தமிழ் அரங்கம்

Saturday, October 21, 2006

நடைமுறையற்ற புலி அலட்டல்கள் இரண்டு

நடைமுறையற்ற புலி அலட்டல்கள் இரண்டு

ண்மையில் புலிக் காட்டுப்பிரதேசங்கள் மீதான பொருளாதார தடையையடுத்து ரி.ரி.என் தொலைக்காட்சியில் நிலவரம் என்ற பகுதியில் 'பொருளாதார தடைகளும் பொருண்மிய போராட்டமும்" என்ற தலைப்பில் ஒரு உப்புச்சப்பற்ற நடைமுறைக்கு உதவாத பரப்புரை ஒன்றைச் செய்தனர். அதில் புலித் தேசிய பொருளாதாரத்தை மீட்டுவிடுவோம் என்றும், உலக பொருளாதாரம் பற்றியும் கரிகாலனும், பாலகிருஸ்ணனும் அலட்டினர். http://www.pathivu.com/?ucat=nilavaram என்ற இணையத்தில் பார்க்க.


இதைப்பற்றி விமர்சனம் ஒன்றை நான் எழுதி வருகின்றேன். இருந்தபோதும் இவை பற்றி நான் முன்பு எழுதிய கருத்துக்களம் இதை மறுதலிக்கின்றது. அந்த வகையில் அவை கூட பதிலளிக்கின்றது


புலிகளும் தமிழ் மக்களும்


புலிகளின் வரவாற்றில் அவர்களை முதன் முதலாக தமிழ் மக்கள் மிக நெருக்கமாகவே, சொந்த அனுபவவாயிலாக புரிந்து கொண்டுள்ளனர். மக்களை நேரடியாக பாதிக்கின்ற உடனடி நிகழ்ச்சி, பரந்துபட்ட மக்களை விழிப்படைய வைத்து விடுவதுண்டு. இது புரட்சிக்குரிய தயாரிப்பு காலங்களில் புரட்சியின் உந்து விசையாகின்றது. தமிழ் மக்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சி உடனடி நிகழ்வால் அல்ல, ஒரு குறுகிய கால நடவடிக்கையால் நடந்துள்ளது. அமைதி சமாதானம் புலிகளுக்கு எதிரான மனஉணர்வை தமிழ் மக்களின் உணர்வு மட்டத்தில் ஏற்படுத்தியுள்ளது. கடந்த 25 வருட போராட்டத்தில் அவர்களின் போலித்தனமான வேடங்கள் மக்கள் முன் அம்பலமானது, இந்த அமைதிக்கு பின்னான காலகட்டத்தில் தான், மக்கள் ஒவ்வொருவரும், சுயமாக புலிகளை சொந்த அனுபவம் வாயிலாக மிக நெருக்கமாக புரிந்து கொண்ட நிகழ்வு, முதன் முறையாக நிகழ்ந்துள்ளது. இந்த அனுபவம் துரதிஸ்டவசமாக தவிர்க்க முடியாது, சொந்த இனத்தின் மொத்த நலனுக்கு எதிரானதாக உள்ளடகத்தில் பிரபலிக்கின்றது. எந்த பிரச்சார சமூக வடிவங்களையும் தாண்டிய மக்களின் சொந்த அனுபவம், புலிகளின் அரசியல் அழிவுக்குரிய சூழலை உருவாக்கியுள்ளது. தமது சொந்த அழிவுக்கே தாமே வித்திடும் அழிவுக்குரிய மக்கள் விரோத நடவடிக்கைகளை, புலிகள் தமது சொந்த அரசியலாக வரிந்து கொண்டுள்ளனர்.


ஆனால் இந்த அழிவு என்பது புலிகளின் கொடுரமான நடைமுறைக்கு மாறாக, இருக்கின்ற மற்றொரு பிற்போக்கு அமைப்பைச் சார்ந்து வெளிப்படுவதை தமிழ் மக்கள் தெரிவுக்குள்ளாக்கி உள்ளது. இந்த இடைவெளிதான், புலிகள் தப்பிப் பிழைக்கும் ஒரு இடைவழிப் பாதையை தக்கவைக்க முனைகின்றது. மக்களின் சமூக நலன் சார்ந்த மாற்றுத் தலைமைகளற்ற எமது சூனிய சுடுகாட்டுப் பிரதேசங்களில், சிங்கள இனவெறி அரசும் அவர்களின் கைக்கூலிகளாக இயங்கும் துரோகக் குழுக்களும் இதை அறுவடை செய்யத் துடிக்கின்றன.


அமைதி, சமாதானம் என்பது மக்களிடம் பணத்தை கொள்ளையிடுவதே புலிகள் அரசியலாகியதில் இருந்து இது தொடங்கியது. அத்துடன் தன்னியல்பாக தமது சமூகத் தேவைகளுடன் அன்றாடம் சமூகத்தில் இயங்கும் சமூக நிறுவனங்களை கட்டுப்படுத்தி, அவற்றை பினாமியாக்கும் நடைமுறைகள் புலிகளை மேலும் தனிமைப்படுத்தியது. இவற்றுடன் கட்டாயப்படுத்தி ஆட்சேர்ப்பு குழந்தைகளையும், இளம் தலைமுறையினரையும் பலாத்காரமாக கடத்திய நிகழ்வு மக்களின் தெரிவுகளை துரிதமாக்கியுள்ளது. மக்களை ஏறிமிதிப்பதே அமைதியாகி, அதுவே சமாதானத்தின் அடிப்படைச் சின்னமாகியது. அச்சம், பீதியுடன் நடமாடும் மக்களின் நடைப் பிண வாழ்க்கை, தனிப்பட்ட ஒவ்வொருவனினதும் மனக் குமுறலைக் கொண்டே அமைதி சமாதானம் உறைந்து கிடக்கின்றது.


அமைதி சமாதானத்தின் பின்பாக புலிகளின் பிரதான நடத்தையாக முதன்மை பெற்றது, பணத்தை எப்படி மக்களிடம் இருந்து சூறையாடுவது என்பதே. இதன் மூலம் புலிகளின் பெரும் மூலதனங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றது. நேரடி மற்றும் மறைமுகமான வழிகளில் வரியாகவும், புலிகளுக்கான கொடுப்பனவாகவும் கூட மாறியுள்ளது. இங்கு புலிகளுக்கான கொடுப்பனவு என்பது, பெரும்பாலும் மிரட்டலை ஆணையில் வைத்து கட்டாயப்படுத்தியே வசூலிக்கப்படுகின்றது. புலிகளின் வரிமுறை ஒரு பண்டத்தின் எல்லா செயல் தளத்திலும் கோரப்படுகின்றது. அதாவது மூலப் பொருளில் இருந்து விற்பனை வரை, இந்த உற்பத்தியின் சங்கிலித் தொடரின் எல்லாக் கண்ணியிலும் வரி கோரப்படுகின்றது, வசூலிக்கப்படுகின்றது. புலிகள் மற்றும் இராணுவத்தின் எல்லையோரங்களில் இராணுவ கெடுபிடி சோதனைக்கு பதில், புலிகளின் கெடுபிடி மக்களை கிலிகொள்ள வைத்துள்ளது. ஆட்கள் மேலான கண்காணிப்புக்கு வெளியில், பொருட்கள் மேலான கண்காணிப்பும், அதன் மீதான வரியும் இழுபறியான போராட்டத்தை எல்லையோரங்களில் அன்றாட நிகழ்வாக்கியுள்ளது. திட்டமிட்ட சீரான வரி முதல் விரும்பிய வகையில் வரி அறவிடல் என்பது அராஜக வழிகளில் அனைத்தும் எழுதப்படாத சட்டவிதியாக, ஆனால் அவர்களின் சொந்த நீதிமன்ற சட்டத்துக்கே உட்படாத வகையில் சூறையாடப்படுகின்றது.


புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் புலிகளின் நடத்தைக்கு அவர்களின் சொந்தச் சட்டம் எப்படி செல்லுபடியாகாதோ, அதே போல் புலியின் வரி அறவீட்டின் சரி பிழைகளை எதிர்த்து யாரும் வழக்காட முடியாது. இந்த அராஜக நிலை, எந்த சட்ட ஒழுங்குக்கும் அப்பாற்பட்ட சூறையாடலாக கொள்ளையாக உள்ளது. தமிழ் மக்கள் சிங்கள இனவாத அரசுக்கு வரிகட்டிய பின்பு, புலிகளுக்கு மீளவும் வரிகட்டுவதன் மூலம் கடுமையான சமூகப் பொருளாதார வாழ்வை எதிர்கொள்கின்றனர். சிங்கள மக்களை விட இரட்டைச் சுமையை பொருட்களை வாங்கி நுகர்வதில் எதிர் கொள்கின்றனர். புலிகளின் வரி பல தளத்தில் பல கட்டத்தில் சூறையாடப்படுவதால், வாங்கும் திறனை மட்டும் இன்றி உற்பத்தித் திறனையும் தமிழ் மக்கள் பாரிய அளவில் இழந்து விட்டனர். வாங்கி விற்கும் தரகு பொருட்களால் தேசிய உற்பத்தி அழிக்கப்படுவதுடன், தரகு பொருட்களுக்கு பலகட்டங்களில் கொடுக்கும் வரியையும் தமிழ் மக்கள் மேல் சுமத்திவிடுகின்றனர். இதனால் வாங்கும் திறனை மக்கள் இழக்க, வாங்குதிறனுள்ள சில கொழுத்த பணக்காரக் கும்பல் ஒன்று உருவாகியுள்ளது. இதனால் தமிழ் மக்களிடையே சமூக ஏற்றத் தாழ்வு அதிகரித்துள்ளது. வரிமுறை தரகுச் சந்தையை அடிப்படையாக கொண்டு இயங்குபவனை அது பாதிக்காது. அவன் எத்தனை வரி என்றாலும், அதை மக்களில் தலையில் சுமத்திவிடுவான். இது தரகு முதலாளித்துவ சந்தைவிதி. தேசிய முதலாளி உற்பத்தி தளத்தில் அழிந்து விடுகின்றான். பரந்துபட்ட மக்கள் வாங்கும் திறனை இதனால் இழக்கின்றனர். வடக்கு கிழக்கில் என்றும் இல்லாத வறுமை தலைவிரித்தாடுகின்றது என்றால், சிங்கள இனவாதிகளின் இனவாத யுத்தம் ஒருபுறம் என்றால், மறுபுறத்தில் தமிழ் குறுந்தேசியவாதிகள் கொண்டுள்ள மக்களுக்கு எதிரான வக்கற்ற அரசியல் பொருளாதார கொள்கையே ஒரு காரணமாகும்.


இந்த வக்கற்ற பொருளாதார அரசியல் கொள்கையை அவர்கள் வெட்கமின்றி மேடை ஏறிப்பேசுகின்றனர். பாலகுமார் யாழ் பல்கலைக்கழகத்தில் நிகழ்த்திய உரையொன்றில் ".. எமது இராணுவச் சமநிலையைப் பேணுவதற்கும் போரில் அங்கவீனமான எமது போராளிகளைப் பராமரிப்பதற்கும் உங்களுக்காக தமது உயிரை ஈந்த மாவீரர்களின் குடும்பங்களின் எதிர்கால வாழ்வைக் கட்டியெழுப்புவதற்கும் நிதி முக்கியமானது. அதற்காகவே வரி அறவிடுகின்றோம். மேற்படி எமது தேவைகளை மேற்கொள்ள எமக்கு ஏற்படும் செலவைக் கணக்கிட்டுவிட முடியாது. எண்ணில் அடங்காதது. இதனை எமது மக்கள் தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும். புலிகள் எதற்காக வரி அறவீடு செய்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்" வேடிக்கையான ஒரு உரை. தங்களைத் தாங்கள் நியாயப்படுத்த இந்த உரை உதவலாம்.


மக்களிடம் வரி அறவிடுவது அவசியம் என்றால், மக்கள் எங்கிருந்து எப்படி வரிக்கான பணத்தை பெற முடியும்? வரி பற்றி விளக்கும் தேசிய தலைவர்களே, ஐயா உங்கள் தீர்க்க தரிசனமிக்க தேசியத் தலைவரிடம் கேட்டுச் சொல்லுங்கள். மக்கள் வரிக்கான பணத்தை எங்கிருந்து எப்படி பெறுவது என்று? சிங்கள இனவாத அரசு தமிழ் மக்களை ஒடுக்குகின்றது என்பது நீங்களும் சொல்வது தான். அந்த ஒடுக்குமுறையில் வாழும் மக்கள் வரி கட்ட பணத்தை எங்கிருந்து எப்படித் திரட்டுவது. சிங்கள இனவாத அரசை விடுவோம், மக்கள் உங்களுக்கு வரி கட்டுவதற்கு, நீங்கள் இந்த மக்களுக்காக என்ன செய்தீர்கள்? "உங்களுக்காக தமது உயிரை ஈந்த மாவீரர்கள்" என்று மக்களிடம் குறிப்பிடும் நீங்கள், மக்களுக்காக என்ன செய்தீர்கள் என்று கூறுங்கள்? சிங்கள இராணுவத்திடம் இருந்து பாதுகாப்பை பெறுவது மட்டும் தான் உங்கள் பொறுப்பு என்றால், பொருளாதார பண்பாட்டு கலாச்சார துறையில் மக்களை நிர்வாணமாக்குவதா தேசியம்? அதைத்தான் இன்று வடக்கு கிழக்கில் வீரமாக செய்து வருகிறீர்கள். இதைத் தான் சிங்கள இனவாதிகளும், ஏகாதிபத்தியமும் கைதட்டி வரவேற்கின்றனர்.


மனிதனிடம் பணம் எப்படி வருகின்றது. வெறும் பேப்பர் பணமாக வரும் ஒரேயொரு வழி உழைப்புதான். உழைப்பு தான் அனைத்தையும் படைக்கின்றது. இதை நீங்கள் எப்போதும் என்றும் ஏற்றுக் கொண்டது கிடையாது. மனித உழைப்பு இன்றி பணம் வராது. உழைப்புத் தான் பணமாகின்றது. மனித உழைப்பை வாங்கி விற்கவும், உழைப்பை விபச்சாரம் செய்யவும், உழைப்பை கற்பழிக்கவும், உழைப்பை தரகு பண்ணும் ஒரு இழிதொழிலை தேசியமாக்கி, புலிகளாகிய நீங்கள், அதை பல ஆயிரம் தியாகங்கள் மேல் வெட்க மானம் இன்றி செய்து வருகிறிர்கள். இதற்குள் தான் தமிழ் தேசிய அரசியலை விபச்சாரம் செய்கிறீர்கள். இப்படி மக்களின் உழைப்பை விபச்சாரம் செய்ய நிர்ப்பந்தித்த பின்பு, கிடைக்கும் அற்ப கூலிப் பணத்தையும் வரியாகத் தா என்று கோரும் உரைகளும், நியாயப்படுத்தலும் தேசிய அரசியலாகிவிடுகின்றது. மக்களின் அற்ப கூலி அவர்கள் வாழப் போதுமா என்று ஒரு கணம் கூட நீங்கள் சிந்தித்தது கிடையாது. மேதகு உங்கள் தேசியத் தலைவர் இதைப் பற்றி எப்போதாவது சிந்தித்து, அந்த மக்களின் விடுதலைக்கு தலைமைதாங்கி வழிகாட்டிச் செல்லுகின்றாரா? இல்லை ஒரு நாளும் இல்லை. ஆனால் அந்த மக்களிடம் பணம் அறவிடுவது மட்டும் நடக்கின்றது. இது நேரடியாக முடியாவிட்டால், மறைமுக வரி மூலம் வரி அறிவிடுவது மட்டும் தொடருகின்றது.


அதாவது உழைக்கும் மக்களிடம் பணத்தைப் பெற முன்பு, அவர்களின் நலனில் அக்கறைப்பட்டது கிடையாது. அவர்களின் மேலான அக்கறைக்கு வெளியில், அந்த மக்களின் உழைப்பு எந்த உற்பத்தி மீது இருந்ததோ, அதைப் பாதுகாத்தார்களா என்றால் அதுவுமில்லை. மக்களின் உற்பத்தி மூலங்களையும், உற்பத்தித் திறனையும் உங்கள் கொள்கையால் அழித்து வந்தீர்கள், அழித்து வருகின்றீர்கள். வரி ஒருபுறம் என்றால், நடைமுறையில் தரகுப் புலிகளாகி மக்களின் கழுத்தில் கையை வைத்துவிட்டீர்கள். தமிழ் மக்களின் அடிப்படை தேவை மீதான மொத்த விநியோகஸ்தராகவே மாறி வருகின்றீர்கள். இதன் மூலம் சிறந்த கொள்ளைக்கார தரகராக இருக்கவும், சந்தை விலை தீர்மானிக்கவும் தொடங்கி விட்டீர்கள். இதை சொந்த உற்பத்தி சார்ந்து செய்வதை விடவும், வாங்கி விற்கும் தரகனாக இருப்பதன் மூலம் இருந்த இடத்திலேயே அதிக இலாபம் பெறும் கொள்கை அமுலுக்கு வந்துள்ளது. சுயமான தேசிய உற்பத்தி, புலிகளின் தரகுச் சந்தை விலையை ஆட வைப்பதை சகித்துக் கொள்ள புலிகள் தயாராக இல்லை. தேசிய உற்பத்தியை முடமாக்க, சிறப்பு வரியை விதித்து அதை முடக்குவது அண்மையில் அதிகரித்துள்ளது. தமது சொந்த சந்தையை ஏகபோகமாக்க, போட்டியாளர் மீது மட்டுமின்றி, உற்பத்தியாளர் மீதும் கடும் வரிமுறை அமுல் செய்யப்படுகின்றது. இதன் மூலம் உற்பத்தி துறையை முடக்கி, உற்பத்திதுறையைக் கூட கேட்பாரற்ற விலையில் அபகரிப்பது, இதன் முடிவில் சாத்தியமாகிவிட்டது. உற்பத்தி நடந்தாலும் நடக்காவிட்டாலும் வரி என்பது மற்றொரு கொள்ளை. இதன் மூலம் உற்பத்திதுறை மலிவாக கொள்ளை இடப்படுகின்றது.


கடும் வரியுடன், மக்களின் உற்பத்தியை கட்டுப்படுத்தி சந்தையை கைப்பற்றும் வடிவிலும் கூட அமைதியும், சமாதானம் ஒரு படி பாய்ச்சல் பெற்றுள்ளது. இயல்பான உற்பத்தியால் உருவாகும் மக்களின் சந்தை விலையை கட்டுப்படுத்த, சந்தையில் பொருட்களை குவிக்கின்றனர். அதேநேரம் சிங்களப் பகுதியில் இருந்து பொருட்களை வாங்கி வருவதுடன், சந்தை விலையைக் கட்டுப்படுத்தி விவசாயத்தை முடமாக்குவதும் தொடங்கியுள்ளது. ஒரு பொருளின் பொதுவான உற்பத்தி விலையை விட குறைவான உற்பத்தி விலையில் உற்பத்தி செய்யும் புலிகள், சந்தையை கட்டுப்படுத்தி மக்களின் உற்பத்தியை முடக்குகின்றனர். அதாவது புலிகளின் உற்பத்தி வரிக்கு அப்பாற்பட்டது மட்டுமின்றி, பல தொடர் சலுகைகளை கொண்டது. மறு தளத்தில் உற்பத்தி விலை வரிகளால் தமிழ் பகுதியை விட சிங்களப் பகுதியில் குறைவாக இருப்பதால், சிங்கள பகுதியில் இருந்த ஏகபோகமாக அவற்றை வாங்கி, அதை தமிழ் விவாசயிகளுடன் போட்டிக்கு புலிகளால் விற்கப்படுகின்றது. தரகு வர்த்தகத்தை மேல் இருந்து பறிப்பதுடன், அதற்கு போட்டியான அனைத்தையும் திட்டமிட்டே வரிமுறை மூலம் கட்டுப்படுத்தி முடக்கப்படுகின்றது. பொருட்களின் தேவையை நிறைவு செய்யும் சந்தைக் கொள்கை உடனடியான இலாபத்தை திரட்டித் தருவதால், தேசிய உற்பத்திகள் முடமாக்கப்பட்டு வருகின்றது. உதாரணமாக வடக்கு கிழக்கில் கொக்கோகோலாவின் ஏகபோக விநியோகத்தை, அதிக வரி மூலம் புலிகள் தமது கட்டுப்பாட்டில் கொண்டுவந்தனர். இதன் மூலம் உள்ளுர் சோடா உற்பத்தியை புலிகள் ஊக்குவிப்பர் என்பது யாரும் கனவிலும் நினைத்துப் பார்க்க முடியுமா? சிறந்த பழப் பணங்களை ஏற்றுமதி செய்யும் கொள்கை அங்கீகரிக்கப்பட்டு, கழிவான கொக்கொகோலா சந்தையில் ஆதிக்கம் பெறுகின்றது. இப்படி புலிகளின் பொருளாதாரக் கொள்கை, மக்களின் உற்பத்தி மையங்களையும் உழைப்பின் திறனையும் இல்லாததாக்குகின்றது. மக்களை கொள்ளையிடும் மறுதளத்தில் மீண்டும் மக்கள் தமக்கு வரி கட்டவேண்டும் என்பது புலிகளின் நவீன அரசியல் அகாரதி.


சாவகச்சேரியில் கள் உற்பத்தி அமைதி சமாதானத்தின் பின் பெரும் வீழ்ச்சியடைந்துள்ளது. 1999ஆம் ஆண்டில் 1847 அங்கத்தவர்கள் கள் உற்பத்தியில் ஈடுபட்டிருந்தனர். இது 2003 இல் 300கும் குறைவானதாக மாறிவிட்டது. கள் உற்பத்தி குறைந்துடன், 23 கள்ளுத் தவறணைகளில் 17 தவறணைகளே இயங்கும் நிலைக்கு இன்று மாறிவிட்டது. தேசிய உற்பத்தியின் அழிவு, அமைதி சமாதானத்தின் பின் வேகம் கண்டு வருகின்றது. யாழ்ப்பாண மாவட்டத்தில் 1997ல் யுத்த நெருக்கடிகளைக் கடந்து 3101 சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகள் இருந்தன. இதில் சுமார் 10,000 பேர் தொழில் வாய்ப்புகள் பெற்று இருந்தனர். ஆனால் தற்போது இந்த தொழில் முயற்சிகளில் பெரும்பாலானவை அமைதி சமாதானத்தின் பின்பு முடக்கி அழிந்து வருகின்றது. அமைதி சமாதானம் சிறு தொழில்துறையைப் பெருக்கவில்லை. அதை முடக்கி அழித்துள்ளது. புலிகளின் வரி அறவீட்டுக் கொள்கை பிரதானமானது என்றால், தரகு வர்த்தகம் அதற்கு இணையாக அழித்து வருகின்றது. 10000 பேரின் வாழ்க்கை நரகமாகி வருகின்றது. இவர்களிடம் வரியை நேரடியாக அறவிடுவது நெருக்கடிக்குள்ளாக, மறைமுக வரி பொருட்கள் மேலானதாக மாறிவருகின்றது. உதாரணமாக யாழ்ப்பாணத்தில் 22-12-2003 முதல் பாணின் விலை ஒரு ரூபாவால் அதிகரிக்கப்பட்டது. இந்த ஒரு ரூபா வரி புதிதாக புலிகளுக்காக மக்களை கொடுக்க நிர்ப்பந்திக்ப்பட்டனர். இதில் மாவுக்கு முன் கூட்டிய வரி, மாவை ஏற்றிவரும் வாகனத்துக்கு வரி, அதை ஏற்றி இறக்கும் தொழிலாளிக்கு வரி, பாணை உற்பத்தி செய்யும் நிறுவனத்துக்கு வரி என எல்லா சங்கிலி இணைப்பிலும் வரி முறை காணப்படுகின்றது. தற்போது ஒவ்வொரு பாணுக்கும் ஒரு ரூபா வரி. முன்னயை மன்னர் சமுதாயங்களில் இருந்து, இன்னும் வரி விதிக்கப்படாமல் எஞ்சி இருப்பது ஆள்வரியும், முலை வரியும் தான்.


புலிகள் இயக்கத்துக்கு மாதாந்தம் 1,5 கோடி ரூபா வரி கிடைப்பதாக கூறுகின்றனர். இது மிகக் குறைவான தொகையாகும். வரி எப்படி அறவிடப்படுகின்றது என்பதற்கு, வெளிவரும் சில உதாரணங்களைப் பார்ப்போம். மீளக்குடியமர்வு ஊக்குவிப்புக்காக ஏகாதிபத்திய துணையுடன் அரசினால் வழங்கப்பட்ட 25000 ரூபா நிதியில், 5000 ரூபாவை புலிகள் பறித்தெடுக்கின்றனர். கடின உழைப்பாக மரமேறி கிடைக்கும் ஒரு போத்தல் கள்ளுக்கு, இரண்டு ரூபா வீதம் வரி அறவிடப்படுகின்றது. இதனால் இந்த உற்பத்தி முடங்கி வருகின்றது. மரத்தில் இருந்து விழுந்தவனை, மாடு ஏறி மிதித்தவன் கதையே இங்கு நடக்கின்றது. யாழ்ப்பாணத்திற்கு அனுப்பப்படும் ஒவ்வொரு டி.வி.எஸ். மோட்டார் சைக்கிள்களுக்கும் 1000 ரூபா வீதம் விற்பனையகத்தில் புலிகள் வரி அறவிடுகின்றனர். இதைவிட இந்த மோட்டர் சைக்கிள்கள் கொழும்பு முகவரிடமிருந்து, 1000 ரூபா வீதம் வரி அறவிடப்படுகின்றது. மொத்தத்தில் 2000 ரூபா வரி. இதை விட ஏற்றி இறக்கும் லொறிக்கு வரி, கூலிக்கு வரி என்று பல உண்டு. யாழ்ப்பாணம் எடுத்துச் செல்லப்படும் ஹீரோ ஹொண்டா ரக மோட்டார் சைக்கிள்களுக்கு 7.5 சதவீத வரி. 40,000 பக்கற் சீமெந்து கப்பல் மூலம் பருத்தித்துறைக்கு வரும் போது, சுமார் 20 லட்சம் ரூபா வரி வசூலிக்கப்படுகின்றது.. யாழ்ப்பாணத்திற்கு விறகு எடுத்துச் செல்லும் லொறிக்கு 36,000 ரூபா முதல் 40,000 ரூபா வரை வரி. இது கடந்த ஐப்பசிக்கு முன் 33,000 ரூபா முதல் 35,000 ரூபாவாக இருந்தது. கிளிநொச்சி டிப்போ சந்திக்கு அருகாமையில் உள்ள வர்த்தக சந்தையில், வியாபாரம் செய்யும் வர்த்தகர்கள் ஒவ்வொருவரிடம் இருந்தும் தினமும் புலிகள் 60 ரூபா அறவிட்ட புலிகள், தீபாவளி அன்று 250 ரூபா அறவிட்டனர். இதற்கு எதிராக வியாபாரிகள் சங்கம் போராட்டம் ஒன்றை நடத்தியது.


நல்லூரில் இருக்கும் ஆர்.வி.ஜீ. பீடித் தொழிற்சாலைக்கு தேவையான மூலப் பொருட்களை கொழும்பிலிருந்து எடுத்துச் செல்லப்படும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், புலிகளுக்கு சுமார் 50 இலட்சம் ரூபாவை வரியாக கட்டுகின்றனர். 2 பவுசர்களில் தினமும் வடக்குக்கு எண்ணை விநியோகம் செய்யும் ஏ.என்.ரி நிறுவனத்துக்கு கூட புலிகள் வரி அறவிடுகின்றனர். ஒவ்வொன்றும் சுமார் 33,000 லீற்றர் கொள்ளளவுடைய இந்த பவுசர்கள் லீற்றருக்கு ரூபா 9.50 சதப்படி புலிகள் வரி கட்டகின்றனர். ஒரு பவுசரின் மூலமாக மட்டும் தினசரி 3,13லட்சம் ரூபா புலிகளுக்கு வரியாக கிடைக்கின்றது. யாழ்ப்பாணம் கொழும்பு விமானச் சேவையில் ஈடுபட்டுள்ள ஒவ்வொரு விமான நிறுவனத்திடம் கூட வரி அறவிடப்படுகின்றது. இவ்வகையில் 2002 டிசம்பர் முதல் 2003 மே மாதம் வரை எக்ஸ்போ நிறுவனம் 91 லட்சம் ரூபாவையும், செரண்டிப் நிறுவனம் 29 லட்சம் ரூபாவையும்,, லயன் எயார் நிறுவனம் 3,5 லட்சம் ரூபாவும் புலிகளுக்கு வரியாக செலுத்தினர். இப்படி பற்பல வரி அறவிடப்படுகின்றது.


யாழ் நடை பாதையோரங்களில் உள்ள கடைகளுக்கு புலிகள் பெற்று வந்த வரியான 2500 ரூபாவை அண்மையில் 3500 ரூபாவாக உயர்த்தினர். இதன் மூலம் பொருட்களின் விலை அதிகரிப்பது தவிர்க்க முடியாது. கலாச்சாரத்தைப் பேணும் இளைஞர் குழுக்கள் காதலர்களின் ஒழுக்கம் பற்றி கேட்பதுடன், அவர்களின் நடத்தையில் சந்தேகத்தை தெரிவித்து அதற்கு 1000 ரூபா அபராதம் விதிக்க முனைகின்றனர். புலிகளின் சோதனைச் சாவடிகளில் பொருட்களை பரிசோதனைக்காக இறக்கி ஏற்றும் தொழிலாளர்களின் கூலியில் நாற்பது ரூபா வீதம் புலிகள் வரி அறவிடுகின்றனர். அதே நேரம் சோதனை என்ற பெயரில் ஹன்டருக்கு 300 ரூபாவும், லொறிக்கு 200 ரூபாவும், எல்ப் ரக லொறிக்கு 100 ரூபா வீதம் புலிகள் வாகன உரிமையாளர்களிடமிருந்தும் அறவிடுகின்றனர். வவுனியா மாவட்டத்திலுள்ள வவுனியா கூட்டுறவுச் சங்கம், செட்டிகுளம் பலநோக்கு கூட்டுறவுச் சங்கம் என்பவற்றின் ஊடாக சமுர்த்தி நிவாரணமாக வழங்கப்படும் அரிசியை கிலோ 26 ரூபாவிலிருந்து 28 ரூபாவாக உயர்த்தி விற்பனை செய்கின்றனர். இரண்டு ரூபாவை புலிகளின் வரியாக அறவிடுகின்றனர். மட்டக்களப்பு மாநகர சபை மக்களிடமிருந்து அறவிடப்படும் சோலைவரியை புலிகள் உயர்த்தியுள்ளனர். உதாரணமாக 20 பேர்ச்சஸ் நிலப்பரப்பில் அமைந்த வீட்டிற்கு 320ரூபா மட்டும் அறவிட்ட நிலையில், புதிய ஆண்டில் 2250 ரூபாவாக அறிவிக்கப்படவுள்ளது. மிகுதிப் பணம் புலிகளுக்கு வழங்கப்படுகின்றது. சண்டெல் நிறுவனம் யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ளும் புதிய தொலைபேசி இணைப்புகளுக்கு 24,900 ரூபாவை அறவிடுகின்றது. இதே நிறுவனம் கொழும்பில் புதிய இணைப்புகளுக்கு 15,900 ரூபாவே அறவிடுகின்றது. இதில் ஒரு பகுதி புலிக்கு செல்லுகின்றது. யாழ்குடா நோக்கி பறக்கும் விமானத்தில் பயணம் செய்யும் ஒவ்வொரு பயணியிடமும், முன் கூட்டியே ரிக்கற் மூலம் வரி அறவிடப்படுகின்றது. வரி எல்லாக் கட்டமைப்பிலும், ஏன் கொழும்பில் வைத்துக் கூட முன் கூட்டியே அறவிடப்படுகின்றது. இவைகள் கசிந்து வரும் ஒரு சில உதாரணங்கள். வரியை மறைமுகமாக அறவிடுவதில் புலிகள் நிறுவனப்படுத்தி வருகின்றனர். இதைவிட எல்லா அபிவிருத்தி கட்டுமானங்களிலும், யுத்த நிவாரணங்களிலும் கூட புலிகள் ஒரு தொகையை அறவிடுகின்றனர். இதில் வேடிக்கை என்னவென்றால் நிரந்தமான கட்டுமான பணிகளில் கூட ஒரு பகுதியை அறவிடுவது என்பது, கட்டுமானத்தின் உறுதியை கேள்விக்குள்ளாக்கி உள்ளது. மருத்துவமனை, வீதி, பாலங்கள், குளங்கள் போன்ற கட்டுமானத்தில் ஒரு பகுதி நிதியை புலிகள் அறவிடும் போது, அவற்றின் ஆயுள் எண்ணப்படும் ஒரு நிலைக்குச் சென்று விடுகின்றது. இதைவிட கட்டுமான முதலாளி முதல் தொழிலாளி வரை தனி வரி உண்டு. புலிகளின் கட்டுமானம் மற்றும் நிர்மாணங்கள் பற்றி அரசியல் கொள்கையை கேள்விக்குளாக்கியுள்ளது. அமைதி சமாதானம் வரியாகியதால் கடுமையான எதிர்ப்பு பரந்தளவில் புகையத் தொடங்கியுள்ளது.


எந்த சட்ட திட்டத்துக்கும், அவர்களின் சொந்தச் சட்ட திட்டத்துக்கே வரிபற்றி தீர்ப்புக் கூற முடியாத நிலையில், தாம் விரும்பியபடி நிர்ணயம் செய்யும் வரியே இறுதியானது என்ற நிலையில் ஒரு மோசடியைச் செய்தனர். சில பொருட்களுக்கு சில சலுகைகளை வழங்கவும், வரியைக் கூட்டவும் செய்தனர். இதன் மூலம் வரியை இல்லாததாக்கி விட்டதாக பினாமிகள் மூலம் ஒப்பாரி வைத்தனர். வரிக் குறைப்பு என்ற ஒன்றை சில பொருட்களுக்கு செய்து விட்டு, உலகறிய அதைப் பிரகடனம் செய்தனர். இதனால் தமக்கு கடும் நட்டம் ஏற்படுவதாக வேறு கூறினர். புலிகளின் நிதிப்பொறுப்பாளர் தமிழேந்தி இந்த வரிக் குறைப்பு மூலம் தமக்கு மாதாந்தம் 80 இலட்சம் ரூபா வீதம், வருடாந்தம் சுமார் 10 கோடி ரூபா வருமான இழப்பு ஏற்படுவதாக கூறியதுடன், மக்களுக்காக இந்த இழப்பை நாம் ஏற்றுக்கொள்வதாக கூறி ஒரு மோசடியை அரங்கேற்றினர். ஏதோ புலிகள் தாங்கள் உழைத்து அதை மக்களுக்கு தியாகம் செய்தது போல் ஒரு மோசடியை அரங்கேற்றினர். மக்களின் பணத்தை அவர்களிடம் இழப்பது தமக்கு நட்டமாம். இது தான் தேசியம். நம்புங்கள் தமிழீழ மக்கள் சுபீட்சத்தை புலிகளின் தலைமையில் காண்பார்கள் என்று!


இராணுவ எல்லையைத் தாண்டிய ஒவ்வொரு கிராமப்புறத்திலும் ஒவ்வொரு வீட்டிலும், எங்கு எதை எப்படி புடுங்குவது என்பதில் ஒரு புதிய சமூக கண்ணாணிப்பு முறை வடக்கு கிழக்கில் உருவாகியுள்ளது. யாழ் பல்கலைக்கழக மாணவர்களுக்கு உணவு பார்சல் விற்றுப் பிழைக்கும் ஏழைகளிடம் கூட, சோற்றுப் பார்சலுக்கு கூட வரி அறவிட புலிகள் முனைகின்றனர். ஆனால் அந்த அரிசிக்கும், கறிக்கும், ஏன் அதன் உற்பத்திக்கே முன் கூட்டிய பல வரிகள் கட்டப்பட்ட நிலையில், அதை சமைத்து உண்பதற்கும் கூட வரி. இது புலிகளின் சமூக நியதியாகியுள்ளது. எங்கும் எதிலும் வரி. தூணிலும் துரும்பிலும் கடவுள் இருக்கின்றான் என்றது போன்று, எங்கும் எதிலும் வரி அறிவிடுவது என்பது புலிகளின் புதிய போராட்டமாகியுள்ளது. மக்களின் இயல்பு வாழக்கை என்பது, புலிகளுக்கு வரி கட்டுவதைத் தாண்டி இது வரை எதார்த்தத்தில் விளக்கம் பெறவில்லை. சிறிலங்கா இனவெறி இராணுவமும், குறுந்தேசிய தமிழ் இராணுவமும் சண்டை செய்யாது இருக்கவும், மக்களை வேட்டையாடி கொல்லாது இருக்கவும், மக்கள் தமது உழைப்பில் ஒரு பகுதியை இலஞ்சமாக கொடுக்க வேண்டியுள்ளது. அமைதி சமாதானத்தின் இயல்புத் தன்மை இதைத் தாண்டி, எந்த விளக்கமும் அற்றுப் போயுள்ளது. மறுதளத்தில் தேசிய வளங்களை உலகமயமாக்குவதை அனுசரிக்க கோருகின்றது.


உழைக்கும் மக்கள் தமது சொந்தக் கோரிக்கைக்காக போராடிய போது, அதையும் மிரட்டி பணிய வைத்த சம்பவம் ஒன்று அண்மையில் சந்திக்கு வந்தது. இலங்கை சுகாதாரத்துறை ஊழியர்கள் இலங்கை அரசாங்கத்தை எதிர்த்து நடத்திய போராட்டத்தை, கிழக்கில் இருந்து வடக்கு வரை புலிகள் மிரட்டி பணியவைத்தனர். இதுதான் புலிகள். உழைக்கும் மக்கள் பற்றிய வக்கிரமான புத்தி அடக்கியாள்வதும், கொள்ளை அடிப்பதும் தான். மக்களி இயல்பான வாழ்வில் மூச்சு விடுவது என்பது சாத்தியமற்றதாகியுள்ளது. அடிப்படைத் தேவையை பூhத்தி செய்ய முடியாத 80 ஆயிரம் யாழ் குடாநாட்டு குடும்பங்கள் வறுமைக் கோட்டுக்கு கீழ்ச் சென்று வறுமையில் சிக்கிவிட்டனர். இது யாழ்குடாநாட்டு குடும்ப எண்ணிக்கையில் 60 சதவீதமாகும். வறுமையை அதிகரிக்க அதிகரிக்க புலிகள் தமிழ் மக்களிடம் கோருவது அதிகரிக்கின்றது. வடக்கு கிழக்கில் 80000 ஆயிரம் குழந்தைகள் பாடசாலை செல்வதற்கு கூட வசதியற்ற ஏழைகளாகிவிட்டனர். 65000 குழந்தைகள் வறுமை காரணமாக கல்வியை இடையில் நிறுத்தி விட்டனர். வறுமை வடக்கு கிழக்கில் பெருக்கெடுக்கின்றது. மக்கள் உழைப்பின் ஆற்றலை இழக்கின்றனர். சிறு தொழில்கள் அன்றாடம் முடங்கிச் செல்லுகின்றது. உலகமயமாதல் ஒரு பக்கம், புலிகளின் வரியும் அவர்களின் பொருளாதாரக் கொள்கையும் மறுபக்கமாக இணைந்து, எல்லாவற்றையும் சூறையாடுகின்றது. தேசிய முதலாளித்துவம் சொத்துகள், அதன் தேசிய வளங்கள் என அனைத்தும் அழிகின்றது. மீன்பிடி, விவசாயம் வரியின் கெடுபிடிகளால் மூச்சு விடமுடியாது அழிகின்றது. வறுமை மேலும் துல்லியமாகின்றது. இந்த வரிமுறைதான் கிழக்கில் தொடர்ச்சியாக முஸ்லிம் மக்களுக்கு எதிரான கலவரங்களை திட்டமிட்டு உருவாக்குகின்றது.


வரிக்கு எதிரான உணர்வும், வரியை எதிர்க்கின்ற போது தொடர்ச்சியாக கடத்தல்கள், வன்முறைகள் வரைமுறையின்றி நடக்கின்றது. நபர்களை கடத்துவது முதல் பொருட்களை கடத்துவது வரை அன்றாடம் முஸ்லிம் பகுதிகளில் நடக்கின்றது. இது முஸ்லிம் மக்களுக்கு எதிரான சமூக வன்முறையாக எழுகின்றது. இதன் மேல் எதிர் வன்முறை முஸ்லிம் தமிழ் இனக்கலவரங்களை உருவாக்குகின்றது. புலிகளின் நடவடிக்கைகள் திட்டமிட்டே இதை விரிவாக்கி, அதில் பேரம் பேசி வரியால் குளிர்காய்கின்றனர். முஸ்லீம் மக்களுக்கு எதிரான தொடர் வன்முறை, பேரம் பேசும் ஆற்றலை ஏற்படுத்தி வரி அறவிட்டை ஏற்க வைக்கப்படுகின்றது.


No comments: