ஜனநாயகத்தையே விலைபேசும் புலியெதிர்பு அரசியலின் நேர்மை நிர்வாணமாகின்றது.
பி.இரயாகரன்
25.02.2006
ஜனநாயகம் சார்புத் தன்மையானது என்பதை நிறுவும் முயற்சியில், புலியெதிர்ப்பு அணியின் முயற்சிகள் சந்தியில் தலை விரிகோலமாகி வருகின்றது. புலிகளிடம் ஜனநாயகத்தை கோரும் புலியெதிர்ப்பு அணி, தமக்கு அது பொருந்தாது என்பதையே ராம்ராஜ் விடையத்தில் மீண்டும் நிறுவிக் காட்டமுனைகின்றனர்.
22.2.2006 அன்று ரி.பி.சி ராம்ராஜ்சை சுவிஸ் பொலிசார் கைது செய்துள்ள நிகழ்வும், ரி.பி.சியும் மற்றும் புலியெதிர்ப்பு கும்பலின் மௌனமும், அவர்களின் சொந்த ஜனநாயக மூகமுடியை நிர்வாணமாக்கி வருகின்றது. ஒரு வானொலி, பல புலியெதிர்ப்பு இணையத்தளங்கள் எல்லாம் வாய் பொத்தி மௌனம் சாதிக்கின்றனர்?. மறுபக்கத்தில் மௌனத்தின் ஊடாகவே மெதுவாக ஆதாரம் எதையும் வைக்காது குசுவிடும் தேனீ "புலிகளின் சதித்திட்டத்தினால் ராமராஜன் கைது என்று செய்தி போடுகின்றனர். இதற்கு ஆதாரம் தான் என்ன? அப்படியானால் அந்த புலிச் சதி தான் என்ன? அதை மட்டும் மௌனவிரதத்துக்குள் விட்டுவிடுகின்றனர்.
இலங்கையில் கொலை, கொள்ளை, கடத்தல் நடந்தவுடன் அதை யார் செய்தது என்று கண்டுபிடித்து போடும் இவர்கள், ராம்ராஜ் விடையத்தில் மௌனம் சாதிக்கின்றனர். நீடித்த மௌனம். 23.2.2006 அன்று நடந்த அரசியல் அரங்கும் இதைப்பற்றி மௌனம் காக்கின்றது. இதன் பின்னணிச் சாத்தியப்பாட்டைக் கூட விவாதிக்கவில்லை. "புலிகளின் சதித்திட்டத்தினால் ராமராஜன் கைது" என்ற அந்த சதி என்ன என்று கூட, கூறமுடியாத நிலையில் அரசியல் நெருக்கடிக்குள் சிக்கிவிடுகின்றனர். சரி இந்தக் கைது ஏன். இதை அவர்கள் ஆய்வு செய்யவில்லை. புலியைப் பற்றி மட்டும், வீரமாக இவர்கள் ஆய்வு செய்வார்கள். தமக்குள் அதாவது புலியெதிர்ப்பு அணியின் பிரச்சனையை ஆய்வு செய்யமாட்டார்கள்.
இது பல கேள்விகளையும், அந்த அரசியலையும் சந்திக்கு கொண்டு வருகின்றது. புலிப் பாசிசம் என்பது எதார்த்தமானது தான். அதைச் சொல்லி புறப்பட்ட புலியெதிர்ப்பு அரசியல், மறுபக்கத்தில் இதைத் தாண்டியவை அல்ல என்பது எமது கடந்தகால விமர்சனமாகும்.
இந்தக் கைது புலியணியின் மௌத்தின் பின்னால், தெளிவாக இரண்டு சாத்தியக்கூறை எம்முன் தெளிவாக்கிவிடுகின்றது.
1.இக் கைது தெளிவாக ராம்ராஜ்சின் குற்றச் செயலினால் ஏற்பட்ட ஏதாவது ஒன்றாக இருக்கலாம்.
இது இல்லை என்றால்
2. ஜனநாயகத்தை கோரி போராடியதற்கான கைது என்றால், யாரிடம் ஜனநாயகத்தை பெற்றுத் தரக் கோரினார்களோ அவர்களின் ஏகாதிபத்திய முகத்தையே இது தெளிவாக்கின்றது.
இதில் ஒன்று நிச்சயமாக நிகழ்ந்துள்ளது. அதை அவர்கள் தெளிவுபடுத்த மறுக்கின்றனர். இதை ஆய்வு செய்யவும் மறுத்து நிற்கின்றனர். மறுப்பதில் இருந்து குற்ற நடவடிக்கை சார்ந்த கைதுதான் அநேகமானதாக இருக்கும் என்பது உறுதியாகின்றது. பொதுவாக கைதுக்கு பின் விடுதலை செய்யப்படாதது, குற்றத்தின் தன்மையை வெளிப்படுத்துகின்றது. ராம்ராஜ் போன்றவர்களின் அரசியல், புலியைப் போல் எல்லாவற்றையும் செய்வதில் சளைக்காத அதே அரசியல் தான். எப்படி செயல்படுவது, எப்படி வாழ்வது என்பது அவர்கள் கொண்டுள்ள அரசியல், அரசியல் வழிதான் தீர்மானிக்கின்றது. தனிமனிதன் தீர்மானிப்பதில்லை.
கடந்தகால நிகழ்கால அரசியல் அடிதடி முதல் கொலைகள் வரை செய்வதில் தான் பலம்பெறுகின்றது. இதுவே இவர் இருந்த, இவர் சார்ந்து இருந்த இயக்கத்தின் அரசியலாக இருந்தது. இதில் அவர்கள் சாமபேதம் பார்த்தது கிடையாது. சமூக விரோத அதாவது மக்கள் விரோத நடவடிக்கையில் ஈடுபட்ட இயக்கங்களில் இருந்தவர்களின் வாழ்க்கை மர்மமானது. இன்று புலியெதிர்பு என்ற எல்லைக்குள் ஜனநாயகம் என்று கோருவதன் மூலம், மீண்டும் அந்த மக்கள் விரோத வாழ்க்கை முறைக்கு திரும்புவது இவர்களின் அரசியலாகின்றது.
சதாம்குசைனிடம் இருந்து ஜனநாயகத்தை மீட்பது என்ற பெயரில் ஈராக்கில் நடப்பது எதுவோ, அதையே இவர்கள் ஏன் செய்யமாட்டார்கள். இவர்களுக்கு என்ன விதிவிலக்குண்டு? இன்று ஈராக்கின் ஆட்சியில் உள்ளவர்கள், முன்பு பிரிட்டன் அரசினால் வளர்க்கப்பட்ட வளர்ப்பு நாய்கள் தான்.
இரண்டாவதாக இக் கைது ஜனநாயகத்துக்காக (புலியின் சதியாக இருந்தாலும் கூட) போராடியமைக்கான கைது என்றால், புலியெதிர்ப்பு ஜனநாயக அரசியலே அம்பலமாகிவிடுகின்றது. இக் கைது புலியெதிர்ப்பு ஜனநாயகத்தை மீட்கும் போராட்டத்தில் ஏற்பட்டதாக கூறுவார்களேயானல், அவர்களின் ஜனநாயகமே கேள்விக்குள்ளாகிவிடுகின்றது. யாரை எல்லாம் ஜனநாயக அரசுகள் என்று எடுத்துக் காட்டினார்களோ, அவர்களின் சொந்த ஜனநாயக முகமே அம்பலமாகி நிற்கின்றது.
ஜனநாயக நாடுகள், ஜனநாயக அரசுகளின் ஜனநாயக விரோதக் கைது பக்கசார்பானது என்பதையும், அது ஏகாதிபத்திய தன்மை வாய்ந்தவை என்பது மீண்டும் அம்பலமாக்கிவிடுகின்றது. இது தவிர்க்க முடியாமல் புலியெதிர்ப்பு மைய அரசியல் போக்கையை கேள்விக்குள்ளாக்கி மாற்றக் கோருகின்றது.
அவரை விடுவிக்க பிரிட்டிஸ் ஆளும் வர்க்கம் முயற்சிப்பதாக வெளிவரும் செய்தி உண்மையானால், ஜனநாயகம் வளைந்து கொடுக்கும் தன்மையும் சந்திக்கு வந்துவிடுகின்றது. ஒரு நாட்டின் கைதுக்குள் (தன் நாட்டு பிரஜையாக இருந்தாலும்) பிரிட்டிஸ் ஆளும் வர்க்க தலையீடு, அந்த நாட்டின் ஜனநாயக சட்டங்களையே கேள்விக்குள்ளாக்குவதாக அமைகின்றது. இந்த தலையீடு சட்டத்தின் பிடியில் இருந்து விடுவிக்குமாயின், புலியின் அரசியல் நடத்தைக்கு ஒப்பானதே. புலிகளின் நீதிமன்றம் பொலிசாரின் பிணையை மறுக்கும் போது, புலித்தலைமை தலையிட்டு பொலிசை விடுவிக்கின்றது. இது சட்டம் ஒழுங்கு மீறல் மட்டுமின்றி ஜனநாய விரோதமானதும் கூட.
1.இதே உள்ளடக்கம் தான் சுவிஸ்சில் ராம்ராஜ்சை விடுவிக்கும் முயற்சிகள். சட்டத்துக்கு உட்படாத நடத்தைகள், நீங்கள் சொல்லும் புலியெதிர்ப்பு ஜனநாயகத்துக்கே விரோதமானவை தான். இதில் உண்மையாகவே ஒரு குற்றமிழைக்கப்பட்ட நிலையில், குற்றத்தில் இருந்து விடிவிக்க முயன்றால், உங்கள் ஜனநாயகத்தின் போலித்தனம் அம்பலமாகிவிடுகின்றது. அதன் பக்க சார்பு அம்பலமாகிவிடுகின்றது.
2.இல்லாது போராடியதால் கைது என்றால், போராடும் உரிமையை மறுக்கும் இந்த முதலாளித்துவ ஜனநாயகத்தின் போலித்தனம் அம்பலமாகின்றது. அதன் பக்க சார்பு அம்பலமாகின்றது. நீங்கள் இதுவரை காலமும் ஜனநாயகம் என்று எமக்கு எடுத்துக் காட்டிய இந்த மோசடியான ஜனநாயகம் அம்பலமாகின்றது. அதைப் பாதுகாக்கும் உங்கள் ஜனநாயகத்தின் போலித்தனம் அம்பலமாகிவிடுகின்றது.
3.விடுவிக்கும் முயற்சியில் பிரிட்டிஸ் அரசின் அத்துமீறிய தலையீடு இருப்பின், ஜனநாயகத்தின் ஏகாதிபத்திய தன்மையும், ஜனநாயக விரோத வக்கிரத்தின் அரசியலை அம்பலமாக்குகின்றது.
ஜனநாயகம் மக்களுக்கானது. அதை உயர்த்திப் பிடிப்போம். ஜனநாயகத்தை சார்புத் தன்மையாக்கி குறுகிய நோக்கங்களுக்கு வளைப்பதை நாம் எதிர்ப்போம். ஜனநாயகத்தின் பெயரில் ஏகாதிபத்தியத்துக்கும், அவர்களின் மக்கள் விரோத நோக்கத்துக்கும் துணைபோவதை நாம் அனுமதிக்க முடியாது. இதை எதிர்த்தே எமது போராட்டத்தை நாம் தொடங்கியுள்ளோம்.
தமிழ் அரங்கம்
Saturday, February 25, 2006
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
விபரமான பதிவு இரயாகரன்.நன்றி!
Post a Comment