தமிழ் அரங்கம்

Saturday, September 17, 2005

மனித உழைப்பு சீனாவில்...

மனித உழைப்பு சீனாவில் உயர் வீகிதத்தில் சுரண்டப்படுவதால், உலகளாவிய மூலதனத்தையே அதிர்வுக்குள்ளாக்கின்றது

சீன உற்பத்திகள் உலகமயமாதலில் ஒரு அதிர்வை உருவாகின்றது. ஏகாதிபத்திய மூலதனங்களை அங்குமிங்குமாக ஒடவைக்கின்றது. இன்றைய நவீன தொழில் நுட்பம் சார்ந்த உலகச்சந்தையின் விலையையும், பல நிறுவனங்களின் திவாலையும் தீர்மானிக்கும் நாடாக சீனா மாறிவிட்டது. உலக உற்பத்தி மற்றும் விற்பனை சந்தையின் விலைகள் பலவற்றை, சீனா உற்பத்திகளே தீர்மானிக்கத் தொடங்கிவிட்டது. சீனா உற்பத்திகள் உலகச் சந்தையில் பல அதிர்வுகளை, தொடர்ச்சியாகவே நாள் தோறும் எற்படுத்துகின்றது. எதிர்மறையில் ஏகாதிபத்திய மூலதனங்கள் அதிக லாபவெறி தலைக்கேற, போட்டி போட்டுக் கொண்டு சீனாவில் தனது மூலதனத்தைக் குவித்தது, குவித்து வருகின்றது. இதன் மூலம் மலிந்த கூலியில் அதிக நவீன உற்பத்தி;யும், உற்பத்திகளில் அராஐகத்தையும் உலகெங்கும் உருவாக்கியுள்ளது. இதனால் உலகச் சந்தை கடுமையான தொடர் நெருக்கடிக்குள்ளாகியுள்ளது. நவீன தொழில்நுட்பமும், நவீன உபகரணங்களும் கூட முழுக்கமுழுக்க சீனா உற்பத்தியாகி வருகின்றது. அதிக லாப வெறிகொண்ட உற்பத்திகள் தவிர்க்க முடியாது, சீனாவில் ஒரு மூலதனத் திரட்சியை உருவாக்கியது, உருவாக்கின்றது. இன்னுமொரு பக்கத்தில் சீனாவின் தேசிய சொத்துகளை விற்பதன் மூலமும் கூட, ஒரு மூலதனத் திரட்சி உருவாகின்றது. மறுபக்கத்தில் சீனா அரசு மக்கள் நலத் திட்டங்களை கைவிட்டுவருவதன் மூலம், ஒரு மூலதனத் திரட்சியை உருவாகின்றது. இவற்றை அடிப்படையாக கொண்டு உருவாகும் மூலதனத்தைக் கொண்டு, சீனா ஒரு போட்டி ஏகாதிபத்தியமாக மாறிவருகின்றது. 2003 இல் உலகளாவில் அன்னிய மூலதனத்தை அதிகம் இட்ட நாடாக சீனா மாறியது. அமெரிக்காவில் பெரும் நிதி மூலதனத்தை சீனா முதலீட்டு உள்ளது. அமெரிக்காவின் கடனில் சீனாவின் நிதி மூலதனம் கணிசமானது. சீனா உற்பத்திகள், அமெரிக்காவின் வர்த்தகத்தில் பற்றக்குறையை உருவாக்கியுள்ளது. ஈராக் எண்ணை வயல் முதல் சூடான் எண்ணை வயல் வரை சீனா மூலதனத்தின் ஊடுருவல் அதிகரித்துள்ளது. இன்று அனைத்து துறையிலும் சீனா மூலதனம் ஊடுருவுகின்றது. இவைகளுக்கு எதிராகவே அமெரிக்காவின் இராணுவ ஆக்கிரமிப்புகள் அரங்கேறும் நிலைக்கு, உலகம் சென்றுவிடுகின்றது. சீனா உலகில் பல துறைகளில், விரிவாக தலையிடத் தொடங்கியுள்ளது. மிகப் பெரிய பொருளாதார நாடாக மாறும் நிலையை எதிர்வுகூறும் அளவுக்கு, முதலாளித்துவ பொருளாதார வல்லுனர்கள் அங்கலாய்க்கின்றனர். சீனா உலகின் முதன்மையான தேசிய வருவாயைப் பெற்று பலம் பொருந்திய ஒரு நாடாக மாறும் என்ற எச்சரிககையை, முதலாளித்துவ அறிக்கைகள் வெளியிட்டுள்ளது. ஏகாதிபத்தியத்தின் அதிக லாபவெறி, கணிசமாக மூலதனத்தின் இருப்பிடத்தையே இடமாற்றுகின்றது. மேற்கில் சீனப் பொருட்கள் சந்தையை ஆக்கிரமிக்கும் போது, மேற்கின் பணம் கணிசமாக சீனாவுக்குள் சென்றுவிடுகின்றது. இது மலிவான கூலியை உடைய சீனாவில், பெரும் மூலதனமாகி உலங்கெங்கும் தனது காலை அகலவைத்து உலக மூலதனத்தையே தன்னை நோக்கி கவர்ந்திழுகின்றது.

1973 உலக ஏற்றுமதி அளவில் ஒரு சதவீகிதத்தையே சீனா கொண்டு இருந்தது. இது 1987 இல் 1.6 சதவீகிதமாகியது. 2000 இல் கொங்கொங் உள்ளடங்க 2.9 சதவீகிதமாகியது. இது 2002 இல் 4.5 சதவீகிதமாக அதிகரித்தது. இது என்றுமில்லாத வேகத்தில் அதிகரிக்கத் தொடங்கியது. இந்த அளவீடு டொலரின் பெறுமதியின் அடிப்படையிலானது. உள்நாட்டு பெறுமதியின் அடிப்படையில் இது பிரமாண்டமான ஒன்றாகியது. உண்மையில் இதன் விளைவாக உலகில் கடல் மூலமான எற்றுமதி வர்த்தகத்தையே சீனா கைப்பற்றி முதலீடத்தை வகிக்கின்றது. 2004 இல் 245 கோடி தொன் பொருட்களை சீனா துறைமுகங்கள் உடாக நடத்தியது. இது 1993யை விட 25 சதவீகிதம் அதிகமாகும்;. சீனாவின் 8 துறைமுகங்கள் குறைந்தபட்சம் 10 கோடி தொன்னுக்கு மேலாக பொருட்களை நகர்த்தியுள்ளது. 1999 இல் இப்படி இரண்டு துறைமுகங்களே சீனாவில் இருந்தன. நிலைமை எப்படி அதிரடியாகவே மாறியது என்பதை இது எடுத்துக் காட்டுகின்றது.

சீனாவின் உலக வர்த்தகம் 2003 இல் 7.5 சதவீகிதத்தால் அதிகரித்த போது, உலகளவிய ஏற்றுமதியில் சீனாவின் பங்கு 5.85 சதவீகிதமாகியது. 2000 ஆண்டில் சீனா ஏற்றுமதி 4200 கோடி டொலர் மட்டுமே. இது உலகில் 9வது இடத்தில் காணப்பட்டது. 2002 இல் சீனா ஏற்றுமதி 32350 (கொங்கொங் உள்ளடக்கப்படவில்லை) கோடி டொலராக இருந்த அதேநேரம், உலகின் ஐந்தாவது ஏற்றுமதியாளனாக மாறியது. 2003 இல் ஏற்றுமதி 43840 கோடி டொலராக மாறியதுடன், உலகில் நன்காவது மிகப் பெரிய ஏற்றுமதியாளனாகவே சீனா மாறியது. அதாவது சீனா ஏற்றுமதிகள், 2000 ம் ஆண்டுக்கு பிந்திய நான்கு வருடத்தில் பத்து மடங்கு மேலாக அதிகரித்துள்ளது. அத்துடன் உலக ஏற்றுமதி வரிசையில் 9 வது இடத்தில் இருந்து 4 இடத்துக்கு வந்துள்ளது. மறுபக்கம் சீனாவில் அதிக லாபத்தை பெற்றுத்தரும் ஏகாதிபத்திய உற்பத்திகள், அவர்களுக்கு எதிரான வகையில் எதிர்மறையில் வளர்ச்சியுறுகின்றது. மூலதன முரண்பாடுகளின் ஒரு சிறப்பான எடுப்பான வடிவமே இது. உண்மையில் மிகப் பெரிய நாடுகளுக்குள், விதிவிலக்கான ஒன்றாகவே சீனா உள்ளது.

சீனாவில் உற்பத்திக்கான மனிதக் கூலி உலகளவில் மிகக் குறைவானது. இதனால் மலிவு உற்பத்திகள் மூலதனத் திரட்சிக்கான ஒரு சூழலை உருவாக்கிவிடுகின்றது. சீனாவின் கம்யூனிசத்தை அடிப்படையாக கொண்ட பொருளாதார கட்டமைப்பை முதலாளித்துவமாக மாற்றிய போது, மிகப் பெரிய தேசிய சொத்துகள் அரசின் கையில் குவிந்து கிடந்தது. இந்த நிலையை, உலகில் வேறு எந்த நாடும் கொண்டிருக்கவில்லை. இதை தனியார் மயமாக்கத் தொடங்கிய போது, பெரும் மூலதனங்கள் குவிவது தவிர்க்க முடியாதாகியது. மறுபக்கத்தில் தேசிய வருமானத்தை மக்களின் வாழ்வாதாரங்களுக்கு பயன்படுத்திய முந்திய நிலையை சீன அரசு கைவிட்டத்தன் மூலமும், முந்திய சமூக நலத் திட்டங்களையும் முழுமையாக வெட்டியது. இதன் மூலம் பெரும் மூலதனங்கள் தீடிரென திரளத் தொடங்கியது. இந்த பெரும் மூலதனத்தைக் கொண்ட ஒரு மக்கள் விரோத கும்பல் உதித்தெழுவதை துரிதமாக்கியது. இதைவிட மிக குறைவான கூலியைக் கொண்ட, பெரும் நவீன தொழில் நுட்பத்தைக் கையாளும் திறனைக் கொண்ட அடிப்படை கல்வி தகுதியுள்ள தொழிலாளி வர்க்கம், அன்னிய மூலதனத்தை உள்ளித்தது இதன் மூலம் ஒரு பகுதியை அரசுக்கு பெற்றுக் கொடுத்தது. உதாரணமாக சீனாவில் முதலீடு செய்யும் ஒவ்வொரு அமெரிக்க கம்பெனியும் 42 சதவீகித இலாபத்தை பெறகின்றது. இந்த லாபவெறியே சீனாவில் மூலதனத்தின் நகர்வை வேகப்படுத்தியது. சீனாவினுள் அன்னிய மூலதனத்தின் பெரும் படையெடுப்பு, சர்வதேச ஏற்றுமதிச் சந்தையில் பெரும் வீச்சில் புகுந்து கொள்வதை துரிதமாக்கியது. இதை ஏகாதிபத்திய மூலதனமே தனது சந்தைக் கட்டமைபில் நின்று ஊக்குவித்தது. சீனப் பொருளதாரம் அன்னிய மூலதனக் கட்டமைப்புக்குள் பெரு வீக்கத்தைக் கண்டது. சீனாவின் மூலதனத்தின் திரட்சி, ஏகாதிபத்திய கனவுகளுடன் எல்லை கடந்து மற்றைய நாடுகளை ஊடுருவிச் செல்லத் தொடங்கியுள்ளது.

சீனா மற்றும் கொங்கொங்கின் மொத்த அன்னிய மூதலீடுகள்

ஆண்டு சீனா கொங்கொங்
1989 300 கோடி டொலர் தெரியாது
1996 4018 கோடி டொலர் தெரியாது
1997 4423 கோடி டொலர் 1 899 கோடி டொலர்
1998 4 375 கோடி டொலர் 2 885 கோடி டொலர்
1999 3 875 கோடி டொலர் 2 459 கோடி டொலர்
2000 4 077 கோடி டொலர் 6 193 கோடி டொலர்
2001 4 800 கோடி டொலர் 2 284 கோடி டொலர்
2002 5 270 கோடி டொலர் தெரியாது
2003 5 350 கோடி டொலர் தெரியாது

சீனாவின் அன்னிய மொத்த முதலீடு 2004 முடிய 55900 கோடி டொராகியுள்ளது. சீனா அரசு அனுமதித்த மொத்த அன்னிய மூதலீடுகள் மூலம் உலகளவில் 512504 உற்பத்தி துறைகளை உருவாக்கியுள்ளது. 2004 இல் 43664 அன்னிய மூதலீட்டுக்கு சீனா அரசு அனுமதி வழங்கியது. இது 2003 இல் 41081 டாக இருந்தது. உண்மையில் சீனாவின் அன்னிய மூதலீடுகள் உலகெங்கும் ஏகாதிபத்தியத்துக்கு நிகராகவே நகரத் தொடங்கியுள்ளது. அன்னிய மூதலீட்டை அதிகம் வெளியில் நகர்த்தும் நாடாக சீனா இருக்கும் அதே நேரம், அன்னிய மூலதனத்தை உள்ளிக்கும் நாடகவும் சீனா உள்ளது. இது உலகின் பல அதிர்வுகள் எற்படுத்துகின்றது. இவற்றை விரிவாக நாம் ஆராய்வோம்.

2002 இல் அன்னிய முதலீட்டை அதிகமிட்ட நாடுகளை எடுத்தால்,
சீனா 5 270 கோடி டொலர்
பிரான்ஸ் 4 820 கோடி டொலர்
ஜெர்மனி 3 810 கோடி டொலர்
அமெரிக்கா 3 010 கோடி டொலர்
நெதர்லாந்து 2 920 கோடி டொலர்
பிரித்தானியா 2 500 கோடி டொலர்

2002 உலகளாவிய அன்னிய மூதலீட்டை அதிகமிட்ட நாடாக சீனா மாறியது. சீனா கம்யூனிசத்தை கைவிட்ட பின்பாக, 2004 நடுப்பகுதியில் அன்னிய நாடுகளில் சீனா இட்டுள்ள மூதலீடு 50000 கோடி டொலரைத் தண்டியுள்ளது. இதைவிட கொங்கொங் மூலதனம் தனியாக உள்ளது. 2004 தை முதல் ஐப்பசி வரையிலான காலத்தில் சீனா அன்னிய மூதலீடு 23.5 சதவீகிதத்தால் அதிகரித்து. இந்த அதிகரிப்பு 5378 கோடி டொராக இருந்தது. 2004 ஐப்பசி முதல் 2005 தை வரையிலான காலத்தில் 35202 கோடி டொலரை அன்னிய மூதலீடாக நடத்தியது. இது சென்ற வருடத்தை விடவும் 7.66 சதவீகிதம் அதிகமாகும்;. வரலாற்று ரீதியாக காலகாலமாக உலக ஆதிக்கத்தை தக்கவைத்து இருந்த ஏகாதிபத்திய உலக ஒழுங்கு மாறாக, சீனா புதிய ஏகாதிபத்திய போட்டியாளனாக வளர்ச்சியுற்று வருவதை இது தெளிவாக எடுத்துக் காட்டுகின்றது. முதலில் சீனாவினுள் அன்னிய மூலதனம் பெருமெடுப்பில் பாய்ந்தது. பின்னால் சீனா மூலதனம் வெளிச் செல்லத் தொடங்கியது.

உண்மையில் அன்னிய மூலதனம் சீனாவினுள் ஊடுருவிப் பாய்ந்த வேகம் மலைக்க வைக்க கூடியவை. 1999-2002 கும் இடையில் மொத்தமாக உலகளாவிய அதிக அன்னீய முதலீடுகள் இடப்பட்ட நாடுகளை எடுத்தால், சீனாவுக்குள் தான் அதிகம் உடுருவிப் பாய்ந்தது.

சீனா 38 400 கோடி டொலர் (1982-2002க்கு இடையில் 44 800 கோடி டொலர்)
பிரேசில் 15 800 கோடி டொலர்
ஆர்ஜெந்தீனா 6 500 கோடி டொலர்
போலந்து 5 100 கோடி டொலர்
ரூசியா 2 600 கோடி டொலர்

ஒப்பிட்டளவில் சீனாவில் குவிந்த அன்னிய மூலதனம் மிகப் பிரமாண்டமானது. 1982-1998 க்கும் இடையில், அதாவது சீனா முதலாளித்துவ மீட்சிக்கு பிந்திய 17 வருடத்தில், அதாவது 1998 வரை சீனாவில் ஊடுருவிய அன்னிய முலதனம் 6400 கோடி டொலர் மட்டும் தான். அதற்கு பிந்திய காலத்தில் அதாவது உலகமயமாதலின் வேகநடை போடத் தொடங்கியதன் பின்பாக 1999 க்கும் 2002 க்கும் இடைப்பட்ட நான்கு வருடத்தில் 38400 கோடி டொலர் அன்னிய மூலதனம் சீனாவில் வெள்ளமாக புகுந்தது. 2003 இல் சீனாவில் வெளிநாட்டு முதலீடு 50000 கோடி டொலரையும் தாண்டியுள்ளது.

அதிக லாபம் பெறும் நனவுடன் சீனாவை விட்டோடிய முன்னைய கம்யூனிச விரோதிகளே முதலில் சீனாவில் மூதலீடத் தொடங்கினர். அவர்கள் இந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் பெரும் மூலதனங்களை நகர்த்தினர். ஆரம்பத்தில் இது 4500 கோடி டொலரை சீனாவில் முதலீட்டும் அளவுக்குச் சென்றது. இது சீனாவின் ஏகாதிபத்திய நலன்களுக்கு இசைவானதாக மாறியது. இது சீனா மூலதனத்தின் சுயேட்சைத் தன்மையை, மற்றைய ஏகாதிபத்தியத்தக்கு எதிராக பறைசாற்றியது. கொங்கொங் சீனாவுடன் இணைந்த போது, அது சீனாவின் பலத்தையே அதிகரிக்க வைத்தது. கொங்கொங் பொருளாதாரம் பலம்பொருந்திய சீனா பொருளாதாரத்துடன் கூடிய நிலையில், மூலதனம் சதிராட்டம் போடத் தொடங்கியது.

இப்படி சீனாவை நோக்கி ஒடிவந்த, ஒடிவரும் அன்னிய மூலதனங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவை எனப் பார்ப்போம். சீனாவில் உள்ள அன்னிய முதலீட்டுகள் 2002 செப்டம்பரில்

கொங்கொங் 19 984 கோடி டொலர் 45.96 சதவீகிதம்
அமெரிக்கா 3 842 கோடி டொலர் 8.84 சதவீகிதம்
யப்பான் 3 535 கோடி டொலர் 8.13 சதவீகிதம்
தாய்வான் 3 197 கோடி டொலர் 7.35 சதவீகிதம்
வேர்ஜிதீவுகள் 2 276 கோடி டொலர் 5.23 சதவீகிதம்
சிங்கப்பூர் 2 097 கோடி டொலர் 4.82 சதவீகிதம்
பிரான்ஸ் 545 கோடி டொலர் 1.25 சதவீகிதம்
மற்றவை 8 009 கோடி டொலர் 18.42 சதவீகிதம்
மொத்தம் 43 478 கோடி டொலர் 100 சதவீகிதம்

சீனாவில் முதலில் அதிக ஊடுருவியது கொங்கொங் மூலதனமே. கொங்கொங் உள்ளே உள்ள பெருமளவிலான மூலதனங்;கள் அன்னிய மூலதனம் தான். அன்னிய மூலதனம் கொங்கொங் வழியாகவே அதிகளவில் சீனாவில் ஊடுருவியுள்ளது. இன்று கொங்கொங் சீனாவுடன் இணைந்த ஒரே நாடாகவும் உள்ளது. (ஒருநாடு இரண்டு அமைப்பு முறை எனக் கூறிக் கொள்கின்றது) இதற்கு வெளியில் நேரடியாக ஏகாதிபத்தியம் முதல் அயல்நாடுகளும் அதிக அன்னிய மூதலீட்டை நடத்தியுள்ளனர். தாய்வானின் 80 சதவீகிதமான உற்பத்தி வெளிநாட்டில் செய்யப்படுகின்றது. உதாரணமாக சீனாவுடான இணைவு சம்பந்தமாக மக்களை ஏமாற்றி பிழைக்கும் தாய்வான் அரசியல் விளையாட்டைத் தாண்டி, சீனாவில் 30000 தாய்வான் நிறுவனங்கள் மூதலீட்டுள்ளன. 5 முதல் 10 லட்சம் தாய்வான் மக்கள் சீனாவில் வேலை செய்கின்றனர். தாய்வான் உள்ளடக்க ரீதியாக சீனாப் பொருளாதாரக் கூறில் இணைக்கப்பட்டுவிட்டது. அரசியல் ரீதியாக முரண்பட்ட கட்சிகள், குறுகிய நலனுக்காக மட்டும் தான் சீனாவுக்கு எதிராக பூச்சாண்டி காட்டுகின்றனர். இங்கு தாய்வான் வழியாகவும் கூட ஏகாதிபத்தியம் கணிசமாக புகுந்துள்ளது.

உண்மையில் இந்த மூதலீடுகள் சீனாவுக்குள் ஒடிவரும் காரணங்கள் பற்பலவாக இருந்தாலும், உற்பத்திக்கான குறைந்த கூலி விகிதம் ஒரு முக்கியமான அம்சமாகும். 1995 இல் ஒரு தொழிலாளியின் ஒரு மணி நேரக்கூலி nஐர்மனியில் 32 டொலராகவும், ஐப்பானில் 24 டொலராகவும், அமெரிக்காவில் 17 டொலராகவும்; இருந்தது. இதற்கு மாறாக இந்தியாவிலும் சீனாவிலும் ஒரு மணி நேரக் கூலி 0.25 டொலராகும். nஐர்மனியில் ஒரு தொழிலாளிக்கு கொடுக்கும் கூலியைக் கொண்டு 128 இந்தியரையோ, சீனரையோ கூலிக்கு அமர்த்தமுடியும். இது லாப வீகிதத்தின் உயர்ந்தபட்ச எல்லையை பெற்றுத் தருவனவாக உள்ளது. ஒரு இந்தியரை விட சீனரை ஏகாதிபத்திய மூலதனம் காதலிப்பதற்கு பற்பல காரணங்கள் உண்டு. அதில் முக்கியமானதும் அடிப்படையானதும் பரந்த கல்வியின் உயர்ந்த தரமாகும்.
நவீனத் தொழில் நுட்பத்தை இயக்கவல்ல, மிக மலிவான கூலிகளை பெற முடியும் என்பது மிக முக்கியமான காரணங்களில் ஒன்று. அத்துடன் மூலதனத்தை எதிர்த்த உழைக்கும் மக்களின் போராட்ட பலத்தை போலி கம்யூனிஸ்ட் கட்சியின் துரோகத்தால் நலமடித்த நிலையில், மூலதனம் சுயாதீனமாக உயாந்தபட்ச சூறையாடலுக்குள் இயங்க முடிகின்றது. இதைவிட மேற்கில் சுற்றுச்சூழல் போன்ற பல தடைகள், சீனாவில் உள்ள முதலீட்டுக்கு எதுவும் கிடையாது. அத்துடன் எல்லாவற்றையும் கையாளக் கூடிய மாபிய அமைப்பு முறை, அரசின் ஆதாரவுடன் கொடிகட்டிப் பறக்கின்றது.

மலிந்த கூலியில் பெறப்படும் உயர்ந்த லாப வீதங்கள்

எதிர்மறையில் சீனாச் சந்தை ஒரு மணி கூலி அடிப்படையில், ஜெர்மனியில் 128 பேரின் வேலையின்மையை உருவாக்கின்றது. சம்பள விகிதங்களின் அடிப்படையில் வேலை இன்மை உற்பத்தி செய்கின்றது. 128 பேரின் வேலைக்குரிய ஒரு ஜெர்மனிய தொழில்துறை தனது வேலை ஆட்களை நீக்கிவிட்டு சீனாவுக்குள் ஒடிவிடுவதையே விரும்பும். ஒரு ஜெர்மனியரின் கூலியைக் கொண்டு, சீனாவில் 128 பேரை வேலைக்கு அமர்த்த முடியும். அதாவது ஜெர்மனியில் 128 தொழிலாளிக்கு கொடுத்த கூலி மூலம் 16384 சீனத் தொழிலாளியை கூலிக்கு அமர்த்த முடியும். இங்கு உற்பதியாகும் பொருட்கள் மேற்கில் அதியுயர் லாபவீகிதத்தில் சந்தைப்படுத்தப்படுகின்றது. இதன் மூலம் ஒரு கூலியினால் கிடைக்கும் மேலதிக லாபம் 128 மடங்காக இருக்கும். அதாவது 128 பேரில் கூலி ஒரு மணித்தியாலத்துக்கு ஒப்பிட்டளவில் 4070 டொலருக்கு மேலதிகமாக லாபத்தை ஜெர்மனியில் செய்வதைவிட பெற்றுத் தருகின்றது. இது மாதம் 7.8 லட்சம் டொலரையும், வருடம் 94 லட்சம் டொலரையும் மீதமாக பெற்றுத் தருகின்றது. இது ஒரு ஜெர்மனிய தொழிலாளிக்கு பதிலாக அமர்த்தும் 128 சீனாத் தொழிலாளியால் கிடைக்கின்றது. 128 ஜெர்மனிய தொழிலாளியின் கூலியைக் கொண்ட கூலிக்கு அமர்த்தக் கூடிய 16384 சீனாத் தொழிலாளியின் உற்பத்திக்கு வித்திடப்படின் லாப விகிதம் ஜெர்மனிய உற்பத்தியை விட மணிக்கு 5.24 லட்சம் டொலர் அதிகமாக கிடைக்கும். இது மாதத்துக்கு 10 கோடி டொலராக இருக்கும். இது வருடம் 120 கோடி டொலர்ராகும். (இவை 8 மணிநேரம் வேலையை அடிப்படையாக கொண்டு கணிக்கப்பட்டது) இதைவிட இதே போல் மலிவான மூலப் பொருட்கள், வரிச் சலுகைகள் என்று மூலதனம் குதுகலிக்கும் வகையில், உலகமயமாதல் நவீன அற்புதமான கொடையாக உள்ளது.

சீனா உற்பத்திகள் சீனாவில் பெருமளவில் சந்தைப்படுத்தப்படுவதில்லை. மாறாக அவை பெருமளவில் ஏகாதிபத்தியத்திலும், பிரதானமாக மூன்றாம் உலக நகரம் சார்ந்த சந்தைகளில் குவிகின்றது. 2003 இல் சீனாவின் சர்வதேச வர்த்தகம் 37 சதவீகித்தால் அதிகரித்தது. சீனாவில் உள்ள அன்னிய நாட்டுக் கம்பனிகளின் உற்பத்தியில் 56 சதவீகிதத்தை ஏற்றுமதியாகியது. சீனாவில் அன்னிய நாடுகளின் உற்பத்திகள் அதிகரிக்கும் அதேநேரம், அவை பெருமளவில் ஏற்றுமதியாகிச் செல்லுகின்றது. இதில் முக்கியமானதாக இருப்பது நவீன தொழில் நுட்ப உற்பத்திகளே. நவீன தொழில் நுட்பம் சார்ந்த உற்பத்திகள், பெருமளவில் சீனா உற்பத்தியாகியுள்ளது. உதாரணமாக உலகளவிய நவீன உற்பத்தியில் சிலவற்றில் சீனாவின் பங்கைப்பார்ப்போம்.

உழவுயந்திரம் 83 சதவிகிதம்
மணிக்கூடு, மோட்டர் 75 சதவிகிதம்
விளையாட்டுச் சமான்கள் 70 சதவிகிதம்
புகைப்படக்கருவி 55 சதவிகிதம்
தொலைபேசி 50 சதவிகிதம்
தொலைக்காட்சி பெட்டி 40 சதவிகிதம்
உடுப்பு தோய்கும் மெசின் 25 சதவிகிதம்
வீட்டு தளபாடங்கள் 16 சதவிகிதம்
உருக்கு 15 சதவிகிதம்

உலக உற்பத்தில் சீனா உற்பத்திகளே பெருமளவில் சில பெரும் வர்த்தக துறைகளை ஆக்கிரமித்துள்ளது. 2002 இல் சீனா ஒரே வருடத்தில் இலத்திரனியல்; (எலற்றோனிக்) உற்பத்தியை 30000 கோடி டொலரால் அதிகரித்தது. நவீன இலத்திரனியல் மேலான மூதலீடும், உற்பத்தியும் மிகப் பிரமாண்டமானது. நவீன தொழில்துறை சார்ந்து 2002 இல் யப்பான் மற்றும் தாய்வான் சீனாவிலீட்ட முதலீடு 5200 கோடி டொராகும். 1980க்கு பிந்திய 20 வருடத்தில் தொழில்துறையை நவீனப்படுத்த இட்ட முதலீடு 60000 கோடி டொலராகும். மிக வேடிக்கை என்னவென்றால், 1985 இல் சீனாவில் இருந்த அன்னியநாட்டுக் கம்பனிகளின் ஏற்றுமதி 30 கோடி டொலராக மட்டுமே இருந்தது. இது 2001 இல் 13300 கோடி டொராகியது. அதாவது 16 வருடத்தில் 443 மடங்கு மேலானதாக அதிகரித்தது. அமெரிக்காவுக்கான தொலைகாட்சி பெட்டி மற்றும் ரேடியோ ஏற்றுமதியை, 1998க்கும் 2001க்கும் இடையில் சீனா இரட்டிப்பாக்கியது. இதன் மொத்த பெறுமானம் 600 கோடி டொலராகியது. உலகமயமாதல் உருவாக்கிய நவீன உற்பத்திகளின் உற்பத்தி மையமாக, சீனா மாறிக் கொண்டிருக்கின்றது.

சீனாவின் துணி உற்பத்தியை எடுத்தால் மிகப் பிரமாண்டமானதாக மாறிவருகின்றது. பல எழை நாடுகளின் திவாலை மட்டுமல்ல, ஏகாதிபத்திய துணி உற்பதியின் திவாலையும் கூட இது எற்படுத்துகின்றது.

எற்றுமதி இறக்குமதி
1999 4127 கோடி டொலர் 1392 கோடி டொலர்
2000 4938 கோடி டொலர் 1656 கோடி டொலர்
2001 4983 கோடி டொலர் 1626 கோடி டொலர்
2002 5785 கோடி டொலர் 1699 கோடி டொலர்
2003 7335 கோடி டொலர் 1929 கோடி டொலர்

உலகளவில் ஐந்து வருடங்களில் சீனாவின் துணி எற்றுமதி அண்ணளவாக இரண்டு மடங்காகியுள்ளது. இதேநேரம் இந்தியா துணி எற்றுமதி 1086 கோடி டொலர் மட்டுமே. துணி எற்றுமதி செய்த பல நாடுகள், தமது சொந்த எற்றுமதியை சீனாவினால் இழந்து வருகின்றன. இது எப்படி எற்படுகின்றது எனப் பார்ப்போம்.

மேற்கு நோக்கிய உலகளவிய துணி வர்த்தகம்

ஐரோப்பா 2002 ஐரோப்பா 2004 அமெரிக்கா 2002 அமெரிக்கா 2004
சீனா 18 சதவீகிதம் 26 சதவீகிதம் 16 சதவீகிதம் 50 சதவீகிதம்
இந்தியா 6 சதவீகிதம் 9 சதவீகிதம் 4 சதவீகிதம் 15 சதவீகிதம்
கொங்கொங் 6 சதவீகிதம் 6 சதவீகிதம் 9 சதவீகிதம் 6 சதவீகிதம்
அமெரிக்க நாடுகள் - - 16 சதவீகிதம் 5 சதவீகிதம்
மெக்சிக்கோ - - 10 சதவீகிதம் 3 சதவீகிதம்
தாய்லாந்து - - - 3 சதவீகிதம்
பிலிப்பைன்ஸ் - - 4 சதவீகிதம் 2 சதவீகிதம்
இந்தோனேசிய 3 சதவீகிதம் 3 சதவீகிதம் 4 சதவீகிதம் 2 சதவீகிதம்
பங்களதேசம் 3 சதவீகிதம் 4 சதவீகிதம் 4 சதவீகிதம் 2 சதவீகிதம்
இலங்கை - - - 2 சதவீகிதம்
ஐரோப்பா 9 சதவீகிதம் 6 சதவீகிதம் 5 சதவீகிதம் 0 சதவீகிதம்
தாய்வான் - - 4 சதவீகிதம் -

துணி வர்த்தகத்தில் சீனாவும், இந்தியாவும் மற்றயை நாடுகளையே திவாலாக்கி வருகின்றது. இதில் சீனா மிகப் மிரமாண்டமான வகையில் காணப்படுகின்றது. இது இந்தியாவைக் கூட சந்தையில் இருந்து அகற்றினாலும் கூட ஆச்சரியப்படுவதற்கில்லை. ஆடத் தயாரிப்பில் ஈடுபட்டிருக்கும் ஒரு அமெரிக்கத் தொழிலாளிக்கு கூலியாக 9.56 டொலரே ஒரு மணிநேரத்துக்கு வழங்கப்படுகின்றது. தென் அமெரிக்க எல்-சால்வடோரில் அதே தொழிலாளி பெறும் கூலி 1.65 டொலர். சீனத் தொழிலாளி பெறுவதோ 0.68 டொலர் மட்டுமே. மூலதனம் சீனாவை நோக்கி ஒடுவதும், சீனா உற்பத்திகள் உலகச் சந்தையை ஆக்கிரமிக்கும் உலக எதார்த்தம், சீனாவின் மிகக் குறைந்த கூலி வீகிதம் மிக முக்கிய காரணங்களில் ஒன்று.
இதனால் உலகச் சந்தை தீடிர் அதிர்வுகளைச் சந்திக்கின்றது.

உலகமயமாதலில் வளர்ந்துவரும் சீனாவின் ஆதிக்கம், மேற்கின் சந்தைகளையே திடிர் தீடிரென திவாக்கின்றது. உதாரணமாக 2005 தை முதல் சித்திரை வரையான காலத்தில் சீனக் காலனி (சாப்பத்து) எற்றுமதி ஐரோபாவுக்கு 681 சதவீகிதத்தால் அதிகரித்துள்ளது. முதல் 4 மாதத்தில் 16.1 கோடி காலனிகளை ஐரோப்பாவுக்கு சீனா ஏற்றுமதி செய்தது. இது 2004 இல் 2.37 கோடியாக மட்டுமே இருந்தது. இதனால் காலனிகளின் விலை 28 சதவீகிதத்தால் தீடிர் வீழ்ச்சி கண்டது. இதனால் ஐரோப்பிய காலனி உற்பத்தியாளர்கள் நெருக்கடியை சந்தித்ததுடன், தமது உற்பதிகளை நிறுத்தி, தமது தொழில்சாலைகளையே சீனா போன்ற நாடுகளை நோக்கி நகர்த்துகின்றனர். இது பொதுவாகவே அனைத்து துறையிலும் நடக்கின்றது.
பெருமளவில் தேசங்கடந்த பன்னாட்டு நிறுவனங்கள் சீனாவில் மூலதனத்தை ஈடுவதுடன் உற்பத்தியை குவிக்கின்றது. இது பல்துறை சார்ந்தது. அமெரிக்காவில் மட்டும் இன்று ஏறக்குறய 40,000 சீன உணவகங்கள் உள்ளன. இது மெக்டொனால்ட், பர்கர் கிங், கே.எஃப்.சி போன்ற பிரபல அமெரிக்க பன்னாட்டு உணவங்களின் மொத்த எண்ணிக்கையை விடவும் அதிகமானதாக உள்ளது.

பன்னாட்டு நிறுவனங்கள் உலகச் சந்தையைக் கைப்பற்ற நடத்தும் போட்டி, சீனா உற்பத்தியால் உலகளவில் நெருக்கடிக்குள்ளாக்கின்றது. பொருட்களின் தேக்கம் மட்டுமின்றி, உற்பத்தியாகும் பொருளின் உள்ளடகத்தை மாற்றிய புதியதொழில் நுட்பத்தைப் புகுத்துவதால் முன்னைய உற்பத்திகள் தீடிரென தனது பயன்பாட்டுத் தன்மையை இழக்கின்றது. மிககுறுகிய காலத்தில், உற்பத்திகள் உற்பத்தி மையங்களை வீட்டு சந்தைக்கு செல்ல முன்பே, அதற்கு எதிராக மற்றயை புதிய உற்பத்திகள் போட்டியாக வருகின்றது. இதனால் உற்பத்தி தனது பயன்பாட்டுத் தன்மை இழந்து கழிவாவது உலகமயமாதலி;ல் அன்றாட நிகழ்வாகிவிட்டது. உலகம் கழிவுகளின் கூடாராமாகும் அதேநேரம், இயற்கை நாசமாக்கப்படுகின்றது. பொருட்களின் தேக்கம், பொருட்களின் உயர் தொழில்நுட்ப அன்றாடம் புகுத்தல், உற்பத்திகான மிகக் குறைந்த கூலி, பொருட்களின் விலைகளில் கடுமையான சரிவை ஏற்படுத்துகின்றது. சீனா உற்பத்திகளால் உலக பொருட்களின் விலை 1998க்கும் 2001க்கும் இடையில் வருடத்துக்கு 15 சதவீகிதத்தால் வீழ்ச்சி கண்டுள்ளது. மிகவும் ஆடம்பரமானதும், அடிப்படை தேவைக்குள் உள்ளடங்காத பொருட்களில் சந்தை கவர்ச்சி காட்டுவதால், மக்களின் அடிப்படை தேவைகளுக்காக செலவு செய்வது குறைந்து வருகின்றது. கவர்ச்சியான ஆடம்பரமான வக்கிரம் மூலம், மக்களின் ஆரோக்கியமான வாழ்வு பந்தப்படுகின்றது. நுகர்வுவெறி பொதுவான சமூகப் பண்பாடாக கட்டமைக்கப்படுகின்றது. இது ஏகாதிபத்திய நாடுகளின் திவாலையே பறைசாற்றிவிடுகின்றது. உதாரணமாக உலகின் மிகப் பெரிய பொருளாதார பலம் கொண்ட அமெரிக்காவின் குரல்வளைவிலேயே இது கையை வைக்கின்றது.

2004 இல் அமெரிக்காவின் இறக்குமதி 18 சதவீகித்தால் அதிகரித்து இது 176400 கோடி டொராக இருந்தது. எற்றுமதி 13 சதவீத்தால் அதிகரிதது 114600 கோடி டொராக மாறியது. அமெரிக்காவின் வர்த்தகப் பற்றக்குறை 2004 இல் 61770 கோடி டொராகியது. இதில் யாப்பனுக்கு 7520 கோடி டொலரும், ஐரோப்பாவுக்கு 11000 கோடி டொலரும், சீனாவுக்கு 16200 கோடி டொலரும். கனடாவுக்கு 6600 கோடி டொலரும், எண்ணை வள நாடுகளுக்கு 7200 கோடி டொலருமாகும்; 2003 இல் அமெரிக்காவின் பற்றக்குறை 49650 கோடி டொலர் மட்டுமே.
உதாரணமாக அமெரிக்கா சீனா வர்த்தகத்தில், அமெரிக்காவுக்கு எற்படும் பற்றக்குறையால் உருவாகும் நெருக்கடியைப் பார்ப்போம்.

1985 60 கோடி டொலர்
1990 1 043 கோடி டொலர்
1993 2 277 கோடி டொலர்
1995 3 378 கோடி டொலர்
1997 4 968 கோடி டொலர்
1999 6 867 கோடி டொலர்
2000 8 383 கோடி டொலர்
2001 8 309 கோடி டொலர்
2002 10 306 கோடி டொலர்
2003 12 370 கோடி டொலர்
2004 16 200 கோடி டொலர்

வருடாந்தம் இறக்குமதிக்கான சீனா நிலுவைகளை செலுத்தமுடியாது, அமெரிக்கா பொருளாதாரம் ஆட்டம் காண்கின்றது. அமெரிக்கா சீனாவுக்கு செலுத்த வேண்டிய இறக்குமதிக்கான நிலுவை, அமெரிக்காவின் பொருளாதார கட்டமைபுக்குள் உட்புகுந்துவிடுகின்றது. இது அமெரிக்காவின் கடனில் ஒரு பகுதியாகவும், அமெரிக்கப் பங்குச் சந்தையிலும், பங்கு பத்திரத்திலும் உட்புகுந்து நிதி மூலதனமாக மாறிவிடுகின்றது. அமெரிக்க கடனில் சீனாவின் பங்கு கணிசமானதாக மாறிவிட்டது. கடனுக்கான வட்டியை அமெரிக்காவிடம் பெறும் நிலைக்கு, சீனா நிதி மூலதனம் பெருமெடுப்பில் உட்புகுகின்றது. அதேநேரம் தொடர்ந்தும் சீனாவின் ஏற்றுமதியில் பெரும்பகுதி, அமெரிக்காவுக்குள் செல்லுகின்றது.

அமெரிகாவுக்குள் உட்புகும் நிதி மூலதனத்தில் யப்பானுக்கு அடுத்த இடத்தில் சீனா உள்ளது. அதாவது அமெரிக்காவின் நிதி மூலதனத்தில் 8.8 சதவிகிதத்தை சீனா கைப்பற்றியுள்ளது. இதே போல் அமெரிக்காவின் பங்கு பத்திரத்திலும் சீனாவே அதிக நிதி மூலதனத்தை முதலீட்டுள்ளது. இது 2001 இல் 8200 கோடி டொலராக இருந்தது. 2002 இல் 11900 கோடி டொலராக அதிகரித்ததுள்ளது. இதே போன்று அமெரிக்கா முதலீட்டிலும் சீனா புகுந்துள்ளது. சீனாவின் உட்புகுந்த அன்னிய மூலதனத்தின் அளவுக்கு, சீனா அன்னிய நாடுகளில் மூதலீட்டை நடத்தி உள்ளது. இது ஒரு வியக்கத்தக்க மூலதனத்தின் முரண்பண்பையே காட்டுகின்றது. மறுபக்கம் பெரும் திதி பரிமாற்றத்தை சீனாப் பொருளாதார உள்ளிக்கின்றது. 2003 சீனாவின் நிதிப் பரிமாற்றம்

ஐரோப்பா 13430 கோடி டொலர்
அமெரிக்கா 12660 கோடி டொலர்
ரூசியா மற்றும் ஸ்கன்டினேவிய நாடுகள் 3060 கோடி டொலர்
லத்தீன் அமெரிக்கா 2660 கோடி டொலர்
தென்கொரியா 6320 கோடி டொலர்
யப்பான் 13360 கோடி டொலர்
தாய்வான் 5840 கோடி டொலர்
ஆபிரிக்கா 1850 கோடி டொலர்
மத்தியகிழக்கு 2770 கோடி டொலர்
ஆசியா 10920 கோடி டொலர்
மிகுதி 2510 கோடி டொலர்

பல கோடி பெறுமதியான நிதிப்பரிமாற்றம் சீனாப் பொருளாதாரத்தின் ஊடாக நடக்கத் தொடங்கியுள்ளது. இது நிதியின் இருப்பிடத்தை மாற்றியமைக்கின்றது. சீனாவை நோக்கி நிதிகள் கூட நகரவதை துரிதமாக்கின்றது. நிதி மூலதனத்தின் தங்குமிடமாக சீனா மாறத் தொடங்கிவிடுகின்றது. இது வழமையான மேற்கு சார்ந்த வங்கிகள் என்ற உலகளவிய கட்டமைப்பில் ஒரு வெடிப்பாகவே இது மாறுகின்றது.
சில மற்றங்கள் மிகப் பிரமண்டமான அளவில் நடக்கின்றது. 2004 இல் சீனா வர்த்தக உபரி 3200 கோடி டொலராகியது. இது 2003யை விட 25.6 சதவிகிதம் அதிகமாகும். அத்துடன் நிதிப் பணமாற்றம் 30 சதவீகிதத்தால் அதிகரித்துள்ளது. இது மொத்தமாக 100000 கோடி டொலராகியது. இதில் அதிகமானவை வர்த்தக பேரங்களாகவே இருந்தது. 2003 இல் உள்நாட்டு வருமானம் 9.1 சதவீகிததால் அதிகரித்த அதேநேரம், 2004 இல் இது 9 சதவீகிதத்தால் மேலும் அதிகரித்தது. 2004 இல் ஏற்றுமதி 35.4 சதவிகிதத்தால் அதாவது 59340 கோடி டொலராக அதிகரித்து. அதேநேரம் இறக்குமதி 36 சதவீகிதத்தால் அதிகரித்தது. அதாவது 56140 கோடி டொலரால் அதிகரித்தது. இதன் மூலம் மேலதிகமாக 3200 கோடி டொலரை வர்த்தக மீதமாக பெற்றனர். இது 2003 இல் 2092 கோடி டொலராக இருந்தது. சீனாவின் உள்நாட்டு வரி வரத்து 25 சதவீகிதத்தால் அதிகரித்து. இது 31080 கோடி டொலராகியது. உள்நாட்டு மூதலீடு 2003 யை விட 25 சதவீகிதத்தால் அதிகரித்து. உலகில் எந்தப் பகுதியிலும் இப்படி நடக்கவில்லை. உலகமயமாதலின் ஏகாதிபத்திய முரண்பாடு சீனாவுடாகவே அரங்கு வரத் துடிக்கின்றது. இதை நிதி கையிருப்பே தெளிவாக எடுத்துக் காட்டுகின்றது. உலகளவில் 2003 இல் நிதிக் கையிருப்பு

யாப்பான் 65280 கோடி டொலர்
சீனா 40330 கோடி டொலர்
தாய்வான் 20630 கோடி டொலர்
ஈரோ நாடுகள் 18800 கோடி டொலர்
தென்கொரிய 15450 கோடி டொலர்
கொங்கொங் 11860 கோடி டொலர்
இந்தியா 9760 கோடி டொலர்
மெச்சிக் 5770 கோடி டொலர்
பிரேசில் 4910 கோடி டொலர்

நிதிக் கையிருப்பு யாப்பானுக்கு அடுத்து நிலையை சீனா எட்டியுள்ளது. எந்த மேற்கு நாடுகளிமும் கூட இந்தளவு நிதி கையிருப்பு கிடையாது. 2004 இல் சீனாவின் நிதிக் கையிருப்பு 60900 கோடி டொலராகியது. உலகத்தின் ஆதிகத்தை நோக்கி சீனாப் பொருளாதாரம் வெகு வேகமாகவே நகருகின்றது. உலகளவில் இது மிகப் பெரிய அதிர்வுகளை உருவாக்கவுள்ளது. கடந்த 200 வருடா மேற்கத்தைய ஆதிக்கத்தையும், மேற்கின் பொருளாதார வல்லாமைக்கு எதிரான கடும் சவாலை இது எற்படுத்த உள்ளது.

சீனா ஏகாதிபத்தியமயமாதல் என்பது அனைத்து துறைகளிலும் வேகமாக படர்ந்து வருகின்றது. 2007 இல் சீனாவின் ஏற்றுமதி இறக்குமதி 200000 கோடி டொலராக மாறிவிடும்; என்ற எதிர்வு கூறல்களை, முதலாளித்துவ பொருளாதார வல்லுனர்களே அதிர்வுடன் அறிவித்துள்ளனர். இது உலக வர்த்தகத்தில் 13.7 சதவிகிதத்தை பிரதிநிதித்துவப்படுத்தும்; என்றும் அறிவித்துள்ளனர். எங்கும் சீன றகனனின் ஆக்கிரமிப்பு தொடங்கியுள்ளது.
சந்தையும், வர்த்தகமும் மக்களை ஏமாற்றும் விளம்பரத்தில் தான் உயிர் வாழ்கின்றது. மக்களை முட்டாளக்கி அதில் தான் நவீனத்துவம் வக்கரிக்கின்றது. இன்று விளம்பரத்துக்காக உலகில் மூன்றுவதாக அதிகம் செலவளிக்கும் நாடாக சீனா மாறியுள்ளது. இது 2003 இல் 1980 கோடி டொலராகியது. இக்காலத்தில் அமெரிக்கா 14700 கோடி டொலரையும், யப்பான் 3540 கோடி டொலரையும் விளம்பரத்துக்காக செலவு செய்தது. உலகில் மக்களை ஏமாற்ற செய்யும் விளம்பரத்துக்கான மொத்தச் செலவு 33100 கோடி டொலராகும்;. இதில் சீனாவின் பங்கு 5.98 சதவீகிதமாகும். இது 2000 இல் 3.58 சதவீகிதமாக இருந்தது. 2003க்கும் 2004க்கும் இடையில் சீனா விளம்பரத்துக்கான செலவை 11.11 சதவீகிதத்தால் அதிகரித்தது. ஆனால் உலகளவிலான அதிகரிப்பு 4.8 சதவீகிதம் மட்டுமே. சீனாவின் விளம்பரச் செலவு 2000கு பிந்திய மூன்று ஆண்டுகளில் இரட்டிப்பாகியது. உண்மையில் 2000 இல் 1100 கோடி டொலராக மட்டும் இருந்தது. இது 2004 இல் 2200 கோடி டொலராகியது. உண்மையில் சீனாவின் விற்பனை பிரான்ஸ், பிரிட்டன், 5 350 கோடி ஜெர்மனியின் மொத்த வர்த்தகத்தையும் கூட தாண்டியுள்ளது. உலகில் சீனா எற்படுத்தும் தாக்கம் பிரமாண்டமானது. இதனால் உலகில் புதிய பதற்றங்கள் அதிகரிக்கின்றது. இதை ஈடுகட்ட சீனா இராணுவ ரீதியாகவும் தன்னைப் பலப்படுத்துகின்றது. உலகில் மூன்றாவது அதிகம் இராணுவச் செலவு செய்யும் நாடாக 2001 இல் சீனா மாறியது. 2005 இல் தேசிய வருமானத்தில் உலகிலேயே அதிகம் இராணுவத்துக்கு செலவு செய்யும் நாடாக சீனா மாறியுள்ளது. இது 4.3 சதவீகிதமாகியுள்ளது. அதாவது 2004 யை விட 2005 இல் 12.6 சதவீகிதத்தால் இது அதிகரித்துள்ளது. மொத்த இராணுவ செலவு 2950 கோடி டொராகியுள்ளது. இதே நேரம் அமெரிக்கா தனது தேசிய வருமானத்தில் 3.3 சதவீகிதத்தையே இராணுவத்துகு ஒதுக்கியுள்ளது.

2001 இல் உலகில் அதிகூடிய இராணுவச் செலவு

அமெரிக்கா 39 610 கோடி டொலர்
ரூசியா 6 000 கோடி டொலர்
சீனா 4 200 கோடி டொலர்
யப்பான் 4 040 கோடி டொலர்
பிரித்தானியா 3 400 கோடி டொலர்
சவூதியரபியா 2 720 கோடி டொலர்
பிரான்ஸ் 2 530 கோடி டொலர்
ஜெர்மனி 2 100 கோடி டொலர்
பிரேசில் 1 790 கோடி டொலர்
இந்தியா 1 560 கோடி டொலர்

சீனா ஒரு ஏகாதிபத்தியமாக மாறும் போது, உலகை மீளவும் பங்கீடுவதால் ஏகாதிபத்தியத்துக்கு இடையிலான முரண்பாடுகள் கூர்மையடைகின்றது. இந்த வகையில் தான் சூடான், ஈராக் எண்ணை வயல்களை கைப்பற்றும் சீனா மூலதனத்தை தடுக்கவும், அமெரிக்கா நேரடியாகவே இராணுவரீதியாக தலையிட்டது. இவைகளை எதிர்கொள்ள, இராணுவ ரீதியாகவே சீனா தன்னைப் பலப்படுத்தத் தொடங்கியுள்ளது. உலகின் முன்னணி இராணுவமாகவும், பலம் பொருந்திய ஒன்றாகவும், சீனா தனது இராணுவத்தை மாறியமைக்கின்றது. இதன் மூலம் ஏகாதிபத்திய நெருக்கடிகளை எதிர்கொள்ளும் திறனை பெற முயல்கின்றது. இதுபோன்று சீனா பல துறைகளில் தன்னை திட்டமிட்டே பலப்படுத்துகின்றது. நவீன தொழில் நுட்பம் ஆட்சி செய்யும் உலகில், அதுவே மூலதனத்தின் நெம்புகோலாகவும் உள்ளது. இதன் அடிப்படையில் சீனா அறிவியல் கண்டுபிடிப்புகளுக்காக பெரும் தொகை நிதியை ஒதுக்குகின்றது. இது 2001 இல் 3070 கோடி டொலராக மாறியது. இதே காலத்தில் அமெரிக்கா 25290 கோடி டொலரையும், யப்பான் 9650 கோடி டொலரையும் ஒதுக்கியிருந்தது.

இப்படி சீனாவின் ஏகாதிபத்தியமயமாதல் என்பது பல்வேறு துறைகளில் நகர்ச்சியுறுகின்றது. மறுபக்கத்தில் இது சொந்த நாட்டில் ஏற்றத் தாழ்வை வீங்கி வெம்பவைக்கின்றது. கிராமப்புறத்தில் தனிநபர் சராசரி வருமானம் 263 ஈரோவாக இருக்க, நகரங்களில் அது 864 ஈரோவாகியுள்ளது. சீனாவில் ஒரு பணக்காரக் கும்பல் வளர்ச்சியுறுகின்றது. ஏழைகள் பெருக்கெடுப்பது சீனாவின் உள்நாட்டு விதியாகிவிட்டது. பணக்காரக் கும்பலின் நலன்கள் சீனா அரசின் நலன்களாகிவிட்டது. இதை நாம் சீனா வீதிகளில் ஒடும் தனியார் வாகனங்களில் காணமுடியும்.

சீனாவின் போக்குவரத்து

சைக்கிள் அரசுதுறை கார் வடகைக்கார் மற்றவை
1986 58 சதவீகிதம் 32 சதவீகிதம் 5 சதவீகிதம் 1 சதவீகிதம் 4 சதவீகிதம்
2000 38 சதவீகிதம் 27 சதவீகிதம் 23 சதவீகிதம் 9 சதவீகிதம் 3 சதவீகிதம்

சீனாவில் போக்குவரத்து எப்படி தனியார் சொத்துரிமையுடன் மாறிவருகின்றது என்பதைக் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றது. இயற்கை சார்ந்த சுற்றுசூழல் முதல் அனைத்தும் எப்படி சிதைக்கப்படுகின்றது என்பதையே இது அம்லப்படுத்துகின்றது. 2020 இல் 14 கோடி தனியார் கார் சீனாவில் ஒடுமாம். 2025 இல் வகானச் சந்தை அமெரிக்காவை விட சீனாவில் மிகப் பெரிதாக இருக்கும் என்று ஜெனரல் மோட்டார்ஸ் கூறுகின்றது. அதாவது 7.5 கோடி சீனார்கள் கார் வாங்கும் வசதியை பெற்றிருப்பர் என்றகின்றது. இதை நோக்கி எகாதிபத்திய கார் கம்பனிகள் அங்கு அலைபாய்கின்றனர். மக்கள் பலாக்காரமாகவே குடியெழுப்பப்பட்டு வீதிகள் அகன்ற போடப்படுகின்றன. இன்று சீனாவின் 640 வீதிவிபத்தில் நாளொன்றுக்கு கொல்லப்படுகின்றனர். இவையெல்லாம் முதலாளித்துவ மீட்சின் விளைவு. சீனா வீதிகளில் தனியார் வாகனங்களின் அதிகரிப்பு அமெரிக்காவுடன் ஒப்பிடும் போது, சீனாவில் 25 மடங்கு அதிகமாகும். இதனால் சீனா பெற்றோல் இறக்குமதியை ஒரு வருடத்தில் 30 சதவீகிதத்தால் அதிகரிக்க வைத்தது. சீனா பெற்றோல் வாங்கு வீகிதம் 2003-2004 இல் 14.3 சதவீகிதத்தால் அதிகரித்துள்ளது. இந்த அதிகரிப்பு வட அமெரிக்காவில் 2.1 யாக அதிகரித்த போது, ஐரோப்பாவில் 1.5 சதவீகிதமே அதிகரித்தது. ஆனால் ஆசியாவில் 5 சதவீகிதத்தால் அதிகரித்தது. சீனாவில் பணக்காரக் கும்பலின் தனிமனித நலன்கள் அதிகரித்து செல்வதையே, இது தெளிவாக உறுதி செய்கின்றது. இது உலகில் எண்ணை வர்த்தகம் மீதான நெருக்கடியை அதிகரிக்க வைக்கின்றது. என்றமில்லாத எண்ணை தேவையை உலகம் கோருகின்றது. உலகின் எந்த நிலையையும் எதிர்கொள்ள, 2004 இல் சீனா உலகில் அதிகளவில் பெற்றோலை சேகரிக்க தொடங்கியுள்ளது. மொத்தமாக இது 280 கோடி தொன் பெற்றோலை சேகரித்துள்ளது. இவை எல்லாம் சீனா மக்களுக்கு எதிராக, அவர்களின் வாழ்வை அழித்து உருவாக்கும் பணக்காரக் கும்பலின் நலனே சீனா அரசின் நலனாகிவிட்டது.


சீன மக்களின் சொத்தை தனியார் கைப்பற்றல்

சீனாவில் இவை எதிர்மறையில் வறுமையை பன்மடங்காக்கின்றது. இது உள்ளுர் உற்பத்தியில் நடக்கும் மற்றத்தில் இருந்தே பிரதிபலிக்கின்றது. மூலதனத்தின் ஜனநாயகம் மக்களின் வறுமையில் பிறப்பதையே, சீனாவில் நாம் தெளிவாக காணமுடியும.

சீன தனியார் மயமாக்கல்

தனியார் மயமாக்கல் 1994 1998 2001
தனியார்மயமான நிறுவனங்கள் 4 லட்சம் 12 லட்சம் 20 லட்சம்
இதில் தொழில் புரிவோர் 56 லட்சம் 145 லட்சம் 225 லட்சம்
மூதலீடு 1 730 கோடி டொலர் 8 700 கோடி டொலர் 22 000 கோடி டொலர்
தனியார் முதலீட்டாளர் எண்ணிக்கை 9 லட்சம் 26 லட்சம் 46 லடசம்

சீனாவில் என்ன நடக்கின்றது என்பதை இந்த அட்டவணை தெளிவாக எடுத்துக் காட்டுகின்றது. தேசியமயமாக்கப்பட்ட அரசு துறைகளில் இருந்து உழைக்கும் மக்கள் துரத்தப்படுகின்றனர். தேசியமயமான மக்கள் சொத்துகள், தனியார் மயமாதல் என்பது அன்றாட நிகழ்ச்சியாகிவிட்டது. 1990க்கு பின்பாக அரசுதுறையில் நான்கு கோடி உழைப்பாளிகளை, அவர்களின் வேலையை விட்டே சீனா அரசு துரத்தியுள்ளது. தொடர்ந்து அரசு துறைகளில் இருந்து வருடம் 30 லட்சம் பேர் வேலையை இழந்து வருகின்றனர். இந்த வெட்டு முகத்தை நாம் உண்மையில் எதார்த்தத்தில்; காண வேண்டுமாயின், ஒரு புள்ளிவிபர தரவு மட்டும் போதுமானது. சீனாவில் 1997 இல் 262000 அரசு நிறுவனங்கள் இருந்தன. இது 2002 இல் 159000 மாக குறைக்கப்பட்டது. அதாவது ஐந்து வருடங்களில் 103000 நிறுவனங்கள் தனியார்மயப்படுத்தப்பட்டது. இப்படி லட்சக்கான அரசு சொத்துகள் மக்களிடம் இருந்து பறித்து (புடுங்கி) தனியாருக்கு விற்கப்படுகின்றன. அதாவது சுதந்திரம், ஜனநாயகத்தின் பெயரில் அவை தனியார் மயமாக்கப்படுகின்றது. சீனா புரட்சியை அடுத்து நடந்தப்பட்ட வர்க்கப் போராட்டங்களின் போது, தனியார் சொத்துகள் ஒழிக்கப்பட்டு இருந்தன. ஆனால் இவை இன்று தனியார் மயமாதல் என்ற பெயரில் அரசு சொத்துகளை, சிலர் திருடிச் செல்லுகின்றனர்.

மக்களின் உழைப்பு உருவாக்கிய தேசிய சொத்துகள், அன்றாடம் தனிப்பட்ட நபர்களால் சூறையடப்படுகின்றன. மக்கள் வேலையை இழந்து வறுமையில் அங்கு இங்குமாக வீதிகளில் அலைகின்றனர். அரசுதுறையில் வேலை வாய்புகள் இல்லாது ஒழிக்கப்பட்டது. தனியார் துறையில் மட்டுமே வேலை என்ற நிலையில், எந்த சமூக பாதுகாப்பு அற்ற நிலையில் சட்டப் பாதுகாப்பு அற்ற நிலையில் உழைப்பு கசக்கிப்புளியப்படுகின்றது. இப்படி சுதந்திரமாக, ஜனநாயகமாக வரைமுறையின்றி சூறையாடும் சுதந்திரத்தை அனுபவிக்கவே, சீனாவில் மேல் காதல் கொண்ட அன்னிய மூலதனம் குதூகலத்துடன் உட்சென்று புணருகின்றது. இதன் நேரடி வினைவை என்ன எனப் பாhப்போம்;
சீனாவில் தனியார் மயமாதலால் 1990-1999 இடைப்பட்ட காலத்தில் வேலைவாய்ப்பும், வேலை இழப்பும் எப்படி நடக்கின்றது எனப் பார்ப்போம்.

அரசு துறை 2.06 சதவீகிதத்தில் குறைந்துள்ளது
கூட்டுறவுத்துறை 7.78 சதவீகிதத்தில் குறைந்துள்ளது
தனிப்பட்ட உற்பத்தி 12.84 சதவீகிதத்தில் அதிகரித்துள்ளது.
கூட்டுத் தனியார் உற்பத்தி 27.07 சதவீகிதத்தில் அதிகரித்துள்ளது.
தனியார் துறை 31.46 சதவீகிதத்தில் அதிகரித்துள்ளது.

தனியார்துறை முதன்மை பெற்ற ஒரு சமூக அமைப்பாக, சீனா மாறி வருவதைக் காட்டுகின்றது. தனியார் அமைப்பில் கிடைக்கும் உயர்ந்த லாபம், அன்னிய மூலதனத்தின் ஆன்மாவை குளிர்மைப்படுத்தியது. சீனா மக்களின் வாழ்வு சூறையாடப்படும் வீகிதம் எவ்வளவுக்கு உயர்வான நிலையை அடைகின்றதோ, அந்தளவுக்கு எதிர்மறையில் தனியார் மூலதனம் கொழுப்பேற குதூகலத்தில் ஆழ்கின்றது. மக்களின் அடிப்படையான சமூகத் தேவைகளையே அரசு கைவிட்டுவிட்டது. உதாரணமாக பொது சேவையை தனியார் மயமாக்கியதால் 2 கோடி குழந்தைகள் கல்வியை இழந்துள்ளனர். 2004 இல் மட்டும் 12000 சிறுவர் பூங்காக்களை உள்ளடக்கிய வகையில் இயங்கிய பாடசாலைகளை சீனா அரச முடியுள்ளது. எங்கும் சமூக அவலங்கள் விதைக்கப்படுகின்றன. மருந்துகளின் விலை அதிகரிப்பாலும், வைத்தியசாலை கட்டணம் செல்லுத்தும் நிலை மாறியுள்ளதாலும், சீனா மக்களில் பாதிப் பேர் வைத்தியசாலை செல்ல முடியாத நிலைக்கு தரம் தாழ்ந்துள்ளனர். மனித அவலத்தில் தான் சீனாப் பொருளாதாரம் முன்னேறுகின்றது.

சீனாவின் உணவு உற்பத்தி அந்த மக்களுக்கானதாக தேவை சார்ந்தாக 1949 முதல் திட்டமிடப்பட்டது. உலக வர்த்தக கழகம் சீனாவில் புகுந்தைத் தொடாந்து 60 கோடி விவசாயிகளின் உணவு உற்பத்தி, வர்த்தகம் சார்ந்தாகவும், ஏற்றுமதிக்கானதாக மாற்றியமைத்தது. இதன் அடிப்படையில் 15 முதல் 22 சதவீகித உணவு உற்பத்தியை முற்றாக வர்த்தக அடிப்படையில் மாற்றியமைக்கப்பட்டது. அத்துடன் பழம், மரக்கறி மற்றும் இறைச்சி உற்பத்தியை ஏற்றுமதிக்காக உற்பத்தி செய்யும் வகையில், உலக வர்த்தக கழகம் மாற்றியமைத்துள்ளது. இதன் அடிப்படையில் 20 லட்சம் புதிய வேலைகளை உருவாக்கியுள்ளது. ஆனால் இது எதிர்மறையில் பல கோடி விவசாயிகள் விவசாயத்தை கைவிடவைத்தது. தொழிலை இழந்த விவசாயிகளை, வேலை தேடி நகரங்களை நோக்கி படையெடுக்க வைத்துள்ளது. சீனா நகரங்கள் வேலைதேடித் திரியும் மக்கள் கூட்டத்தால் பிதுங்குகின்றது. சீனாவில் கிராமங்களில் இருந்து மக்கள், நகரங்களை நோக்கி ஒடுவது தொடர்ந்த அதிகரிக்கின்றது.

நகரங்கள் கிராமங்கள்
1980 19.7 சதவீகிதம் 80.3 சதவீகிதம்
1990 27.4 சதவீகிதம் 72.6 சதவீகிதம்
2000 35.8 சதவீகிதம் 64.2 சதவீகிதம்
2003 38.6 சதவீகிதம் 61.4 சதவீகிதம்

சீனாக் கிராமங்களில் மக்கள் வாழமுடியாத வகையில் கடுமையான ஈவிரக்கமற்ற சுரண்டல், அந்த மக்களை அங்கிருந்து விரட்டியடிக்கின்றது. இது 2010 இல் 80 சதவீகிதமான மக்கள் நகரங்களை வந்தடைந்து விடுவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றது. கிராமங்கள் வறுமையில் சிக்கியுள்ளது. சீனா அரசு அறிக்கை ஒன்றே ஒன்பது கோடி சீனார்கள் ஒரு டொலருக்கு குறைவான வருமானத்தை பெற்று வறுமையில் இருப்பதாக ஒப்புக் கொள்கின்றது. சீனா மக்கள் தொகையில் கிராமத்தில் 69 சதவீமானவர்கள் வாழ்கின்றனர். இவர்களில் 50 சதவீகிதமானவர்கள் விவாசயத்தையே உழைப்பாக கொண்டுள்ளனர். அதேநேரம், 19 சதவீகிதமானவாகள் வேறு கிராமத் தொழிகளை சார்ந்து வாழ்கின்றனர். 50 சதவீகித விவசாயிகள் தேசிய வருமானத்தில் பெறுவது 16 சதவீகித்தை மட்டுமே. இதற்கே வேட்டு வைக்கப்படுகின்றது. 1980 முதலே இந்த நிலை வளர்ச்சி பெற்று, இன்று நிலைமை மோசமாகி ஏழைகளை உற்பத்தி செய்கின்றது. சீனா விவசாயிகள் உண்ட உணவு ஏற்றுமதியாவதால், பசியும் பட்டினியும் சீனாவின் புதிய தலைவிதியாகியுள்ளது. அதேநேரம் சீனா உலகில் நாலவது மிகப் பெரிய உணவு ஏற்றுமதி நாடாக மாறியுள்ளது.

2001 இல் அதிக விவசாய பொருட்களை ஏற்றுமதி செய்த நாடுகள்

ஐரோப்பிய ஒன்றியம் 23 551 கோடி டொலரில்
அமெரிக்கா 6 840 கோடி டொலரில்
யப்பான் 5 694 கோடி டொலரில்
சீனா 2 012 கோடி டொலரில் (கொங்கொங் உள்ளடக்கவில்லை)
கனடா 1 555 கோடி டொலரில்
மெக்சிக்கோ 1 279 கோடி டொலரில்
தென்கொரியா 1 250 கோடி டொலரில்
ரூசியா 1 140 கோடி டொலரில்
கொங்கொங் 1 106 கோடி டொலரில்
தாய்வான் 699 கோடி டொலரில்

உலகில் மிகப் பெரிய உணவு ஏற்றுமதி நாடக மாறும் சீனாவினுள், மக்கள் உணவுக்காக கையேந்தி பிச்சை எடுக்கின்றனர். ஒரு நேரக் கஞ்சி குடிக்க முடியாது வீதிகளில் அலைகின்றனர். ஆனால் சீனா பொருளாதார ரீதியாக ஏகாதிபத்தியத்துக்கு சவால்விடும் நிலைக்கு தன்னை மாற்றிவருகின்றது. பணக்காரக் கும்பல்களின் நலன்களை அடிப்படையாக கொண்டே சகலவையும் ஒழுங்கமைக்கப்படுகின்றது. சீனாவின் மிகப் பெரிய தனியார் நிறுவனத்தின் சொத்தின் பெறுமதி 220 கோடி டொலராகியுள்ளது. முதல் 5 மிகப் பெரிய நிறுவனங்களின் சொத்து 365 கோடி டொலராகியுள்ளது.

2003 இல் சீனாவின் மிகப் பெரிய 11 பணகாரனையே, சீனாவின் ஜனாதிபதியின் மகள் திருமணம் செய்து கொண்டார். அவரிடம் 3.5 கோடி டொலர் சொத்துகள் உண்டு. அரசு இயந்திரமும் மூலதனமும் இணைந்து நடத்தும் சுரண்டல், சூறையாடலாகியவுடன் திருமணமாக வெளிப்படுகின்றது. மறுபக்கத்தில் 9.4 கோடி விவசாயிகள் நிலங்களை இழந்ததுடன், நகரங்களை நோக்கி நகர்ந்துள்ளனர். இப்படி வரும் கூலி தொழிலாளர்களுக்கு அன்றாட கூலிகளைக் கூட கொடுக்க முடியாத நிலையில், 1200 கோடி டொலர் நெருக்கடியை உருவாக்கியுள்ளது. இது ஒரு சமூக நெருக்கடியாக கொந்தளிப்பாக பரிணமிக்கின்றது. சீனா மக்களின் துயரங்கள் பலவாக மாறிவருகின்றது. உதாரணமாக சீனாவுக்கும் அமெரிக்காவிற்கும் இடையில் உள்ள முரண்பாடுகள் கூட, சீனா உழைக்கும் மக்களின் வயிற்றில் அடிக்கின்றது. 2003 இல் அமெரிக்கா சீனாவின் துணி மற்றும் ஆடைகளுக்கு விதித்த தடை, 1.5 கோடி புடைவை உற்பத்தியாளர்களையும், அதற்கு தேவையான மூலவளங்களை உற்பத்தி செய்த 10 கோடி விவசாயிகளின் வாழ்வை நெருக்கடிக்குள்ளாக்கியது. உலகில் மேற்கு அல்லாத நாடுகளில் உயர் கடன் கொண்ட, இரண்டாவது மிகப் பெரிய நாடாக சீனா உள்ளது. 2001 இல் 17000 கோடி டொலர் கடனை சீனா கொண்டிருந்தது. அதாவது சீனாவின் மொத்த கடன் 1103821 கோடி இந்தியா ரூபாவாகும். சீனாவில் 2001-2002 வருடப் பற்றாக்குறை 182868 கோடி இந்திய ரூபாவாகியுள்ளது.
சீனா பொருளாதாரம் என்பது மக்களுக்கு எதிரானதாக, அவர்களை ஏதுவுமற்ற ஒன்றாகிவிட்டது. அதேநேரம் உலகளவில் பல்வேறு நாடுகளில் உள்ள மக்களின் உழைப்பின் ஆற்றலை அழித்து, அவர்களின் வாழ்வை சூறையாடுகின்றது. குறிப்பாக ஏகாதிபத்திய நாட்டு உழைக்கும் வர்க்கத்தின் வாழ்வை அழித்து வருகின்றது. சீனா பொருளதாரம் சீனா உள்ளிட்ட உலகப் பணக்காரக் கும்பலின் நலன்களை மட்டும் அடிப்படையாக கொண்டு இயங்குகின்றது. அதேநேரம் சீனா மூலதனம் உலகளவில் ஏகாதிபத்தியதுக்கு போட்டியாகவும் களத்தில் குதித்துள்ளது. அதேநேரம் ஏகாதிபத்திய உற்பத்திகளை உள்ளித்து, உலகளாவிய ஒரு புதிய சர்வதேச நெருக்கடிக்குள் உலகை நகர்த்தி வருகின்றது. ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான நெருக்கடிகளில் கூட, சீனாவின் பங்கு முதன்மையான ஒன்றாக மாறிவிட்டது. உலகமயமாதலில் சீனாவின் நிலைப்பாடு, உலகளவிய பல நெருக்கடிக்கு ஊன்றுகோளாகிவிட்டது. இவற்றை நாம் மேலே விரிவாக கண்டோம். தொடர்ந்த விரிவாக கணவுள்ளோம்.

No comments: