பி.இரயாகரன்
05.05.20007
முகம் தெரியாத தோழர் ஒருவர் எம்மை நோக்கி எழுப்பிய கேள்விகளும் பதில்களும், அரசியல் முக்கியத்துவம் கருதி பிரசுரிக்கின்றோம்.
1. புலிகளும் ஆயுதத்தை கீழே போட்டால் என்னாகும்? புலிகளுக்கு பதிலாக தங்களது தீர்வு என்ன?
2. புலிகள் வழி தவறானது என சொன்னால் எனது நண்பன் கேட்கிறான் சரி வேறு என்ன தீர்வு என்று? இந்த கேள்விக்கு என்ன பதில் நான் அளிக்க?
3. புலிகளின் பாசிசம் என்ற விசயத்தை பேச ஆரம்பித்ததும் இந்த கேள்வி வந்தால் என்ன பதில் சொல்லலாம்?
இவைகள் தான் கேள்விகள். ஒன்றுடன் ஒன்று தொடர்புடைய கேள்விகள். புலிகளை விமர்சிக்கும் போது அவர்களை ஆதரிப்போர், தமது அரசியலற்ற சொந்த குருட்டுத்தனத்தை அடிப்படையாகக் கொண்டு திருப்பியடிக்கும் தர்க்கமும் இதுவேயாகும்.
புலிகள் ஆயுதத்தை கீழே போட்டால் என்ன நடக்கும்? இதை நாம் இரண்டு கோணத்தில் பார்க்கமுடியும்.
1. புலிகள் ஆயுதத்தை கீழே போட்டால் தமழ் மக்கள் என்ன செய்வார்கள்? மக்கள் தமது கடந்தகால அவலங்களுக்காக புலிகளை பழிவாங்குவார்கள். இங்கு சாதாரண மக்களைக் குறிப்பிடுகின்றேனே ஒழிய, மக்களுக்கு அரசியல் ரீதியாக துரோகமிழைத்த எந்த துரோக குழுக்களையும் மக்களாக குறிப்பிடவில்லை. புலிகள் தமது வரலாற்றில் மக்களுக்கு இழைத்த கொடூரங்கள், கொடுமைகளை அடிப்படையாக கொண்டே இந்த எதிர்வினைகள் அமையும்.
அதே நேரம் இவற்றைக் கருவாக கொண்ட, உண்மைச் சம்பவங்களை அடிப்படையாக கொண்ட, எழுச்சி பெற்ற மக்கள் இலக்கியங்கள் உருவாகும். புலிகளுக்கும் மக்களுக்கும் இடையிலான முரண்பாடு என்பது, பகை முரண்பாடு தான். மக்களுக்கும் புலிக்கும் இடையிலான உறவுகள், துப்பாக்கி முனையில் தான் நீடிக்கின்றது. துப்பாக்கிகள் இன்றி புலிகள் என்ற அமைப்பு உயிர் வாழவே முடியாத அரசியல் அவலம். அவர்களிடம் எந்த அரசியல் மொழியும் கிடையாது, பாசிசம் ஒன்றேயுள்ளது.
2. புலிகள் ஆயுதத்தை கீழே போட்டால் தமிழ் மக்களின் நிலை என்ன? சிங்கள பேரினவாதம் புலிகளின் கீழ் உள்ள மக்களையும், தனது பேரினவாதப் போக்கில் அடிமைப்படுத்தும். ஆனால் அதை மக்கள் அரசியல் ரீதியாக புரிந்து கொள்ளும் ஆற்றல் அற்றவராக இருப்பர். அதைத்தான் புலிகள் ஏற்படுத்தி வைத்துள்ளனர். யாழ்ப்பாணம் முதல் கொழும்பு வரை வாழும் தமிழ் மக்களின் நிலைமையே, எங்கும் பொதுவில் ஏற்படும். இராணுவ கெடுபிடி படிப்படியாக குறையும்.
தமிழரின் உரிமைகள் எதுவும் வழங்கப்படமாட்டாது. தமிழ் மக்கள் அதைக் கோரப்போவதுமில்லை. தமிழரின் உரிமைகள் என அனைத்தையும் புலிகளே அரசியல் ரீதியாக அழித்துவிட்ட நிலையில், தமிழரின் உரிமை என்னவென்று தெரியாத பாசிச அறிவே தமிழரின் அறிவாகிவிட்டது. தமிழ் மக்கள் தமது சொந்த வாழ்வியல் உரிமைகளையே, புலிகளிடம் இழந்துவிட்டனர். அவையே எதுவென தெரியாத அடிமை நிலையில், பேரினவாதத்திடம் எதைத்தான் புதிதாக கோரமுடியும். ஒருபுறம் தமிழ் மக்களின் உரிமைகள் அனைத்தையும் பறித்துவிட்ட புலிகள், மறுபுறமாக அதை பேரினவாதத்திடமா கோர முடியுமா?
புலிகள் கோரும் உரிமை என்பது அஞ்சி உயிர்வாழ்வது, தமிழன் தமிழனை ஆளுதல் தான். அதாவது புலிகள் தமிழ் மக்களை அடக்கி ஆளுதல். தமிழ் மக்களின் முன்னுள்ள புதிர், ஏன் தமிழன் தன்னை அடக்கி ஆள வேண்டும் என்பதுவே. அரசியல் ரீதியாக தமிழ் மக்களால் புரிந்துகொள்ள முடியாத ஒன்று. மக்களை அரசியல் ரீதியாக புலிகள் தம் பின்னால் அணிதிரட்டவில்லை. அரசியல் இருந்தால் அல்லவா அது நடக்கும். புலிகள் ஆயுத முனையில், பாசிசத்தை அடிப்படையாக கொண்டு மக்களை அடிமைப்படுத்தி வைத்துள்ளனர். மக்கள் புலிகளில் இருந்து அன்னியமாகி, அதுவே இன்று பகை முரண்பாடாகிவிட்டது.
இதனால் புலிகள் ஆயுதத்தை கீழே போடமாட்டார்கள். மக்களைக் கண்டு சதா அஞ்சும் புலிகள், ஆயுதங்களின் மேல் காதல் கொண்ட மனநோயாளராகிவிட்டனர். ஆயுதமே அனைத்துமாகிவிட்டது. அதன் ஆகக் கூடிய உணர்வு சார்ந்த அதன் மொழியோ (பெண்ணைக் குறிக்கும் கெட்ட வார்த்தைகள்) தூசணமாகும். இன்று பணத்தைக் கொண்டு உலகெங்கும் கோலாட்டம் போடுகின்றனர்.
ஆயுதத்தைக் கீழே போடுதல் என்பது புலிகளின் தற்கொலைக்கு ஒப்பானதே ஒழிய, அது மக்களின் அரசியல் தற்கொலையல்ல.
அரசியல் ரீதியாக மக்களை அடக்கியாளுவதை ரசிக்கும் அதிகார வெறிபிடித்தவர்கள், ஆயுதத்தை தானாக ஒருநாளும் கீழே போடுவது கிடையாது. போட்டுவிட்டால் என்று விவாதிப்பது, விமர்சனத்தை குறுக்கு வழியில் தவிர்ப்பதற்காகத் தான்.
ஆயுதத்தை தானாக கீழே போடாத ஒரு கற்பனை விடையத்தைப் பற்றி விவாதிப்பதன் நோக்கம், பாசிசத்தை நியாயப்படுத்தத்தான். ஏன் புலிகளின் பாசிசத்தை நிறுத்தக் கோரி விமர்சிக்காமல், விமர்சிக்கின்றவர்களைப் பார்த்து ஆயுதத்தை கீழே போட்டால் என்று விவாதிக்கின்றனர். இது உண்மையில் மக்களின் மேலான பாசிச புலி நடத்தைகளை தக்கவைப்பதாகும். மாற்றத்தை விரும்பாத, மக்களின் உரிமைகளை அங்கீகரிக்க மறுக்கும் கற்பனையான எடுகோளில் நடத்தும் விதண்டாவாதம்.
மக்களைச் சுரண்டித் தின்னும் அதிகார வர்க்கங்கள், தமது சொந்த வர்க்க நலனுடன் தான் அனைத்தையும் கையாளும். வர்க்க நலன்களை அடிப்படையாக கொண்டு தான், பாசிச சக்திகள் இயங்கும். இதற்கு இசைவாகத்தான் ஆயுதத்தை பற்றிய முடிவை எடுக்கும்.
பதிலாக என்ன தீர்வு? தீர்வு எப்போதும் எங்கும் மக்களின் நலனை அடிப்படையாக கொண்ட மாற்றுப் போராட்டம் தான். மக்களுக்கு வெளியில் விடுதலைப் போராட்டம் என்பது பொய்யானது. மக்கள் தமக்காக, தமது சொந்த விடுதலைக்காக போராடுவது தான் போராட்டம். இதை மறுக்கும் புலிகள் தமது ஆயுதத்தை கீழே போட்டால், மக்கள் தமது விடுதலையின் ஒரு படியை எட்டுவர். புலிகளின் கையில் உள்ள ஆயுதம் தான், மக்களின் உண்மையான விடுதலைப் போராட்டத்தை தடுக்கின்றது என்பது உண்மையல்லவா. புலிகளின் ஆயுதம் சிங்கள பேரினவாதத்தை புலிகளின் சொந்த நலனில் இருந்து எதிர்க்கின்ற அதேநேரம், தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தையும் அது எதிர்க்கின்றது.
புலிகளின் ஆயுதம் ஏந்திய வன்முறையும், அதனை நியாயப்படுத்தலும் மக்களுக்கு எந்த விடுதலையையும் பெற்றுத் தருவதில்லை. தமிழ் மக்களின் எஞ்சிக்கிடக்கும் உரிமைகளையே புலிகளும் பேரினவாதிகளும் சேர்ந்து அழிக்கின்றனர். இந்த வகையில் அதை நாம் ஆதரிக்க முடியாது. மாறாக கீழ் இருந்து மக்களை அரசியல் ரீதியாக அணி திரட்டுவது தான் மாற்று வழி. இதை விட தமிழ் மக்களுக்கு நன்மை பயக்கக் கூடிய எந்த மாற்று அரசியல் வழியும் கிடையாது.
இது சாத்தியமா? இதுவும் புலிகளும் புலி அல்லாத புலியெதிர்ப்பாளர்களும் எழுப்பும் கேள்விதான். இந்த இரு பிரிவுகளின் அரசியல் நோக்கமும், தமது வர்க்க நலனில் இருந்து மக்களை கீழே இருந்து தட்டியெழுப்பும் போராட்ட வழியை நிராகரிப்பது தான்.
மக்களுக்கான எந்தப் போராட்டமும், எவ்வளவு தான் நெருக்கடிகள் இருந்தாலும் கீழ் இருந்து தான் கட்டமுடியும். மக்களுக்கு வெளியில் மக்களுக்கான போராட்டங்கள் வீங்கி வெம்பி வெடிப்பதில்லை. மக்கள் தமக்காக தாமே போராடவேண்டும். மக்களின் சொந்த விடுதலைப் போராட்டம் என்றால், அப்படித் தான் அமையும். இந்த அரசியலை எடுத்துச் செல்வது தான் சரியான அரசியல்.
இதை விடுத்து மற்றொரு பிரதானமான எதிரியைக்காட்டி மறுபுறத்தில் பாசிசத்தை ஆதரிக்க முடியுமா? முடியாது. பாசிசம் என்பது ஒடுக்கப்பட்ட மக்களின் மேலான, சுரண்டு வர்க்கத்தின் அதிவுயர்வான ஒடுக்கும் ஒரு சுரண்டல் கருவி. மக்களுக்கு எதிரான, அவர்களை அடிமைப்படுத்துகின்ற எதையும் ஆதரிக்க முடியாது. நாங்கள் மக்களுடன் நிற்கப் போகின்றோமா? அல்லது மக்களை அடக்கும் பாசிட்டுகளுடன் நிற்கப் போகின்றோமா? அடுத்து இரண்டு பாசிச சக்திகள் தமது சொந்த நலனுக்காக மக்களை அடிமைப்படுத்தியபடி, மோதிக் கொள்வதில் நாம் எந்தப் பக்கம் என்று கேட்பது அறிவுள்ள கேள்வியாக அமையுமா? நாங்கள் மக்கள் பக்கத்தில் நின்று, இரண்டு பாசிசத்தையும் எதிர்க்கும் அரசியல் நேர்மை எமக்கு உள்ளதா என்று உரசிப் பார்க்க வேண்டும்.
பாசிசத்தை எதிர்த்துப் போராட வேண்டும். மக்களின் அரசியல் பொருளாதார நலனுக்காக போராட வேண்டும். மக்களுக்கு வெளியில் உள்ளவற்றை எல்லாம், ஏன் நாம் ஆதரிக்க வேண்டும்?
புலிகள் ஏன் மக்களுக்காக போராடக் கூடாது? இதை ஏன் பொதுவில் நாம் கேட்பதில்லை.? அதை செய்யக் கோரிய அரசியல் விமர்சனம் தான், சரியான மக்கள் போராட்டத்தை எடுத்துக் காட்டும், சரியான போராட்டத்தை தெளிவுபடுத்தும். இதை சுயமாக செய்வது தான் நேர்மையான அரசியல். இதன் போது சரியான போராட்டத்தை அடிப்படையாக கொண்ட சுயமான அணிதிரட்டல் நிகழும். மறுபக்கத்தில் புலிகளிலும், துரோகக் குழுக்களிலும் உள்ள மக்களின் விடுதலையை நேசிக்கும் பிரிவை, மக்களின் விடுதலைக்கு எதிரான சக்திகளுக்கு எதிராக அணிதிரட்டும். மக்களுக்கான போராட்டம் உள்ளிருந்தும், வெளியிருந்தும் நடப்பதற்கு ஏதுவாக, மக்களின் விடுதலைப் போராட்டத்தை சரியான அரசியல் பொருளாதார ரீதியில் வெளிப்படுத்துவது இன்றைய வரலாற்றுக் கடமை.
No comments:
Post a Comment