பி.இரயாகரன்
14.02.2008
தாழ்த்தப்பட்ட மக்களின் விடுதலைக்கு தான் நாம் போராடுகின்றோம் என்று கூறிக்கொண்டு, அவர்களுக்கு எதிராக அரசியலில் சித்துவிளையாட்டு காட்டுகின்றவர்கள் முதன்மையான உடனடியான எதிரிகள்.
கடந்தகால, நிகழ்கால வரலாற்றைப் பாருங்கள் புலிகள் தலித் மக்களின் விடுதலைக்காக தாம் உண்மையாக உழைப்பதாகக் கூறவில்லையா? பெண்விடுதலைக்காகவும், வர்க்க விடுதலைக்காகத் தான், தாம் போராடுவதாக புலிகள் கூறவில்லையா? ஏன் இந்திய இலங்கை அரசுடன் நிற்கின்ற கூலிக் குழுக்கள், அன்றும் இன்றும் இதைக் கூறவில்லையா?
நீங்கள் இதிலிருந்து இவர்கள் எல்லாரிடமிருந்தும் எப்படி ஏன் எவ்வழியில் வேறுபடுகின்றீர்கள். ஏன் நீங்கள் அவர்களுடன் சேர்ந்து இதைச் செய்ய முனையவில்லை. இப்படி நாங்கள் கேட்பதால், புலியெதிர்ப்பு ராகவன் முதல் சோபாசக்தி வரை வரட்டு மார்க்சியம் என்று சொல்லி, அரசியலில் வித்தை காட்டி பிழைக்க முனைகின்றனர்.
தமது அரசியல் சோரத்தை சோபாசக்தி இப்படிக் கூறுகின்றார் 'சென்ற தலித் மாநாட்டுக்கு வீ. ஆனந்தசங்கரியும், EPRLF (ப.நா) செயலாளர் சிறீதரனும் வாழ்த்துக்களை அனுப்பியிருந்தார்கள். மாநாட்டில் ஒருசில ENDLF, PLOTE, EPRLF உறுப்பினர்களும் கலந்துகொண்டார்கள். எனவே தலித் அரசியல் துரோக அரசியல் என்றொரு குற்றச்சாட்டுமுண்டு. என்னைப் பொறுத்தவரை நான் புலிகளைக் கண்டிப்பதைப் போலவே எப்போதும் கூட்டணியையும் மற்ற இயக்கங்களையும் கண்டித்து வந்துள்ளேன். அதே வேளையில் புலிகள் இயக்கத்திலும் சரி பிற அமைப்புகளிலும் சரி சாதிய விடுதலையில் அக்கறைகொண்ட தலித்துகளும் சொற்ப அளவில் தலித் அல்லாதவர்களுமிருக்கிறார்கள் என்ற உண்மையை நாம் மறந்துவிட முடியாது. ஒரு தலித் புலியாயிருக்கலாம், புளட்டாய் இருக்கலாம் கொம்யூனிஸ்டாக இருக்கலாம். ஆனால் அவர் தன்னளவில் சாதியத் தளையிலிருந்து விடுபடவே விரும்புவார். ஆதிக்கசாதியினருக்கு எதிரான தார்மீகக் கோபம் அவரது உள்ளத்தில் கனன்றுகொண்டுதானிருக்கும். எனவே இந்த இயக்க அரசியல்களுக்குப் புறத்தே சாதியொழிப்பு என்ற தளத்தில் சாதியத்திற்கு எதிரான சக்திகளைச் சாத்தியமான வழிகளிலெல்லாம் அய்க்கியப்படுத்த வேண்டும்." என்கின்றார். ஏன் ஜயா நீங்கள் அங்கே போகவில்லை. இப்படி அரசியல் வித்தை.
சரி இது எங்கிருந்து, எப்படி, எந்த அரசியல் ஊடாக வருகின்றது. வரலாற்றை பின்நோக்கிப் பாருங்கள். கருணா கிழக்கு பிரதேசவாதத்தை எழுப்பிய போது, பாலசிங்கம் எதைச்சொன்னாரோ அதுதான் இது. புலிகளின் 'மதியுரையர்" பாலசிங்கம் அன்று "இங்கு மரபு ரீதியாக தமிழ்ச் சமுதாயத்தில் நூற்றாண்டுகளாக ஊறிப்போயிருந்த சாதி, சமய, வர்க்க வேறுபாடுகளை விஞ்சி, ஐக்கியப்பட்ட ஒரு தேசிய விடுதலைப் போராட்டத்தைக் கட்டியெழுப்பியதற்காக" என்றார். அனைத்தையும் கடந்த தேசியம் என்றார். இன்று சோபாசக்தி அனைத்தையும் கடந்த தலித்தியம் என்கிறார். என்ன அரசியல் ஒற்றுமை.
புலி 'மதியுரைஞர்" பாலசிங்கம் மேலும் '.. தமது மக்களால் பெரிதும் விரும்பி ஏற்றப்படுபவர் பிரபாகரன். --- பிரபாகரனுடன் இருபத்தைந்து வருடங்களுக்கு மேலாக சேர்ந்து வாழ்ந்தவன், இணைந்து தொழிற்பட்டவன் என்ற வகையில் அவரின் எண்ணத்திலோ, செயலிலோ பிரதேசவாதத்திற்கான சாயலைக்கூட நான் கண்டதில்லை. புலிகளின் தலைமைத்துவத்தின் மீது கருணா சுமத்தும் பிரதேசவாதக் குற்றச்சாட்டு இல்லாததொன்று அபாண்டமானது."என்கின்றார். இதையே சோபாசக்தி 'என்னைப் பொறுத்தவரை" என்று கூறிக்கொண்டு, தலித்துக்கு எதிராக இதை அரங்கேற்றுகின்றார். என்ன ஒற்றுமை. நான் அப்படியல்ல! உன் அரசியல் என்ன? அதுவல்லவா அனைத்தையும் தீர்மானிக்கின்றது.
பல்வேறு கட்சிகளில் இருக்கக்கூடிய பல்வேறு தரப்பட்டவர்களை உள்ளடக்கும் வகையில், கோட்பாட்டை வளைத்து நெளித்து அள்ளிக்கட்டும் தலித்தியம் பற்றி (தேசியம் பற்றி புலிகள்) சோபாசக்தி பேச முனைகின்றார்.
புலிகளின் அதே அற்புதமான அரசியல். மறுபக்கத்தில் அ.மார்க்ஸ்சின் மகிமையும் இதுதான். பாரிஸ் தலித் மாநாட்டில் தலித்துகள் மட்டும் பேசவேண்டும், கூட வேண்டும் என்றவர் சோபாசக்தி. இன்று புலி முதல் இலங்கை இந்திய கூலிக் குழுக்களில் உள்ள தலித்துகள் தான், இதை ஆதரிப்பதாக, பங்குபற்றுவதாக கூட கற்பனையில் பேசுகின்றார். அந்தக் கட்சிகள், அமைப்புகள் சாதியறியாதவர்கள் என்கின்றார். அதை அவர்கள் பயன்படுத்த முனையவில்லை என்கின்றார். நீண்ட நித்திரையாலே எழும்பி, இதை தமதாக்கும் சதியில் அலம்புகின்றார். சாதியவான்கள் தலித்துகளைக் கொண்டே தலித்துகளை ஒடுக்குகின்ற அதே தந்திரம், அதே ரவுடித்தனம் இது.
அரசியல் சமரசம், பிழைப்புவாதம், நட்புவாதம், மூடிமறைப்பு என்று, இவை எல்லாமாகி விடுகின்றது. இந்த அரசியல் என்ன செய்கின்றது. விடுதலைப்புலிகளும், இலங்கை இந்தியாவுடன் இயங்குகின்ற கூலிக் குழுக்களும், தலித்துக்கு எதிரானவர்களா இல்லையா என்பதை வெளிப்படையாக சொல்ல மறுக்கின்றது. அதை தெளிவுபடுத்த மறுக்கின்றது. அங்கே அவர்களின் தலித்துக்கு எதிரான அரசியலை முன்னெடுப்பார்கள். இங்கு தலித்துக்கு ஆதரவாக, குழிபறிக்கும் அரசியல் செய்வார்கள். இதுதான் தலித் மாநாடு.
தலித் உணர்வு இல்லாத அரசியல், அங்குமிங்குமாக இயங்க முடியும் என்பது வேடிக்கை. புலிக்குள், புலியெதிர்ப்புக்குள் தலித்தியத்தை உணர்வு பூர்வமாக வைக்க முடியுமா? இப்படி வைத்து உயிர் வாழத்தான் முடியுமா? சோபாசக்தியோ அனைவர் காதிலும் பூவைக்கின்றார்.
பார்ப்பனியம் இராமன் பாலத்தின் மகிமையைப்பற்றி பேசுவது போன்றது இது. இதற்கு தத்துவ மேதையாக வழிகாட்டும் அ.மார்க்ஸ் அன் கொம்பனிகள்.
சென்ற மாநாட்டில் புலியை மட்டும் தலித்தின் எதிரியாக புலியெதிர்ப்புவாதிகள் சித்தரித்தனர். இப்படி புலியெதிர்ப்புக் கும்பல் தலித்தியத்தின் பெயரில் குளிர் காய்ந்தது. இம்முறை சோபாசக்தி தலைமையில் தலித்தின் பெயரில், தலித்தின் எதிரி புலியுமல்ல, புலியெதிர்ப்புமல்ல எனகின்றார். இதனால் அங்கு வாருங்கள் என்கின்றார். நாம் அனைவரும் ஒன்றாக தலித்தின் பெயரில் குளிர்காய முடியும் என்கின்றார். இதைத்தான் மாநாட்டுக்கான அழைப்பில் சோபாசக்தி கூறுகின்றார். இப்படி அரசியலில் வித்தை காட்ட முனைகின்றார்.
நீங்கள் தலித்துக்கு எதிரான அரசியலுடன் கூட இருக்கலாம், ஆனால் இங்கு வரலாம் என்கின்றார். கூடிக் கும்மாளமடிக்காலம் வாருங்கள் என்கின்றார். உள்ளடக்கத்தில் நானும் ஒன்று நீயும் ஒன்று தான் என்கின்றார். இப்படி தலித்தின் எதிரியுடன், அதன் அரசியலுடன், ஐக்கியமுன்னணி கட்டுகின்றார். அதற்கு அவர் ஒரு உதாரணம் தருகின்றார். 'வரலாற்றில் நமக்கொரு முன்னுதாரணமும் இருக்கிறது. ஈழத்தில் சாதியொழிப்புப் போராட்டங்களைத் தொடக்கிக் கணிசமான வெற்றிகளைச் சாதித்த சிறுபான்மைத் தமிழர் மகாசபையில் கொம்யூனிஸ்டுகளும் இருந்தார்கள். தமிழரசுக் கட்சியினரும் இருந்தார்கள். எதிரும் புதிருமான அரசியல் நிலைகளுக்கு அப்பாலும் தலித் விடுதலை என்ற உணர்வு அவர்களை அய்க்கியப்படுத்தியது." வரலாற்றின் போக்கில் ஒருபகுதியை மட்டும் தமக்கு சார்பாக காட்டும் திரிபு.
இது தவறானது, தாழ்த்தப்பட்ட மக்களின் விடுதலைக்கு இது எதிரானது என்பதால், இது நீடிக்கவில்லை. இது நீடித்திருந்தால், தாழ்த்தப்பட்ட மக்களின் வீரம் செறிந்த போராட்டமே அன்று கிடையாது. சோபாசக்தி வரலாற்றுப் போக்கை, அதன் அனுபவத்தை நிராகரித்து நிற்பதால், அந்த போராட்டத்துக்கு எதிராகவே வெளிப்படையாக கையுயர்த்துகின்றார். நடந்த வரலாற்று அனுபவத்தை, உண்மையை நிராகரிப்பது தாழ்த்தப்பட்ட சமூகத்துக்கு எதிரான வகையில் கட்டமைக்கும் திரிபாகும். தாழ்த்தப்பட்ட மக்களின் உண்iமான விடுதலைக்கு, அந்த ஐக்கியம் அந்த வழிமுறை சாத்தியமல்ல என்பதை, வரலாறு நிறுவிக் காட்டியது.
இந்த இடத்தில், இதைச் செய்யத்தான் தலித் மாநாடு என்றால், அது அவசியமற்றது.
தொடரும்
1 comment:
தேசியம் ஒரு கற்பிதம் என்பதில் கற்பிதம் என்பது மாயை என்றதான மொழிப்படுத்தல் இந்தக் கூற்றை எதிர்ப்பவர்களிடம் மட்டுமில்லை இதை ஆதரிப்பவர்களிடமும்தான் (புகலிடத்தில்) இருக்கிறது. இந்த எளிய புரிதலை வைத்தேதான் முதலாவது தலித் மாநாட்டிலும் தேசியத்தை நிராகரிக்கும் பாணிகளும் பாவனைகளும் இருந்தன. தலித்தியம் தேசியத்துக்கு எதிரானதா இல்லையா என்ற கேள்விக்கு அங்கு விடையளிக்கும் முக்கியம் இல்லாமலிருந்தது அல்லது தட்டிக்கழிக்கப்பட்டது.
தேசியம் என்ற பெருங்கதையாடலுக்குள் ஒடுக்குபவர்களும் ஒடுக்கப்படுபவர்களும் தந்திரமாக இணைக்கப்பட்டுவிடுகிறார்கள்... ஒடுக்குமுறையை சகித்துக்கொள்ள வைக்கப்படுகிறார்கள் என்றால் தலித் என்ற கருத்தாக்கம் எப்படி பெருங்கதையாடலாக இல்லாமல் போய்விடும். சாதியின் பெயரால் ஒடுக்கப்பட்டிருக்கும் சாதிகளுக்குள்ளே நிகழ்த்தப்படும் படிநிலை ஒடுக்குமுறைகளை சகித்துக்கொண்டு இருக்கும்படி தலித்தியம் என்ற பெருங்கதையாடல் கோருகிறது என விவாதிக்கும் ஒருவருக்கு என்ன விடை கிடைக்கப்போகிறது. புறநிலையிலிருந்து நிகழ்த்தப்பட்ட ஒடுக்குமுறை வடிவங்களாக பார்ப்பனியத்தையும் வேளாளியத்தையும் அடையாளம் கண்;டதால்தான் ஒடுக்கப்பட்ட சாதிகள் தலித் என்ற அடையாளத்துள் வருகின்றன. இந்த பார்ப்பனியம் அல்லது வேளாளியம் நிகழ்த்தும் ஒடுக்குமுறையால்தான் தலித்தியம் உருப்பெறுகிறது. எனவே தலித்தியமும் ஒரு கற்பிதம்தான்.
கற்பிதம் என்ற சொல்லுக்கு தமிழகராதியில் விளக்கம் எடுத்து தலித்தியத்தை எப்படி நிராகரிக்க முடியாதோ அதேபோன்றுதான் தேசியத்தையும் நிராகரிக்க முடியாது. வேண்டுமானால் சிங்களப் பேரினவாதம் செயற்படுவதை மறுக்கும் ஒருவர் தமிழ்த் தேசியத்தை நிராகரிப்பதை புரிந்துகொள்ள முடியும். அல்லது மறுதலையாக சிங்களப் பேரினவாதத்தை தமிழ்த் தேசியம்தான் கட்டமைத்தது என்று மறுத்தான் கொடுத்து தமிழ்த்தேசியத்தை நிராகரிக்க முடியும். தமிழர் என்ற இன அடையாளத்துள் வைத்து நிகழ்த்தப்படும் வன்முறையை எதிர்கொள்வதில் தமிழ்த் தேசியப் போராட்டத்தின் தேவையை எப்படி நிராகரிப்பது? நிறப்பிரிகை விவாதங்களின்போது தேசியம் ஒரு கற்பிதம் என்பதை மறுத்த கல்யாணி பின்னர் “ஆழமாக யோசித்தால் சரியானதாகத்தான் இருக்கிறது” என்று ஏற்றுக்கொண்டாலும் “தேசிய இன அடிப்படையிலான ஒடுக்குமுறை கற்பிதம் இல்லையே , அது யதார்த்தமாதகத்தானே இருக்கிறது” என்கிறார். நிறப்பிரிகை எழுப்பி தொடர்ந்த இந்த விவாதம் பல பரிமாணங்களில் சிந்திக்கும் கதவுகளைத் திறந்தது. ஆனால் அது முடிவுகளை அறிவித்ததாக நான் புரிந்துகொள்ளவில்லை. தேசியம் ஒரு கற்பிதம் என்பதும் தேசியம் ஒரு காலகட்டத்தின் தேவை என்பதும் ஒன்றுக்கொன்று முரணான கருத்துக்களல்ல என்றது நிறப்பிரிகை.
“தேசியம் ஒரு கற்பிதம் என்பது ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தை மறுப்பதென்பதாகாது. ஈழத்தில் தமிழர்கள் மீதான ஒடுக்குமுறை என்பது சிங்களப் பேரினவாதம் என்ற கட்டமைப்பின்/கற்பிதத்தின் விளைபொருள். இதற்கெதிரான ஒரு தேசிய விடுதலைப் போராட்டம் தவிர்க்க இயலாததது” என்று சொன்ன நிறப்பிரிகை, இந்தப் போராட்டம் விடுதலைபெறும் அனைத்து மக்களுக்கும் உரிமையை வழங்குவதாக இருக்கவேண்டும் என்ற வகையில் தேசியத்தை கற்பிதம் செய்ய வேண்டும் என்று விவாதத்தை முன்வைத்தது. புலிகளின் தேசியத்தை தமிழ்த் தேசியமாகக் கருதுபவர்களும் புலியெதிர்ப்பியலாளர்களும் தமது ஆயுதமாக இந்தக் கோட்பாட்டை முன்மொழிவது அவர்களின் தேவைகருதியதுதானே யொழிய ஒன்றும் விவாதப் பண்புகொண்டதல்ல.
இன்னொருவகையில் இது ஒன்றும் புதிதான முன்மொழிவுகளுமல்ல. 80 களில் தோன்றிய இயக்கங்களும் பெண்விடுதலை தலித் விடுதலை என்பவற்றை தேசியவிடுதலைப் போராட்டம் உள்ளடக்க வேண்டும் என்று சொன்னவைதான். அதை அடையும் வழிமுறைகள் அதற்கான விவாத முறைகளெல்லாம் புதிய புரிதல்களையோ பரிமாணங்களையோ தரவில்லை. சோவியத் யூனியனையும் சீனாவையும் முன்வைத்து அதன் சமூக இயக்கங்களை புகழ்ந்து தருவதிலேயே தவழ்ந்து திரிந்தன. எனவே அதன் வழிமுறைகளை அடைவதற்கான விவாதக்களங்களில் வைத்து தேசியம் கற்பிதம் செய்யப்படவில்லை என்று சொல்லலாம்.
தேசியம் ஒரு கற்பிதம் என்ற கோட்பாட்டை தேசியத்தை நிராகரிப்பதானதாக மாற்றிய வித்தகம் புகலிடத்தில் இடைக்காலகட்டங்களில் காணாமல்போய் மீண்டும் முளைத்தவர்களுக்கே பெரும்பாலும் வாய்க்கப் பெற்றிருக்கிறது. இது தலித்தியம் பெண்ணியம் முஸ்லிம் இனம்மீதான தமிழ்ப்பேரினவாத ஒழிப்பு என்பதை உள்ளடக்கும் தேசியத்தைக் கோருவதற்குப் பதில் இவைகளை தேசியத்துக்கு எதிரானதாக வைத்துவிட்டிருக்கிறது. இதற்குள்தான் தலித் மேம்பாட்டு முன்னணியின் தலித்திய மாநாடு அகப்பட்டிருக்கிறது. எல்லா விடுதலைக்கும் தலித் விடுதலைதான் முன்நிபந்தனை என்பதை இதற்கு வெளியில் வைத்துப் புரிந்துகொள்ள முடியவில்லை. இதையே -சாதிப்படிநிலையில் கீழடுக்கில் நிறுத்தப்படுபவர்களிலிருந்து பார்ப்பனரின் வாசல்படிவரை, பெண்ணியத்தை எதிர்ப்பவரிலிருந்து பெண்ணியத்துக்காக குரல்கொடுக்கும் ஆணாதிக்கவாதிகள்வரை பற்றிப் படர்ந்திருக்கும் ஒடுக்குமுறைக்கெதிரான- பெண்விடுதலைதான் எல்லாவிடுதலைக்கும் முன்நிபந்தனை என ஏன் இடம்மாற்ற முடியாது. இந்த ஒடுக்குமுறைகளை புறம்தள்ளி தலித் விடுதலை மட்டும்தான் முன்நிபந்தனை என எழுதுவது எப்படி பன்முகத்தன்மை வாய்ந்த (பின்நவீனத்துவப்) பார்வையாக இருக்க முடியும்? எனவே கோட்பாட்டு ரீதியில் தலித் மேம்பாட்டு முன்னணி தன்னை தெளிவுபடுத்த வேண்டியிருக்கிறது.
இந்த அமைப்பின் பெயர்கூட “இலங்கை தலித் மேம்பாட்டு முன்னணி” என்ற அடிப்படையில் இலங்கையிலுள்ள தலித்துகளினது மேம்பாட்டுக்கான செயற்திட்டங்களை அது கொண்டிருக்கும் என ஒருவர் எதிர்பார்க்க முடியும். அதை முதல் மாநாட்டில் நண்பர் தேவதாசன் வலியுறுத்தியதாகவும் ஞாபகம் இருக்கிறது. மேம்பாட்டுத் திட்டங்கள் சம்பந்தமாக இந்த இரண்டாவது மாநாடு கரிசனை கொள்ளும் எனவும் சொல்லப்பட்டது. ஆனால் அதன் நிகழ்ச்சி நிரலில் இதைக் காணவில்லை. சோபாசக்தி சொல்வதுபோன்று கருத்தியல் களத்தில் செயற்படுவதுதான் என்றால் இலங்கை தலித் மேம்பாட்டு முன்னணி என்பதில் இலங்கை, மேம்பாடு என்ற சொற்கள் பெயர்ப்பலகையாக மாறிவிடும். தலித் மாநாடாகவன்றி தலித்திய மாநாடாக -கூடிக்கலையும் மாநாடாக- மாறிவிடும்.
முதல் மாநாடு நடந்து 4 மாத காலத்துள் இரண்டாவது மாநாட்டை நடத்தும் அவசரம் ஏன் வந்தது என்று புரியவில்லை. மாநாட்டுச் செலவு இலங்கைத் தலித்துகளின் மேம்பாட்டுத் திட்டத்தை அமுக்கிவிடும் படியாக அமைந்துவிடுமானால் அதைவிட பரிதாபமானது எதுவுமில்லை. இலக்கியச் சந்திப்பைப் பிரதிபண்ணி தலித் மேம்பாட்டு முன்னணியும் செயற்படப் போகிறதா? என்ற கேள்வியை அதன் நிகழ்ச்சி நிரல் எழுப்பியுள்ளது. மாநாட்டுக்கு வாரீர் என்று வருந்தியழைக்கும் நிலைக்கு இந்த மாநாடுகளை அலையவிடாமல் பார்க்கும் கடப்பாடு தலித் முன்னணியினரின் கையில்தான் இருக்கிறது. இந்த மாநாடுகளை ஒழுங்குசெய்பவர்களெல்லாம் தற்காலிக தலித் முன்னணி உறுப்பினர்களாக தோன்றி மறைந்தால் அது எடுப்பார் கைப் பிள்ளையாகிவிடும் அவலம்தான் மிஞ்சும். -ரவி
Post a Comment