தமிழ் அரங்கம்

Wednesday, March 14, 2007

ஆர்.எஸ்.எஸ்.இன் சட்டபூர்வ அடியாள்! போலீசு

போலீசு:

ஆர்.எஸ்.எஸ்.இன் சட்டபூர்வ அடியாள்! போலீசு


ர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த மங்களூர் நகரிலும்; அதன் புறநகர்ப் பகுதிகளிலும்; அந்நகரையொட்டி அமைந்துள்ள உல்லால், கோனாஜே ஆகிய ஊர்களிலும் கடந்த அக்டோபர் மாதத்தின் முதல் வாரத்தில் தொடர்ந்து ஐந்து நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்ட நேரங்களில் கூட, அப்பகுதிகளில் 144 தடையுத்தரவு அமலில் இருந்தது.


மங்களூர் நகரம் அமைந்துள்ள தெற்கு கன்னட மாவட்டத்தின் பல பகுதிகளில், அக்.4ந் தேதி தொடங்கி 6ந் தேதி முடிய பஜ்ரங்தள், ராமா சேனை ஆகிய இந்து மதவெறி அமைப்புகள் நடத்திய முசுலீம் எதிர்ப்புக் கலவரங்கள்தான் இதற்குக் காரணம். அந்தக் கலவரத்தில் இரண்டு முசுலீம்கள் படுகொலை செய்யப்பட்டனர்; முசுலீம்களுக்குச் சொந்தமான கடைகளும், வர்த்தக நிறுவனங்களும் குறி வைத்துத் தாக்கப்பட்டன; கொள்ளையடிக்கப்பட்டன. கலவரத்தை அடக்குவது என்ற பெயரில் நூற்றுக்கணக்கான முசுலீம்கள் கைது செய்யப்பட்டனர்.


அரசோ, போலீசோ எதிர்பாராமல், திடீரென்று நடந்துவிட்ட தாக்குதல் அல்ல இது. 1992இல் பாபர் மசூதி இடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்து மதவெறி அமைப்புகள் சிறிதும், பெரிதுமாக பல கலவரங்களை கர்நாடக மாநிலத்தில் நடத்தி வந்துள்ளன. இதன் மூலம் தங்களின் செல்வாக்கை வளர்த்துக் கொண்டுள்ள இந்து மதவெறி அமைப்புகள், 2004 சட்டமன்றத் தேர்தலில் தெற்கு கன்னட மாவட்டத்தில் மட்டும் 11 சட்டமன்றத் தொகுதிகளைக் கைப்பற்றிக் கொண்டன.


""பசு வதையைத் தடுத்து நிறுத்துவது; மதமாற்றம் நடைபெறுவதைக் கண்காணித்துத் தடுப்பது; முசுலீம் இளைஞர்கள், இந்துப் பெண்களுடன் பேசுவதைக் கூடத் தடை செய்வது'' ஆகிய மூன்று சனாதனக் கட்டளைகளை நடைமுறைப்படுத்துவதில், இந்து மதவெறி அமைப்புகள், இம்மாவட்டத்தில் இணையான அரசாங்கத்தையே நடத்தி வருகின்றன. முசுலீம்களின் வழிபாட்டுத் தலம் அமைந்துள்ள பாபா பூதான்கிரி மலையை, ""இந்து'' வழிபாட்டுத் தலமாக மாற்ற முயற்சித்து வரும் இந்து மதவெறி அமைப்புகள், இதனை, ""தெற்கு அயோத்தி'' என அறிவித்துள்ளன. இந்தப் பின்னணியில் வைத்துதான், இந்து மதவெறி அமைப்புகள் அக்டோபரில் நடத்திய தாக்குதலைப் பார்க்க வேண்டும்.


மங்களூர் நகரின் புறநகர் பகுதியான பாஜ்பே எனுமிடத்தில், இந்துமதவெறி அமைப்புகள், அக். 3ந் தேதியன்று துர்க்கை அம்மன் ஊர்வலத்தை, பாஜ்பே மசூதி அமைந்துள்ள வீதி வழியாக நடத்தத் திட்டமிட்டன. இந்த ""மத'' ஊர்வலம், மசூதி வழியாக செல்வதற்கு முசுலீம்களிடமிருந்து எதிர்ப்பு வரவில்லை. எனினும், அவர்கள் இந்த ஊர்வலத்தில் பப்பா பேரி என்ற பெயர் கொண்ட முசுலீம், துர்க்கையை வணங்குவது போன்ற படத்தை எடுத்துச் செல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து, போலீசிடம் புகார் மனு கொடுத்தனர்.


நெடுங்காலத்திற்கு முன்பு, மங்களூர் வட்டாரத்தில் பேரி மொழி பேசும் பப்பா என்ற முசுலீம் வணிகர் வாழ்ந்து வந்ததாகவும், அவர் ஒருநாள் ஆற்றில் படகில் சென்று கொண்டிருக்கையில், அந்த ஆறு இரத்தமாக மாறி, அவரது படகு மேலே செல்ல முடியாமல் நின்று விட்டதாகவும்; அவரது கனவில் துர்க்கை அம்மன் தோன்றியதையடுத்து, அவர் துர்க்கை அம்மனின் பக்தராக மாறி விட்டதாகவும் ஐதீகக் கதையொன்று இப்பகுதியில் வாழும் இந்துமுசுலீம் மக்களிடையே நிலவி வருகிறது. மதச்சகிப்புத்தன்மை, மத நல்லிணக்கத்தின் அடையாளமாக இருந்துவரும் இந்தக் கதையை, இந்து மதவெறியர்கள் இப்பொழுது முசுலீம்களை நக்கல் செய்யப் பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக, துர்க்கை ஊர்வலத்தில், பப்பா பேரி என்ற பெயரில், ஒரு ஏழை முசுலீம் மதகுரு துர்க்கையிடம் இறைஞ்சுவது போன்று வரைந்து, முசுலீம்களை மதரீதியாகப் புண்படுத்த முயன்றனர்.


இந்தப் படத்தை ஊர்வலத்தில் எடுத்து செல்வோம் என இந்து மதவெறிக் கும்பல் பிடிவாதமாக இருந்ததால், ""குறைந்தபட்சம் ஊர்வலம் மசூதிக்கு அருகே வரும் பொழுதாவது, அந்தப் படத்தை காட்சிக்கு வைக்கக்கூடாது'' என முசுலீம்கள் வேண்டுகோள் வைத்தனர். இந்து மதவெறியர்கள் இந்தச் சமரசத்திற்கு ஒப்புக் கொள்ள மறுத்துவிட்டனர்.

""இந்தப் பிடிவாதம் ஒரு கலவரத்திற்குத் தூபம் போடும் சதிச் செயல்'' என நன்கு தெரிந்திருந்தும் கூட, அதிகாரவர்க்கம் ஊர்வலத்திற்கு எந்தக் கட்டுப்பாடும் விதிக்காமல், பப்பா பேரி படத்தோடு ஊர்வலம் மசூதி வழியாகச் செல்ல அனுமதித்தது.


போலீசு அதிகாரிகளின் இந்த ஒத்துழைப்பு, கள் குடித்த (இந்து மதவெறி) குரங்குகளுக்கு, தேள் கடித்த நிலையை உருவாக்கிவிட்டது. ஊர்வலத்தின்பொழுதே, 1,000 பேர் கொண்ட இந்து மதவெறிக் கும்பலொன்று, கைகளில் வாள், குண்டாந்தடி, சோடா பாட்டில்களைத் தூக்கிக் கொண்டு, ஏழு முசுலீம் கடைகளுக்குள்ளும், இரண்டு இந்து கடைகளுக்குள்ளும் புகுந்து கொள்ளையடித்தது. (கொள்ளையடிக்கும் பொழுதுதான் ஆர்.எஸ்.எஸ்.க்கு மதச்சார்பின்மை நினைவுக்கு வரும் போலும்) முகம்மது ஹனிஃப் என்பவருக்குச் சொந்தமான துணிக் கடையில் மட்டும் 15 இலட்ச ரூபாய் பணம் ரொக்கமாக இந்தக் கும்பலால் கொள்ளையடிக்கப்பட்டது.


ஆறு துணை ஆய்வாளர்கள், மாவட்ட போலீசு கண்காணிப்பாளர், மாவட்ட போலீசு கமிசனர் ஆகிய அதிகாரிகள் அடங்கிய 200 பேர் கொண்ட போலீசுப் பட்டாளமே இக்கொள்ளைக்குச் சாட்சியாகவும், பாதுகாப்பாகவும் இருந்தனர். நடந்தது மத ஊர்வலம் அல்ல; இந்து மதவெறியர்கள் நடத்திய பகற்கொள்ளை என்பதற்கு ஒளிப்பேழை பட ஆதாரங்கள் இருந்தபோதும், முதலாளித்துவப் பத்திரிகைகளோ, தமிழ்நாட்டு தினமலர் பாணியில், ""மத நல்லிணக்கத்தின் குறியீடான, பப்பா பேரி துர்க்கை அம்மனை வணங்கும் படத்திற்கு முசுலீம்கள் எதிர்ப்பு தெரிவித்ததோடு, மத ஊர்வலத்தையும் தடுத்து நிறுத்திவிட்டதாக'' அவதூறையே, செய்தியாக வெளியிட்டன.


அக்.3 அன்று பாஜ்பேயில் நடத்தப்பட்ட கலவரத்தை, பல பகுதிகளுக்கும் விரிவாக்கும் நோக்கத்தோடு, ராமசேனை என்ற இந்து மதவெறி அமைப்பு அக்.6 அன்று கடையடைப்புப் போராட்டத்தை நடத்தியது. அன்று மங்களூர் நகருக்கு அருகில் உள்ள உல்லால் பகுதியில், மூன்று "இந்து'க் கடைகள் தீ வைத்துக் கொளுத்தப்பட்டன. இச்சம்பவம் பற்றி முறையான விசாரணை நடத்தாமல், முசுலீம்கள் மீது குற்றம் சுமத்திய போலீசார், இதற்குத் தண்டனையாக உல்லால் முசுலீம்கள் அனைவரின் மீதும் அரசு பயங்கரவாதத்தை ஏவிவிட்டனர்.


அன்று மாலை, ரமலான் நோன்பை முன்னிட்டு ஆண்கள் மசூதிக்குச் சென்றிருந்த நேரமாகப் பார்த்து, முசுலீம்களின் வீடுகளுக்குள் அத்து மீறி, அதிரடியாக, கதவை உடைத்துக் கொண்டு உள்ளே நுழைந்த போலீசார், வீட்டில் இருந்த பெண்களையும், சிறுவர்களையும், முதியவர்களையும் காட்டுமிராண்டித்தனமாகத் தாக்கினர். ""தீவிரவாதிகளை''ப் போல முகத்தை மூடிக் கொண்டு வீடுகளுக்குள் நுழைந்த போலீசு கும்பல், கையில் எடுத்துச் செல்லக் கூடிய பொருட்கள் செல்ஃபோன்கள், தங்கநகைகள், ரொக்கப்பணம் அனைத்தையும் கொள்ளையடித்தனர். கமுக்கமாக எடுத்துச் செல்ல முடியாத பொருட்களை தொலைக்காட்சி, குளிர்சாதனப் பெட்டி அடித்து நொறுக்கினர்.


இந்தச் சட்டவிரோதத் தாக்குதலையும், திருட்டையும் ""தேடுதல் வேட்டை'' என்ற பெயரில் மூடி மறைக்கும் முகமாக, 70 பேரை அவர்களுள் பெரும்பாலோர் சிறுவர்கள் கைது செய்து, பொய் வழக்கு போட்டு, மங்களூரில் இருந்து 400 கி.மீ தொலைவில் உள்ள பெல்லாரி சிறையில் அடைத்தனர். ""கைது'' செய்யப்பட்ட முசுலீம்களை ஏற்றிச் செல்வதற்கு கொண்டு வரப்பட்ட பேருந்தில் இருந்த காலியிடங்களை நிரப்புவதற்காகவே மீண்டும் ""தேடுதல் வேட்டை'' நடத்தப்பட்டு, ஆறு முசுலீம்கள் கைது செய்யப்பட்டனர். போலீசிடம் நிரம்பி வழியும் முசுலீம் வெறுப்புக்கு இதுவொரு சான்று.


முசுலீம்களின் காலனியாகக் கருதப்படும் பந்தரில், தாக்குதலோ, எதிர்த்தாக்குதலோ நடக்காதபொழுதும், அக்.8 அன்று நள்ளிரவில் பந்தர் பகுதியில் வசிக்கும் பேரி மொழி பேசும் முசுலீம்களின் வீடுகளுக்குள் நுழைந்த போலீசார், வீட்டில் இருந்த ஆண்கள் அனைவரையும் சட்டவிரோதமாகக் கைது செய்தனர். அப்படி கைது செய்யப்பட்ட முசுலீம்களுள், அப்துல் ரஷீத், முகம்மது இம்ரான் என்ற இரு இளைஞர்களை பொய் வழக்கில் இருந்து விடுதலை செய்ய வேண்டும் என்றால், ""அவர்கள் இருவரும், மங்களூர் நகரின் பல இடங்களில் நடந்த கலவரங்களை அந்நகர மேயர் அஷ்ரஃப்தான் தூண்டிவிட்டதாக எழுதித்தர வேண்டும்'' என போலீசாரே பேரம் நடத்தினர்.


மங்களூர் நகரின் புறநகர் பகுதியான ஃபைசல் நகரில், அப்துல் காதர் நடத்தி வரும் ""ஏ.கே.ஸ்டோர்ஸ்'' என்ற மளிகைக் கடை, அக்.6 அன்று, இந்து மதவெறியர்களால் சூறையாடப்பட்டு, கொள்ளையடிக்கப்பட்டது. இது பற்றி அப்துல்காதர் கொள்ளையடித்தவர்களின் பெயர்களைக் குறிப்பிட்டு புகார் கொடுத்த பிறகும், போலீசார் குற்றவாளிகளுள் ஒருவரையும் கைது செய்யவில்லை.


மாறாக, அன்று மாலை அப்துல்காதரின் வீட்டுக்குள் அதிரடியாகப் புகுந்த போலீசார், அவரின் இரண்டாவது மகன் பர்வேஷைக் கைது செய்தனர். அப்துல்காதரின் இரண்டாவது மருமகள் போலீசாரின் அத்துமீறலை எதிர்த்து நின்று கேள்வி கேட்ட பொழுது, அதற்கு போலீசார், ""உங்க வீட்டு வாலிப பசங்களுக்குக் கொள்ளையடிக்கவும், பொதுச் சொத்தை நாசப்படுத்தவும் ஏன் கற்றுக் கொடுக்கிறீர்கள்?'' என ஆர்.எஸ்.எஸ். பாணியில் அவதூறு செய்து அவமானப்படுத்தினர்.


ஃபைசல் நகரில் வசித்து வரும் இந்துக்களில் சிலரது வீடுகள் அக்.6 அன்று முசுலீம் இளைஞர்களால் தாக்கப்பட்டன. போலீசார், இந்தத் தாக்குதலைக் காட்டி, இந்துக்களின் உயிருக்கும், உடமைக்கும் ஆபத்து நெருங்கி விட்டதாகப் பீதியூட்டி, அந்நகரைச் சேர்ந்த 30 இந்து குடும்பத்தினரை, வீராநகருக்கு இடம் பெறச் செய்தனர்.


கர்நாடகா மத நல்லிணக்க மன்றம் என்ற அமைப்பு, இந்த இடப்பெயர்ச்சி குறித்து விசாரித்தபொழுது, அந்த "இந்து'க்கள் ""போலீசின் அச்சுறுத்தல், நிர்பந்தத்தினால் தான் தாங்கள் வீரா நகருக்கு இடம் பெயர்ந்திருப்பதாக''த் தெரிவித்தனர். ஆனால், பத்திரிகைகளும், தொலைக்காட்சி நிறுவனங்களும் இந்த உண்மையை மூடி மறைத்து விட்டு, ""இடம் பெயர்ந்த இந்துக்களை அடிக்கடி காட்டி'' ஆர்.எஸ்.எஸ்.இன் சமூக விரோதக் கலவரத்திற்குத் தூபம் போட்டன.


இந்து மதவெறிக் கும்பல் கடையடைப்புப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்த மறுநிமிடமே, பஜ்ரங் தள்ஐச் சேர்ந்த 100 குண்டர்கள், கூதினாபாலி என்ற இடத்தில் மூடப்பட்டிருந்த 11 முசுலீம் கடைகளின் கதவுகளை உடைத்துக் கொண்டு உள்ளே புகுந்து அக்கடைகளைச் சூறையாடினர். கூதினாபாலி போலீசு நிலையத்தில் இருந்து 100 மீட்டர் தொலைவில் பட்டப்பகலில் பலர் கண் முன்னால் இந்தக் கொள்ளை நடந்த போதிலும் போலீசார் இதனைத் தடுத்து நிறுத்த முயலவில்லை.


மாறாக, அக்.13 அன்று கூதினாபாலியில் உள்ள ""பி.சி.சாலை பேருந்து நிலையம்'' அருகே ஒரு குண்டு வெடித்தவுடன், அன்று மாலையே முசுலீம் குடியிருப்புக்குள் புகுந்து, பெண்கள், குழந்தைகளைக் கூட விட்டு வைக்காமல் தாக்கியதோடு, பீடி சுற்றி பிழைக்கும் 20 முசுலீம் தொழிலாளர்களைக் கைது செய்தனர்.


கூதினாபாலியில் பஜ்ரங்தள் நடத்திய பகற்கொள்ளையை மதக் கலவரமாகப் பூசி மெழுகி எழுதிய பத்திரிகைகள், அங்கு நடந்த குண்டு வெடிப்பை ""முசுலீம் தீவிரவாதம்'' எனப் பீதியூட்டி எழுதின.


ஆர்.எஸ்.எஸ். நடத்திய இந்தக் கலவரத்தில், அதற்குத் துணையாக போலீசார் நடந்து கொண்டு, முசுலீம்களைத் தாக்கியதை வெறும் மனித உரிமை மீறல் பிரச்சினையாகச் சுருக்கிப் பார்க்க முடியாது. ஆர்.எஸ்.எஸ்.இன் முசுலீம் எதிர்ப்பு இந்து மதவெறி பாசிச அரசியல், போலீசு துறை முழுவதும் வேரோடி போயிருப்பதைத்தான் இது எடுத்துக் காட்டுகிறது. 1992இல் நடந்த மும்பய் கலவரத்திலும்; 2002இல் நடந்த குஜராத் இனப்படுகொலையிலும்; 1987இல் நடந்த மீரட் கலவரத்திலும் இந்த உண்மை ஏற்கெனவே அம்பலமாகியிருக்கிறது. இராணுவம், நீதித்துறை, போலீசுத் துறை என அரசின் முக்கிய உறுப்புகள் அனைத்தும் காவிமயமாகி வரும் வேளையில், இந்திய அரசை மதச்சார்பற்ற அரசாகக் கருத வாய்ப்பே இல்லை. ஆர்.எஸ்.எஸ்.இன் இந்து மதவெறி அரசியலை நடைமுறைப்படுத்த, அக்கட்சிதான் ஆட்சியில் இருக்கவேண்டும் என்ற கட்டாயமும் இல்லை!


·கவி


No comments: