தமிழ் அரங்கம்

Wednesday, April 5, 2006

உலகமயமாதல் (பகுதி 2)

கடனும் வட்டியும் இன்றி, உலகமயமாதல் ஒரு கணம் கூட உயிர் வாழ முடியாது

பி.இரயாகரன் (பகுதி 2)
05.04.2006

லெனின் ஏகாதிபத்தியம் முதலாளித்துவத்தின் உச்சகட்டம் என்றார். அவர் தனது மிகச் சிறந்த நடைமுறை சார்ந்த ஆய்வுரையில் "பழைய முதலாளித்துவத்திற்கு இருபதாம் நூற்றாண்டு திருப்பு முனையாக அமையும். பொதுவான மூலதனத்தின் ஆதிக்கத்திலிருந்து புதிய நிதி மூலதனத்தின் ஆதிக்கத்திற்கு அது மாறும்" என தெளிவாக எடுத்துக் காட்டுகின்றார். இன்றைய காலத்துக்கு மிகவும் நுட்பமாகவும் சிறப்பாகவும் பொருந்தும் இந்த உண்மை, இன்று இதுவே எதார்த்தத்தில் முதிர்வடைந்து வருகின்றது. நிதி மூலதனத்தின் ஆதிக்கம் உலகம் தழுவியதாக இன்று மாறிவிட்டது. எங்கும் எதிலும் நிதி மூலதனத்தின் தலையீடின்றி உலகமே இயங்க மறுக்கின்றது.

நிதி மூலதனம் பல்துறை சார்ந்த தலையீட்டை சமூகம் மீது நடத்துகின்றது. இதில் கடனும் வட்டியும் முக்கியமான ஒர் அம்சமாகிவிட்டது. தேசங்களின் அழிவை துரிதமாக்கவே, இந்தக் கடனை திட்டமிட்டு உருவாக்குகின்றனர். தேசங்களின் தனித்துவமான வாழ்வின், சமூக ஆதாரங்களையே இது அழித்தொழிக்கின்றது. இதன் அடிப்படையில் நிதி மூலதனத்தின் சுதந்திரமான செயல்பாட்டை ஒழுங்குபடுத்தவே, பலவேறு சர்வதேச அமைப்புகள் சட்டதிட்டங்கள் திட்டமிட்டு உருவாக்கப்படுகின்றது. இவை எவையும் சுதந்திரமானதாக இயல்பாக உருவானவையல்ல.

சுதந்திரமான சூறையாடலுக்கென திட்டமிட்டு உருவாக்கப்பட்ட உலக வங்கியின் உலகளாவிய அதிகாரம் ஏற்பட்ட பின்பாக, 2000 ஆண்டில் மட்டும் புதிதாக 20 கோடி பேர் வறுமைக்குள் வந்துள்ளனர். 2000 ம் ஆண்டில் மூன்றாம் உலக நாடுகளின் கடன் 252750 கோடி டொலராகியது. இதில் நீண்ட மற்றும் இடைக்காலக் கடன் 206100 கோடி டொலராகியது. இந்தக் கடனில் 152690 கோடி டொலர் தேசிய அரசுகளின் பொறுப்பாக இருக்க, 53420 கோடி டொலர் தனியாருக்கு வழங்கப்பட்டு இருந்தது. 46640 கோடி டொலர் குறுகிய காலக் கடனாக வழங்கப்பட்டது. கடனின் அளவு 1980 இல் இருந்தையும் விடவும் நான்கு மடங்கு அதிகமாகியது. இந்த கடனுக்கான வட்டி மற்றும் மீள் கொடுப்பனவாக, 2000 ஆண்டு மூன்றாம் உலக நாடுகள் மேற்கு நாடுகளுக்கு கொடுத்தது 37600 கோடி டொலராகியது. இது 1980 இல் கொடுத்தைவிட நான்கு மடங்கு அதிகமாகும். மிக வறிய மற்றும் ஏழை நாடுகள் குறிப்பாக ஆபிரிக்காவில் உள்ள சில நாடுகளில் இருந்து, 2000ம் ஆண்டு அந்த மக்களுக்கு தெரியாது அவர்களிடம் புடுங்கி எடுத்துக் கொண்டது 1500 கோடி டொலராகும். மூன்றாம் உலக நாடுகளின கடனுக்கான வட்டி உள்ளிட்ட மீள் கொடுப்பனவு 1980 இல் 8870 கோடி டொலராக இருந்தது. இது 1990 இல் 16410 கோடி டொலராகவும், 2000 இல் 37670 கோடியுமாகியது.

இதுவே உலகளாவிய மூன்றாம் உலக நாடுகளின் கடன் பற்றிய ஒரு சித்திரம். எப்படி நிதி மூலம் ஏழை நாடுகள் சூறையாடப்படுகின்றது என்பதற்கு, இது ஒரு எடுத்துக் காட்டு. உலக மக்கள் தொகையில் அண்ணளவாக 80 சதவீதமானவர்கள் ஏழைநாடுகளிலேயே வாழ்கின்றனர். அவர்கள் ஒவ்வொருவரும் 2000ம் ஆண்டு பணக்கார நாட்டுக்கு கட்டிய வட்டி அண்ணளவாக 77 டொலர். அதாவது இந்தியா ரூபாவில் 3700யும், இலங்கை ரூபாவில் 8000 மாகும். அவர்கள் ஒவ்வொருவர் மீதுள்ள கடன் அண்ணளவாக 480 டொலர். இந்த வட்டியை பணக்கார நாட்டில் உள்ளவனுக்கு பகிர்ந்தளிப்பின் அண்ணளவாக அவன் பெறுவது 313 டொலர். அதாவது இந்தியா ரூபாவில் 14700யும், இலங்கை ரூபாவில் 32000 மாகும். மூன்றாம் உலகக் கடனை மேற்கில் உள்ளவனுக்கு பகிர்ந்தளிப்பின் அண்ணளவாக 2106 டொலரை பெறுவான். மேற்கில் உள்ளவனின் வாழ்வுக்கு ஏழைநாட்டவன் எப்படி அடிமையாக உள்ளான் என்பதை இது எடுத்துக் காட்டுகின்றது. பணக்கார நாடுகளுக்கு ஏழைநாட்டு மக்கள் எப்படி உழைக்கின்றனர் என்பதை இது தெளிவாக்குகின்றது. ஏழைநாடுகளின் சராசரியான கடன் அளவு, அவர்களின் வருடாந்த தேசிய வருமானத்துக்கு சமமானதாக பல நாடுகளில் உள்ளது. தேசங்களின் திவாலை நிதி மூலதனம் பிரகடனம் செய்து, அதை தனது கமக்கட்டுக்குள் இப்படித்தான் செருகி வைத்திருக்கின்றது.

இதுவே இன்று ஒரு சட்டபூர்வமான சுரண்டலாக மாறிவிட்டது. மனிதனின் சமூகத் தேவையை மறுத்து, சூக்குமமான மனிதப் படுகொலைகளை இயற்கையானதாக காட்டியே ஏகாதிபத்திங்கள் கொழுத்துவந்த வரலாற்றையே நாம் இங்கு காண்கின்றோம். 2000 ஆண்டில் மூன்றாம் உலக நாடுகளின் அன்னியக் கடனின் அளவு, அந்த நாடுகளின் தேசிய வருமானத்தில் 37.4 சதவிகிதமாகியது. இது 1980 இல் 18.2 சதவிகித மட்டுமே. இந்த நாடுகள் 2000 ஆண்டில் செய்த மொத்த ஏற்றுமதியில், கடனின் அளவு 114.3 சதவிகிதமாகியது. இது 1980 இல் 84.4 சதவிகித மட்டுமே. ஒரு புறம் கடன் தொகை அதிகரிப்பு, மறுபுறம் மூன்றாம் உலகநாடுகள் கடனுக்கான ஏற்றுமதிப் பொருட்களின் விலையை அடிமாட்டு விலைக்கு தாழ்த்தி, ஏகாதிபத்தியம் அதை வரைமுறையற்ற வகையில் பிடுங்கி நுகர்கின்றது. மூன்றாம் உலக நாடுகளின் உற்பத்தி பொருட்களின் விலையை தாழ்வான விலைக்கு இட்டுச் செல்வதன் மூலம், அதை உற்பத்தி செய்வோரின் கூலிவிகிதம் குறைக்கப்படுகின்றது. இதன் மூலம் பொருளை உற்பத்தி செய்யும் உழைப்பாளி வாங்கும்திறனை இயல்பாகவே இழக்கின்றான்;. இதனால் உற்பத்திப் பொருட்களை உற்பத்தி செய்பவன் நுகர முடியாத ஒரு நிலையில், பொருட்களை மலிவான விலையில் ஏகாதிபத்தியங்கள் அதிக நுகர்வு வெறியுடன் மூன்றாம் உலக நாடுகளையே அதிகளவில் சூறையாடுகின்றது. இதைவிட ஒவ்வொரு உழைப்பாளியும் தனது உழைப்பில் இருந்து கடனுக்கான வட்டி கட்ட வேண்டிய உலக ஒழுங்கு, சமூக நிதி ஆதாரங்கள் மீதான சமூக வெட்டுகள் இயல்பில் மக்களின் வாங்கும் திறனையே இல்லாதாக்குகின்றது. உழைக்கும் மக்கள் குறைந்து வரும் தமது குறைந்த கூலி ஒருபுறம், மறுபுறம் இந்த மலிவு உழைப்பில் இருந்து சமூக வெட்டை ஈடு செய்யவேண்டிய நெருக்கடி உருவாகின்றது. இதனால் அடிப்படை நுகர்வுக்கான பொருட்களை வாங்கமுடியாத நிலையில், நுகர்வின் அளவு குறைந்து வருகின்றது. இதை ஏகாதிபத்தியங்கள் மலிவான விலையில், மக்களின் பிணங்களின் மேலாகவே கொள்ளையிட்டு செல்லுகின்றது. வறுமை இதனால் எங்கும் எதிலும் பெருகுகின்றது. இதுவே உலகமயமாதல் ஒழுங்கில் இன்றைய (பின்)நவீன உலகமாகின்றது.

இப்படி அடாத்தான சுரண்டலுக்கும் நுகர்விற்காகவும், மூன்றாம் உலக நாடுகளின் ஏற்றுமதி பொருட்களின் உலகளாவிய சந்தை விலையை ஏகாதிபத்தியங்கள் தாம் விரும்பியவாறு கூட்டாகவே திட்டமிட்டு குறைத்தே வந்துள்ளது. சர்வதேச பேச்சுவார்த்தைகள் என்ற பெயரில் திடட்மிட்டு உருவாக்கும் ஏகாதிபத்தியங்களின் கூட்டான செயல்பாடுகள் அனைத்தும் இதையே அடிப்படையாக கொண்டது. மூன்றாம் உலக நாடுகளை எப்படி மலிவாகவும், இலகுவாகவும் சுரண்டுவது என்பதே பேச்சு வார்த்தை என்ற பெயரில் திணிக்கும் நிபந்தனைகளின் முழுச் சாரமுமாகும். உதாரணமாக 1980 க்கும் 1986 க்கும் இடையில் உற்பத்திக்கான ஆதாரப் பொருட்களின் விலை 30 சதவிகிதத்தால் வீழ்ச்சி கண்டது. இப்படி அடிமாட்டு விலையில் அதிகரித்த ஏற்றுமதியை, கடனுக்காக பெற்றுக் கொள்ளும் ஏகாதிபத்தியத்தின் சூழ்ச்சிமிக்க சூறையாடலே இன்று எங்கும் எதிலும் உலகமயமாகியுள்ளது. இன்று ஏகாதிபத்தியம் மூன்றாம் உலக நாடுகளின் ஏற்றுமதிக்கென பணம் கொடுத்து பொருட்களை வாங்குவதில்லை. மாறாக மூன்றாம் உலகநாடுகள் கடனுக்காக கட்ட வேண்டிய வட்டிக்காக, ஏற்றுமதிப் பொருட்களை இலவசமாக பெறத் தொடங்கியுள்ளது. கடன் உள்ளவரை இந்த நிலையில் மாற்றம் வராது. மாறாக மேலும் மேலும் மக்கள் உயிர்வாழ்வதற்கான சமூகத் தேவையை மறுத்து, அவற்றை புடுங்கி ஏற்றுமதி செய்வதே அதிகரிக்கும்;. இதைத்தான் சர்வதேச ஒழுங்கிற்குட்பட்ட சட்டங்கள் கோருகின்றது.

1980 இல் இருந்ததை விடவும் ஏற்றுமதியை மிஞ்சிய கடன், தேசிய வருவாயில் பெரும் பகுதியை உள்ளடக்கிய கடன் என்று, மூன்றாம் உலக நாடுகளின் அடிமை நிலையை, கடன் வழங்கியவன் தெளிவாக பிரகடனம் செய்கின்றான். கடன் அடிமைத்தனத்தின் மீது, எழுதப்படாத சட்ப+ர்வமான ஒப்பந்தமாகிவிட்டது. கடன் கொடுத்த நாட்டுக்கு, கடன் வாங்கிய நாடு அடிமையாக இருப்பது, இதன் மூலம் உறுதி செய்யப்படுகின்றது. இதுவே எங்கும் எதிலும், ஏன் தனிமனிதன் வரை இன்று விரிந்து செல்லுகின்றது.

2000ம் ஆண்டில் உலகில் 22 நாடுகளின் தேசிய வருமானத்தை விடவும், அவர்களின் கடன் அதிகமாக இருந்தது. உதாரணமாக கினிபிசு தேசிய வருமானத்தை விட அந்த நாட்டின் கடன் 417 சதவிகிதமாகவும்;, மாற்றினிக் கடன் 240 சதவிகிதமாகவும், லாவோஸ்சின் கடன் 205 சதவிகிதமாகவும் இருந்தது. 2001 இல் இலங்கையின் கடன் 1000 கோடி டொலராகியது. ஆனால் 1960 இல் 6.2 கோடி டொலர் கடனே இலங்கைக்கு இருந்தது. 1969 இல் இது 23.1 கோடி டொலராகியது. 1974 இல் இது 38 கோடி டொலராகியது. 1986 இல் 400 கோடி டொலராகியது. ஒரு நாட்டின் கடன் எப்படி அதிகரித்து வருகின்றது என்பதை நாம் இங்கு எதார்த்தமாகவே காண்கின்றோம். இதற்கென வட்டிப் பணத்தை வரிகள் மூலம் அறவிடப்படுகின்றது. இதை கொடுக்க மொத்த ஏற்றுமதியையும் பயன்படுத்தப்படுகின்றது. இதைத் தவிர அரசு சொத்துகளை அபகரிப்பது, பங்குச் சந்தையை கைப்பற்றுவது, ஒய்வூதிய நிதிகளை அபகரிப்பது என தொடர்ச்சியாகவே அன்றாடம் ஒரு கொள்ளை நிகழ்கின்றது. பரந்துபட்ட மக்கள் இவற்றை அன்றாடம் இழந்துவிடுவதன் மூலம், தமது கடந்தகால வாழ்வின் சமூக இருப்புக்கான சகல அடிப்படைகளையே இழந்து விடுகின்றனர். இந்தக் கடன் படிப்படியாக அதிகரித்து, கடனுக்கான வட்டியே அந்த நாட்டின் மொத்த வருடாந்த தேசிய வருமானங்களைக் கூட மிஞ்சிவிடும் நிலைக்குள் உலகம் தாவிச் செல்லுகின்றது. இதன் மூலம் நாடுகளின் திவாலும், அடிமைத்தனமும் நடந்து முடிந்துவிட்ட நிலையில், மூன்றாம் உலகநாடுகள் காணப்படுகின்றன. இதையே நம்மைப் போன்ற முட்டாள்கள் சுதந்திரமான நாடுகளாகவும் அவற்றை ஜனநாயக நாடுகளாகவும் பீற்றிக்கொண்டு எம்மையறியாது வாழ்கின்றோம்.

தொடரும்

No comments: