அணுசக்தி ஒப்பந்தம்:
அடிமை அடியாள் அணுசக்தி!
அன்பார்ந்த நாட்டுப்பற்றார்களே,
இந்தியாவின் அணுசக்தித் தேவையை நிறைவு செய்வது என்ற
போர்வையில், ஆக்கிரமிப்பு வெறி பிடித்த அமெரிக்காவின் அடியாளாகவும் அடிமையாகவும் இந்தியாவை மாற்றியிருக்கிறது மன்மோகன் சிங் அரசு. கட்டிய மனைவியைக் காமுகனுக்குக் கூட்டிக் கொடுத்துவிட்டு, கதவுக்கு வெளியே காவல் நிற்கும் மாமாப்பயலைப் போல, பிரதமர் பதவி என்ற அதிகாரத்தைப் பயன்படுத்தி இந்த நாட்டையே கள்ளத்தனமாக அமெரிக்காவுக்கு விலை பேசியிருக்கிறார் மண்மோகன் சிங். இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் என்னும் இந்த அடிமைச் சாசனத்தையும், அதற்கு அடிப்படையாக இருக்கும் இந்திய அமெரிக்க இராணுவ ஒப்பந்தத்தையும் படிக்கின்ற தன்மானமுள்ள எந்தக் குடிமகனுக்கும் ரத்தம் கொதிக்கும்.
""இந்தியா இனி அணு ஆயுத சோதனை நடத்தக்கூடாது. அணு ஆயுதம் தயாரிப்பதற்குப் பயன்படும் மூலக்கூறுகளின் உற்பத்தியை நிறுத்துவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும். இந்தியாவின் அணு மின் நிலையங்களையும், அணு ஆயுதங்கள் மற்றும் யுரேனிய, புளூட்டோனியக் கையிருப்புகளையும், அமெரிக்காவும் சர்வதேச அணுசக்தி ஏஜென்சியும் சோதனையிடுவதற்கு ஒப்புக்கொள்ளவேண்டும். ஈரானின் அணுசக்தித் திட்டத்தை முடக்குவதற்கு அமெரிக்காவுடன் ஒத்துழைப்பது மட்டுமின்றி, ஈரானுடனான வணிக உறவுகளையும் நிறுத்திக் கொள்ளவேண்டும். அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கைக்கு ஒத்துழைக்கும் வகையில் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையை அமைத்துக் கொள்ள வேண்டும். இந்த நிபந்தனைகளை இந்தியா ஒழுங்காக நடைமுறைப்படுத்துகிறதா என்பதை அமெரிக்க அரசு ஆண்டுதோறும் பரிசீலிக்கும். அதில் திருப்தியடைந்தால் மட்டுமே இந்திய அணு உலைகளுக்குத் தேவையான யுரேனியத்தை அமெரிக்கா வழங்கும். இந்த ஒப்பந்தத்திலிருந்து விலகிக் கொள்ள அமெரிக்காவுக்கு உரிமை உண்டு. அவ்வாறு அமெரிக்கா விலகி விட்டாலும், தனது அணு உலைகளை சோதனைக்குத் திறந்து விடுவது என்ற ஒப்பந்தத்திலிருந்து இந்தியா விலக முடியாது'' என்பதே அணுசக்தி ஒப்பந்தத்தின் சாரம்.
குமுறுகிறார்கள் விஞ்ஞானிகள்!
தலையை அடமானம் வைத்து தலைப்பாகை வாங்கும் இந்த தேசத் துரோகமான ஒப்பந்தம் எதற்கு? நாட்டையே விலையாகக் கொடுத்து வாங்கும் அளவுக்கு அணு மின்சாரத்துக்கும் அதன் மூலப்பொருளான யுரேனியத்துக்கும் என்ன முக்கியத்துவம்? இந்த யுரேனியம் கிடைக்காவிட்டால் நாளைக்கே நாடு இருண்டு விடுமா, தொழில் உற்பத்தி முடங்கிவிடுமா? எதுவும் இல்லை.
""தற்போது இந்தியாவின் மின்சாரத் தேவையில் 3% மட்டுமே அணுசக்தி மூலம் பெறப்படுகிறது. இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் அமெரிக்காவிலிருந்து 3 லட்சம் கோடி ரூபாய்க்கு அணு உலைகளை இறக்குமதி செய்தாலும் இன்னும் 15 ஆண்டுகளுக்குப் பிறகு கூட இந்தியாவின் மின்சாரத் தேவையில் 7 சதவீதத்தை மட்டுமே அணுசக்தியால் வழங்க முடியும். அணுசக்தித் தயாரிப்புக்குப் பயன்படும் தோரியம், உலக இருப்பில் 80% தமிழ்நாடு, கேரளக் கடற்கரைகளில்தான் இருக்கிறது. யுரேனியத்தை இறக்குமதி செய்யாமல் இதனைக் கொண்டே மின்சாரம் தயாரிக்கும் தொழில்நுட்பத்தையும் இந்திய விஞ்ஞானிகள் உருவாக்கி விட்டார்கள். இன்னும் 15, 20 ஆண்டுகளில் நம் தேவையைக் காட்டிலும் பன்மடங்கு அதிகமாக மின்சாரத்தை நாம் உற்பத்தி செய்ய இயலும். அணுசக்தித் தொழில் நுட்பத்தில் அமெரிக்காவைக் காட்டிலும் நாம் அதிகமாக முன்னேறியிருக்கி÷றாம். சோதனை என்ற பெயரில் நமது தொழில் நுட்பம் அனைத்தையும் அமெரிக்கா திருடிவிடும். நமது ஆராய்ச்சிகளை முடக்கிவிடும்'' என்று இந்திய அணு விஞ்ஞானிகள் கதறுகிறார்கள்.
அமெரிக்க மின்சாரம்
என்ன விலை?
இறக்குமதி யுரேனியத்தையும் அமெரிக்க அணு உலைகளையும் நம்பி உற்பத்தி செய்யவிருக்கும் மின்சாரத்தின் விலை என்னவாக இருக்கும்? இன்று நீர்மின் சக்தி மூலம் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தின் அடக்கவிலை யூனிட்டுக்கு 50 காசுகள். அனல் மின் நிலையங்களில் உற்பத்தியாகும் மின்சாரத்தின் அடக்கவிலை சராசரியாக 2 ரூபாய். இதே அனல்மின் சக்திக்குத்தான் அமெரிக்க என்ரான் நிறுவனம் யூனிட் 6 ரூபாய் என்று விலை வைத்தது விளைவு மகாராட்டிர மின்வாரியம் ஒரே ஆண்டில் திவாலானது.
இந்த அணுசக்தி ஒப்பந்தத்தின்படி 3 லட்சம் கோடி ரூபாய்க்கு அணு உலைகளை இறக்குமதி செய்யப் போகிறது அரசு. இதே அணு உலைகளை சுயசார்பாக நிறுவினால் 2 லட்சம் கோடிதான் செலவாகும் என்கிறார்கள் இந்திய விஞ்ஞானிகள். அநியாய விலை கொடுத்து வாங்கும் இந்த அணு உலைகள் மூலம் தயாரிக்கப்படும் மின்சாரத்தின் விலை யூனிட் ஒன்றுக்கு 5 ரூபாயாக இருக்குமா, 10 ரூபாயாக இருக்குமா? இந்த அடாத விலை கொடுத்து "அமெரிக்க மின்சாரத்தை' வாங்க நம்முடைய மக்களால் முடியுமா?
இப்படிப்பட்ட கேள்வி எதற்கும் இந்த அரசு பதில் சொல்லவில்லை. காற்றாலை, சூரிய ஒளி, நீர்மின் சக்தி போன்றவற்றில் இதே 3 லட்சம் கோடியை முதலீடு செய்வதைக் காட்டிலும் "அமெரிக்க அணு மின்சாரம்' தான் ஆதாயமானது என்று ஆராய்ந்து அதன்பின் இந்த முடிவு எடுக்கப்படவில்லை.
உதவியா, சதியா?
சரியாகச் சொன்னால் இந்த அணு உலைகளை அமெரிக்காவிடமிருந்து இந்தியா கேட்டுப் பெறவில்லை. இவை நம்மீது திணிக்கப்பட்டிருக்கின்றன. கடந்த 20 ஆண்டுகளாக ஒரு அணு உலையைக் கூட ஏற்றுமதி செய்ய முடியாத அமெரிக்க முதலாளிகள் அவற்றை இந்தியாவின் தலையில் கட்டுகிறார்கள். விலை போகாத சரக்கை விற்றுக் காசு பார்ப்பதுடன் மின் உற்பத்தித் துறையில் இந்தியாவின் சுயசார்பை ஒழித்து யுரேனியத்துக்கு அமெரிக்காவிடம் கையேந்தும் நிலையையும் உருவாக்கியிருக்கிறார்கள்.
எனவேதான்,""பெட்ரோல் விலையைப்போல யுரேனியத்தின் சந்தை விலையும் ஏறிக்கொண்டே போகும். ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி யுரேனியம் தருவதை அமெரிக்கா நிறுத்திவிட்டால் பல லட்சம் கோடி பணம் கொடுத்து இறக்குமதி செய்த அணு உலைகள் அனைத்தும் செயலிழக்கும். நாடே திவாலாகி விடும்'' என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கிறார்கள். இவை எதற்கும் மன்மோகன் சிங் காது கொடுக்கவில்லை. எந்தக் கேள்விக்கும் பதிலளிக்கவில்லை.
கடந்த 30 ஆண்டுகளில் அமெரிக்கா விதித்த தடைகளை சவாலாக ஏற்று சுயசார்பாக அணு தொழில்நுட்பத்தை வளர்த்திருக்கும் இந்திய விஞ்ஞானிகளுடைய உழைப்பின் மேன்மையையும், தன்மான உணர்ச்சியையும் இந்த ஒப்பந்தம் கற்பழிக்கிறது. விஞ்ஞானிகள் ஆத்திரத்தில் குமுறுகிறார்கள். அமெரிக்க அரசோ, எப்பாடுபட்டேனும் இந்த ஒப்பந்தத்தை இந்தியாவின் மீது திணிப்பதில் மிகவும் தீவிரமாக இருக்கிறது. ஏன்?
அணுசக்தி மீதும் அமெரிக்க ஆதிக்கம்!
ஏனென்றால் இது சாதாரண ஒப்பந்தமல்ல, அமெரிக்காவின் உலக மேலாதிக்கத்துக்கான சதித்திட்டம். தற்போது உலகெங்கும் மின்சார உற்பத்திக்குப் பயன்பட்டுவரும் எண்ணெய், நிலக்கரி முதலான எரிபொருட்கள் இன்னும் சில பத்தாண்டுகளில் தீர்ந்து விடும். தற்போது வளைகுடாவின் எண்ணெய் வணிகத்தின் மீதும், எண்ணெய் போக்குவரத்துக் கடல் வழிகளின் மீதும் அமெரிக்காதான் மேலாதிக்கம் செய்து வருகிறது. சர்வதேச எண்ணெய் வணிகம் அமெரிக்க நாணயமான டாலரில் நடப்பதால் அது அமெரிக்காவின் பொருளாதார மேலாதிக்கத்துக்கு உதவுகிறது.
தற்போது உலகின் எண்ணெய் இருப்பு வறண்டு வருகிறது. "அணுமின்சாரமே மாற்று' என்ற நிலை உலகளவில் உருவாகி வருகிறது. எனவேதான், அணுசக்தியின் மீது தனது மேலாதிக்கத்தை நிறுவிக்கொள்ள அமெரிக்கா துடிக்கிறது. மற்ற நாடுகள் அணுசக்தியில் சுயசார்பு அடைந்து விட்டால், தனது அரசியல், இராணுவ, பொருளாதார மேலாதிக்கம் கேள்விக்குள்ளாகிவிடும் என்று அஞ்சுகிறது. "அணு ஆயுதம் தயாரித்து விடுவார்கள்' என்பதற்காக மட்டும் ஈரானையும் வட கொரியாவையும் அமெரிக்கா மிரட்டவில்லை. ""தன்னுடைய கட்டுப்பாட்டில் இல்லாத எந்த நாடும் அணுமின்சாரம் கூடத் தயாரிக்கக் கூடாது'' என்பதுதான் அமெரிக்காவின் உண்மையான திட்டம். எனவேதான் சுயசார்பாக அணு தொழில்நுட்பத்தை வளர்த்திருக்கும் இந்தியாவையும் முடக்க முனைகிறது.
இவையெல்லாம் இந்த ஒப்பந்தத்தை எதிர்ப்பதற்காக நாம் இட்டுக்கட்டிக் கூறும் விசயங்கள் அல்ல; இப்போது போடப்பட்டிருக்கும் ஒப்பந்தம் வெறும் அணுசக்தி ஒப்பந்தமும் அல்ல. ஜூன்28, 2005இல் வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி அமெரிக்காவுடன் ரகசியமாகச் செய்துகொண்ட இராணுவ ஒப்பந்தத்தின் ஒரு அங்கம்தான் இந்த அணுசக்தி ஒப்பந்தம். இதை நாம் சொல்லவில்லை. சமீபத்திய "இந்தியா டுடே' இதழுக்கு அளித்துள்ள பேட்டியில் மன்மோகன் சிங்கே ஒப்புக் கொள்கிறார். அமெரிக்கஇந்திய இராணுவ உறவுக்கான புதிய சட்டகம்'' என்ற அந்த ஒப்பந்தத்தின் தொடர்ச்சியாகத்தான் "அணுசக்தி ஒப்பந்தம் குறித்த புஷ்மன்மோகன் கூட்டறிக்கை' ஜூலை, 18ஆம் தேதி வெளியிடப்பட்டதாக ஒப்புக் கொள்கிறார்.
ஆசிய மேலாதிக்கத் திட்டம்!
இந்த இராணுவ ஒப்பந்தத்தின் நோக்கமே அமெரிக்காவின் ஆசிய மேலாதிக்கத் திட்டத்திற்கு இந்தியாவை அடியாளாகப் பயன்படுத்திக் கொள்வதுதான். ""மேற்கு ஆசியாவில் ஈராக்கிற்கு அடுத்து ஈரானில் தலையிடுவது, கிழக்காசியாவில் வட கொரியாவைப் பணிய வைப்பது, மத்திய ஆசியாவில் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ள எண்ணெய் வளங்களைத் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வருவது, தெற்காசியாவில் ஆப்கானைக் கட்டுக்குள் வைப்பது, அனைத்துக்கும் மேலாக சீனாவை மிரட்டிப் பணியவைப்பது'' இவை ஆசியாவை மேலாதிக்கம் செய்வதற்கு அமெரிக்கா போட்டிருக்கும் திட்டங்கள். குறிப்பாக, சீனா கம்யூனிசத்தைத் தலைமுழுகி முதலாளித்துவ நாடாக மாறிவிட்ட போதிலும், எதிர்காலத்தில் அது தனக்கொரு சவாலாக வளர்ந்து விடும் என்று அமெரிக்கா அஞ்சுகிறது. அதைச் சமாளிக்கும் நோக்கத்துக்காகவே இந்தியாவைத் தன்னுடன் இராணுவ ரீதியாகப் பிணைத்துக் கொள்கிறது.
அமெரிக்காவின் ஆசிய மேலாதிக்கத்துக்கும், உலக மேலாதிக்கத்துக்கும் பயன்படும் வகையில் புவியியல் ரீதியில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் இருக்கிறது இந்தியா. அமெரிக்க போர் விமானங்களும் போர்க் கப்பல்களும் எண்ணெய் நிரப்பிக் கொள்வதற்கும், அமெரிக்க இராணுவ சிப்பாய்கள் பயிற்சி எடுத்துக் கொள்ளவும், ஓய்வுஉல்லாசக் கேளிக்கைகளில் ஈடுபடவும் இந்தியாவை ஒரு தளமாகப் பயன்படுத்திக் கொள்ள அமெரிக்கா திட்டமிட்டிருக்கிறது. தனக்குக் கட்டுப்படாத ஆசிய நாடுகளையும், பிற உலக நாடுகளையும் விரைந்து சென்று தாக்குவதற்குத் தோதான ஏவுதளமாகவும் இந்தியாவை மாற்ற முனைகிறது.
"தீவிரவாதிகளின் ஆயுதக் கடத்தலைக் கண்காணிப்பது' என்ற பெயரில் சர்வதேசக் கடல் பிராந்தியம் முழுவதற்கும் போலீசுக்காரனாகத் தன்னை நியமித்துக் கொண்டிருக்கிறது அமெரிக்கா. இந்தக் கண்காணிப்பு வேலையில் அமெக்கக் கடற்படைக்கு அடியாளாக இந்தியக் கடற்படையையும் ஈடுபடுத்துவதற்கு பிரணாப் முகர்ஜி போட்டிருக்கும் இரகசிய ஒப்பந்தம் வழி செய்கிறது. மொத்தத்தில் அமெரிக்காவின் உலக ஆக்கிரமிப்புப் போர் இரதத்தின் சக்கரத்தில் இந்தியா பிணைக்கப்பட்டு விட்டது. உலக மக்கள் அனைவராலும் வெறுத்து ஒதுக்கப்படும் இஸ்ரேலைப்போல இந்தியாவும் அமெரிக்க அடியாளாக மாற்றப்படுவதுதான் இந்த இராணுவ ஒப்பந்தத்தின் விளைவு.
அமெரிக்க அடியாட்களாக
இந்திய சிப்பாய்கள்!
அன்று பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் நாடு பிடிப்பதற்காக உலகெங்கும் நடத்திய ஆக்கிரமிப்புப் போர்களில், அவர்களுடைய காலாட்படையாகச் சென்று செத்து மடிந்தார்கள் இந்திய சிப்பாய்கள். இன்று ஈராக், ஆப்கான் வரிசையில் அமெரிக்கா தொடுக்கும் ஆக்கிரமிப்புப் போர்களிலெல்லாம் அவர்களுடைய அடியாட்படையாகச் சென்று இந்திய சிப்பாய்கள் செத்து மடிவதற்கு பிரணாப் முகர்ஜி போட்டிருக்கும் இந்த ஒப்பந்தம் வழிவகுக்கும். அமெரிக்காவின் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகும் மக்களின் விரோதத்துக்கும், அல் கொய்தா போன்ற இயக்கங்களின் பயங்கரவாதத் தாக்குதல்களுக்கும் இந்தியா இலக்காகும். இவற்றை சமாளிக்க அதிநவீன அமெரிக்க ஆயுதங்கள் இறக்குமதியாகும். இராணுவச் செலவு மேலும் அதிகரிக்கும். அடுக்கடுக்காக வரிவிதிப்பும் அதிகரிக்கும், அடக்குமுறைகளும் அதிகரிக்கும். இவைதான் இந்த ஒப்பந்தம் இந்திய மக்களுக்கு நõளை வழங்கவிருக்கும் வெகுமதிகள்.
இன்று இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில்தான் ஈரானைத் தாக்குவதற்கான நிமிட்ஸ் கப்பல், எதிர்ப்புகளை மீறி சென்னை துறைமுகத்துக்கு வந்தது. தங்களை அமைதிப் புறாக்களாக சித்தரித்துக் கொள்வதற்காகத்தான் அமெரிக்க ஆக்கிரமிப்பு இராணுவத்தின் சிப்பாய்கள் நம்மூர் பள்ளிக்கூடங்களுக்குப் பெயிண்டு அடித்தார்கள். அவர்கள் விபச்சாரத்தில் ஈடுபடுவதற்கு அரசாங்கமே "அழகிகளையும்' அறைகளையும் ஏற்பாடு செய்து தந்தது. தமிழக போலீசு அவர்களுக்குக் காவலும் நின்றது. இதே ஒப்பந்தத்தின் அடிப்படையில்தான் கொச்சியில் அமெக்கக் கடற்படையுடன் கூட்டுப் பயிற்சியும், மே.வங்கத்தில் விமானப்படைக் கூட்டுப்பயிற்சியும் நடத்தப்பட்டன. சீனாவை மிரட்டுவதற்கான ஒத்திகையாக அடுத்த மாதம் வங்காள விரிகுடாவில் இந்திய இராணுவம் ஆஸ்திரேலியா, ஜப்பான், சிங்கப்பூர், அமெரிக்க இராணுவங்களுடன் இணைந்து கூட்டாக ஒரு இராணுவ ஒத்திகையையும் நடத்தவிருக்கிறது. இப்படி அமெரிக்காவுடன் "ஒத்துழைத்தால்தான்' இந்தியா வல்லரசாக முடியும் என்று கொஞ்சம் கூடக் கூச்சமே இல்லாமல் கூறுகிறார் மன்மோகன் சிங்.
இந்தியாவுடனான இந்த இராணுவஅணுசக்தி ஒப்பந்தங்களின் மூலம் பல லட்சம் கோடிக்கு ஆயுதங்களையும் 3 லட்சம் கோடி ரூபாய்க்கு அணு உலைகளையும் இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்து கொள்ளையடிக்கலாம் என்று நாக்கில் எச்சில் ஊறக் காத்திருக்கிறார்கள் அமெரிக்க முதலாளிகள். அணுமின் நிலையங்களை தனியார்மயமாக்குவதற்கும் இந்த ஒப்பந்தம் வழிவகை செய்வதால் டாடா, அம்பானி போன்ற இந்தியத் தரகு முதலாளிகளும் இந்த ஒப்பந்தத்தை நிறைவேற்ற திரைமறைவில் வேலை செய்கிறார்கள். அமெரிக்காவின் உலக மேலாதிக்கத்துக்கு எடுபிடி வேலை செய்வதன் மூலம் தமது தொழிலையும் வர்த்தகத்தையும் விரிவாக்கி கொள்ளை இலாபம் ஈட்டலாமென்று தரகனுக்கே உரிய புத்தியோடு கணக்குப் போடுகிறார்கள். கனவு காண்கிறார்கள்.
பொய்கள்... பொய்கள்... பொய்கள்!
இந்த தேசத்துரோக ஒப்பந்தத்தை நியாயப்படுத்த முடியாது என்பதனால்தான் மன்மோகன் சிங்கும் பிரணாப் முகர்ஜியும் ஆரம்பம் முதலே அடுக்கடுக்காகப் புளுகி வருகிறார்கள். ""ஆயுதம் எதுவும் வாங்கப் போவதில்லை. சும்மா ஒரு நல்லெண்ண விஜயம்தான்'' என்று பேட்டி கொடுத்துவிட்டு விமானமேறினார் பிரணாப் முகர்ஜி. அமெரிக்க இராணுவ அமைச்சர் ரம்ஸ்ஃபீல்டும் பிரணாப் முகர்ஜியும் கையெழுத்திட்ட ""இந்திய அமெரிக்க இராணுவ ஒப்பந்தம்'' ஜூன் 28ஆம் தேதியன்று ரகசியமாகக் கையெழுத்திடப்பட்டது. அமெரிக்காவிலிருந்து திரும்ப வந்த பின்னர் ஜூலை 11ஆம் தேதியன்று ""அமெரிக்காவுடன் எந்த விதமான இராணுவ ஒப்பந்தமும் போடவில்லை'' என்று நாடாளுமன்றத்திலும் அப்பட்டமாகப் புளுகினார் பிரணாப் முகர்ஜி.
ஜூலை, 2005இல் அமெரிக்காவுக்குக் கிளம்புமுன் ""என் உயிருள்ள வரை இந்தியாவின் அணிசேராக் கொள்கையைப் பாதுகாப்பேன். தேசிய, சர்வதேசப் பிரச்சினைகள் குறித்த இந்தியாவின் கவலைகளைப் பகிர்ந்து கொள்ளப் போகிறேன். அவ்வளவுதான்'' என்று பேட்டியளித்தார் மன்மோகன் சிங். ஆனால் இன்றைய அணுசக்தி ஒப்பந்தத்தின் முன்வரைவான ""மன்மோகன் சிங்புஷ் கூட்டறிக்கை'' ஜூலை 18ஆம் தேதியன்று அமெரிக்காவிலிருந்து வெளியானது.
அடுத்து சர்வதேச அணுசக்தி முகமையில் நட்பு நாடான ஈரானுக்கு எதிராக இந்தியா வாக்களித்தது. ""அமெரிக்காவின் மிரட்டலுக்குப் பயந்துதான் இப்படி அநீதியாக வாக்களித்திருக்கிறீர்கள்'' என்ற குற்றச்சாட்டு எழுந்தவுடன் ""அமெரிக்காவெல்லாம் மிரட்டவில்லை, நாங்களாகத்தான் வாக்களித்தோம்'' என்று சாதித்தார் மன்மோகன் சிங். ""நாங்கள்தான் இந்தியாவை மிரட்டி வாக்களிக்க வைத்தோம்'' என்று அமெரிக்க வெளியுறவுத்துறை அதிகாரி குட்டை உடைத்தார்.
அணுசக்தி ஒப்பந்தத்தின் முன்வரைவு அமெரிக்க நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டபோது அதில் கண்டுள்ள நிபந்தனைகள் தெரியவந்தன. இந்திய நாடாளுமன்றத்தில் எதிர்ப்பு கிளம்பியது. ""அநாவசியமாக பிரச்சினையை மிகைப்படுத்தாதீர்கள். நான் நாடாளுமன்றத்தில் என்ன வாக்குறுதி கொடுத்தேனோ அதை மீறி ஒப்பந்தம் போட மாட்டேன். போதுமா?'' என்று நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாயை அடைத்தார் மன்மோகன் சிங். இப்போது அந்த வாக்குறுதிக்கு முரணாக ஒப்பந்தம் கையெழுத்தாகிவிட்டது. ""இனி ஒப்பந்தத்தை திருத்தவோ மாற்றவோ முடியாது'' என்று திமிர்த்தனமாகப் பேசுகிறார் மன்மோகன் சிங்.
""இந்தியா அணுகுண்டு வெடிப்பதற்கு ஒப்பந்தத்தில் தடையேதும் இல்லை'' என்று மறுபடியும் நாடாளுமன்றத்தில் சவடால் அடித்தார் மன்மோகன் சிங். ""குண்டு வெடித்தால் ஒப்பந்தம் ரத்து ஆகும்'' என்று அமெரிக்க வெளியுறவுத்துறை அன்று மாலையே அறிக்கை வெளியிட்டது.
எவ்வளவு தில்லுமுல்லுகள், அயோக்கியத்தனங்கள்! ஒவ்வொரு பித்தலாட்டமும் அம்பலமாகி சந்தி சிரிக்கிறது. இத்தனை மானக்கேடுகளுக்குப் பிறகு சொரணையுள்ள மனிதனாகயிருந்தால் நாண்டு கொண்டு செத்திருக்க வேண்டும். ஆனால் உளவாளிக்கு ஏது சூடு சொரணை? அமெரிக்க உளவாளியான இந்த மானங்கெட்ட சிங், மூஞ்சியில் காறித்துப்பினாலும் துடைத்துக் கொண்டு மழுங்கப்பயலைப் போலப் பல்லிளிக்கிறார். முன்னாள் உலக வங்கி அதிகாரியான இந்த அமெரிக்க அடிமை, தான் பதவியிலிருந்து இறங்குவதற்குள் இந்தியாவையும் எப்பாடு பட்டேனும் அமெரிக்க அடிமையாக மாற்றிவிட வேண்டும் என்று துடிக்கிறார்.
சர்வகட்சித் துரோகிகள்!
பதவி சுகத்தையும் பொறுக்கித் தின்பதையும் தவிர வேறு எந்த இலட்சியமும் இல்லாத தி.மு.க., பா.ம.க., ம.தி.மு.க., லல்லு முதலான பிழைப்புவாதிகளோ எதை விற்கவும் யாரை விற்கவும் கண்ணை மூடிக்கொண்டு கையெழுத்துப் போடத் தயாராக இருக்கின்றனர். மன்மோகன் சிங்கின் மறுகாலனியாக்கக் கொள்கைகள் அனைத்துக்கும் மனப்பூர்வமாகத் துணை நிற்கின்றனர்.
இந்த ஒப்பந்தத்துக்கு எதிராக இன்று சவடால் அடித்துக் கொண்டிருக்கும் எதிர்க்கட்சிகளோ, ஏதோ இப்போதுதான் அவர்களுக்கு விசயமே தெரியவந்ததைப் போல நடிக்கின்றனர். ""இந்தியாவின் இறையாண்மை பறிபோவதா?'' என்று பதறித் துடிக்கின்றனர். எல்லோரையும் விஞ்சும் விதத்தில் மன்மோகன் சிங்கைக் காட்டமாகத் தாக்கி ஒரு அறிக்கை வெளியிடுவதன் மூலம் தன்னைத் தீவிரமான "தேசபக்தை'யாக மக்கள் மத்தியில் காட்டிக் கொள்ள முயல்கிறார் ஜெயலலிதா. பாரதிய ஜனதாவின் அமெரிக்க அடிவருடித்தனத்துக்கு ஆதரவாய் நின்ற இந்த அருவெறுக்கத்தக்க அரசியல் கழிசடையும், சந்திரபாபு நாயுடுவைப் போன்ற அமெரிக்க எடுபிடிகளும் நாட்டின் இறையாண்மை பற்றிக் கவலைப்படுவதாகக் கூறுவது உண்மையான நாட்டுப்பற்றாளர்களின் எதிர்ப்பையும் கொச்சைப்படுத்துவதற்கு மட்டும்தான் பயன்படும்.
அடிக்கொள்ளி
பாரதிய ஜனதா கட்சிதான்!
இன்று நாடாளுமன்றத்தில் நடைபெற்று வரும் எதிர்ப்பு நாடகத்தைத் தலைமையேற்று நடத்தும் பாரதிய ஜனதாக் கட்சிதான் இந்த இராணுவ, அணுசக்தி ஒப்பந்தங்கள் இரண்டிற்குமான இரகசியப் பேச்சு வார்த்தையை தொடங்கி வைத்தது.
1998இல் அணுகுண்டு வெடித்த மறுகணமே ""அணு ஆயுதச் சோதனைத் தடை ஒப்பந்தத்தில் (இகூஆகூ), கையெழுத்திடத் தயார்'' என்று அமெரிக்க அதிபர் கிளின்டனின் காலில் விழுந்தார் வாஜ்பாயி. அன்றைய வெளியுறவுத் துறை அமைச்சராகவும் இராணுவ அமைச்சராகவும் இருந்த ஜஸ்வந்த் சிங் தான், அமெரிக்க வெளியுறவுத் துறை அதிகாரி ஸ்ட்ரோப் டோல்பாட்டுடன் இந்த இரகசிய ஒப்பந்தங்களுக்கான பேச்சு வார்த்தையைத் தொடங்கி வைத்தார். 1998இல் பா.ஜ.க தொடங்கி வைத்ததை 2005இல் காங்கிரசு முடித்து வைத்திருக்கிறது.
அன்று ""அமெரிக்க என்ரானை அரபிக் கடலில் வீசுவோம்'' என்று கூறி காங்கிரஸ் அரசுக்கு எதிராகப் பிரச்சாரம் செய்து மகாராட்டிரத்தில் ஆட்சியைப் பிடித்த பாரதிய ஜனதா, ஆட்சிக்கு வந்த மறு கணமே என்ரானுடன் ஒப்பந்தம் போட்டது. பெரும்பான்மையே இல்லாமல் வெறும் 13 நாட்களுக்கு தற்காலிகப் பிரதமராக இருந்த வாஜ்பாயி, அந்த ஒப்பந்தத்துக்கு மத்திய அரசின் அங்கீகாரத்தையும் வழங்கினார். உற்பத்தியே செய்யாத மின்சாரத்துக்கு மாதம் 90 கோடி ரூபாய் தண்டம் கட்டி மகாராட்டிர அரசு போண்டியானது. பிறகு திவாலான என்ரானின் பல நூறு கோடி ரூபாய் கடனை மத்திய அரசு அடைத்தது. இது பாரதிய ஜனதாவின் யோக்கியதைக்கு ஒரு பானைச்சோறு. மன்மோகன் சிங்கைக் காட்டிலும் விசுவாசமான அமெரிக்க அடிமைகளான பாரதிய ஜனதாவினர் ஆட்சிக்கு வந்தால் அணு உலைகளென்ன, நம் அடுப்பு உலைகளையும் சேர்த்து அமெரிக்காவுக்கு அடமானம் வைத்து விடுவார்கள் என்பதே உண்மை.
மன்மோகன் மார்க்சிஸ்டு"கொள்கை' வேறுபாடு!
""எங்களுடைய ஆட்சேபணைகளைப் பரிசீலிக்கும் வரையில் இந்த ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதை நிறுத்தி வைக்கவேண்டும்'' என இப்போது தீர்மானம் போட்டிருக்கிறார்கள் மார்க்சிஸ்டுகள். பிரணாப் முகர்ஜி போட்ட கள்ளத்தனமாக இராணுவ ஒப்பந்தம் 2005இலேயே அம்பலமாகி விட்டது. அமெரிக்காவின் ஆணைப்படிதான் ஈரானுக்கு எதிராக இந்தியா வாக்களித்தது என்பதும் அடுத்து அம்பலமானது. எனினும் காங்கிரஸ் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை அப்போதெல்லாம் மார்க்சிஸ்டுகள் திரும்பப் பெறவில்லை. மாறாக, அமெரிக்க இராணுவமும் இந்திய இராணுவமும் மே.வங்கத்திலேயே கூட்டு போர் ஒத்திகை நடத்துவதற்கு போலீசு பாதுகாப்புக் கொடுத்தார்கள். ""அணு ஆயுத ஒப்பந்தத்துக்கு எதிராகப் பாராளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வரப்போவதாக'' சென்ற ஆண்டு பூச்சாண்டி காட்டினார் பிரகாஷ் காரத். ""அப்படி ஒரு தீர்மானம் கொண்டு வந்தால் இந்த அரசே இருக்காது'' என்று பிரணாப் முகர்ஜி மார்க்சிஸ்டுகளை மிரட்டினார். உடனே சரணடைந்தார்கள். இன்றைக்கு சவடால் அடிக்கிறார்கள்.
""உலகமயமாக்கத்தை எதிர்க்கவில்லை, அது மனித முகத்துடன் இருக்கவேண்டும்'', ""சிறப்புப் பொருளாதார மண்டலத்தை எதிர்க்கவில்லை, விவசாயிகளுக்கு போதுமான நட்ட ஈடு கொடுத்து நிலத்தைப் பறிமுதல் செய்யவேண்டும்'', ""பொதுத்துறைகளைத் தனியார்மயமாக்குவதை எதிர்க்கவில்லை, தொழிலாளர்களின் வேலைக்கு உத்திரவாதம் தரவேண்டும்'' இதுதான் போலி கம்யூனிஸ்டுகளின் அரசியல். இப்போது, ""அணுசக்தி ஒப்பந்தம் வேண்டாம் என்று சொல்லவில்லை, நாட்டின் இறையாண்மைக்கு பெரும் பாதிப்பு வந்துவிடக் கூடாது'' என்று பசப்புகிறார்கள்.
""தனிப் பெரும்பான்மை இல்லாத ஒரு சிறுபான்மை அரசு, துரோகத்தனமான ஒப்பந்தத்தைத் திருட்டுத்தனமாக இந்திய மக்கள் மேல் திணித்திருக்கிறது. இந்த அரசைக் கவிழ்ப்பதில் என்ன குற்றம்?'' என்று நாடாளுமன்ற அரசியலின் வரம்புக்குட்பட்டு கேள்வி எழுப்பும் தைரியம்கூட இவர்களுக்கு இல்லை. ""இந்த அரசு நிலைக்குமா என்பதை நாங்கள் ஏன் சொல்லவேண்டும், அதை காங்கிரசு முடிவு செய்து கொள்ளட்டும்'' என்று பேடித்தனமாக மழுப்புகிறார்கள்.
இந்தப் பசப்பல்களுக்கும் மழுப்பல்களுக்கும் காரணம் இருக்கிறது. ""பன்னாட்டு நிறுவனங்களுக்கும் தரகு முதலாளிகளுக்கும் சலுகைகளை வாரி வழங்குவதன் மூலம்தான் நாட்டைத் தொழில் மயமாக்கி முன்னேற்ற முடியும்'' என்ற கருத்தில் மன்மோகனுக்கும் மார்க்சிஸ்டுகளுக்கும் எந்தவித வேறுபாடும் இல்லை. அதனால்தான் சிங்கூரிலும் நந்திக்கிராமிலும் எத்தகைய அட்டூழியங்கள் நடந்தாலும் மார்க்சிஸ்டுகளுக்குக் கொள்கை பூர்வமாக ஆதரவுக் கரம் நீட்டுகிறார் மன்மோகன் சிங். ""அணுசக்தி ஒப்பந்தத்தை ஆதரிக்குமாறு புத்ததேவைத் தொலைபேசியில் கூப்பிட்டு உரிமையோடு கோரிக்கை வைக்கிறார். கட்சித் தலைமை கூடி முடிவெடுப்பதற்கு முன்னதாகவே ""காங்கிரசு அரசைக் கவிழ்க்க மாட்டோம்'' என்று முந்திக் கொண்டு அறிக்கை விடுகிறார் ஜோதிபாசு.
அது மட்டுமல்ல; டாடா, அம்பானி போன்ற தரகு முதலாளிகள் முகம் சுளித்து வருத்தப்படும்படியான காரியம் எதையும் மார்க்சிஸ்டுகள் ஒருக்காலும் செய்ய மாட்டார்கள். மேலும், அமெரிக்காவின் வால் மார்ட்டையும் கொலைகார யூனியன் கார்பைடையும் மேற்கு வங்கத்தில் தொழில் தொடங்க பாக்கு வைத்து அழைக்கும் மார்க்சிஸ்டு கட்சி, அமெரிக்காவுக்கு எதிராக அத்து மீறிப் பேச முடியுமா? அதனால்தான் அடக்கி வாசிக்கிறார்கள்.
""முழுதும் நனைந்த பின் முக்காடு எதற்கு?'' என்கிறார் மன்மோகன் சிங். ""முக்காட்டை எடுப்பதற்கு மட்டும் நாங்கள் அனுமதிக்கவே மாட்டோம்'' என்று முழங்குகிறார்கள் மார்க்சிஸ்டுகள். இதுதான் அணுசக்தி ஒப்பந்தத்தில் இருவருக்கும் உள்ள "கொள்கை' வேறுபாடு.
அம்பலமானது போலி ஜனநாயகம்!
இந்த ஒப்பந்தம் இந்திய ஜனநாயகத்தின் யோக்கியதையையும் அம்மணமாக்கியிருக்கிறது. நாட்டின் தலைவிதியையே தீர்மானிக்கக் கூடிய இந்த ஒப்பந்தத்தை நாலு அதிகாரிகள்தான் இறுதியாக்கிக் கையெழுத்திட்டிருக்கிறார்கள். அதன் பிறகுதான் ஒப்பந்தத்தில் என்ன இருக்கிறது என்பது அமைச்சரவைக்கே தெரியுமாம்.
""÷பாடப்பட்டுள்ள ஒப்பந்தம் ஏற்றுக் கொள்ளக்கூடியதாக இல்லை. எனவே அரசு தற்போதுள்ள நிலையிலேயே இந்த ஒப்பந்தத்தை மேற்கொள்ளக் கூடாது'' என்றும், விதி184இன் கீழ் நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தி பெரும்பான்மையின் முடிவை அமல்படுத்த வேண்டுமென்றும் சமாஜ்வாதி, பா.ஜ.க. போன்ற எதிர்க்கட்சிகள் அவைத்தலைவரிடம் கோரியுள்ளனர்.
இந்தக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு விட்டது. ""இது போன்று கூற (அதாவது நாடாளுமன்றத்தின் ஒப்புதலை இந்த ஒப்பந்தம் பெற வேண்டும் என்று கூற) இந்த அவைக்குத் தகுதி இல்லை. நாடாளுமன்றத்தின் மூலம் தடை செய்யப்படாமல் ஒப்பந்தத்தை மேற்கொள்ள மத்திய அரசுக்கு உரிமை உள்ளது என அரசியல் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. எனவே, ஒப்பந்தத்தின் அமலாக்கத்துக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் (வேண்டுமானால்) நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தலாம்'' என்று தீர்ப்பளித்திருக்கிறார் அவைத் தலைவர் சோம்நாத் சாட்டர்ஜி.
தனிப் பெரும்பான்மை கூட இல்லாத ஒரு மைனாரிட்டி அரசாங்கம் தன் விருப்பத்துக்கு நாட்டையே அடமானம் வைத்து ஒப்பந்தம் போடலாம்? அதில் திருத்தம் கொண்டு வருவதற்குக் கூட பெரும்பான்மைக்கு உரிமை கிடையாதாம்! நாடாளுமன்றம் என்பது வெறும் அரட்டை மடம் என்பதற்கு இதைவிட என்ன சான்று வேண்டும்? ""வாக்குரிமை, பேச்சுரிமை, எழுத்துரிமை என்பதெல்லாம் வெறும் பித்தலாட்டம்; இந்திய ஜனநாயகம் ஒரு போலி ஜனநாயகம்'' என்று தொடர்ந்து நாங்கள் கூறி வருகிறோமே, அந்த உண்மை இதோ கண் முன்னே நிரூபணமாகியிருக்கிறது.
அடிமையாக மாட்டோம்,
அடியாளாக மாட்டோம்!
மறுகாலனியாக்கம் என்ற படுகுழிக்குள் இந்தியாவைத் தள்ளிய காட் ஒப்பந்தமும் இப்படித்தான் நம் மீது திணிக்கப்பட்டது. 1994இல் அமைச்சரவைக்கும் நாடாளுமன்றத்துக்கும் தெரியாமல் ஒரு அதிகாரிகள் குழுதான் அதிலும் கையெழுத்திட்டது. பிறகு நாடாளுமன்றம் அதற்குத் தலையாட்டியது. அந்த மறுகாலனியாக்கம்தான் இன்று நாள் தோறும் மக்களை மரணக்குழியில் தள்ளி வருகிறது.
மறுகாலனியாதிக்க அடிமைத்தனத்தின் கோரமான உச்சக் கட்டம்தான் இந்த அணுசக்தி ஒப்பந்தமும் இந்திய அமெரிக்க இராணுவ ஒப்பந்தமும்! மறுகாலனியாதிக்கக் கொள்கை பொதுத்துறைகளைப் பன்னாட்டு முதலாளிகளுக்குத் தாரை வார்த்திருக்கிறது. விளைநிலங்களைப் பிடுங்கி பன்னாட்டு முதலாளிகளுக்குப் பட்டா போட்டுக் கொடுத்திருக்கிறது. விவசாயிகளைத் தற்கொலைக்குத் தள்ளியிருக்கிறது. சிறு தொழில்களை அழித்து மக்களைப் பட்டினிச் சாவுக்குத் தள்ளியிருக்கிறது. இப்போது அது நம்முடைய மானத்தையும், பெயரளவு இறையாண்மையையும் கூடக் காவு கேட்கிறது. ஆக்கிரமிப்பு வெறி பிடித்த அமெரிக்க வல்லரசுக்கு நம்மையும் நம் நாட்டையும் அடியாளாக மாறச் சொல்கிறது. இதை நாம் அனுமதிக்கப் போகிறோமா? இந்த அவமானத்தைச் சகித்துக் கொள்ளப் போகிறோமா?
நாட்டுப்பற்றும் தன்மான உணர்ச்சியும் கொண்ட ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டும். இந்தத் துரோக ஒப்பந்தத்தை முறியடிக்கக் களத்தில் இறங்க வேண்டும்.
அணுசக்தி ஒப்பந்தத்தைத் தூக்கியெறிவோம்!
அமெரிக்கஇந்திய இராணுவ ஒப்பந்தத்தைக் கிழித்தெறிவோம்!
அமெரிக்க மேலாதிக்க எதிர்ப்பின் ஆசியத் தளமாக
இந்தியாவை மாற்றியமைப்போம்!எதிர்க்கிறார்கள் அணு விஞ்ஞானிகள்!
""நமது நாட்டில் உள்ள தோரியம் இருப்பைக் கொண்டு ஆண்டொன்றுக்கு 3,50,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும். (தற்போதைய நமது மின் உற்பத்தி ஆண்டொன்றுக்கு ஒரு இலட்சம் மெகாவாட்) நமது எதிர்கால எரிசக்தித் தேவைக்கு உத்திரவாதம் அளிக்க முடியும். இதை நீண்டகாலத்துக்கு முன்பே நாம் மதிப்பட்டுள்ளோம். நமது 500 மெகாவாட் அதிவேக ஈனுலையின் முன்னேற்றத்தைக் கண்டு (தோரியத்தை அடிப்படையாகக் கொண்டது) பல முன்னேறிய நாடுகள் புழுங்கிக் கொண்டிருக்கின்றன... இந்தத் துறையில் நமக்கு 40 ஆண்டு அனுபவம் உண்டு என்பது அமெரிக்காவுக்கும் தெரியும்... தோரியத்தைப் பயன்படுத்தி மின் உற்பத்தி செய்யும் நமது திட்டத்துக்கு முட்டுக்கட்டை போடுவதுதான் அமெரிக்காவின் நோக்கம் என்பது வெளிப்படையாகவே தெரியவில்லையா என்ன?''
ஏ.என்.பிரசாத், முன்னாள் இயக்குநர், பாபா அணு ஆராய்ச்சி மையம், அணு உலைப் பாதுகாப்பு ஆலோசகர், சர்வதேச அணுசக்தி முகமை, வியன்னா. (டெக்கான் கிரானிக்கிள், ஆக7, 2007)
""எதிர்காலத்தில் 30,000 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கான அணுஉலைகளை நாம் இறக்குமதி செய்வதாக வைத்துக் கொள்வோம். இந்த அணு உலைகளை வாங்குவதற்குக் குறைந்த பட்சம் 3 இலட்சம் கோடி ரூபாயை நாம் முதலீடு செய்ய வேண்டியிருக்கும். இதில் உற்பத்தியாகும் மின்சாரத்தைப் பயன்படுத்துவதற்கு தொழிற்சாலைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் மேலும் 12 இலட்சம் கோடி ரூபாய்களை நாம் முதலீடு செய்ய வேண்டியிருக்கும். ஒருவேளை இந்த அணு உலைகளுக்கான எரிபொருள் (யுரேனியம்) முடக்கப்பட்டால் மொத்தம் 15 இலட்சம் கோடி ரூபாய் மூலதனம் முடங்கிக் கிடக்க வேண்டியிருக்கும்...
""நமது பிரதமரும் திட்டக் குழுவின் துணைத்தலைவரும் (அலுவாலியா) பிரபலமான பொருளாதார வல்லுநர்கள். அவர்களுக்கு இந்த உண்மை புரியாமலா இருக்கும்? 15 இலட்சம் கோடி மூலதனம் முடக்கப்படுவதால் ஏற்படக்கூடிய நட்டத்தைப் பற்றி ஒரு கணம் சிந்தித்தால், அதற்குப் பின் "அணுவெடிச்' சோதனை செய்து பார்க்கலாம் என்ற தைரியம் எதிர்காலத்தில் எந்த அரசாங்கத்துக்காவது வருமா?''
டாக்டர்.ஏ.கோபாலகிருஷ்ணன், முன்னாள் தலைவர்,
அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம், இந்திய அரசு.
No comments:
Post a Comment