இலங்கையின் இனப்பிரச்சனைக்கான பேச்சுவார்த்தை என்னும் சுத்துமாத்து!
சுதேகு
22.02.06
இலங்கையில் இனங்களுக்கிடையிலான இனச்சிக்கல் தொடர்பாக கடந்த அரை நூற்றாண்டு காலமாக பேசியாயிற்று. வட்டமாக, சதுரமாக, பல கோணங்களாகப் பேசியாயிற்று. மூன்றாம் தரப்பு மத்தியஸ்தம், ஐரோப்பிய நாடுகளின் மத்தியஸ்தம், வெளிநாடொன்றில் பேச்சுவார்த்தை என்றெல்லாம் பல வாணவேடிக்கைகள் முடிந்துவிட்டன. ஆனாலும் இது ஒய்ந்துவிடவில்லை, இன்று ஜெனிவாவில் பேச்சுவார்த்தை!
என்ன பேசப்போகிறார்கள்? யாருக்கும் தெரியாத பரம ரகசியம் இது. கடந்த அரைநூற்றாண்டு காலமாக என்ன பேசினார்கள் என்று தெரியாமல் போனதோ, அதேபோலத்தான் இந்தப் பேச்சு வார்த்தையும். இதில் என்ன வேடிக்கை என்றால் எந்த மக்களின் பெயரால் இந்தப் பேச்சு வாத்தைகள் நடந்ததோ - நடக்கிறதோ, அந்த மக்களுக்கே இது கண்கட்டு வித்தையாக நடக்கிறது. இது இப்படி என்றால், இப்பேச்சுவார்த்தையை ஒட்டி ஐரோப்பாவில் உள்ள சில தமிழர்களால் ஐனநாயகத்தின் பெயரில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படுகிறது. ஆகக்குறைந்த ஜனநாயகக் கோரிக்கைகள் கூட சரியாக முன்னெடுக்க முடியாத இவர்கள் அதேவேளையில், "இனப்பிரச்சனைக்கான சரியான தீர்வை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்’’ என இவர்கள் துள்ளிக் குதிப்பதன் அர்த்தம் புரியவில்லை. ஐயா! இனப்பிரச்சனைக்கு அப்படி என்ன சரியான தீர்வை வலியுறுத்தினீர்கள். ஓகோ அதுகும் பரம ரகசியமா இருக்கட்டும், இருக்கட்டும்.
இந்த ஜனநாயகவாதிகளால் ஏன் இந்தப் பேச்சு வார்தைகளையும், அரசியலையும் மக்கள் முன் பகிரங்கமாக நடத்தும் படி கோரமுடியவில்லை? இது என்ன முட்டாள் தனமான கேள்வி. நோர்வேயும் சரி, ஐரோப்பிய நாடுகளும் சரி, அரசும் சரி, புலிகளும் சரி ஒரு திறந்த பேச்சுவார்த்தைக்குத் தயாரில்லை என்ற அரசியல் அரிச்சுவடி புரியாதவராக இருக்கின்றீர் என்று முணுமுணுப்பது கேட்கிறது. அப்ப தெரியாமல்தான் கேக்கிறன். யாருக்காக, எதுக்காகப் பேச்சுவார்த்தை? சாதாரண மக்களோ தெரிந்து கொள்ள முடியாத, தெரிந்து கொள்ளக் கூடாத பேச்சுவார்த்தைகளும், அதன் தீர்வுகளும் எப்படியய்யா இனப்பிரச்சனைக்கான சரியான நிரந்தரத்தீர்வாக இருக்கப்போகிறது? புலியும், அரசும் பறந்து பறந்து குசுகுசுப்பது, தத்தமது அதிகாரங்களை தக்கவைப்பதற்கும், தமது பணப்பெட்டிகளை குறையாமல் பார்த்துக் கொள்வதற்கு மட்டுமேயல்லாமல் அவர்கள் வேறு எதையும் பேசத் தயாராகவும் இல்லை. இவர்களுக்கு அந்தத் தேவையும் இல்லை, அதுபற்றிக் கருசனையுமில்லை. இவர்கள் இனப்பிரச்சனைக்கான தீர்வைப்பற்றி பேசுகிறோம் என்பதே சுத்தப் பம்மாத்து!
சுதேகு
தமிழ் அரங்கம்
Friday, February 24, 2006
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment