ஓட்டுப் பொறுக்கிகளின் அனல் பறக்கும் பிரச்சாரத்துக்கிடையே, ""ஓட்டுப் போடாதே! புரட்சிசெய்!'' என்ற முழக்கத்துடன் தமிழகமெங்கும் நக்சல்பாரி புரட்சிகர அமைப்புகள் தேர்தல் புறக்கணிப்புப் பிரச்சாரத்தை வீச்சாக கடந்த ஏப்ரல் மே மாதங்களில் நடத்தின. ஓட்டுப் போடுவதும் ஓட்டுப் போடாமல் தேர்தலைப் புறக்கணிப்பதும் மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமை. ஆனால், தேர்தல் புறக்கணிப்புப் பிரச்சாரம் செய்வதையே ஏதோ சட்டவிரோத தேசவிரோத பயங்கரவாதச் செயலாகச் சித்தரித்து, போலீசு பல பகுதிகளில் தடைவிதித்ததோடு, முன்னணியாளர்கள் மீது பொய்வழக்கு சோடித்து கைது செய்து சிறையில் அடைத்தது.
ஓசூரில் தேர்தல் புறக்கணிப்புப் பிரச்சாரம் செய்த "குற்றத்திற்காக பு.ஜ.தொ.மு.வைச் சேர்ந்த பரசுராமன், சீனு. இரவிச்சந்திரன் ஆகிய தோழர்கள் அரசைக் கவிழ்க்கச் சதி செய்ததாக பொய் வழக்கு சோடிக்கப்பட்டு சிறையிடப்பட்டனர். திருப்பத்தூர் அருகே கந்திலியைச் சேர்ந்த வி.வி.மு. தோழர் பெரியசாமி, கிருஷ்ணகிரி மாவட்டம் நாட்றாம்பாளையம் வி.வி.மு. தோழர் சக்தி ஆகியோர் விசாரணை என்ற பெயரில் கைது செய்யப்பட்டு, பொய் வழக்கு சோடிக்கப்பட்டு சிறையிடப்பட்டனர். தர்மபுரியில் ""போலி ஜனநாயகத் தேர்தலைப் புறக்கணிப்போம்!'' என்ற அறைகூவலுடன் தட்டி கட்டிய தோழர்கள் கைது செய்யப்பட்டனர். இதுதவிர துண்டுப் பிரசுரங்களையும், ""ஓட்டுப் போடாதே! புரட்சி செய்!'' என்ற சிறு வெளியீட்டையும் பிரச்சாரம் செய்து விநியோகித்த போதும் பல தோழர்கள் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர். கோவை, திருச்சி, உடுமலை, சிவகங்கை, கடலூர், நெய்வேலி ஆகிய ஊர்களில் தேர்தல் புறக்கணிப்புப் பிரச்சாரம் சட்டவிரோதமானது என்று எழுத்துப்பூர்வமாக அறிவித்த போலீசு, துண்டுப் பிரசுரம் விநியோகிக்கக் கூட தடை விதித்தது. இருப்பினும் இச்சட்ட விரோத அடக்குமுறை அச்சுறுத்தல்களைத் துச்சமாக மதித்து தேர்தல் புறக்கணிப்பு அரசியல் பிரச்சாரத்தை இப்புரட்சிகர அமைப்புகள் தமக்கே உரித்தான வீரியத்தோடு நடத்தியுள்ளன.
""ஓட்டுப் போடாதே! புரட்சி செய்!'' எனும் சிறு வெளியீடு ஏறத்தாழ 40,000 பிரதிகள் இப்புரட்சிகர அமைப்புகளால் மக்களிடம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. பல வடிவங்களில், பல பத்தாயிரக்கணக்கில் துண்டுப் பிரசுரங்கள் மக்களிடம் விநியோகிக்கப்பட்டுள்ளது. சென்னை, தஞ்சை, மதுரை, நெய்வேலி, நாமக்கல், ஓசூர் ஆகிய நகரங்களில் 15க்கும் மேற்பட்ட தெருமுனைக் கூட்டங்களும் பொதுக்கூட்டம் கலைநிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டுள்ளன.
திருச்சியில் தெருமுனைக் கூட்டங்கள் கூட தடை விதிக்கப்பட்ட நிலையில், தேர்தல் புறக்கணிப்பு அரசியல் முழக்கங்கள் ஒட்டப்பட்ட பெரிய அட்டைப் பெட்டிகளைத் தலையில் கவிழ்த்துக் கொண்டு பேருந்து நிலையம், கடைவீதிகளில் பிரசுரங்களை விநியோகித்தபடியே தோழர்கள் பிரச்சாரம் செய்தனர். புதிய வடிவிலான இப்பிரச்சாரத்தை உழைக்கும் மக்கள் ஆர்வத்துடன் வரவேற்றதோடு, சில நாளேடுகளும் இதனை புகைப்படத்துடன் செய்தியாக வெளியிட்டன. இதே பாணியில், விழுப்புரம் பேருந்து நிலையத்தில் பெண்கள் சிறுவர்கள் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட வி.வி.மு. தோழர்கள் பிரச்சாரம் செய்தது சிறப்பானதொரு வரவேற்பைப் பெற்றது.
திருச்சி உறையூர் பகுதியில் தெருநாய் ஒன்றைக் குளிப்பாட்டி, வேட்பாளரைப் போல வேட்டி துண்டு மாலை அணிவித்து தட்டு வண்டியில் அமர்த்தி, ""இதோ, உங்கள் வேட்பாளர் உங்களை நாடி வருகின்றார்'' என ஒலிபெருக்கியில் அறிவித்து தாரை தப்பட்டை முழங்க ஊர்வலமாக தோழர்கள் இழுத்து வந்தனர். விநோதமான இந்த வேட்பாளரை மக்கள் கூடி நின்று பார்த்து கை கொட்டி சிரித்தபோது ""நீங்கள் போடும் வாக்கு, நாய்க்கு போடும் வாக்குதான்; உலக வங்கியின் உத்தரவுக்கு விசுவாசமாக வாலாட்டுவதுதான் ஓட்டுக் கட்சிகளின் வேலை'' என்று உரையாற்றிய தோழர்கள், போலி ஜனநாயகத் தேர்தலைப் புறக்கணிக்க வேண்டிய அவசியத்தை விளக்கினர். இந்த நூதன பிரச்சாரம் உழைக்கும் மக்களிடம் பெருத்த வரவேற்பைப் பெற்றதோடு, புரட்சிகர அரசியலை மக்களின் நெஞ்சங்களில் விதைப்பதாக அமைந்தது.
கோவை மாவட்டத்தின் குடிநீர் ஆதாரமான பவானி ஆற்றை காகித ஆலை முதலாளிகளும் சாயப்பட்டறை அதிபர்களும் நஞ்சாக்கி நாசப்படுத்தும் கிரிமினல் நடவடிக்கையை எதிர்த்து, இப்பயங்கரவாதிகளை ஓட்டுச்சீட்டால் தண்டிக்க முடியாது; மக்கள் சர்வாதிகார மன்றங்கள் மூலம்தான் தண்டிக்க முடியும் என்பதை விளக்கி கோவை தோழர்கள் ""வேன்'' மூலம் தேக்கம்பட்டி, மேட்டுப்பாளையம், சத்தியமங்கலம் வட்டாரங்களில் விரிவான பிரச்சார இயக்கத்தை நடத்தினர். உழைக்கும் மக்கள் இப்பிரச்சார இயக்கத்தை உற்சாகமாக வரவேற்று ஆதரித்ததோடு, தேர்தலைப் புறக்கணித்து பயங்கரவாத முதலாளிகளை எதிர்த்துப் போராட உறுதியேற்றுள்ளனர்.
ஓட்டுப் பொறுக்கிக் குண்டர்களின் அச்சுறுத்தல்கள், போலீசின் அடக்குமுறை கைதுகள் என அனைத்தையும் எதிர்கொண்டு, உழைக்கும் மக்களின் பேராதரவோடு புரட்சிகர அமைப்புகளின் தேர்தல் புறக்கணிப்பு அரசியல் பிரச்சார இயக்கம் தமிழகமெங்கும் புரட்சிப் பயலாக வீசியுள்ளது. கோடிகோடியாய் வாரியிறைத்து ஓட்டுப் பொறுக்கிகள் நடத்திய ஆரவாரப் பிரச்சாரத்துடன் ஒப்பிடும்போது, இது மிகக் குறைவானதுதான் என்றாலும், இப்புரட்சிகர அரசியல் பிரச்சாரம் மக்களிடம் ஏற்படுத்திய தாக்கம் மிக உயர்வானது.
பு.ஜ. செய்தியாளர்கள்
No comments:
Post a Comment