மதம் மற்றும் மொழிச் சிறுபான்மை தகுதி கொண்ட தனியார் கல்லூரிகள் தவிர்த்து, பிற சுயநிதிக் கல்லூரிகள் அனைத்திலும் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு வழங்குவதைச் சட்டபூர்வமாக உறுதிப்படுத்தும் அரசியல் சாசன சட்டத்திருத்தமொன்று நாடாளுமன்றத்தில் சமீபத்தில் நிறைவேற்றப்பட்டது. தனியார் சுயநிதிக் கல்லூரிகளில் இட ஒதுக்கீடு வழங்குவதை ரத்து செய்த உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பை, இந்த 93ஆவது சட்டத்திருத்தம் செல்லாக்காசாக்கிவிட்டதாக ஓட்டுக்கட்சிகள் கூறி வருகின்றன. எனினும், இந்தந்த திருத்தத்திற்கு ஏற்ப மாநில அரசுகள் சட்டம் இயற்றாததால், இந்தக் கல்வியாண்டில் தனியார் கல்லூரிகளில் இட ஒதுக்கீடு அமலுக்கு வருமா என்பது இரண்டுங்கெட்டானாகத்தான் இருக்கிறது.
இந்த விவகாரம் அந்தரத்தில், ஊசலாடும் பொழுதே, ""இந்த 93 ஆவது அரசியல் சாசன சட்டத் திருத்தத்தின்படியும், மண்டல் கமிசன் பரிந்துரையின்படியும் இந்திய தொழில் நுட்பக் கழகம், இந்திய மேலாண்மைக் கழகம், இந்திய அறிவியல் கழகம், 20 மையப் பல்கலைக்கழகங்கள், ஆறு மருத்துவக் கல்லூரிகள் அடங்கிய மைய அரசின் உயர் கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீத இடங்களை ஒதுக்கீடு செய்ய மைய அரசு முடிவெடுத்திருப்பதாகவும்; இது பற்றிய அறிவிப்பு ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல்கள் முடிந்த பிறகு வெளியிடப்படும்'' என்றும் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் அர்ஜுன் சிங், தேர்தல் பிரச்சாரம் சூடாக நடந்து கொண்டிருந்த நேரத்தில் அறிவித்தார்.
பதினாறு ஆண்டுகளுக்கு முன்பு, வி.பி.சிங் தலைமையில் இருந்த தேசிய முன்னணி அரசு மண்டல் கமிசன் அறிக்கையை ஏற்றுக் கொண்டு, அதன் ஒரு பகுதியை மைய அரசின் வேலைகளில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்த முயன்ற பொழுது, அதனை எதிர்த்து பார்ப்பன மேல்சாதி மாணவர்களைத் தூண்டிவிட்டு கலவரங்களை நடத்திய காங்கிரசு கட்சி, இப்பொழுது ""சமூக நீதி''க் காவலனாக மக்கள் முன் நிற்கிறது.
வி.பி.சிங்கின் தேசிய முன்னணி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக் கொண்டு அதனைக் கவிழ்த்ததோடு, மண்டலுக்கு எதிராக ராமர் கோயில் ரத யாத்திரைகளை நடத்தி, வடமாநிலங்களை ரத்தக்களறியாக்கிய பா.ஜ.க., இப்பொழுது, மைய அரசின் உயர் கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு செய்வதை ஆதரிப்பதாகக் கூறுகிறது. தங்களின் வாக்கு வங்கியை விரிவாக்கிக் கொள்ள வேண்டும் என்ற நிர்பந்தம்தான் இந்த இரண்டு பாசிசக் கட்சிகளையும், மண்டலின் மீது திடீர் காதல் கொள்ளத் தூண்டியிருக்கிறது.
எனினும், தண்ணீரை விட இரத்தம் அடர்த்தி மிக்கதல்லவா! அதனால்தான், இந்த இரண்டு கட்சிகளிலும் உள்ள பர்ப்பன மேல்சாதி தலைவர்கள், இந்த இட ஒதுக்கீட்டை நீர்த்துப் போகச் செய்யும் உள்ளடி வேலைகளில் உடனடியாக இறங்கினார்கள். இவர்களோடு பார்ப்பன மேல்சாதியைச் சேர்ந்த தொழில் அதிபர்கள், அரசு அதிகாரிகள், பத்திரிகைகள் இணைந்து, பார்ப்பன மேல்சாதி மாணவர்களைத் தூண்டிவிட்டு, மீண்டும் 1990 காலகட்டத்தை உருவாக்கி விடத் துடிக்கிறார்கள்.
இந்த இட ஒதுக்கீடு அறிவிப்புக்கு எதிராக தில்லியில் மட்டுமே தொடர்ந்து நடைபெற்று வரும் ""போராட்டம்'', ஏதோ வடஇந்தியா முழுவதும் நடப்பது போல ஊதி பெருக்கப்படுகிறது. ஒரிசா பழங்குடி மக்களின் மீது போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டை பத்தோடு பதினொன்றாகப் பதிவு செய்த பார்ப்பன ஊடகங்கள், மும்பய் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் மீது போலீசார் நடத்திய தடியடியை ஜாலியன் வாலாபாக் படுகொலையோடு ஒப்பிட்டு உருவேற்றுகின்றன. மேல்சாதித் திமிரோடும், வக்கிரத்தோடும் அவர்கள் நடத்தும் ஆபாசக் கூத்துக்கள் (தரையைக் கூட்டுவது, ஷý பாலிஷ் போடுவது) நாட்டு நலன் கருதி நடைபெறும் போராட்டங்களாகத் திரிக்கப்பட்டு விளம்பரப்படுத்தப்படுகின்றன. இதற்கு எதிர்வினையாக இட ஒதுக்கீட்டை ஆதரித்து, பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் மட்டுமின்றி, பல்வேறு சனநாயக அமைப்புகளும் போராடத் தொடங்கியுள்ளன.
""குடியரசு'' என டாம்பீகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள இந்த நாட்டில், பார்ப்பனமேல்சாதிக் கொழுப்பு தட்டிக் கேட்க ஆளின்றி பொங்கி வழிவதை இட ஒதுக்கீடு எதிர்ப்புப் போராட்டங்களே நிரூபிக்கின்றன. இந்தக் கொழுப்பின் சகிக்க முடியாத வக்கிரத்திற்கு ""டெக்கான் கிரானிகல்'' என்ற ஆங்கில நாளிதழில் வெளியிடப்பட்ட கேலிச்சித்திரத்தை உதாரணமாகக் கூறலாம்.
""மண்டல் கமிசன்'' கல்வி இட ஒதுக்கீடு அமலுக்கு வந்தால், மாடு மேய்க்கும் பயலுகளெல்லாம், ஐ.ஐ.டி.க்குள்ளும், ஐ.ஐ.எம்.க்குள்ளும் நுழைந்து விடுவார்கள்'' என உழைக்கும் மக்களைப் பரிகாசம் செய்கிறது, அந்தக் கேலிச் சித்திரம். ""எப்படியாவது மீண்டும் குலக்கல்வி முறை வந்துவிடாதா?'' என்ற பார்ப்பனிய நப்பாசையின் பச்சையான வெளிப்பாடுதான் அந்தக் கேலிச் சித்திரம. ""உலகமய''க் காலக் கட்டத்தில் கூட, இப்படி காட்டுமிராண்டித்தனமாகச் சிந்திப்பதற்காக அந்த ""மேன்மக்கள்'' வெட்கப்படவில்லை.
தில்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகம் (அஐஐMகு) மைய அரசின் கட்டுப்பாட்டின் கீழ்தான் இயங்குகிறதா என்பதே தற்பொழுது சந்தேகத்திற்கு இடமாகி விட்டது. அக்கழகத்தில் பயிலும் பார்ப்பன மேல்சாதி மாணவர்களும், பயிற்சி மருத்துவர்களும் நடத்தும் உள்ளிருப்பு வேலை நிறுத்தப் போராட்டத்தை அக்கழகத்தின் நிர்வாகமே ஆதரிக்கிறது. அக்கழகத்தின் நிர்வாகம், பார்ப்பனர் சங்கம் போலச் செயல்படுகிறது. அங்கு சிகிச்சைக்காக வரும் ஏழை நோயாளிகளை இட ஒதுக்கீட்டிற்கு எதிராகப் பேசவிட்டு, தங்களின் அரிப்பைத் தீர்த்துக் கொள்கிறது பார்ப்பன மேல்சாதி கும்பல்.
தனியார்மயத் தாக்குதலுக்கு எதிராக அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்தபொழுது, அரசையும் பொதுமக்களையும் ஊழியர்கள் மிரட்டுவதாக (ஆடூச்ஞிடுட்ச்டிடூ) நீதிமன்றங்களும், ஆளும் வர்க்க அறிவுஜீவிகளும் குற்றம் சுமத்தினார்கள். ஆனால், இப்பொழுது ஏழை நோயாளிகளின் உயிரோடு விளையாடும் அகில இந்திய மருத்துவ அறிவியல் கழக நிர்வாகத்தின் மீது அப்படிப்பட்ட குற்றச்சாட்டு சுமத்தப்படவில்லை. அவர்கள் மீது அத்தியாவசிய பணி பாதுகாப்புச் சட்டம் பாயவில்லை. இந்த மென்மையான அணுகுமுறைக்கு, பார்ப்பன பாசம் தவிர, வேறென்ன காரணமாக இருக்க முடியும்?
""திறமையில் ஒப்புயர்வற்ற தனித் தீவுகள்'' என "தேசிய'ப் பத்திரிகைகளால் புகழப்படும் இந்த உயர்கல்வி நிறுவனங்கள், பார்ப்பனத் தீவுகளாக இருக்கின்றன என்பதே உண்மை. சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் (ஐஐகூ) வேலை பார்க்கும் 400 பேராசிரியர்களுள், 282 பேர் (70 சதவீதம்) பார்ப்பனர்கள்; மற்ற உயர் சாதியினர் 40 பேர் (10 சதவீதம்); தாழ்த்தப்பட்டவர்களுக்கும், மலைவாழ் மக்களுக்கும் 22.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பது ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக நடைமுறையில் இருந்தும் கூட, சென்னை ஐ.ஐ.டி.யில், மூன்று தாழ்த்தப்பட்டவர்கள்தான் (0.75 சதவீதம்) பேராசிரியர்களாக வேலை பார்க்கின்றனர்.
மேற்கு வங்கம் காரக்புரில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் இயக்குநர், ""நாங்கள் எப்படி மாணவர்களைச் சேர்க்கிறோம் என்பதை வைத்து ஐ.ஐ.டி.யின் தரம் நிர்ணயிக்கப்படவில்லை. எப்படிப்பட்ட மாணவர்களைத் தயாரித்து அனுப்புகிறோம் என்பதுதான் தரத்தை நிர்ணயிக்கிறது'' என்கிறார். ஆனால், பார்ப்பன உயர்சாதி கும்பலோ, இட ஒதுக்கீடு வழங்கினாலே, உயர்கல்வி நிறுவனங்களின் தரம் தரைமட்டமாகி விடும்; திறமைக்கு எதிரான இட ஒதுக்கீடு நாட்டிற்கே எதிரானது'' எனக் கூச்சல் போடுகுறது.
இட ஒதுக்கீடால் தரமும், திறமையும் போய்விடும் என்ற பொய்யைத் திரும்ப திரும்பச் சொல்வதன் மூலம், ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்த தகுதியே இல்லாத மாணவர்கள் இந்த நிறுவனங்களில் சேர்த்துக் கொள்ளப்படுவதைப் போலவும், அவர்கள் தேர்வே எழுதாமல் தேர்ச்சி பெற்று பதவியில் அமர்ந்து விடுவதைப் போலவும் ஒரு சித்திரத்தை உருவாக்குகிறார்கள்.
இது அப்பட்டமான பொய். நுழைவுத் தேர்வில் பெற வேண்டிய மதிப்பெண்களில் வழங்கப்படும் சிறிய சலுகையைத் தவிர, வேறெந்த சலுகையும் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்குத் தரப்படுவதில்லை. அதன்பின் எல்லா மாணவர்களுக்குமான பொது அளவுகோலின்படிதான் இவர்களும் தேர்வெழுதி மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெறுகிறார்கள்.
ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம். போன்ற ""திறமையின் தீவுகள்'' எல்லாம் நிறுவப்பட்டு, ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டன. ஆனாலும், இந்தியா இன்றும் வறிய நாடாகத்தான் இருக்கிறது. அறிவியல் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளைச் சொந்தமாக உருவாக்க முடியாமல், ஏகாதிபத்திய நாடுகளிடம் கையேந்திப் பெற்று வருகிறது. அப்படியென்றால் இந்த ஐம்பது ஆண்டுகளில் இந்த உயர்கல்வி நிறுவனங்கள் உருவாக்கியுள்ள பொறியாளர்களில், விஞ்ஞானிகளில், மேலாண்மை நிர்வாகிகளில், நூற்றுக்குப் பத்து பேர் கூட திறமைசாலிகளாக இல்லை எனச் சொல்லலாமா? இட ஒதுக்கீடு சலுகை பெறாதவர்களையும் சேர்த்துதான் இந்தக் கேள்வியைக் கேட்கிறோம்.
திறமைக்கு மட்டுமே மதிப்பளிக்க வேண்டும் என்பதால்தான், இராணுவத்தில் இட ஒதுக்கீடு கிடையாது எனப் பார்ப்பனக் கும்பல் வாதாடுகிறது. ஆனால், அந்த அரசு நிறுவனத்தில்தான், பீர் பாட்டிலுக்கும், பொம்பளைக்கும் மயங்கி, இராணுவ இரகசியங்கள் விற்கத் துணியும் தேசத்துரோகிகள் இருப்பதை தெகல்கா ஊழல் அம்பலப்படுத்தியது; பீரங்கி முதல் சவப்பெட்டி வாங்கியது வரை, பல்வேறு ஊழல்களில் ""திறமை'' வாய்ந்த உயர்சாதி அதிகாரிகள் சம்பந்தப்பட்டிருப்பது அம்பலமாகி, இந்திய இராணுவம் சந்தி சிரித்தது.
பார்ப்பனக் கும்பல் கூறுவது போல இட ஒதுக்கீடு தேசத்திற்கு எதிரானதாக இல்லை. மாறாக, அவர்கள் தூக்கிப் பிடிக்கும் திறமைதான் மக்களுக்கும், நாட்டுக்கும் துரோகம் செய்வதாக இருக்கிறது. மக்களின் வரிப்பணத்தில் இருந்து கொடுக்கப்படும் மானியத்தில் நடக்கும் இந்த உயர்கல்வி நிறுவனங்களில் படித்து முடிக்கும் மருத்துவர்கள் பொறியாளர்களில், எத்தனை பேர் கிராமப்புறங்களில் உள்ள அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றி வருகிறார்கள்? எத்தனைபேர் அரசின் பொதுப்பணித் துறையில் சேர்ந்திருக்கிறார்கள்? இங்கே படித்து முடித்தவுடன் அமெரிக்காவிற்கும், இலண்டனுக்கும் மூட்டை கட்டும் இந்த ஓடுகாலிதனத்தைதான் "திறமை' என்ற பெயரில் மூடிமறைக்கிறது, பார்ப்பனக் கும்பல்.
இந்தப் பார்ப்பன மேதாவிகள் ""சமூக நீதி''களின் மேல் அக்கறை உள்ளவர்கள் போல, ""நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு
ஏன் இன்னும் அமல்படுத்தப்படவில்லை? பிரதமர், முதல்வர் பதவிகளில் இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டியதுதானே?'' என எதிர்வாதம் செய்கிறார்கள்.
நியாயமாகப் பார்த்தால், பார்ப்பன அறிவுஜீவிகள் இந்தக் கேள்வியை முதலில் சங்கர மடத்திடம் தான் கேட்க வேண்டும். சங்கர மடம் உள்ளிட்ட பல்வேறு பார்ப்பன மடங்களிலும், நல்ல வரும்படி வரும் கோயில்களிலும் பல நூறு ஆண்டுகாலமாக பார்ப்பனர்களே மடாதிபதிகளாகஅர்ச்சகர்களாக இருக்கும் சலுகையை ஏகபோகமாக வைத்திருப்பது மட்டும் நியாயமானதா?
கல்வி வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்குவதற்கு சாதி பார்க்கக் கூடாது என தர்க்க நியாயம் பேசுபவர்கள், இதற்கோ பூணூலை மட்டுமே ஒரே தகுதியாக வைத்திருக்கிறார்கள். இந்த 100 சதவீத இட ஒதுக்கீட்டைக் கைவிட விரும்பாத பார்ப்பனக் கும்பல், 2016க்குள் தாழ்த்தப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் இட ஒதுக்கீட்டையும் ரத்து செய்ய வேண்டும் எனக் கூப்பாடு போடுகிறது.
ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம். போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் ஒடுக்கப்பட்ட சாதியினருக்கு இட ஒதுக்கீடு வழங்குவதை எதிர்க்கும் இவர்கள், இந்த நிறுவனங்களில் வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படுவதையோ, அந்த இடங்கள் அமெரிக்க டாலர்களுக்காக ஏலம் விடப்படுவதையோ எதிர்ப்பதில்லை. ஏனெனில், வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கான இட ஒதுக்கீடு என்பது, நடைமுறையில் அமெரிக்கா வாழ் ""அம்பி''களுக்கான இட ஒதுக்கீடுதான்.
மேலும், தனியார்சுயநிதிக் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீடு என்ற பெயரில் பணக்காரர்களுக்கு வழங்கப்பட்டுள்ள 100 சதவீத இட ஒதுக்கீட்டையும் இவர்கள் எதிர்ப்பதில்லை. தரம், தகுதி, திறமையை முன்வைத்து இட ஒதுக்கீட்டை எதிர்க்கும் பார்ப்பனக் கும்பலின் வாதத்தில் சாதித் திமிரும், கபடத்தனமும்தான் பொங்கி வழிகிறது.
பார்ப்பன மேல்சாதி கும்பல் இட ஒதுக்கீடு எதிர்ப்பு என்ற பெயரில், இந்த நாட்டின் பெரும்பான்மையாக உள்ள ஒடுக்கப்பட்ட சாதியினரை வெளிப்படையாகவே அவமானப்படுத்துகின்றது. பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு அமலாவதைத் தடுப்பதன் மூலம், சமூகத்தின் அனைத்துத் துறைகளிலும் தங்களின் சாதி ஆதிக்கத்தைத் தக்க வைத்துக் கொள்ள முயலுகின்றது. அதேசமயம், ஒடுக்கப்பட்ட சாதியினரைத் தங்களின் வாக்கு வங்கியாகக் கொண்டிருக்கும் சமூக நீதிக் கட்சிகளோ, பார்ப்பனக் கும்பல் நடத்தும் இப்பிற்போக்குத்தனமான கலகத்திற்கு எதிராக உரிய விதத்தில் பதிலடி கொடுக்காமல் முடங்கிக் கிடக்கின்றன.
இருபது ஆண்டுகளுக்கு முன்பு வன்னியர்களுக்குத் தனி இட ஒதுக்கீடு கேட்டு, நெடுஞ்சாலைகளில் மரங்களை வெட்டிப் போட்டு மறியல் போராட்டங்களை நடத்திய பா.ம.க ராமதாசு, இப்பொழுது மன்மோகன் சிங்கைச் சந்தித்து முறையிடுகிறார். அடிக்கடி தன்னைப் பிற்படுத்தப்பட்டவன் எனக் கூறி அரசியல் அனுதாபம் தேடிக் கொள்ளும் கருணாநிதி, பிரதமருக்குக் கடிதம் எழுதியதோடு தன் கடமையை முடித்துக் கொண்டு விட்டார்.
இட ஒதுக்கீட்டிற்கு ஆதரவாக போலீசு கை காட்டும் இடத்தில் நின்று கொண்டு ஆர்ப்பாட்டம் நடத்துவது என்ற வரம்பைத் தாண்ட இக்கட்சிகள் மறுக்கின்றன. மேலும், சோனியாவையும் மன்மோகன் சிங்கையும் நம்பும் கையறு நிலைக்குத்தான் இக்கட்சிகள் பிற்படுத்தப்பட்டோரைத் தள்ளிவிட்டுள்ளன.
தி.மு.க., பா.ம.க., ம.தி.மு.க., லல்லு யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம், நிதிஷ்குமாரின் ஜனதா தளம், அஜீத் சிங்கின் லோக் ஜனதா தளம், முலயம் சிங்கின் சமஜ்வாதி ஆகிய சமூக நீதிக் கட்சிகள் அனைத்தும் பார்ப்பன பனியா கட்சிகளான காங்கிரசு பா.ஜ.க.வோடு மாறி மாறி கூட்டணி வைத்துக் கொண்டு தான் ஆட்சி அதிகாரத்தைச் சுவைத்து வருகின்றன. இந்தப் பார்ப்பனர் பிற்படுத்தப்பட்டோர் கூட்டணியின் காரணமாகத் தான், காங்கிரசு கூட்டணி ஆட்சி உயர் கல்வி நிறுவனங்களில் பொதுப் போட்டிக்கான இடங்களை அதிகரிப்பது என்ற சமரசத் தீர்வை முன்வைக்கிறது. இந்தச் சமரசத் தீர்வு பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு என்பதையே கேலிக் கூத்தாக்குவதோடு, மறைமுகமாக பார்ப்பனமேல்சாதியினருக்கு இட ஒதுக்கீடு வழங்குவதாகும். பார்ப்பனமேல்சாதி கும்பல் இச்சமரசத் தீர்வை அடைவதில் வெற்றி பெற்றுவிட்டால், அவர்கள் அடுத்து தாழ்த்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டையும் காவு கேட்கத் தயங்கமாட்டார்கள்.
இட ஒதுக்கீட்டைப் பார்ப்பனக் கும்பல் எதிர்ப்பது ஒருபுறமிருக்க, இந்திய அரசு நடைமுறைப்படுத்தும் தனியார்மய தாராளமய உலகமயப் பொருளாதாரக் கொள்கை, இட ஒதுக்கீட்டின் அடிப்படைக்கே வேட்டு வைத்துவிட்டது. இட ஒதுக்கீட்டிற்கு எதிரானது என்ற அம்சத்தில் மட்டும் பார்ப்பனியமும் தனியார்மயமும் ஒன்றுபடவில்லை. அவை இரண்டுமே உடன்பிறவாச் சகோதரர்கள் போன்றவை.
உலகமயம், உலக நாடுகளை ஒடுக்கும் நாடுகள், ஒடுக்கப்படும் நாடுகள் எனக் கூறு போடுகிறுது. அதுபோலவே பார்ப்பனியமும், இந்திய மக்களை ஒடுக்கும் மேல்சாதி, ஒடுக்கப்படும் கீழ் சாதி எனக் கூறு போடுகிறது.
உலகமயம், உள்நாட்டுப் பொருள்கள் தரமற்றவை; பன்னாட்டு நிறுவனப் பொருட்கள்தான் தரமானவை என வகை பிரிக்கிறது. அதுபோலவே, பார்ப்பனியமும் சமூக அடித்தட்டில் கீழ்நிலையில் உள்ள உழைக்கும் மக்களைத் திறமையற்றவர்கள் என்றும்; பார்ப்பனமேல்சாதியினரைத திறமையாளர்கள் என்றும் வகை பிரிக்கிறது.
படைப்பிலேயே மனிதர்களிடம் ஏற்றத்தாழ்வு உண்டு; மனிதர்கள் சமமானவர்கள் இல்லை என்பது பார்ப்பனிய இந்து மதத்தின் அடிப்படைக் கொள்கை. நவீன தாராளமயமும் மனிதர்களிடம் ஏற்றத்தாழ்வு உண்டு எனக் கூறுகிறது. இந்த விதத்தில் பார்ப்பனியமும், தாராளமயமும் இயற்கையாக ஒன்றுபடுகின்றன.
கல்வி வேலைவாய்ப்பில் இடஒதுக்கீட்டை எதிர்க்கும் பார்ப்பன மேல்சாதிக் கும்பலுக்கு, டாடா, மிட்டல், நாராயணமூர்த்தி போன்ற தரகு முதலாளிகள் ஆதரவளிப்பதற்கு இந்த ""இயற்கை உறவு''தான் காரணம்.
தனியார் தொழில்களில் ஒடுக்கப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் எனக் கோரினால், ""உலகச் சந்தையில் போட்டிபோட திறமை வேண்டும்; இட ஒதுக்கீடு அந்தத் திறமையை ஒழித்து விடும்'' எனப் பார்ப்பனக் கும்பல் போலவே இவர்களும் ஒப்பாரி வைக்கிறார்கள். புதுத் தரகு முதலாளியான இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தி, ""ஒடுக்கப்பட்ட சாதியினர் போட்டிபோடும் திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும்'' எனப் பச்சையாக பார்ப்பனிய விஷத்தைக் கக்குகிறார்.
இந்தியாவின் ஏதாவதொரு ""பின்தங்கிய'' மாவட்டத்தில் தொழில் தொடங்குவதற்கு அரசிடமிருந்து பல்வேறு சலுகைகளை எதிர்பார்க்கும் இந்தத் தரகு முதலாளிகள், ஒடுக்கப்பட்ட சாதியினருக்கு இட ஒதுக்கீடு சலுகை வழங்கக் கோரினால், ""தகுதி'', ""திறமை'' பற்றிப் பேசுவது, அப்பட்டமான பித்தலாட்டமாகும்.
அரசு அதிகாரத்தைப் பங்கு போட்டுக் கொள்ள பார்ப்பனியத்தோடு கூட்டு வைத்துக் கொள்ளும் ""தலித்'' கட்சிகளும், பிற்படுத்தப்பட்ட சாதிக் கட்சிகளும் இன்னொருபுறம் தனியார்மயத் தாசர்களாகவும் இருக்கிறார்கள். ""பன்னாட்டு நிறுவனங்களைத் தமிழகத்திற்குக் கொண்டு வந்ததில் யாருக்கு முதலிடம்?'' என்ற போட்டி பார்ப்பன ஜெயாவுக்கும், சூத்திரர் கருணாநிதிக்கும் இடையே நடந்ததைத் தமிழக மக்கள் அதற்குள் மறந்திருக்க முடியுமா?
தன்னுடைய கொள்ளை இலாபத்திற்கு குறுக்கே நிற்கும் பணிப் பாதுகாப்பு, ஓய்வூதியம், தொழிற்சங்க உரிமைகளைக் காலில் போட்டு மிதிக்கும் தனியார்மயத்தை ஆதரிப்பவர்கள், சமூக நீதி என்ற பெயரில் இட ஒதுக்கீட்டிற்கு மட்டும் குரல் கொடுப்பது இரட்டை வேடமாகாதா? ஒரு வர்க்கத்திற்கு ஒரு நீதி என்று பேசும் தனியார்மயத்தை ஆதரிப்பவர்கள், ஒரு குலத்திற்கு ஒரு நீதி எனும் பார்ப்பனியத்தை எதிர்க்க முடியுமா?
பார்ப்பனியத்திற்கும், பிற்பட்ட சாதியினருக்கும் இடையே உள்ள கூட்டணி அரசியல் அதிகாரத்தைப் பங்கு போட்டுக் கொள்வதோடு மட்டும் நின்றுவிடவில்லை. கிராமப்புறங்களில், பார்ப்பன மனுநீதியைக் காக்கும் காவலர்களாக இப்""பிற்பட்ட சாதியினர்'' இருந்து வருகின்றனர் தேவர், வன்னியர், கவுண்டர், யாதவர், குர்மி, வோக்கலிகா போன்ற இடைநிலைச் சாதிகள் தாழ்த்தப்பட்டோர் மீது நடத்தும் தாக்குதல்கள் இதை நிரூபிக்கின்றன.
சூத்திரன் யார் என்பதற்கு மண்டல் கமிசன் அறிக்கையில் தெளிவான விளக்கம் கிடையாது. மண்டல் அறிக்கையில் இந்தியா முழுவதும் 3,740 சாதிகள் பிற்பட்ட சாதிகளாக இனம் காணப்பட்டன. 1995க்குப் பின் இப்பட்டியலில் மேலும் 700 சாதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. (ஆதாரம், வல்லினம் பிப்.ஏப். 2006, பக்: 27) பார்ப்பனர்களுக்குக் கீழ்நிலையில் இருந்தாலும், சமூகப் பொருளாதார உரிமைகளைப் பெற்று முன்னேறியுள்ள இடைநிலைச் சாதிகள், தங்களைப் பிற்பட்டோர் பட்டியலில் இணைத்துக் கொண்டு, பார்ப்பனர்களோடு போட்டி போட்டு அரசுப் பதவிகளைப் பகிர்ந்து கொள்வதற்கு மண்டல் கமிசன் அறிக்கை அச்சாதிகளுக்கு உதவியாக இருக்கிறது.
உயர் கல்வி நிறுவனங்களில் 27 சதவீத இட ஒதுக்கீடு அமலுக்கு வரும்பொழுது, இந்த இடைநிலை ஆதிக்க சாதிகள்தான் அதன் பலனை அறுவடை செய்து கொள்வார்கள். பிற்படுத்தப்பட்டோர் / மிகப் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் உள்ள நாவிதர், வண்ணார், குயவர் போன்ற சேவை சாதியினர், ஒரு சமூகம் என்ற வகையில் அதன் பலனை அனுபவிக்க முடியாது.
அதேசமயம், ""இட ஒதுக்கீடு என்பது இந்த சமூக அமைப்புக்குள்ளேயே எல்ல மக்களும் முன்னேறிவிட முடியும் என்ற மாயையைத் தோற்றுவிக்கும் சீர்திருத்தம்தான்'' என்ற உண்மையையும் நாம் மறந்துவிடக் கூடாது. வறுமை, வேலைவாய்ப்பு இன்மையால் இன்று இந்திய நாடே கொந்தளித்துக் கொண்டிருக்கிறது. அதனைத் தணிக்கும் வடிகாலாகத்தான் தனியார் தொழில்களில் இட ஒதுக்கீடு, தனியார் கல்லூரிகளில் இட ஒதுக்கீடு, பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு ஆகிய சீர்திருத்தங்கள் ஆளும் வர்க்கத்தாலேயே கொண்டு வரப்படுகின்றன.
பெரும்பான்மையான பிற்படுத்தப்பட்டதாழ்த்தப்பட்ட மக்களின் பாரம்பரியத் தொழில்களான விவசாயம், கைத்தறி, கைவினைத் தொழில்கள் தொடங்கி, சில்லரை வணிகம், பழங்குடி மக்களின் நிலம் ஆகிய அனைத்தும் பன்னாட்டு நிறுவனங்களுக்கும், தரகு முதலாளிகளுக்கும் ஒதுக்கீடு செய்யப்படும் மறுகாலனியாதிக்கத்தின் கீழ் மக்களின் வாழ்க்கை மேலும் மேலும் நாசமாக்கப்படுகிறது என்பதே உண்மை.
பன்னாட்டு நிறுவனங்கள் தரகு முதலாளிகள் நிலப்பிரபுக்களின் நலன்களை முன்னிறுத்தி நடந்துவரும் இந்த ஆட்சியில் இட ஒதுக்கீட்டின் மூலம் உயர் பதவிகளுக்குச் செல்வோர் யாராக இருந்தாலும், மக்களுக்குச் சேவை செய்ய முடியாது. ஏகாதிபத்திய நிலப்பிரபுத்துவச் சுரண்டலைத் தூக்கி எறியும் புதிய ஜனநாயகப் பரட்சியின் மூலம் உழைக்கும் மக்களின் ஆட்சியதிகாரத்தை நிலைநாட்டுவது மட்டும்தான் உண்மையான சமூக நீதியைப் படைக்கும். தனியார்மயம் பார்ப்பனியம் இவை இரண்டுக்கும் எதிராகக் கலகத்தில் இறங்குவதன் மூலம்தான் சமூக நீதியை வென்றெடுக்க முடியும்!
மு செல்வம்
2 comments:
இந்த கட்டுரையில் எந்த இடத்திலும் ஏன் பிறப்பின் அடிப்படையில் இட ஒதுக்கீடு தர வேண்டும் என்பதை நிறுவ வில்லை. வெறும் கண்மூடித்தனமான பிராமண எதிர்ப்பாகவே இருக்கிறது.
//பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு : : மீண்டும் தலைதூக்கும் பார்ப்பனத் திமிர்! சமூகநீதிக் கட்சிகளின்: சமரசம்! //
மிகச் சரியான ஆரம்பம்,
//இந்தியாவின் ஏதாவதொரு ""பின்தங்கிய'' மாவட்டத்தில் தொழில் தொடங்குவதற்கு அரசிடமிருந்து பல்வேறு சலுகைகளை எதிர்பார்க்கும் இந்தத் தரகு முதலாளிகள், ஒடுக்கப்பட்ட சாதியினருக்கு இட ஒதுக்கீடு சலுகை வழங்கக் கோரினால், ""தகுதி'', ""திறமை'' பற்றிப் பேசுவது, அப்பட்டமான பித்தலாட்டமாகும்.//
உண்மைகளுக்கும் வர்க்கச் சார்பு உண்டு என்பது தெரியாத நாமெல்லாம் வர்க்க பேதம் பேசும் கம்யூனிச மடையர்கள். அது தெரிந்த நாராயணமூர்த்தி உண்மையான(வர்க்க சார்புள்ள உண்மை) செயல் வீரர்.
//சமூக நீதி என்ற பெயரில் இட ஒதுக்கீட்டிற்கு மட்டும் குரல் கொடுப்பது இரட்டை வேடமாகாதா? ஒரு வர்க்கத்திற்கு ஒரு நீதி என்று பேசும் தனியார்மயத்தை ஆதரிப்பவர்கள், ஒரு குலத்திற்கு ஒரு நீதி எனும் பார்ப்பனியத்தை எதிர்க்க முடியுமா?//
அவ்வாறு எதிர்க்க முடியாது என்பதற்க்கு ஆதாரமாகத்தான் பல பார்ப்பன வெறியர்கள் தனியார்மயத்துக்கும், உலகமயத்துக்கும் காவடி தூக்கிக் கொண்டு வலைப்பூ உலகில் உலா வருகிறார்களே.
//""இட ஒதுக்கீடு என்பது இந்த சமூக அமைப்புக்குள்ளேயே எல்ல மக்களும் முன்னேறிவிட முடியும் என்ற மாயையைத் தோற்றுவிக்கும் சீர்திருத்தம்தான்'' என்ற உண்மையையும் நாம் மறந்துவிடக் கூடாது.//
//பன்னாட்டு நிறுவனங்கள் தரகு முதலாளிகள் நிலப்பிரபுக்களின் நலன்களை முன்னிறுத்தி நடந்துவரும் இந்த ஆட்சியில் இட ஒதுக்கீட்டின் மூலம் உயர் பதவிகளுக்குச் செல்வோர் யாராக இருந்தாலும், மக்களுக்குச் சேவை செய்ய முடியாது.//
அனைத்தும் செவிட்டில் அடிக்கும் விசயங்கள்.
Post a Comment