தமிழ் அரங்கம்

Friday, March 30, 2007

அத்துமீறி நுழைந்து ஆவணங்கள் திருட்டு

உயிர்நிழல் ஆசிரியரின் இருப்பிடத்தினுள் அத்துமீறி நுழைந்து ஆவணங்கள் திருட்டு

க்ஸில் வெளியீட்டகத்தின் வெளியீடாக காலாண்டிதழாக வெளிவந்து கொண்டிருக்கும் 'உயிர்நிழல்' சஞ்சிகையின் ஆசிரியர்களில் ஒருவரான லக்ஷ்மியின் வீட்டில் 'விடுதலை'ப் புலிகள் திருடர்களாகப் புகுந்து வீட்டைச் சூறையாடி அங்குள்ள ஆவணங்களைக் கொண்டு சென்றிருக்கிறார்கள். இந்த முக்கியமான ஆவணங்களில் ஐரோப்பா தழுவி நடைபெறும் இலக்கியச் சந்திப்புத் தொடர்களின் பதிவுகளும் அடங்கும்.


மாற்றுக் கருத்து அல்லது 'ஒற்றை'க் கருத்தற்று வேறு கருத்துகள் சொல்வதைக் கேட்பதிலோ அல்லது அவை பரவலாகிச் செல்வதிலோ தாங்கள் உடன்பாடற்றவர்கள் என்பதில் இவர்கள் என்பதில் இவர்களிற்கு என்றைக்குமே மாற்றுக் கருத்து இருந்ததில்லை.


1990ம் ஆண்டின் இறுதிப் பகுதியில், மறைந்த மலையக எழுத்தாளர் என். எஸ். எம். இராமையா அவர்களுக்கு அஞ்சலிக் கூட்டம் ஒன்று பாரிஸில் மாற்றுக் கருத்தாளர்கள் அல்லது மறுத்தோடிகளால் நடத்தப்பட்டபோது அங்கு உளவு பார்ப்பதற்காக 'விடுதலை'ப் புலிகளின் பிரதிநிதிகள் வந்திருந்தார்கள். ஏனெனில் இந்த மறுத்தோடிகள் அஞ்சலி செலுத்துகிறார்கள் என்பதால் இது தங்களால் 'போடப்பட்ட' ஒரு துரோகிக்கான அஞ்சலிக் கூட்டமாயிருக்கலாமோவென்பதை உறுதிப்படுத்திக் கொள்வதற்காகத்தான்.


இப்படித்தான் ரஜனி திரணகம விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்டு ஓராண்டின் பின்னர் ஒரு கூட்டத்தை அவர் நினைவாக இந்த மறுத்தோடிகள் ஒழுங்குபடுத்தியிருந்த பொழுது, கூட்டம் ஆரம்பித்து சில மணிகளிலேயே அங்கிருந்த பேச்சாளரையும், கூட்டத்தில் இருந்தவர்களையும் நீங்கள் என்ன பேச வேண்டும் என்பதை நாங்கள்தான் தீர்மானிக்க வேண்டும் என்ற பாணியிலும் மக்கள் 'வேறு' கருத்துக்களைக் கேட்டால் குழம்பி விடுவார்கள் என்னும் தோரணையிலும் நடந்து கொண்டார்கள். 'நீங்கள் மக்களைக் குழப்புகின்றீர்கள். இதை நாங்கள் அனுமதிக்க முடியாது' என்னும் ரீதியில் அவர்களின் வெளிப்பாடுகள் இருந்தன. அவர்கள் ஆவேசப்பட்டுக் கருத்துத் தெரிவிக்கும்போது புகைப்படம் பிடித்ததனால் அவ்விடத்திலேயே புகைப்படக்கருவி பறிக்கப்பட்டு அதனுள்ளிருந்த பிலிம் சுருள் அவர்களால் அவ்விடத்திலேயே அபகரிக்கப்பட்டது. புகைப்படம் என்றால் என்ன, ஆவணம் என்றால் என்ன என்பதை அவர்கள் தெளிவாகவே அறிந்திருந்தார்கள்.


இந்தரீதியில், இந்த மறுத்தோடிகள் நடத்தும் சந்திப்புகளிலும் கலந்துரையாடலிலும் இவர்கள் வந்து கலவரம் செய்ததனால், ஏற்கனவே ஏற்பட்ட அனுபவங்களில் இருந்து இந்த மறுத்தோடிகளின் ஒரு பகுதியினரால் 1992ம் ஆண்டு பாரிஸில் முதல்முதலாக நடத்தப்பட்ட இலக்கியச் சந்திப்புக்கு இவர்களின் வருகைக்கு அனுமதியளிக்கப் பின்நின்றது. மாற்றுக் கருத்துக்களை அனுமதிப்பதென்பதும் அடாவடித்தனங்களை அனுமதிப்பதென்பதும் வௌ;வேறானவை என்பதை இவ்விடத்தில் அழுத்தமாகக் கவனிக்க வேண்டும். பின்பு சில இடைத் தரகர்களினால் இலக்கியச் சந்திப்பு அமைப்பாளர்களிடம் அனுமதி கேட்டும், தாங்கள் சந்திப்பில் வந்து எந்தக் குழப்பங்களும் செய்யமாட்டோம் என்ற உறுதிமொழியின் பின்னரும் அவர்களிற்கு அனுமதி வழங்கப்பட்டது. அவர்கள் இந்த இலக்கியச் சந்திப்பில் தந்த உறுதிமொழியைக் காப்பாற்றினார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.


'பள்ளம்' சஞ்சிகையை வெளியிட்டுக் கொண்டிருந்த ஆசிரியர்களில் ஒருவரான கலைச்செல்வனை 1990ம் ஆண்டு மே மாதம் 20ம் திகதி என் கண்முன்னாலேயே என் இருப்பிடத்தில் இருந்து சில குண்டாந் தடியர்கள் கடத்திச் சென்று ஏறத்தாழ 10 மணித்தியாலங்கள் தொடர்ச்சியான சித்திரவதைக்குப் பின், பொலிஸ் முறைப்பாடு தீவிரமாகி இருக்கின்றதென்ற செய்தியை அறிந்து கொண்டு, அந்தி மயங்கும் மாலை வேளையில் ஒரு சாலையோரத்தில் கொண்டு வந்து வீசி எறிந்து விட்டுப் போனார்கள். அதன் பின்னர் பள்ளம் சஞ்சிகை நிற்பாட்டப்பட்டது. புகலிடத்திலும் அச்சத்தில் உயிர் வாழ்தல் என்பது என்னவென்று புரிய வைத்தல் முடியாதது. சித்திரவதையின் பின்னிருந்த மரண ஓலம் என்னுள் ஊடுருவி அதிர்ந்தொலித்ததை இன்றும் என்னால் உணர முடிகின்றது.


ஒரு உயிரைக் கொய்தலின் கொடுமை அல்லது மரணம் துரத்தும் அவலத்தைத் தெரிந்தபடி வாழ்தல் என்பதன் கொடூரத்தை கையில் ஆயுதங்களை மட்டுமே வைத்துக் கொண்டு அதுவே கோட்பாடாகக் கொண்டவர்களால் என்றைக்குமே புரிந்து கொள்ளப்பட முடியாதது.


1994ம் ஆண்டு மே மாதம் 1ம் திகதி அன்று தோழர் சபாலிங்கம் அவருடைய வீட்டில் வைத்துப் பட்டப் பகலில் வேட்டு வைத்துத் தீர்க்கப்பட்டதென்பது ஒவ்வொரு மறுத்தோடியினதும் ஈரல்குலையையும் நடுங்க வைக்க வேண்டும் என்று இவர்கள் எதிர்பார்த்தார்கள். எங்களிடம் துப்பாக்கிகள் இல்லை. குரல்கள் மட்டும்தானுள்ளன என்று இந்த மறுத்தோடிகள் தொடர்ந்தார்கள். மரணம் எல்லோருக்கும் பொதுவானதுதான்;. ஆனால் அதை நிரணயிக்கும் உரிமை யாருக்கும் இல்லை. எமன் காரியாலயத்தில் தூதுவர்களாக தொழில் புரிவதற்கான விசா பெற்றுக் கொண்டு இருப்பதுபோல்தான் இவர்களின் நடவடிக்கைகள் அமைந்துள்ளன. எம தூதுவர்களாகத் தங்களை இந்த மறுத்தோடிகள் அடையாளம் காண வேண்டும் என்பதைச் சந்தர்ப்பம் கிடைத்த பொழுதுகளிலெல்லாம் நிரூபிக்க முயற்சி செய்திருக்கிறார்கள்;. இவர்களிற்கு யானைக்கும் ப+னைக்கும் வித்தியாசம் தெரிவதில்லைப் போலும்; சூடு கண்ட ப+னை அடுப்பங்கரையை நாடாதுதான். ஆனால் யானை பற்றிச் சொல்லிப் புரிய வைக்க வேண்டியதில்லை. துப்பாக்கியை விடப் பேனா வலிமை வாய்ந்ததென்று இவர்கள் நம்புகிறார்கள் என்பது வெட்ட வெளிச்சம்.


பேனாமுனைகளுக்கெதிரான தொடர்ந்த துப்பாக்கி தூக்கல்களும், ஒரு நபரை அழிப்பதன் மூலம் ஒரு கருத்தை அழித்துவிட முடியும் என்னும் இவர்களின் கொச்சைத்தனமான விளக்கங்கள் எவ்வளவு நுண்ணறிவுடன் மறுத்தோடிகளால் பரிசீலிக்கப்பட வேண்டும் என்னும் ஒரு மாயத் தோற்றத்தை கிளப்பி விட்டிருக்கிறார்கள்.


விமர்சனம் என்பது யாராலும் எப்போதும் எங்கும் எந்தச் சந்தர்ப்பத்திலும் வைக்கப்படலாம் என்பதும் அதை எதிர்கொள்ள குண்டாந்தடிகளும் துப்பாக்கிகளும் தேவையில்லை என்பதை இப்படியான அடாவடித்தனங்களில் ஈடுபடுபவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.


சபாலிங்கத்தில் கொலைக்குப் பின் புகலிடத்தில் இருந்து வெளிவந்த எண்ணற்ற பத்திரிகைகள் அடக்கி வாசித்தன. பல படிப்படியே நின்று போயின.


'புகலிடத்தில் உங்களுக்குப் பாதுகாப்புத் தருவதற்கு எதுவும் இல்லை. யாரும் இல்லை. நாங்கள் இருக்கும்வரை உலகின் எந்த மூலைக்கு நீங்கள் ஓடினாலும், எங்களுக்கு ஒத்தூதினால் உங்களது உயிர் உங்களுக்கு. அன்றேல் அது எங்களுக்கு.» என்ற சுலோகத்தை கோட்பாடாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.


'அன்பான' மிரட்டல்கள், 'செல்லமான' தட்டிக் கொடுப்புகள் 'இரகசியமான' பொட்டு வைப்புகள் என்று இவர்கள் தொடர்ந்து கொண்டே இருக்கிறார்கள்.


ஒருவரின் இருப்பிடத்திற்குச் சென்று அவர் இல்லாதபொழுது ப+ட்டை உடைத்துக் கொண்டு உட்பிரவேசித்து அந்தரங்க ஆவணங்களைத் திருடிச் சென்றிருப்பதற்கு இவர்களுடைய வழக்காடு மன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்ய முடியாது. இவர்கள் இவ்வாறு அத்துமீறி நுழைந்ததுபோல் இவர்களின் கோட்டைக்குள் உத்தரவின்றிப் புகாது, அங்கு கொன்று புதைத்தவர்களின் தகவல்களில் ஓரிரண்டையாவது எங்களுக்குச் சொல்வார்களா?


நாங்கள் உங்களிடம் எங்கள் தோழன்கள், தோழிகளுக்கு என்ன நடந்தது, அவர்களை என்ன செய்தீர்கள் சொல்லுங்கள் என்று துரத்தித் துரத்திக் கேட்டோம். அந்த ஓல விழிப்புகள் தேய்ந்து தேய்ந்து, இப்போது அந்தத் தோழன்களும் தோழிகளும் பிறந்தார்களா? வாழ்ந்தார்களா? என்னும் நிலைக்கு ஆக்கிவிட்டிருக்கிறீர்கள்.


உங்களுடைய இந்தக் கோழைத் திருட்டானது எந்த அசைவையாவது ஒரு கணம் நிறுத்தி வைத்து விடக் கூடும் என்று நீங்கள் ஏதாவது கனவு கண்டால் அதற்கு இந்த மறுத்தோடிகள் என்றும் தலை சாய்க்க மாட்டார்கள் என்பதைப் பகிரங்கமாக உங்களிடம் சொல்வதற்கு மீளவும் ஒரு சந்தர்ப்பத்தை நீங்களாக உருவாக்கித் தந்திருக்கின்றீர்கள்.


கலந்துரையாடல்களின், சந்திப்புகளின் ஆவணங்களை நீங்கள் ஒன்றும் அதிலுள்ள விடயதானங்களுக்காகத் திருடிச் சென்றிருக்கமாட்டீர்கள் என்பதில் ஐயத்துக்கிடமில்லை.


மனிதநேயம், மனிதாபிமானம் என்பது என்ன என்பதைப் புரிந்து கொள்ள நீங்கள் உங்கள் கோட்டைக்குள் இருந்து சிறிதாவது வெளியே வரவேண்டும்.


ரஜனி திரணகமவின் ஓராண்டு நினைவாக பாரிஸில் நடாத்தப்பட்ட கூட்டத்தில் 'விடுதலை'ப் புலிகளின் பிரதிநிதி ஒருவர் எழுந்து «ரஜனியைப் புலிகள்தான் கொலை செய்தார்கள் என்று நீங்கள் நேரில் பார்த்தீர்களா?» என்று ஆவேசமாகக் கேட்டார். கேட்டவரைப் பார்த்து அனுதாபப் படலாமேயன்றி ஆத்திரப்படமுடியாது. பாவம் அவர்கள். எய்தவரிருக்க அம்பை ஏன் நோவான் எனபதுபோல்தான்.


இந்தக் கொள்ளைச் சம்பவம் தொடர்பாகவும் (இன்று 16 வருடங்களின் பின்னும்) அவர்கள் இதே கேள்வியைக் கேட்கக் கூடும். இப்படிக் கேட்பவர்களிற்கு விடை தெரிய வேண்டுமானால்,


1. பாரிஸில் சபாலிங்கத்தின் செயற்பாடுகள் யாருக்கு வேண்டப்படாததாக இருந்தன?


2. 'பள்ளம்' சஞ்சிகை எவருக்கு இடைஞ்சலாக இருந்தது?


3. ரஜனியின் எழுத்தும் செயற்பாடும் யாருக்கு உவப்பானதாக இருக்கவில்லை?


4. இன்னும் இலக்கியச் சந்திப்பு மற்றும் இங்கு மறுத்தோடிகள் நடாத்தும் கருத்தரங்குகள், நினைவுகூரல்கள் யாருக்கு விசனத்தைக் கொண்டு வருகின்றன?


என்பது போன்ற கேள்விகளுக்கு நாங்கள் பதிலைத் தேடினால், அதை நாங்கள் சொல்லி உங்களுக்குத் தெரிய வேண்டியதில்லை.



It is a simple log


உயிர்நிழல் சஞ்சிகையானது வெறும் தனிநபர் அரசியலையோ அல்லது இயக்க அரசியலையோ கொண்டிராது பாசிசத்துக்கெதிரான, ஒடுக்குமுறைகளுக்கு ஆதரவு கொடுக்காத ஒரு அரசியலைக் கொண்டிருக்கின்றது என்பதை இவ்விடத்தில் தெளிவுபடுத்தி, இந்த ஆவணக் கொள்ளையானது வெறுமே தனிநபருக்கெதிரானதாகக் கொள்ளாது, இது மறுத்தோடிச் செயற்பாடுகளில் ஈடுபட்டிருக்கும் அனைவர்மீதும் இந்த 'விடுதலை'ப் புலிகளின் கோரக்கரங்கள் நீண்டிருப்பது குறித்த எச்சரிக்கை என்பதை அனைவரும் புரிந்துகொண்டு இதற்கான நடவடிக்கைகளில் ஒன்றிணைந்து ஈடுபடவேண்டும் என்று உயிர்நிழல் மறுத்தோடிகளையும் மாற்றுக் கருத்தாளர்களையும் விழிக்கின்றது.



உயிர்நிழல் சார்பாக


லக்ஷ்மி


2 comments:

Sri Rangan said...

இலஷ்மி அக்கா,வணக்கம்!தங்களுக்கு நேர்ந்த இந்த வன்முறையையும் வன்மையாகக் கண்டிக்கின்றேன்.இதைவிட உங்களுக்கு என் மனதின் வலியை எப்படிச் சொல்ல முடியும்?

பாசமுடன்,
ப.வி.ஸ்ரீரங்கன்

-/பெயரிலி. said...

இலக்ஷ்மி
அரசியற்கருத்துவேறுபாடுகளால் உங்கள் வீட்டுள்ளே நுழைந்து அத்துமீறி நுழைந்து, ஆவணங்கள் திருடப்பட்டதைக் கண்டிக்கின்றேன்.

-/இரமணி.