தமிழ் அரங்கம்

Monday, June 11, 2007

புலியை இந்த அரசு தான் பாதுகாக்கின்றது.

தமிழ் மக்களா புலியை பாதுகாக்கின்றனர் எனின் இல்லை, இந்த அரசு தான் பாதுகாக்கின்றது.

பி.இரயாகரன்

12.06.2007



ரசியலில் உள்ள பலருக்கு இது புரிவதில்லை. உண்மையில் இனச்சுத்திகரிப்பு என்பது பேரினவாதத்தின் கொள்கையாகும். கொழும்பில் புலிகளின் இருப்புக்கு காரணம் இந்த அரசு. இனப்பிரச்சனையை தீர்த்தால், புலிகளின் இருப்பு என்பது சாத்தியமில்லை. இதற்கு தடையான இந்த அரசை அல்லவா, நாம் விரட்டி அடிக்க வேண்டும்.



மாறாக இனச் சுத்திகரிப்பு என்பது, தமிழ் மக்களை கொலைக்களத்துக்கு அனுப்புவது தான்.



1. புலியல்லாத பிரதேசத்து மக்களை வலுக்கட்டாயமாக புலியின் இராணுவத்தில் திணிப்பதாகும்.



2. இதில் இருந்து தப்ப, அரசுடன் இயங்கம் துரோக கூலிக் குழுக்களில் நிர்ப்பந்தித்து இணைப்பதாகும்.



இதற்கு வெளியில் வாழ்வதற்கு ஏற்ற சூழல் அனைத்தையும், புலிகளும் அரசும் மறுக்கின்றது. உண்மையில் இந்த இரு கொள்கையும் தான் அமுலில் உள்ளது. தமிழ் மக்களின் பரிதாபகரமான வாழ்க்கை இதற்குள்ளாகவே அமைகின்றது. இதை தீவிரமாக்க விரும்பிய அரசு, இனச் சுத்திகரிப்பை முன்னெடுக்கின்றது.



இந்த நிலையில் கொழும்புச் சம்பவத்துக்கு பேரினவாத அரசு மன்னிப்பு கோரியுள்ளதாம். நல்ல அரசியல் வேடிக்கை. போலித்தனமானதும், ஊரையும் உலகத்தையும் ஏமாற்றுகின்ற அரசியல் நாடகம். கொழும்புச் சம்பவத்தின் பின்னால் இருந்த அரசியல் என்ன? காலாகாலமாக தமிழ் மக்கள் மேலான, பேரினவாத அரசியல் நடைமுறையின் ஒரு அங்கம் தான் கொழும்புச் சம்பவம். இன்று இதற்கு தலைமை தாங்கும் சிறிய பாசிச குழுவே, இதை வழிநடத்தியது. இது இன்று அம்பலமாகியுள்ள நிலையில், மன்னிப்பு என்பது வெறும் நாடகம். பேரினவாத நிலையே தான் இச்சம்பவத்துக்கு காரணமாக இருக்க, வெறும் சம்பவத்துக்கு மட்டும் மன்னிப்பு கோருவது என்பது பேரினவாத சூழ்ச்சி தான்.



இன்று இலங்கையில் என்றுமில்லாத அளவுக்கு, இரு பாசிச குழுக்களின் உச்சக்கட்ட அதிகாரத்துக்குள் மக்கள் பிய்த்து எடுக்கப்படுகின்றனர். ஒவ்வொரு மக்களும், அவர்களின் விருப்பத்துக்கு மாறாக அடையாளப்படுத்தப்படுகின்றனர். மொத்தத்தில் சிறிய பாசிச குழுக்களின் பிடியில், மக்களின் தலைகள் போட்டுடைக்கப்படுகின்றது. ஒருபுறம் ராஜபக்ச தலைமையிலான பாசிச குழு, மறுபக்கம் பிரபாகரன் தலைமையில் உள்ள சிறிய பாசிசக் குழு. பாசிசத்துக்கு புதிய வரலாறு அவரவர் மொழியில் எழுதுகின்றனர். மக்களின் அவலத்துக்கு வடிகால் கிடையாது.



புலிகள் வலிந்து சண்டையை தொடங்கிய போது இருந்த நிலை ஒருபுறம். மகிந்த ஆட்சிக்கு வந்த பின் சண்டை தான் வழி என்று கூறிக்கொண்டு நடத்துகின்ற வெறியாட்டம் மறுபுறம். ஒட்டுமொத்தத்தில் எங்கும் வெறி கொண்ட இராணுவ தயாரிப்புகள். இதற்கு ஏற்ப கடத்தலும் படுகொலைகளும். மக்களை இதற்குள் பலியாகின்றனர். மக்களின் சொந்த அபிப்பிராயங்கள் மிதிக்கப்பட்டு, அங்குமிங்குமாக சீரழிக்கப்படுகின்றது. மக்கள் விரும்புவதோ அமைதியையும் சமாதானத்தையுமே. இதை மறுப்பவர்கள் யார்?



1. புலிகள்

2. பேரினவாத அரசு



மக்களின் விருப்பத்தை மறுப்பதில் உள்ள வக்கிரம் தான், இவர்களின் பாசிச அரசியல். மக்களின் ஒற்றுமைக்கும், ஜக்கியத்துக்கும் வேட்டு வைக்கின்றது இவர்களின் சுயநல இராணுவ வெறியாட்டங்கள்.



இப்படிப்பட்ட நிகழ்ச்சிகளில் ஒன்றுதான் கொழும்புச் சம்பவம். இது ஒரு இன சுத்திகரிப்பு. இனக்கலவரம் முதல் அனைத்தும் மக்களுடன் மக்களாக வாழ முடியாதவர்களின் ஈனத்தனம் தான்.



இதில் தமிழருடன் ஒரு நாட்டில் ஒன்றாக வாழமுடியாது என்பதை, மறுபடியும் கூறுவது என்பதற்கு பேரினவாதத்தின் இருப்புத்தான் காரணம். அன்று புலிகள் முஸ்லீம் மக்களை தமிழ் மக்கள் என்று கூறியபடி வெளியேற்றவில்லையா! மக்களுடள் மக்களாக வாழ அஞ்சும் கோழைகளின் வெறியாட்டங்கள் தான் இவைகள்.



இன்று கொழும்பில் இருந்து வெளியேற்றிய நிகழ்வு, தமிழர்கள் தனித்து பிரிந்து வாழ்வதைத் தவிர வேறு வழியில்லை என்பதையே கூறுவதாகும். புலிகள் மறுபக்கத்தில் இருக்கின்றார்கள் என்பதால், இது பொய்யாகிவிடுவதில்லை. தமிழ் மக்கள் மேலான ஒடுக்குமுறை என்பது, சாதாரண அடிப்படை மனித உரிமையை மறுப்பதில் இருந்தே தோன்றுகின்றது.



பேரினவாத தர்க்கத்தையும், நடைமுறையையும் புலிகளின் பெயரால் செய்கின்றனர். இன்று அனைத்தையும் புலிகளைச் சொல்லி செய்வதும், அதை சொல்லி நியாயப்படுத்துவதும், பேரினவாதத்தின் வால்களாக இருப்பதும், அரசியல் போக்கிடமற்றவர்களின் சூழ்ச்சியாகின்றது.



புலிகள் தமிழ் மக்களின் உரிமைகளை மறுக்கின்றார்கள் என்பதால், தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகள் பேரினவாதிகளால் மறுக்கப்படுவதை நியாயப்படுத்தி விடமுடியுமா!



கொழும்பு வெளியேற்றம், புலிகளின் கொழும்புத் தாக்குதல் தான் இதை உருவாக்கியது என்ற காரணங்கள் மூலம் புலியை சிலர் விமர்சிக்க முடியாது. அரசியல் ரீதியாக புலி அரசியலைக் கொண்டவர்களின் எதிர் நிலைவாதம், இப்படித்தான் கட்டமைக்கப்படுகின்றது. அரசியல் ரீதியாக புலிகளை விமர்சிக்க முடியாது போனவர்களின் நிலை இது. ஒரு போராட்டம், அதன் தாக்குதல் வடிவங்கள் என்ற எல்லைக்குள், எங்கும் தாக்குதல்கள் நடந்தேயாகும். இதைக்கொண்டு அரசை நியாயப்படுத்துவது, தமிழ் மக்களை பற்றி அக்கறைப்படுவதாக நடிப்பது எல்லாம் அரசியல் அற்பத்தனமாகும்



புலிகளின் தாக்குதல் பற்றிய மதிப்பீடுகள் என்பது, புலிகள் மக்கள் பற்றி கொண்டுள்ள அரசியல் நிலை சார்ந்தது. இதில் இருந்து தான் விமர்சிக்க முடியும். அதற்கு அரசியல் வக்கு கிடையாது.



1. இன்று தமிழ் மக்கள் யுத்தத்துக்கு பதில் அமைதியை, சமாதானத்தை வேண்டி நிற்கின்றனர். அதை மறுக்கின்ற புலி அரசியலை விமர்சிக்க வேண்டும். இந்த வகையில் தாக்குதல் விளைவுகளை அரசியல் ரீதியாக, தமிழ் மக்களின் நலனை முன்னிறுத்தி விமர்சிக்க வேண்டும்.



2. இது போன்ற தாக்குதல்களின் பின்னணியில் மக்கள் நலன்கள், அரசியல் நலன்கள் எதுவும் தமிழ் மக்கள் சார்ந்து இருப்பதில்லை. இதை தெளிவுபட அரசியல் பொருளாதார ரீதியாக சுட்டிக்காட்ட வேண்டும்.



3. புலிகள் தமது குறுகிய குழுவின் சொந்த அரசியல் நலனுக்காவே இதை செய்கின்றனர் என்பதை தெளிவுபடுத்தவேண்டும்.



4. புலிகள் இதுபோன்ற தாக்குதலின் போது, மக்களின் அவலங்களையிட்டு அக்கறைப்படுவதில்லை. இதை அம்பலப்படுத்த வேண்டும். மக்களின் அவலங்கள் எப்படி ஏன் அதிகரிக்க்pன்றது என்பதை அரசியல் ரீதியாக அம்பலப்படுத்த வேண்டும்.



இதைவிடுத்து புலியின் தாக்குதல் தான் காரணம் என்பது அரசியல் கோமாளிகளின் கூத்தாகும். சரி புலிகள் ஏன் தாக்குதல் நடத்துகின்றனர் என்றல்லவா ஆராய வேண்டும். இப்படிப் பார்த்தால் தமிழ் மக்களின் பிரச்சனைகளை தீர்க்காமையல்லவா காரணமாகும்.



தமிழ் மக்களின் பிரச்சனைகளை அரசியல் பொருளாதார ரீதியாக முன்னெடுக்காத புலியின் பாசிச நடத்தைகளை அம்பலப்படுத்தவேண்டும். இதுதான் மக்கள் பற்றி கொண்டுள்ள அரசியல் கருசனை. இன்று சிங்கள பேரினவாதம், இனப்பிரச்சனையை தீர்க்க மறுப்பது அல்லவா அனைத்துக்குமான காரணம். அதை புலிகள் கோர மறுப்பதும் மற்றொரு காரணமல்லவா.



இன்று புலிப் பாசிசத்தின் இருப்பு, தமிழ் மக்களின் உரிமையை மறுப்பதில் தான் உள்ளடங்கியுள்ளது. இதை சிங்கள பேரினவாதமாகட்டும், புலி பாசிட்டுகள் ஆகட்டும், இதுவே இரண்டுக்கும் பொருந்தும். தமிழ் மக்களின் உரிமையை மறுப்பது தான் புலிப் பாசிசத்தின் இருப்பாகும்.



யுத்தத்தின் மூலம், இராணுவ வழிகளில், பிரச்சனையை தீர்க்க முனைகின்ற நிலை தான், கொழும்புச் சம்பவம். புலிகள் பேரினவாதத்தின் செல்லக் குழந்தை. பேரினவாதம் என்ற தாய் இல்லை என்றால், புலிகள் இல்லை. இது எல்லோருக்கும் தெரிந்த, அரசியல் ரீதியான உண்மை.



இந்த நிலையில் எல்லாத் தமிழர்களும் புலிகள் என்ற அடிப்படையில் தான், கொழும்புச் சம்பவம் அரங்கேறியது என்பது வெட்கக்கேடானது. அவர்கள் கூறிய காரணமோ நகைச்சுவையானது.



1. தமிழர்கள் காரணம் எதுவும் இன்றி கொழும்பில் இருக்கின்றனராம்.



2. அவர்களின் சுயவிருப்பின் அடிப்படையில் வெறியேற்றப்பட்டனராம்.



புலிகள் அன்று முஸ்லீம் மக்களை வெளியேற்றிய போது, அவர்களின் பாதுகாப்புக்காக அவர்களின் உழைப்பைத் திருடிய பின் வெளியேற்றியதாக கூறியவர்கள். இதுபோல, இந்த பாசிசமும் தலைவிரிகோலமாகவே தன்னை விளக்கியது. பேரினவாதத்தில் பொதிந்து காணப்படும் பாசிசத்தின் நகைச்சுவையே இதுதான். அண்ணளவாக 10 முதல் 15 இலட்சம் தமிழ் மக்கள் கொழும்பில் வந்து வாழ்வதற்குரிய காரணங்கள் கட்டாயம் வைக்க வேண்டும் என்று கோருதென்பது கேடுகெட்ட தனமாகும். பேரினவாதத்தை ஏன் எதற்கு ஒரு கோமணமாக கட்டி வைத்துள்ளீர்கள் என்று, முதலில் நாட்டு மக்களுக்கு கூறுங்கள். இதை விடுத்து தமிழ் மக்களிடம் கோருவது என்பது கோமாளித்தனமாகும். பேரினவாத அரசின் கொள்கை தான், தமிழ் மக்கள் இவ்வளவு தொகையாக கொழும்பில் வந்து வாழக் காரணமாகும். காரணமே நீங்களாக இருக்க, அதை தமிழ் மக்களிடம் கோருவது, பின் சம்பவத்தை வீழ்ந்தடித்துக் கொண்டு ஆளுக்காள் கண்டிப்பதும் அயோக்கியத்தனம்.



1. அதிக அளவில் தமிழர்கள் கொழும்பில் வந்து வாழ்வதற்குரிய முதல் காரணமே யுத்தம் தான். யுத்த நெருக்கடிகளில் இருந்து தப்பவே இதுவே போதுமான காரணமாகும்.



2. புலிப் பாசிசத்தின் எல்லைக்குள் வாழ முடியாத தமிழ் மக்கள், பெருமளவில் அங்கிருந்து தப்பி வருகின்றனர். புலியல்லாத பிரதேசத்தில் வாழவே, புலிப் பிரதேசத்து மக்கள் விரும்புகின்றனர்.



3. உலகமயமாதல் ஒருபுறமும், மறுபுறம் கிராமப்புர பொருளாதாரம் அழிக்கப்பட்ட நிலையில், வாழ்வுக்காக தொழிலைத் தேடி கொழும்பு நோக்கி மக்கள் வருகின்றனர்.



4. இலங்கையில் தொழில் வாய்ப்புகள் மறுக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு வேலைக்கே அரசு வழிகாட்டுகின்றது. இப்படி இன்று மத்திய கிழக்கில் அண்ணளவாக 25 00 000 (25 லட்சம்) பேர் வேலை செய்கின்றனர். அரசின் கையாலாகாத இன்றைய நிலைக்கு ஏற்ப, வெளிநாட்டு வேலைதேடி மக்கள் வந்து குவிகின்றனர்.



5. கொழும்புக்கு யுத்த பிரதேசத்தில் இருந்து வருவது இலகுவானதுமல்ல. அதிக செலவு பிடிக்க கூடியதுமான இந்த நிலையில், பலரை நிரந்தரமாகவே தங்கவைத்து விடுகின்றது.



இப்படி பற்பல காரணங்கள் கொழும்பை நோக்கி மக்கள் வரக் காரணமாகும். இதை ஆதாரபூர்வமாக விளக்கிவிட முடியாது. இப்படியான நிலையை உருவாக்கியவர்கள் புலிகள் அல்ல. இந்த அரசு தான். இந்த மக்களை அகற்ற முனைந்தது, அதற்கு வைத்த வாதங்கள், படுபிற்போக்கானவை. பேரினவாத இனச் சுத்திகரிப்பு கொள்கையை அடிப்படையாக கொண்டது.



இந்த மக்களுக்குள் மிக சிறிய எண்ணிக்கையான புலிகள் ஒழித்துக் கொள்வது என்பது சர்வசாதாரணமானது தான். இதைச் சொல்லிக் கொண்டு அந்த மக்களை அடித்து விரட்டுவது என்பது, இனச் சுத்திகரிப்பாகும். புலிகளின் இருப்புக்கான அரசியல் காரணங்களை தீர்க்க மறுக்கின்றவர்கள் அல்லவா முதல் குற்றவாளிகள். அவர்களை அல்லவா இந்த அரசில் இருந்து விரட்ட வேண்டும். அவர்களை அல்லவா சுத்திகரிக்கவேண்டும். இதைச் செய்ய நீங்கள் தயாரா?





No comments: