தமிழ் அரங்கம்

Monday, April 30, 2007

சுரண்டித் தின்னும் ஜனநாயகமும், சுரண்டுவதை எதிர்க்கும் மேதினமும்

சுரண்டித் தின்னும் ஜனநாயகமும், சுரண்டுவதை எதிர்க்கும் மேதினமும்

பி.இரயாகரன்
01.05.2007


ற்றவன் உழைப்பைச் சுரண்டி தின்று கொழுக்கும் வர்க்கம் (கூட்டம்) இருக்கும் வரை, மே தினம் என்பது புரட்சிகர தினமாகவே இருக்கும். இதை யாராலும் வரலாற்றால் திரிக்கவும், கொச்சைப்படுத்தவும் முடியாது.


உழைக்கும் வர்க்கம் தனது உரிமைக்காக குரல்கொடுத்து, அதற்காகவே போராடி மடிந்த தினம். இப்படி உலகத் தொழிலாளி வர்க்கத்தின் உரிமைகளை அறைகூவி உணர்த்தியதன் மூலம், உலக தொழிலாளி வர்க்கம் அரசியல் ரீதியாகவே, இந்த நாளை தனது போராட்டத்துக்குரிய உரிமைக்கான நாளாக்கியது.


உழைக்கும் மக்கள் தமது உரிமையை வலியுறுத்தவும், அதற்காக அணிதிரண்டு போராடும் ஒரு புரட்சிகர நாளாகவுமே இது மாறியது. மூலதனம் இந்த நாளைக் கண்டு அஞ்சும் நிலைக்கு, உலகெங்கும் உழைப்போர் கூடி போராட்டங்களை நடத்துகின்ற நாளாகியது.


உலகெங்கும் சுரண்டித்தின்னும் மூலதனத்துக்காக உழைப்பதை இந்த நாளில் தொழிலாளி வர்க்கம் மறுத்து, தமது உரிமைக்காக வேலைநிறுத்தமாக மாற்றியது. அறிவிக்கப்படாத இந்த வேலைநிறுத்தத்தின் மூலம் உணர்வுபூர்வமாக தொழிலாளி வர்க்கம் ஒருங்கிணைவதை மூலதனம் விரும்புவதில்லை.


வன்முறை மூலம் இதை தடுக்க முனைந்து தோல்வி பெற்ற நிலையில், தனது வக்கிரமான மூலதனத்துக்கேகுரிய ஆபாசம் மூலம் (சலுகை மூலம்) இதை பொது விடுமுறையாக்கினர். இதன் மூலம் வீரியம் மிக்க, மூலதனத்துக்கு எதிரான உழைப்புப் புறக்கணிப்பு என்ற போராட்ட உணர்வை நலமடிக்க முனைந்தனர்.


இவற்றை எல்லாம் எதிர்கொண்ட புரட்சிகரமான வரலாற்றில், பல தடைகளைக் கடந்து பல இழிவாடல்களைக் கடந்தே ஒரு புரட்சிகரமான போராட்ட நாளாக இன்றுவரை இந்நாள் நீடிக்கின்றது. மற்றவனை ஜனநாயகத்தின் பெயரில் சுரண்டித் தின்பதே சமூக ஒழுங்காக இருக்கும் வரை, இந்த நாள் தொழிலாளிகளின் உரிமைக்கான ஒரு நாளாக இருப்பதை மூலதனத்தால் தடுத்து நிறுத்தி விடமுடியாது.


என்னதான் இந்த நாளில் ஆபாசமான சினிமா கழிசடைகளைக் கொண்டு கவர்ச்சியாக துகிலுரிய வைத்தாலும், இதன் மூலம் வக்கிரம்கொண்ட ஆபாசமான கவர்ச்சியான அற்ப இழிவுணர்வை ஊட்டும் களியாட்ட நாளாக மாற்ற மூலதனம் முயன்றாலும், சுரண்டப்படும் வர்க்கத்தின் போராட்ட உணர்வை நலமடிக்க முடியாது. ஜனநாயகத்தின் பெயரில் சுரண்டப்படுவது தொடரும் வரை, சுரண்டப்படும் தொழிலாளியின் உணர்வை வெற்றுக் களியாட்டமாக்கிவிட முடியாது. சுரண்டப்படும் வர்க்கத்தின் சொந்த வர்க்க உணர்வு, வர்க்கத் தீயாக பற்றிப் படர்வதை மூலதனத்தால் தடுத்து நிறுத்திவிட முடியாது.


இந்த மே தினத்தில் சில எடுத்துக்காட்டான படிப்பினைகள்


பிரான்சில் மூடிமறைக்கப்பட்ட பாசிசம் இன நிற வெறியுடன் அதிகாரத்துக்கு வரமுனைகின்றது. கடுமையான இன நிற விரோத உணர்வுகளை, சுரண்டும் ஜனநாயகம் என்ற மூலதனக் கூத்தில், தேர்தல் பிரச்சாரமாக்குகின்றது. வெளிநாட்டவர்கள் மத்தியில் அச்சமும், பீதியும், விரக்தியும் அலை மோதுகின்றது. பிரஞ்சு சமூகத்தின் ஒரு பகுதியினர் மத்தியில் உள்ள வெளிநாட்டவருக்கு எதிரான குரோதம் கொழுந்துவிட்டு எரிகின்றது. இதுவே தேர்தலின் முடிவை தீர்மானிக்கும் குறிப்பான காரணியாகியுள்ளது. தொழிலாளி வர்க்கம் உணர்வை இழந்து செயலற்று நிற்கின்றது.


இலங்கையில் இனவெறி தனது கோர முகத்துடன், புலிகளின் பெயரில் தமிழ் மக்களை ஆழ் புதைகுழிக்குள் போட்டு மூட முனைகின்றனர். புலிகள் பாசிச இராணுவவாதங்களில் சிக்கி, தமிழ் மக்களின் உரிமைகளை மறுத்து இனவாதிகளின் எடுபிடிகளாக வக்கரிக்கின்றனர்.


கண்டகண்ட தெரு நாய்கள் எல்லாம் அதை கவ்விக் கொண்டு நக்குகின்றது. பேரினவாத இனவெறி அரசு, தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தை கொச்சைப்படுத்தி, அதை கள்ளச் சந்தையில் விற்க முனைகின்றது. அதை வாங்க ஒரு கூட்டம் நாயாக அலைகின்றது. தமிழ் மக்களின் சமூக பொருளாதார வாழ்வியல் அவலங்களை இட்டு, யாருக்கும் அக்கறை கிடையாது.


நேபாளத்தில் பாட்டாளி வர்க்கம் ஒரு குடி அரசு என்ற, மக்களின் உடனடிக் கோரிக்கையை முன்னெடுத்துள்ளது. நேபாள பாட்டாளி வர்க்கம், வர்க்கப் போராட்டத்தின் திசை வழியை மறுபடியும் தனது சொந்த நடைமுறை வழியில் உலகுக்கே கற்றுக்கொடுக்கின்றது. மன்னர் ஆட்சி, அதை தாங்கி நின்ற நிலப்பிரபுத்துவ அமைப்புக்கு எதிராக குடியரசுக் கோரிக்கையின் அடிப்படையில், நேபாள மக்களின் பல்வேறு வர்க்கப் பிரிவுகளை உள்ளடக்கி முழுமையில் அணிதிரண்டு நிற்கின்றது. மக்களால் தன்னை நெருக்கமாக ஆயுதபாணியாக்கி நிற்கின்றது.


உழைக்கும் விவசாயிக்கு நிலங்களை மறுபங்கீடு செய்தல் என்ற ஒரு குடியரசுக்கான ஒரு வேலைத்திட்டத்தின் அடிப்படையில், அதிகாரத்தில் பங்கு பெறமுனையும் சரியான திசைவழியில் செல்லுகின்றனர்.


இப்படி உலகெங்கும் உழைக்கும் வர்க்கம் சந்திக்கும் நேர் எதிரான சொந்தப் படிப்பினைகள், வெற்றி தோல்வி முதல் போராட்டங்கள் அனைத்தும் கற்றுக்கொடுத்து நிற்கின்றது.


மனிதனை மனிதன் பிடுங்கி தின்னுகின்ற இந்த சுரண்டல் சமூக அமைப்பில், மக்கள் மீண்டும் மீண்டும் போராடுவதை தடுக்க முடியாது. அவலம் நிறைந்ததாக இருந்தாலும், உறுதியை உழைப்பின் அடிமைத் தனம் மனிதனுக்கு கற்றுக்கொடுக்கின்றது. உறதி தளராத வர்க்க உணர்வுபெற்ற ஒரு வர்க்கத்தின் தலைமையில், மனித குலம் மீண்டும் மீண்டும் போராடுவதை வரலாற்றில் எதுவும் தடுத்து நிறுத்திவிடாது.


No comments: