மனித உரிமைக்கான கண்காணிப்பு அமைப்பின் அறிக்கையும், அதன் மீதான எதிர்வினைகள் மீதும்
பி.இரயாகரன்
01.04.2006
மனித உரிமைக்கான கண்காணிப்பு அமைப்பு (Human rights watch) கனடா மற்றும் இங்கிலாந்தை அடிப்படையாக கொண்டு புலம்பெயர் தமிழர்கள் மீதான புலிகளின் நிதி அறிவீடு பற்றிய ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டது. ஒரு 'இறுதி யுத்தத்திற்கு" நிதியைக் கோரி புலிகள் நடத்தும் நிதி வேட்டையை குறிப்பாக்கி, அது எப்படி மனிதவிரோத தன்மையுடன் சூறையாடப்படுகின்றது என்பதை அறிக்கை அம்பலப்படுத்த முனைகின்றது. இயல்பாகவே இந்த அறிக்கை புலியெதிர்ப்பு அணியின் ஆதரவையும், புலிகளின் எதிர்ப்பையும் அடிப்படையாக கொண்ட அவதூறும் போற்றுதலுமாக, இதன் மீது ஒரு அரசியல் நாடகமே நிகழ்த்தப்படுகின்றது.
இந்த அறிக்கையின் உள்ளடக்கம் புலிகளின் அன்றாட அரசியல் வன்முறை நடத்தையை அடிப்படையாக கொண்டு, ஒரு தலைப்பட்சமாக புலியெதிர்ப்பு அணியின் கருத்துக்களால் விடையம் திரிக்கப்பட்டுள்ளது. புலியெதிர்ப்பு கருத்தையும்;, புலியின் வன்முறையையும் ஒருங்கிணைத்து வெளிவந்த இந்த அறிக்கை, தமிழ் மக்களின் இயல்பான கருத்தை பிரதிபலிக்கவில்லை. மனித உரிமைக்கான கண்காணிப்புக் குழுவின் அறிக்கை மக்களின் உணர்வுக்கு எதிரானதாக இருப்பதுடன், மக்களின் கண்ணோட்டமே சிலரின் நலன் சார்ந்து குறுகிய எல்லைக்குள் திரிக்கப்படுகின்றது.
மனித உரிமையும் சரி, அதை கண்காணிக்கும் உள்ளடக்கத்தையும் சரி, இந்த அறிக்கையை தயாரித்தவர்கள் கவனத்தில் எடுத்துக் கொள்ளவேயில்லை. இந்த அறிக்கை ஆரம்பம் முதல் இறுதிவரை புலியெதிர்ப்பு அணியின் கருத்துகளால் புணரப்பட்டுள்ளது.
இந்த அறிக்கைக்கு தமிழ்செல்வன் உட்பட நிதர்சனம் டொட் கொம் வரை, அவதூறுடன் கூடிய கடுமையான எதிhப்பை வெளியிட்டுள்ளனர். தாங்கள் மக்களிடம் இது போன்ற நடவடிக்கை எதிலும் ஈடுபடுவதில்லை என்று கூறிவிடவும் முனைகின்றனர். ஏன் புலிகள் நிதி சேகரிப்பில் கூட ஈடுபடுவதில்லை என்றும் கூற முனைகின்றனர்.
இதை யாருக்கு, ஏன் சொல்லுகின்றார் என்பதில் கூட அவர்கள் அக்கறையற்றுள்ளனர். தமிழ் மக்கள் ஒவ்வொருவருக்கும் நன்கு தெரிந்த புலியின் அடாத்தான நிதி சேகரிக்கும் முறையை, அவர்களின் சொந்த மாபியா அணுகுமுறையை, ஏன் எதற்காக யாருக்கு மறைக்க முனைகின்றனர். புலிகள் எதை எப்படி அணுகினாலும், அங்கு அதில் விரும்பிய இயல்பான எந்தத் தன்மையும் கிடையாது. அச்சுறுத்தலுக்குள்ளான ஒரு நிலையில் வைத்துத் தான், மக்களை பயமுறுத்தி காரியம் சாதிக்கின்றனர். பொதுவான அணுகுமுறையே மாபியாத்தனமான உள்ளடகத்தில், தொடரும் படுகொலைகளை முன்னிலைப்படுத்தி, அது உனக்கும் பொருந்தும் என்று காட்டியே சகலவற்றையும் ஒரு மிரட்டும் தொனியில் முன்னிறுத்தி மக்களை அணுகுகின்றனர்.
மக்கள் நிதியை வழங்கினாலும் சரி, கருத்துரைத்தாலும் சரி இது தான் நிலைமை. மக்கள் 1983 க்கு முன் ஏன் 1985க்கு முன் கருத்துரைத்தது போல், எதன் மீதும் கருத்துக் கூறுவதில்லை. சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தாங்களாகவே நிதியை வழங்கியது போல் (இதையும் நயவஞ்சகமாக புலிகள் சூறையாடிவிட்டனர் என்பது வேறு.), புலிகளின் பணசேகரிப்பு இருப்பதில்லை. புலிகள் தாம் விரும்பும் ஒரு தொகையைக் கறப்பதே, அவர்களின் வாடிக்கையான மாபியாத்தனமாகும். புலிகளின் நிதி திரட்டல் பற்றி ஆதாரங்களை சமர்பிக்கக் கூடிய வகையில், புலிகளின் அறிக்கைகள் மற்றும் அவர்களின் கோரிக்கை உள்ளடங்கிய ஆதாரங்கள் இருந்தும், அதை மனித உரிமைக்கான கண்காணிப்பு அமைப்பு முன்வைக்கவில்லை. ஆனாலும் அனைத்தும் தமிழ்மக்களும் நன்கு தெரிந்ததும், வாழ்வுடன் தொடர்பு கொண்டு அன்றாடம் போராட வேண்டிய அளவில் பரிச்சயமான ஒன்றாகவே புலி மாபியாத்தனம் உள்ளது.
மேற்கில் பணம் கொடுப்பவன் எப்படி வாழ்கின்றான் என்பதையிட்டு, வாங்குபவனுக்கு எந்த சமூக அக்கறையும் கிடையாது. பணம் சேகரிக்கும் பெரும்பாலானோர் தாம் பணம் கொடுப்பதில்லை. இதில் சிலர் உழைப்பில் ஈடுபடாது, ஆடம்பரமாக காரும் வீடும் கொண்டு வாழ்பவர்கள். அவர்களின் சொந்த வாழ்க்கைக்கு எப்படி எங்கிருந்து பணம் வருகின்றது என்பதை கேள்வி கேட்பதையே துரோகமாக காட்டி, தமது சொந்த வாழ்க்கை முறையையே நியாயம் கற்பிப்பவர்கள். இதைவிட புலிக்காக பணம் திரட்டுபவர்களில் பெரும்பாலானானோர் மக்களுக்கு அறவட்டிக்கு பணம் கொடுப்பவர்கள். அதை எப்படி வாங்குவது என்று நன்கு தெரிந்து கொண்ட, மனிதத்துவத்தை நன்கு உதைக்கத் தெரிந்த சமூகவிரோதிகளாகவே சமூகத்தில் பாத்திரம் ஏற்று உள்ளவர்கள். சமூகத்தை சிதைப்தே இவர்களின் வாழ்க்கை முறையாகும். சமூகத்தின் உழைப்பைப் புடுங்குவதில், அவர்கள் ஈவிரக்கம் எதுவும் பார்ப்பதில்லை. புடுங்கிவிட்டால் சரி. இதுவே இவர்களின் இலட்சியம். பணங்கொடுத்தவனின் உளவியல், அவனின் வாழ்க்கை நிலைமை என எதிலும் அக்கறை அற்ற, அராஜகவாத மாபியாத்தனத்தால் புலம்பெயர் சமூகம் சூறையாடப்படுகின்றது. இது உண்மை. எல்லாத் தமிழ் மக்களுக்கும் நன்கு தெரிந்த, நன்கு அறிமுகமான ஒன்று. இதை யாரும் மறுக்க முடியாது. இது மக்களுக்கு தெரிந்த ஒன்றேயாகும். ஏன் பணம் சேகரிப்பவனே இதை மறுக்க முடியாது. எந்த புலியும் கூட இந்த உண்மையை இல்லை என்று நிறுவவும் முடியாது. எல்லாத் தமிழ் மக்களுக்கும் தெரிந்த ஒன்றை, சொந்த வீட்டு கதவுகளின் பின்னால் அனுபவித்து தெரிந்து கதைக்கப்படும் இந்த மாபியாத்தனத்தை, எப்படி பொய்யாலும் புரட்டாலும் மூழ்கடித்துவிட முடியும்.
மறுபக்கம் இதற்கு எதிராக மனித உரிமைக்காண கண்காணிப்பு அமைப்பு கண்டுபிடித்துள்ள சமூக அடிப்படையே தவறானது. இது தமது சொந்த நோக்கத்துக்கு ஏற்ப திரிக்கப்படுகின்றது. தமிழ் மக்கள் புலிக்கு எதிராக, ஏன் இயல்பாக விரும்பிப் பணம் கொடுக்க மறுக்கின்றனர். இந்த காரணத்தைத் தான், மனித உரிமைக்கான கண்காணிப்பு குழு தனது குறுகிய சர்வதேச நோக்கத்துக்கு இசைவாக திரிக்கின்றனர். இவர்கள் எப்படித் தான் மக்களுக்கு மனித உரிமை ஒன்றை நேர்மையாக எடுத்துக் கூறமுடியும், எடுத்துக் காட்டமுடியும்.
தமிழ் மக்களுக்கும் புலிக்கும் என்னதான் பிரச்சனை. புலியெதிர்ப்பு அணியின் பூதக்கண்ணாடியைக் கொண்டு இதை தேடவே முடியாது. ஆனால் மனித உரிமைக்கான கண்காணிப்பு அமைப்பு அந்த பூதக்கண்ணாடியைக் கொண்டே அறிக்கையை வெளியிட்டுள்ளனர். மக்கள், மக்களின் மனநிலையை திரித்துவிடுவதையே, இந்த அறிக்கை மனித உரிமை என்கின்றது. ஒரு அப்பட்டமான மக்கள் விரோத உள்ளடக்கமாகும்.
இது புலி தமிழ் மக்கள் தாம் விரும்பி தமக்கு பணம் தருவதாக கூறுவது போல், இந்த அறிக்கை பணம் கொடுக்க விரும்பாத மக்களின் கருத்தை குறுகிய உள் நோக்கில் திரித்து விடுகின்றனர். மக்களின் பெயரில் மனித உரிமை என்பதும், தேசியம் என்பது இங்கு அரங்கேறுகின்றது.
இப்படித் தான் உலகில் மனித உரிமைகள் அங்குமிங்குமாக பந்தாடப்படுகின்றது. தமிழ் மக்கள் புலிக்கு நிதியை வழங்க மறுப்பது ஏன்? இவர்கள் கண்டுபிடித்த காரணம் சிறுவர்களை படையில் சேர்ப்பதும், கொலைகள் செய்வதும் தான் என்று கூறுகின்றனர். விதிவிலக்காக மட்டும் பக்கம் 37 இல் "ஏனையவர்கள் கொள்கை அடிப்படையில் அவர்களுக்கு நிதி வழங்க மறுக்கின்றனர்" என்கின்றனர். அப்படி அந்த கொள்கைதான் என்ன என்பதில் மட்டும் மௌனம் சாதிக்கின்றனர். கொள்கை காரணமானது என்ற மனித உரிமைக்கான இந்த அமைப்பின் கண்டுபிடிப்பும் கூட ஆச்சரியமானது தான்.
சிறுவர்களை படைக்குச் சேர்த்தல், கொலைகளை செய்தல் போன்றவற்றையே மனிதவுரிமை மீறலாக காட்டி அறிக்கை செய்வது என்பது மிகவும் தேர்ந்தெடுத்த அரசியல் உள்நோக்கம் கொண்டவை. இந்த சிறுவர்படையை புலிகள் உருவாக்க முன்பே, மனிதவுரிமை மீறல் இருக்கவில்லையா! இதேபோல் கொலைகளை செய்யமுன்னம் மனிதவுரிமை மீறல் இருக்கவில்லையா! இந்த இந்த இரண்டு எடுகோளுமே தவறானது. மனிதவுரிமை மீறல் இதைக் கடந்து காணப்படுகின்றது. அது சமூக அமைப்பிலேயே காணப்படுகின்றது. புலியின் நிதி சேகரிப்பின் போது, மக்கள் புலிக்கு பணம் கொடுக்க மறுப்பது என்பது, இந்த இரண்டு எடுகோளுக்கு வெளியில் இருந்து எழுகின்றது. இந்த இரண்டையும் புலிகள் செய்கின்றார்கள் என்றால் ஏன்? அதுவல்லவா மனித உரிமை மீறலாகும். இதைச் செய்வது அவர்களின் விருப்ப விளையாட்டல்ல. அவர்கள் ஏதோவொன்றை செய்கின்றார்கள் என்பதும், அதை மக்கள் இயல்பாக விரும்பாமையால் தான் இவைகள் புலிக்கு அவசியமாகின்றது. புலிகளுடன் இணங்கி போக முடியாத மக்களின் சுயவிருப்பற்ற தன்மைதான், புலிகளின் இந்த மக்கள் விரோத போக்குக்கு அடிப்படைக் காரணமாகும்.
மக்கள் விரும்புவது என்ன? புலிகள் விரும்புவது என்ன? இந்த முணை;பாடுதான் மனிதவுரிமை மீறலுக்கான சமூக அடிப்படையாகும்;. மக்கள் விரும்பும் சமூக பொருளாதார அரசியல் என்ன? புலிகள் விரும்பும் சமுக பொருளாதார அரசியல் என்ன? இதில் உள்ள முரண்பாடு தான், மக்களுக்கு எதிரான மனிதவுரிமை மீறலை தூண்டுகின்றது. இது மனிதவுரிமைக்கான அமைப்புக்கு தெரியவில்லை என்பது இங்கு ஆச்சரியமானது அல்ல, மாறாக இதன் பின்னால் அரசியல் நோக்கம் உள்ளது. மக்களின் சமூக விருப்புக்கு எதிரானவற்றை மனிதவுரிமை மீறலாக, இந்த மனிதவுரிமைக்கான கண்காணிப்புக் குழு அங்கீகரிப்பதில்லை. இதனால் தான் இந்த உள்ளடகத்தை திரித்துக் காட்டுகின்றனர்.
ஒரு சமூகம் தனக்கு எதிரான சமூக விரோதிகளுக்கு எதிராக போராடும் போது, அங்கு சமூகமே ஆயுதம் ஏந்துகின்றது. அதில் குழந்தைகள் உட்பட மொத்த சமூகமே ஆயுதபாணியாகின்றது. இங்கு சமூகத்துக்கு எதிரான சமூகவிரோத தனிமனித நலன்களை உயர்த்தும் சமூக விரோதிகள் ஒழிக்கப்படுவர். இங்கு யாரும் இதை மனித உரிமை மீறலாக கூறமுடியாது. மனித வாழ்வு சமூக விரோத தனிமனித நலனுக்கு எதிரான போராட்டமின்றி வாழ்ந்ததில்லை. சமூகத்துக்கு எதிராக, சமூக விரோத தனிமனிதர்கள் சமூகத்தை ஒடுக்கி வாழ்வதை, மனித உரிமையாக மக்கள் ஏற்றுக்கொள்வதில்லை. இந்த சமூக பொருளாதார அரசியல் உள்ளடக்கத்தை, மனித உரிமைக்கான கண்காணிப்புக் குழு ஏற்றுக் கொள்வதில்லை. மக்கள் விரோத சமூக அமைப்பு சார்ந்த, தனிமனித நலனை உள்ளடக்கிய அரசியல் மூலம் மக்களின் சமூகவுரிமையை, மனிதவுரிமைக்கான கண்காணிப்பு குழு மறுதலிக்கின்றது.
புலிகள் போன்ற தனிமனித நலன் சார்ந்த சமூக விரோத அரசியல் கட்சிகள் குழுக்கள், மக்களின் சமூக பொருளாதார வாழ்வை அழிப்பதை மனிதவுரிமை மீறலாக மனித உரிமைக்கான கண்காணிப்பு குழு அங்கீகரிப்பதில்லை. மாறாக மனிதவுரிமைக்கான கண்காணிப்பு குழு எதைக் கண்டிக்கின்றது என்றால், இதை அமுல்படுத்த கையாளும் சில வழிமுறைகளை மட்டுமே தான். இதை அடிப்படையாக கொண்டு, அதை புலிகளின் மனிதவுரிமை மீறலாக காட்டுவதே இந்த அறிக்கையாகும். இது திட்டமிட்ட வகையில் உலகமயமாதலுக்கு ஏற்புடைய அரசியலாகும். இதனால் தான் புலியெதிர்ப்பு அணியின் மனிதவுரிமை மீறல் மக்கள் விரோதக் கோட்பாடுகளை பாதுகாத்தபடி, மேல் மட்டத்தில் உள்ள புலியின் மனிதவுரிமை மீறல்களை பயன்படுத்தி மற்றொரு மனித உரிமைக்கு விரோதமான அறிக்கையை தொகுக்கின்றனர். உண்மையில் இதைச் செய்வதன் மூலம், ஏகாதிபத்திய உலக நோக்கத்தை திருப்தி செய்யக் கூடிய ஒரு கும்பலின் தேவைக்கு ஏற்ற ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.
புலிக்கு பணம் கொடுக்க மறுப்பவனும், கொடுக்க நிர்ப்பந்திக்கப்பட்டு கொடுப்பவனும் கூட, புலிக்கு எதிராக தான் கொண்டுள்ள நிலைப்பாடு மனிதவுரிமைக்கான கண்காணிப்புக் குழு கூறும் காரணங்களினால் அல்ல. இந்த உண்மையை மனிதவுரிமைக்கான கண்காணிப்புக் குழுவின் அறிக்கை நிராகரிப்பதன் மூலம் அல்லது திரிப்பதன் மூலம், இந்த அறிக்கை அரசியல் ரீதியாக ஏகாதிபத்திய நோக்கத்துக்கு சார்பானதாகவே அமைந்து விடுகின்றது.
பணம் கொடுப்பவர்களில் 90 சதவீதமானவர்கள் பணம் கொடுக்கவிரும்பியதில்லை. நிர்ப்பந்தம் காரணமாக, வேண்டா வெறுப்பாகவே கொடுக்கின்றனர் என்றால், ஏன் கொடுக்கவிரும்பவில்லை. இதை போல் விரும்பிக் கொடுக்கும் பத்து சதவீதம் பேர் கூட, தாம் விரும்பும் ஒரு தொகையை கொடுப்பதில்லை. மாறாக விரும்பாத ஒரு தொகையை விரும்பமின்றியே நிர்ப்பந்தமாகவே கொடுக்கின்றனர். விரும்பிக் கொடுக்க முன்பும், பின்பும் என இரு தளத்திலும், விரும்பிக் கொடுப்பவர்கள் முரண்பாடு இன்றி பணத்தைக் கொடுக்கவில்லை.
இதுவே அடிப்படையான உள்ளடக்கம். புலிகள் வேறு, மக்கள் வேறு என்ற இரு வௌ;வேறு துருவங்களில் சமூகம் இருப்பதால் இது இயல்பாக நிகழ்கின்றது. தமிழ்மக்களின் நலன்களை புலிகள் பிரதிபலிப்பதில்லை. இதிலும் குறிப்பாக புலம்பெயர் சமூகத்தின் அரசியல் பொருளாதார நலன்களில், புலிகள் அன்னியமாகவே நிற்கின்றனர். இதுவே புலம்பெயர் நாட்டின் நிலையென்றால், நாட்டிலும் மக்களின் சமூக பொருளாதார உறவுகளுடன் புலிகள் அன்னியமாகி ஒரு மாபியாக் கும்பலாகவே உள்ளனர். பணம் திரட்டுதலையே அரசியல் இலக்காகக் கொண்டு, மக்களை உருட்டியும் மிரட்டியும், ஏமாற்றியும், கவிட்டும் பணம் வாங்குதையே தேசியம் என்கின்றனர்.
புலிகள் மக்களின் சமூக பொருளாதார உறவுகளுடன் இணங்கி நிற்காத போக்குத்தான், மக்கள் இயல்பாக இணங்கி பணம் கொடுக்க மறுக்கும் அடிப்படையான உள்ளடக்கமாகும்;. இதை மக்கள் புரிந்து கொண்டு செயலாற்றுவதில்லை. ஆனால் பணம் கொடுக்க விரும்பாத எதிர்வினையின் பின், இதுவே காரணமாகவுள்ளது. இதனால் தான் பணம் கொடுக்க மறுக்கும் காரணம், இயல்பாக சூக்குமமாக எதிர்வினையாற்றுகின்றது. இந்த சூக்குமமான தமது சொந்த எதிர்வினை எதனால் ஏற்படுகின்றது என்பது, மக்களுக்கு தெரிந்துவிடக் கூடாது என்பதில் தான் மனிதவுரிமைக்கான கண்காணிப்பு குழு கவனமாகவே கவனத்தில் எடுத்து தனது அறிக்கையை திரித்து வெளியிடுகின்றது. மக்களின் நிலைப்பாட்டின் பின் ஒரு ஸ்தாபனப்படுத்தப்படாத ஒரு அரசியல் இருப்பதையும், அதை மக்கள் தெரிந்து கொள்வதன் மூலம் ஸ்தாபனப்படுவதை தடுப்பது அவசியமாக இருப்பதால் இதை மூடிமறைகின்றனர். மக்கள் தமது சொந்த விடுதலைக்காக தாமே போராடுவதைத் தடுக்கவே, மனிதவுரிமைக்காக ஏகாதிபத்திய தயவை நாடுவதும் மனிதவுரிமைக்காக கண்காணிப்பு குழு அறிக்கை விடுவது நிகழ்கின்றது.
இந்த உண்மையை சூக்குமமாக்கி நிற்பதால், பணம் கொடுக்க மறுப்பவன் சமூகத்தில் ஆதிக்கம் வகிக்கும் எதிர்நிலைப் போக்குகளில் இருந்து சமூக அடிப்படையற்ற எழுந்தமானமாகவே காரணங்களை கண்டுபிடிக்கின்றான். அதைக் கொண்டு மறுக்கின்றான். ஆனால் பெரும்பான்மை மக்கள் காரணத்தைக் கண்டுபிடிக்க முடியாமையால், பணத்தைக் கொடுக்க நிர்பந்திக்கப்படுகின்றனர்.
மனிதவுரிமை என்பதை மேலேழுந்தவாரியான காரணங்களை வைத்து விளக்குவது, மக்களின் அடிப்படையான மனிதவுரிமை மீறலையே மறுக்கின்றது. அதை அங்கீகரித்துச் செல்வதையே கோருகின்றது. இதையே மனிதவுரிமைக்கான கண்காணிப்பு குழு செய்ய முனைகின்றது.
தமிழ் அரங்கம்
Saturday, April 1, 2006
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment