தமிழ் அரங்கம்

Thursday, January 18, 2007

கிளர்ச்சிப் பாளையக்காரர்களின் முன்னோடி பூலித்தேவன்

கிளர்ச்சிப் பாளையக்காரர்களின் முன்னோடி

பூலித்தேவன்


தினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் வெள்ளையர்களின் வரி வசூல் கொடுமைகளுக்கு எதிராகப் போராடிய தென்னிந்தியப் பாளையக்காரர்களின் போராட்டத்திற்கு, நெற்கட்டுஞ்செவல் பாளையக்காரரான பூலித்தேவன் 1750களில் நடத்திய போராட்டம் முன்னோடியாக இருந்திருக்கிறது. சங்கரன் கோவில் அருகே இருக்கும் இந்தப் பாளையம் அன்று நெல்லைச் சீமையின் போராட்ட மையமாக இருந்தது.


நாயக்க மன்னர்களின் வீழ்ச்சிக்குப் பின்னர் மதுரையை ஆள்வதற்குப் பல்வேறு மன்னர்கள் முயன்றனர். மதுரையைக் கைப்பற்றுவதன் மூலம் அதன் கீழ் இருந்த பாளையங்களின் பெரும் வரிவசூல் தொகையைக் குறி வைத்தே பலரும் போட்டியிட்டனர். ""தனக்கு வரவேண்டிய கப்பம் மற்றவர்களுக்குப் போவதா?'' என்று ஆத்திரமடைந்த ஆற்காட்டு நவாப் மதுரையைக் கைப்பற்ற தொடர்ந்து படையெடுத்தான். அதற்கு ஆங்கிலேயர்களின் இராணுவத்தையும் பயன்படுத்திக்கொண்டான். 1755இல் ஆற்காட்டு நவாபின் அண்ணன் மாபூஸ்கான் தலைமையில் கர்னல் கீரானின் ஆங்கிலேயப் படையும், கான்சாகிப் தலைமையில் உள்நாட்டுச் சிப்பாய்களடங்கிய படையும் பாளையக்காரர்களிடம் வரிவசூல் செய்யப் புறப்பட்டது.


எல்லாப் பாளையங்களையும் பணியவைத்த இந்தப்படை பூலித் தேவனை மட்டும் வெற்றிகொள்ள முடியவில்லை. இந்தப் போருக்குப் பின்னர்தான் பூலித்தேவனது புகழ் பரவத்தொடங்கிற்று. வெற்றியடைந்ந கையோடு ஏனையப் பாளையக்காரர்களை ஒன்றிணைக்க முயல்கிறார் பூலித்தேவன். பலர் பயந்து ஒதுங்க சிலர் மட்டும் ஆதரிக்கின்றனர்.


திருவிதாங்கூர் மன்னன் ஆரம்பத்தில் அவனது சுயநலத்திற்காக பூலித்தேவனை ஆதரித்து விட்டுப் பின் கம்பெனியை ஆதரிக்கின்றான். இத்தகைய சூழ்நிலையில் பூலித்தேவன் ஹைதரலியின் உதவியையும் கேட்டிருக்கிறார். வேறு போர் முனைகளில் வெள்ளையருடன் மோதிக் கொண்டிருந்ததால் ஹைதராலும் உதவ முடியவில்லை.


இந்நிலையில் நவீன ஆயுதங்கள் ஏதுமின்றி மரபு ரீதியான ஆயுதங்களை வைத்தே வீரத்துடன் போரிட்டார் பூலித்தேவன். தனது திறமையால் வெள்ளையர்களிடம் தலைமைத் தளபதி பொறுப்பேற்றிருந்தவனும் போர் வியூகத்திற்கும், கொடூரமான போர் முறைக்கும் பெயர் பெற்றவனுமாகிய கான்சாகிபுவால் கூட பூலித்தேவனை ஆரம்பத்தில் வெல்லமுடியவில்லை. சுமார் 10 ஆண்டுகள் போராடிய பூலித்தேவன் 176061ஆம் ஆண்டு களில் தோல்வியுற்றுத் தலைமறைவாகிறார். அதற்குப் பின் அவரைப் பற்றிய செய்திகளில்லை. பூலித்தேவனது காலம் முடிந்த பிறகுதான் காலனியாதிக்க எதிர்ப்பு தென்னகத்தில் பரவலாகக் கருக்கொள்ளத் தொடங்குகிறது.


அதேநேரத்தில், ஆற்காட்டு நவாப்பையும் அவனுடைய கூலிப் படையாக வந்த கம்பெனியின் படைகளையும் எதிர்த்துப் போட்ட அவரது வீரம் பின்னாளைய போராட்டங்களுக்கு ஊக்கமளிக்கும் முன்னுதாரணமாகியது.


பூலித்தேவனது போராட்ட வரலாறு இன்றைக்கும் அப்பகுதி மக்களிடையே கதைப்பாடலாகப் பாடப்பட்டு வருகிறது. ஒண்டிவீரன், வெண்ணிக்காலாடி முதலான தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த தளபதிகள் பூலித்தேவனுக்காக வீரத்துடன் போரிட்டு மாண்டதை அப்பாடல்களின் மூலம் அறிகிறோம். பொது எதிரிக்கு எதிராக சாதிய வேறுபாடின்றி அணிதிரளும் போக்கு அன்றைக்கு உருவெடுத்திருந்ததையும் நாம் அறிய முடிகிறது. அதேசமயம் இன்றைக்கு நடராஜன் (சசிகலா) போன்ற அரசியல் தரகர்களும், செந்தில், கார்த்திக், விவேக் போன்ற சாதிவெறிக் கோமாளிகளும், திருநாவுக்கரசர், மதுரை ஆதீனம் போன்ற அரசியல் வாழ்வில் கேவலமான பண்புகளின் "சொந்தக்காரர் களும்' சாதியின் பெயரால் பூலித் தேவனுக்கு நினைவு விழா எடுக்கும் கொடுமையை என்னவென்று சொல்ல?




1799ஆம் ஆண்டு நான்காம் மைசூர்ப் போரில் திப்பு கொலை செய்யப்பட்டதால் இந்தியாவில் தங்களது முக்கியமான எதிரி ஒழிந்தான் என்று வெள்ளையர்கள் எக்காளமிட்ட நேரம், அந்த மகிழ்ச்சி நீண்டநேரம் நீடிக்கவில்லை. திப்புவின் தியாகமும் வீண் போகவில்லை. எழுந்து வந்தார் தூந்தாஜி வாக்.


கர்நாடகாவின் ஷிமோகாப் பகுதியைச் சேர்ந்த சென்னகியில் பிறந்த தூந்தாஜி வாக் 1780ஆம் ஆண்டு ஹைதர் அலியிடம் ஒரு சாதாரண குதிரைப்படை வீரனாகச் சேருகிறார். ஹைதர், திப்பு இருவர் தலைமையிலும் பல போர்க்களங்களில் பணியாற்று கிறார். திப்புவின் மறைவிற்குப் பிறகு அவரது இராணுவம் கலைக்கப்பட்ட பிறகு, அந்த வீரர்களை ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார் தூந்தாஜி வாக். சுமார் 5000 குதிரைப்படை வீரர்களை அணிதிரட்டிய தூந்தாஜி கம்பெனியின் ஆட்சியில் இருந்த ஷிமோகாப் பகுதியைக் கைப்பற்றுகிறார். திப்புவின் ஆட்சியில் இருந்த மக்கள், குறிப்பாக, முசுலீம்கள் அவரை ஆதரிக்கின்றனர். வெள்ளையர்களின் ஆட்சியில் இருந்த கன்னடமராத்தியப் பகுதிகள் ஒவ்வொன்றாய் மீட்கப்படுகின்றன.


திப்புவைத் தோற்கடித்த கர்னல் ஆர்தர் வெல்லெஸ்லி ஒருமுறை வேட்டைக்குச் செல்வதாக இருந்தபோது அவனைக் கடத்துவதற்கு தூந்தாஜி திட்டம் போட்டார். ஆனால் ஒற்றர்களின் மூலம் இதை அறிந்த வெல்லெஸ்லி பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் தப்பித்துக் கொண்டான்.


தூந்தாஜி வெள்ளையர்களை எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கும் போதே அவரை தமிழகத்திலிருந்து மூன்று தூதுக் குழுக்கள் சென்று சந்தித்திருக்கின்றன. இக்குழுக்களில் தீரன் சின்னமலை, அப்பாஜி கவுண்டர், வெங்கட்ராமையா, தோமாட்சி முதலி, சா சாகிப் முதலியோர் சென்றிருக் கின்றனர். இவர்கள் சிவகங்கையின் சின்ன மருது, விருப்பாட்சியின் கோபால் நாயக்கர், கோவையின் கானி ஜ கான், மலபாரின் கேரள வர்மா ஆகியோருக்கான செய்திகளைக் கொண்டு சென்றனர். அதேபோல தூந்தாஜியின் தூதர்களும் தமிழகத்திற்கு வந்தனர். இதன் மூலம் தென்னிந்தியாவில் வெள்ளையர்களை எதிர்த்து வலுவான கூட்டணி அமைப்பதற்குத் திட்டமிடப்பட்டது. வடக்கே தூந்தாஜியையும், தெற்கே சின்னமருதுவையும் இந்தக் கூட்டணி தலைவர்களாக ஏற்றுக் கொண்டது. திண்டுக்கல் பகுதியின் கோபால் நாயக்கர் எல்லாப் பகுதிகளையும் இணைக்கும் மையமாகச் செயல்பட்டார். 1800 ஜனவரியில் தூந்தாஜியின் படையில் ஏராளமான தமிழ் வீரர்கள் இணைந்ததாக கம்பெனியின் உளவுத் துறை குறிப்பிடுகிறது. இப்படி தென்னிந்திய அளவில் கூட்டணி ஏற்பட்டது குறித்து வெள்ளையர்கள் அதிர்ச்சியடைகிறார்கள்.


அப்போது கன்னட மராத்தியப் பகுதியில் இருந்த கோலாப்பூர், ஷோலாப்பூர், ராய்துர்க், குவாலியர் சிந்தியா முதலான சிற்றரசர்கள் தூந்தாஜியை ஆதரித்தனர். இச் சிற்றரசர்கள் வெள்ளையர்களோடும், அவர்களை ஆதரித்த மராத்திய பேஷ்வாக்களோடும் முரண்பாடு கொண்டிருந்தனர். தங்களது ஆட்சி களையும் வெள்ளையர்கள் எதிர் காலத்தில் கைப்பற்றி விடுவார்கள் என்பதும் அவர்களுக்குத் தெரிந் திருந்தது. வேலூர்ச் சிறையில் இருந்த திப்புவின் மூத்தமகன் ஃபத்தே ஹைதர் ""என்னால் இப்போது இருக்கும் நிலையில் வேறு எந்த உதவியும் செய்ய முடியவில்லை என்றாலும் அல்லா உங்களை ஆசீர்வதிக்கட்டும்'' என்று தூந்தாஜிக்கு வாழ்த்துச் செய்தி அனுப்புகிறார்.


கம்பெனியின் உளவுச் செய்தியின் படி தூந்தாஜி வாக்கின் படையில் 50,000 வீரர்கள் இருந்தனர்; 30,000 குதிரைகள் இருந்தன. ஆங்கிலேய ஆட்சியில் துயரத்திலிருந்த மக்களுக்கு தூந்தாஜி ஒரு விடிவெள்ளியாகத் தோன்றினார். ஒரு கட்டத்தில் சுமார் 1,50,000 மக்கள் அவர் படையில் அணிதிரண்டனர். அவர்கள் முறையான போர்ப்பயிற்சி பெற்றவர்களோ, நவீன ஆயுதங்கள் ஏந்தியவர்களோ அல்லர். அது அவர்களது விடுதலைத்தாகம். ""திப்புவின் மறைவுக்குப் பிறகும் அவருடைய ஆட்சிப் பகுதியிலிருந்து சாதாரண வர்க்கங்களைச் சேர்ந்த மக்கள், குறிப்பாக முசுலிம்கள் யாரும் கம்பெனியின் படையில் சேர மறுக்கிறார்கள்'' என்று இந்த உண்மைக்கு ஆதாரம் தருகிறான் ஒரு வெள்ளை இராணுவ அதிகாரி.


இப்படி தூந்தாஜி பலமடைவ தையும், தென்னிந்திய அளவில் கிளர்ச்சிக்குத் திட்டமிடுவதையும் கண்ட ஆங்கிலேயர்கள் தென்னியந்தியப் புரட்சியை நசுக்கவேண்டுமென்றால் முதலில் தூந்தாஜியை ஒழிக்கவேண்டும் என்பதைப் புரிந்து கொண்டார்கள். பம்பாய், கோவா, வங்காளம், சென்னை, இலங்கை ஆகிய இடங்களிலிருந்து கம்பெனிப் படைகள் ஒன்று திரட்டப்பட்டன. மராத்திய பேஷ்வா, ஐதராபாத் நிஜாம், மைசூர் உடையார் முதலான துரோகிகளும் வெள்ளையர் களுக்கு உதவினர்.


கிருஷ்ணா நதியின் துணை நதிகளுக்கிடையில் முகாமிட்டிருந்த தூந்தாஜியின் படைகளை கர்னல் வெல்லெஸ்லியின் தலைமையிலான கம்பெனிப் படைகள் மூன்று திசைகளிலிருந்தும் தாக்கின. ஏறத்தாழ ஒன்றரை வருடங்கள் வெள்ளையர் களை எதிர்த்துப் போராடிய அந்த வீரமகன் இறுதியில் கோனகல் பகுதியில் 10.9.1800 நாளன்று நடந்த போரில் கொல்லப்பட்டார். போர்க்களத்தில் வீரமரணமடைந்தபோது தூந்தாஜியின் வயது அறுபது. தூந்தாஜியின் மறைவுக்குப் பிறகு தென்னிந்தியாவின் விடுதலைப் போர்க்களம் தென் தமிழகத்தில் மையம் கொள்கிறது.



தென்னிந்தியப் போரை
வழிநடத்திய கிழச்சிங்கம்:
விருப்பாட்சி கோபால் நாயக்கர்


தென்னிந்தியாவில் தொடங்கிய முதல் சுதந்திரப் போரின் மிக முக்கிய மானதொரு தலைவர் விருப்பாட்சி கோபால் நாயக்கர். பழனி, திண்டுக்கல் பகுதிக்கு அருகாமையில் அமைந்திருந்த இந்தப் பகுதி, தென் தமிழகத்தையும் மேற்குத் தமிழகத்தையும் அதன் வழியாகத் திப்புவின் மைசூரை யும் இணைக்கும் மிக முக்கியமான கண்ணியாகச் செயல்பட்டிருக்கிறது.


ஆங்கிலேயக் காலனி யாதிக்கத்துக்கு எதிரான கோபால் நாயக்கரின் போராட்டம் அவருடைய
53வது வயதில், 1783இல் தொடங்குகிறது. அப்போது திப்புவின் வசமிருந்த திண்டுக்கல் பகுதி மீது ஆங்கிலேயர் போர் தொடுத்த போது அதை எதிர்த்துப் போரிட்டன கோபால் நாயக் கரின் படைகள். 1792 ஒப்பந்தத்தின் கீழ் கார்ன்வாலிஸ் கைப்பற்றிய திப்புவின் பகுதிகளில் கோபால் நாயக்கரின் விருப்பாட்சியும் அடக்கம்.


நிலைமையைக் கணக்கில் கொண்டு ஆங்கிலேயருக்கு சந்தேகம் எழாதபடி வரியைச் செலுத்திக் கொண்டே, மற்ற பாளையக் காரர்களை ரகசியமாக ஒன்றிணைக்கத் தொடங்குகிறார் கோபால் நாயக்கர். மணப்பாறையிலிருந்து திருச்சி வரை பரவியிருக்கும் கள்ளர் நாடு மற்றும் கோவை, சேலம் மாவட்டங்களைச் சேர்ந்த பாளையங்களை ஒன்றுதிரட்டி மார்ச், 1797இல் "திண்டுக்கல் கூட்டிணைவை' உருவாக்குகிறார்.


இந்தக் கூட்டிணைவின் சார்பில் 2 பிரதிநிதிகளை திப்புவுக்குத் தூது அனுப்பி உதவி கேட்கிறார். உடனே, உதவிகளுடன் தனது தூதர்கள் நான்கு பேரை கோபால் நாயக்கரிடம் அனுப்புகிறார் திப்பு. காஜி கான் தலைமையிலான திப்புவின் படை திண்டுக்கல் கூட்டிணைவுக்கு உதவும் பொருட்டு மைசூர் அரசின் தென் எல்லையில் முகாமிடுகிறது.


1799 மார்ச்சில் திப்புவுக்கு எதிரான இறுதிப்போரை வெல்லெஸ்லி தொடங்கியவுடன், திண்டுக்கல் கூட்டிணைவின் படைகள் ஆங்கிலேயேர்களின் முகாம்களைத் தாக்கிச் சூறையாடுகின்றன.


போரில் திப்பு இறக்கிறார். ""கட்டபொம்மனுக்கு நேர்ந்த கதிதான் உனக்கும் நேரும்'' என்று மிரட்டுகிறான் கலெக்டர். அதை அலட்சியம் செய்து விட்டு, தமிழகம் தழுவிய கூட்டிணைவை ஒருங்கிணைக்கத் தொடங்குகிறார் கோபால் நாயக்கர்.


வேலூர் சிறையில் இருந்த திப்புவின் மகன் ஃபத்தே ஹைதர், தூந்தாஜி வாகிடமும் கோபால் நாயக்கரிடமும் சென்று சேர்ந்து கொள்ளுமாறு திப்புவின் (முன்னாள்) படைவீரர்களுக்கு வழிகாட்டுகிறார்.


ஏப்ரல், 1800இல் பழனி மலைக் காடுகளில் கோபால் நாயக்கர் தலைமையில் கூடுகிறார்கள் தென்னிந்தியப் போராளிகள். "பழனி சதித்திட்டம்' என்று வெள்ளையரால் அழைக்கப்படும் இந்தக் கூட்டம், கோவையிலுள்ள ஆங்கிலேயன் கோட்டையைத் தாக்குவதிலிருந்து தொடங்கி தென்னிந்திய அளவில் ஒரே நேரத்தில் எழுச்சியைத் தொடங்கத் திட்டமிடுகிறது. கோவைத் தாக்குதல் தோல்வியடைந்து அனைவரும் தூக்கிலிடப்படுகிறார்கள். செப், 1800இல் தூந்தாஜி வாக் கொல்லப் படுகிறார்.


அடுக்கடுக்கான தோல்விகளுக்குப் பின்னரும் கோபால் நாயக்கர் துவளவில்லை. தோல்வியடைந்த தூந்தாஜி வாகின் வீரர்களைத் தன்னுடன் இணைத்துக் கொள்கிறார்.


தன்னுடைய எதிரிகளை ஒவ்வொருவராக அழித்துக் கொண்டே வந்த ஆங்கிலேயர்கள் இறுதியாக மார்ச், 1801இல் கோபால் நாயக்கரின் மீது பலமுனைத் தாக்குதல் தொடுக்கிறார்கள். விருப்பாட்சி பகுதியின் பல கிராமங்களைச் சேர்ந்த மக்கள், கூட்டம் கூட்டமாக கோபால் நாயக்கருடன் சேர்ந்து ஆனைமலைக் காடுகளுக்குள் பின் வாங்கி போரைத் தொடர்கிறார்கள். ஏப்ரல் இறுதி வரை போர் தொடர்ந்தும் வெள்ளையர் களால் கோபால் நாயக்கரைப் பிடிக்க முடியவில்லை.


களைத்துப் போன ஆங்கிலேயர்கள் துரோகி களைத் தேடுகிறார்கள். கோபால் நாயக்கரைக் காட்டிக் கொடுத்தால் 2000 ரூபாய், மற்ற தலைவர்களின் தலைக்கு 500 ரூபாய் என்று விலை நிர்ணயிக்கப்படுகிறது. மே, 4ஆம் தேதியன்று கோபால் நாயக்கரும் பிற முன்னோடிகளும் வளைக்கப்படுகிறார் கள். சம்பிரதாயமான விசாரணை கூட நடத்தாமல் அனைவரையும் தூக்கிலிடுகிறது ஆங்கிலேயப் படை. தென்னிந்திய விடுதலைப் போரின் மையமாகவும், போராளிகளின் தளமாகவும் துடிப்புடன் இயங்கிய விருப்பாட்சி சூறையாடப்பட்டது. விடுதலைக்காக இறுதி வரை தளராமல் போராடிய அந்தக் கிழச்சிங்கம் தன்னுடைய 73வது வயதில் விடை பெற்றுக்கொண்டது.


· புதூர் இராசவேல்


No comments: