தமிழ் அரங்கம்

Sunday, March 5, 2006

கொல்லும் உரிமையை நீ எனக்கு தா அல்லது நீயே எடு

நான் உன்னைக் கொல்லவில்லை, நீ என்னைக் கொல்லாதே கொல்லும் உரிமையை நீ எனக்கு தா அல்லது நீயே எடு?

பி.இரயாகரன்
05.03.2006

து தான் அண்மையில் சுவிஸ்சில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் சாரம். இப்படிக் குறிப்பிடுவதை இட்டு உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம். இவ்வளவுதானா பேச்சுவார்த்தை? இவ்வளவு தான். 2001 இல் நடந்த பேச்சுவார்த்தையும், அதைத் தொடர்ந்த நடந்த நிகழ்வு இதைத்தான் எமக்கு கற்றுத் தந்துள்ளது. கருணா விவகாரத்துக்கு முன்னம் நடந்த தொடர் கொலைகள் அனைத்தும், யார் எதற்காக ஏன் செய்தார்கள்? இந்த தொடர் கொலைகள் மூலம் தமிழ் சமூகத்தையே அச்சுறுத்தி சாதித்தது என்ன? குழந்தையை பயமுறுத்தி உணவூட்டுவது போல், மக்களின் உழைப்பில் இருந்து சூறையாடப்படும் ஒரு கொள்ளைக்கார நிர்வாகம் தமிழ்மக்கள் மேல் திணிக்கப்பட்டது. எங்கும் வரி, எதிலும் வரி. அனைத்தும் கண்காணிக்கப்பட்டது. இதைத் தான் தமிழீழ நிர்வாகம் என கூறப்பட்டது. இதைத்தான் அவர்கள் தமது அரசியல் வேலை என்றனர். இதைத்தான் தமிழ் மக்கள் அமைதி சமாதானத்தின் பெயரில் அனுபவித்தனர். உண்மையில் புலிகள் "இயல்புவாழ்வு" என்ற கூறியது, தாம் சுதந்திரமாக நடமாடி மக்களை அடக்குமுறைக்கு உள்ளாக்கவும், தாம் விரும்பியதை அனுபவிப்பதையும் தான். தமிழ் மக்களுக்கு இதைவிட வேறு எதையும் புலிகள் பெற்றுக் கொடுக்கவில்லை.

சுதந்திரமாக தமிழ்மக்களை அடக்கியொடுக்கவும், புலிகள் தமது சொந்த அதிகாரத்தை தமிழ் மக்கள் மேல் நிலைநாட்டவும், சிறிலங்கா இராணுவத்தின் அதிகாரத்தைக் கட்டுப்படுத்தினர். இதுதான் பேச்சுவார்த்தை உள்ளடக்கம். இதனால் யுத்தம் தவிர்க்கப்பட்டு, இராணுவ கெடுபிடி புலிகளின் நலன் சார்ந்து நிறுத்தப்பட்டது. புலிகளின் நலன் சார்ந்த இந்த நிலையால், மறைமுகமாக மக்கள் இராணுவ கெடுபிடியில் இருந்த தப்பி வாழமுடிந்தது. மாறாக இராணுவத்தின் இடத்தில் புலிகள் புதிய வடிவிலான அடக்குமுறையை கட்டவிழ்த்தனர். தமிழ் மக்கள் மேல் நன்கு இனம் காணப்பட்ட ஒரு நிர்வாக வன்முறையைத் திணித்தனர். புலிகள் அல்லாத பிரதேசத்தில் பதிவுக்கு வந்த நிகழ்ந்த யுத்த நிறுத்த மீறல்களின் மொத்தப் பதிவுகள், இதை துல்லியமாக எடுத்துக் காட்டுகின்றது. இராணுவ வன்முறைக்கு பதில் புலியின் வன்முறை உருவானது. உண்மையில் வன்முறையின் தன்மை, வன்முறையின் வடிவம் மாறியதே ஒழிய, மக்கள் நிம்மதியாக யாரும் மூச்சுவிடவில்லை. இதுவே 2001 முதலான பேச்சுவார்த்தையின் மொத்த விளைவாகும்.

இடையில் வந்த கருணா விவகாரம் மக்களிடம் சூறையாடியதை எப்படி நுகர்வது என்பதே, புலிக்குள்ளான முரண்பாடாகி பிளவாகியது. இது தொழில் முறையாக மக்களை அடக்கியாளும் புலிகளின் இயல்பு நிலையை இயல்பாக இல்லாததாக்கியது. கிழக்கில் குறிப்பாக மட்டக்களப்பில் சுதந்திரமாக சுரண்டும் ஆதிக்கத்தை புலிகளால் நிலைநாட்ட முடியாத புதியதொரு நிலையை, கருணாவின் பிளவு உருவாக்கியது. சூறையாடல்களை இயல்பாக நடத்த முடியாத வகையில், இரண்டு தரப்பு வன்முறையும் நிலைமை சிக்கலுக்குள்ளாக்கியது. கருணாதரப்பு வன்முறை புலிக்கு எதிராக நடந்ததால், புலிகள் பின்வாங்கும் நிலை உருவானது. மக்கள் இரண்டு பேருக்கும் கப்பம் கட்டும் புதிய நெருக்கடிக்குள் சிக்கியுள்ளனர். இது வடக்கு அல்லாத கிழக்கு மக்கள் சந்திக்கும் புதிய துன்பகரமான ஒரு நெருக்கடியாகும்.

கிழக்கில் ஏற்பட்டுள்ள நிலைமைக்கு பதிலடியாக, புலிகள் ஒரு தலைப்பட்டசமான உரிமை கோராத தாக்குதல்களை நடத்தினர். இதன் போது இராணுவம் மீதான வன்முறைகள் அனைத்தும் இராணுவ வெற்றியாக இருந்தது. ஆனால் அவர்கள் சாதிக்க நினைத்ததில் படுதோல்வி பெற்றனர். கருணா விவகாரத்தை அரசே வலிந்து முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என்பதே தாக்குதலின் மைய நோக்கம். இதனடிப்படையில் தமது சொந்த தேவை கருதி தாமே உருவாக்கிய தமது "இயல்பு நிலையைக்" குலைத்து, நிர்பந்தம் செய்யும் வகையில் இராணுவ மோதலுக்கு புலிகள் இட்டுச் சென்று வலிந்த தாக்குதலை நடத்தினர். ஆனால் இராணுவம் படிப்படியாக இனம் காணப்பட்டு பொறுக்கியெடுத்த அழித்தொழிப்பின் மூலம் நிலைமையை கட்டுப்படுத்தினர். இதனால் கிழக்கில் புலிகள் கொண்டிருந்த பகுதியளவு அதிகாரத்தைக் கூட இழக்கும் நிலை உருவானது. இதில் இருந்து மீள, மீண்டும் பேச்சுவார்த்தை என்ற அரசியல் நாடகம் புலிக்கு அவசியமாக இருந்தது. புலிகள் கிழக்கில் தப்பிப்பிழைக்கவே, அண்மைய சுவிஸ் பேச்சுவார்த்தையை நடத்தினர். அதாவது பேச்சுவார்த்தை மூலம் கருணா விவகாரத்தை இல்லாததாக்க முனைகின்றனர்.

எப்படி கருணா தரப்பை இல்லாததாக்குவது. நான் உன்னைக் கொல்லவில்லை, நீ என்னைக் கொல்லாதே. ஆனால் கொல்லும் உரிமையை நீ எனக்கு தா அல்லது நீயே எடு? எதை நீ தெரிவு செய்யப் போகின்றாய். இது தான் பேச்சுவார்த்தை. புலிகள் தேர்ந்தெடுத்த ஒரு பேச்சுவார்த்தை. மீண்டும் வேதாளம் முருங்கை மரத்தில் ஏறிய கதை தான். மீண்டும் தாம் குலைத்த தமது "இயல்வாழ்வு" பற்றி கதையளக்கின்றனர். அரசியல் வேலை செய்வது பற்றி பினாற்றுகின்றனர். யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை அமுல்படுத்துவது பற்றி புலிகள் கூறுகின்றனர். இதை திருத்தி செம்மைப்படுத்தியுள்ளதாக பேரினவாத அரசு கூறுகின்றது. மக்களுக்காக சேவை செய்வதில் போட்டியிட்டு பேசும் இருதரப்பு பேச்சுவார்த்தையை பார்த்தால், மக்கள் மேலான அக்கறையை இட்டு மூக்கில் தான் கைவைக்க வேண்டும். வெளியிடும் செய்திகள், அறிக்கைகள், போட்டி வாதங்கள் அனைத்தும் மக்களுக்கானதாக கூறி, மலிவானதும் இழிவானதுமான மக்கள் விரோத பிரச்சாரங்களைச் செய்கின்றனர்.

அமைதி சமாதானம் என்ற முந்தைய ஒப்பந்தத்தை அமுல்படுத்தினால், தாம் சுத்தமான சைவ ஜனநாயகவாதிகளாக மாறிவிடுவதாக கூறுகின்றனர். ஆகாகா வன்முறையா, அது என்ன? என்று கேட்டுவிடுவார்களோ என்ற திடீர் அச்சம் தான் மக்களுக்கு ஏற்படுகின்றது. பேச்சுவார்த்தையே கொல்வதற்குத் தான். மக்களை சூறையாடி வாழ்வதற்குத்தான். தமிழ் மக்களை சூறையாடுவதையே ரசிக்கும் பேரினவாதம், இதை செய்யுங்கள் என்று கூறி ஒப்புதல் அளிக்கின்றது. இதனால் பேச்சுவார்த்தை தமக்குத்தான் வெற்றி என்று இரண்டு தரப்பும் பிரகடனம் செய்கின்றனர்.

ஆனால் பேச்சுவார்த்தை முடிந்த பின், என்ன கதைத்தார்கள் என்றால் மக்களுக்கு எதுவும் தெரிய மறுக்கின்றது. மக்களாகிய எங்களுக்காக இரண்டு தரப்பும் என்ன கதைத்தார்கள் என்றால், அதை யாரும் சொல்லத் தயாராகவே இல்லை. மக்களுக்காக கதைத்தால் அல்லவா சொல்வதற்கு. கதைத்தது என்ன? அவர்களுக்குள்ளான கொலை கொள்ளை பற்றி சர்ச்சைகளையே, இரண்டு பகுதியும் சேர்ந்தும் முரண்பட்டும் பேசிக் கொண்டனர். இதனால் மக்களுக்காக நாம் எம் தரப்பு சார்பாக என்ன கதைத்தோம் என்று எதையும் சொல்ல முடிவதில்லை. மக்களுக்கு இவர்கள் வழங்கப் போவது, சொந்த சவக்குழிக்கு வழிகாட்டுவதைத் தாண்டி எதுவுமல்ல.

உண்மையில் பேச்சுவார்த்தையில் பேரினவாத அரசு தனது பேரினவாத நலன்களை முதன்மைப்படுத்த, குறுந்தேசியப் புலிகள் தமது சொந்த குழுவாத நலனகளை முதன்மைப்படுத்தி நடத்திய அரசியல் நாடகம் தான் ஜெனிவா பேச்சுவார்த்தை.

மக்களின் நலன்களை தமது கால்களால் உதைத்தபடி இந்தக் கோவேறு கழுதைகள் நடத்திய இந்தப் பேச்சுவார்த்தைகள் குழந்தைத்தனமானது. குழந்தைகள் தமக்கு இடையில் நீ அதைச் செய்தாய், இதைச் செய்தாய் என்று மறுத்து குற்றம் சாட்டி சிணுங்கி அழும் குழந்தைகளின் தன்மைக்கு ஒத்ததாகவே அமைந்தது. உண்மைக்கு எதார்த்தத்துக்கு புறம்பான சாரத்தை அடிப்படையாக கொண்டு, பேச்சுவார்த்தை என்ற அரசியல் நாடகம் அரங்கேறியது. எதார்த்த உண்மைகள் எல்லாவற்றையும், தமது சொந்தக் காலுக்கு கீழ் போட்டு மிதித்தபடி விதண்டாவாதம் செய்தனர். அறிவு நாணயம் எதுவுமற்ற வக்கிரத்தையும் பொய்யையும் புரட்டையுமே அரங்கேற்றினர். இந்த பேச்சுவார்த்தை தமிழ் மக்களின் நலன் சார்ந்து, ஒரு நாளும் நடக்கப் போவதில்லை.

தமது சொந்த குழு நலன் சார்ந்த வக்கிரத்தை அடைய, பேச்சுவார்த்தையை விட்டே போய்விடுவேன் என்ற மிரட்டி அடிபணியவைத்த வக்கிரமும் அங்கு அரங்கேறியது. குழந்தைத்தனமாக சண்டை, இறுதியில் நான் என்ன செய்தாலும் நீ இனி எனக்கு அடிக்காதே, நான் உனக்கு அடிக்க மாட்டேன் என்ற கூறி, மீண்டும் விளையாடச் செல்லும் குழந்தைகள் போல் கலைந்து செல்லுகின்றனர். முடிவு என்ன. நாம் கூடி கருணா தரப்பை கொல்லுவது அல்லது நான் கொல்லும் சுதந்திர உரிமையில் தலையிடாது இருக்கும் படி கூறி அரசியல் நாடகம் கலைகின்றது. அதாவது பிரேமதாச காலத்தில் எப்படி நாங்கள் ஒன்று கூடி வீதிவிதியாக பிணமாக்கி நாம் கொல்ல எண்ணியவர்களை அழித்தோமோ, அதையே இன்று நாம் மறுபடியும் செய்வதை அடிப்படையாக கொண்டே இப் பேச்சு வார்த்தை நடந்தது. பலியீடு இன்றி, இது வெற்றி பெற்றதாக இவர்கள் மார்பு தட்டமுடியாது.
நாடகம் முடிந்துவிட்டது. மக்கள் கண்களை கசக்கியபடி, நாம் என்ன பார்த்தோம் என்று நினைவுபடுத்த முனைகின்றனர். முடியவில்லை. வழமை போல் நாடகம் நினைவில்லாது மங்கி மறைந்து போகின்றது. இந்த நாடகத்துக்கு எதிராக, சுவிஸ்சில் "ஜனநாயகம்" என்று மற்றொரு நாடகம் போடப்பட்டது.

"ஜனநாயக" என்ற நாடகத்தின் கதாநாயகர்கள் படுபிற்போக்கான ஜனநாயக விரோதிகள். நுணுங்கிப் பார்த்தால் பலர் புலிகளைப் போல் சமூக விரோதிகள். கடந்தகால ஜனநாயக விரோதத்தையே செயலில் காட்டியவர்கள். முன்னாள் கொலையாளிகள் அல்லது அதை ஆதரித்தவர்கள். அதாவது இன்றைய புலிப்பினாமிகள் போல் தலையாட்டி வக்கரித்தவர்கள். இன்றும் அந்த ஜனநாயக விரோத அமைப்புகளின் உறுப்பினர்கள் அல்லது தீவீர ஆதரவாளர்கள். இவர்களை நம்பி சில அப்பாவிகள், "ஜனநாயகவாதிகளின்" கொடிகளைப் பிடித்து பின்னால் செல்லுகின்றனர். நல்ல நாடகம். நாடகத்தின் மூலம் சொல்லும் செய்தி என்ன? தமிழ் மக்களை காப்பற்ற ஏகாதிபத்தியத்தை கூவி அழைக்கின்றனர். விபச்சார தரகுத் தொழிலின் மேன்மையே இதன் சாரம்.

1986க்கு முன்னம் அதிக கொலைகளைச் செய்த ஒரு இயக்கத்தின் (புளாட்) சார்பில் இந்த நாடகம் நடந்தது. இதில் நடித்தோரில் கணிசமானோர் அவர்களே. அவர்கள் தான் தமிழ் மக்களின் "ஜனநாயகத்தைக்" கோருகின்றனர். நம்புகள் மக்களுக்கு ஜனநாயகம் இவர்களால் கிடைக்கும் என்று! இதற்கு ரி.பி;.சி ராம்ராஜ் காதநாயகனாக பத்திரமேற்ற நிலையில், "ஜனநாயக" நாடகம் மேடையேற்றப்பட்டது. ஆனால் இந்த நாடகத்தின் இடையில், ஜனநாயகத்தின் எதிரியாக கருதி சுவிஸ் பொலிஸ் கதாநாயகனையே கைது செய்தது. கைது பற்றி மௌனங்கள், புலி சதி பற்றி புலம்பல்கள், மேற்கு நாடுகளின் ஜனநாயகம் பற்றிய மௌனவிரதங்கள் எல்லாம் இந்த நாடகத்தின் முடிவில் "ஜனநாயகவாதிகளால்" அரங்கேற்றப்படுகின்றது. புலி அரசு பேச்சு வார்த்தை எப்படி மக்கள் முன் சூக்குமமாக உள்ளதோ, அதேநிலை தான் இந்த "ஜனநாயக" முகமுடிகளின் பின்பாக நிகழ்ந்துள்ளது. மக்கள் மந்தைகள் தான். இதைத்தான் இவர்கள் எல்லோரும் சேர்ந்தாற் போல் சொல்லுகின்றனர். தாம் மக்களுக்கு எதிராக இருப்பதால், அனைத்தும் தமிழ் மக்களுக்கு இருட்டடிப்பு.

இப்படி சுவிஸ் சிறையில் கம்பி எண்ணும் ஜனநாயகத்தின் கதாநாயகனின் முன்னாள் தொழில் என்ன? ஈ.என்.டி.எல்.எவ் க்கு முன்னம் என்ன செய்தான்? இதை மர்மமாக விட்டுவிடவே "ஜனநாயகவாதிகள்" விரும்புகின்றனர்.
புலிக்கு நிகராகவே கொலை, கொள்ளை, போதைவஸ்து கடத்தல் வியாபாரிகள் தியாகிகள் எல்லோரும் சேர்ந்து, இன்று "ஜனநாயகத்தின்" பெயரில் கூத்து நடத்துகின்றனர். மக்கள் என்கின்றனர். புலி அரசு பேச்சுவார்த்தை என்ற நாடகத்தில் புலியை அம்பலப்படுத்த, ஜனநாயகத்தின் பெயரில் நடத்திய கூத்தின் போதே ரி.பி;.சி ராம்ராஜ் கைது செய்யப்பட்டார். இந்த தீடிர் "ஜனநாயகவாதியின்" குற்றம் என்ன என்பது மக்களுக்கு இருட்டடிப்பு செய்யும் நிலையில், இந்த அன்னக் காவடி முன்பும் பாரிசில் "ஜனநாயகத்தை" பேசியதை பலர் வசதியாக மறந்துவிட்டனர். முன்பும் பாரிசில் "ஜனநாயகத்தை" நாடகமாக போட்டவன் தான் இவன். கொலை கொள்ளைக்காகவே இந்தியக் கைக்கூலியாகி புளாட்டில் இருந்து பிரிந்து சென்ற ஈ.என்.டி.எல்.எப் இயக்கம், புளாட் "உட்கொலை" பற்றியும் ~~ஜனநாயகம்" பற்றியும் பேசியது. அன்று அந்த ஜனநாயகத்தை பற்றி பேசியபோது, இந்த ரி.பி.சி ராம்ராஜ் முக்கியமானவர்களில் ஒருவர்.
அன்று இந்த ஜனநாயகத்தைப் பேச இந்தியாவில் இருந்த டேவிற் ஜயாவைக் கூட இறக்குமதி செய்தனர். புளாட்டுக்கு எதிராக அவரைக் கொண்டு பாரிசில் "ஜனநாயக" பிரச்சாரம் செய்தனர். இந்த "ஜனநாயகம்" எவ்வளவு மோசடியானது என்பதை, பின்பு இவர்கள் இந்தியக் கைக்கூலியாக தமிழ் மக்களுக்கு எதிராக நடத்திய மிலேச்சத்தனத்தில் அம்பலமானது. இந்த டேவிற் ஐயா "ஜனநாயகம்" பேச வந்தபோது கூட, அவரை சும்மா இவர்கள் இறக்கவில்லை. அவருக்குத் தெரியாமல் அவரை ஏமாற்றி அவரூடாகவே போதைவஸ்துகளை கடத்தி வந்தவர்கள் தான், அன்றைய "ஜனநாயகவாதிகள்".

பிராஞ்சுப் பொலிசார் இவர்கள் தங்கியிருந்த வீட்டை சோதனையிட்ட போதும் கூட, பொலிஸ் நாய்கள் போதைவஸ்து இருந்த இடத்தை கண்டு பிடிக்காததால் தான் இவர்கள் தப்பினார்கள். இதனால் இன்று ஜனநாயகவாதிகளாக முடிந்தது. அத்துடன் அன்று பொலிஸ் சோதனையிட்ட போது ராம்ராஜ் அங்கு இருக்கவில்லை என்பதால், அன்றே கம்பி எண்ணவில்லை. இன்று சொல்லுகின்றார்கள் புலியின் சதியில் கைதாம். நம்புங்கள் முட்டாள்களே.

இவர்கள் இன்று தாம் கற்பிக்கும் ஒரு மக்கள் விரோத "ஜனநாயகத்துக்கு" தலைமை தாங்குகின்றனர். அதை மக்களுக்கானது என்கின்றனர். "ஜனநாயகத்தின்" பெயரில் நம்பி வந்தவர்களுக்கே தெரியாது முதுகில் குத்தி மோசடியில் ஈடுபட்டவர்கள் தான் இவர்கள். இவர்கள் மக்களுக்கு எதிரான சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டவர்கள், இன்று புலிகளிடம் இருந்து மட்டும், தாம் விரும்பும் "ஜனநாயகத்தை" மீட்க போவதாக கூறி ஆர்ப்பாட்டம் செய்கின்றனர்.

மிக நுணுங்கி கிட்டச் சென்று பார்த்தால், இவர்கள் கடந்த காலத்தில் ஜனநாயகத்துக்காக போராட்டம் நடத்தியவர்களை கொன்றவர்கள் அல்லது கொன்றதை நியாயப்படுத்தியவர்கள். அவர்களை சித்திரவதை முகாங்களில் இட்டுச் சிதைத்தவர்கள். புதியதோர் உலகம் என்ற கேசவனின் நாவல், இவர்களைப் பற்றிய மிகச் சிறந்த ஒரு ஆவணம்.

பெரும்பாலானவர்கள் அந்த கொலைகார இயக்கத்தில் கடைசி வரை இருந்தவர்கள் தான். இன்றும் சில ஜனநாயக வேஷதாரிகள், அந்த மக்கள் விரோத கொலைகார இயக்கத்தின் உறுப்பினர்கள் கூட. இவர்களா மக்களின் மீட்பாளர்கள்!. இவர்கள் என்ன செய்கின்றார்கள் என்றால், புலிகளின் மனிதவிரோதச் செயலை தமக்கு சார்பாக பயன்படுத்தி மக்களை ஏமாற்றுகின்றனர்.

புலிகள் அரச நடத்திய பேச்சுவார்த்தை மக்களுக்கே விரோதமானது. அது ஜனநாயகத்தை குழிதோண்டி புதைப்பதாக இருக்கின்றது. இதைச் சொல்லிக் கொண்டு ஏகாதிபத்தியத்துக்கு சேவை செய்யும் "ஜனநாயகத்தை" கோசம் போட்டு கோருகின்றனர். ஏகாதிபத்திய தலையீட்டை விட்டால், இவர்களின் "ஜனநாயகத்துக்கு" அதோ கதிதான். பிரிட்டிஸ் பாராளுமன்றத்தில் நக்கித் திரிவதைத் தவிர வேறு "ஜனநாயகம்" இவர்களிடம் கிடையாது.
பேச்சுவார்த்தை மேடையிலும் சரி, அதைச்சுற்றி நடந்த "ஜனநாயக" போராட்டத்திலும் சரி, மக்களின் நலன்கள் புதைக்கப்பட்டன. சில்லறைத்தனமான வாதப் பிரதிவாதங்கள் மூலமும், ஏகாதிபத்திய நிபந்தனைகளையே கோசமாக்கி, முழு சமூகத்தையும் குதர்க்கமான வக்கிரத்துக்குள் புதைத்துவிடுகின்றனர். இதுதான் அண்மையில் ஜெனிவாவில் நடந்து முடிந்தது.

No comments: