தமிழ் அரங்கம்

Saturday, March 4, 2006

புலிகள் மீதான ஏகாதிபத்திய உத்தரவுகளே

புலிகள் மீதான ஏகாதிபத்திய உத்தரவுகளே,
புலியெதிர்ப்பு கும்பலின்
(ஜனநாயக) கோசமாகின்றது

பி.இரயாகரன்
02.03.2006



எமது விமர்சனத்தின் தன்மையையொட்டி புலியெதிர்ப்பு அணியினர் எம்மீது ஆத்திரம் கொள்கின்றனர். தமது மோசடி அம்பலமாவதால், கண்ணை மூடி ஆதரித்த தமது அணிகள் விழிப்புற்று கேள்வி கேட்பதால் இது ஆத்திரத்தை உண்டாக்குகின்றது. அவர்கள் புலிகள் தான் இன்று பிரச்சனை என்கின்றனர். புலியெதிர்ப்பு அணியை அம்பலப்படுத்துவது, புலியைப் பலப்படுத்துவது என்கின்றனர். அத்துடன் தம்மை புலிக்கு ஒப்பிடுவது தவறுறென்று கூற முனைகின்றனர். நாங்கள் புலிகளைப் போல் கொலை செய்தோமா என்று வினா தொடுக்கின்றனர். புலியைவிட குறைவாகத்தானே நாங்கள் செய்தோம் என்றும் விவாதிக்க முற்படுகின்றனர். அத்துடன் புலிசார்பு, புலியெதிர்ப்பு இரண்டையும் ஒன்று கலந்து எழுத வேண்டாம் என்று, அவர் அவரவர் சார்பு நிலைக்கு ஏற்ப கோருகின்றனர்.

எமது விமர்சனம் புலியெர்ப்பு அணியின் (புலி) அரசியல் தளத்தையும், அதன் மீதான கண்மூடித்தனமான வழிபாட்டையும் தகர்க்கத் தொடங்கியுள்ளது. இதனால் கடும் விமர்சனத்தையும், வன்மமிக்க எதிர்ப்பையும் காட்டுகின்றனர். இதில் இருந்தே தமது அரசியல் நிலையை தக்கவைக்க என் மீது தனிப்பட்ட அவதூறுகளை கூறி தப்பிக்க முனைகின்றனர். ஆனால் நாம் அவர்களின் மக்கள் விரோத அரசியலை அம்பலப்படுத்துவதில் உறுதியாகவே உள்ளோம். இதை நாம் ஏன் செய்யவேண்டியுள்ளது. மக்கள் நலனை முன்னிறுத்தாத எதையும் நாம் கடுமையாக விமர்சிப்பதை கோருகின்றோம். மக்களை நலனை முன்னெடுக்கும் குறைந்தபட்ச எந்த முயற்சியையும், அது எவ்வளவுதான் முரண்பாடுகளைக் கொண்டிருந்தாலும் அதை நாம் நட்பு ரீதியாகவே அணுகுகின்றோம்.

ரி.பி.சியைச் சுற்றியுள்ள புலியெதிர்ப்புக் கும்பல் மக்கள் நலனை முன்னெடுக்கின்றதா? இதை அரசியல் ரீதியாக யாராவது நிறுவும் பட்சத்தில், நாம் அவர்களுடன் அதைப்பற்றி பேசமுடியும். புலிகளை எதிர்ப்பது மட்டும் தான் புலியெதிர்ப்பு அரசியலாக உள்ளதால், நிச்சயமாக இந்த அரசியல் மற்றொரு புலியையே உருவாக்கும். எமக்கு ஒரு புலியே போதும். எமது மக்கள் படும் துன்பம் போதும் போதுமென்றாகிவிட்டது. மற்றொரு புலி உருவாகுவதை நாம் எப்படி அனுமதிக்க முடியும்.

புலிகளின் பாசிசம் மக்களின் வாழ்வை துன்புறுத்துகின்றது என்பது உண்மை. ஆனால் அதை மட்டும் தன்னளவில் எதிர்ப்பதுடன் ஒரு மனிதன் நிறுத்திக் கொள்வானேயானால், அதை நாம் விமர்சிக்க முற்படவில்லை. அது அவனின் சொந்த வாழ்வின் வெளிப்பாடாகவே உள்ளது. ஆனால் புலியெதிர்ப்பு அணி அப்படி அல்ல. புலியெதிர்ப்பின் அரசியல் என்ன? புலியை எதிர்க்கும் அனைவருடனும் ஒன்று சேருகின்றது. புலியை எதிர்க்கும் சிங்களப் பேரினவாதம், பிராந்திய வல்லரசான இந்தியா முதல் ஏகாதிபத்தியம் வரை இவர்களின் அணியில் இணைந்து கொள்கின்றனர். இது இயல்பில் தமிழ் மக்களின் நலனை நிராகரிக்கின்றது. புலியை எதிர்க்கும் ஏகாதிபத்திய நலன்களுக்கு துணை போவதே, புலியெதிர்ப்பு அரசியலாகி விடுகின்றது. தமிழ் மக்களுக்கு எதிரான எல்லாவிதமான முயற்சியையும் நாம் எதிர்ப்போம். இதை அம்பலப்படுத்தும் அதேநேரம், ஏகாதிபத்தியத்துக்கு துணைபோகும் முன்முயற்சிகள் அனைத்தையும் தகர்ப்பது எமது இன்றைய பணியாக எம்முன்னுள்ளது.

இந்த ஏகாதிபத்திய சார்பு புலியெர்ப்பு அரசியல், புலியின் அரசியலைவிட மிக மோசமான ஒன்றாகவே நிச்சயமாக உள்ளது. புலிகள் இனம் காணப்பட்ட தெரிந்தெடுத்த அழித்தொழிப்பையே செய்கின்றார்கள். (தனிப்பட்ட ரீதியில் எம்போன்றவர்களுக்கும் கூட விதிவிலக்கின்றி அது பொருந்துகின்றது.) ஆனால் புலியெதிர்ப்பு அரசியல் இராணுவமயமாகும் போது, ஒட்டு மொத்த மக்களையும் அதன் வாழ்வாதாரங்களையும் அழித்தொழிக்கும். முன்பு இந்திய ஆகிரமிப்பாளனுடன் களமிறங்கிய முன்னாள் புலியெதிர்ப்பு கும்பல்கள் இதைத்தான் செய்தது என்பதை, எமது வரலாறு இரத்த சாட்சியமாக்கியுள்ளது. இதைவிட இன்று புலியெதிர்ப்பு பேசுபவர்கள் எதைத்தான் செய்வார்கள்.

எமது மக்களின் பிரதான எதிரி புலிகள் அல்ல. மாறாக பேரினவாத அரசும், இந்தியாவும், ஏகாதிபத்தியங்களும் தான். இதனுடன் எந்த கூட்டு அரசியல் முயற்சியையும் நாம் அனுமதிக்க முடியாது. அதை நோக்கி அணிதிரளும் அனைத்தையும் அம்பலப்படுத்தி, அரசியல் ரீதியாக மக்களை வழிகாட்டுவது எமது வரலாற்றுக் கடமையாகும்.

இன்று புலியெதிர்ப்பு அணியில் உள்ளவர்கள், நாம் மக்களை அணிதிரட்ட முடியாத நிலை உள்ளது என்கின்றனர். மக்களை அணிதிரட்டும் சூழலை உருவாக்க முதலில் புலிகளை அழிக்கவேண்டும் என்கின்றனர். இதற்கு ஏகாதிபத்தியத்தின் துணையைத் தான் நாட வேண்டியுள்ளதாக, தனிப்பட்ட உரையாடல்களில் கூறுகின்றனர். இதை பகிரங்கமாக முன்வைக்க அவர்கள் முன்வருவதில்லை. மக்கள் முன் இதைப்பற்றி பகிரங்கமாக விவாதிக்கவும் தயாராக இல்லை. புலியைப் போல் மக்களை ஏமாற்றவே விரும்புகின்றனர். புலிப் பாசிசத்தை ஒழிப்பதில் தமிழ் மக்கள் பங்கு பற்ற மாட்டார்கள் என்ற நிலைப்பாடும், மக்களைக் கொண்டு இது சாத்தியமில்லை என்ற நிலைப்பாடும் புலியெதிர்ப்பு அணியின் மைய அரசியல் நிலைப்பாடாகவேவுள்ளது. அப்படியாயின் யாருக்காக எதற்காக நீங்கள் போராடுகின்றீர்கள்.

ஆனால் இதற்கு வெளியில் மக்கள் தமது வாழ்க்கைக்காக போராடவேண்டியுள்ளது. இதனால் உங்களுக்கு எதிராகவும் மக்கள் போராடுவதைத் தவிர வேறு வழியில்லாததாகி விடுகின்றது. நீங்களும் மக்களுடன் இணைந்து நிற்க மறுத்து ஏகாதிபத்திய துணையை நாடுவதால், இயல்பாகவே நீங்களாகவே மக்களின் எதிரியாகி விடுகின்றீர்கள். மக்கள் அன்றாடம் தமது வாழ்வுக்காக போராடுகின்றனர் என்ற உண்மையை இவர்கள் மூடிமறைக்கவே விரும்புகின்றனர்.

உண்மையில் புலியெதிர்ப்பு என்ற பெயரில் நீங்கள் செய்வது, மக்களுக்கு வெளியில் அன்னிய சக்திகள் மூலம் புலிப் பாசிசத்தை ஒழிப்பது என்றதன் பெயரில், மற்றொரு பாசிசத்தையே உங்கள் தலைமையில் ஏற்படுத்த முனைவதுதான். இதற்கு உலகத்தில் மக்கள் தலையீடற்ற அனைத்து வரலாறும், மிகத் தெளிவாகவே விதிவிலக்கின்றி பதிலளிக்கின்றது. மக்கள் தீர்மானிக்காத அனைத்து மாற்றங்களும், அந்த மக்களுக்கு எதிரானது தான். மக்கள் தான் தமக்கு எது தேவை என்பதை தீர்மானிக்க வேண்டும். இல்லாத அனைத்தும் மக்கள் விரோதத் தன்மை கொண்டவையே.

அண்மையில் பிரிட்டின் மற்றும் சுவிஸ்சில் (ஜெனிவாவில்) நடத்தப்பட்ட ஆர்ப்பாட்ட ஊர்வலத்தில், வைக்கப்பட்ட கோசங்கள் அனைத்தும் புலி பற்றிய ஏகாதிபத்திய அரசியல் நிலைப்பாட்டுடன் முரண்படாத வகையில் தெரிவு செய்து வைக்கப்பட்டுள்ளது.

அரசும் மக்களை ஏமாற்றுவதை கண்டிக்கின்றோம்.பேச்சுவார்த்தை உண்மையான சமாதானத்திற்காக நடைபெற வேண்டும்.

புரிந்துணர்வு உடன்படிக்கையின் பின்னரும் முன்பும் புலிகளினால் சிறைப்பிடிக்கப்பட்டு புலிகளின் சித்திரவதை முகாம்களில் தடுத்து வைத்திருப்பவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.

புலிகள் அமைப்பு கொலை, ஆட்கடத்தல், சிறுவர்களை பலாத்காரமாக படையணியில் இணைத்தல் போன்றவற்றை உடன் நிறுத்த வேண்டும்.

இலங்கை அரசே, வடக்கு கிழக்கு மாகாணங்களில் புலிகளிடம் உள்ள அனைத்து ஆயுதங்களும் களையப்பட்டு அனைத்து ஜனநாயக அரசியல் கட்சிகளையும் சுதந்திரமாக இயங்குவதற்கு வகைசெய்ய வேண்டும்
.



மக்களின் பெயரில் யுத்தம் வேண்டாம்.

வேண்டும் வேண்டும் நிரந்தரத்தீர்வு

இனவாதப் பருப்பு இனி அவியாது

அரசியல் வாதிகளே இனவாதத்தீயில் குளிர்காயாதீர்கள்

சாவது மட்டுமல்ல வாழ்வதும் ஒருமுறை தமிழனும் வாழப்பிறந்தவன்

வேண்டாம் வேண்டாம் யுத்தம் வேண்டாம்

தேவை தேவை அரசியல் தீர்வு

சேர்க்காதே, சேர்க்காதே சிறுவர்களை படையில் சேர்க்காதே


இவை தான் இவர்கள் வைத்த கோசங்கள்.

குறித்த இக் கோசங்களையே மக்கள் நலன் சார்ந்தாக காட்டப்படுகின்றது. அப்படி உள்ளதாகவே பொதுவாக பார்ப்பவர்கள் புரிந்து கொள்வார்கள். ஆனால் ஏகாதிபத்தியம் சார்ந்ததாகவும், இது அவர்களின் கோரிக்கையாக, புலியை நோக்கிய நிபந்தனையாகவும் உள்ளது.

இந்தக் கோசங்கள் அனைத்தையும் இன்று ஏகாதிபத்தியம் புலியிடம் நிபந்தனையாக வைக்கின்றது.இதையே புலியெதிர்ப்பு அணியினர் மீண்டும் தமிழ்மக்களிடம் கோசமாக்கி வைக்கின்றனர்.

இக் கோசங்களை வைத்தவர்கள் ஏகாதிபத்தியத்துக்கு எதிரான, தமிழ் மக்கள் நலன் சார்ந்த கோசங்களை முன்வைப்பதில்லை.

இவர்கள் மக்கள் நலன் சார்ந்த கோசங்கள் எதையும் முன்வைக்கவில்லை
.

இப்படி ஒரு அரசியல் மோசடியைச் செய்கின்றனர். தமிழ் மக்களின் பெயரில் ஏகாதிபத்தியத்திடம் தலியீட்டைக் கோருகின்றனர். இதைபோல் தான் புலிகள் பேச்சுவார்த்தை சமாதானம் என்று நடத்தும் அனைத்து அரசியல் திருகுதளங்களின் போது மக்கள் நலன் எதையும் முன்வைப்பதில்லை. புலியெதிர்ப்பு அணியும் மக்கள் நலனை தனது கோசமாக்கி அந்த அரசியலாக முன்னிறுத்தவில்லை. மாறாக ஏகாதிபத்திய நலனை அடிப்படையாக கொண்ட மக்களின், ஜனநாயகம் பற்றி பேசுகின்றனர்.

இதை நாம் நுட்பமாக புரிந்து கொள்வதற்கு, புலிகள் ஏன் ஜனநாயக மீறலைச் செய்கின்றனர் என்பதை தெரிந்துகொள்ள வேண்டியுள்ளது. புலிகள் ஏன் கொலைகளையும், சித்திரவதைக் கூடங்களையும் அடிப்படையாக கொண்டு மக்களை அடக்கியாளுகின்றனர். இந்தக் கேள்விக்கு விடையளிக்காத, விடையைத் தெரிந்து கொள்ளாத வரை, உண்மையைக் கண்டு கொள்ள முடியாது. இதை அரசியல் ரீதியாக விளக்காத அனைத்தும், மக்கள் விரோதத் தன்மை கொண்டவையே.

மக்களுக்கு எதிரான அடக்குமுறையை ஏவுவதற்கு, அவர்களுக்கென்று விசேட மனநோய் எதுவும் கிடையாது. மாறாக அவர்கள் ஏன் இப்படிச் செய்கின்றனர். அதிகாரம், தனியாக தாம் மட்டும் என்ற கோரும் பாசிச உள்ளகத்தில் புலிகள் இதை கையாளுகின்றனர் என்றால், ஏன். இதன் பின் என்ன நலன் உள்ளது. பொருளாதார நலன்களை தாம் மட்டும், நெருக்கடி இன்றி அனுபவிக்க வேண்டும் என்ற ஒரேயொரு காரணம் தான் அனைத்துக்குமானது.

இதை நாங்கள் நடைமுறையில் பார்க்கலாம். சமாதானம் அமைதி என்ற போர்வையில் முக்கிய தளபதிகளில் உறவினர்கள் பலர் வெளிநாடுகளில் நிரந்தரமாகவே வந்து தங்கிவிட்டனர். இப்படி நோர்வேயில் பல நூற்றுக்கணக்கானோர். இதுபோன்று பல்கலைக்கழகங்களில் பல நூறு பேர். இது ஒருபக்கம் என்றால் மறுபக்கத்தில் ஒரு கோடி ரூபா பெறுமதியான பைரோ ஜீப்பில் தளபதிகள் திரிகின்றனர். ஒரு கோடி ரூபா பெறுமதியான பைரோவில் திரியும் இவர்களின், தனிப்பட்ட வாழ்க்கை எப்படி இருக்கும். இதை எப்படி அவர்களால் இழக்க முடியும். இதனாலேயே வன்முறை கட்டவிழ்க்கப்படுகின்றது. கருணா தனது பிளவில் இந்த ஆடம்பர வாழ்வைச் சொல்லிதானே புலம்பினான். எங்களுக்கு பங்கில்லையா என்றான்.

ஆடம்பரமான வாழ்விலும் விருந்துகளில் ஈடுபட்டாலும் சரி, உழைப்பில் ஈடுபடாது பல ஆயிரம் பேர் உண்டு கொழுக்கின்ற சொந்த வாழ்க்கையை பாதுகாக்கவே அதிகாரம் அவசியமாகிவிடுகின்றது. வெளிநாட்டில் பல புலிகள் உழைப்பில் ஈடுபடாது, உழைப்பில் ஈடுபடுபவனைவிட மிக உயர்ந்த வாழ்க்கையை வாழ்கின்றனர். இந்த சொகுசு வாழ்க்கையை பாதுகாப்பதற்காக அவர்கள் எதையும் செய்யத் தயாராகவே உள்ளனர். இதுதான் வலதுசாரிய புலிப் பாசிசம்.

மனிதர்களை சுரண்டி வாழ்வதற்கு அடக்குமுறை அவசியமாகிவிடுகின்றது. சொகுசாக உழைப்பில் ஈடுபடாது செல்வத்தை இலகுவாக நுகரும் அமைப்பில், அதை கட்டி பாதுகாக்க வன்முறை அவசியமாகிவிடுகின்றது. மக்கள் தமது உழைப்பின் மூலம் உற்பத்தி செய்யும் வற்றாத செல்வத்தை அபகரிப்பதற்கே தேசியம் அவசியமாகின்றது. இதைப் பாதுகாக்க வன்முறை அவசியமாகின்றது. இந்த எல்லைக்குள் தான் தேசியம் திக்குமுக்காடுகின்றது.

போராட்டத்தை நிறுத்தி சமாதான நாடகமாடி செல்வத்தை அன்னியனிடம் பெற்றாலும் சரி, மக்களை உருட்டி மிரட்டி அபகரித்தாலும் சரி, வரிகள் என்று மனித உழைப்பை அறவிட்டாலும் சரி, போராட்டம் தேசியம் என்று வசூலித்தாலும் சரி, பணம் தான் தேசியத்தின் இலட்சியப+ர்வமான கனவாகிவிட்டது.

இந்தப் பணம் பல ஆயிரம் பேர் உழைப்பில் ஈடுபடாது, சுரண்டி வாழும் நிலையை உருவாக்கியுள்ளது. இதைத் தக்கவைக்க படுகொலைகள், கடத்தல்கள், சித்திரவதைகள், நீதிமன்றங்கள் என்ற அடக்குமுறைச் சாதனங்கள் தேசிய நிர்மாணமாகியுள்ளது. இதை பாதுகாக்க ஊடகங்களை முழுமையாக கட்டுப்படுத்தி, ஒரு பாசிச சர்வாதிகார கட்டமைப்புக்குரிய அனைத்தையும் வன்முறை ஊடாக கட்டமைக்கின்றனர். மக்கள் பற்றி எந்தவிதமான கருசனையும் கிடையாது. மக்களை மந்தைகளாகவே, தமது தேவையைப் பூர்த்தி செய்யும் கறவை மாடாக கருதுகின்றனர். ஆனால் கறவை மாட்டுக்கு உணவு கூட போடாது அவிழ்த்துவிட்டு கறக்கின்றனர்.

இந்த உண்மையை அரசியல் ரீதியாக புரிந்து, அதை மறுத்து புலியெதிர்ப்பு அரசியல் பூத்துக் குலுங்கவில்லை. புலியெதிர்ப்பு அரசியல் இதை மறுத்து போராடவில்லை. மக்களின் உழைப்பைச் சுரண்டும் சமூக அமைப்பையே இவர்களும் முன்வைக்கின்றனர். இவர்கள் கேட்பதெல்லாம் புலிகள் அனுபவிக்கும் இந்த வாழ்க்கையில் தமக்கான பங்கைத்தான் கோருகின்றனர். இதையே அவர்கள் ஜனநாயகம் என்கின்றனர். இது முடியாது போனால், தமக்கு கீழ் அவர்களுக்கு அதை மறுப்பதே இவர்களின் ஜனநாயக இலட்சியம். புலிகளுக்கு மாற்றாக புலியெதிர்ப்பு ஜனநாயகம் இதைத் தாண்டி எதையும் கோரவில்லை. மக்கள் நலன்கள் எதையும், மக்களிள் சமூக பொருளாதார வாழ்வில் இருந்து முன்வைக்கவில்லை.

இவர்களின் ஜனநாயகமும், சுதந்திரமும் மக்களை சுரண்டுவதை மறுதலித்துவிடாது. மற்றவனின் உழைப்பை புடுங்கித் தின்பதை இவர்கள் ஜனநாயகம் என்கின்றனர். இதை இவர்கள் ஜனநாயகம் எதிர்க்காது. மக்களின் உழைப்பை புலிகள் புடுங்கித் தின்பதை மட்டும், தமக்கும் பங்கு கோரி எதிர்க்கின்றது. இதற்கு ஜனநாயகம் என்று கவர்ச்சியான கோசத்தை, மக்களின் பெயரில் வைக்கின்றனர்.

ஜனநாயகம் என்று கோசம் போடும் இந்த புலியெதிர்ப்புக் கும்பல், மக்கள் நலனை முன்னிலைப்படுத்துவதையே மறுதலிக்கின்றது. மாறாக ஏகாதிபத்திய கோசங்களையே ஜனநாயகத்துக்கான கோசமாக முன்னிறுத்துகின்றது. இந்த நெளிவு சுழிவை நாம் இனம் காணமுடியாத வகையில், சூக்குமமாக முன்னிறுத்துகின்றனா. புலிப் பாசிசத்தை முன்னிறுத்தி தமது மூகமுடிக்கு பின்னால் இதை மூடிமறைகின்றனர்.

அறிவுள்ள சுயமாக சிந்திக்க கூடிய எந்த ஒரு மனிதனும், ஏகாதிபத்தியமும் இதைத்தானே கோருகின்றது என்ற ஒரு கேள்வியை எழுப்பினால் இதன் உண்மை கந்தலாகி விடுகின்றது.

மக்களின் அதிகாரத்தை இவர்கள் புலிப் பாசித்துக்கு மாற்றாக கோருவதில்லை.

மக்களின் சமூக பொருளாதார விடுதலையைக் கோருவதில்லை. இதற்குத் தடையான புலிகளை எதிர்த்து கோரிக்கைகளை முன்வைப்பதில்லை.

மக்களைச் சுரண்டும் புலிகளின் அரசியல் கட்டமைப்பை எதிர்த்து போராடுவதில்லை.


புலியின் அரசியல் பொருளாதார நலன்களும், ஏகாதிபத்திய அரசியல் பொருளாதார நலன்களும் இணங்கிப் போவதை இவர்கள் இனம் காட்டி எதிர்த்துப் போராடுவதில்லை.

புலிகளின் பல மனித விரோத நடவடிக்கைகள் ஏகாதிபத்திய தரம் வாய்ந்தது. இவை ஏகாதிபத்தியம் செய்வது போல் இருப்பதையும், ஏகாதிபத்தியத்திடம் இருந்தே பெறப்படுவதை இவர்கள் இனம் காட்டி அம்பலப்படுத்தி போராடுவதில்லை.


இப்படி பற்பல.

மக்கள் நலன்களை இப்படி திட்டமிட்டு சேறடித்தபடிதான், மக்களின் முதுகில் ஏறி நிற்கின்றனர். இதை இனம் கண்டு போராட வேண்டியதே, எமது வரலாற்றுக் கடமையாக எம்முன் உள்ளது.

No comments: