பி.இரயாகரன்
01.04.2007
எங்கும் எதிலும் ஒரு பிழைப்புத்தனம். அரசியல் என்பதே நக்குத்தனமாகிவிட்டது. (தமிழ்) மக்களின் பிரச்சனைகளை இனம் காணுதல் அருவருப்புக்குரிய ஒன்றாகிவிட்டது. மக்களின் வாழ்வியல் நெருக்கடிகளின் அடிப்படையில் இயங்குதல், அதற்காக குரல் கொடுத்தல், என அனைத்தையும் மறுத்து இயங்குவதே அரசியலாகிவிட்டது. இப்படி குரூரமாகி நிற்பவர்கள், மனித அவலங்கள் மீது நீந்தி நீச்சலடிக்கின்றனர்.
புலியெதிர்ப்போ, பேரினவாத வெற்றிகளை தமது சொந்த வெற்றியாக கொண்டாடுகின்றது. இதை அரசியலாக கொண்டே அவர்கள் குலைக்கின்றனர். இந்த வகையில் புலியெதிர்ப்புக் கருத்துலகம் கருத்தை கட்டமைக்கின்றது. மறுபக்கத்தில் புலிகள் தமது சொந்த தோல்விகளை, தந்திரோபாயமான பின்வாங்கல் என்று காட்ட முனைகின்றனர். இதை மூடிமறைக்க ஹீரோத்தனமான ஒரு சில தாக்குதலை நம்பி அவர்களின் அரசியல் நடுக் கடலில் தத்தளிக்கின்றது.
மக்கள் நிலையோ துன்பகரமானது. உடுத்த உடுப்புடன் மக்கள் ஓட்டமும் நடையுமாக அங்குமிங்குமாக ஒடுகின்றனர். வாழ்வதற்கான அனைத்து பிழைப்பு வழிகளையும் இழந்த மக்கள் கூட்டம், நாயிலும் கீழாக இழிந்து போகின்றனர். ஒரு நேரக் கஞ்சிகே, தெரு நாய்கள் போல் உணவுப் பொருட்களைத் தேடி அலையும் மற்றொரு மக்கள் கூட்டம். வாழ்வை பறிகொடுத்த மக்கள் கூட்டத்தின் கதி இதுவென்றால், வாழ்விழந்து பரிதபிக்கும் மற்றொரு மக்கள் கூட்டம் வாய் பொத்தி அழுகின்றது.
பொத்திப் பொத்தி வளர்த்த தமது சொந்தக் குழந்தைகளை, கட்டாய பயிற்சியின் பெயரில் புலிகளிடம் பறிகொடுக்கின்றனர். இதை எதிர்த்து வாய் திறக்க முடியாத பாசிச வெறியாட்டம். தமிழ்செல்வன் போன்ற விளம்பர பொறுக்கிகள் மட்டும் தான், எதையும் எந்த அபிப்பிராயத்தையும் சொல்லமுடியும் என்ற நிலை. மக்களின் அன்றாட உணர்வு, அவர்களின் பரிதாபகரமான நிலை எதையும் யாரும் பிரதிபலிக்க முடியாது. இதை மீறி மக்களின் சூடான மூச்சுகள் எழும் போதும், அடியையும் உதையையும் சித்திரவதையையும் புலிகள் பரிசளிக்கின்றனர். இதனால் அங்கு மரணங்கள் கூட அன்றாடம் நிகழ்கின்றது.
வன்னியில் வாழும் மக்களின் நிலை இதுவென்றால், மறுபக்கம் பேரினவாத கொலைகாரக் கும்பல் தமிழ் மக்களின் குழந்தைகளை கொன்று குவிக்கின்றது. ஜனநாயகத்துக்கு திரும்பி கூலிக் கும்பலாகவே இயங்கும் குண்டர்களுடன் சோந்தே, இளம் தளிர்களை வகை தொகையின்றி கொன்று குவிக்கின்றனர். கடத்தல், காணாமல் போதல், கொன்று போடுதல் வரலாறு காணா உச்சத்தை எட்டி நிற்கின்றது. ஒவ்வொரு தமிழ் தாயினதும் கருப்பையிலேயே உயிர்களை பலிகொள்ளுமளவுக்கு இந்த அராஜகம் நடதேறுகின்றது.
இப்படி தமிழ் பேசும் மக்களின் அவலம், இராணுவ அலுக்கோசுகளின் வக்கிரங்களுக்குள் அழுந்தி போகின்றது.
No comments:
Post a Comment