சபேசன் - கனடா
பூமிப்பந்தின் மேலோட்டினை மற்றைய உயிரினங்களுடனான போட்டியில் மனிதன் என்னும் இனம் ஆளுகைக்குட்படுத்தி விட்டது. மனித இனங்கள் தங்களிடையே ஏற்படுத்திய போட்டியில் பல வகையான அரசியல் பொருளாதார சித்தாந்தங்களை உருவாக்கின. இவற்றில் வெற்றிபெற்றிருப்பது இப்போதைக்கு முதலாளித்துவ ஜனநாயகப் பொருளாதாரமாகவே தோற்றம் பெறுகின்றது.
இன்று உலகம் எதிர் கொள்ளும் அதி மிக முக்கிய பிரச்சனையான இந்த சுற்றுப்புறச் சூழல் மாசடைதல் என்பது அபாயகரமான எல்லை புள்ளியில் நின்று எதிர்கால சந்ததியை பயமுறுத்திக் கொண்டிருக்கின்றது.
இதனது அபாயம் ஆண், பெண், வயோதிபர், குழந்தைகள், மேல்சாதி, கீழ்சாதி, கறுப்பு, வெள்ளை, தொழிலாளிகள், முதலாளிகள் என்று எல்லாத் தரப்பினரையும் பாதிக்கின்றது. இந்த ஆபத்திலிருந்து எவரும் தப்ப முடியாது.
இது தெளிவாகத் தெரிந்திருந்தும் இன்று ஆதிக்கத்திலிருக்கும் நவீன முதலாளித்துவ ஜனநாயகத்தினால் இதனை கட்டுப்படுத்த முடியுமா?
இந்த சூழல் மாசடைதல் என்ற பாரிய அபாயத்தினை தற்போதைய மேற்கத்தைய நாடுகளில் பலகட்சி ஆட்சிமுறையின் கீழ் நான்கு வருடத்திற்கோ அல்லது ஜந்து வருடங்களிற்கோ ஒருமுறை ஆட்சி பீடமேறும் முதலாளித்துவ ஜனநாயகக் கட்டமைப்பினால் சூழல் மாசடைதல் பிரச்சனைக்கு சரியான அல்லது நிரந்தரமான தீர்வு தேடமுடியுமா என்பதே இக்கட்டுரையின் நோக்கம்.
நிலம், நீர், காற்று என்ற பூமியின் மூன்று முக்கிய அடிப்படைகளை மீண்டும் புனரமைப்பு செய்யமுடியுமா? என்ற அளவிற்கு இந்த மாசடைதல் பாதிக்கப் பண்ணிவிட்டது.
இதன் இரண்டு பிரதான காரணிகளாக பெருந்தொழிற்சாலைகளும் போக்குவரத்து சாதனங்களும் தான் இந்த சூழல் மாசடைதலின் 75 வீதத்திற்கு மேல் காரணமாகின்றது. பெரும் தொழிற்சாலைகள் வெளியேற்றும் புகைமண்டலம், இரசாயன திரவக் கழிவுகள், பக்கவிளைபொருட்கள், போன்றனவும், நீண்டநேரம் பயணிக்கும் அவசியமற்ற ஆடம்பர வாகனங்கள், பாரிய கனரக வாகனங்கள் வெளியேற்றும் வாயுக்கள் புகைமண்டலத்தை மட்டுமல்லாமல் அவை நிலத்திற்கடியில் இருக்கும் மசகுப் பொருளை குறைத்துக்கொண்டே செல்கின்றன.
இப்படியான இன்னோரன்ன ஆபத்துக்களின் தர்மகர்த்தாக்கள் யாரென்று பார்ப்போமாகில் எமது வாழ்வியலின் ஆனந்தப் பரவசத்தை எட்டப்பண்ணுகின்ற "நுகர்வுப் பொருளியல்" (Materialism) மனோபாவமும். இதனை திட்டமிட்டு மக்களிடையே உருவாக்கிய முதலாளித்துவக் கலாச்சாரமும்தான்.
சிறிய உதாரணம், எமது உடலின் ஆரோக்கியத்தினை வலுப்படுத்த வேண்டுமானால் ஒரே ஒரு சரியான வழியும் அதேநேரம் கடினமான வழியுமான ஒன்று உடற்பயிற்சி மட்டும்தான். இதற்கு மாற்று வழியோ இல்லை குறுக்கு வழியோ கிடையாது.
இதே போன்று அன்மையில் BBC யில் வெளிவந்த விஞ்ஞானிகளின் குழுவொன்றின் அறிக்கையின் படி எங்கள் "வாழ்க்கை முறையை" மாற்றாவிட்டால் சூழல் மாசடைதலை நிறுத்தவே முடியாது. நாம் எமது எதிர்கால சந்ததிக்கு பழுதடைந்த பூமியைத்தான் விட்டுச்செல்கின்றோம். இதனை தீர்ப்பதற்கு எந்த குறுக்கு வழியோ சுகமான முறைகளோ கிடையாது. இந்த "வாழ்க்கை முறை" என்பதன் அர்த்தம் மக்களிடையே நுகர்வு கலாச்சாரம் ஏற்படுத்திய ஆடம்பர வாழ்க்கை முறைதான்.
சூழல் மாசடைதல் பற்றிய கருத்தியல் தாற்பரியம் சாதாரண மக்களிடையே தேவையான அளவு ஊக்கப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு நல்ல உதாரணம் ரொறன்ரோவில் பச்சை, நீல நிறங்களிலான "கழிவுப் பொருட்களிற்கான" பிளாஸ்ரிக் கென்டைனர்களின் உபயோகத்தின் ஆரம்பம்.
பெரும்பாலோரின் அபிப்பிராயம், ரொறொன்ரோவின் அவசர வாழ்க்கையோட்டத்தில் சனங்கள் இதுகளை சரிவர கவனிக்கப் போவதில்லை. இந்தத்திட்டம் வெற்றியடையாது என்றே எண்ணினார்கள். ஆனால் எவருமே எதிர்பாராத அளவிற்கு இது 150 வீதம் வெற்றியடைந்தது. எனவே சராசரி மக்கள் எப்பொழுதும் மாசடைதல் பற்றி விழிப்பாகவே இருக்கின்றனர் என்பது உண்மை. பாலர் பாடசாலைகளில் ஆரம்பித்து பல்கலைக்கழகங்கள் வரையில் மாசடைதல் பற்றிய விழிப்புணர்வு ஊட்டப்படுகின்றது. அதே நேரம் பாரிய தொழிற்சாலைகளாலும், கனரக வாகனங்களினாலும் சூழல் மாசடைகின்றது என்றும் கற்பிப்பார்கள. ஆனால் இவற்றுக்கெல்லாம் அடிப்படை நியதியாக இந்த பொருளாதார, வர்க்க அமைப்புமுறை என்பதை மட்டும் இலகுவாக மறந்து விடுகிறார்கள்.
ஆனால் கனடாவிலோ அல்லது ரொறன்டோவிலோ ஆட்சி மாறும் அரசியல்வாதிகளால் "பெருந்தொழிற்சாலைகளின் கழிவு சுத்திகரித்தல்" பற்றிய திட்டத்தில் மிகச்சிறிய அளவிலான மாற்றங்களை கூட கொண்டுவர முடியவில்லை. காரணம் பெருந் தொழிற்சாலைகளின் தலைவர்களை பகைத்து இலகுவாக வெற்றிகொள்ள முடியாது.
இன்னுமோர் உதாரணம், இந்தியாவில் ஒரு பாரிய நெசவாலையின் கழிவுகள் தமக்கு அண்மையிலுள்ள நன்னீர் விவசாய பிரதேசங்களை நிரந்தரமாக மாசடையப்பண்ணிவிட்டது. இந்திய காங்கிரஸ் அரசு நீதிமன்றங்களின் ஊடாக பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நட்டஈடு வழங்குமாறு நெசவாலையின் முதலாளிகளுக்கு உத்தரவிட்டது. ஆனால் இறுதியாக இந்த உத்தரவினை வாபஸ் வாங்கிவிட்டது. காரணம் "ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழக்க நேரிடும்" என்று நெசவாலை நிர்வாகம் இந்திய அரசையே மிரட்டியதுதான் காரணம்.
நிதர்சனமான ஒன்று "தொழிலதிபர்களின் கைகளில்தான் அரசநிர்வாகம்"
இங்குள்ள இன்னுமொரு உண்மைப் பக்கத்தை புரிந்து கொள்ள வேண்டுமானால் "கவர்ச்சிகரமான நுகர்வுப் பொருளாதார" முறையை மாற்றாவிட்டால் வேறு வழியில்லை என்பதே இதன் அர்த்தம். இந்த நுகர்வுப் பொருளாதார முறை என்பது தங்கியிருப்பதே இன்றைய முதலாளித்துவ ஜனநாயகக் கட்டமைப்பில்தான். காரணம் மேற்கத்திய நுகர்வுப் பொருளாதாரத்தின் அடிப்படையே போட்டி வியாபாரம்தான். இந்தப் போட்டி வியாபாரத்தில் ஒரு வியாபாரி சிறிது தயங்கினாலும் அடுத்த ஆறுமாதகாலத்திற்குள் அவர் இல்லாமல் போய்விடுவார்.
ஒரு தயாரிப்பு புதிதாக உருவாகலாம், என்பது வேறு விடயம். ஏற்கனவே புழக்கத்திலிருக்கும் ஒரு பாவனைப் பொருளுக்கு புதிய வர்ணம், புதிய labels புதிய அளவு (30 வீதம்) போனஸ், கவர்ச்சிகரமான புதிய வடிவம் என்று ஒரு போலியான புதிய வடிவத்தை ஏற்படுத்தி செயற்கையான போட்டியை உருவாக்குகின்றது இன்றைய நவீன முதலாளித்துவம். இதற்காக பாரிய தொகை பணத்தை வாரியிறைப்பதுடன் இந்த செயற்கையான முதலாளித்துவப் போட்டிக்காக பெருமளவிலான மூலப்பொருட்களை பூமியின் மேலோட்டிலிருந்து பெற்று அழித்துக்கொண்டிருக்கிறது.
இந்த செயற்கைப் போட்டிக்காக பெருந்தொழிற்சாலைகள் சூழலை மாசடையச் செய்வதில் 70 வீதத்திற்கும் அதிகமான மாசடைதலை செய்கின்றன.
இத்தகைய போட்டி வியாபாரம் இல்லாவிட்டால் யாரும் முதலாளிகளாக வளரமுடியாது.
ஒரு நாட்டின் ஏன் இந்த உலகத்தின் அரசும், அரசியலும் தங்கியிருப்பது இந்த முதலாளிகளின் பொருளாதாரத்தில்தான்.
ஆகவே இந்த முதலாளிகளின் செயற்கை போட்டிக்காக, அதாவது நடைபெறும் மூலதனப் பெருக்கத்திற்காக நடைபெறும் அனாவசியமான (Raw matirials) மூலப்பொருட்களை அழிக்கும் விடயத்தை இன்றைய முதலாளித்துவ அரசியல் கட்டுமானத்தால் தடுக்கமுடியாது.
இதற்கு நல்ல உதாரணம், நான் வேலை பார்க்கும் நிறுவனத்தில் Skin Lotion தயாரிக்கப்படுகிறது. மூன்றே மூன்று அடிப்படை தயாரிப்புக்கள்தான் உள்ளன. எந்தவிதமான வித்தியாசமும் இல்லை. ஆனால் இவை 48 வித்தியாசமன Tubes களில் அடைக்கப்படுகின்றன. இந்த Skin Lotion களின் தயாரிப்புக்கான செலவுகளைப் போன்று 4 மடங்கு செலவு இந்த 48 வித்தியாசமான Tubes களிற்கு வேவைப்படுகிறது. அளவுகள் வேறு, வடிவங்கள் வேறு, வண்ணங்கள் வேறு, போனஸ் வேறு.
இந்த Skin Lotion மனிதர்களுக்கு தேவைதான். ஆனால் 48 விதமான Tubes களுக்கு செலவாகும் மூலப்பொருட்கள்தான் இந்த ஜனரஞ்சக பொருளாதார கலாச்சாரத்திற்கு தேவைப்படுகின்றது. அதுவும் 6 மாதங்களிற்கு ஒரு முறை இவை எல்லாவற்றையும் மாற்ற வேண்டும். இன்றைய நவீன முதலாளிகளுக்கு இவற்றை செய்யாவிட்டால் வேறு வழியில்லை. இவற்றை தவற விட்டால் இன்னுமொரு முதலாளித்துவ முதலை இவர்களையும் விழுங்கி ஏப்பம் விட்டுவிடும்.
இவற்றை விடவும் முக்கியமான விடயம் வளர்ச்சியடைந்த நாடுகளில் இருக்கின்ற "குவியப்படுத்தப்பட்ட நகரஅமைப்பு முறை."
வேலைக்காக, ஒரு அரசாங்க கிராமிய நகர அலுவலக நிர்வாம் தொடர்பாக மக்களுக்கு தேவையான விடயங்களுக்கு தூர கிராமங்களிலிருந்து நகரங்களை நோக்கி வரவேண்டிய நிர்ப்பந்தம் இருக்கிறது. காரணம் பெருந் தொழிற்சாலைகளும் அலுவலகங்களும் ரொறொன்ரோ போன்ற நகரங்களிலிருப்பதால் தூர இடங்களிலிருந்தும் நகரத்தை நோக்கியே மக்கள் வரவேண்டி உள்ளது.
இதற்கு மாற்றாக, சூழல் மாசடைதலை தடுக்கக்கூடிய முறையானது, "பரவலாக்கப்பட்ட நகர அமைப்பு முறை".
கல்வி, அரச, நகர, நிர்வாக அலுவலகங்கள், போன்றனவற்றை இந்த "பரவலாக்கப்பட்ட நகர அமைப்பு முறை" க்குள் உள்ளுர் அரசினாலும் தேசிய அளவிலான அரசியல்வாதிகளாலும் உருவாக்கமுடியும்.
ஆனால் வேலைவாய்ப்பு என்பது தங்கியுள்ள பெரும்தொழிற்சாலைகளை இந்த "பரவலாக்கப்பட்ட நகர அமைப்பு முறை" க்குள் கொண்டுவரமுடியாது. காரணம் பெரும் தொழிற்சாலைகள் இந்த "குவியப்படுத்தப்பட்ட நகரஅமைப்பு முறை" க்குள் மட்டும்தான் பெரும் லாபத்தினையும் மூலதனத் திரட்சியினையும் பெறமுடியும்.
இரண்டாம் உலக மகா யுத்தத்தின் பின்னர் பெரும்பாலான நகரங்களை முற்றாக இழந்த ஜேர்மனியில் பரவலாக்கப்பட்ட நகர அமைப்புமுறை சில மாநிலங்களில் காணமுடியும். காரணம் மற்றைய நாடுகளுடன் பார்த்தால் ஒப்பீட்டளவில் பிற்பட்ட காலங்களில் நகரங்களை அமைத்ததினால் அவ்வாறு ஏற்பட்டன. அங்கே நாங்கள் அரச நிர்வாக, கல்வி, போன்ற விடயங்களிற்காக நீண்ட தூரப்பயணங்களை மேற்கொள்ள வேண்டிய கட்டாயமில்லாத போதிலும் பெரும்தொழிற்துறைசார் விடயங்களில் "குவியப்படுதத்தப்பட்ட நகர" முறைதான் கைக்கொள்ளப்படுகின்றது.
சிலரது வாதம், நவீன தொழில் நுட்பம் இவற்றுக்கெல்லாம் தீர்வு வைத்துவிடும் என்று. ஒரு போதும் இல்லை,
இதற்கு நல்ல உதாரணம் இந்தியா, பிறேசில் போன்று வளர்ந்து வரும் நாடுகளில் நவீன தொழில் நுட்பம், தகவல் தொழில்நுட்பம, இயந்திரவியல் தொழில்நுட்பம் போன்றவை பாரிய வளர்ச்சியை எட்டி, நாட்டின் பொருளாதாரத்தினை பெருகச்செய்த போதிலும் எதிர் வினையாக பட்டினியால் இறக்கும் மக்களின் எண்ணிக்கை மேலும் மேலும் அதிகரிக்கிறதே? ஏன்?
ஏனெனில் குறிப்பிட்ட வர்க்கத்தினருக்குத்தான் இந்த "நவீன தொழில் நுட்பம்" சேவை செய்யும் வகையில் அமைக்கப்பட்டிருக்கிறது.
இதனை சாத்தியமாக்குவது எப்படி என்று பார்த்தால் "நுகர்வுப் பொருளாதாரம், முதலாளித்துவ கட்டமைப்பு" என்பவற்றை இல்லாதொழிப்பதுதான்.
இவை பிரம்மாண்டமான ஒரு சாத்தியமல்லாத விடயத்தை கதைப்பதாக தோன்றினாலும் வேறு எந்தவிதமான குறுக்கு வழிகளோ அல்லது மந்திர தந்திரமோ எதும் கிடையாது.
No comments:
Post a Comment