தமிழ் அரங்கம்

Sunday, February 3, 2008

இலங்கையில் சுதந்திர தினமாம்

அகிலன்
04.02.2008

சுதந்திரம் அடைந்ததாக சொல்லப்படும் 60-வது வருடத்தை, மகிந்த குடும்பத்தின் சுதந்திரம் என்று சொல்லலாம். அரசியல் ரீதியாக இரத்தக் கறை படிந்த சுதந்திர ஆண்டாகவே, இதை அவர்கள் கொண்டாடுகின்றனர்.

அரசு-புலி போர் வெறி ஆட்டங்களினால், காடுகளில் உள்ள விலங்குகள் பறவைகள் கூட சுதந்திரமாக நடமாட முடியாமல் தவிக்கின்றன. காட்டில் மாத்திரமல்ல நாட்டிலும் இந்த நிலையே. மக்கள் வீதியில் செல்லும் போது ஓர் சிறு பொதியைக் கூட கண்டாலே, வெடிகுண்டு எனறு அங்கலாய்த்து ஓடுகின்றனர். இந்த நிலையில் தான் நாட்டில் சுதந்திரம் உள்ளது.

எமது நாட்டில் மக்களால் எதைத் தான் சுதந்திரமாக செய்ய முடிகின்றது. ஒருவர் வீட்டை விட்டு புறப்பட்டால், மாலை வீடு திரும்புவது நிச்சயமில்லை. எப்போது எங்கு குண்டு வெடிக்கும் என்று தெரியாத நிலை. எப்படி, ஏன் யாரால் கடத்தப்பட்டோம, கடத்தப்படுவோம் என்று தெரியாத நிலை.

இன்று அரசுக்கும்-புலிகளுக்கும் சாதாரண அப்பாவி மக்களே பிரதான எதிரி. சாதாரண மக்களையே இலக்கு வைத்து, அவர்களைத் தாக்கி சாகடிக்கின்றனர்.

பிரித்தானிய ஏகாதிபத்தியம் தனக்கு ஏற்ப இலங்கைக்கு சுதந்திரம் என்ற ஒன்றை வழங்கிச் சென்ற பொழுது, தங்கள் நாட்டில் உள்ளதைப் போல் இங்கும் போலியான முதலாளித்துவப் பாராளுமன்றமுறையையும் அறிமுகப்படுத்திச் சென்றனர். கடந்த 60 ஆண்டுகளாக இப் பாராளுமன்றத்தில் சேனநாயக்கா - பணடாரநாயக்கா - மகிந்த போன்றவர்களின், குடும்ப ஆட்சியே நடைபெற்று வருகின்றது.

இப்படி கடந்த 60 ஆண்டுகளாக மாறி மாறி அரசுக் கட்டில் ஏறிவந்த சிங்களப் பேரினவாத அரசுகள், தொடர்ந்து பாராளுமன்றத்தில் தங்களது குடும்ப ஆட்சி அதிகாரத்தை தக்க வைத்து வந்தன. இதற்காகவும் தமிழ் மக்களுக்கு எதிரான இனவாத நடவடிக்கைகளையே, போட்டி போட்டு நடைமுறைப்படுத்தி வந்தனர். அதன் விளைவுகளை, இப்போது நாம் இரத்த ஆறின் ஊடாகப் பார்க்கின்றோம்.

இனவாதப் பித்து தலைக்கேறிய மகிந்த குடும்பமும், அவரது கூட்டாளிகளும் இன்று மக்கள் விரோத சர்வாதிகார காட்டுத்தர்பார் அரசாங்கத்தை நடாத்துகின்றனர். பாராளுமன்றத்தில் கூட, அரசுக்கெதிராக கருத்துக்களை சுதந்திரமாக முன்வைக்க முடியாது. எதிர்க் கருத்து தெரிவிப்போர் பாராளுமன்றத்தில் மிரட்டப்படுவதுடன், வெளியில் தேவையேற்படின் படுகொலையும் செய்யப்படுகின்றனர்.

முன்பு பாராளுமன்றத்தை கள்வர் குகையென புரட்சிகர இடதுசாரிக் கட்சிகள் சொல்வதுண்டு. ஆனால் இப்போது பாராளுமன்றம் காடையர்-கொலைகாரர் கூடாரமாகிவிட்டது. இக் காடையர் கொலைகாரக் கூட்டத்தில், காவியுடுத்த புத்தபிக்குகளும் செஞ்சட்டை அணிந்து இனவெறி கக்கும் ஜே.வி.பி. குணடர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களாகி பாராளுமன்றத்தை அலங்கரிக்கின்றனர்.

இன்றைய மகிந்தாவின் 'சுதந்திர" இலங்கையில் பேச்சு - கருத்து - பத்திரிகைச் சுதந்திரம் என்பதே கிடையாது. மக்கள் பொதுக் கூட்டங்களையோ ஊர்வலங்களையோ செய்யமுடியாது. இவற்றை சிங்களப் பிரதேசங்களில் செய்தால் சிங்களப் புலியெனவும், தமிழ் பிரதேசங்களில் செய்தால் தமிழ் புலியெனவும் சித்தரித்து, சிறைகளில் அடைத்து சித்திரவதை செய்கின்றனர்.

ஊடகங்கள் - ஊடகவியலாளர்களுக்கும் இதே நிலையே. அண்மையில் மேர்வின் டி சில்வா என்றோர் மந்திரி தன்னுடைய ஓர் செய்தியை ரூபவாகினி கூட்டுத்தாபனம் ஒளிபரப்பவில்லை என்ற ஒரே காரணத்திற்காக, தானும் தன்னுடைய குண்டர்களும் சேர்ந்து ஒளிபரப்புக் கூட்டுத்தாபன ஊழியர்களை தாக்கிய சம்பவத்தை யாவரும் அறிவர். இவையெல்லாம் சுதந்நிர - ஐனநாயகத்தின் பெயராலேயே நடைபெறுகின்றது. ஓர் மந்திரியின செய்தியை ஒளிபரப்பாமைக்கு இந்நிலையானால், அவருக்கு எதிராக ஊடகங்கள் விமர்சனங்களை எழுதினால், அவர் வெள்ளை வானில் குண்டர்களோடு சென்று குண்டு வைத்து தகர்த்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

இன்றைய நிலையில் எமது நாடு சர்வாதிகாரத்தின் உச்சகட்டத்தின் ஊடே, பாசிசத்தை நோக்கிச் செல்கின்றது. இப்படிப்பட்ட இந்த சுதந்திரத்தில், மனித உயிர்களுக்கு பெறுமானம் என்பதே இல்லாமல் போய்விட்டது.

பூச்சி புழுக்களை அழிப்பதுபோல், அரசு மனித உயிர்களை அழிக்கின்றது. நாளாந்தம் 10 முதல் 20 வரையில் மனித உயிர்கள், அரசின் அக்கிரமங்களால் அழிக்கப்படுகின்றன. அரசின் கொடூரமான நடவடிக்கைகளால் கொல்லப்படும் மனித உடல்கள், கேள்வி நியாயமின்றி விசாரணைகள் இன்றி காடுகளில் மலைகளில் வீதிகளில் வீசப்படுகின்றன அல்லது புதைகுழிகளில் புதைக்கப்படுகின்றன. இவை பச்சிளம் குழந்தைகள் முதல் சிறுவர்கள் இளைஞர்கள் யுவதிகள் பெரியவர்கள் என்று, எந்தப் பாகுபாடின்றி நடக்கின்றது.

அண்மையில் அனுராதபுர கெப்பட்டிப்பொலாவ என்னுமிடத்தில் புதைகுழியில் இருந்து எடுக்கப்பட்ட 16 சடலங்கள் யாருடையது என்ற உண்மை நிலையை அரசு இதுவரை வெளியிடவேயில்லை. எதிர்க்கட்சிகள் இதுபற்றி கேள்விகள் எழுப்பியும், சுதந்திரம் கொண்டாடும் அரசு மௌனமாகவே இருக்கின்றது. 'பேய் ஆட்சி செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள்" என பாரதி அன்று பாடியது, இன்று மகிந்தாவின் கொடுங்கோல் ஆட்சிக்கு மிகப் பொருத்தமாகவே உள்ளது.

இவை அனைத்திற்கும் இசைவாக நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஐனாதிபதி ஆட்சிமுறை. அதை நிறைவு செய்ய விகிதாசாரப் பிரதிநிதித்துவம கொண்ட பாராளுமன்ற அமைப்புமுறை, காலவரையற்ற அவசரகால கொலைவெறிச் சட்டடங்கள் - ஊரடங்குச் சட்டங்கள், பொலிஸ் -இராணுவ - குண்டர் படை என, அனைத்தும் கொண்ட அரசு இயந்திரத்தை கொடுங்கோலன் மகிந்தா கொண்டுள்ளார். இப்பலத்தோடு இன்னொரு சர்வாதிகாரி ஆகிவிட்டார்.

மகிந்தாவின் இப் போக்கால் நம்நாடு பாகிஸ்தானைப் போல் அல்லது முன்னாள் சர்வாதிகாரி சுகாட்டோவின் இந்தோனேசியாவைப் போல், வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.


No comments: