தமிழ் அரங்கம்

Sunday, October 28, 2007

'தேசியம் எதிர் தலித்தியம்' ? 'தேசியம் எதிர் மார்க்சியம்' ?

பி.இரயாகரன்
28.10.2007


டைந்தெடுத்த அரசியல் உள்நோக்கம் கொண்ட திட்டமிட்ட திரிப்பு. இது தலித்துக்கு எதிரானவர்களின் சதி. ஆதிக்க சாதியினர் தலித்துக்களுக்கு கொடுக்க விரும்பிய நஞ்சு.

புலியெதிர்ப்பை அரசியல் அடிப்படையாக கொண்டவர்களும், சகல இயக்க புல்லுருவிகளும் இதைத்தான் நிறுவ முனைந்தனர், முனைகின்றனர். இதை ஒப்புப்பாடவும், தலித்தியத்தை சவப்பெட்டியில் வைத்து தூக்கி எடுத்துச் செல்லவும், தலித்மாநாட்டில் கும்மாளமாக குழுமி நின்றனர். இதற்கு ராகவன் என்ற முன்னாள் புலியும், இன்றும் புலியாகவே சிந்தித்து எழுதிய கட்டுரை (http://www.satiyakadatasi.com/?p=115)உதவும் என்று நம்பினர்.

இப்படி தலித் மாநாட்டை தேசிய எதிர்ப்பு, மார்க்சிய எதிர்ப்பு அரசியல் மாநாடாக்க விரும்பினர். இப்படி புலியெதிர்ப்பு மற்றும் இயக்க புல்லுருவிகள் அங்கு சலசலத்தனர். தலித்திய மாநாட்டையும், தலித்திய பிரச்சனையையும் ஏற்றுக்கொள்ள மறுத்தவர்கள் தேசிய எதிர்ப்பு, மார்க்சிய எதிர்ப்புகளை முன்வைத்தனர். இவர்கள் அங்கம் வகிக்கும் இயக்கங்கள், தலித் மக்களுக்கு எதிரானதாகவே இருந்தது, இருக்கின்றது. ஆனால் தலித் மாநாட்டுக்கு ஆதாரவாம். இப்படி ஒடுக்கப்பட்ட மக்களுக்கு வேடிக்கை காட்டுகின்றனர்.

இந்த மாநாடு நடப்பது உறுதியான போது, எப்படி விழுங்குவது என்றே அவர்கள் திட்டமிட்டனர். தாம் இதை எதிர்க்கவில்லை என்று காட்டவும், ஆதரவு தெரிவிப்பதாக கூறி விழுங்கவும் விரும்பினர். இந்த வகையில் பலர் இதற்கென்றே, பாடைகளைக் கட்டிக்கொண்டு வந்திருந்தனர். ரீ.பீ.சீ இந்த அடிப்படையில், திட்டமிட்டு வானொலி நிகழ்ச்சிகளை நடத்தியது.

இந்த அரசியல் சதியையும், அதன் நுட்பத்தையும், இதன் சூக்குமத்தையும், நாம் புரிந்து கொண்டு, இதன் கபடத்தை தோலுரித்தோம். எமது எச்சரிக்கை கலந்த உணர்வுகள் மூலம், அதை துல்லியமாக கிள்ளி எறிந்தோம். தலித் மக்களின் வெற்றி என்பது, புலியெதிர்ப்பு அணிக்குள் அது கொள்கையளவில் சரணடைய மறுத்தது தான்.

எமது அனுபவம், சந்தர்ப்பங்கள், தொடர்ச்சியான புலியெதிர்ப்பு அணிகளின் நடத்தைகள், எமது தெளிவான துல்லியமான அணுகுமுறை மூலம், சதிகளையும் சூழ்ச்சிகளையும் கபடத்தையும் சுக்குநூறாக்கினோம்.

'தமிழ்த் தேசியமும் தலித்தியமும்" என்ற ராகவனின் கட்டுரையும், அவரின் உரையும் தலித்தியம் எதிர் தேசியம், தலித்தியம் எதிர் மார்க்சியம் என்று நிறுவுவதே நோக்கமாக இருந்தது. இதன் மூலம் அவர் சாதிக்க நினைத்தது, தலித் மக்களை புலியெதிர்ப்பின் பின் ஒன்று இணைப்பது தான். வேறு எந்த தலித்திய நோக்கமுமல்ல. அவர் கூற முனைந்தது, நாங்களும் நீங்களும் புலியெதிர்ப்பில் ஒன்று என்பதே. இங்கு நாங்கள் என்பது உயர்சாதியினர், நீங்கள் என்பது தாழ்ந்த சாதியினர். இப்படி ஆதிக்க சாதியினரின் குரலாக, அவரின் அறிவொழுகும் கட்டுரையில் பாசிசமாக கொட்டியது.

இதற்கு அவர் எடுத்துக் கொண்ட மையமான வாதம், தேசியம் சமன் புலி என்ற எடுகோள். இப்படி புலியெதிர்ப்பின் அரசியல் அச்சே, இதில் தான் உள்ளது. உண்மையில் ராகவன் 1980 களின் முன்னும் பின்னும் எதை அவர் தேசியமாக கருதி புலியில் செயல்பட்டாரோ, அதை இன்று மீண்டும் ஒப்புவிப்பது தான, இதில் உள்ள அரசியல் சூக்குமம். 1978 இல் நடந்த புலிகளின் உடைவில் ராகவன் போன்றவர்கள் எதை தேசியம் என்று கருதி புலியின் பின் நின்றனரோ, அதையே இன்றும் தேசியமாக கற்பிப்பது தான் அபத்தம்.

பிரபாகரனும் புலிகளும் கூறிய தேசியமும், அன்று புலியில் இருந்து பிரிந்தவர்கள் வைத்த தேசியமும் வேறு. பிரிந்து சென்றவர்களுடன் இருந்த சுந்தரம், இயக்கத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட உமாமகேஸ்வரனை மறுபடியும் சேர்த்து, பழையபடி புலியின் தேசியத்தை உயர்த்தினர். பிரிந்த பலர் ஒதுங்கினர். ஒரு சிலர் புதிய இயக்கங்களை உருவாக்கினர். இப்படி தேசியம் பற்றி பல வரலாறுகள் தொடர்ச்சியாக இருக்க, ராகவனும் அவரையொத்த புலியெதிர்ப்புக் கும்பல்கள், புலித் தேசித்தையே இன்றும் தேசியமாக காட்டுவது மூலம் தான் இவர்களின் அரசியல் இருப்பே நீடிக்கின்றது.

இப்படி உண்மையில் பிரபாகரன் புலிக்கு மட்டும் தலைவர் அல்ல, புலியெதிர்ப்பு அணிக்கும் தலைவராக உள்ளார். பிரபாகரன் வைக்கும் தேசியத்தை ஆதரிப்பது, அவரின் தேசியத்தை தேசியமாக காட்டி எதிர்ப்பது என்ற வகையில், பிரபாகரன் புலி மற்றும் புலியெதிர்ப்பின் உண்மையான கோட்பாட்டுத் தலைவராகிவிடுகின்றார். பிரபாகரனின் தேசியத்தை தேசியமாக காட்டித் தான், தலித் எதிர் தேசியம் என்று நிறுவ முனைகின்றனர். இப்படித்தான் இந்த கும்பலின் மொத்த அரசியலும் உள்ளது.

கடந்த 30 வருடத்தில் புலிக்கு வெளியில் மாற்று தேசியம் இருக்கவில்லையா? இப்படி ஒன்று இல்லை என்பது புலியெதிர்ப்பு மற்றும் துரோக இயக்கங்களின் அரசியல் நிலையாகும். எதிரியுடன் அன்னிய சக்திகளுடன் கூடி நிற்கின்ற, இந்த இழிந்து போன பிரிவுகளின் அரசியல் என்பது, அதை இல்லை என்பதுதான். புலிகளைப் பொறுத்த வரையில் அதை அழித்தல், அவர்களின் இருப்பு சார்ந்ததாகின்றது.

நாம் அந்த கூட்டத்தில் தெளிவாக மாற்று தேசியத்தை சுட்டிக்காட்டிய வரலாறு, உள்ளடக்கத்தில் தலித்திய வரலாறும் கூட. ஆம் அன்றைய இயக்கங்கள் அனைத்தும் அதாவது புலி உட்பட, அனைவரும் சமூக விடுதலையையும் சமூக ஒடுக்கு முறைக்கு எதிரான வேலைத்திட்டத்தையும் முன்வைத்தே இயக்கங்களைக் கட்டினர். இதனடிப்படையில் அணிகள் இயக்கத்தினுள் உட் சென்றனர். இதை யாராலும் மறுக்க முடியாது.

இன்று பாசிச புலிகளாகி இதை மறுக்கும் அவர்களின், அன்றைய வேலைத்திட்டம் தெளிவானது. சில உதாரணங்கள் இதை தெளிவுபடுத்தும். 'தமிழ் மக்களுடைய சுயநிர்ணய உரிமைக்கான போராட்டத்தை மாக்சிய-லெனினிச சிந்தனையின் அடிப்படையில் நியாயப்படுத்தினார்." என்று பாலசிங்கம் கூறுகின்றார். 'தேசிய விடுதலை எனும் பொழுது ஒடுக்கப்பட்ட எமது மக்களின் அரசியல் விடுதலையையும், சுதந்திர சோசலிச தமிழீழ அரச நிர்மாணத்தையுமே" தமது இலட்சியம் என்றனர் தமது முதல் வேலைத்திட்டத்தில். இப்படி மக்களின் அரசியல் விடுதலையைப் பற்றி அவர்களின் முதல் அறிக்கை தெளிவாகவே பேசுகின்றது.

அந்த விடுதலை என்பது 'சுதந்திர தமிழீழம் ஒரு மக்கள் அரசாகத் திகழும். மத சார்பற்ற, சனநாயக சோசலிச அரசாக அமையும். மக்களால் தெரிவு செய்யப்பட்டு, மக்களால் நிர்வகிக்கப்படும் ஆட்சியாக இருக்கும். சகல பிரஜைகளும் சமத்துவத்துடனும், சனநாயக சுதந்திரங்களுடனும் வாழ வகைசெய்யும்" ஆட்சியாக அமையும் என்றனர்.

அத்துடன் அவர்களின் முதல் அறிக்கை விட்டுவிடவில்லை. "சோசலிசப் புரட்சி எனும்பொழுது எமது சமூகத்தில் நிலவும் சகலவிதமான சமூக அநீதிகளும் ஒழிந்து, ஒடுக்குதல் முறைகளும் சுரண்டல் முறைகளும் அகன்ற, ஒரு புதிய புரட்சிகர சமதர்ம சமுதாய நிர்மாணத்தையே குறிக்கின்றோம்" என்றனர்.

சமூக அமைப்பை விளக்கும் அவ் அறிக்கை 'தமிழீழ சமூக வடிவமானது ஒரு முதிர்ச்சிகண்ட முதலாளித்துவ உற்பத்தி முறையைக் கொண்டிருக்கவில்லை. முதலாளிவர்க்கம் தொழிலாளி வர்க்கம் என்ற பிரதான வர்க்க முரண்பாட்டின் அடிப்படையில் பொருள் உற்பத்தி முறை இயங்கவில்லை. வளரும் முதலாளித்துவ அம்சங்களும், பிரபுத்துவ எச்சசொச்சங்களும், சாதிய தொழில் பிரிவு உறவுகளும் ஒன்று கலந்த ஒரு பொருளாதார அமைப்பானது சமூக அநீதிகள் மலிந்த ஒடுக்கு முறைகளையும் சுரண்டல் முறைகளையும் கொண்டுள்ளது. எமது சமூகத்தில் ஊடுருவியுள்ள சகலவிதமான சமூக ஒடுக்குமுறைகளையும் ஒழித்துக்கட்டி, வர்க்க வேறுபாடற்ற சமதர்ம சமுதாயத்தை கட்டி எழுப்புவதே தமிழீழ விடுதலைப் புலிகளின் இலட்சியமாகும்" என்றனர்.

இதை முன்வைக்கும் எம்மை புலிகள் துரோகி என்கின்றனர். புலியெதிர்ப்போ எம்மை புலி என்கின்றனர். அதை விடுவோம்.

சகல இயக்கமும் இதையொத்த ஒரு வேலைத்திட்டத்தை அல்லது இதைவிட உயர்ந்த வேலைத்திட்டத்தை முன்வைத்து தான் அமைப்பைக் கட்டினர். எந்த உறுப்பினரும், இதற்கு எதிரான உணர்வுடன் அமைப்புகளில் இணையவில்லை. இன்றைய தலித் மாநாடு கூட, இந்தளவுக்கு கொள்கையளவில் கூட முன்னேறவில்லை. அந்தளவுக்கு அது பிற்போக்காகவே இன்றும் உள்ளது.

அன்று இப்படி வைக்கப்பட்ட முற்போக்கான நடைமுறைச் சாத்தியமான சரியான தேசியத்தை, இன்று போல் அன்றும் மறுத்தவர்கள் யார்? இயக்கங்களுக்கு தலைமை தாங்கியவர்களின் தலைமை தாங்கும் தகுதியற்ற அறிவற்ற குருட்டுத் தன்மை, இராணுவ சாகசத்துடன் தலைமையை நிர்ணயம் செய்ததும், அன்னிய சக்திகளின் கூலிக் குழுவாக (இந்தியாவும் இந்தியாவூடாக ரூசியாவும் மற்றும் அமெரிக்கா) மாறத் தொடங்கி போது, இந்த இலட்சியங்களை, தலைமையே எதிராக பார்க்கத் தொடங்கியது. இது தான் எமது இயக்க வரலாறு. இப்படித் தான், மனித குலத்துக்கு எதிராக அவாகள் இயங்கத் தொடங்கினர்.

இயக்கம் முன்வைத்த மனித இலட்சியங்களை இயக்க நடைமுறையில் கோரியவர்களை, அதை அடிப்படையாக கொண்டு இயங்கியவர்களை, உள்ளியக்க படுகொலைகளின் மூலம் அந்த முற்போக்கான தேசியக் கூறை அழித்தனர். பலரை திட்டமிட்டு ஒதுக்கினர். பிற்போக்கு சக்திகளைக் கொண்டு தலைமையை நிரப்பினர். அதாவது உள்ளியக்க படுகொலைகளின் மூலம் மனித இலட்சியத்தை முன்வைத்தவர்கள் கொல்லப்பட்டனர். சித்திரவதைகளை சந்தித்தனர். பலரை சிதைத்தனர். அரசியலை விட்டு ஓடவைத்தனர். இப்படி உள்ளியக்கத்தை தூய பிற்போக்கான கூறாக மாற்ற, முற்போக்கை சுத்திகரித்தனர். அடுத்து சமூகத்தில் இதைச் செய்யத் தொடங்கினர்.

புலிகள் மற்றைய இயக்கங்களை அழித்து வரலாற்றை தனதாக்கும் முன்பாக, அனைத்து பெரிய இயக்கமும் இதைத்தான் செய்தனர். இயக்க அழிப்பை புலிகள் முன்னெடுத்த பின், அனைத்தையும் புலிகள் முழுமையாக செய்து முடித்தனர்.

இப்படி தான் முற்போக்குத் தேசியம், பிற்போக்கு தேசியமாக மாறியது. இதைத்தான் ராகவனும் தலித் மாநாட்டில் இருந்த பலரும் செய்தனர் அல்லது கோட்பாட்டளவில் அதை ஆதரித்தனர். இன்றுவரை ஆதரிக்கின்றனர்.

இந்த தலித் மாநாடு, முற்போக்கு தேசியத்தில் சாதி ஒழிப்பை வலியுறுத்தி கொல்லப்பட்டவர்களை அடையாளம் காண மறுத்து நின்றது கண்கூடு. அதை அவர்கள் உணரவில்லை என்ற அடிப்படையில், தமது சுயவிமர்சனத்தை வைக்க வேண்டியது அவசியமானது என்ற வகையில், அவர்கள் மீதான விமர்சனத்தை செய்ய முற்படவில்லை. இப்படி உண்மையில் தலித்திய பிரதிநிதிகளாகவும் கூட, நாங்கள் மட்டுமே வரலாற்று தொடர்ச்சியில் நிற்பது இன்று வெளிப்படையானது.

இப்படி தேசியம் தொடர்பான வரலாறு இருக்க, ராகவன் தேசியம் எதிர் தலித்தியம் என்கின்றார். யாரெல்லாம் தேசியத்தின் மூலம் சாதியை ஒழிப்பதாக கூறி அணிதிரட்டினரோ, அவர்களே அதை நடைமுறையில் கோரியவர்களை கொன்றதை 'தேசியம் எதிர் தலித்தியம்" மூலம் மூடிமறைக்கின்றனர். இப்படிக் தாங்கள் கொன்றதைக் கூட, அவர்கள் தமது பதிவில் எடுக்க மறுத்துள்ளார். எப்படிப்பட்ட தலித் விரோதிகள். இந்த கொலைகளை நியாயப்படுத்த, கொன்றவர்களின் வலதுசாரி பாசிசத்தை தேசியமாக காட்டுகின்றனர். இப்படித்தான் அவரின் தலித் பற்றி வலதுசாரிய மலட்டு ஆய்வுரை தொடங்கியது.

ராகவன் புலியின் தலைமையில் இருந்த போது, பாசிசத்தை தேசியமாக கருதிசெயல்பட்டதை கொள்கையளவில் கூட சுயவிமர்சனம் செய்யாமையை தான் 'தேசியம் எதிர் தலித்தியம்" என்கின்றது. தாம் ஏன் கொன்றோம் என்ற உள்ளடகத்தை மூடிமறைத்து, அதை தேசியம் என்று கூறி நியாயப்படுத்துவது என்பது கடைந்தெடுத்த பொறுக்கித்தனம். அவர் இயக்கத்தில் இருந்து விலகியது என்பது, தேசியம் பற்றிய மாற்று அரசியலில் இருந்தல்ல. அதையே அவரின் 'தேசியம் எதிர் தலித்தியம்" கோட்பாடு அழகாக நிறுவுகின்றது. அவர் புலியில் இருந்து விலகியது, தனது அதிகாரம் பற்றியதேயொழிய தேசியம் பற்றியதல்ல. தேசியம் பற்றி அவரின் கருதுகோள், இதை நிறுவுகின்றது.

சாதியொழிப்பை உள்ளடக்கிய முற்போக்கு தேசியத்தை முன்வைத்தவர்களை அழித்து உருவானதே, எமது தேசிய வரலாறு. இப்படி பிற்போக்கு வலதுசாரிய பாசிசத்தை, தேசியமாக காட்டுவது புலிகள் மட்டுமல்ல, புலியெதிர்ப்பும் தான். தேசியம் பற்றி திரித்து வைக்கின்றவர்கள், அதை தேசியமாக காட்டுகின்ற புலி மற்றும் புலியெதிர்ப்பு கோடபாடுகள் தான் சமூகத்தின் போக்கை நிர்ணயம் செய்ய முனைகின்றனர். இதை மறுத்து நாங்கள் மட்டும் முரண்நிலையாக இருப்பதும், தலித் மக்களின் உண்மையான விடுதலைக்காக உறுதியோடு நிற்பவர்களாக இந்த வரலாற்றில் நாம் நிற்கின்றோம்.

உட்படுகொலைகளில் கொல்லப்பட்டவர்கள் யார்? ஏன் கொல்லப்பட்டனர். அவர்கள் முன்வைத்த தேசியம் எது? இப்படி மாறுபட்ட தேசியக் கூறுகள், எமது இந்த தேசியப் போராட்டத்தில் இருந்துள்ளது. இதை மறுத்து ஒற்றைப் பரிமாணத்தில் தேசியத்தை காட்டுகின்ற ராகவன், மற்றும் புலியெதிர்ப்பு அரசியல் திட்டவட்டமாக மக்களுக்கு எதிரானதும், படுபிற்போக்கானதுமாகும். தேசியத்தை புலியிசமாக காட்டுவது, புலிக்கு சோரம் போவது தான். இவர்களின் அரசியலே, புலியின் பாசிசத்தை தேசியமாக காட்டுவதில் தான் மிதக்கின்றது. புலியின் பாசிசத்தை மூடிமறைப்பதன் மூலம், தமது பாசிசத்தை பாதுகாப்பது புலியெதிர்ப்பு அரசியலாகின்றது.

புலி பாசிசத்தை தேசியமாக காட்டும் ராகவன், அம்பேத்கரை துணைக்கு அழைக்கின்றார். "நீங்கள் உங்களை ஒரு தேசம் எனக் கருதுவது வெறும் பிரமை. பல்வேறு சாதிப் பிரிவினைகள் கொண்டவர்கள் தங்களை ஒரு தேசம் என்று அழைக்க என்ன அருகதை இருக்கிறது? நிலவி வரும் சமூக ஒழுங்கை மாற்றாதவரை நீங்கள் எவ்வித முன்னேற்றமும் அடையப்போவதில்லை. சாதியக் கட்டமைப்பிலிருந்து நீங்கள் எதனை உருவாக்கினாலும் அது இறுதியில் உடைந்துதான் போகும்" அம்பேத்கரின் இக் கூற்று ராகவனின் கோட்பாட்டுக்கு எதிரானது. அம்பேத்கர் வேறு ஒரு தேசியம் உண்டு என்பதையும், அதை செய்யக் கோருகின்றார். 'நிலவி வரும் சமூக ஒழுங்கை மாற்றாதவரை நீங்கள்" என்ற அழைத்து கூறுவதையா, நீங்களும் நீங்கள் அங்கம் வகிக்கும் புலியெதிர்ப்பு அரசியலும் செய்கின்றது. இல்லை. அம்பேகத்கர் கூறுகின்றார், இதை செய்யாத வரை 'நீங்கள் எவ்வித முன்னேற்றமும் அடையப்போவதில்லை" எவ்வளவு தெளிவான வாதம். இதையா நீங்களும் உங்கள் கும்பலும் தமிழ் மக்கள் முன் வைக்கின்றீர்கள். அம்பேத்கர் சரியாகவே அதை செய்கின்றார். சமூகத்தை மாற்றப் போராடுகின்றார்.

இப்படி ராகவன் கட்டுரையின் தொடக்கத்தில் போட்ட அம்பேகத்கர் வரியே , அவரின் ஆய்வுக்கு எதிரானது. எங்களுடைய நிலைக்கு மட்டும் தான் அது மிகப் பொருந்தும். அம்பேத்கரின் இந்த விமர்சனம், தேசியத்தை சாதிக்கு எதிராக நிறுத்தவேயில்லை. தேசியத்தின் தேவையை, சாதிய ஒழிப்பின் ஊடாகவே கோருகின்றார். இது தான் அவரின் முரண்பட்ட அம்சம்.

இதைக் கூட புரிந்துகொள்ளாதவர்கள், தேசியம் என்பதை புலியிசமாக காட்டுகின்றவர்கள் எதைத்தான் தலித் மக்களுக்கு கூற முடியும். தலித் மக்களின் தலையில் அரைக்க முனைகின்றனர். பிரபாகரனையும், அவரின் புலி இயக்கத்தையும் மறுப்பதாக கூறும் இவர்கள், அதைப் பாதுகாப்பது தான் இதில் உள்ள சூக்குமமாகும். தேசியத்தை புலியில் இருந்து வேறுபடுத்தி பார்க்க மறுக்கின்ற அரசியலை, தலித்துகளுக்கு அம்பேத்கருக்கு மாறாக அம்பேத்கரின் பெயரில் அவிக்கின்றனர். பிரபாகரன் தேசியம் என்றால் என்னவென்று எதை வரையறுத்துள்ளாரோ, அதையே மீண்டும் தேசியமாக காட்டுவது அதை ஏற்றுக்கொள்வது புலியெதிர்ப்பின் அரசியல் மலட்டுத்தனமாகும். இதுவே இதில் உள்ள பிரதானமான மையமான விடையம். இதை நாம் அங்கு துல்லியமாக அம்பலப்படுத்தினோம்.

பிரபாகரனும் புலிகளும் கூறுவதா தேசியம்? இதை யாரால் விவாதிக்க முடியும்? இந்த கேள்வியை, புலியெதிர்ப்பு கேள்வியாய் கேட்பதில்லை. அதை விவாதத்துக்கு எடுப்பதில்லை. மாறாக அதை தேசியமாக கூறிக்கொண்டு தான், தமது பிற்போக்கான அனைத்து வகை செயல்பாட்டை நியாயப்படுத்துகின்றனர்.

வலதுசாரிய பிற்போக்கு கூறு இடதுசாரிய முற்போக்கு கூறுகளை அழித்ததால், தேசியம் பிற்போக்கான கூறாகிவிடுமா? இல்லையே. எப்படிப்பட்ட சாதிய மலட்டு ஆய்வு. அனைத்தையும் கட்டுடைப்பதாக கூறுகின்ற எவரும், இதை கட்டுடைப்பதில்லை. வலதுசாரி பாசிச கூறு முற்போக்கை அழித்து வெல்வதற்கு, இந்தியா முதல் அமெரிக்கா வரை பயிற்சியும் ஆயுதமும் கோட்பாடு வழிகாட்டலையும் வழங்கியதே எமது வரலாறு. இப்படித்தான் முற்போக்கு கூறுகள் அழிக்கப்பட்டது. ஏன் இன்றுவரை அந்த பிற்போக்கு கூறு தான் புலி அல்லாத தளத்திலும் ஆதிக்கம் வகிக்கின்றது. இது இன்றைய எமது சமகால வரலாறு.

வலதுசாரியம் அன்று அழித்தது, தேசியத்தின் தோல்வியா? இல்லை. எல்லா பிற்போக்குவாதிகளும், இதை தேசியத்தின் தோல்வியாக கூறுவதும், இதை தேசியம் என்பதும், எம் கண்முன்னால் நடக்கும் கோரமான சமூக இழிவாடல்கள். இப்படி இவர்களின் அரசியல் நேர்மை, தெளிவாகவே அம்மணமாகின்றது.

'தேசியம் எதிர் தலித்தியம்" என்று கூறும் ராகவன் 'இன தேசியவாதச் சிந்தனை முறைமையைக் கேள்விக்குள்ளாக்குவதும் தலித் பிரக்ஞைக்கும் தேசியவாதக் கருத்தியலுக்குமுள்ள தீர்க்கப்பட முடியாத முரண்பாடுகளை அடையாளம் காண்பதுமாகும்." என்கின்றார். தேசியத்தை புலியிசமாக காண்பவர், எப்படி தீர்க்கப்படாத அந்த முரண்பாட்டை காணமுடியும். வார்த்தைகளால் வேடிக்கை காட்டுகின்றார். புலிப்பாசிசம் சமூக முரண்பாடு எதையும் தீhக்காது. உண்மையில் அதை பாதுகாப்பதால் தான், அது பாசிசமாக இருக்கின்றது. இது தேசியமாக காட்டுவது சித்தரிப்பது, 'தீர்க்கப்பட முடியாத முரண்பாடுகளை அடையாளம் காண்பதுமாகும்" என்று புலுடா விடுவது அரசியலாகின்றது.

தேசியத்தை பற்றி இந்த புலி 'அது தன்னைத் தான் கற்பனை பண்ணும் பிரதேசத்திற்குள் குறுக்கிக் கொள்கிறது. பிறப்பையும் பாரம்பரியத்தையும் மொழியையும் கலாச்சாரத்தையும் தனது அடையாளத்திற்கான கருப்பொருட்களாகக் காண்கின்றது." இதுவா தேசியம். தேசியம் என்பது, குறைந்தபட்சம் முதலாளித்துவ புரட்சியை அடிப்படையாக கொண்டது. சகல நிலப்பிரபுத்துவ சமூகக் கூறையும் ஒழித்துக்கட்டுவதே தேசமாக கொண்டு அமைவதே தேசியம். இதற்கு இரண்டு பக்கம் உண்டு. ஒன்று முதலாளித்துவ தேசியம். இரண்டு பாட்டாளி வர்க்கத் தேசியம். பாட்டாளி வர்க்கத் தேசியம் சர்வதேசியத் தன்மை கொண்டது. இரண்டும் ஏகாதிபத்திய எதிர்ப்பை அடிப்படையாகக் கொண்டது. தேசிய பொருளாதாரத்தை மறுக்கும் ஏகாதிபத்தியத்துக்கு எதிரானதே தேசியம். இப்படி தேசியம் பற்றிய வரையறை மக்கள் நலன் சார்ந்துண்டு. இதை புலிகள் மறுக்கலாம், புலியிசத்தை தேசியமாக கொண்ட புலியெதிர்ப்பு (நீங்கள்) மறுக்கலாம். தேசிய உண்மைகளை மறுக்க, யாராலும் முடியாது.

தேசியத்தின் உண்மைத் தன்மையை மறுக்க முனையும் இந்தப் புலி 'சாதியவாதத்தின் இதே அடிப்படையைத் தமிழ்த் தேசியவாதமும் கொண்டிருக்கிறது. தாழ்த்தப்பட்டவனுக்கு நிலம் சொந்தமில்லை. எனவே பாரம்பரிய நிலம் என்பது ஆதிக்கசாதியினரின் நிலங்களேயாகும்." என்கின்றார். இதனால் தேசியம் எதிர் தலித். என்ன வேடிக்கை. தேசியம் என்பது முதலாளித்துவ உற்பத்தி முறையை அடிப்டையாக கொண்டது. நிலப்பிரபுத்துவத்தை ஒழித்து, நிலத்தை உழுபவனுக்கு பங்கிடுவதை அடிப்படையாக கொண்டது. புலிகளின் திட்டம் கூட இதையே வலியுறுத்தியது. தேசியம் சரியாகத்தான் அன்றும் இன்றும் உள்ளது.

மறுபக்கத்தில் நிலம் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இல்லை என்பதால், எப்படி தேசியம் தவறாகிவிடும். நீங்கள் பாதுகாக்கும் உன்னதமான இந்த சுரண்டல் அமைப்பில், உழைக்கும் மக்கள் கூட்டம் அப்படித்தான் உள்ளது. நிலமற்ற மக்கள் போராடவில்லையா? போராடக் கூடாதா? நிலமற்ற அந்த தலித் பாட்டாளி வர்க்கத்தின், புரட்சிக்காகவா நீங்கள் கூச்சல் போடுகின்றீர்கள். இல்லை, நிச்சயமாக எதிர்புரட்சிக்காக அல்லவா! அதாவது தாழ்த்தப்பட்டவனுக்கு எந்த வகையிலும் நிலம் கிடைக்கக் கூடாது, என்பதற்காகத்தான், தேசியத்தை திரித்துக் காட்டுகின்றீர்கள். ஆதிக்க சாதிகளின், ஆதிக்க வர்க்கத்தின் குரல்கள் இவை.

'நிலம் மறுக்கப்பட்ட மனிதனின் பாரம்பரியப் பிரதேசம் எங்கே இருக்கின்றதெனக் கேள்வியெழுப்பித் தாய் நிலக் கோட்பாட்டைக் கேள்விக்குள்ளாக்குகிறது." என்பதன் மூலம் நிலம் கிடைக்கும் வழியை தடுப்பது, இந்த தலித் விரோதிகளின் நோக்கமாகும். சரி நிலம் இல்லை, அது கிடைக்கும் வழி என்ன? அதை மட்டும் சொல்ல மாட்டார்கள். புலிகளின் பாசிசம் தேசியத்தின் பெயரில் அதை மறுப்பதால், தேசியம் அதை மறுத்துவிடுமா? ஏகாதிபத்திய எடுபிடிகளாகி சலசலக்கும் நீங்கள், யாருக்கு வேடிக்கை காட்டுகின்றீர்கள்.

'நிலப்பிரபுத்துவத்தின் அழிவோடு சாதி ஏற்றத்தாழ்வுகள் மறைந்துவிடும் என்ற படிமுறை வளர்ச்சி அடிப்படையிலான மரபு மார்க்ஸியவாதத்தையும் தலித்தியம் நிராகரிக்கின்றது." சரி எப்படித்தான் சாதி ஒழியும். அல்லது எப்படி ஓழிப்பீர்கள். அதை மட்டும் சொல்லவரமாட்டார்கள். உழைக்கும் மக்களின் எதிரி, முன்னாள் இன்னாள் புலியாக இருந்தால், இருப்பதால் இப்படி புலியாகி ஒப்பாரிவைக்கின்றது. எதிர்ப்புரட்சி கோட்பாட்டைக் கட்டிக்கொண்டு அழுகின்றது. பாட்டாளி வர்க்கப் புரட்சி முன்வைக்கும் ஒடுக்கப்பட்ட மக்களின் அதிகாரம் மூலம் மட்டும் தான், சாதியை ஒழிக்கும். இதற்கு மாற்று வழி எதுவும் கிடையாது. தலித்தியம் எதிர் தேசியம், தலித்தியம் எதிர் மார்க்சியம் என்கின்ற இந்த புலியெதிர்ப்புக் கோட்பாடு, தலித்தியத்துக்கு எதிர் அல்லாதது எதுவென்றாவது சொல்ல முனைகின்றதா? அது ஏகாதிபத்தியமே என்று சொல்லுவதற்கு, இந்த நாய்கள் படுகின்ற பாடு சொல்லிமாளாது.

எப்படித்தான் குத்தி முனகினாலும், உங்கள் எதிர்ப்புரட்சி புலியின் பெயரால் புரட்சியாகிவிடாது. 'சாதிய ஒடுக்குமுறை குறித்துப் பேசினால் தமிழ்த் தேசியத்தின் அரசியல் வீச்சு அற்றுப்போய்விடுமென்பதே எதார்த்தம். தமிழ் தேசியவாதக் கருத்தியல் சாதிய கூறுகளிலேயே கட்டப்பட்டிருக்கிறது." ஆகாகா அம்பேத்கரையே மறுக்கின்ற இழிவாடல்கள். தேசியம் பேசினால் தான், சாதியம் ஒழியும். தேசியத்தை தலித்தியம் தனது சொந்த அதிகாரத்துக்காக கையில் எடுத்தால் தான், சாதி ஒழியும். வேறு எந்த வகையிலும் சாதியை ஒழிக்கமுடியாது. தலித்திய விடுதலையை மறுத்த தேசிய மறுப்பில் தான், சாதி கூறு கட்டமைக்கப்பட்டு பாதுகாக்கப்படுகின்றது.

புலி பாசிசம் ஏன் கருத்து எழுத்து பேச்சு சுதந்திரத்தை மறுத்து நிற்கின்றது? ஏன் ஜனநாயகத்தை மக்களுக்கு மறுக்கின்றது. அந்த இயக்கத்தில் இருந்தவருக்கு நன்கு தெரியும். சமூக முரண்பாடுகளை தீர்க்கக் கோரும் போராட்டத்தைக் கட்டுப்படுத்த, இது அவசியமாகின்றது. சமூக ஓடுக்கு முறையைக் களையக் கோரும் தேசியத்தை மறுத்து, தேசியத்தின் பெயரில் பாசிசப் புலியிசம் பரிணாமித்து நிற்கின்றது.

'சாதிய ஒடுக்குமுறை குறித்துப் பேசினால் தமிழ்த் தேசியத்தின் அரசியல் வீச்சு அற்றுப்போய்விடுமென்பதே எதார்த்தம்" என்பது தவறானது. மாறாக வீறு கொண்ட தேசியமாக பரிணாமிக்கும். அது புலிப் பாசிசத்தை ஒழித்துக்கட்டும். உண்மையாக தேசியம் சரியாக முன்னுக்குவரும். அது வரக் கூடாது என்பது புலியெதிர்ப்பின், எதிர்ப்புரட்சிகர அரசியல் சாரமாகும்.

ஒடுக்கப்பட்ட தலித் மக்கள் தமது அதிகாரத்தை அடைவதற்காக, சமூகத்தில் உள்ள முரண்பாடுகளைக் களையும் போராட்டத்தின் ஊடாக போராட்டத்தை தனதாக்கவேண்டும். இந்த வகையில் தேசியம், வர்க்கப் போராட்டம் என, எந்த சமூக ஒடுக்குமுறையும் தனதாக்கி ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக மாறவேண்டும். இந்தப் போராட்டத்தை அதுவே தலைமை தாங்க வேண்டும். இதைப் புலியும் சரி, புலியெதிர்ப்பும் சரி, ஒருநாளும் அனுமதிக்காது என்பது வெளிப்படையானது.

தொடரும்

No comments: