தமிழ் அரங்கம்

Friday, April 13, 2007

காவிரி நடுவர்மன்றத் தீர்ப்பு: பத்தில் ஒன்பது பழுதில்லை

காவிரி நடுவர்மன்றத் தீர்ப்பு: பத்தில் ஒன்பது பழுதில்லை


16 ஆண்டு காலச் சட்டப் போராட்டத்திற்குப் பிறகு காவிரி நடுவர் மன்றம், காவிரி நதி நீரைப் பகிர்ந்து கொள்வதில் ஒருமனதான இறுதித் தீர்ப்பை அளித்திருக்கிறது. காவிரியில் ஆண்டுக்கு 74,000 கோடி கன அடி நீர் கிடைக்கும் என்ற மதிப்பீட்டை (நூற்றுக்கு) 50 சதவீதம் நம்பலாம் என்ற அடிப்படையில், கர்நாடகத்திற்கு 27,000 கோடி கன அடி நீரும்; தமிழகத்திற்கு 41,900 கோடி கன அடி நீரும்; கேரளாவிற்கு 3,000 கோடி கன அடி நீரும்; புதுச்சேரிக்கு 700 கோடி கன அடி நீரும் இறுதித் தீர்ப்பில் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. இப்பகிர்வு போக, எஞ்சியிருக்கும் நீரில் 1,000 கோடி கன அடி நீர் சுற்றுப்புறச் சூழலுக்கும்; தவிர்க்க இயலாமல் கடலில் கலப்பது 400 கோடி கன அடி நீர் என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.


காவிரி நடுவர் மன்றம் வழங்கிய இடைக்காலத் தீர்ப்பில், கர்நாடகம், தமிழகத்திற்கு ஆண்டுதோறும் 20,500 கோடி கன அடி நீர் தர வேண்டும்; அதிலிருந்து தமிழகம் புதுச்சேரிக்கு 600 கோடி கன அடி நீர் தரவேண்டும். கர்நாடகம் தர வேண்டிய நீரின் அளவு மேட்டூரில் அளவிப்பட வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது. தற்பொழுது வழங்கப்பட்டுள்ள இறுதித் தீர்ப்பில், கர்நாடகம் தமிழகத்திற்கு, சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்புக்குத் தேவைப்படும் 1,000 கோடி கன அடி நீரையும் சேர்த்து, 19,200 கோடி கன அடி நீர் தர வேண்டும்; கர்நாடகம் தர வேண்டிய நீரின் அளவு, மேட்டூருக்கு மேலே, கர்நாடகம் தமிழகம் எல்லையில் உள்ள பில்லிகுண்டலு என்ற இடத்தில் அளவிடப்பட வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் பங்கில், கர்நாடக மாநிலம் தரும் 18,200 கோடி கன அடி நீர் போக, மீதமுள்ள 23,700 கோடி கன அடி நீர் தமிழகப் பகுதிகளில் காவிரி நதியில் கிடைப்பதாகும்.


கன்னட இனவெறியர்களோ, தமிழகத்தின் பங்கு முழுவதையும் கர்நாடகமே தரவேண்டும் என்பது போல தீர்ப்பு வந்திருப்பதாகவும்; கீழ்மடைக்காரனைவிட, மேல்மடைக்காரனுக்குக் குறைவான நீரே ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் அவதூறு பிரச்சாரத்தை நடத்தி வருகின்றனர். தீர்ப்பின் உண்மை விவரத்தை விவசாயிகளுக்கு விளக்க வேண்டிய மாநில அரசும் தீர்ப்பில் கர்நாடகத்திற்கு அநீதி இழைக்கப்பட்டு விட்டதாகப் பொய் சொல்வதன் மூலம் தமிழர்களுக்கு எதிரான இனவெறி நடவடிக்கைகளுக்குத் தூபம் போட்டு வருகிறது.


கர்நாடகத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற நாடகதிரைப்படக் கலைஞரும், ஞானபீட விருது பெற்ற நாடக ஆசிரியருமான கிரீஷ் கர்னாட், தீர்ப்பை கர்நாடகம் மதிக்க வேண்டும் என வெளிப்படையாகக் கூறியதற்காகவே, அவரின் உருவ பொம்மை கொளுத்தப்பட்டது. கர்நாடக இனவெறியர்களின் இப்பாசிசப் போக்கின் காரணமாகவே, அம்மாநிலத்தில் தீர்ப்பை ஆதரிப்போரின் குரல்கள், பத்திரிகைகளுக்கு எழுதப்படும் வாசகர் கடிதம் பகுதியைத் தாண்டி வெளியே கேட்கவில்லை.


1934 தொடங்கி 1980 வரையிலான காலகட்டத்தில், கர்நாடகம் உபயோகித்திருக்கும் காவிரி நீரின் குறைந்தபட்ச சராசரி அளவு 11,840 கோடி கன அடி; அதிகபட்ச சராசரி அளவு 19,070 கோடி கன அடி. கர்நாடகம், தனது காவிரி பாசனப் பரப்பைத் தன்னிச்சையாக விரிவாக்கிக் கொண்ட பிறகு, 198090 காலகட்டத்தில், அம்மாநிலம் பயன்படுத்தியிருக்கும் காவிரி நீரின் சராசரி அளவு 28,030 கோடி கன அடியாகும். (ஆதாரம்: தமிழகம்: நதிநீர்ப் பிரச்சினைகள் பழ.நெடுமாறன், பக்:107) இப்புள்ளி விவரத்தோடு ஒப்பிட்டால், இறுதித் தீர்ப்பில் கர்நாடகத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள 27,000 கோடி கன அடி நீர் என்பது முற்றிலும் நியாயமான பங்கீடாகும்.


இது ஒருபுறமிருக்க, இடைக்காலத் தீர்ப்பில், கர்நாடக மாநில அரசு தனது பாசனப்பரப்பை 11.2 இலட்சம் ஏக்கருக்கு மேல் விரிவாக்கக் கூடாது எனத் தடை விதிக்கப்பட்டிருந்தது. ஆனால், கர்நாடக மாநில அரசோ, இத்தடையைக் கண்டு கொள்ளாமல், தனது பாசனப் பரப்பை விரிவாக்கிக் கொண்டே சென்றது. இறுதித் தீர்ப்பில், கர்நாடகா தடையை மீறி விரிவாக்கம் செய்த பாசனப் பரப்பையும் உள்ளடக்கி 18.85 இலட்சம் ஏக்கர் நிலப்பரப்பிற்குப் பாசனம் அளிக்க உரிமை வழங்கப்பட்டுள்ளது.


இந்தச் சாதகமான அம்சங்களைக் கருத்தில் கொண்டுதான் காவிரி நடுவர் மன்றத்தில் கர்நாடகா சார்பாக வாதாடிய வழக்குரைஞர் ஃபாலி.எஸ். நாரிமன், கர்நாடக மாநில தலைமை வழக்குரைஞர் இருவரும், ""இத்தீர்ப்பு நியாயமானது'' எனக் கூறியுள்ளனர். எதிர்க்கட்சிகள் அவர்களின் கருத்துக்கு எதிராகச் சட்டசபையில் சாமியாடிய பிறகுதான், கர்நாடக மாநில அரசு அவர்களின் கருத்தை மறுத்துப் பேசியதோடு, அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டி, தீர்ப்பை முற்றிலும் நிராகரிப்பதாக அறிவித்திருக்கிறது.


···


கர்நாடகாவைப் போலன்றி, தமிழகத்தில் இத்தீர்ப்பிற்கு அரசியல் கட்சிகள் இயக்கங்கள் விவசாய சங்கங்கள் மத்தியில் விமர்சனத்துடன் கூடிய ஆதரவும், எதிர்ப்பும் கிடைத்திருக்கிறது.


நடுவர் மன்றத்தில் நடந்த வழக்கில், கர்நாடகம் தமிழகத்திற்குத் தரவேண்டிய நீரை மேட்டூரில்தான் அளவிட வேண்டும் எனத் தமிழகம் கோரியிருந்தது. கர்நாடகம்தான், பில்லிகுண்டலுவை நீர் அளக்கும் இடமாகக் கோரியது. இறுதித் தீர்ப்பு கர்நாடகாவிற்குச் சாதகமாக வந்திருக்கிறது என்பது தீர்ப்பை எதிர்ப்பவர்களின் வாதங்களுள் ஒன்று.


இறுதித் தீர்ப்பில் பில்லிகுண்டலு தற்காலிகமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. மேலும், திறந்துவிடப்படும் நீரை அங்கு அளவிட்டு அறிவிக்கப் போவது கர்நாடக அரசு கிடையாது; மைய அரசின் நீர் வள கமிசன்தான் நீரை அளவிட்டு அறிவிக்கப் போகிறது. சர்வதேச அளவுகோலின்படி பில்லிகுண்டலுவில் நீர் அளக்கப்படும் எனக் கூறப்படுவதால், மேட்டூரில் நீரை அளந்தபோது தமிழகம் கர்நாடகாவிற்கு இடையே ஏற்பட்ட முரண்பாடுகளும், குழப்பங்களும் நீக்கப்படுவதற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், முரண்பட்ட இரண்டு கட்சிக்காரர்களிடையே ஏற்படும் மோதலைத் தீர்த்து வைக்க மத்தியஸ்தரை நாடவேண்டும் என்ற நடைமுறைபடி பார்த்தால், பில்லிகுண்டலுவையோ அல்லது இரு மாநிலங்களுக்குமான எல்லைப் பகுதியில் வேறொரு இடத்தையோ தேர்ந்தெடுத்துக் கொள்ளுமாறு இறுதித் தீர்ப்பில் கூறப்பட்டிருப்பதை நியாயமானதாகத்தான் பார்க்க முடியும்.


பில்லிகுண்டலுவுக்கும், மேட்டூருக்கும் இடையே உள்ள தமிழகப் பகுதிகளில் ஆண்டொன்றுக்கு 2,500 கோடி கன அடி நீர் காவிரியில் கிடைப்பதாக தமிழக அரசே நடுவர் மன்றத்திடம் கூறியிருக்கிறது. இந்தப் புள்ளி விவரப்படி பார்த்தால், கர்நாடகம் இடைக்காலத் தீர்ப்பை அமல்படுத்துவதற்கு, தனது மாநில எல்லையான பில்லிகுண்டலுவில் 18,000 கோடி கன அடி நீரைத் திறந்துவிட்டாலே, மேட்டூரில் (18,000 + 2,500 = 20,500 கோடி கன அடி) கணக்கு நேராகி விடும். தற்பொழுது இறுதித் தீர்ப்பின்படி, கர்நாடகம், சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்புக்கு ஒதுக்கப்பட்டுள்ள 1,000 கோடி கன அடி நீர் போக, 18,200 கோடி கன அடி நீரை தமிழகத்தின் பங்காக பில்லிகுண்டலுவில் திறந்துவிட வேண்டும்.


இடைக்காலத் தீர்ப்பின்படி புதுச்சேரிக்குத் தரவேண்டிய பங்கு போக, தமிழகத்திற்கு மேட்டூரில் 19,900 கோடி கன அடி நீர் ""கிடைத்தது'' என்றால், தற்பொழுது, புதுச்சேரியின் பங்கு போக, 20,000 கோடி கன அடி நீர் கிடைக்கும்.


இது, இடைக்காலத் தீர்ப்பில் ஒதுக்கப்பட்டதை விடக் கொஞ்சம் அதிகமானது என்ற போதிலும், தமிழகப் பகுதியில் 2,500 கோடி கன அடிக்குக் குறைவாகவே நீர் கிடைத்தால் (தீர்ப்பு வெளிவந்த பிறகு தமிழக அரசு மேட்டூருக்கும் பில்லிகுண்டலுவுக்கும் இடையே 1,700 கோடி கன அடி நீர்தான் கிடைக்கும் எனக் கூறத் தொடங்கியிருக்கிறது) இடைக்காலத் தீர்ப்பைவிடக் குறைவான நீரே கிடைக்கும். எனினும், இடைக்காலத் தீர்ப்பை மட்டுமே அளவுகோலாக வைத்துக் கொண்டு, இறுதித் தீர்ப்பைப் பரிசீலிப்பது குருட்டுத்தனமானது.


காவிரியில் கிடைக்கும் மொத்த நீரில் (74,000 கோடி கன அடி) 20 சதவீதப் பங்கு (கிட்டத்தட்ட 14,300 கோடி கன அடி) கேரளாவின் கபினி, பவானி, பம்பாறு நீர் பிடிப்புப் பகுதியில் இருந்துதான் கிடைக்கிறது. இந்த உண்மையைக் கணக்கில் எடுத்துக் கொண்டுதான் கேரளாவிற்கு 3,000 கோடி கன அடி நீர் இறுதித் தீர்ப்பில் ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே, கேரளாவிற்கு அநியாயமாக நீர் ஒதுக்கப்பட்டு விட்டதாக இனவாதிகள் புலம்புவதற்கு அடிப்படையே கிடையாது.


1901இல் தமிழகத்தில் காவிரி பாசனப் பரப்பு 13.45 இலட்சம் ஏக்கராக இருந்தது. இது, 1928இல் 14.44 இலட்சம் ஏக்கராக அதிகரித்தது. இந்தக் காலக் கட்டத்தில் கையெழுத்தான 1924 ஒப்பந்தத்தின்படி, தமிழகம் மேட்டூர் திட்டத்தின் கீழ் மேலும் 3.2 இலட்சம் ஏக்கர் பாசனப் பரப்பை விரிவாக்கிக் கொள்ள அனுமதிக்கப்பட்டது. ஆனால், தமிழகமோ, 19511961 கால கட்டங்களில் நிறைவேற்றப்பட்ட கீழ் பவானி திட்டம், மேட்டூர் கால்வாய் திட்டம், அமராவதி, புள்ளம்பாடி, கட்டளைக் கால்வாய் திட்டம் ஆகியவற்றையும் பயன்படுத்தி, 6.4 இலட்சம் ஏக்கர் அளவிற்கு பாசனப் பரப்பை விரிவாக்கிக் கொண்டது.


""1924 ஒப்பந்தம் இத்திட்டங்களை அனுமதிக்கவில்லை'' என அப்போதைய மைசூர் அரசு இதற்கு எதிர்ப்பு தெரிவித்தது. ""மேட்டூர் கால்வாய் திட்டம் மேட்டூர் ஒப்பந்தத்தின் கீழ்தான் வருகிறது. புதிய கட்டளைக் கால்வாய், புள்ளம்பாடி கால்வாய் திட்டங்கள் மூலம் விரிவாக்கப்படும் பாசனப்பரப்பிற்கு உபரி நீரைத்தான் தமிழகம் பயன்படுத்தும்; கூடுதல் நீர் கேட்க மாட்டோம்'' என மைய அரசின் திட்டக் கமிசனிடம் உறுதியளித்துத்தான், தமிழக அரசு இத்திட்டங்களை நிறைவேற்றியது. இதன் விளைவாக, 1971இல் தமிழகத்தில் காவிரிப் பாசனப் பரப்பு 25.30 இலட்சம் ஏக்கராகவும்; 1990இல் 25.80 இலட்சம் ஏக்கராகவும் அதிகரித்தது;


""மொழி வழி மாநிலங்கள் 1956இல் ஏற்படுத்தப்பட்ட பிறகு, தமிழகத் திட்டங்களுக்கு கர்நாடகமும், கர்நாடகத் திட்டங்களுக்குத் தமிழகமும் எதிர்ப்புகளைத் தெரிவிக்க ஆரம்பித்தன'' எனக் குறிப்பிடுகிறார், காவிரி காப்புக் குழுவின் அமைப்பாளரான, பூ.அர. குப்புசாமி (ஆதாரம்: காவிரி: திராவிட இயக்க அரசியல் தலைமையின் தோல்வி, பக்.15)


காவிரிப் பிரச்சினையின் இந்த அம்சத்தை கணக்கில் எடுத்துக் கொண்டுதான், நடுவர் மன்றம், 1924க்கு முன்பு ஏற்படுத்தப்பட்ட பாசனப் பரப்பு 15.20 இலட்சம் ஏக்கர்; 1924 ஒப்பந்தத்தின்படி அனுமதிக்கப்பட்ட பாசனப் பரப்பு 6.20 இலட்சம் ஏக்கர்; ஒப்பந்தத்திற்கு அப்பால் விரிவாக்கம் செய்யப்பட்டாலும், தகுதியின் அடிப்படையில் அனுமதிக்கப்படும் பரப்பு 2.06 இலட்சம் ஏக்கர்; சிறு பாசனத்தின் கீழ் வரும் பரப்பு 1.25 ஏக்கர் பரப்பு என்ற அடிப்படையில் தமிழகத்தின் பாசனப் பரப்பை 24.71 இலட்சம் ஏக்கர் எனத் தீர்மானித்திருக்கிறது.


எதிர்கால விரிவாக்கத்தையும் கணக்கில் கொண்டு, கர்நாடகாவின் காவிரி பாசனப் பரப்பை 27.28 இலட்சம் ஏக்கராக அனுமதிக்கக் கோரிய கர்நாடகத்தின் பாசனப் பரப்பு, இறுதித் தீர்ப்பில் 18.85 இலட்சம் ஏக்கராகத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.


தமிழக அரசு, நடுவர் மன்றத்தில் தனக்கு 56,200 கோடி கன அடி நீர் வேண்டும் எனக் கோரியது; கர்நாடகம் தனக்கு 46,500 கோடி கன அடி நீர் வேண்டும் எனக் கோரியது. கேரளாவும், புதுச்சேரியும் தத்தமது மாநிலங்களுக்கு முறையே 9,900 / 900 கோடி கன அடி நீரைக் கோரியிருந்தன. இதன்படி தண்ணீரை ஒதுக்க வேண்டும் என்றால் காவிரியில் 1,13,500 கோடி கன அடி நீர் கிடைக்க வேண்டும். ஆனால், காவிரியிலோ, 50 சதவீத நம்பகத்தன்மை அடிப்படையில் (இரண்டு ஆண்டுகளில் ஒரு ஆண்டு எதிர்பார்க்கப்படும் தண்ணீர் கிடைக்கும் என்ற அளவுகோலின்படி) 74,000காடி கன அடி நீர்தான் கிடைக்கிறது. 75 சதவீத நம்பகத்தன்மை அடிப்படையில் (நான்கு ஆண்டுகளில் மூன்று ஆண்டுகள் எதிர்பார்க்கப்படும் தண்ணீர் கிடைக்கும் என்ற அளவுகோலின்படி) 67,100 கோடி கன அடி நீர்தான் கிடைக்கும்.


""ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு கிடைக்கின்ற அனுபவத்தைக் கொண்டு, உபரி நீரை (ஒப்பந்தம் எதிர்பார்த்ததை விடக் கூடுதலாக வரும் நீரை) எவ்வாறு பகிர்ந்து கொள்வது என்று மறு ஆய்வு செய்ய வேண்டும்'' என 1924 ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ளது. ஆனால், 1970களிலேயே காவிரி நதி நீரில் 92 சதவீத நீர் பயன்பாட்டுக்கு வந்துவிட்டதால், உபரி நீர் என்ற பேச்சுக்கே வழி இல்லாமல் போய்விட்டது. இதனால் 1924 ஒப்பந்தத்தில் கூறியபடி மறுஆய்வு செய்யும் வாய்ப்பும் இல்லாமல் போய்விட்டது.


காவிரி நதி நீரைப் பயன்படுத்தும் மாநிலங்களின் உரிமையை நிலைநாட்டும் அதேசமயம், மாறியுள்ள புதிய சூழ்நிலையில், பற்றாக்குறையுள்ள நதிநீரை, அதைப் பயன்படுத்தும் மாநிலங்களுக்கு இடையே எப்படி நியாயமாகப் பகிர்ந்து கொள்வது என்பதுதான் காவிரி சிக்கலின் சாரம். இந்த அடிப்படையில் இருந்துதான் நடுவர் மன்றத்தின் இறதித் தீர்ப்பைப் பரிசீலிக்க வேண்டும்.


· ""காவிரி தங்களுக்கு மட்டுமே சொந்தம்'' என்று கூப்பாடு போடுவதன் மூலம், கர்நாடகா காவிரியின் மீதான தமிழகத்தின் உரிமையை அங்கீகரிக்க மறுத்து வந்தது. இறுதித் தீர்ப்பு, ""காவிரியை, அதனைப் பயன்படுத்தும் எந்தவொரு மாநிலமும் தனியுரிமை கொண்டாட முடியாது'' எனக் கூறியிருப்பதன் மூலம், கன்னட இனவெறிக்கு ஆப்பறைந்திருக்கிறது.


· ""1892 மற்றும் 1924 ஒப்பந்தங்கள் இரண்டுமே செல்லுபடியாகாது; அவை எங்களைக் கட்டுப்படுத்தாது'' என்று கர்நாடகமும், கேரளமும் கூறி வந்ததை, இறுதித் தீர்ப்பு நிராகரித்து விட்டது. அதேசமயம், புதிய நிலைமைகளுக்கு ஏற்ப அந்த ஒப்பந்தங்களை மீளாய்வு செய்து, இறுதித் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதால், அந்த ஒப்பந்தங்களின் இடத்தை இந்தத் தீர்ப்பு எடுத்துக் கொண்டு விட்டதாகக் கூறப்பட்டுள்ளதை நியாயமான சட்டபூர்வ நடவடிக்கையாகத்தான் பார்க்க வேண்டும்.


· ""தனக்குப் போக எஞ்சியதுதான் தமிழகத்திற்கு'' என்பதுதான் காவிரிநீரைப் பகிர்ந்து கொள்வதில் கர்நாடகாவின் நடைமுறையாக இருந்து வந்திருக்கிறது. கர்நாடகம், தமிழகத்திற்குத் தர வேண்டிய பங்கை, மாதாந்திர தவணை அடிப்படையில் திறந்துவிட வேண்டும் என இறுதித் தீர்ப்பில் கூறியிருப்பதன் மூலம், கர்நாடகத்தின் அடாவடித்தனத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.


· கர்நாடகம், காவிரியில் புதிய திட்டங்களை நடைமுறைப்படுத்தினாலும், அதனால் தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள பங்கு நீர் குறைந்துவிடக் கூடாது என்பது தீர்ப்பில் மீண்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது.


· குறுவைப் பயிர் சாகுபடிக்கு 10,100 கோடி கன அடி நீர் தேவைப்படும் எனக் கூறப்படுகிறது. இறுதித் தீர்ப்பில், குறுவை சாகுபடி நடக்கும் ஜூன் தொடங்கி செப்டம்பர் மாதத்திற்குள் 13,400 கோடி கன அடி நீர் திறந்துவிட வேண்டும்; இந்த நீரை அந்தந்த மாதங்களில் ஒதுக்கப்பட்ட அளவின்படி, ஒவ்வொரு மாதமும் 10 தவணைகளில் திறந்துவிட வேண்டும் எனக் கூறப்பட்டிருப்பதால், குறுவைப் பயிர் சாகுபடி சூதாட்டமாக மாறிவிடாமல், உத்தரவாதம் செய்யப்பட்டுள்ளது.


· தமிழக அரசு காவிரிப் பாசன வாய்க்கால்களில் தூர் வாரியதற்கு மேல், எந்தவிதமான நவீன மேம்பட்ட வசதிகளையும் செய்து கொடுத்ததில்லை. காவிரி வழக்கு நடப்பதைக் காட்டியே, காவிரிப் பாசன வாய்க்கால்களையும், ஏரிகளையும் நவீனப்படுத்த மறுத்து வந்தது. வடகிழக்குப் பருவமழை பெய்யும் காலங்களில் வெள்ளத்தால் ஏரிகள் கண்மாய்கள் உடைத்துக் கொண்டு, பயிர்களும், நிலமும் சேதாரமாவதைத் தடுப்பது மட்டுமல்ல; அந்த உபரி நீரைத் தேக்கி வைத்துப் பயன்படுத்தவும் நவீனமயம் அவசியம்.


காவிரியில் தண்ணீர் விடாமல் முரண்டு பிடிப்பதற்கு வேண்டுமானால், கர்நாடகாவைக் குற்றம் சொல்லலாம்; ஆனால், வெள்ளக் காலங்களில் டெல்டா விவசாயிகள் நட்டமடைவதற்கு தமிழக அரசைத் தவிர, வேறு யாரைக் குற்றம் சொல்ல முடியும்? காவிரியில் தண்ணீர் இல்லாமல் தரிசாகப் போடப்படும் நிலங்களின் பரப்பைவிட, வெள்ளத்தால் நாசமாகும் வயல் பரப்பு அதிகம்.


இறுதித் தீர்ப்பின் மூலம் காவிரிப் பாசன வாய்க்கால்களை நவீனப்படுத்துவதற்கு இருந்துவந்த ""தடை'' நீங்கிவிட்டது. இந்த நவீனமயம் காவிரிப் பாசன விவசாயிகளின் நலனுக்காக மேற்கொள்ளப்பட வேண்டுமே தவிர, உலக வங்கியின் உத்தரவுப்படி தண்ணீர் வியாபாரிகளின் இலாபத்திற்காக மேற்கொள்ளப்படக் கூடாது என்பதை தமிழக அரசு உத்தரவாதப்படுத்த வேண்டும்.


· தீர்ப்பில், காவிரி டெல்டா பகுதியில் கிடைக்கும் நிலத்தடி நீரையும் சேர்த்துக் கணக்கிட வேண்டும் என்ற கர்நாடகத்தின் வாதம் முற்றிலுமாக நிராகரிக்கப்பட்டுள்ளது.


· கேரளத்தில் போதிய அடிக்கட்டுமான வசதிகள் இல்லாததால் அம்மாநிலத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள 3,000 கோடி கனஅடி நீரையும் அம்மாநிலம் பயன்படுத்த தற்பொழுது வாய்ப்பு இல்லை. எனவே, கேரளா பயன்படுத்த முடியாத நீரைத் தனக்கு ஒதுக்க வேண்டும் என்று கர்நாடகம் கோரியது. இறுதித் தீர்ப்பில் கர்நாடகத்தின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு, அந்த நீர் தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், தமிழகத்திற்குத் தற்காலிகமாக 2,000 முதல் 2,500 கோடி கன அடி நீர் கூடுதலாகக் கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.


· மேல்மடை மாநிலமான கேரளா, கீழ்மடை மாநிலங்களான கர்நாடகமும், தமிழகமும் பாதிக்கப்படும் வகையில் எந்தத் திட்டத்தையும் நடைமுறைபடுத்தக் கூடாது என்பது சுட்டிக் காட்டப்பட்டு, கேரளா அனுமதிக்குமாறு கோரியிருந்த மூன்று திட்டங்களை நடுவர் மன்றம் இறுதித் தீர்ப்பில் நிராகரித்து விட்டது.


இவை போன்ற சாதகமான அம்சங்கள் ஒருபுறமிருந்தாலும், இறுதித் தீர்ப்பில் குறைபாடுகளும், குழப்பங்களும் காணப்படுகின்றன.


காவிரியில் கிடைக்கும் நீர் 50 சதவீத நம்பகத் தன்மை அடிப்படையிலேயே தீர்மானிக்கப்பட்டிருப்பதால், இரண்டு வருடங்களில் ஒரு ஆண்டு எதிர்பார்க்கப்படும் தண்ணீர் கிடைக்கும் எனக் கூற முடியாது. எனவே, பற்றாக்குறையையும் எப்படி பகிர்ந்து கொள்வது என்பதை உடனடியாகவே தீர்மானிக்க வேண்டிய அவசியம் இருக்கிறது. தமிழகத்தில் பெய்யும் வடகிழக்குப் பருவமழை மட்டும் பொய்த்தால் எப்படி பகிர்ந்து கொள்வது? கர்நாடகா மற்றும் கேரளாவில் பெய்யும் தென்மேற்குப் பருவ மழை பொய்த்தால் எப்படி பகிர்ந்து கொள்வது? இரண்டு பருவ மழைகளும் பொய்த்தால் எப்படி பகிர்ந்து கொள்வது என்பது பற்றி தீர்மானிக்காமல், பற்றாக்குறை வரும்பொழுது ஒதுக்கப்பட்ட பங்கின்படி பிரித்துக் கொள்ள வேண்டும் என பொத்தாம் பொதுவான சூத்திரத்தைச் சொல்லிவிட்டு, இறுதித் தீர்ப்பு நழுவிக் கொள்கிறது.


காவிரியில் கிடைக்கும் மொத்த நீரில் இருந்து, சுற்றுப்புறச் சூழலுக்காக ஒதுக்கப்பட்ட 1,000 கோடி கன அடி நீரை கழித்த பிறகுதான், மாநிலங்களுக்கிடையே தண்ணீர் பங்கு பிரிக்கப்பட்டிருப்பதாக இறுதித் தீர்ப்பு கூறுகிறது. எனினும், மொத்த நீரில் இருந்து ஏற்கெனவே கழிக்கப்பட்ட 1,000 கோடி கன அடி நீரை, கர்நாடகம் தமிழகத்திற்குத் தரவேண்டிய நீரில் இருந்து மீண்டும் கழித்திருப்பதன் மூலம், அந்த 1,000 கோடி கன அடி நீரை கர்நாடகாவே சேமித்துக் கொள்ளும் வாய்ப்பை இறுதித் தீர்ப்பு ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது.


மேலும், கேரளாவிற்குத் தமிழக அணைகளில் இருந்து கொடுக்க வேண்டிய 9,000 கோடி கன அடி நீரும்; கடலில் கலக்கும் 4,000 கோடி கன அடி நீரும் தமிழகத்தின் பங்கில் இருந்து தான் கழிக்கப்படும் என்றால், 41,900 கோடி கன அடி நீரை விடக் குறைவான பங்கே தமிழகத்திற்குக் கிடைக்கும்.


நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை முற்றிலுமாக நிராகரித்திருக்கும் கர்நாடகம், ""பேச்சு வார்த்தை'' என்ற மோசடித்தனத்தை மீண்டும் அரங்கேற்றத் திட்டம் போடுகிறது. இந்த நச்சுச் சூழலுக்குள் இப்போது மட்டுமல்ல; எதிர்காலத்திலும் தமிழகம் சிக்கிக் கொள்ளக் கூடாது.


இறுதித் தீர்ப்பில் தமிழகத்திற்குப் பாதிப்பு ஏற்படுத்தும் அம்சங்களை நீக்கக் கோரி, நடுவர் மன்றத்தில் மேல் முறையீடு செய்யப் போவதாகத் தமிழக அரசு முடிவெடுத்திருக்கிறது. இந்த மேல் முறையீட்டு வழக்கின் தீர்ப்பை காலந்தாழ்த்தாமல் வழங்கக் கோர வேண்டும். அதுவரை, நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை நடைமுறைப்படுத்துவதற்கு ஏற்றவாறு, அதனை உடனடியாக அரசிதழில் வெளியிட வேண்டும்; இறுதித் தீர்ப்பில் கூறியபடி, இத்தீர்ப்பை நடைமுறைப்படுத்துவதற்கு சுய அதிகாரம் படைத்த கமிட்டிகள் உடனடியாக உருவாக்கப்பட வேண்டும் எனக் கோரித் தமிழக மக்கள் போராடுவதன் மூலம் மட்டுமே, இறுதித் தீர்ப்பில் தமிழகத்திற்குக் கிடைத்திருக்கும் சாதகமான அம்சங்களைத் தக்க வைக்க முடியும்; பாதகமான அம்சங்களை நீக்கவும் முடியும்.


· ரஹீம்

No comments: