ரிலையன்ஸ், வால்மார்ட்டே வெளியேறு!''
— புரட்சிகர அமைப்புகளின் பிரச்சாரம் ஆர்ப்பாட்டம்
பல இலட்சக்கணக்கான சிறு வியாபாரிகள் விவசாயிகள் தொழிலாளர்களின் வாழ்வை நாசமாக்கும் வகையில், சென்னையில் பல்லாயிரம் கோடி முதலீட்டில் 14 இடங்களில் காய்கனி அங்காடிகளைத் தொடங்கியுள்ளதோடு, நகரின் மூலை முடுக்கெல்லாம் விரிவுபடுத்தி வருகிறது, ரிலையன்ஸ் குழுமம். இதன் விளைவாக கோயம்பேடு வணிக வளாகத்தின் விற்பனை இப்போதே 40% அளவுக்கு வீழ்ச்சியடைந்து விட்டது. கோயம்பேட்டை நம்பி வாழும் சுமார் ஒரு லட்சம் குடும்பங்களின் வாழ்க்கைக் கேள்விக்குறியாகி விட்டது.
எதிர்க்கட்சிகள் சித்தரிப்பதைப் போல, இது ஏதோ அரசின் தவறான கொள்கையால் ஏற்பட்டுள்ள பேரழிவு அல்ல. விவசாயம், சிறு தொழில்கள், சிறு வணிகம் முதலான எல்லாத் துறைகளையும் நாட்டின் இயற்கை வளங்களையும் பன்னாட்டு ஏகபோக நிறுவனங்களின் பிடியில் சிக்க வைத்து, நாட்டையே அடிமைப்படுத்தும் மறுகாலனியாக்கக் கொள்கைகள்.
கடந்த பத்தாண்டுகளாக தனியார்மயம் தாராளமயம் உலகமயம் என்ற மறுகாலனியாதிக்கக் கொள்கைகளுக்கெதிராகத் தொடர்ந்து போராடி வரும் ம.க.இ.க., வி.வி.மு., பு.மா.இ.மு., பு.ஜ.தொ.மு. ஆகிய புரட்சிகர அமைப்புகள், ரிலையன்ஸ் எதிர்ப்புப் போராட்டத்தை ஒட்டி மார்ச் 18 முதல் 23 வரை தொடர் பிரச்சார, ஆர்ப்பாட்டங்களில் இறங்கின. பல ஆயிரம் துண்டறிக்கைகள், நூற்றுக்கணக்கான முழக்க அட்டைகள், ""சிறு வணிகத்தை விழுங்கவரும் ரிலையன்ஸ், வால்மார்ட்டே வெளியேறு!'' என்ற சிறுவெளியீடு ஆகியன களத்தில் குவிந்தன.
செங்கொடிகளோடு தோழர்கள் கோயம்பேடு வணிக வளாகத்தைச் சுற்றி 10 கி.மீ. சுற்றளவில் பரவியிருக்கும் ஏழைக் குடியிருப்புகளில் துடிப்போடு பிரச்சாரம் செய்தபோது, மக்கள் ஆதரித்தும் நன்கொடைகள் தந்தும் வரவேற்றனர். அருகே இருந்த மத்தியதர வர்க்க அடுக்ககங்களில் மட்டும் "ரிலையன்ஸ் ஃபிரெஷ்' விரித்துவரும் பொய்யான விளம்பரங்கள் ஊடுருவி இருப்பதை அறிந்த தோழர்கள், அவர்களிடம் உண்மைகளை எடுத்துச் சொல்லிப் போராடக் கற்றுக் கொடுத்தனர்.
20,21 (மார்ச்) ஆகிய இரு நாட்களிலும் கோயம்பேடு வளாகத்திற்குள் 18 இடங்களில் பிரச்சாரம் செய்தது ம.க.இ.க. மையக் கலைக்குழு "ஓரம் ஓரம் ஓரம்' பாடல் பிறந்த களம் அதுதான். சிறு நாடகங்கள், பாடல் ஆடல் மூலம் பல்லாயிரம் உழைப்பாளர்கள் மற்றும் வியாபாரிகளின் நெஞ்சங்களில் கனன்ற போராட்டத் தீயை வேகமாகப் பரப்பியது அக்கலைக்குழு.
கோயம்பேடு வட்டாரம் தவிர, சென்னை தாம்பரம் முதல் வள்ளலார் நகர் உள்ளிட்ட நகரப் பேருந்து நிலையங்களிலும்; பல பேருந்து நிலையங்களிலும்,மின்சார ரயில்களிலும் ரிலையன்ஸ் எதிர்ப்புப் பிரச்சாரத்தை எடுத்துச் சென்ற இப்புரட்சிகர அமைப்புகள், போராடும் மக்களின் நம்பிக்கைக்கு உரமாய், ரிலையன்ஸின் பொய்ப் பிரச்சாரங்களுக்கு ஆப்பறையும் வகையில் புரட்சிகர கலைநிகழ்ச்சியுடன் பொதுக்கூட்டத்தை மார்ச் 21 அன்று மாலை கோயம்பேடு சந்தை அருகே பிருந்தாவன் நகர்த் திடலில் நடத்தின.
பொதுக்கூட்டத்திற்கு பு.ஜ.தொ.மு. மாநிலத் தலைவர் அ.முகுந்தன் தலைமை வகித்தார். ம.க.இ.க. மாநில இணைச்செயலர் தோழர் காளியப்பன் சிறப்புரை ஆற்றினார். காய்கறி வியாபாரிகள் சங்கத் தலைவர் ஜி.டி.இராசசேகரன், சிறுகடை வியாபாரிகள் சங்கத் தலைவர் அண்ணாமலை, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தொழிலாளர் விடுதலை முன்னணித் தலைவர் செங்கோவலர் அரசன், சுமை தூக்கும் கூலித் தொழிலாளி சிவக்குமார் ஆகியோர் பங்கேற்று உரையாற்றினர்.
அரசின் வஞ்சகமான திட்டத்தின்படி, "இடைத்தரகு வியாபாரிகள்' நீக்கப்பட்டு, பகாசுர முதலாளியான ரிலையன்சிடமும், பன்னாட்டு முதலாளியான வால்மார்ட்டிடமும் வியாபாரச் சூத்திரக் கயிறு கொடுக்கப்படுமானால், விவசாயிகள், வியாபாரிகள், கூலிகள் எல்லோருமே ஒட்டு மொத்தமாய்க் குப்பையாக வீசியெறியப்பட்டு விடுவார்கள் என்று விளக்கி எச்சரித்த தோழர் காளியப்பன், நேற்றுவரை நம்மோடு பழகிய சிறு வியாபாரிகளை வீதியில் விட்டுவிட்டு, புதிதாக குஜராத்திலிருந்து வந்த தரகு முதலாளி ரிலையன்ஸ் அம்பானியோடு உறவு வைக்கத் தொடங்குவது என்ன ஒழுக்கம், அது ஆபத்தல்லவா என்று மத்தியதர வர்க்கத்தை நோக்கி நச்சென்று கேள்விகளை வீசினார்.
அடுத்துப் பேசிய கூலித் தொழிலாளி சிவக்குமார் தன் வர்க்கத்துக்கேயுரிய கோபத்தோடு தங்கள் வாழ்க்கையைப் படுகுழியில் தள்ளியிருக்கும் ரிலையன்சை அடித்து விரட்ட வேண்டும் என்று பேசினார்; தொழிலாளர் விடுதலை முன்னணித் தலைவர் செங்கோவலர் அரசன், கோயம்பேடு நிலைமையை மாற்றப் போராட்டம் அவசியம் என்று விளக்கிவிட்டு, ரிலையன்ஸை நுழையவிட்ட கட்சிகளின் பின்னால் தன் கட்சித் தலைவர்களே எப்படிச் சென்றார்கள் என்று கேள்வி எழுப்பினார். சிறு கடை வியாபாரிகள் சங்கத் தலைவரான அண்ணாமலை எளிய வாதங்களை முன்வைத்து ஆளுங்கட்சித் தலைவர்களை நோக்கிக் கேள்விகளை வீசியபோது கைத்தட்டலால் கூட்டம் ஆர்ப்பரித்தது.
கூட்ட இறுதியில் நடந்த ஒரு மணிநேரக் கலைநிகழ்ச்சியில் ஒரு புதிய போராட்டக்கலை அங்கே பிறந்ததைக் கண்ணெதிரே கண்டனர் சுமார் 1500க்கும் மேல் திரண்டிருந்த உழைப்பாளிகள். ""ஓரம் ஓரம் ஓரம் அவன / விரட்ட வேணும் தூரம்/ சொல்லி அடங்கலேன்னா, தயங்காதே, / அழுத்தி ஊக்கில் போடு'' என்ற பாடலை மையக் கலைக்குழு பாடியபோது, அதைப் போராட்ட அச்சாரமாக எடுத்துச் சென்றார்கள் உழைக்கும் கூலிகள்.
மார்ச் 23 பகத்சிங் நினைவு நாளன்று ஜெ.ஜெ. நகர் ரிலையன்ஸ் ஃப்ரெஷ் கடை அருகே இப்புரட்சிகர அமைப்புகளைச் சேர்ந்த சுமார் 50க்கும் மேற்பட்ட தோழர்கள் திரண்டு செங்கொடிகள், போராட்ட முழக்கத் தட்டிகளோடு வீதியில் நின்று சுமார் 3 மணி நேரம் ஆர்ப்பாட்டம் செய்தனர். வீதியோடு சென்ற தள்ளுவண்டி வியாபாரிகளும் இந்த ஆர்ப்பாட்டத்தில் வந்து கலந்து கொண்டனர்.
சென்னைக்கும் படை எடுத்து வந்து கடை திறந்திருக்கும் ரிலையன்ஸை எதிர்த்து கோயம்பேடு வணிக வளாகத்தின் ஆயிரக்கணக்கான வியாபாரிகள் கூலித் தொழிலாளர்கள் அதே நாளில் போர்க்கோலம் பூண்டனர். தமிழகத்தில் பல லட்சம் சிறு வியாபாரிகள், கூலித் தொழிலாளரின் வாழ்வைச் சூறையாட வந்துள்ள ரிலையன்ஸைத் தமிழகத்தைவிட்டே விரட்டியடிக்க வேண்டும் என்று போராட்டம் கூர்மைப்பட்டிருந்தது. அதேநாளின் பிற்பகலில் கோயம்பேடு வணிகவளாகத்தில் சிறு வியாபாரிகளும், கூலித் தொழிலாளர்களும் நடத்திய உண்ணாவிரதக் கூட்டத்தில் தோழர்கள் திரளாகப் பங்கேற்றனர். தோழர் அ.முகுந்தன் அங்கு எழுச்சி உரை ஆற்றினார்.
""ரிலையன்ஸை ஓட ஓட விரட்டியடிப்போம்!'' என்று தொடங்கியுள்ள இவ்வமைப்புகளின் வீச்சான ஒருவாரப் பிரச்சாரமும் சில்லறை வியாபாரிகள் தொழிலாளர்களின் போராட்டமும் முடியவில்லை; இது ஒரு தொடக்கம்; மறுகாலனியாதிக்கத்துக்கு எதிரான போரின் ஒரு சிறு பொறி; இது காட்டுத்தீயாக நிச்சயம் பரவும்!
தகவல்: ம.க.இ.க., சென்னை.
No comments:
Post a Comment