தமிழ் அரங்கம்

Thursday, October 25, 2007

உயிர்நிழல் ஆசிரியரின், புலியெதிர்ப்போ வக்கிரமாகி கொட்டுகின்றது

பி.இரயாகரன்
24.10.2007


தைத்தான் உயிர்நிழல் 26 இல் அதன் ஆசிரியர் தனது கருத்தின் ஊடாகச் செய்கின்றார். மக்கள் போராட்டத்தை இழிவாடும் அவரின் தொடர்ச்சியான போராட்டத்தின் ஒரு அம்சமாக, என்னை அதில் கட்டுடைக்கின்றாராம். நல்ல வேடிக்கை. ஒரு விடையத்தைக் கூட விவாதிக்க அறிவில்லை. இதனால் இசங்களில் சொற்களை வைத்து, புலம்பி ஒப்பாரி வைப்பதன் மூலம் கட்டுடைக்கின்றாராம்.

புலியெதிர்ப்பையே அரசியலாக கொண்டு ஏகாதிபத்தித்துக்காக காவடியாடும் சிவலிங்கத்துக்கு, மக்கள் விரோதிகள் எடுபிடியாவது இயல்பு. எந்த பிசாசுடனுடமுவாவது சேர்ந்து புலியை அழிக்கும் சிவலிங்கத்தின் பாசிசக் கோட்பாடு, பாரிசில் எம்மால் அம்பலமானதை பொறுக்கமுடியாமல், லட்சமி அக்கா துள்ளிக் குதித்ததன் வெளிப்பாடுதான் இந்த புலம்பல். இப்படி அந்த கடவுள் சிவலிங்கத்தின் சடைமுடிக்குள் அமர்ந்து இருந்தபடி, சீண்டுகின்றார். கருத்தைக் கருத்தால் மறுத்துரைக்கும் திராணி கிடையாது. அதைச் செய்ய வக்கு கிடையாது. ஏகாதிபத்தியத்தை நக்கும் சிவலிங்கத்தின் கோட்பாட்டை காக்க முனைகின்றார். 'பி.இரயாகரனோ வி.சிவலிங்கத்தின் எந்த அரசியல் கட்டுரைகளையும் வாசித்திருப்பதில்லை என்று தான் படுகின்றது" இப்படி கூறி, இதன் மூலம் எந்தக் கருத்தை கட்டுடைத்து மறுக்க முனைகின்றார். எப்படிப்பட்ட யோக்கியதை. பிசாசுடன் சேர்ந்து புலியை அழிப்போம் என்று பாரிசில் அறிவித்த சிவலிங்கத்தின் மக்கள் விரோதத் தன்மையோ வெளிப்படையானது. இப்படி தொடர்ச்சியாக அம்பலமாவதைப் பாதுகாக்க, எடுபிடிகள் அம்மணமாக நின்று குலைப்பது தான் அரசியல் வேடிக்கை.

அரசியல் ரீதியாக சடைப் பாம்பாகி, மக்கள் விரோதத்தையே ஆன்மாவாக கொண்டவர், அதையே இசமாக்கியவர் தான் உயிர்நிழல் ஆசிரியர். இவரோ எடுப்பார் கைப்பிள்ளையாக, காலத்துக்காலம் வேஷம் போட்டவர். எந்த மக்கள் அரசியலும் கிடையாது. இப்படி எந்த சமூக அரசியல் அடிப்படைகள் எதுவுமற்றவர். காலத்துக்கு காலம், முகம் பார்த்து, கொசித்து, வம்பளந்து, விஸ்கி அடிப்பதன் மூலம், கூடி கும்மாளம் அடிப்பதையே, அரசியலாக கருதி அதை வளர்த்தவர்கள், வளர்ந்தவர்கள்.

இசங்களின் சொல்லாடலைக் கொண்ட ஒரு புலியெதிர்ப்பு. இப்படி சொந்தத்தில் எந்த ஓரு விடையம் மீது, மனித விடுதலைக்கு உதவக் கூடிய ஓரு கருத்தைக் கூட சொல்ல முடியாதவர் தான் உயிர்நிழல் ஆசிரியர். வெறும் தொகுப்பாளர். அரசியல் ரீதியாக மற்றவர்களின் எடுபிடி. காலா காலமாக ஆணாதிக்கத்துக்கு துணை போனவர். பெண்ணியம் என்ற பெயரில் ஏகாதிபத்திய கலாச்சாரத்தின் எடுபிடி. அதாவது ஏகாதிபத்திய பெண்ணின் நடவடிக்கைக்குள் நின்று, அதை தூக்கி வைத்து பெண்ணியம் என்பவர். இவர் எம்மை சீண்ட முனைவது இயல்பு.

இவர் புலியெதிர்ப்பு சிவலிங்கம் பற்றி எங்களுக்கு கற்றுத் தரமுனைகின்றார். புலியெதிர்ப்பின் மதியுரைஞரான அவரின் பிசாசுச் சித்தாந்தத்தையும், அவரின் அரசியல் வேஷத்தையும், அக்குவேறாக ஆணிவேராக நாம் நன்கு அறிவோம். அவரையும், அவரை குருவாக கொண்ட புலியெதிர்ப்பை மட்டும் அரசியலாக கொண்ட மக்கள் விரோத வேஷதாரிகள், பாரிஸ் கூட்டங்களில் எமக்கு தரும் ஒரு இரு நிமிடங்களில் அம்பலப்படுத்தப்படுவதும் அம்பலமாவதும் தொடருகின்றது. கருத்துச் சுதந்திரத்தை பாதுகாப்பதாக காட்ட, எமக்கு தரும் மிக குறுகிய நேரத்திலேயே, இந்த வேடதாரிகள் அம்பலமாகிவிடுகின்றனார். ஒரு நிமிடம் தான் நான் பேச முடியும் என்றும், இன்னும் ஒரு நிமிடம் தான் உண்டு என்று எனக்கு மட்டும் கருத்துத் தடை வழங்கியவர்கள் தான் இவர்கள். இதற்கு எதிராக, கருத்துச் சுதந்திரத்துக்கான குரல்கள் எதுவும் எழுந்தது கிடையாது. நான் பேசவோ, கூட்டத்துக்கு வரமுடியாதென்றோ அவர்கள் அறிவிக்கும் நிலை வரை, அவர்கள் அடித்து வெளியேற்றும் வரை, இதுபோன்ற கூட்டங்களில் மக்கள் விரோத செயலை அம்பலப்படுத்துவோம். அவர்கள் இலண்டன் பாணியில் பேச்சாளர் மட்டும் அவிப்பதை கேட்கும் அளவுக்கு, கூட்டத்தை நடத்துவதைத் தவிர வேறு வழி அவர்கள் முன் கிடையாது. இருந்தும் புலியெதிர்ப்பு எப்படிப்பட்ட மக்கள் விரோதத் தன்மை கொண்டது என்பது தொடர்ச்சியாக அம்பலமாவதால், இதுவெல்லாம் மிக விரைவில் நடக்கும்.

புலியொழிப்பு அரசியல் அம்பலமான ஒரு சந்தர்ப்பத்தில் தான், பிசாசுடன் (ஏகாதிபத்தியத்துடன்) சேர்ந்து புலியை அழிப்போம் என்று கூச்சலிட்ட அந்த மனித விரோத புல்லுருவியைப் பற்றி, நாங்கள் அரசியல் ரீதியாக நன்கு அறிவோம். இலங்கை அரசின் ஒரு கூலிக் குழுவான ஈ.பி.டி.பியின் வானொலியில் அலம்புவது, இந்தியக் கூலிக் குழுவான ஈ.என்.டி.எல்.எவ். இன் ரி.பி.சி வானொலியில் ஆய்வென்ற பெயரில் ஊதுவது உட்பட, தேனீ இணையம் வரை, அவர் என்ன செய்கின்றார் என்பதை நாம் தெளிவாக அறிவோம்.

ஆட்டுக்கு குழை காட்டி, அவர்களை தொடர்ச்சியாக பலிபீடத்துக்கு அழைத்துச்செல்லும் அந்த இழிவான மலிவான மக்கள் விரோத அரசியல் தான், அவரின் மதியுரை. இந்தா வருது, அந்தா வருது, தமிழ் மக்களே வந்து இந்தா பிடியுங்கள், அதை தூக்கி நிறுத்த என்னைப் பிடியுங்கள் என்கின்றது இந்த இழிவு கெட்ட அரசியல். இப்படி ஏகாதிபத்தியத்துக்காக பேரினவாதிகளுக்காக குலைப்பது அவரின் அரசியல். இதை மூடிமறைக்க, புலி மறுக்கும் ஜனநாயகம்.

தமிழ் மக்களை பேரினவாதிகளின் காலின் கீழ் பலியிட அழைத்துச் செல்லும் இந்த பேரினவாத மதியுரைஞர், மறைமுகமாக புலியின் பலியீட்டை இதன் மூலம் ஊக்குவிக்கின்றார். இந்த இரண்டு போக்குக்கும் வெளியில், மக்களுக்கான எந்த மாற்று அரசியலும் ஏன் அதை வழிகாட்டுவதும் கூட கிடையாது. பேரினவாத அமைப்பில், அவர்களின் தயவில், தமிழ் மக்களுக்கு விடுதலையாம். இதுதான் இந்த சிந்தாந்த மதியுரைஞரின் உயர்ந்தபட்ச வழிகாட்டல். இதற்கு வெளியில், மக்கள் தமது விடுதலைக்காக சிந்திப்பது அபத்தம் என்பதே, இவர்களின் அரசியல் அறிவு கூறுகின்றது. அந்த பிசாசு எடுபிடிக்கு வாலாட்டும் உயிர்நிழலுக்கோ, மக்கள் போராட்டம் என்பது கிண்டலுக்குரிய இசமாகிவிடுகின்றது.

பேரினவாதமும், அதை அரசியலாக கொண்ட எதிர் கட்சிகளும் மக்களை ஏமாற்ற சொல்வதை அப்படியே எடுத்து, அதை வேப்பிலையாக கட்டி ஆடுபவர் இந்த அன்னகாவடிகளின் சிவலிங்கம். இப்படி அதையே ஆட்டுக்கு குழையாக காட்டி, தமிழ் மக்களின் விடுதலைக்குப் பதில் பலிபீடத்துக்கு அழைத்துச் செல்வதே புலியெதிர்ப்பு அரசியல் சாரம்.

இப்படி தமிழ் மக்களை, புலியின் பெயரில் மோசடி செய்து ஏமாற்றுகின்ற ஒரு பொறுக்கியின் வாரிசாக தன்னை அடையாளப்படுத்தும் உயிர்நிழல், அதையே தடம் பிடித்து செல்வது ஆச்சரியமானதல்ல. அவர்களின் அரசியல் வரலாறு முழுக்க இதைத்தான் செய்தனர்.

சிங்கள பேரினவாதம் இந்தா தீர்வு என்று ஊர் உலகத்தை ஏமாற்ற வைத்த வைக்கின்ற குழைகளை, அப்புகாத்து போலே கமக்கட்டுக்குள்ளே செருகிக் கொண்டு வந்து, அதை விரித்து வைத்து அரசியல் விபச்சாரம் செய்கின்றனர். இந்த பேரினவாத சதிகளை, அதன் நுட்பங்களை நாம் படிக்கவில்லை என்று கூறுவதன் மூலம், இந்த சுத்த சூனியங்களை வேடிக்கை காட்ட முனைகின்றனர். நல்ல வேடிக்கை தான் போங்கள்.

இலக்கிய சந்திப்புத் தொடக்கம் இன்றுவரை, சமூகத்தை நோக்கி செயற்பட வக்கற்றுப் போனவர்கள் நாங்கள் அல்ல நீங்கள். உங்களைப் போன்றவர்களுக்கு, அரசியல் பொறுக்கிகள் அவதார புருசராக இருப்பது ஆச்சரியமல்ல. அன்று நித்தியானந்தன், ஜெயபாலன், என்று எத்தனையோ வகையறாக்களை காவித் திரிந்த உங்கள் அரசியலின் தொடர்ச்சியில், புதிய அவதாரம் தான் இந்த சிவலிங்கம். இது எத்தனை காலத்துக்கு என்பதையும், வரலாற்றில் நிச்சயமாக பார்த்துவிட முடியும்.

ஏகாதிபத்திய உலகமயமாதலான முதலாளித்துவமே உன்னதமான அமைப்பாக காட்ட முனையும் உயிர்நிழல், அதில் வாழ்வதாக காட்டி என்னைத் தாக்க முனைகின்றது. 'தான் பெறும் ஊதியம், தான் பெறும் ஆடை, தான் உண்ணும் உணவு, இன்னும் தன் வாழ்வாதாரத்திற்காகப் பெற்றுக் கொள்ளும் எந்த மயிரென்றாலும் அது மார்க்சிய வரையறைகளுக்குள் அடங்குகின்றதா என்று பரிசீலித்துத்தான் அவற்றைப் பெற்றுக்கொள்வார்" இவர்கள் பரிதாபத்துகுரியவர்கள் அல்ல. ஏகாதிபத்திய சமூக அமைப்பு போற்றுகின்ற அது பெத்துப்போட்ட பொறுக்கிகள்.

இதில் கூட, தான் எதைச் சொல்ல வருகின்றேன் என்பதைக் நேரடியாக சொல்ல முதுகெலும்பு கிடையாது. அதாவது அடிப்படை நேர்மையே கிடையாது.

எமது ஊதியம் மட்டுமல்ல, எமது வாழ்க்கை முறை முதலாளித்துவ விதிக்கு அப்பாற்பட்டதல்ல. நாங்கள் கற்பனையில் புரட்சி செய்து, சொற்களில் வாழ்வதில்லை. நிலவுகின்ற சமுதாயத்தினுள் வாழ்கின்றோம். சமூகத்தில் உள்ள அனைத்து மனிதனுக்கும் இது பொருந்தும். சமூகத்துக்கு வெளியில் யாராலும் சுயமாக சுயாதீனமாக வாழமுடியாது.

இருக்கின்ற சமூகத்துக்கு வெளியில் வாழமுடியும் என்ற வரட்டு இசங்களை கற்பித்துக் கொண்டு, அந்த இசங்களால் எம்மை கட்டுடைக்க முடியாது.

நாம் உழைத்து வாழ்கின்றோம். அங்கு முதலாளித்துவ உழைப்பு முறைக்குள் தான் வாழ்கின்றோம். இதில் எமக்கு சந்தேகமே கிடையாது. முதலாளித்துவ அமைப்புமுறைக்கு உட்பட்ட அனைத்துவிதமான, நெளிவுசுழிவான உட்கூறுகளையும் கொண்டதே, எமது உழைப்பு முறையும். நிலவுகின்ற இந்த முதலாளித்துவ சமூக அமைப்பில், இதற்கு வெளியில் யாராலும் வாழமுடியாது. முதலாளித்துவ அமைப்புமுறை மாற்றப்படாமல், கற்பனையில் நாம் மாறியதாக எம்மை கற்பிப்பது, உங்கள் இசம். உங்களைப் போல் (கற்பு என்ற சொல்லைப் பற்றிய உங்கள் பார்வை போல்) போலியாக நம்புவது, நடிப்பது என்பது எமது அரசியலில் கிடையாது. உறவு முறைகள் கூட, முதலாளி தொழிலாளி வகைப்பட்டதே. இதில் எமக்கு எந்த சந்தேகமும் கிடையாது. எமது முதலாளி உங்கள் நெருங்கிய நண்பர் என்பதால், அதை நன்கு கேட்டு தெரிந்து கொள்ளலாமே.

'என்னை சிலர் கேட்டார்கள், பி.இரயாகரனின் 'ஆணாதிக்கமும் பெண்ணியமும்" தொடரைக் கட்டுடைக்கும் படி. பி.இரயாகரன் பெண்ணியத்தைக் கட்டுடைப்பதற்கு அவருடைய கட்டுரைகளில் தொடர்ச்சியாகப் பாவிக்கப்பட்டு வரும் மொழிப் பிரயோகங்களே போதும். சில உதாரணங்கள், மலட்டுத்தனம், தாலிஅறுப்பு, கற்பு, விபச்சாரம், கற்பழிப்பு இப்படியாக…" என்று கூறி விடுவதன் மூலம், எதைத்தான் கட்டுடைத்தீர்கள். சொற்களைக் காட்டி, அதை மொழியில் மட்டும் நீக்கிவிடுவதே புரட்சி என்று நம்புகின்ற லூசுகள் நீங்கள். சொல்லைக்காட்டி, இந்தா கட்டுடைத்துவிட்டேன் பாருங்கள் என்று புலுடா தான் விட முடியும்.

பெண்ணியம் என்றால் என்ன என்று சொல்ல தெரியாதவர்கள் இவர்கள். அதன் மேல் எந்த அறிவும் கிடையாது. நிலப்பிரபுத்துவ ஆணாதிக்க சமூக அமைப்பில் பெண்கள் அனுபவிக்கும் வாழ்க்கையை, பகிரங்கமாக மேடையில் சொல்லத் தெரிந்த பெண் என்பதால் பெண்ணியவாதியாக தன்னைக் காட்டிக்கொள்ள முடிந்தது. ஏகாதிபத்திய பெண்ணின் ஆணாதிக்க சாரத்தை சொல்ல முடியாது, அதையே ஆதரிப்பவர்கள். மறுபக்கத்தில் ஆணாதிக்க அமைப்பை எப்படி ஒழிக்க முடியும் என்றால், அதை கூற முடியாதவர்கள். அதற்காக எந்தத் தளத்திலும் போராடாதவர்கள். சொற்களில் வித்தை காட்ட முனைகின்றனர். ஏகாதிபத்திய கலாச்சாரம் பண்பாட்டுச் சீரழிவைப் பெண்ணியமாகக் காட்டி நிற்பவர் தான், எம்மை கட்டுடைக்கின்றாராம். பெண்ணியம் என்றால் புகைத்தல், மதுபானம் அருந்தல், அரைகுறையாக உடை அணிதல், விரும்பினால் விபச்சாரம் விரும்பாவிட்டால் ஒழுக்கமாக படுத்தல், இப்படி ஆணாதிக்கத்தைப் புரிந்து கொண்டவர்களே இந்த பெண்ணியவாதிகள்.

இவர்கள் மொழிப் புரட்சி செய்கின்றனராம். தொழில் முறையற்ற விபச்சாரத்துக்கு வெளியில் பண்பாட்டு கலாச்சாரம் நுகர்வு சார்ந்த விபச்சாரம் இல்லை என்று மறுக்கவும், ஆணாதிக்கம் கோரும் கற்புக்கு வெளியில் பெண்ணின் சுயமான கற்பை இல்லை என்பதும் தான், இந்த ஏகாதிபத்திய பெண்ணியத்தின் உள்ளடக்கம். புலிகள் இதை முதன் முதலில் உருவாக்கிய நோக்கம் வேறு, இவர்கள் அவர்களிடம் இருந்து பெற்றது, தமது சொந்த சீரழிவின் அடிப்படையில் தான்.

சமூகத்தில் உள்ளதை சொற்களில் புரட்சி செய்யும், சொற் புரட்சியாளர்கள் அல்ல நாங்கள். சொற்கள் சமூகத்தில் நடைமுறையாக உள்ளவரை, அதை மொழியில் மட்டும் மாற்றி விடும் நாடகம் என்பது அதைப் பாதுகாப்பது தான். தாழ்த்தப்பட்ட மக்களை அரிஜனர்கள் என்றழைத்து சொற்களைக் கொண்டு காந்தி முதல் அனைத்து ஏமாற்று பேர்வழிகளும் எதைச்செய்தனரோ, அதையே இந்த ஏகாதிபத்திய பெண்ணியல்வாதிகள் செய்ய முனைகின்றனர். சொற்களை மாற்றிக் காட்டி, மக்களை ஏமாற்றும் வகையறாக்கள் அல்ல நாங்கள்.

சமூகத்தில் நிலவும் அப்பட்டமான சமூக கொடுமையை, அதை அதுவாக உள்ளவாறே சொல்லி அதற்கு சவால் விடுத்து அதை எதிர்த்துப் போராடுவோம். ஒரு விடையத்துக்கு குறைந்தது, இரண்டு பக்கங்கள் உண்டு. ஒற்றைப் பரிணாமத்தில் எதையும் காட்ட முடியாது, கட்டுடைக்கவும் முடியாது.

1. ஆணாதிக்க சமூக அமைப்பே விபச்சாரத்தை செய்கின்றது என்பது ஒன்று. இதற்கு பெண்கள் பலியிடப்படுகின்றனர்.

2. சமூக உறவை மறுத்து, பாலியலையே தனிமனித நுகர்வாக்கி விபச்சாரம் செய்வது.

இப்படி சந்தைப் பொருளாக, மறுபுறம் சந்தை நுகர்வுப் பொருளாக என்று, விபச்சாரத்துக்கு இரண்டு பக்கம் குறைந்தது உண்டு.

இது போல் தான் கற்பும்.

1. கற்பு ஆணாதிக்க வடிவில் அது வரையறுக்கப்படுகின்றது. இது எதிர்மறையில் அதை நுகரும் வடிவில், பெண்ணை சந்தைப் பொருளாக்குகின்றது. ஒன்றில்லை என்றால், மற்றையது கிடையாது.

2. இதற்கு எதிரான போராட்டத்தை கற்பு சார்ந்து பெண் நடத்துகின்றாள். இங்கு தற்காப்பு பெண்ணின் அடிப்படையாக உள்ளது.

இப்படி நாம் சொற்கள் பற்றி தெளிவு கொண்டவர்கள். சொற்களைக் கொண்டு, சமுதாயத்தை ஒற்றைப் பரிணாமத்தில் கட்டுடைக்க முடியாது. இப்படி 'ஒற்றைப் பரிமாணத்துடன் எதையுமே பார்க்கப் பயிற்றுவிக்கப்பட்டவர்கள்" நாங்கள் அல்ல. நீங்கள் தான் என்பதை இது காட்டவில்லையா? இது பற்றி நான் எழுதிய கட்டுரையை விவாதத்துக்கு எடுத்து விவாதிக்க முடியுமா? முடிந்தால் அதை கட்டுடையுங்கள் பார்ப்போம். ஊரையும் உலகத்தையும் ஏமாற்ற வேண்டாம். இது தான் என் கட்டுரை ' பெண்ணின் கற்புரிமையை பாதுகாக்கும் போராட்டத்தில், உருவகமான ஆணாதிக்க "கற்பு" என்ற அடித்தளத்தை தகர்ப்பது எப்படி?

இந்த புலுடா பேர்வழிகளின் மொழிப் புரட்சி பற்றி, கார்ல் மார்க்ஸ் மிக அழகாகவே எள்ளி நகையாடுகின்றார்."...ஒரு தத்துவஞானி ஏதாவதொரு வகையில் விமர்சனம் செய்த உடனே அது செத்துவிட்டதாகக் கருதப்படும், வரலாற்றின் பக்கங்களிலிருந்து அகற்றப்படும், அதோடு எல்லா செய்முறைக் காரியங்களுக்கும் கூட ஒழிக்கப்பட்டுவிடும்."என்று கருதுகின்ற, போலிகளையும் போலித்தனத்தையும் தோலுரிக்கின்றார். இதை மார்க்கிய தலைவர்கள் சொன்னதால் வரட்டுத்தனமாகி தவறாகிவிடுமா? இதை சொற்கள் மூலம் கட்டுடைக்க முடியுமா? உங்களின் இன்றைய ஆசான் குரு சிவலிங்கத்திடம் கட்டுடைக்க கோருங்கள்.

உங்களாலும், உங்கள் கூட்டத்தாலும் முடியாது. ஏனெனின் மார்க்ஸ் கூறுவது போல்'... ஒரு பொருளின் பெயரை மாற்றுவதன் மூலம் அப்பொருளையே மாற்றி விடுவதாய் நினைத்துக் கொள்ளுகின்றார்கள்... உண்மைகளை எல்லாம் பார்க்காமலே கண்களைக் கெட்டியாய் மூடிக் கொண்டு ஆவேசமாய் இச்சொல்லை எதிர்த்துப் போராடுகிறார்கள்... என்பது தெரியாமலே பேசிக் கொண்டிருக்கிறார்கள் - அப்படியானால் அவர்கள் குழப்பம் உண்டாக்குவதைத் தவிர வேறு எதுவும் செய்யவில்லை அல்லது அவர்கள் தெரிந்தே பேசுகிறார்கள் என்றால், பாட்டாளி வர்க்கத்தின் இலட்சியத்துக்குத் துரோகம் புரிகின்றனர். இரண்டில் எதுவாயினும் , அவர்கள் பிற்போக்குக்குப் பணியாற்றுவோரே ஆவர்." நாம் வாழ்கின்ற தமிழ் சமூகத்தில் படுபிற்போக்காளர்கள் யார் என்பதை, இந்த மறுக்க முடியாத வாதம் எடுத்துக் காட்டுகின்றது. இதைச் சொன்னவர்களை உங்கள் பாணியில் வரட்டுவாதியாகவே காட்டுங்கள், ஆனால் இதை கட்டுடைக்க முடியாது. ஏகாதிபத்தியத்தின் முழு அறிவுத் துறையாலும் கூட முடியாது போனது, இனியும் கூட முடியாது. அது தான் மார்க்சியம் சமூக விஞ்ஞானமாக உள்ளது.

மார்க்சின் சமூக விஞ்ஞானத்தின் ஆளுமை, இதை மேலும் அம்பலமாக்குகின்றது. 'விஷயங்களின் பெயர்களை மாற்றிவிட்டால் விஷயங்களையே மாற்றி விட்டதாக இந்தக் கனவான்கள் நினைக்கிறார்கள். மிகவும் ஆழமான இச்சிந்தனையாளர்கள் இப்படி மொத்த உலகத்தையுமே கேலி செய்கிறார்கள்" என்னையும் உன்னையும் சேர்த்து லட்சுமி கேலிசெய்ய முனைகின்ற உண்மையை, மார்க்ஸ் வேடிக்கையாகவே எள்ளிநகையாடி விடுகின்றார். இப்படி மனிதகுலத்தையே கேலி செய்து, அதே ஒடுக்கு முறைக்குள் சமூகம் தொடர்வதை மூடிமறைக்க முனைபவர்கள் தான் இந்த பிற்போக்குவாதிகள். எப்படி போராட வேண்டும் என்ற உணர்வுகள் எதுவுமின்றி, தமது சொந்த அரசியல் மலட்டுத்தனத்தை பாதுகாத்துக் கொள்ள, சொற்புரட்சி பற்றி வாய் வீச்சுகள். மொழி பற்றி கூட பேச முனைகின்றார்.

மொழி பற்றி, மொழி மாற்றம் பற்றி, என்னிடம் 'மொழி பற்றி எந்தப் பிரக்ஞையுமற்றவர்" என்று கூறி, மொழி மாற்றத்தைப் பற்றியும் கூறுகின்றார். இது தொடர்பாக மார்க்ஸ் கூறுவதை பாருங்கள். ' ..., ஓர் உருவக வழக்குதான் அடித்தளம் என்றாகிறது. சமுதாயம் தன்னைப் பீடித்துள்ள கேடுகளை எல்லாம் ஒழித்துக் கட்ட விரும்புகிறதா? சரி, ஓசைக்கேடான சொற்களை எல்லாம் ஒழித்துக் கட்ட வேண்டியதுதான், மொழியை மாற்ற வேண்டியதுதான். சமுதாயம் இதற்காக வேண்டி அறிஞர் பேரவைக்கு விண்ணப்பம் செய்து அதன் அகராதிக்கு ஒரு புதிய பதிப்பை வெளியிடுமாறு கேட்டால் போதும்" சமூதாயப் புரட்சியை மொழிப்புரட்சி ஊடாக செய்வதை, செய்ய முடியும் என்பதை எள்ளி நகையாடுகின்றார். இதுவா வரட்டுத்தனமானது?

சமுதாயப் பிரச்சனையை மழுங்கடிக்கின்ற, பிரச்சனையை திசைதிருப்பி சொல் வித்தையை காட்டுகின்றவர்கள், சமூதாயத்தின் இழிவைப் அசலாகவே பாதுகாப்பவர்கள் தான். இப்படிப்பட்டவர்கள், சமுதாயத்தின் உண்மையான பிரச்சனை சார்ந்து போராட முனையும் எம்மை, யாராலும் கட்டுடைக்க முடியாது. கட்டுடைக்க வெளிக்கிட்டால், அவர்களே கட்டுடைந்து போவார்கள். நாங்கள் மக்களை சார்ந்து நிற்கின்றோம்.

'மொழி பற்றி எந்தப் பிரக்ஞையுமற்றவர்" என்கின்றார் வேடிக்கை தான். பாரிசில் ஒரு திரைப்பட விழாவில், 'தீக் கொழுந்து" படத்தை பார்த்துக் கொண்டு இருந்த போது, திடீரென அதை பார்க்கக் கூடாத படம் என்று கருதிய நீங்கள், உங்கள் வர்க்க இசம் சார்ந்து நிறுத்தினீர்கள். பார்க்க கட்டுரையை.

http://www.tamilcircle.net/unicode/general_unicode/027_general_unicode.html

நான் பார்வைச் சுதந்திரத்தை கோரிய போது, உங்கள் கணவரும் உயிர்நிழல் ஆசிரியருமான கலைச்செல்வன், 'மொழி பற்றி எந்தப் பிரக்ஞையு"டன் செயல்பட்டார். உங்கள் ஆதரவுடன், அரங்கேறிய அந்த அசிங்கத்தில் 'நீ எத்தனை பெண்களைக் கற்பழித்தாய், எத்தனை வீட்டைக் கொள்ளை அடித்தாய்…." என்று பலர் முன் கூறி, என்னை வன்முறை மூலம் தாக்க முனையவில்லையா? உடல் வன்முறை, அவதூறு, மொழி வன்முறை, இறுதியாக உங்கள் புனிதமான சொல்லைக் கூட நாயைவிட கேவலமாக குதறிய போது, உங்கள் பெண்ணியம் விபச்சாரமா செய்தது. இது போல் பல நடந்துள்ளது. நிருபாவுக்கு உங்கள் ஆதரவுடன், ஒரு இலக்கியச் சந்திப்பில் கலைச்செல்வன் ஆடிய ஆணாதிக்க வசைக் கூத்து என்ன? உயிர்நிழல் முன்னாள் ஆசிரியர் ஒருவர் சம்பந்தப்பட்டு, உங்கள் வீட்டில் அவருக்கு பிடித்த இறுவட்டு சிடி உடைந்த போது, சீறிய ஆணாதிக்கத்தை கட்டுடைக்க தெரியாது போனது ஏன்? எம்மிடம் 'மொழி பற்றி எந்தப் பிரக்ஞையுமற்றவர்" என்ற கூறுகின்ற, உங்கள் கேவலத்தை அந்த அசிங்கத்தை, முகத்தை திரும்பிப் பாருங்கள் அழகாகத் தெரியும்.

இந்த கேவலம் ஒருபுறம், இந்த நிலையில் உண்மையை அறிய விவாதம் அவசியமாம்! இதை செய்ய மறுப்பவர்கள் நாங்களா? நீங்களா? எதை விவாதிக்க உங்களால், உங்கள் கும்பலால் முடியும்? நான் தயார்? ஏகாதிபத்தியத்துக்கும், பேரினவாத அரசுக்கும் காவடி எடுக்கும் கும்பலுடன் சேர்ந்து, தாளம் போடுகின்ற உங்களால், மக்களுக்காக ஒரு நாளும் விவாதிக்க முடியாது. நடைமுறையும், அது சார்ந்த கருத்துக்களும் அதை மேலும் அம்பலமாக்குகின்றது.

கருத்துச் சுதந்திரம் பற்றி என்ன வேடிக்கையா செய்கின்றீர்கள். அதை அனுமதிக்க மறுப்பவர்கள் நீங்கள். அன்று நான் பார்வைச் சுதந்திரத்தைக் கோரிய போது வன்முறை, 1995 பாரிஸ் இலக்கியச் சந்திப்பில் நான் பேசுவதாக இருந்தால் ஒரு நிமிடம் என்று எனக்கு மட்டும் சிறப்பு நிபந்தனை, அண்மையில் சபாலிங்கம் கூட்டத்தில் ஒரு நிமிடம் என்று திடீர் சிறப்பு உத்தரவுகள், இப்படி கருத்து விவாதச் சுதந்திரம் நாறுகின்றது. இப்படி உங்கள் கருத்துச் சுதந்திரம் உலகம் அறிந்தது. கட்டுரையை போடக் கொடுத்தால் வெட்டித் திருத்துவது, சின்ன எழுத்தில் வாசிக்க முடியாத வகையில் எனது கட்டுரையை மட்டும் போடுவது என்று, உங்கள் நடைமுறை பிரசித்தமானவை.

நீங்கள் தான் விவாதம், கருத்து, மொழி என்கின்றீர்கள். 'மொழி பற்றி எந்தப் பிரக்ஞையுமற்றவர்" என்று சொல்வதில் என்ன வேடிக்கை!

சரி கற்பு என்ற சொல்லை நீக்கக் கோரியது யார்? வேறு யாருமல்ல. புலிப் பாசிசம் தான். தமிழ் பெண்களை ஏமாற்றி தமது குறுகிய நலனுக்கு ஆயுதபாணியாக்க, இதை பெண்ணியமாக முதன் முதலில் வைத்தவர்கள் புலிகள். இப்படி புலிகளின் நலனின் எடுபிடியானவர்கள் பெண்கள் மட்டுமல்ல, புலியல்லாத பெண்களும் தான். பாவம் பரிதாபத்துகுரியவர்கள். புலிகள் பெண்களை ஏமாற்றி அணிதிரட்ட, பெண்ணிய புரட்சியாக அதைக் காட்ட பயன்படுத்திய சொல்லை, கடைவிரித்தவர்கள் சரிநிகர் தான். சரிநிகரின் அரசியல் வங்குரோத்தை மூடிமறைக்க, தமது முற்போக்கை உலகெங்கும் காட்ட கடைவிரித்து பரப்பினர். பெண்ணியத்தின் பெயரில் என்ன செய்வது என்று தெரியாதவர்கள், அவல் போல் கிடைத்த இதை, தமது பெண்ணிய கோட்பாடாக்கினர். புலியின் பெண்ணிய நோக்கமும் சரி, புலியல்லாத இந்த பெண்ணிய நோக்கமும் சரி, உள்ளடக்கத்தில் ஒன்று தான்.

'மக்கள் பற்றி கதறும் கதறல் இவருடைய மக்கள் யாரினதும் காதிலும் விழவில்லையா என்பது…" மக்கள் பற்றி இவர்கள் செய்யும் கேலி இவர்கள் மக்கள் பற்றி என்ன வக்கிரம் கொண்டுள்ளார்கள் என்பதைப் புரிய வைக்கின்றது. புலிகள் கூட இதே போல், எங்கே உங்கள் மக்கள் என்கின்றனர். எத்தனை பேர் உங்களுடன் உள்ளனர் என்கின்றனர். இவர்களும் ஒருவர் இருவர் என்று கூவுகின்றனர். புலிகள் எங்கே உங்கள் மக்கள் போராட்டம் என்கின்றனர். இவர்களும் அப்படியே கேட்கின்றனர்.

உங்களைப் போன்ற மக்கள் விரோத புல்லுருவிகள் சமூகத்தை ஆட்டிப்படைக்கின்ற போது, மக்களைப் புரட்சி செய்ய அறிவூட்டுவது என்பது கடினமானது. நீண்ட காலம் பிடிக்க கூடியவையே. நிச்சயமாக அது நடக்கும். இல்லை, நாம் சமகாலத்தில் தோற்றாலும் கூட, எமது இந்தக் கருத்தை வரலாற்றில் பொய்யாக யாராலும் நிறுவிவிட முடியாது.

சமகாலத்தில் எனது முயற்சியையும் அதன் உண்மைத் தன்மையையும் பொய்யாக்கிவிடாது. இதை ஆதரிக்காது ஒத்துழைக்காது மறுத்து, ஒரு முழுநேர பணியாளனாக சமூகத்துக்காக இயங்கும் வகையில், உதவாத இந்த அரசியல் இலக்கிய போக்கின் இழிநிலை மீது, அதன் மக்கள் விரோதத் தன்மை மீதும், மனித வரலாறு துல்லியமாக அம்பலப்படுத்தும். இதையும் யாரும் தடுக்கமுடியாது.

மரணத்தின் பின் போலியான அஞ்சலிகள், வாரிசுத்தனங்கள் மலிவாகிப் போன இந்த பிற்போக்கான கருத்தியல் உலகில், அதையும் நாம் தற்காத்து போராடவேண்டியுள்ளது. அனாதையாகக் கூட உடலால் கருத்தால் நாம் மரணிக்கலாம், போலிகளின் புகழுக்குள் மரணிப்பதை நாம் வெறுக்கின்றோம்.

இந்த வகையில் மனித வாழ்வுக்காக, அவர்களின் விடுதலைக்காக, இந்த எளிய கடினமான நிலையில் போராடவேண்டியுள்ளது. வாழ்வுக்காக உழைத்தபடி, சமூகத்துக்காக முழு நேரமாக உழைக்கும் பணி மிகமிக கடினமானது. ஆனால் மகிழ்ச்சியாகவே ஏற்றுக்கொண்டுள்ளோம். இதைக் கொச்சைப்படுத்தலாம், அவதூறு செய்யலாம், நாங்கள் தலைநிமிர்ந்து உண்மையின் பக்கம் உறுதியோடு நிற்கின்றோம்.

இந்த சமூக அமைப்பில் புறக்கணிக்கப்படுகின்றோம் என்ற எமது கூற்றின், சாரம் மக்களால் எனறல்ல. மாறாக யாரெல்லாம் மாற்று கருத்துவாதிகள், கருத்துச் சுதந்திரம் என்று சொல்லிக்கொண்டே அரசியல் விபச்சாரம் செய்கின்றனரோ, அவர்களால் என்பதை சுட்டியதாகும். எனது கருத்தை மாற்றுக் கருத்தாக அங்கீகரிக்க மறுக்கின்ற இழிவான நிலையில், அது ஏற்படுகின்றது. இந்த தடைகளைக் கடந்து, தனிமனிதனாக ஒரு சில தோழர்களின் உதவியுடன் மக்களை அடைய வேண்டி உள்ளது. மக்கள் போராட்டம் என்றால் என்ன? இது பலர் முன் புதிரான கேள்வியாகி விடுகின்றது.

ஒருபுறம் புலிகள், மறுபுறம் புலியல்லாத புல்லுருவிகளின் கோட்பாடுகள், இதை அதிசயமான பொருளாக்கி விட்டனர். இது போன்ற இழிவாட ல், கிண்டல்கள், நக்கல்கள் சமூகத்தில் ஆதிக்க மொழியாகின்றது. மக்கள் போராட்டம் என்பதே இழிவுக்குள்ளாகிவிடுகின்றது. நாங்கள் இதை எதிர்நீச்சல் ஊடாக சந்திக்கின்றோம், சந்திப்போம்.

பி.கு: மக்கள் போராட்டம் என்றால் என்ன? இதை தனியான தலைப்பாக கொண்டு விரைவில் பார்ப்போம்.


No comments: