தோற்ற வழியும், தோற்காத வழியும்
பி.இரயாகரன்
24.07.2004
இரண்டு பத்து வருடமாக தோற்றுக் கொண்டே இருக்கும் இரண்டு பிரதான வழிகள், இலங்கையில் பல பத்தாயிரம் மக்களை கொன்று போட்டுள்ளது. இன்னமும் கொன்று போடுகின்றது. இப்படி மனித அவலங்களோ எல்லையற்ற துயரமாகி, அவை பரிணாமித்து நிற்கின்றது.
இப்படி இலங்கை மக்கள் சந்திக்கின்ற பிரச்சனைகளுக்கு, எந்தத் தீர்வும் அந்த மக்களிடம் இருந்து இதுவரை கிடையாது. இப்படி சரியான தீர்வுகளின்றி, சரியான வழிகாட்டலின்றி, மனித அவலம், தொடர்ச்சியாக தீர்வாக மீண்டும் மீண்டும் திணிக்கப்படுகின்றது.
இந்த வகையில் பிரதான முரண்பாடாகி மக்கள் சந்திக்கின்ற பிரச்சனைகளோ இரண்டு. அவை பிரதேசத்துக்கு பிரதேசம் ஒன்று மற்றொன்றாகி முதன்மையாகின்றது. அவை எவை?
1. பேரினவாதம். இது தமிழ் மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமைகளை மறுத்து, தமிழனை பாசிச வழிகளில் அடக்கியொடுக்குகின்றது.
2. புலிகள். இது தமிழ் மக்களின் சுயாதீனமான அனைத்து செயல்பாட்டையும் ஒடுக்கி, தனது பாசிச வழிகளில் தமிழ் மக்கள் மூச்சுக் கூட விடமுடியாத வகையில் ஒடுக்குகின்றது.
இப்படி தமிழ் மக்களுக்கு எதிரான இரண்டு பிரதான ஒடுக்குமுறை அம்சங்கள் காணப்படுகின்றது. இவ்விரண்டு தரப்பும் ஒன்றையொன்று எதிரியாக கருதியபடியே, தமிழ் மக்களை ஒடுக்குவதில் தமக்குள் ஒன்றுபடுகின்றது. ஏன் இப்படி மக்களை ஒடுக்குகின்றனர்? இந்தக் கேள்விக்கான விடையில் தான், இதைப் புரிந்து கொண்டு தீர்வுகளையும் காணமுடியும்.
ஆனால் இதை யாரும் உணர்வதுமில்லை, உணர்த்துவதுமில்லை. இதை உணராது இருக்க வேண்டும் என்பதிலும், இந்த இரண்டு போக்குக்கும் வெளியில் சிந்திக்காதவகையில் இருக்கும் அரசியலே, எங்கும் எதிலும் திணிக்கப்படுகின்றது. மக்களின் மேலான ஒடுக்குமுறைக்குரிய காரணங்களின் அடிப்படையில் யாரும் செயல்படுதுமில்லை. மாறாக தமிழ் மக்களை ஒடுக்குகின்ற அதே அரசியல் நோக்குடன் தான், அனைத்துத் தரப்பும் செயல்படுகின்றனர், செயல்பட முனைகின்றனர்.
உண்மையில் தமிழ் மக்களை வௌவேறு தளத்தில் ஒடுக்குகின்ற, இந்த இரண்டு பிரதான பிரிவுகளின் சமூக பொருளாதார நலன்கள் தான், ஓடுக்குமுறைக்கான அடிப்படைக் காரணமாகும். இதை யாரும் எந்த வகையிலும் மறுக்க முடியாது. இதுவல்லாத வெற்றிடத்தில், காரணமல்லாத எந்த நோக்கத்திலும், அரசியல் அல்லாத கற்பனையில், யாரையும் யாரும் ஒடுக்கமுடியாது. சமூகங்கள் கொண்டுள்ள பல்வேறு ஏற்றத்தாழ்வான சமூக முரண்பாடுகளைப் பாதுகாக்கவே, இரண்டு தரப்பும் முனைப்புடன் முனைவதால் தான் மக்களை ஒடுக்குகின்றனர். மக்கள் எதரிகளின் அரசியல் தளம், இதற்குள் தான் செயல்படுகின்றது.
இப்படியாக பேரினவாத அரசு மற்றும் புலிகளின் செயல்பாடுகள் உள்ளது. இதையொட்டி இதற்குள் இயங்கும் இரண்டு பினாமி பிரிவுகளும், விதிவிலக்கின்றி மக்களை ஒடுக்கும் அரசியலைக் கொண்டே தமது அரசியலை உமிழ்கின்றனர். இவர்களின் ஜனநாயகம் என்பது, மக்களின் சமூக ஒடுக்குமுறையை பேணிப் பாதுகாப்பது தான். இவர்கள் மக்கள் என்று கூறுவது எல்லாம், சமூக ஒடுக்குமுறையை பாதுகாக்கும் எல்லைக்கு உட்பட்டதே. இதைப் பேணி பாதுகாக்க முனைபவர்கள், சமூக முரணபாடுகளை தற்போதைக்கு தீர்க்க முடியாது என்று கூற முனைகின்றனர். புலிகளும் சரி, புலியல்லாத தரப்பும் சரி, இதைத்தான் சொல்லுகின்றது. புலிகள் அனைத்தையும் தமிழீழத்தின் பினனர் என்கின்றனர், புலியல்லாத தரப்பு அனைத்தையும் புலியொழிப்பின் பினனர் என்கின்றனர். இப்படி இருதரப்பும் ஊரையும் உலகத்தையும் ஏமாற்றி, பொய்யான போலியான படுபிற்போக்கான அரசியலை மக்களுக்கு எதிராக திட்டமிட்டு திணிக்கின்றனர்.
பிரதான அதிகாரப் பிரிவுகள் சமூக முரண்பாட்டை மூடிமறைக்க, சமூக முரண்பாட்டின் ஒன்றை தீவிரமாக்கி விடுகின்றனர். இதற்குள் ஒரு யுத்தத்தை இவர்களே வலிந்து சமூகங்கள் மீது திணித்துவிடுகின்றனர். பின் யுத்தத்தைக் காரணம் காட்டி, சமூகங்களின் உள்ளார்ந்த அனைத்து சமூக முரண்பாட்டையும், எதுவுமற்ற ஒன்றாக காட்டவிட முனைகின்றனர் அல்லது இப்போதைக்கு இவை பிரச்சனைகளல்ல என்கின்றனர். இப்படியாக தமிழ் மக்களின் பிரச்சனைகளை திரித்து, தமது வர்க்க நோக்குக்கு ஏற்ப ஏதாவது ஒன்றை மக்களின் தலையில் கட்டி விடுகின்றனர்.
பின் அவர்கள் தமிழ் மக்களின் பிரச்சனைக்கு தீர்வாக இரண்டு வழியை வைக்கின்றனர்.
1. பேரினவாதத்தில் இருந்து விடுபட புலித் தமிழீழம்
2. புலிப் பாசிசத்தில் இருந்து விடுபட புலியொழிப்பு
இப்படி இதற்குள்ளாக இலங்கையின் முழு சமூகத்தையும் கட்டிப்போடுகின்றனர். இரண்டு தரப்பும் இதற்குள் ஒன்றையொன்று தழுவிக்கொண்டு, சமூகங்களை நார்நாராக பிளந்துபோடுகின்றனர். இதற்குள் தீர்வுகாணும் வழிகள் பற்றிய கற்பனையை விதைத்து, கடந்த இரண்டு பத்து வருடங்களாக பல பத்தாயிரம் உயிர்களை பலியிட்டனர். ஒருவரை ஒருவர் ஈவிரக்கமின்றி கொல்லுகின்றனர்.
நேரடியாக செயல்படுவர்கள் ஒருபுறம். மற்றவர்களும் இந்த இரண்டு பிரிவுக்குள்ளும் பினாமிகளாக செயல்படுவதால், சமூக வழிகாட்டல் இன்றி மனித அவலங்கள் தொடர்ந்து பெருகுகின்றது. இதனால் இதற்கு வெளியில் மூன்றாவது மாற்றுவழி பற்றி, எந்த சமூக முன்முயற்சியும் யாராலும் முன்வைக்கப்படுவதில்லை, முன்னெடுக்கப்படுவதுமில்லை. புலித் தமிழீழம் அல்லது புலி ஓழிப்பு இதற்குள் தமிழ் மக்கள் நலமடிக்கப்படுகின்றனர். இதற்கு மாறாக செயல்பட்டவர்கள் அழிக்கப்பட்டனர். அத்துடன் திட்டமிட்ட வகையில், சமூக ஆதிக்கம் பெற்ற பிற்போக்கு கூறுகளைக் கொண்டு புறக்கணிக்கப்படுகின்றது. இதுதான் இன்றைய நிலை.
புலித் தமிழீழம், புலியொழிப்பு என்ற இரண்டும், இரண்டு பத்து வருடமாக தோற்றுப் போன இரண்டு வழிகளாகும். மக்களின் தீர்வாக முன்வைப்பட்ட இந்த வழிகள், இதுவரை எதையும் சாதிக்கவில்லை. ஆனால் இதற்குள் தான், இன்னமும் அரசியல் விபச்சாரம் தொடருகின்றது.
இந்த இரண்டு வழிகளும் மேலும் மேலும் மனித அவலத்தைத் தவிர, எதையும் உருப்படியாக வைக்கவுமில்லை, சாதிக்கவுமில்லை, இனியும் சாதிக்கப் போவதுமில்லை. புலித் தமிழீழமாகட்டும், புலியொழிப்பாகட்டும், இரண்டு பத்து வருடங்களுக்கு மேலாகவே தோற்றுக் கொண்டு இருக்கின்றது. இந்த தோற்றுப் போன வழிக்கு பின்னால் தான், மீண்டும் மீண்டும் வேதாளமாக ஏற முயலுகின்றனர். இதற்குள் புலியல்லாத தரப்பும் சரி, அரசு அல்லாத தரப்பும் சரி, இந்த ஓட்டைச் சட்டியில் குதிரை ஓட்ட முனைகின்றனர்.
கடந்தகாலம் முழுக்கவே தோற்றுப்போன இந்த இரண்டு வழிக்கப்பால், தோற்காத வழியுண்டு. இதுவரை யாரும் முன்னெடுக்காத வழி. இது மட்டும் தான், மக்களின் பிரச்சனைகளை தீhர்ப்பதற்கான ஒரேயொரு வழி. அது சமூகங்கள் தமது முரண்பாடுகளை தீர்ப்பதற்கான அடிப்படையில், தீர்வுகளை காண்பதற்கான வழி.
மேலே குறிப்பிட்டது போல் இதுவரை முன்னெடுக்காத, வெறும் வார்த்தையாக அது சிதைக்கப்பட்டுள்ளது. இதை முன்னெடுக்க மறுப்பவனும், ஒடுக்குபவனும், இதை தோற்றுப் போனதாகவே சதா காட்டமுனைகின்றான். இது சாத்தியமற்றது என்கின்றான். தமிழீழத்தின் பின் அல்லது புலியொழிப்பின் பின் என்று, இருவரும் ஒரே ரெக்கோட்டை ஒரேவிதமாக போடுகின்றனர்.
இதைக் கோரியவனை, முன்னெடுத்தவனை கொன்று போட்டபடி, இது சாத்தியமற்றது என்று அவனே கூறுகின்றான். அத்துடன் இதை இன்றைய உலகத்துக்கு சாத்தியமற்றதாகவும், அதற்கு எதிரான அவதூறையும் கட்டமைக்கின்றான். இதற்கு எதிராக எல்லாம் அவனாகவே இருக்கின்றான். இந்த வழி மீது நம்பிக்கையீனத்தை பலவழிகளில் திணிக்கின்றனர். மக்கள் தமக்காக தாம் போராடும் வழி, கடுமையான அவதூறையும் ஒடுக்குமுறையையும் சந்திக்கின்றது.
ஆனால் இது தோற்காத, தோற்க முடியாத வழி. மக்கள் தமக்காக தாம் போராடுவது. இது எப்படி தோற்றுப் போகும்? இந்த வழியில் தோற்பவன் யார் என்றால், ஒடுக்குமுறையாளன் தான். மக்களின் சமூக அவலத்தை விதைப்பவன் தான் தோற்றுப்போவான். புலி மற்றும் புலியல்லாத தளத்தில், இதை தடுத்து நிறுத்தும் அரசியல், இந்த வழியை இழிவுபடுத்துகின்றது, கேவலப்படுத்துகின்றது. மக்கள் தமது விடுதலையை தாம் பெறும் நோக்கில், சமூக முரண்பாடுகளையும் தீர்க்கும் வழியில் போராடுவதையும், போராடக் கோருவதையும் எதிர்த்து, அதை சிதைகின்றவன் யார் என்றால் மனித குலத்தின் எதிரி தான். மக்கள் தாம் தமக்காக போராடாத வழியில், சிலர் அதை தீர்ப்பார்கள் என்ற அரசியல் படுபிற்போக்கானது. மக்கள் தாம் தமக்காக போராடுவது என்பது, உயர்ந்தபட்ச ஜனநாயகத்தை அப்படையாகக் கொண்டது. இதைவிட உயர்ந்த ஜனநாயகத்தை யாராலும் முன்வைக்க முடியாது. இதைச் செய்ய மறுக்கின்ற புலி மற்றும் புலியல்லாத தரப்புகளில் இருந்து, இதற்கு கடும் எதிர்ப்புள்ளது. அதாவது மக்களின் எதிரிகளின் எதிர்ப்பு, இதற்கு இயல்பாகவுண்டு. இதை எதிர்த்து இதற்கு எதிராக செயல்படாது, தமிழ் மக்களின் பிரச்சனைக்கு வேறு எந்த தீர்வும் சாத்தியமற்றது.
No comments:
Post a Comment