தமிழ் அரங்கம்

Tuesday, October 10, 2006

தி.மு.க. அரசின் இலவசத்திட்டங்கள் : நீதி மர்மம் என்ன?

தி.மு.க. அரசின் இலவசத்திட்டங்கள் : நீதி மர்மம் என்ன?

தேர்தல் முடிவுகளைக் கேட்ட மறுவினாடியே, தமது வாக்குறுதிகளை மறந்து விடுவதையும், மழுப்புவதையும் ஓட்டுக் கட்சிகளிடம் இதுவரை கண்டுவந்த அரசியல் நோக்கர்கள், இப்போது தி.மு.க. ஆட்சியின் செயல்பாடுகள், பேச்சுக்களைக் கண்டு மயக்கங் கொள்கிறார்கள். கருணாநிதி இப்போது நெஞ்சுயர்த்திச் சொல்கிறார், ""தேர்தல் அறிக்கையில் 177 வாக்குறுதிகள் தரப்பட்டன. அவற்றில் 62 வாக்குறுதிகளை நிறைவேற்ற பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. நிதி ஒதுக்கீடு தேவையில்லாத 74 வாக்குறுதிகளில் 45 வாக்குறுதிகளின் மேல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முதல் ஆண்டிலேயே மூன்றில் இரண்டு பங்கு வாக்குறுதிகளை நிறைவேற்றி விடுவோம்.'' கருணாநிதி ஆட்சிப் பொறுப்பேற்ற முதல் நாளிலேயே, இரண்டு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி; விவசாயக் கூட்டுறவுக் கடன்களைத் தள்ளுபடி செய்வது, பள்ளிக் குழந்தைகளுக்கான சத்துணவில் வாரம் இரண்டு முட்டைகள் ஆகிய மூன்று வாக்குறுதிகளை நிறைவேற்றும்படி உத்திரவு போட்டார்.


இவை தவிர, தி.மு.க. தேர்தல் அறிக்கையின் நட்சத்திர வாக்குறுதிகளான ஏழை விவசாயிகளுக்கு இரண்டு ஏக்கர் நிலப்பட்டா, இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி ஆகியன தி.மு.க. வழக்கமாகக் கொண்டாடும் முப்பெரும் விழா நாட்களில் தொடங்கப்பட்டு விட்டன. 24,949 ஏழை விவசாயிகளுக்கு 26,321 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டது. 25,245 வண்ண வானொளிப் பெட்டிகள் வழங்கப்பட்டன. பத்து இலட்சம் ஏழைக் குடும்பங்களுக்கு வரும் ஜனவரி பொங்கல் முதல் இலவச எரிவாயு அடுப்பு மற்றும் எரிவாயு இணைப்பு வழங்கும் திட்டம் அமலாகும் என்று மு.க. அறிவித்துள்ளார். வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஐந்தாண்டுகளுக்கு மேல் காத்திருக்கும் இளைஞர்களுக்கு அவரவர் கல்வித் தகுதிக்கேற்ப மாதம் ரூ. 150 முதல் 300 ரூபாய் வரை உதவித் தொகை அக்டோபர் முதல் வழங்கப்பட உத்தரவிடப்பட்டுள்ளது.


ஜெயலலிதா அரசால் கொண்டு வரப்பட்ட அரசு ஊழியர் வேலை நிறுத்தத் தடைச் சட்டம், மதமாற்றத் தடைச் சட்டம் ஆகியவை நீக்கப்பட்டன. அகற்றப்பட்ட கண்ணகி சிலை மீண்டும் நிறுவப்பட்டது. உழவர் சந்தை, ஏழைகள் திருமண உதவி போன்றவை மீண்டும் கொண்டு வரப்பட்டன. பழிவாங்கப்பட்ட அரசு ஊழியர்கள், கிராமநல ஊழியர்கள், சாலைப் பணியாளர்களுக்கு மீண்டும் வேலைகள் கொடுக்கப்பட்டன. தடை செய்யப்பட்ட ஆசிரியர், அரசு ஊழியர் வேலை வாய்ப்புகள் மீண்டும் ஏற்படுத்தப்படுகின்றன. பல ஆயிரம் பேருக்கு இதனால் வேலைவாய்ப்புகள் கிடைத்துள்ளன. மகளிர் சுய உதவிக் குழுக்கள் உறுதிப்படுத்தப்படுவதோடு இளைஞர் சுய உதவிக் குழுக்களும் நிறுவப்பட்டு விரிவுபடுத்தப்படுகிறது. ஆசிரியர்கள் அரசு ஊழியர்களிடமிருந்து பறிக்கப்பட்ட பல உரிமைகள் பலன்கள் மீண்டும் நிலைநாட்டப்படுகின்றன.


எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தல்களைக் குறிவைத்துதான் இலவசகவர்ச்சித் திட்டங்களை கருணாநிதி அரசு விரைந்து செயல்படுத்துகிறது என்றபோதும், அவை குறைபாடுகள் நிறைந்தனவாக உள்ளன என்றபோதும், தனியார்மயம் தாராளமயம் உலகமயமாக்கம் என்ற புதிய பொருளாதாரக் கொள்கையையும், கட்டுமான மறுசீரமைப்பையும் செய்யும்படி உத்தரவிடும் அமெரிக்க மேல்நிலை வல்லரசின் தலைமையிலுள்ள உலக வர்த்தகக் கழகம் , உலக வங்கி , மற்றும் சர்வதேச நிதி நிறுவனம் ஆகியவற்றின் ஆதிக்கத்தின் கீழ் இவ்வாறு இலவச கவர்ச்சித் திட்டங்களை எப்படிக் கொண்டுவந்து செயல்படுத்த முடிகிறது? இந்தக் கேள்விதான் அரசியல் பார்வையாளர்கள் பலரையும் மயக்கங் கொள்ளச் செய்கிறது.


உண்மை விவரங்களைத் தொகுத்தும் பகுத்தும் பார்த்தால், இந்தக் கேள்வி ஒன்றும் எளிதில் விடைகாண முடியாதவாறு சிக்கலானதில்லை. தரிசு நிலங்களைக் கண்டறிந்து, மேம்படுத்தி நிலமற்ற ஏழைகளுக்குப் பகிர்ந்தளிக்கும் அதே கருணாநிதி அரசுதான், ஒவ்வொன்றும் குறைந்தது 1000 ஏக்கர் பரப்புக்கும் மேலான விவசாய நிலங்களைக் கொண்ட சிறப்புப் பொருளார மண்டலங்களை தமிழகத்தின் நான்குநேரி, சென்னை எண்ணூர், திருப்பெரும்புதூர், ஓசூர், கோவை, மதுரை ஆகிய இடங்களில் நிறுவுவதற்கான ஏற்பாடுகளை விரைவாகச் செய்து வருகிறது. ஏற்கெனவே சென்னை தாம்பரத்தில் உள்ள சென்னை பொருளுற்பத்தி மண்டலம் (""மெப்ஸ்'') மற்றும் செங்கை அருகே உள்ள மகிந்திரா சிட்டி போன்றவை தாம் இந்த சிறப்புப் பொருளாதார மண்டலங்கள். விவசாய விளைநிலங்களை அடிமாட்டு விலைக்கு வாங்கியும் அரசு தரிசு நிலங்களை வளைத்துப் போட்டும் உருவாக்கப்படும் இந்த சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் மூலம் நிலம், நீர், மின்சாரம், போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்து, அந்நிய பன்னாட்டுத் தொழில் கழகங்களும், உள்நாட்டு ஏகபோக தரகு முதலாளிகளும் தாராளமாகக் கொள்ளையடிப்பதற்காக ஏற்பாடுகள் செய்து தரப்படுகின்றன. தொழில், உற்பத்திப் பெருக்கம், வேலை வாய்ப்புகளுக்கானவை என்று கூறிக் கொண்டாலும், அந்நிய உள்நாட்டு ஏகபோகங்கள் வீடுவீட்டுமனைத் தொழில், அடுக்குமாடிக் குடியிருப்புகள், மருத்துவமனைகள், பேரங்காடிகள், கணினிகளை வைத்து அந்நிய தொழில் வர்த்தக வங்கிகளுக்கான விவர வேலைகள் (பி.பி.ஓ. மற்றும் கால் சென்டர்) நடத்திக் கொள்ளையடிப்பதும் பெருமளவு நடக்கவுள்ளன.


நிலச் சீர்திருத்தத்தை அமலாக்கும் புரட்சி செய்து விட்டதாகப் பீற்றிக் கொள்ளும் "இடது சாரிகள்' ஆளும் மேற்கு வங்கம், கேரளா உட்பட நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள அமைப்பதற்காக விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்படுவதும், விவசாயிகளிடையே அதற்குக் கடும் எதிர்ப்பும் போராட்டங்களும் வெடிப்பதும் நடக்கின்றன. அவற்றையும் மீறி, சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்காக கையகப்படுத்தப்படுவதில் 10 சதவீதத்துக்கும் மேலாக விவசாய விளைநிலங்கள் இருக்கக் கூடாது என்ற வரம்பையும் உலக வங்கி நிர்பந்தத்தால் மத்திய அரசு நீக்கிவிட்டது. ஆனால், இங்கே தமிழகத்தில் சிறப்புப் பொருளாதார மண்டலங்களை நிறுவும் தி.மு.க. அரசின் விரைவான முயற்சிக்கு ஒரு சிறு முணுமுணுப்போ, எதிர்ப்போ இல்லை, இதில் கருணாநிதி ஜெயலலிதா, போலி கம்யூனிஸ்டுகள் உட்பட எல்லா ஓட்டுக் கட்சிகளும் ஒன்றுபட்டு நிற்கிறார்கள். நாளுக்கு ஒன்று வீதம் கருணாநிதியும், மாறனும் அந்நிய பன்னாட்டு கழகங்கள் மற்றும் டாடா, ரிலையன்ஸ், அம்பானி போன்ற உள்நாட்டுத் தரகு முதலாளிகளையும் வரவேற்று தொழில்கள் வர்த்தகங்கள் தொடங்குவதற்கான ஒப்பந்தங்கள் போடுகின்றனர்.

கருணாநிதி அரசு ஒருபுறம் நிலமற்ற ஏழை விவசாயிகளுக்கு தரிசு நிலங்களை மேம்படுத்தி இலவச நில ஒதுக்கீடு; மறுபுறம், ஏராளமான விவசாய விளைநிலங்களை கையகப்படுத்தி சகல வசதிகளோடு சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் அமைத்து அந்நிய மற்றும் உள்நாடு ஏகபோகங்களுக்குத் தாரை வார்ப்பது எனும் இவ்விரண்டைப் பார்க்கும்போது பாலுக்கும் காவல், பூனைக்கும் தோழன் என்று நாடகமாடுகிறதோ அல்லது நிலமளிப்பு உட்பட பல கவர்ச்சி இலவச திட்டங்கள் மூலம் அந்நிய உள்நாட்டு ஏகபோகங்களுக்குச் சேவை செய்வதை மூடி மறைத்து திசை திருப்ப எத்தணிக்கிறதோ என்று பலவாறு எண்ணத் தோன்றும்.


ஆனால், கருணாநிதி கட்சியும் அரசும் அறிவித்துச் செயல்படுத்தும் இலவசகவர்ச்சித் திட்டங்கள் அனைத்துமே உலகவங்கி, ஐ.எம்.எஃப்., உ.வ.கழகம் ஆகியவை மூலம் ஏகாதிபத்தியங்கள் புகுத்தும் புதிய பொருளாதாரக் கொள்கையின் திருத்தப்பட்ட மறுகாலனியாக்கக் கொள்கைகள்தாம். மலிவான, திறன்மிக்க உழைப்பாளர்களை உருவாக்கும் மனிதவள, இயற்கை வள மேம்பாடு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, நுண்பொருளாதாரத் திட்டங்கள் ஆகிய வகையினங்களில் மறுகாலனியாக்கக் கொள்கைகளைத்தான் கருணாநிதி அரசு தனது சொந்தப் பங்களிப்புகளாகப் பீற்றிக் கொள்கின்றது. இத்தகைய கொள்கைகளை முழுக்கவும் அரசு சாரா தொண்டு நிறுவனங்களை வைத்துச் செயல்படுத்த முயன்று தோற்றுப்போய், இப்போது அரசு மூலமாக கொண்டு வரப்படுகின்றன. மகளிர் சுயஉதவிக் குழுக்கள், சுனாமி வெள்ள நிவாரணம் என்ற பெயரில் ஜெயலலிதா காலத்திலேயே இவ்வாறு வாரி இறைக்கப்பட்டது. மறுகாலனியாக்கத் திட்டங்களை தமது அரசியல் ஆதாயங்களுக்குப் பயன்படுத்திக் கொள்வதில் ஜெயலலிதாவை கருணாநிதி விஞ்சி விட்டார் என்பதுதான் உண்மை.

No comments: