பாலஸ்தீன மக்கள் நடத்திவரும் சுயநிர்ணய உரிமைப் போர், மேலும் ஒரு பின்னடைவுக்கு உள்ளாகியிருக்கிறது. பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் (பி.எல்.ஓ.) ஓர் அங்கமான ஃபதா இயக்கத்திற்கும், முசுலீம் அடிப்படைவாத அமைப்பான ஹமாஸ் இயக்கத்திற்கும் இடையே கடந்த ஓராண்டு காலமாக நடந்து வந்த பதவி அதிகாரச் சண்டை, உள்நாட்டுப் போராக மாறக் கூடிய சூழல் உருவாகி இருப்பதுதான் இப்பின்னடைவுக்கான காரணம்.
பத்தாண்டுகளுக்கு முன்பாக, ஆஸ்லோ ஒப்பந்தம் என்ற பெயரில் ஓர் "அமைதி' ஒப்பந்தத்தை, அமெரிக்க ஏகாதிபத்தியம் பாலஸ்தீன மக்கள் மீது திணித்தது. இந்த ஒப்பந்தத்தின் கீழ், தற்பொழுது பாலஸ்தீன பகுதிகளாக ஏற்றுக் கொள்ளப்படும் மேற்குக் கரையையும், காசா முனையையும் நிர்வகிப்பதற்காக, பாலஸ்தீன ஆணையம் என்ற பெயரில் ஓர் அதிகார நிர்வாக அமைப்பு உருவாக்கப்பட்டது.
சுதந்திர பாலஸ்தீன அரசு உருவாகப் போவதன் தொடக்கப்புள்ளி என வருணிக்கப்பட்ட இந்த பாலஸ்தீன ஆணையம், நடைமுறையில், அமெரிக்கஇசுரேல் ஆக்கிரமிப்பாளர்களின் ஏஜெண்டாகத்தான் செயல்பட்டு வருகிறது. ஒரு முனிசிபாலிடிக்கு இருக்க வேண்டிய சுய அதிகாரம் கூட இல்லாத இந்த பாலஸ்தீன ஆணையத்தைக் கைப்பற்றிக் கொள்வதற்காக ஃபதாவிற்கும், ஹமாஸுக்கும் இடையே நடந்துவரும் இந்த நாய்ச் சண்டையின் காரணமாக, இன்று பாலஸ்தீனப் பிராந்தியம் இரண்டாகப் பிளவுபட்டுப் போய்விட்டது.
மேற்குக் கரையை ஃபதா இயக்கமும், காசாமுனையை ஹமாஸ் இயக்கமும் தங்களுக்குள் பாகப்பிரிவினை செய்து கொண்டதன் மூலம், ஒரு உள்நாட்டுப் போரைச் சந்திக்க வேண்டிய அபாயத்தில் பாலஸ்தீன மக்களைத் தள்ளிவிட்டுள்ளன. அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகி நடைமுறைக்கு வந்த பிறகுதான், பாலஸ்தீனத்தில் அமெரிக்க இசுரேல் ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிராக இரண்டாவது இண்டிஃபதா (சுதந்திரப் போர்) நடந்தது. அதனால், இந்தப் பிளவை, ஏகாதிபத்தியவாதிகள் மிகுந்த உற்சாகத்தோடு வரவேற்கின்றனர்.
2005ஆம் ஆண்டு இறுதியில், பாலஸ்தீன ஆணையத்திற்கான பொதுத் தேர்தல் நடைபெற்ற பொழுதே, இந்தப் பிளவிற்கான விதை தூவப்பட்டது. அத்தேர்தலில் அமெரிக்க இசுரேல் கூட்டணி ஃபதா இயக்கத்தையும், அதன் தலைவரான முகம்மது அப்பாஸையும் ஆதரித்தது. ஆனால், அவர்களின் எதிர்பார்ப்புக்கு மாறாக, அத்தேர்தலில் ஹமாஸ் இயக்கம் வெற்றி பெற்றது. பாலஸ்தீன ஆணையத்தின் அதிபராக முகம்மது அப்பாஸும், ஹமாஸ் இயக்கத்தைச் சேர்ந்த இஸ்மாயில் ஹனியா பிரதமராகவும் இருக்கும் எதிரும், புதிருமான நிலையை 2005 தேர்தல் உருவாக்கியது. பாலஸ்தீன ஆணையத்தின் பெரும்பான்மை ஹமாஸிடம் இருந்தபொழுதும், அதிகார வர்க்கப் பதவிகளில் ஃபதா இயக்கத்தினர் நிரம்பியிருந்தனர்.
""ஹமாஸின் தேர்தல் வெற்றியை ஏற்றுக் கொள்ள முடியாது'' என அறிவித்த அமெரிக்கா, தனது தலையாட்டி பொம்மையான அதிபர் முகம்மது அப்பாஸ் மூலம், ஹமாஸ் அரசாங்கத்தைக் கவிழ்த்துவிட முயன்றது. மேலும் ஐரோப்பிய யூனியன் நாடுகளை தன்னுடன் இணைத்துக் கொண்டு, பாலஸ்தீனத்துக்குத் தர வேண்டிய நிதி உதவிகளைத் தராமல் முடக்கி வைத்தது. அமெரிக்காவைத் தொடர்ந்து இசுரேலும், பாலஸ்தீன ஆணையத்தின் சார்பாக வசூலித்த வரிப் பணத்தைத் தராமல் முடக்கியது.
இப்பொருளாதார நெருக்கடியின் காரணமாக, ""பாலஸ்தீன மருத்துவமனைகளில் அத்தியாவசிய மருந்துகள் கூட கிடைக்காமல் தட்டுப்பாடு ஏற்பட்டது. ஏறத்தாழ 1,60,000 அரசு ஊழியர்களுக்குப் பல மாதங்களுக்குச் சம்பளம் தர முடியாமல் போனது. மேற்குக் கரையிலும், காசா முனையிலும் 12 இலட்சம் பாலஸ்தீன மக்கள் பட்டினிச் சாவின் விளிம்புக்குத் தள்ளப்பட்டனர்'' என ஐ.நா. மன்றமே ஒப்புக் கொள்ளும் அளவிற்கு, பாலஸ்தீனத்தில் அன்றாட வாழ்க்கை மோசமடைந்தது. இன்னொருபுறமோ, இப்பொருளாதார நெருக்கடி முற்ற, முற்ற ஃபதாவிற்கும் ஹமாஸுக்கும் இடையேயான மோதலும் அதிகரித்தது.
ஹமாஸோடு நேரடியாக மோதி, அவ்வமைப்பை நிர்மூலமாக்கும் திட்டத்தோடு ஃபதா இயக்கத்தைச் சேர்ந்த 500 பேருக்கு ஆயுதப் பயிற்சியும், உதவியும் அளித்து, எகிப்தின் வழியாக காசா முனைக்கு அமெரிக்கா அனுப்பி வைத்தது; அதிபர் அப்பாஸின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த சிறப்பு அதிரடிப் படைக்கும் அமெரிக்காவால் 160 கோடி ரூபாய் அளவிற்கு ஆயுத உதவிகள் வழங்கப்பட்டு, இந்தச் சகோதரச் சண்டை கொம்பு சீவிவிடப்பட்டது.
இசுரேலோ, தனது இராணுவச் சிப்பாய் ஒருவரை ஹமாஸ் இயக்கம் கடத்தி விட்டது எனக் குற்றஞ்சுமத்தி, ஹமாஸ் அமைப்பின் தலைமையிடம் இருக்கும் காசா முனைப் பகுதி மீது வான்வழித் தாக்குதல்களை நடத்தியது. ஹமாஸ் இயக்கத்தின் தலைவரும் பாலஸ்தீன ஆணையத்தின் பிரதமருமான இஸ்மாயில் ஹனியா உள்ளிட்டு, ஹமாஸ் இயக்கத்தின் அமைச்சர்களையும், ஆணைய உறுப்பினர்களையும் குறிவைத்துத் தாக்கிக் கொல்லப் போவதாக அறிவித்ததோடு, அவர்களின் மீது ""ராக்கெட்'' தாக்குதல்களையும் நடத்தியது.
இப்பொருளாதார நெருக்கடியும், இராணுவ முற்றுகையும் பாலஸ்தீனத்தில் ஏற்படுத்திய விளைவுகளால், தங்கள் நாடுகளும் பாதிக்கப்படுமோ எனப் பயந்து போன சௌதி அரேபியா உள்ளிட்ட சில அரபு நாடுகள் ஃபதாவிற்கும், ஹமாஸிற்கும் இடையே சமாதானத்தை ஏற்படுத்த, ""மெக்கா ஒப்பந்தத்தை'' உருவாக்கின. இதன்படி, சில முக்கிய அமைச்சர் பதவிகளை, ஹமாஸ் இயக்கம் ஃபதாவிற்கு விட்டுக் கொடுப்பது என்றும், அதற்கு ஈடாக, ஹமாஸின் ஆயுதப் படையைப் பாலஸ்தீன ஆணையத்தின் படையோடு இணைத்துக் கொள்வது என்றும் இதன் அடிப்படையில் தேசிய ஐக்கிய அரசை அமைப்பது என்றும் முடிவானது.
ஆனால் இந்த ஒப்பந்தத்தை அமெரிக்கா விரும்பாததால், அதிபர் முகம்மது அப்பாஸ் ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த மறுத்துவிட்டார். மேலும், பாலஸ்தீன ஆணையத்திற்குப் புதிதாகத் தேர்தல் நடத்தப் போவதாகவும் அறிவித்தார். இதனால், பதவிஅதிகாரத்துக்காக நடந்த இந்தச் சண்டை முற்றி, மேற்குக் கரையை ஃபதா இயக்கமும், காசா முனையை ஹமாஸ் இயக்கமும் தங்களுக்குள் பங்கு போட்டுக் கொண்டுவிட்டன.
ஃபதாவிற்கும், ஹமாஸுக்கும் இடையே மோதல் நடந்து வந்தபொழுது, ""இந்த வன்முறையை நாங்கள் வரவேற்கிறோம்'' என வெளிப்படையாக அறிவித்த அமெரிக்கா, இப்பொழுது, ""நாம் இரண்டுவிதமான பாலஸ்தீனத்தை எதிர்கொள்கிறோம்; ஃபதாவின் மேற்குக் கரைக்கு தேவையான உதவிகளைச் செய்வது; ஹமாஸின் காசா முனையைக் கசக்கிப் பிழிவது'' என்ற திட்டத்தைச் செயல்படுத்தப் போவதாகக் கொக்கரிக்கிறது.
""அமைதி'' ""சமாதானம்'' என்ற பெயரில் தனது அமெரிக்க அடிவருடித்தனத்தை மூடி மறைத்துவந்த ஃபதா இயக்கம், இப்பொழுது அம்மணமாக நிற்கிறது. இந்தப் பிளவுக்குப் பிறகு, அதிபர் அப்பாஸ், ஹமாஸ் அரசைக் கலைத்துவிட்டதோடு, அமெரிக்காவின் விருப்பப்படி உலக வங்கியின் முன்னாள் ஊழியரான சலாம் ஃபய்யத்தை பாலஸ்தீன ஆணையத்தின் பிரதமராகவும்; அமெரிக்காவின் சி.ஐ.ஏ.வால் பயிற்சி அளிக்கப்பட்ட முகம்மது தஹ்லானைப் பாதுகாப்பு ஆலோசகராகவும் நியமித்திருக்கிறார்.
""இது, காசா முனையின் இரண்டாவது விடுதலை'' என ஹமாஸ் தனது வெற்றியைப் பீற்றிக் கொண்டாலும், இந்த இரண்டாவது விடுதலையைத் தக்க வைத்துக் கொள்ளும் அளவிற்கு அதனிடம் அரசியல் திட்டமோ, சமூக ஆதரவோ கிடையாது. தனது வெளியுலகத் தொடர்புக்கு மட்டுமல்ல, தண்ணீர், மின்சாரம், எரிசக்தி, வேலை வாய்ப்பு, வர்த்தகம், மருத்துவ வசதிகள் போன்ற அனைத்து அத்தியாவசியத் தேவைகளுக்கும் இசுரேலின் தயவை நாடியே காசாமுனை இருக்கிறது.
ஏறத்தாழ 14 இலட்சம் பாலஸ்தீனர்கள் தஞ்சம் அடைந்திருக்கும் காசா முனை மிகப் பெரிய அகதிகள் முகமாகத்தான் இருந்து வருகிறது. அங்கு வசிப்போரில் 80 சதவீதத்திற்கும் மேலான மக்கள் வேலை வாய்ப்பு அற்றவர்களாக, வறுமையோடு உழன்று வருகின்றனர். இவர்களை மேலும், மேலும் கசக்கிப் பிழிவதன் மூலம் ஹமாஸை அடக்கிவிட முடியும் என்பதுதான் ஏகாதிபத்தியவாதிகளின் திட்டம்.
மேலும், ஈராக் ஆக்கிரமிப்புக்குப் பிறகு மேற்காசிய நாடுகளைத் தனது மேலாதிக்க நோக்கங்களுக்கு ஏற்ப மறுவார்ப்பு செய்யும் திட்டத்தோடு அமெரிக்கா இயங்கி வருகிறது. இப்பொழுது, அதிகாரப் போட்டியால் பாலஸ்தீனத்தில் ஏற்பட்டுள்ள இந்தப் பிளவு, அமெரிக்காவைப் பொறுத்தவரை, பழம் நழுவி பாலில் விழுந்த கதையைப் போன்றதாகும். ஈராக்கை, சன்னி, ஷியா, குர்து என மூன்று பகுதிகளாகக் கூறு போடும் அமெரிக்காவின் சதி, அங்கு முழுமையாக வெற்றி பெறாவிட்டாலும், பாலஸ்தீனத்தில் வெற்றி பெற்றுள்ளது.
அமெரிக்க இசுரேல் ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிராகத் தாக்குதல்களை ஹமாஸ் இயக்கம் நடத்தி வந்தாலும், அதனின் நடைமுறை நோக்கம், தனது ஆயுதப் படைகளை, பாலஸ்தீன ஆணையத்தின் படைகளோடு இணைத்து ""அதிகாரத்தைப்'' பங்கு போட்டுக் கொள்ள வேண்டும் என்பது தவிர வேறில்லை. இதனால்தான், ஆஸ்லோ ஒப்பந்தத்தைப் புறக்கணிப்பதாக கூறிவந்த ஹமாஸ், பின்னர் அந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட பாலஸ்தீன ஆணையம், பொதுத் தேர்தல் ஆகியவற்றில் பங்கு பெறும் சமரச நிலையை மேற்கொண்டது.
மேலும், ஏகாதிபத்திய அடிவருடித்தனம், ஊழல், கோஷ்டி சண்டையால் ஃபதா இயக்கம் சீரழிந்து போய்விட்டதால்தான், ஹமாஸ் இயக்கத்திற்கு பாலஸ்தீன மக்கள் வாக்களித்தார்களேயன்றி, அதனுடைய மத அடிப்படைவாத கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு ஹமாஸுக்கு வெற்றியை அளிக்கவில்லை. எனவே, காசா முனையில் ஹமாஸ் அடைந்திருக்கும் ""வெற்றியை'' நீண்ட நாட்களுக்குத் தக்க வைத்துக் கொள்ள முடியாது. ஃபதா இயக்கத்தோடு சமரசம் செய்து கொள்வது; இல்லையென்றால், அமெரிக்க இசுரேல் கூட்டணியின் தாக்குதலைச் சமாளிக்க முடியாமல் பின்வாங்கிச் செல்வது என்பதுதான் இந்த ""வெற்றி''யின் எதிர்கால முடிவாக இருக்கும்.
· செல்வம்
No comments:
Post a Comment