சட்டத்திற்கும் மேலான கிரிமினல்கள்
போலீசு அதிகாரி பிரேம்குமாரின் அட்டூழியங்களை எதிர்த்து, 25 ஆண்டு காலமாகச் சட்டரீதியாக போராடி வரும் நல்லகாமனின் கதை நிரூரித்துக் காட்டும் உண்மை.
சங்கரராமன் கொலை வழக்கின் விசாரணை அதிகாரிகளில் ஒருவரும், முன்னாள் காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளருமான பிரேம்குமார் செப்டம்பர் 8ஆம் தேதி முதல் தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். பிரேம்குமார் மீது திரு.நல்லகாமன் தொடர்ந்த கிரிமினல் வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டிருப்பதாக ஜூலை 2003இல் மதுரை விரைவு நீதிமன்றம் அளித்த தீர்ப்பினடிப்படையில் அவரை நிரந்தரமாகப் பணிநீக்கம் செய்வது தொடர்பாக செப்டம்பர் 1ஆம் தேதி தமிழக அரசு பிரேம்குமாருக்கு விளக்கம் கோரும் நோட்டீசையும் ஏற்கெனவே அனுப்பியிருக்கிறது.
பிரேம்குமார் மீதான இந்த நடவடிக்கை, "ஜெயேந்திரர் மீதான கொலை வழக்கைப் பலவீனப்படுத்தும் நோக்கத்தில் தி.மு.க. அரசால் எடுக்கப்பட்டிருப்பதாக' முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குற்றம் சாட்டியிருக்கிறார். ""எந்தக் குற்ற வழக்கிலும் தண்டிக்கப்படும் அதிகாரி மீது நிர்வாக நடவடிக்கை எடுப்பது வழக்கமானதுதான் என்றும், இதற்கு உள்நோக்கம் கற்பிப்பது துரதிருஷ்டவசமானது என்றும்'' தமிழக அரசின் உள்துறைச் செயலர் ஜெயலலிதாவிற்கு மறுப்பு அறிக்கை விடுத்திருக்கிறார்.
பிரேம்குமார் மீதான நடவடிக்கைக்கு அடிப்படையாக அமைந்துள்ள நல்லகாமன் என்ற முன்னாள் இராணுவ அதிகாரி (சுபேதார்) நீதிக்காக நடத்திய நீண்ட துயரமிக்க போராட்டம் பற்றியோ, அவருடைய குடும்பத்தைச் சித்திரவதை செய்தது மட்டுமின்றி, கடந்த 25 ஆண்டுகளாக உள்ளூர் நீதிமன்றம் முதல் உச்சநீதி மன்றம் வரை அவரை அலையவைத்த பிரேம்குமாரின் சட்டவிரோத நடவடிக்கைகளைப் பற்றியோ உள்துறைச் செயலர் தனது அறிக்கையில் எதுவும் கூறவில்லை. தி.மு.க.விற்கும் அ.தி.மு.க.விற்குமான மோதலில் நல்லகாமன் என்ற முதியவரின் போராட்டம் பகடைக்காயாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பதே உண்மை.
மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் ஆசிரியையாகப் பணிபுரிந்து வந்த நல்லகாமனின் மனைவி சீனியம்மாள், அதே ஊரில் சும்மா கிடந்த ஒரு வீட்டை 5,000 ரூபாய்க்கு ஒத்திக்கு வாங்கி, உரிமையாளரின் அனுமதியுடன் ரூ. 4,000 வரை செலவு செய்து பழுது பார்த்து, கழிப்பறை போன்றவற்றைக் கட்டி 1976 முதல் அங்கே வசித்து வந்தார்.
வீட்டைக் காலி செய்யச் சொன்னார் அதன் உரிமையாளர். காலி செய்வதென்றால் ஒத்திப் பணத்தைத் திருப்பித் தரவேண்டும் என்பது ஊருக்கே பொருந்தும் நியாயம். ஆனால் இது போலீசுக்காரனுக்குப் பொருந்துமா? பணம் கொடுக்க முடியாது; காலி செய் என்றார் வீட்டின் உரிமையாளரான பைரவ் சிங் என்ற உதவி சப்இன்ஸ்பெக்டர் (ஆயுதப்படைப் பிரிவு).
இந்தப் பிரச்சினையில் வாடிப்பட்டியில் சார்பு ஆய்வாளராக இருந்த பிரேம்குமார் கட்டைப் பஞ்சாயத்து செய்தார். அந்த அநீதியான கட்டைப் பஞ்சாயத்துக்குக் கட்டுப்பட மறுத்த குற்றத்துக்காக நல்லகாமன், அவரது மனைவி சீனியம்மாள் மற்றும் பிள்ளைகளை ரத்தம் சொட்ட சொட்ட அடித்து, சங்கிலியால் பிணைத்து நகரம் முழுதும் ஊர்வலம் விட்டார். தன்னைக் கொலை செய்ய முயன்றதாகப் பொய் வழக்குப் போட்டு நல்லகாமனையும் அவரது மகனையும் சிறையிலும் தள்ளினார். இதை எதிர்த்து ஊரே திரண்டு போராடியது. பிரேம்குமார் மீது நல்லகாமன் வழக்குத் தொடர்ந்தார். பிரச்சினை அன்று சட்டமன்றத்தில் எழுப்பப்பட்டது. விசாரணை நடத்திய ஆர்.டி.ஓ. ""பிரேம்குமார் மீது கொலை முயற்சி உள்ளிட்ட 7 குற்றப்பிரிவுகளில் வழக்கு தொடருமாறு'' அரசுக்கு சிபாரிசு செய்தார். வழக்கும் தொடரப்பட்டது. 1983இல் பிரேம்குமார் சஸ்பெண்டு செய்யப்பட்டார். ஆனால், கிரிமினல் வழக்கு நிலுவையில் இருக்கும்போதே 1985இல் பிரேம்குமாருக்கு டி.எஸ்.பி.யாகப் பதவி உயர்வு வழங்கியது, (அ.தி.மு.க.) அரசு. அதேநேரத்தில், நல்லகாமன் மீது பிரேம்குமார் போட்டிருந்த பொய் வழக்குகள் காரணமாக, முன்னாள் இராணுவ வீரருக்குக் கிடைக்கக்கூடிய அரசு வேலை வாய்ப்புகள் கூட அவருக்கு மறுக்கப்பட்டன.
இதற்கிடையில், ஆர்.டி.ஓ. அறிக்கை அடிப்படையில் தன் மீது அரசு தொடர்ந்த வழக்கையே தள்ளுபடி செய்யவேண்டும் என்று கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் தீர்ப்பும் வாங்கினார் பிரேம்குமார். இந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதி மன்றத்தை அணுகினார் நல்லகாமன். பிரேம்குமார் மீதான வழக்கைத் தள்ளுபடி செய்யக் கூடாது என்று கூறிய உச்சநீதி மன்றம், அதனை உடனே விசாரித்து முடிக்கவேண்டும் என்றும் 7.11.89இல் உத்தரவிட்டது. ஆனால் 2002ஆம் ஆண்டு வரை (13 ஆண்டுகள்) மதுரை நீதிமன்றத்தில் விசாரணையே தொடங்கவில்லை.
""பிரேம்குமார் பிடி வாரண்டுக்கு சிக்காத தலைமறைவுக் குற்றவாளி'' (Absconding) என 16.9.97 அன்று அறிவித்தது மதுரை நீதிமன்றம். வாரண்டுக்குச் சிக்காத இந்தக் குற்றவாளிக்கு 1998இல் கூடுதல் கண்காணிப்பாளராகவும், 1999இல் கண்காணிப்பாளராகவும் பதவி உயர்வு வழங்கியது அன்றைய (தி.மு.க.) அரசு.
இந்நிலையில் பிரேம்குமார், நல்லகாமனின் வழக்குகள் அனைத்தையுமே தள்ளுபடி செய்யக் கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் மீண்டும் வழக்கு தொடர்ந்தார். 1989 உச்சநீதி மன்றத் தீர்ப்பையே மறைத்துவிட்டு உயர்நீதி மன்றத்தை ஏமாற்றித் தீர்ப்பு வாங்க முயன்ற பிரேம்குமார் மீது, நீதிபதி திரு.கற்பகவிநாயகம் 6.6.2002 அன்று வழங்கிய தீர்ப்பில் கீழ்க்கண்டவாறு தனது கண்டனத்தைத் தெரிவித்தார்.
""சட்டத்தின் மீதோ, உண்மையின் மீதோ பிரேம்குமாருக்குக் கடுகளவுகூட மரியாதை இல்லை. பொய் சொல்லி இந்த நீதிமன்றத்தை ஏமாற்றி, எப்படியாவது இந்த வழக்கை ஒழித்துவிட வேண்டும் என்பதுதான் இவரது நோக்கம்.... இவர் மீது உள்ள வழக்குகள் முடியும் வரை இவருக்கு அளிக்கப்பட்ட பதவி உயர்வே தற்காலிகமானதுதான் என்று ஏற்கெனவே உயர்நீதி மன்றம் கூறியுள்ளது. அவ்வாறிருக்க இவர் எப்படி பதவி உயர்வு பெற்றார் என்பது தெரியவில்லை..... இவர் மீதான குற்றங்கள் உண்மையானால், இப்படி ஓர் ஆளை போலீசுத் துறையில் இத்தனை நாள் வைத்திருந்ததே மிகப் பெரிய வெட்கக் கேடாக இருக்கும்'' என்று கூறி நீதிமன்றத்தை மோசடி செய்த குற்றத்துக்காக ரூ. 10,000 அபராதமும் விதித்தார்.
இந்தத் தீர்ப்புக்குப் பிறகும் அ.தி.மு.க. அரசு பிரேம்குமாரை பதவி நீக்கம் செய்யவில்லை. மாறாக, 2003ஆம் ஆண்டு மதுரை விரைவு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை தொடங்கியவுடன், பிரேம்குமாரை மதுரை நகரிலேயே காவல்துறை அதிகாரியாக நியமித்தது. எடுபிடிகளும் போலீசு பரிவாரங்களும் சூழ நீதிமன்ற வளாகத்தில் சாட்சிகளையும் வழக்குரைஞர்களையும் மிரட்டினார் பிரேம்குமார். ""பிரேம்குமார் மதுரையில் அதிகாரியாக இருந்தால் இந்த வழக்கில் நீதி கிடைக்காது'' என்று மீண்டும் உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்து, நீதிமன்ற உத்தரவிற்குப் பிறகுதான் மதுரையிலிருந்து அவரை மாற்றியது அ.தி.மு.க. அரசு.
கடைசியாக, 1982இல் போடப்பட்ட இந்த வழக்கு 2003ல் விசாரித்து முடிக்கப்பட்டது. பிரேம்குமாருக்கு எதிராக கொலைமுயற்சி உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை ஆர்.டி.ஓ.வே பதிவு செய்திருந்த போதும், தற்செயலாகக் காயம் விளைவித்த குற்றத்தை மட்டும்தான் பிரேம்குமார் செய்திருப்பதாகத் தீர்ப்பளித்தது மதுரை விரைவு நீதிமன்றம். அதற்கும் கூடத் தண்டனை ஏதும் வழங்காமல் நன்னடத்தையைக் கடைப்பிடிக்குமாறு பிரேம்குமாருக்கு ""எச்சரிக்கை'' மட்டும் செய்தது.
நியாயமற்ற இந்தத் தீர்ப்பை எதிர்த்து, ""கொலை முயற்சி உள்ளிட்ட குற்றங்களுக்காக பிரேம்குமாரைச் சிறை வைக்கவேண்டும்'' என்று மதுரை உயர்நீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்திருக்கிறார் நல்லகாமன். ஆனால், பிரேம்குமாருக்கு எதிராக கொலைமுயற்சி வழக்கு தொடுத்த அரசோ, இந்தக் கணம் வரை மேல்முறையீடு செய்யவில்லை. 25 ஆண்டு காலம் இடைவி டாமல் சட்டபூர்வமான வழிகளில் நீதியைப் பெறுவதற்குப் போராடித் தோற்றிருக்கிறார் நல்லகாமன். இன்று அவருக்கு வயது 74. நல்லகாமனைத் தோற்கடித்தது பிரேம்குமார் மட்டுமல்ல; 25 ஆண்டுகளாகத் தமிழகத்தை ஆண்ட அ.தி.மு.க., தி.மு.க. அரசாங்கங்களும், போலீசின் உயரதிகாரிகளும் பிரேம்குமாருக்குப் பக்கபலமாக நின்றிருக்கிறார்கள். எனவே, தற்போது பிரேம்குமாரை வேலைநீக்கம் செய்வதன் மூலம் மட்டும் நீதி நிலைநாட்டப்பட்டு விடும் என்று நாங்கள் நம்பவில்லை.
வாடிப்பட்டியில் பிரேம்குமார் நிகழ்த்திய கொடுமையில் தொடங்கி, 25 ஆண்டு காலம் அவர் நடத்திய தில்லுமுல்லுகள் அனைத்தையும் அம்பலப்படுத்தி அரசு பகிரங்கமாக அறிக்கை வெளியிட வேண்டும்.
25 ஆண்டுகளாக சட்டத்தை வளைப்பதற்கும், மீறுவதற்கும் பிரேம்குமாருக்குத் துணை நின்ற உயரதிகாரிகள் அனைவர் மீதும் விசாரணை நடத்தப்பட வேண்டும்.
நீதிமன்றத்தில் நீதி கிடைக்கும் என்று நம்பி தனது சொத்துக்களையெல்லாம் விற்று வழக்காடி, வெம்பித் தனிமரமாக நிற்கும் நல்லகாமனுக்கு உரிய இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட வேண்டும். இந்தத் தொகையை மக்களுடைய வரிப்பணத்திலிருந்து அல்லாமல், பிரேம்குமார் மற்றும் அவருக்குத் துணை நின்ற அதிகாரிகளிடமிருந்து தண்டத்தொகையாக வசூலித்துத் தரவேண்டும்.
ஆர்.டி.ஓ. விசாரணையின் அடிப்படையில் தமிழக அரசு பிரேம்குமார் மீது தொடுத்த வழக்கில் மதுரை விரைவு நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு எதிராக உயர்நீதி மன்றத்தில் அரசும் மேல்முறையீடு செய்து கொலை முயற்சி உள்ளிட்ட குற்றங்களுக்கு பிரேம்குமாருக்கு சிறைத்தண்டனை வழங்கக் கோர வேண்டும்.
இன்னொரு பிரேம்குமார் தோன்றாமல் இருப்பதற்கும், இன்னொரு நல்லகாமன் பலிகடா ஆகாமல் இருப்பதற்கும் இந்த நடவடிக்கைகள் அவசியம்.
மனித உரிமைப் பாதுகாப்பு மையம், தமிழ்நாடு.
(காவல்துறை கண்காணிப்பாளர் பிரேம்குமார் தமிழக அரசால் தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டதையடுத்து, மனித உரிமை பாதுகாப்பு மையம் 22.9.06 அன்று சென்னையில் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பு கூட்டத்தில் வெளியிட்ட பத்திரிகை செய்தியின் சுருக்கமான தொகுப்பு.)
1 comment:
நல்ல பதிவு.
பல தெரியாத விளக்கங்களை அறிந்து கொண்டேன்.
ஜயேந்திரர் வழக்கை இவரிடன் ஏன் கொடுக்கப்பட்டது என்பதும் தெளிவாகியது. :-))
நன்றி
Post a Comment