பிஇரயாகரன்
13.07.2007
சர்வதேசியம் உலகளவிலானது. உலகில் உள்ள ஒடுக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுக்கும். அவர்களின் விடுதலைப் போராட்டங்களை மட்டும் ஆதரிக்கும். பிற்போக்கானதும், மக்களுக்கு எதிரான எதையும் ஆதரிக்காது. இரண்டு முரண்பட்ட பிரிவில் ஒன்றைச் சார்ந்து நிற்க வேண்டிய அவசியம், கட்டாயம் அந்த வர்க்கத்துக்கு கிடையாது. அது தனக்கு என்ற சொந்த அரசியல் நிலைப்பாட்டை கொண்டது. இரண்டு மோதுகின்ற பிரிவுகள் பிற்போக்கான கூறாக இருந்தால், இரண்டையும் எதிர்க்கும். மாறாக மக்களைச் சார்ந்து நிற்கும். தேர்தலில் வாக்குப் போடுவது போல் ஒன்றைத் தெரிவது கிடையாது.
ஆம் இல்லையென்று நீதிமன்ற மொழியில் பதிலளிப்பதில்லை. அதாவது சமூக விளைவுகளை கருத்தில் கொள்ளாது, நீதிமன்ற தீர்ப்பு போல், மலட்டுத் தீர்ப்பு வழங்குவதில்லை. ஒடுக்கப்பட்ட மனிதர்களின் நலன்கள் தான், அந்த ஒடுக்கப்பட்ட அமைப்பினதும் நிலைப்பாடாகின்றது.
தமிழ்மணத்தில் தேசிய அரசியல் புரளி கிளப்பி நிற்பவர்கள், வழமைபோல் புலிகள் என்று அதற்குள் தமது புரட்சியை பற்றி சவடால் அடிக்கின்றனார். அவர்கள் நீதிமன்ற மொழியில் பதில் கேட்கின்றனர்.
''1. தனி தமிழீழம் உருவாகுவதை ஆதரிக்கின்றீர்களா? - ஆம், இல்லை என்று ஏதாவது ஒரு பதில், ஆம் என்றால் அடுத்த கேள்விக்கு போகவே வேண்டாம், இல்லை என்றால் அடுத்த கேள்விக்கு போங்கள்
2. இலங்கையின் தமிழர்கள் இனப்பிரச்சினைக்கு உங்கள் தீர்வென்ன? தமிழர்கள் கொல்லப்படுவதை எப்படி தடுப்பது? தமிழ் பாட்டாளிகளும் தமிழ் முதலாளிகளும் எப்படி சிங்கள பேரினவாத அடக்கு முறையிலிருந்து உயிர் பிழைப்பது?" என்கின்றனர். ஆகவே புலிகளை ஆதரியுங்கள் என்கின்றனர். இது தான் இந்த புரட்சி பேசும், புரளிகளின் நிலைப்பாடு.
இதற்கு நாம் பதில் அளிக்க முன், தேசிய புரட்சி பேசும் நீங்கள் வசதியாக வசதி கருதி மறந்த விடையத்துக்கு பதிலளியுங்கள். காஸ்மீர் பற்றிய உங்கள் நிலைப்பாடு என்ன? பஞ்சாப் முன்னைய போராட்டம், அசாம் போராட்டம் பற்றிய நிலைப்பாடு என்ன? ஆதரிக்கின்றீர்களா எதிர்கின்றீர்களா? இதே இலங்கை நிபந்தனை தான் அங்கேயும் இருந்தது, இருக்கின்றது. சிங்கள இராணுவம் போல், இந்திய இராணுவம் அந்த மக்களைக் கொல்கின்றது.
பாட்டாளி வர்க்கத்தின் நிலைப்பாடு எப்படி காஸ்மீரைப் பார்க்கின்றதோ, அப்படித்தான் தமிமீழத்தையும் பார்க்கின்றது.
தமிழீழத்தை ஆதரிப்பதா எதிர்ப்பதா என்ற கேள்விக்கு, பாட்டாளி வர்க்கத்தைப் பொறுத்த வரையில் விடை தெளிவானது. ஒடுக்கப்பட்ட மக்களின் கையில் அதன் அதிகாரம் கிடைக்கும் பட்சத்தில் ஆதரிப்பதும், அல்லாதபோது அதை எதிர்ப்பதும் என்பதே, பாட்டாளி வர்க்கத்தின் சர்வதேசியக் கடமை. இந்த வகையில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதும், அதை நோக்கிய திசையில் கருத்துரைப்பதுமே பாட்டாளி வர்க்கத்தின் சர்வதேசிய நிலைப்பாடாகும்.
இதற்கு அப்பால் குறித்த நிலையில் அது சாத்தியமா இல்லையா என்பது இரண்டாவது விடையமாக உள்ளது. பாட்டாளி வர்க்கம் தரகு முதலாளிகளின் தலைமையிலான போராட்டத்தை ஆம் என்று சொல்லி ஆதரிப்பதுமில்லை. ஒடுக்கப்பட்ட மக்களின் அதிகாரத்தை மட்டும் தான் ஆதரிக்கும். இல்லாதபோது அதற்காக, அது போராடும்.
ஆம் என்று கூறக் கோருவதே பாசிசம். இதைத் தான் புலி கூறுகின்றது. அனைவரும் தமது நிலைக்கு கீழ் வரக்கோருகின்றது, இல்லாத போது கொல்லுகின்றது. இதே பாசிசத்தைத் தான், இந்த தேசிய புரளிப் பேர்வழிகள், சுற்றி வளைத்து சர்வதேச இயக்கங்கள் மீது முன்வைக்கின்றனர்.
ஒடுக்கப்பட்ட மக்களின் தேசிய நலனைக் கூட முன்னெடுக்காத யாரையும் நாம் ஆதரிப்பதில்லை. புலிகள் தமிழ் மக்களின், ஒடுக்கப்பட்ட நலனை பிரதிபலிப்பதில்லை. பேரினவாதம் தமிழ் தேசத்தின் சமூக பொருளாதார கூறை நசுக்குகின்றது. அதைப் புலிகள் எதிர்ப்பதில்லை. மாறாக புலிகள் சேர்ந்தே ஒடுக்குகின்றது.
சிங்களப் பேரினவாதம் எதை தமிழ் மக்களுக்கு மறுக்கின்றது என்ற கேள்வியை புலித் தமிழ் தேசியம் எழுப்புவதில்லை. புலிகள் தமது குறுகிய யாழ் மேலாதிக்கம் தனது சொந்த நலனை முன்வைக்கின்றது.
புலிகள் தரகு முதலாளிய ஏகாதிபத்திய நலனைப் பேணிக்கொள்ளும், பாசிச மாபியாக் கும்பலாகிவிட்டது. அது மக்களின் விடுதலையை முன்வைக்கவில்லை. தமிழ் மக்களின் விடுதலை என்ன என்பதை புலிப்பாசிட்டுகள் போல், புரளிப் பேர்வழிகள் பேச மறுக்கின்றனர்.
தமிழ் மக்களை ஒடுக்கு முறைக்குள்ளாக்கும் பேரினவாத அரசும் சரி, யாழ் மேலாதிக்க புலிப் பாசிசமும் சரி, தமிழ் மக்களுக்கு எதிரானது.
இந்த பேரினவாத அரசினதும், புலி இயக்கத்தினதும் மக்கள் விரோத ஒடுக்குமுறையை எதிர்ப்பதே பாட்டாளி வர்க்கத்தின் சர்வதேசக் கடமை. இதற்கு மாறாக தமிழ் மக்கள் தம் மீதான அனைத்து ஒடுக்குமுறைக்கும் எதிராக போராடும் அனைத்து முயற்சிகளையும், சர்வதேசியம் ஆதரிக்கும். அது தனித் தமிழீழமாக இருந்தாலும் சரி, ஒன்றிணைந்த புரட்சியாக இருந்தாலும் சரி. இதை அந்த மக்கள் தான், சொந்த வழியில் நின்று தீர்மானிக்க முடியும்.
மக்கள் தாம் தமது விடுதலைக்கான வழியில் தமிழீழத்துக்காக போராடினால் அதை ஆதரிக்கும். இல்லை என்றால், மக்களுக்கு எந்த விடுதலை கிடையாது என்றால், அதை எதிர்க்கும். மக்களின் அதிகாரம் தான் பாட்டாளி வர்க்கத்தின் நிலைப்பாடு.
இன்று அப்படி ஒடுக்கப்பட்ட மக்கள் குரல்கள் இல்லை என்பதும், அதைப் புலிப் பாசிட்டுகள் கொன்று அழித்து வருகின்றனர். ஏன் என்றால் அந்த மக்களின் விடுதலைக்கான குரல்களாய், அதற்காக போராடுவதால் தான் கொல்லப்படுகின்றனர். ஒடுக்கப்பட்ட மக்களின் சிறு குரலைக் கூட கேட்கக் கூடாது என்ற, புலிப் பாசிசத்தின் நிலையை நாம் ஆதரிப்பதில்லை. அது வைக்கும் தனது பாசிச தமிழீழத்தை ஆதரிப்பதில்லை.
சிங்கள பேரினவாத அரசு கொன்று போடும் தமிழ் மக்களுக்கு தீர்வு என்ன? நல்ல கேள்வி. தமிழ் மக்களை அரசு மட்டுமல்ல, புலியும் தான் கொல்லுகின்றது. இந்த ஒநாய்களை ஆதரித்து வளர்ப்பதல்ல. தமிழ் மக்கள் தமது விடுதலைக்காகவும், தம்மைப் பாதுகாக்கவும் புலியை எதிர்த்து போராடுவதன் மூலம் மட்டும் தான், சிங்கள பேரினவாதிகளிடமிருந்து தம்மை பாதுகாக்க முடியும். தமிழ் மக்களைப் பேரினவாதம் கொல்வது என்பது, புலிகள் இருப்புக்கான புலிகளின் அரசியல் உத்தியாகவும் உள்ளது. பேரினவாதம் தமிழ் மக்களைக் கொன்றால் தான், புலிகளின் இருப்பு சாத்தியமானது. தமிழ் மக்கள் எவ்வளவுக்கு எவ்வளவு அதிகமாக கொல்லப்படுகின்றனரோ, அதையே புலிகள் விரும்புவதே அவர்களின் அரசியல்.
இந்த வகையிலும், இதுவல்லாத வகையிலும் புலிகளே தமிழ் மக்களைக் கொன்று போடுகின்றனர். மக்களின் எந்த சுய செயல்பாட்டையும் அனுமதிப்பதில்லை. இப்படிப்பட்ட ஒரு சூழலில் தமிழ் மக்கள், தாம் போராடாமல் தமது விடுதலையை அடையமுடியாது. தம் மீதான அரசு மற்றும் புலிப் படுகொலையை தடுத்து நிறுத்தமுடியாது. இந்த நிலைப்பாடு தான் பாட்டாளி வர்க்க நிலைப்பாடு. மக்கள் தமது சொந்த விடுதலைக்காக போராட வேண்டும். அதை மட்டும் தான் ஆதரிக்கும்.
1 comment:
///ஒடுக்கப்பட்ட மக்களின் தேசிய நலனைக் கூட முன்னெடுக்காத யாரையும் நாம் ஆதரிப்பதில்லை. புலிகள் தமிழ் மக்களின், ஒடுக்கப்பட்ட நலனை பிரதிபலிப்பதில்லை. பேரினவாதம் தமிழ் தேசத்தின் சமூக பொருளாதார கூறை நசுக்குகின்றது. அதைப் புலிகள் எதிர்ப்பதில்லை. மாறாக புலிகள் சேர்ந்தே ஒடுக்குகின்றது.//
Post a Comment