தமிழ் அரங்கம்

Wednesday, June 21, 2006

மறுகாலனியாதிக்கத்திற்கு உணவும் ஒரு ஆயுதம்

கோதுமை இறக்குமதி : மறுகாலனியாதிக்கத்திற்கு உணவும் ஒரு ஆயுதம்

டநாட்டில் இப்போது கோதுமை அறுவடைக் காலம். விவசாயிகள் அறுவடைத் திருவிழாக்களைக் கொண்டாடும் நேரம். அத்திருவிழாக்களைத் தொடர்ந்து, பல விவசாயக் குடும்பங்களில் இளைஞர்களுக்குத் திருமண ஏற்பாடுகள் நடக்கும் காலம். ஆனால், ஆயிரமாயிரம் கனவுகளோடு அறுவடையை முடித்த விவசாயிகளின் நெஞ்சில் இடியென இறங்கியுள்ளது விலை வீழ்ச்சியும் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதியாகும் கோதுமையும்.


அறுவடை தொடங்கிய போது, கிலோ 89 ரூபாய்க்கு விலைபோன கோதுமை, இன்று கிலோ 5 ரூபாய்க்கும் கீழாக வீழ்ச்சியடைந்து விட்டதால், விவசாயிகள் வேதனையில் துடிக்கிறார்கள். அரசு நிர்ணயித்த குறைந்தபட்ச ஆதார விலையான ரூ. 6.50 பைசாவுக்குக் கூட அரசு கொள்முதல் நிலையங்களில் அதிகாரிகள் கோதுமையை வாங்க மறுக்கிறார்கள். ""கோதுமையில் ஈரப்பதம் அதிகமாக உள்ளது; உமி அதிகமாக உள்ளது; தரம் குறைந்துள்ளது'' என்றெல்லாம் ஆயிரத்தெட்டு காரணங்களைச் சொல்லிக் கொள்முதல் செய்ய மறுப்பதால், விவசாயிகள் வேறு வழியின்றி அடிமாட்டு விலைக்குக் கோதுமையை வியாபாரிகளிடம் விற்கிறார்கள்.


அரசாங்கமோ கோதுமையைக் கொள்முதல் செய்யாமல் தட்டிக் கழிக்கிறது. இதனால் அரசாங்கக் கிடங்குகளில் கோதுமை கையிருப்பு குறைகிறது. கையிருப்பில் கோதுமை குறைவாக உள்ளதைக் காரணம் காட்டி, பொது விநியோகத்துக்கு (ரேஷன் கடைகளுக்கு) இன்னும் கோதுமை தேவை என்று வாதிடும் அரசாங்கம், வேறு வழியின்றி வெளிநாடுகளிலிருந்து கோதுமையை இறக்குமதி செய்வதாகக் கூறுகிறது. ஆனால், தற்போதைய பருவத்தில் கோதுமை விளைச்சல் கடந்த ஆண்டை விட ஒப்பீட்டு ரீதியில் அதிகமாக இருக்கும் என்றும் ஏறத்தாழ 125 லட்சம் டன் அளவுக்கு கோதுமை கிடைக்கும் என்றும் அரசின் புள்ளியியல் துறை கணக்கு கொடுக்கிறது. பொது விநியோகத்துக்கு ஏறத்தாழ 88 லட்சம் டன் கோதுமைதான் தேவை. அதைத் தாராளமாக விவசாயிகளிடமிருந்தே அரசாங்கம் கொள்முதல் செய்திருக்க முடியும். விவசாயிகளுக்கும் கோதுமைக்கு உரிய விலை கிடைத்திருக்கும். ஆனால், மைய அரசும் மாநில அரசுகளும் விவசாயிகளிடமிருந்து கோதுமையைக் கொள்முதல் செய்ய மறுக்கின்றன. மறுபுறம், மலைபோல் கோதுமை குவிந்து கிடக்கும் சூழலில், வெளிநாடுகளிலிருந்து 35 லட்சம் டன் கோதுமையை இறக்குமதி செய்ய மைய அரசு தீர்மானித்துள்ளது.


இதனடிப்படையில் கடந்த மே மாதத்தில் ஆஸ்திரேலியாவிலிருந்து 5 லட்சம் டன் கோதுமை சென்னை துறைமுகத்திற்கு வந்திறங்கியுள்ளது. அதன் தரத்தைச் சோதித்து பார்த்த அதிகாரிகள் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர். இறக்குமதியாகும் உணவு தானியங்களில் அதிகபட்சமாக 0.02 சதவீத அளவுக்குள் நச்சுத்தன்மை இருந்தால் மட்டுமே அதை அனுமதிப்பது வழக்கம். ஆனால், ஆஸ்திரேலிய கோதுமையில் 0.25 சதவீத அளவுக்கு நச்சுத்தன்மை உள்ளது. சென்னை மட்டுமின்றி, மைசூரிலுள்ள பரிசோதனைக் கூடத்திலும் சோதித்தறியப்பட்டு இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், பூச்சிக்கொல்லி மருந்தின் எச்ச அளவும் இரசாயன உரங்களின் பின்விளைவால் தோன்றும் நச்சுத்தன்மையின் அளவும் இந்தக் கோதுமையில் அதிகமாக உள்ளது. மேலும், இந்தக் கோதுமையில் ஏறத்தாழ 20% அளவுக்கு ஈரப்பதம் உள்ளது. (ஆனால், கொள்முதல் நிலையங்களில் 12%க்கு மேல் ஈரப்பதம் இருந்தால் விவசாயிகளிடமிருந்து அதிகாரிகள் வாங்க மறுக்கிறார்கள்). இவை தவிர, இக்கோதுமையில் வளர்ச்சி குன்றிய தானியங்களின் விகிதம் அதிகமாக இருப்பதோடு, பூஞ்சைத்தன்மையின் விகிதம் அதிகமாகவும் காளான் வகைப்பட்ட கூலநோய் தாக்கிய தானியங்களின் விகிதம் அதிகமாகவும் உள்ளது.


ஆனாலும், தரம் குறைந்த நச்சுத்தன்மை மிகுந்த இந்தக் கோதுமையை இந்திய அரசு நிராகரித்துத் திருப்பி அனுப்பவில்லை. அதற்கு மாறாக, இந்திய அரசு தனது தரக்கட்டுப்பாட்டு விதிகளையே தளர்த்தி இந்த நச்சுக் கோதுமையை நல்ல கோதுமைதான் என்று நியாயப்படுத்தக் கிளம்பிவிட்டது. இந்தக் கோதுமை தென்மாநிலங்களில் ரேஷன் கடைகள் மூலம் விநியோகிக்கப்பட உள்ளது. இந்த நச்சுக் கோதுமையால் இனம் புரியாத நோய்கள் மனிதனைத் தாக்கும்; குழந்தைகளுக்குப் பேராபத்தை விளைவிக்கும் என்று உணவியலாளர்களும் அறிவியலாளர்களும் எச்சரித்த போதிலும், இந்திய ஆட்சியாளர்கள் அவற்றையெல்லாம் துச்சமாக மதித்து, அடுத்த கப்பலுக்கு ஆர்டர் கொடுத்துள்ளனர்.


விவசாயிகளிடம் கிலோ


ரூ. 6.50க்குக் கூட கொள்முதல் செய்ய மறுக்கும் அரசு, ஆஸ்திரேலிய நச்சுக் கோதுமையை ஏறத்தாழ கிலோ


ரூ. 11.00க்கு வாங்கியிருக்கிறது. இவ்வளவு அதிக விலை கொடுத்து நச்சுக் கோதுமையை வாங்குவதற்குப் பதிலாக, விவசாயிகளிடமே கோதுமையைக் கொள்முதல் செய்யலாமே என்று கேட்டால், ""போக்குவரத்துச் செலவுகளைக் கணக்கிட்டால் விவசாயிகளிடமிருந்து அரசாங்கம் கொள்முதல் செய்யும் கோதுமையின் விலை இதைவிட அதிகமாகும். எனவேதான், அதைவிட மலிவான விலையில் கோதுமையை இறக்குமதி செய்கிறோம்'' என்கிறார் உணவு அமைச்சர் சரத்பவார். அப்படியானால், உள்நாட்டில் உற்பத்தியாகிக் குவிந்து கிடக்கும் கோதுமையை யார் வாங்குவார்கள்? கடன் வாங்கி பாடுபட்டுப் பயிரிட்ட விவசாயி என்ன செய்வது? என்று கேட்டால் உதட்டை பிதுக்குகிறார் உணவு அமைச்சர்.


இது ஒருபுறமிருக்கட்டும். போக்குவரத்து வசதி நிறைந்துள்ள இன்றைய நிலையில், உலகின் எந்த நாட்டிலிருந்தும் ஏறத்தாழ 1520 நாட்களில் எவ்வளவு டன் உணவு தானியத்தையும் இந்தியாவுக்குக் கொண்டு வர முடியும். அவ்வாறிருக்க, அறுவடைக் காலத்தில், விளைந்த கோதுமையை விற்க முடியாமல் விவசாயிகள் தத்தளித்துக் கொண்டிருக்கும் நிலையில் அவசரம் அவசரமாக வெளிநாட்டிலிருந்து கோதுமையை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியம் என்ன? விவசாயிகளிடம் கொள்முதல் செய்தபிறகு, சேமிப்பில் பற்றாக்குறை ஏற்பட்டால் அதற்கேற்ப கோதுமையை இறக்குமதி செய்வதை விடுத்து, இப்படி அவசர அவசரமாக இறக்குமதி செய்து, விவசாயிகளின் வயிற்றில் ஏன் அடிக்க வேண்டும்? இவையெல்லாம் மைய அரசின் நிர்வாகக் குளறுபடிகளோ, அல்லது கமிசன் மூலம் கிடைக்கும் ஆதாயத்துக்காக அதிகாரிகளும் அமைச்சர்களும் செய்யும் தில்லுமுல்லு மோசடிகளோ அல்ல. இவையெல்லாம் உலக வர்த்தகக் கழகத்தின் உத்தரவுகள். பன்னாட்டு ஏகபோக கம்பெனிகளின் கட்டளைகள். அவற்றுக்கு விசுவாசமாகச் சேவை செய்வதுதான் எங்கள் வேலை என்கின்றனர் ஆட்சியாளர்கள்.


ஏழை நாடுகளின் உணவுச் சந்தையைக் கைப்பற்றிக் கொண்டு ஆதிக்கம் செலுத்த ஏகாதிபத்திய நாடுகளின் உணவு வர்த்தகக் கழகங்கள் நீண்ட காலமாக முயற்சித்து வருகின்றன. உணவு தானியங்களை ஏழை நாடுகளில் இறக்குமதி செய்து ஆதிக்கம் செய்வதில் அவை குறியாக இருக்கின்றன. எனவேதான் உணவு உற்பத்தியைக் குறை; மானியங்களை நிறுத்து என்று உத்தரவிடுகிறது உலக வங்கி. "மலிவான' விலையில் ஏகாதிபத்திய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யுமாறும்; உணவு பாதுகாப்பு ஏற்பாடுகளையும் பெயரளவிலான சுயசார்பையும் கைவிடுமாறும் பன்னாட்டு ஏகபோகக் கம்பெனிகள் நிர்பந்திக்கின்றன. இதனடிப்படையில் ரேஷனில் விநியோகிக்கப்படும் உணவு தானியங்களின் விலைகள் படிப்படியாக உயர்த்தப்பட்டன. அரசாங்க கொள்முதல் படிப்படியாகக் கைவிடப்பட்டு, விவசாயிகள் வர்த்தகச் சூதாடிகளிடம் அடிமாட்டு விலைக்கு உணவு தானியங்களை விற்று போண்டியாகிப் போயினர். இப்போது அடுத்த கட்டமாக வெளிநாடுகளிலிருந்து உணவு தானிய இறக்குமதி தொடங்கி விட்டது.


இனி இந்திய விவசாயிகள் என்ன செய்வது? ""கோதுமையையும் நெல்லையும் விட்டுத் தொலையுங்கள்; தோட்டப் பயிர், மலர்ப் பண்ணை, எண்ணெய் வித்துக்கள் போன்று நல்ல ஏற்றுமதி வாய்ப்புள்ள உற்பத்திக்கு மாறுங்கள். உலகச் சந்தையின் தேவைகளுக்கேற்ப விவசாயத்தை மாற்றியமைத்துக் கொள்ளுங்கள்'' என்று 2001ஆம் ஆண்டிலேயே அரியானா விவசாயிகளுக்கு உபதேசித்தார், அன்றைய பா.ஜ.க. பிரதமர் வாஜ்பாய். இப்போது, ஜெட்ரோபா எனும் மூலிகை எரி எண்ணெய்ச் செடியைப் பயிரிடச் சொல்கிறார் மைய அமைச்சர் மணிசங்கர் அய்யர். கோலியாஸ் கிழங்கும் கற்றாழையும் பயிரிட்டு லட்சாதிபதிகளாகிவிட்ட விவசாயிகளின் "பிசினஸ் வெற்றிக் கதை'களைப் பரபரப்பாக வெளியிட்டு, நீங்கள் எப்போது லட்சாதிபதியாகப் போகிறீர்கள் என்று கேட்கிறது, ""நாணயம் விக டன்.''


ஆனால், இந்திய விவசாயிகளோ குமுறிக் கொண்டிருக்கிறார்கள். கடந்த மே மாதத்தில் உலக வர்த்தகக் கழகத்தின் தலைவரான பாஸ்கல் லாமே இந்தியாவுக்கு வந்தபோது, தமிழக உழவர் உழைப்பாளர் கட்சியும் பாரதிய கிஸான் யூனியனும் சேர்ந்து டெல்லியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்திய விவசாயத்தையும் விவசாயிகளையும் நாசமாக்கும் உலக வர்த்தகக் கழகத்துக்கு எதிராகவும், இந்தியாவில் கோதுமை உற்பத்தி குவிந்துள்ள நிலையில் இறக்குமதி செய்யும் இந்திய அரசின் துரோகத்துக்கு எதிராகவும் அவர்கள் முழக்கமிட்டனர்.


கோதுமை இறக்குமதி மட்டுமல்ல; உலக வர்த்தகக் கழகத்தின் ஆணைப்படி இனி அடுத்தகட்டமாக நெல், சோளம், எண்ணெய் வித்துக்கள் முதலானவையும் இறக்குமதி செய்யப்படவுள்ளன. ஏற்கெனவே பாமாயில் இறக்குமதியால் கேரளத்தின் தென்னை விவசாயமும் விவசாயிகளும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். பால் பொருட்களின் தாராள இறக்குமதியால் நாடெங்கும் பால் உற்பத்தியாளர்கள் வாழ்விழந்து நிற்கின்றனர். சூரியகாந்தி, சோயா மொச்சை, சர்க்கரை, பருப்பு வகைகள் என நீண்டு கொண்டே போகும் இறக்குமதி, இப்போது நெல், கோதுமை என அடிப்படையான உணவு தானியங்களையே இறக்குமதி செய்வதாக வளர்ந்துவிட்டது.


இந்தியாவின் பாரம்பரிய விவசாயத்தை நாசமாக்கி, மராமத்துப் பணிகளைப் புறக்கணித்து, மிகப்பெரிய பஞ்சத்தை விளைவித்து இலட்சக்கணக்கான மக்களைக் காவு வாங்கியது அன்றைய காலனியாதிக்கம். இன்று, விவசாயத்தை நாசமாக்கியும் சுயசார்பை ஒழித்து உணவு தானியங்களை இறக்மதி செய்தும் விவசாயிகளை ஓட்டாண்டிகளாக்கியும் பேரழிவை விளைவித்து வருகிறது மறுகாலனியாதிக்கம். நாட்டையும் மக்களையும் ஏகாதிபத்தியங்களுக்கு அடிமைப்படுத்தி இன்னுமொரு பஞ்சபூமியாக மாற்றும் துரோகத்தனத்தை வேகவேகமாகச் செய்து வருகிறது காங்கிரசு கூட்டணி அரசு. அதற்கு முட்டுக் கொடுத்து ஆதரித்து வரும் போலி கம்யூனிஸ்டுகள் உணவு அமைச்சருக்குக் கடிதம் எழுதி விளக்கம் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.


மு பாலன்

1 comment:

NoMad said...

இத்தனை பேரின் வயிற்றில் அடித்துவிட்டு அரசியல் செய்பவர்களுக்கு விவசாயமிருந்தால்தான் நாடிருக்கும், நாடிருந்தால்தான் அரசியல் செய்ய முடியும் என்ற அடிப்படை அறிவு கூடவா இல்லாமல் போய்விட்டது?