thursday, August 24, 2006

விவசாயிகளை ஏய்க்கும் இன்னுமொரு மோசடிநாடகம்

பிரதமரின் விதர்பா பயணம்: விவசாயிகளை ஏய்க்கும் இன்னுமொரு மோசடிநாடகம்

காராஷ்டிரா மாநிலத்திலுள்ள விதர்பா பகுதிக்கு, கடந்த ஜூன் மாத இறுதியில் வந்து போன பிரதமர் மன்மோகன் சிங், ""அப்பகுதி விவசாயிகள் கடனில் மூழ்கி நொடித்துப் போயிருப்பதையும்; அப்பகுதி பருத்தி விவசாயம் நாசமாகி வருவதையும்'' ஒப்புக் கொள்வதாக அறிவித்திருக்கிறார். ""பொருளாதாரப் புலி'' மன்மோகன் சிங், தன் கண்களால் பார்த்து இந்த உண்மையை ஒப்புக் கொள்வதற்கு, ஏறத்தாழ 650 பருத்தி விவசாயிகள் தங்கள் உயிரை மாய்த்துக் கொள்ள வேண்டியதாகி விட்டது.


விதர்பா பகுதியில் விவசாயிகளின் வாழ்க்கை இயல்பாகப் போய்க் கொண்டிருப்பதாகப் புளுகி வந்த மகாராஷ்டிர மாநில அரசு, மன்மோகன் சிங் விதர்பா பகுதிக்கு வந்து விவசாயிகளைச் சந்திக்கப் போவது உறுதியானவுடன், தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளுள் சில குடும்பங்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு வேகவேகமாக நட்டஈடு வழங்கத் தொடங்கியது. இதில் கூட, அம்மாநில அரசு நாணயமாக நடந்து கொள்ளவில்லை. நட்டஈடு ஒரு இலட்சம்ரூபாய் என அறிவித்திருந்த அம்மாநில அரசு, அவர்களுக்கு வழங்கியதோ வெறும் முப்பதாயிரம் ரூபாய்தான்!


மன்மோகன் சிங் காலடித்தடம் படப் போகும் சில கிராமங்களில் புதிதாகச் சாலைகள் போடப்பட்டன் தெரு விளக்குகள் போடப்பட்டன் மன்மோகன் விரைவாக வந்து திரும்புவதற்கு வசதியாக ஹெலிகாப்டர் இறங்கு தளங்கள் அமைக்கப்பட்டன. எல்லாவற்றுக்கும் மேலாக, மன்மோகன் சிங்கைச் சந்தித்துத் தங்களின் குறைகளைக் கூறுவதற்காக 3035 விவசாயக் குடும்பங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்கு பிரதமர் முன் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற பயிற்சியும் அளிக்கப்பட்டது. இப்படியாக மன்மோகன் சிங்கின் பயணமும், சந்திப்பும் அதிகார வர்க்கத்துக்கேயுரிய வக்கிரத்தோடு நடந்து முடிந்தது.


ஆறு மாவட்டங்களைக் கொண்ட விதர்பா பகுதியில், ஏதோ ஒன்றிரண்டு கிராமங்களுக்குப் போய், தேர்ந்தெடுக்கப்பட்ட சில விவசாயக் குடும்பங்களைச் சந்தித்துவிட்டு, மன்மோகன் சிங் தனது கடமையை முடித்துக் கொண்டாலும், ""அவர் ஏதாவது நல்லது செய்வார்'' என்ற நம்பிக்கை விவசாயிகளிடம் இருந்தது. குறிப்பாக, ""வங்கிக் கடனைத் தள்ளுபடி செய்வார்; கந்துவட்டிக் கடன் கொடுமையில் இருந்து தங்களை மீட்க ஏதாவதொரு வழி சொல்வார்; பருத்திக்குத் தரப்படும் ஆதார விலையøக் கூட்டிக் கொடுப்பார்'' என விவசாயிகள் நம்பினார்கள். ஆனால், இந்தப் பொருளாதாரப் புலி அறிவித்துள்ள நிவாரண உதவித் திட்டத்தை, முதலாளித்துவ விவசாய நிபுணர்களால்கூட முழுமையாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை. விதர்பா பகுதி விவசாயிகளோ இத்திட்டத்தை ஏமாற்று மோசடி எனக் காரித் துப்புகின்றனர்.


விதர்பா பருத்தி விவசாயிகளின் துயரத்தைத் துடைப்பது என்ற பெயரில் மன்மோகன் சிங் அறிவித்துள்ள 3,750 கோடி ரூபாய் பெறுமான உதவித் திட்டத்தில், 2,177 கோடி ரூபாய் விதர்பா பகுதியில் நடந்து வரும் பாசனத் திட்டங்களை நிறைவேற்றவும்; 240 கோடி ரூபாய் சொட்டு நீர்ப் பாசனம் போன்ற ""நவீன'' பாசனத் திட்டங்களை நிறைவேற்றவும்; 225 கோடி ரூபாய் தோட்டப் பயிர் விவசாயத்தைப் பிரபலப்படுத்தவும் ஒதுக்கப்பட்டுள்ளது.


இவை போக, பருத்தி விவசாயிகளுக்குக் கிடைத்தது என்னவென்றால், அரசாங்கம் கொடுத்துள்ள கடனுக்கான வட்டித் தள்ளுபடி; அரசாங்கக் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கான காலக் கெடுவைத் தள்ளி வைப்பது; மற்றும் புதிய கடன் வழங்குவது, தரமான விதைகள் விநியோகிப்பது போன்ற சில்லறை சலுகை அறிவிப்புகள்தான். அடுத்தவன் இலைக்குப் பாயசம் ஊற்றச் சொல்லும் தந்திரமாக முடிந்து போனது, இந்த உதவித் திட்டம்.


உலக வங்கியின் புரோக்கரான மாண்டேக் சிங் அலுவாலியா தலைமையில் செயல்படும் திட்ட கமிசன், ""அப்பகுதியில் நடந்து வரும் பாசனத் திட்டங்களை அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் முடித்து விட்டால், பருத்தி விவசாயிகளின் பிரச்சினை தீர்ந்து விடும்'' என்ற அரிய யோசனையை மன்மோகன் சிங் விதர்பா பகுதிக்கு ""திக் விஜயம்'' செய்வதற்கு முன்பாகவே, முன் வைத்தது. இதன்படிதான், 3,750 கோடி ரூபாய் உதவித் திட்டத்தில், 2,417 கோடி ரூபாய் ஏறத்தாழ 65 சதவீதம் பாசனத் திட்டத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. திட்டக் கமிசனின் இந்த அரிய யோசனையின் இலட்சணம் என்ன தெரியுமா?


விதர்பா பகுதியில் பல பத்தாண்டுகளாக ஆமை வேகத்தில் நடந்துவரும் 500க்கும் மேற்பட்ட பாசனத் திட்டங்கள், அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் முடிந்து விட்டால் கூட, விதர்பா பகுதி பூஞ்சோலையாக மாறிவிடாது. அதிகார வர்க்கத்தின் புள்ளி விவரப்படியே, பாசனத் திட்டங்கள் உருப்படியாக நடந்து முடிந்தால் 28.35 இலட்சம் ஹெக்டேர் நிலங்களுக்கு தான் பாசன வசதி கிட்டும். ஆனால், விதர்பாவில் உள்ள மொத்த விவசாய நிலப்பரப்போ 97.43 இலட்சம் ஹெக்டேர். பாசன வசதி கிடைக்காத விவசாயிகள் வானத்தையோ, கிணற்றையோ நம்பிதான் விவசாயம் செய்ய வேண்டும். பருத்தி விவசாயிகளுக்குக் கிணறு தோண்ட உதவியோ, மானியமோ தர முன் வராத மைய அரசு, சொட்டு நீர்ப்பாசன மேம்பாட்டுக்காக 240 கோடி ரூபாய் ஒதுக்கியிருப்பதை வக்கிரத்தின் உச்சம் என்றுதான் சொல்ல வேண்டும்.


இது ஒருபுறமிருக்க, மகாராஷ்டிரா மாநிலத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு முன் கொண்டு வரப்பட்ட ""நீர் ஆதார ஒழுங்குமுறைச் சட்டம், அரசாங்கம் அமைத்து வரும் பாசன வசதிகளை, ஏழைநடுத்தர விவசாயிகள் பயன்படுத்தும் உரிமையைத் தட்டி பறித்துவிட்டது. இச்சட்டத்தின்படி, விவசாயிகள் ஒரு ஏக்கர் நிலத்திற்கு ஒரு ஆண்டுக்கு அரசாங்கத்திற்குச் செலுத்த வேண்டிய பாசனக் கட்டணம் எட்டாயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றுக் கொண்டுள்ள விவசாயிகளுக்கு ஆண்டு பாசனக் கட்டணம் ஒன்றரை மடங்கு அதிகமாக 12,000 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இக்கட்டணத்தைக் கட்டத் தவறும் விவசாயிகள் மீது, பாசனக் கட்டணத்தைப் போல 10 மடங்கு அபராதம் விதிக்கப்படுவதோடு ஆறுமாதச் சிறை தண்டனையும் விதிக்கப்படும்.


இப்படியொரு பகற்கொள்ளை அடிக்கும் சட்டம் இருக்கும் மாநிலத்தில், விவசாயிகளுக்குப் பாசன வசதி என்பது ஊரை ஏமாற்றுகின்ற வேலைதான். ஒப்பந்த விவசாயம் என்ற பெயரில் நுழைந்துள்ள தரகு முதலாளித்துவ நிறுவனங்கள்; ஏற்றுமதிக்காக தோட்டப் பயிர்களைப் பயிரிடும் நவீன பணக்கார விவசாயிகள்; அரசாங்க காண்டிராக்ட்காரர்கள் இவர்களின் கஜானாவை நிரப்பத்தான், இந்த 2,417 கோடி ரூபாய் பெறுமான பாசனத் திட்டங்கள் பயன்படும்.


மகாராஷ்டிரா மாநிலத்தில் பருத்தி விதைகள் என்றாலே, மான்சாண்டோ நிறுவனத்தின் ""பி.டி.'' பருத்தி விதைகள்தான். ஆந்திராவில் பல நூற்றுக்கணக்கான பருத்தி விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதற்கு இந்த மலட்டு விதைகளும் ஒரு காரணம் எனத் தெரிந்திருந்த போதிலும், இந்த ""பி.டி.'' பருத்தி விதைகளை மகாராஷ்டிராவில் விற்கும் ஏகபோக உரிமையை, ""மாஹிகோ'' என்ற அரசு நிறுவனமே மான்சாண்டோவிடமிருந்து வாங்கி வைத்துள்ளது.


""ஹெச்.4'' என்ற இரக பருத்தி விதை ஒரு கிலோ ரூ. 300ஃக்கு விற்கப்படும் பொழுது, ""மாஹிகோ'' சந்தையின் மீதான தனது கட்டுப்பாட்டைப் பயன்படுத்திக் கொண்டு, 450 கிராம் பி.டி. பருத்தி விதைகளை ரூ. 750க்கு விற்று, பருத்தி விவசாயிகளை மொட்டையடித்து வருகிறது.


விதர்பா பருத்தி விவசாயிகள் கோருகிறபடி ""பி.டி.'' மலட்டு விதை விற்பனையையும்; பருத்தி விதைகள் இடுபொருட்கள் விற்பனையில் நடந்து வரும் பகற்கொள்ளையையும் தடுத்து நிறுத்த மன்மோகன் சிங் முயலவில்லை. மாறாக, மான்சாண்டோவின் ஏஜெண்டாகச் செயல்படும் மகாராஷ்டிரா அரசிடம், விவசாயிகளுக்கு நல்ல தரமான விதைகளை வழங்குவதற்கு 180 கோடி ரூபாயைத் தூக்கிக் கொடுத்து, பருத்தி விவசாயிகளின் முகத்தில் கரியைப் பூசிவிட்டார்.


""பருத்திக்கு மாநில அரசாங்கம் தரும் ஆதார விலையை ரூ. 2700ஃ ஆக உயர்த்துவோம்'' என காங்கிரசு தேசியவாத காங்கிரசு கூட்டணி தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தது. ஆனால், இக்கூட்டணி சட்டசபை தேர்தலில் வென்று, மாநில ஆட்சியைப் பிடித்த பிறகு, ஏற்கெனவே கொடுக்கப்பட்டு வந்த ஆதார விலையில் (ஒரு குவிண்டாலுக்கு ரூ. 2,200ஃ) இருந்து


ரூ. 500ஐ வெட்டி விட்டு, 1,700 ரூபாய்தான் ஆதார விலையாகக் கொடுத்து வருகிறது. இந்த வெட்டின் மூலம், கடந்த ஆண்டு மட்டும், மகாராஷ்டிரா மாநில அரசுக்குக் கிடைத்துள்ள இலாபம் ஏறத்தாழ 1,000 கோடி ரூபாய். விதர்பா பருத்தி விவசாயிகளிடமிருந்து 1,000 கோடி ரூபாயைக் கொள்ளையடித்துவிட்டு, 712 கோடி ரூபாய் அளவிற்கு வட்டி தள்ளுபடி செய்திருக்கிறோம் என மன்மோகன் கும்பல் பீற்றிக் கொள்வது கடைந்தெடுத்த மோசடித்தனம்.


பருத்தி அறுவடை முடிந்து விற்பனைக்கு வந்த மார்ச் மாதம் தொடங்கி மே மாதத்திற்குள் விதர்பாவில் 80க்கும் மேற்பட்ட பருத்தி விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டு மாண்டு போனார்கள். உற்பத்திச் செலவுக்கு ஏற்ற விலை கிடைக்காமல், அடிமாட்டு விலைக்கு விற்க வேண்டிய சந்தையின் சூதாட்டத்திற்குள் விவசாயிகள் தள்ளப்பட்டதுதான் இந்தச் சாவுகளுக்குக் காரணம். மேலும், விதர்பா பருத்தி விவசாயிகளின் அகால மரணத்திற்கும் அமெரிக்காவிற்கும் நேரடித் தொடர்புண்டு.


அமெரிக்கா, தனது நாட்டில் விளையும் பருத்திக்கு, ஆண்டொன்றுக்கு ஏறத்தாழ 18,000 கோடி ரூபாய் மானியமாகக் கொடுக்கிறது. இதனால், அமெரிக்காவில் இருந்து அடிமாட்டு விலையில் பருத்தி இந்தியாவிற்கு இறக்குமதியாகிறது. இந்த அமெரிக்க பருத்தி மீது வெறும் 10 சதவீத அளவிற்கே சுங்க வரி விதிக்கப்படுவதால், உள்நாட்டில் விளையும் பருத்தியை விட, அமெரிக்க பருத்தி மிக மலிவாக சந்தையில் கிடைக்கிறது. தாராளமயம் என்ற பெயரில் நடக்கும் இந்த நாணயமற்ற வர்த்தக இறக்குமதிதான் இந்தியப் பருத்தி விவசாயிகளைப் போண்டியாக்கி வருகிறது; தற்கொலைக்குத் தள்ளி வருகிறது.


அதனால்தான் விதர்பா பகுதி பருத்தி விவசாயிகள், ""அமெரிக்காவில் இருந்து பருத்தி இறக்குமதி செய்வதைக் கைவிட வேண்டும். பருத்திக்கு அரசாங்கம் கொடுக்கும் ஆதார விலையை மூவாயிரம் ரூபாயாக உயர்த்த வேண்டும்'' எனக் கோருகிறார்கள். பருத்தி விவசாயிகளின் உயிராதாரமான இந்தக் கோரிக்கைகளை மன்மோகன் சிங் கண்டு கொள்ளவில்லை என்பது ஒருபுறமிருக்க, சமீபத்தில் அவரின் தலைமையில் கூடிய அமைச்சரவை, விவசாயத் துறை முழுவதிலும் தாராளமயத்தை அமல்படுத்தப் போவதாக முடிவெடுத்திருக்கிறதாம். இந்த முடிவு நடைமுறைக்கு வரும்பொழுது விதர்பாவில் நடந்து வரும் விவசாயிகளின் தற்கொலைச் சாவுகளை, காவிரிப் படுகையிலும் நாம் காண நேரிடும்!


மு செல்வம்


3 comments:

அசுரன் said...

//அமெரிக்கா, தனது நாட்டில் விளையும் பருத்திக்கு, ஆண்டொன்றுக்கு ஏறத்தாழ 18,000 கோடி ரூபாய் மானியமாகக் கொடுக்கிறது. இதனால், அமெரிக்காவில் இருந்து அடிமாட்டு விலையில் பருத்தி இந்தியாவிற்கு இறக்குமதியாகிறது. இந்த அமெரிக்க பருத்தி மீது வெறும் 10 சதவீத அளவிற்கே சுங்க வரி விதிக்கப்படுவதால், உள்நாட்டில் விளையும் பருத்தியை விட, அமெரிக்க பருத்தி மிக மலிவாக சந்தையில் கிடைக்கிறது. தாராளமயம் என்ற பெயரில் நடக்கும் இந்த நாணயமற்ற வர்த்தக இறக்குமதிதான் இந்தியப் பருத்தி விவசாயிகளைப் போண்டியாக்கி வருகிறது; தற்கொலைக்குத் தள்ளி வருகிறது.



அதனால்தான் விதர்பா பகுதி பருத்தி விவசாயிகள், ""அமெரிக்காவில் இருந்து பருத்தி இறக்குமதி செய்வதைக் கைவிட வேண்டும். பருத்திக்கு அரசாங்கம் கொடுக்கும் ஆதார விலையை மூவாயிரம் ரூபாயாக உயர்த்த வேண்டும்'' எனக் கோருகிறார்கள். பருத்தி விவசாயிகளின் உயிராதாரமான இந்தக் கோரிக்கைகளை மன்மோகன் சிங் கண்டு கொள்ளவில்லை என்பது ஒருபுறமிருக்க, சமீபத்தில் அவரின் தலைமையில் கூடிய அமைச்சரவை, விவசாயத் துறை முழுவதிலும் தாராளமயத்தை அமல்படுத்தப் போவதாக முடிவெடுத்திருக்கிறதாம். இந்த முடிவு நடைமுறைக்கு வரும்பொழுது விதர்பாவில் நடந்து வரும் விவசாயிகளின் தற்கொலைச் சாவுகளை, காவிரிப் படுகையிலும் நாம் காண நேரிடும்!

//




இதுக்கு நாடு என்ன செய்யும்.....

விதார்பா விவசாயிகள் மட்டுமல்ல... எல்லா ஏழைகளும் இந்த நாட்டுக்கு என்ன செய்தார்கள் என்று யோசித்தால் நம் நாடு முன்னேறும்....

இப்படிப்பட்ட வக்கிரமான கருத்துக்களை ஒரு அல்பை சொல்லிக் கொண்டிருக்கிறது.....

இவர்களின் விளக்கத்தில் நாடு என்பது பன்னாட்டு முதலாளியும், அவர்களுக்கு கூஜா தூக்கும் விளக்கு பிடிப்பிகளும்தான்....

ஆக இவர்கள் சொல்லும் முன்னேற்றம் என்பதும் அவர்களுடைய முன்னேற்றம்தான்....

//பின்ன... லடசக்கணக்குல செலவு பன்னி அமேரிக்காவுல படிக்கிறேன் அத திரும்ப எடுக்க வேணாம்??...

சும்மா விவசாயி பருத்திக் கொட்ட புண்ணாக்குன்னுட்டு.....//

துரோகிகள்....

கை பரபரக்கிறது.... ஒன்றும் செய்ய இயலாமல் கட்டுண்டிருக்கிறோம்..


நன்றி,
அசுரன்.

அசுரன் said...

//""பருத்திக்கு மாநில அரசாங்கம் தரும் ஆதார விலையை ரூ. 2700ஃ ஆக உயர்த்துவோம்'' என காங்கிரசு தேசியவாத காங்கிரசு கூட்டணி தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தது. ஆனால், இக்கூட்டணி சட்டசபை தேர்தலில் வென்று, மாநில ஆட்சியைப் பிடித்த பிறகு, ஏற்கெனவே கொடுக்கப்பட்டு வந்த ஆதார விலையில் (ஒரு குவிண்டாலுக்கு ரூ. 2,200ஃ) இருந்து



ரூ. 500ஐ வெட்டி விட்டு, 1,700 ரூபாய்தான் ஆதார விலையாகக் கொடுத்து வருகிறது. இந்த வெட்டின் மூலம், கடந்த ஆண்டு மட்டும், மகாராஷ்டிரா மாநில அரசுக்குக் கிடைத்துள்ள இலாபம் ஏறத்தாழ 1,000 கோடி ரூபாய். விதர்பா பருத்தி விவசாயிகளிடமிருந்து 1,000 கோடி ரூபாயைக் கொள்ளையடித்துவிட்டு, 712 கோடி ரூபாய் அளவிற்கு வட்டி தள்ளுபடி செய்திருக்கிறோம் என மன்மோகன் கும்பல் பீற்றிக் கொள்வது கடைந்தெடுத்த மோசடித்தனம்.//

இத்தனை நடந்தாலும்....
அமேரிக்க விவசாய முதலாளியைத்தான் தன்னுடைய குடிமகனா இந்த சட்டமன்ற நாடாளுமன்ற பூச்சியறைகள் நடத்தினாலும்.... நாம் அவற்றை மதிக்கனுமாம்....

அப்பத்தான் நம்மள இவுக அங்கீகரிப்பாங்கலாம்....

இது ஜன நாயகமில்ல.... போலி..... இது தூக்கி வீசுங்கடா மானங்கெட்ட சும்பன்களான்னு சொன்னா நமக்கு தேசபக்தி இல்லையாம்....

என்னாடா கத வுடுறேங்க....

விவசாயியின் உழைப்புக்கு ஏற்ற ஊதியத்தை இந்த நாடு கொடுக்கத் தொடங்கினால் ஒரு நாயும் வாயில சோத்த பாக்க முடியாது....

அவனது உழப்பச் சுரண்டி மா நகரங்களில் மானங்கெட்ட வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த யுப்பி வர்க்கத்தின் செவிட்டு காதுகள் கூடிய விரைவில் திறக்கும். உலகமயத்தின் கோர முகம், GATS ஒப்பந்தத்தின் நான்காவது MODE OF TRANSACTION இன்னும் சில வருடங்களில் அமல் படுத்தப்படும் போது சந்தியில் சிரிக்கும்

நன்றி,
அசுரன்.

ஸ்ரீ said...

பிரதமரை பார்த்து கதறியழுத விதர்பா விவசாயிகளின் வேதனையை வார்த்தைகளால் விவரிக்க இயலாது.கல் நெஞ்சும் கரையும் துயரங்களை எதிர்நோக்கும் விவசாயிகளின் கண்ணீரை கண்டு பிரதமரும் கண் கலங்கியதாக பத்திரிக்கை செய்திகள் தெரிவித்தன.என்ன பயன்?பிரதமரின் கண்ணீர் உள்ளத்தின் உணர்வுகளிலிருந்து உண்மையில் வெளிப்பட்டிருந்தால் அதன் விளைவு நிச்சயம் விவசாயிகளின் கண்களில் பொங்கும் கண்ணீரை நிறுத்தியிருக்க வேண்டும்.ஆனால் பதவி பறிப்பு சட்டத்துக்கு ஜனாதிபதியின் கையெழுத்து வேண்டி அவரை நிர்பந்தித்ததில் காட்டிய அவசரத்தனமும்,சலுகை மழையிலும்.சம்பள உயர்விலும், முழுக்க நனைய தங்களுக்கு தாங்களே ஆணையிட்டுக்கொண்ட சுய நலமும் ,பிரதமரின் கண்ணீர், கிளிசரின் போடாது கண்ணீரை வரவழைக்கும் திறமை கொண்ட தேர்ந்த நடிகரின் கண்ணீருக்குதான் ஒப்பாகிவிட்டது என்பதே உண்மை.