தமிழ் அரங்கம்

Wednesday, July 18, 2007

15 வகையான சாதியசமூகக் கொடுமைகளையும் அக்கிரமங்களையும்

சட்டங்கள், ஆணையங்கள், நடுவர்மன்றங்கள், திட்டங்கள்... அரசு தோட்டத்தில் விளைந்து கிடக்கும் ஏட்டுச் சுரைக்காய்கள்

தாழ்த்தப்பட்டபழங்குடி இன மக்களுக்கு இழைக்கப்படும் 15 வகையான சாதியசமூகக் கொடுமைகளையும் அக்கிரமங்களையும் நுட்பமாகவும் அனுபவப்பூர்வமாகவும் உணர்ந்து தொகுத்து, வன்கொடுமைகள் என்று வரையறுத்து அவற்றுக்குரிய தண்டனைகளையும் பட்டியலிட்டிருக்கிறது வன்கொடுமைகள் தடுப்புச் சட்டம்.

அதுமட்டுமல்ல, வேறு எந்த குற்றத் தண்டனைச் சட்டத்திலும் இல்லாதவாறு பின்வரும் பிரிவுகளை வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் உள்ளடக்கியுள்ளது.

1. தாழ்த்தப்பட்ட அல்லது பழங்குடி இனத்தவர் ஒருவருக்கு மரணதண்டனை கிடைக்குமாறு, அந்த நோக்கத்தோடு பொய்ச்சாட்சியம் சொல்வதும் அல்லது புனைவதும் ஆயுள் சிறைத் தண்டனையோடு அபராதமும் விதிக்கப்படக்கூடிய குற்றமாகும். அப்படிப்பட்ட பொய்ச் சாட்சியத்தாலோ, புனைவாலோ தாழ்த்தப்பட்ட பழங்குடியினத்தவர் ஒருவர் மரண தண்டனைக்குப் பலியாக நேருமானால் அதைச் செய்தவருக்கும் அதே தண்டனை வழங்கப்படும்.

2. தாழ்த்தப்பட்ட அல்லது பழங்குடியைச் சேர்ந்த ஒருவர் ஏழாண்டோ அதற்கு மேலோ தண்டிக்கப்படுமாறு குற்றம் புரிந்ததாய், அவ்வாறான தண்டனை பெற்றுத்தரும் நோக்கத்தோடு பொய்ச் சாட்சியம் சொல்வதும் அல்லது புனைவதும் அதே அளவு தண்டிக்கப்படும் குற்றமாகும்.

3. தீயினாலோ அல்லது ஏதேனும் வெடிபொருளினாளோ தாழ்த்தப்பட்ட சாதி அல்லது பழங்குடியினத்தவர் ஒருவரின் சொத்துடமைக்குச் சேதம் விளைவிப்பது ஆறு மாதத்துக்கும் குறையாத ஏழாண்டு வரையிலான சிறைத்தண்டனையோடு அபராதத்துக்குரியதாகும்.

4. தீயினாலோ அல்லது ஏதேனும் வெடிபொருளினாலோ தாழ்த்தப்பட்ட அல்லது பழங்குடியினத்தவரின் வழிப்பாட்டிடத்தையோ, வசிப்பிடத்தையோ, உடமைக் காப்பிடத்தையோ, அல்லது அவர் வழக்கமாகப் பயன்படுத்துமிடத்தையோ அழிப்பதும் அல்லது அந்த நோக்கத்துடன் செயல்படுவதும் ஆயுள் தண்டனை மற்றும் அத்துடன் அபராதம் விதிக்கக்கூடிய குற்றமாகும்.

5. தாழ்த்தப்பட்ட சாதி அல்லது பழங்குடியினத்தைச் சேர்ந்தவர் என்பதற்காகவே ஒருவருக்கோ அவருக்குச் சொந்தமான உடமைக்கோ எதிராக பத்தாண்டு அல்லது அதற்கு மேல் சிறைத்தண்டனை விதிக்கத்தக்க குற்றம் புரிபவருக்கு ஆயுள் சிறைத்தண்டனையும் அத்துடன் அபராதமும் விதிக்கப்படும்.

6. வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தண்டனைக்குரிய குற்றம் புரிந்துள்ளவரைக் காப்பாற்றும் நோக்குடன் அக்குற்றச் செயலுக்கான சான்று ஆதாரத்தை அழிப்பதும் மற்றும் தெரிந்தே பொய்த் தகவல் தருவதும் அந்தக் குற்றத்துக்கு வகை செய்யப்பட்டுள்ள தண்டனைக்குரிய குற்றமாகும்.

7. அரசு ஊழியராய் இருந்து இந்த வன்கொடுமைச் சட்டப்பிரிவின் கீழ் குற்றமாகிய ஒன்றைப் புரிவாரானால், அவருக்கு ஓராண்டுக்குக் குறையாத, அக்குற்றத்துக்கென வகை செய்யப்பட்டுள்ள தண்டனைக் காலம் வரையிலான சிறைத் தண்டனை விதிக்கப்படும்.

இவ்வாறு தாழ்த்தப்பட்ட பழங்குடியினத்தவருக்கு எதிராக பொய்யான குற்றச்சாட்டுக் கூறி தண்டிப்பதற்கு காரணமாக இருப்பதும் குற்றமாகிறது; அவருக்கு எதிரான குற்றங்களை மறைப்பதும், அக்குற்றம் புரிந்தவரைக் காப்பதும், அதற்கான சான்றாதாரத்தை அழிப்பதும் கூட தண்டனைக்குரிய குற்றமாகிறது.

மேலும், இச்சட்டத்தின்படி அரசு ஊழியர் ஆற்ற வேண்டிய கடமைகளைப் புறக்கணிப்பதும், ஆறுமாதத்துக்குக் குறையாத, ஓராண்டு வரையிலான சிறைத் தண்டனைக்குரிய குற்றமாகிறது.

அதுமட்டுமல்ல; இச்சட்டத்தின் கீழ்வரும் குற்றத்தை மறுமுறையோ அதன் பிறகோ, மீண்டும் புரிவது மேலும் கூடுதலாக ஓராண்டிற்குக் குறையாத, அக்குற்றத்துக்கென வகை செய்யப்பட்டுள்ள தண்டனை காலம் வரையிலான சிறைத் தண்டனைக்குரியதாகும்.

இதோடு இந்தியத் தண்டனைச் சட்ட விதிகளின் கீழ்வரும் பிரிவு 34, அத்தியாயங்கள் 3,4,5,6 மற்றும் பிரிவு 149 அத்தியாயம் 7இன் கீழ்வரும் விதிகள், இ.த.ச.வின் நோக்கங்களுக்குப் பொருந்துமாறு தண்டிக்கப்படும்.வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தைக் கடுமையாகவும், கறாராகவும், சீரிய முறையிலும் அமல்படுத்துவதற்காக மேலும் பல சிறப்பு அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. அதன்படி,
இச்சட்டத்தின் கீழான வழக்குகளைத் துரிதமாக விசாரணை நடத்தி முடிக்கும் பொருட்டு மாநில அரசானது உயர்நீதி மன்றத் தலைமை நீதிபதியின் ஒப்புதலைப் பெற்று ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஓர் அமர்வு நீதிமன்றத்தைத் தனிச்சிறப்பு நீதிமன்றமாக அமைத்து அதிகாரபூர்வ அரசிதழில் அறிவிப்பு செய்யவேண்டும்.

ஒவ்வொரு தனிநீதி மன்றத்துக்கும், மாநில அரசானது வன்கொடுமைத் தடுப்பு வழக்குகளை நடத்தும் பொருட்டு தனி அரசு வழக்குரைஞராக ஓர் அரசு வழக்குரைஞரைக் குறிப்பிடலாம் அல்லது ஏழாண்டுக்குக் குறையாமல் வழக்கறிஞராக பணிபுரிபவரை நியமிக்கலாம்.

இச்சட்டத்தின்படி கூட்டு அபராதம் விதிக்கவும் வசூலிக்கவும் 1955ஆம் ஆண்டின் குடிமை உரிமைகள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழான வழிவகைகள் பொருந்தும்.

தனிநீதிமன்றம் பிறப்பித்த ஆணையை எவராவது மீறினால் அவருக்கு ஓராண்டு வரையிலான சிறைத்தண்டனையும் அத்துடன் அபராதமும் விதிக்கப்படும்.

வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்படியான தண்டனையை மேலும் கறாராக்கும் பொருட்டு குற்றம் புரிவோரின் உடமைகளைப் பறிமுதல் செய்வதற்கான வழிவகையும் உள்ளது.

இச்சட்டத்தின்படி குற்றம் புரிந்த ஒருவரைத் தண்டிக்கும்போது, அக்குற்றத்தைச் செய்வதற்கு உதவிய அவரது உடைமை, அசையுஞ் சொத்து, அசையாச் சொத்து போன்றவற்றைப் பறிமுதல் செய்யும்படி ஆணையிடலாம்.

இச்சட்டத்தின்படியான குற்ற வழக்கை விசாரிக்கும் போதே குற்றஞ்சாட்டப்பட்டவரின் அசையுஞ்சொத்து மற்றும் அசையாச் சொத்துக்களைக் கைப்பற்றி வைக்கும்படி ஆணையிடலாம். குற்றஞ்சாட்டப்பட்டவர் தண்டிக்கப்படும்போது விதிக்கப்படும் அபராதத்தை வசூலிக்கத் தேவையானவாறு ஏற்கெனவே கைப்பற்றப்பட்ட சொத்து பறிமுதலுக்குரியதாகும்.

வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்படி, குற்றம் புரிபவருக்கு நிதியுதவி அளிப்பதும் குற்றத்துக்கு உடந்தையாக இருந்ததாகவே கருதப்படும். வன்கொடுமைக் குற்றம், எதன் தொடர்பாகவும், தொடர்ச்சியாகவும் நிகழ்த்தப்படுகிறதோ, அந்த நோக்கத்துக்காகவே, குறிக்கோளுக்காகவே குற்றமிழைத்ததாகக் கருதப்படும்.

வன்கொடுமைக் குற்றம் நிகழாமல் இருப்பதற்கான முன்நடவடிக்கையாக, குற்றம் புரியக் கூடும் என்று கருதப்படும் ஒருவரை, தாழ்த்தப்பட்ட அல்லது பழங்குடியினர் பகுதிகளின் இருந்து வெளியேற்றவும், இரண்டாண்டு காலம்வரை அவர் அப்பகுதிக்குள் நுழைவதைத் தடை செய்யவும் ஆணையிட முடியும். இவ்வாறான வெளியேற்ற உத்தரவை ஏற்று வெளியேறத் தவறினாலோ, வெளியேற்ற உத்தரவில் குறிப்பிடப்படும் காலத்திற்குள் அப்பகுதியில் நுழைந்தாலோ தனிநீதிமன்றம் அவரைக் கைது செய்யும் ஆணை பிறப்பிக்கலாம்.

மேற்கண்ட விதிகளின்படி ஒரு பகுதியை விட்டு வெளியேற்றப்படும் ஒருவரை அளவெடுக்கவும், படமெடுக்கவும் போலீசுக்கு அதிகாரமளிக்கப்படுகிறது; அதற்கு அவர் எதிர்ப்போ, மறுப்போ காட்டினால் எல்லா வழிமுறைகளையும் பயன்படுத்த சட்டபூர்வ அதிகாரம் உள்ளது; மேலும், அவ்வாறு எதிர்ப்பதும் மறுப்பதும் குற்றமாகும்.
வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தனிநீதிமன்றம் பிறப்பிக்கும் ஆணையை எவராவது மீறினால் ஓராண்டு வரையிலான சிறையும் அபராதமும் விதிக்கப்படும். மேலும், இச்சட்டத்தின்படி குற்றமிழைப்பவர்களுக்கு எதிராகக் கூட்டு அபராதம் விதிக்கவும், வசூலிக்கவும் 1955ஆம் ஆண்டின் குடிமை உரிமைகள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் உள்ள வழிவகைகள் இதற்கும் பொருந்தும்.

இச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவருக்கு வழக்கமான குற்றவியல் விசாரணை முறைச் சட்டத்தின் பிரிவு 438இல் கூறியுள்ள உரிமைகள் பற்றிய எதுவும் பொருந்தாது. அதோடு இச்சட்டத்தின்படி குற்றவாளியெனத் தீர்ப்பளிக்கப் பெறுகிற ஒருவருக்கு, குற்றவியல் விசாரணை முறைச் சட்டம் பிரிவு 360இன் வழிவகைகளும் 1958ஆம் ஆண்டின் குற்றவாளிகள் நன்னடத்தைச் சட்டத்தின் வழிவகைகளும் பொருந்தாது.

இவைதவிர, வன்கொ டுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வரும் குற்றங்களில் இருந்து தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களைப் பாதுகாப்பதற்கான பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள போலீசு அதிகாரிகளுக்கும், பல சிறப்பு அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. அவர்கள் செயல்படவேண்டிய முறைகளும் விசாரணை, கண்காணிப்பு மற்றும் அறிக்கை சமர்ப்பித்தல், மேலதிகாரிகள் மேற்பார்வையிடுதல், வன்கொடுமைகள் நிகழாவண்ணம் பாதுகாப்பதில் அரசு மற்றும் அதிகாரிகளின் கடமைகள், பொறுப்புகள் அதற்கான சிறப்பு அதிகாரங்கள் பற்றியும் இச்சட்டம் வரையறுத்துள்ளது.

தொடரும்

No comments: