தமிழ் அரங்கம்

Saturday, July 8, 2006

நாங்கள் நடுநிலைவாதிகள் அல்ல

நாங்கள் நடுநிலைவாதிகள் அல்ல

பி.இரயாகரன்
08.07.2006


புலித்தேசியம் ஜனநாயகத்தை மறுக்கின்றது. புலியெதிர்ப்பு ஜனநாயகம் தேசியத்தை மறுக்கின்றது. இதற்குள் நடுநிலை என்பதும் அல்லது இதில் ஒன்றை ஆதரிக்க கோருவதுமான விமர்சனங்கள் அர்த்தமற்றவை. இந்தப் போக்குகள் அனைத்தும் மக்களுக்கு எதிரானவை. புலியை அழிப்பது ஜனநாயகமும் அல்ல, புலியெதிர்ப்பை அழிப்பது தேசியுமுமல்ல.


அண்மையில் "தாயகத்தின் கண்ணீரையும் துயரையும் உலகுக்குச் சொல்ல புலம்பெயர் படைப்பாளிகளே! வாருங்கள்" என்று புதுவை இரத்தினதுரை அழைக்கின்றார். விசித்திரமான கோணங்கித்தனமான அழைப்பு. யாரைத் தான் அழைக்கின்றார்? அவர் சார்பு ஊடகங்கள் நடத்தும் புலிப் பல்லவிக்கு அப்பால், வேறு எதைத்தான் அவர் படைக்கக் கோருகின்றார். சரி எதைத்தான் ஒரு மனிதன் சுதந்திரமாக படைக்க முடியும்?


சரி, தமிழ் மக்களின் கண்ணீர் கதைகளை உலகுக்கு சொல்வது என்பதானால், எந்த உலகத்துக்குச் சொல்வது? சரி, எந்தக் கண்ணீர் கதையைக் கூறுவது? மக்களின் கண்ணீர் பற்றி மூக்கால் சிந்தி நடிப்பதற்கு அப்பால், புலிக்கு மனிதம் பற்றிய கோட்பாடே கிடையாது. மக்களின் சமூக பொருளாதார வாழ்வு மீது எந்த சமூக அக்கறையும் அவர்களிடம் கிடையாது. புலிகளின் மாபியாத்தனத்தையும், பாசிசத்தையும் கேள்விக்கு இடமின்றி ஆதரிக்கும், மந்தைக்குரிய இழிபிறவிகளாக மக்களைக் கருதி நடத்துவதே புலிக்கோட்பாடாகும். இதற்கு வெளியில் தமிழ் மக்களின் நலன் சாhந்த பேச்சுக்கு அங்கு இடமேயில்லை. அவர்கள் மொழியில் கூறுவதானால் அதாவது "மேதகு" தலைவர் பிரபாகரன் பெயரில் வெளியிட்ட துண்டுப்பிரசுரத்தில் "விடுதலைப் புலிகளை அரசியல் அனாதைகளாக்கக் கூடிய மேலும் இரு கோரிக்கைகள்" என்று புலிகள் அறிவித்து நிராகரித்த இரு கோரிக்கையும் என்ன எனப் பார்த்தால்


1.மக்களுக்கு எழுத்து, பேச்சு, கருத்து, பத்திரிகைச் சுதந்திரம் வேண்டும்.


2.மக்களுக்கு விரும்பிய அரசியல் ஸ்தாபனங்களில் இருக்கவோ அரசியல் நடத்தவோ சுதந்திரம் வேண்டும்.


இந்த இரு கோரிக்கைகளும் "புலிகளை அரசியல் அநாதையாக்கிவிடும்" என்று கூறியவர்கள் புலிகள். மக்கள் விரோதியான புலிகள் இதை மக்களுக்கு மறுத்தார்கள். பின் மக்களுக்காக எதைத் தான் அவர்கள் தரமுடியும். மக்கள் அடிமைகள் தான். உலகுக்கு எதைப்பற்றிச் சொல்வது. அடக்கப்பட்ட அடிமை நிலையில், சுதந்திரமான மூச்சுக் கூட வெளிவர முடியா நிலையில் மக்களின் நலன் சார்ந்த செயற்பாடுகள் நடைபெறமாட்டாது. புலியைப் பயன்படுத்தி நக்கித்தின்னும் ஓட்டுண்ணிகள் தான், தமது ஓட்டுண்ணியத் தரத்துக்கு ஏற்ப இலக்கியப் பிரச்சாரம் என்ற பெயரில் புலம்பமுடியும்.


புதுவை கூறுகின்றார் "இன்று உலகம் முழுமைக்கும் நாம் அறிந்தவரையில் 40 ஊடகங்கள் ஈழத் தமிழர்களால் நடத்தப்படுகின்றன. இதைத்தவிர பல்லாயிரக்கணக்கான படைப்பாளிகள் உள்ளனர்." என்கின்றார். இதில் எது சுதந்திரமானவை. மக்கள் நலனை எவை எப்படி வைக்கின்றன. இந்த ஊடகத்தின் நிலை என்ன? பேந்துவிடுவதைத் தவிர வேறு எதையும் உயிர்ப்பிக்கும் ஆற்றலற்றது. இதற்கு எல்லாம் செய்திகள் வழங்குவது நிதர்சனம் டொட் கொம் என்ற இழிவான மலிவான கட்டுக்கதைகள் உள்ளடங்கிய புலி செய்தி ஊடகம் தான். நிதர்சனம் டொட் கொம் பெத்துப் போட்ட, புலிகளின் பாலியல் வக்கிரத்தைக் கொட்டும் நெருப்பு டொட் ஓர்க் என்ற கேடுகெட்ட இணையங்கள் தான், இந்த 40 செய்தி ஊடகங்களையும் வழிகாட்டுகின்றனவே. இந்த கேடுகெட்ட அசிங்கத்தை தேசிய விடுதலை என்று, புதுவை நன்றி விசுவாசத்துடன் தலையில் வைத்துக் கொண்டாடலாம். ஆனால் மக்கள் அப்படி அல்ல.


நெருப்பு டொட் ஓர்க் பாலியல் வக்கிரங்களை தேசியத்தின் பெயரில் வக்கிரமாக வைக்கின்றது. இந்த மாதிரியான புலி வழிகாட்டிகள் உள்ளவரை, எப்படித் தான் தாயகத்தின் கண்ணீரை உண்மையாக எடுத்துச் சொல்ல முடியும். ஜெயதேவன் போன்றவர்கள் மீதான் பாலியல் அசிங்கங்களை முகம் மாற்றி ஓட்டி தேசியத்தின் பெயரால் அரங்கேற்றுகின்ற அரசியல், எப்படித் தான் உலகத்துக்கு எந்த நியாயத்தை சொல்லும். இந்த அரசியலுக்கு தார்மீக வலு கிடையாது. ஜெயதேவன் போன்றவர்களின் அரசியலை, அரசியல் ரீதியாக எதிர்கொள்ள முடியாது வக்கற்றுப் போனவர்கள், அவரை இழிவுபடுத்த பாலியல் ரீதியான அசிங்கத்தை சொந்த நீலப்பட தேசிய ரசனையுடன் செய்கின்றனர். இதைத் தான் தமிழ் தேசியம் வழிகாட்டுகின்றது என்றால், அதன் அர்த்தம் என்ன? தேசியத்தின் நியாயத் தன்மையை புலிகள் இழந்து நிற்கின்றனர் என்பதே அர்த்தம். இதற்கு வெளியில், அதாவது பாலியல் ரீதியாக தேசியத்தை நியாயப்படுத்துவதற்கு அப்பால் எந்த அரசியலும் கிடையாது என்று தான் அர்த்தம். தன்னுடைய எதிரியையே அரசியல் ரீதியாக அணுக முடியாத புலிகளின் அரசியல் வறுமையைக் கொண்டு, எப்படித் தான் தமிழ் மக்களின் கண்ணீரை உலகின் முன் வைத்துப் பேச முடியும். எதை வைத்து உலகுக்கு முன்னால் அழுவது? புதுவை நன்றி விசுவாசத்துடன் படங்களைக் காட்டி புலம்பலாம், ஆனால் அரசியல் ரீதியாகவல்ல. விரும்பினால் நிதர்சனம் டொட் கொம் வழிகாட்டி நடத்தும் நெருப்பு டொட் ஒர்க் போல் பாலியல் படங்களைப் போட்டு, உலகுக்கு பிரச்சாரம் செய்து பாருங்களேன். படுகொலைக்கு வெளியில் கருத்தை கருத்தாக பிரச்சார ரீதியாக எதிர்கொள்ள உங்களிடம் உள்ள ஓரே ஆயுதம் பாலியல் தான். சிலர் கொஞ்சம் நாகரீகமாக புலம்புகின்றனர். நிதர்சனம் டொட் கொம், நெருப்பு டொட் ஓர்க் புலிகளினுடையதல்லா (இதை அவர்களும் சொல்லுகின்றனர்) என்று கூறிக் கொள்வதன் மூலம், நாகரீகமாக நடிக்க முனைகின்றனர். அது அவர்களுடையதில்லை என்று விவாதிப்பதை விடுத்து, முடிந்தால், அந்த அரசியல் பாலியல் வக்கிரத்தை விமர்சித்து பாருங்களேன். அதை மட்டும் யாரும் செய்வதில்லை.


இன்று புலம்பெயர் செய்தி ஊடகங்களை வழிகாட்டுவது நெருப்பு டொட் ஒர்க்கும், நிதர்சனம் டொட் கொம்மும் தான். அதை வைத்துக் கொண்டு, அதை அனுசரித்துக் கொண்டு போராடக் கோருவதும், ஊடகத்தின் எண்ணிக்கையைக் காட்டி பீற்றிக் கொள்வதும் எதற்கும் உதவாது.


புதுவை ஒரு உண்மையை தனக்குத் தானே உறைக்கும் வகையில் ஒத்துக் கொள்கின்றார். "எங்களுடைய குரலை உங்களுடைய குரலினூடாக உலகத்துக்குச் சொல்லுங்கள். எங்களுக்குத் திருப்பிச் சொல்லாதீர்கள். நாங்கள் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். அதையே எங்களுக்குத் திருப்பிச் சொல்வதில் அர்த்தமில்லை. உலகுக்கு உங்கள் மொழியில் சொல்லுங்கள்." நல்லதொரு நகைச்சுவையான வேண்டுகோள். ஒரு உண்மை இப்படி அம்பலமாகின்றது. புலிகள் கட்டிவிடும் செய்திகள், தகவல்களை தமக்குள் தாம் பேசிக் கொள்வதையே புதுவை சொல்லாமல் சொல்லிவிடுகின்றார். இதைத் தாண்டி எதையும் யாரும் படைப்பதில்லை என்பதைத் தான் இங்கு மறபடியும் நாம் காண்கின்றோம். புலிக்குள் மட்டும், அவர்கள் தமக்குள் பரஸ்பரம் கூறிக்கொண்டு திருத்திபடுத்துவதற்கு அப்பால் இந்த புலி ஊடகங்கள் எதையும் செய்வதில்லை. உலகுக்கு சொல்வதற்கு முன், தமிழ் மக்களுக்கு சொல்வதற்கு கூட எதுவும் லாயக்கற்றது. மாட்டில் உள்ள உண்ணிகள் போல், சந்தர்ப்பவாத படைப்புலகம் புலியில் மொய்க்கின்றது. புதிதாக சமூக ஆற்றலுடன் படைக்க எந்த அரசியல் ஆற்றலுமற்று மண்டிக்கிடக்கின்றது. தமிழ்பேசும் மக்களுக்கு தேசியம் என்றாலே என்னவென்று தெரியாத அவலம், இதைப் போல் புலிகளின் எந்த படைப்பாளிக்கும் இதை விளக்க முடியாத அரசியல் அவலம். பிரபாகரன், புலிகள் இரண்டையும் சுற்றி மாரடிக்கின்ற ஒரு கும்பல், தனிமனித புகழ்பாடும் போர்பறையைத் தான் ஒப்பாரியாக முன்வைக்க முடியும்.


மக்களின் தேசிய வாழ்வுடன் ஒட்டும் உறவுமற்ற ஊனமான ஊமைகளின் பேச்சுத்தான் படைப்பாகின்றது. அதற்கு எந்த உயிர்துடிப்பும் இருப்பதில்லை. ஒப்புக்கு மாரடிக்கின்ற கூலி எழுத்தாளராக, சுயநலத்தின் பின்னால் நிற்பவர்கள் புலம்பத் தான் முடிகின்றது.


இந்த ஒப்புத்தனத்தை சார்ந்த உண்மையை புதுவை போகிற போக்கில் கூறிக் கொள்கின்றார். "சும்மா வெறுமனே அடித்தான் - கொத்தினான் என்று இல்லாமல் படைப்பாளியின் நெஞ்சுக்குள் ஆழப் பதிந்து இறங்குவதுபோல் சொல்ல வேண்டும். படைப்பின் மூலமே போராட்டங்கள் வெற்றி பெறுகின்றன." "அடித்தான் - கொத்தினான்" என்று புலித் தேசியம் அதையே செய்கின்ற போது, படைப்பும் அப்படித் தானே வெளிவரும். அல்லது சமாதானம் பற்றி நடிப்பதற்கு தமிழ்செல்வனின் விளம்பரப் பல்லுப் போல், தமிழ் நாட்டுச் சினிமா பாணி தேவை.


ஆழப்பதித்தல் என்கின்றீர்களே அது என்ன? "அடித்தான், கொத்தினான்" என்ற எல்லைக்குள் தேசியமே வரையறுக்கப்பட்ட நிலையில், இதைத் தாண்டி எப்படித்தான் சுயாதீனமாக சுதந்திரமாக படைப்பு வெளிவரும். வெட்டுவதும், சுடுவதும், கொத்திக் கிளறுவதும், பாலியல் வக்கிரத்தை சுமத்துவதும் சார்ந்த பொய்யும் புரட்டும் தேசியமாகிப் போன நிலையில், இந்த ஊடகங்களைச் சுற்றி பொறுக்குகின்ற கும்பல் இதற்குள் தான் மிதக்கின்றன. அன்றாடச் செய்திகள் கொத்துவதும், வெட்டுவதும், அடித்தல் பற்றியே வம்பளக்கின்றது. இதற்குள் எந்த தேசிய உணர்வும் இருப்பதில்லை. சிங்களவன் என்று ஒருமையிலும், அரசுடன் சம்பந்தப்படுத்தி அனைத்தையும் அடையாளம் காணும் கும்பல் பல்லிளித்து கொண்டாடும் நிலையில், தேசியம் இதற்குள் இசைவாகி புழுத்துக் கிடக்கின்றது. இதுவே தேசியத்தின் மொழியாகி, இதுவே படைப்பாகின்றது. மக்கள் நலன்களுடன் தொடர்பற்ற இழிசெயல்களாக, சமூக விரோத செயலாகவே மாறி நிற்கின்றது.


இந்த நிலையில் புதுவை இரத்தினதுரை கூறுகின்றார் "ஒட்டுமொத்தமாக இந்த விடுதலைப் போராட்டத்தை ஏற்கவில்லை என்று கூறுகிற படைப்பாளிகளை நாம் பெரிதாக எடுத்துக் கொள்ளத் தேவையில்லை. விடுதலைப் புலிகள் என்பது வெறும் சொல் அல்ல. விடுதலைப் போராட்டத்தின் சொல் தான் விடுதலைப் புலிகள். அவர்கள் சொல்லிக் கொண்டு இருக்கட்டும். நானில்லாமல் விடுதலைப் போராட்டமா? வெற்றி பெறுமா? என்று கூறுபவர்கள் இருக்கிறார்கள்- பழைய போராளிகள் என்ற போர்வையில். அவர்கள் இருக்கட்டும்." என்ன அலட்சியமான, ஆனால் குதர்க்கமான பாசிசப் பதில். அவர்கள் ஏன் ஏற்றுக் கொள்ளவில்லை? அவர்கள் அதை ஏற்றுக் கொள்ளாமைக்கு தாங்கள் காரணமில்லையோ? அதை ஆராய்ந்து தீர்க்க முனைவது தேசியக் குற்றமோ? விடுதலைப் போராட்டத்தை ஏற்கவில்லை என்பதை சொல்வது சரியா பிழையா என்பதற்கு அப்பால், இந்த நிலைமைக்கான அரசியல் காரணத்தை தெரிந்து அதை நிவர்த்தி செய்வதற்குரிய பொறுப்பை அலட்சியப்படுத்துகின்ற வழிகாட்டல், தேசிய விடுதலைப் போராட்டமல்ல. இதனால் எதையும் மக்களுக்காக படைக்க முடியாது.


அந்த காரணத்தை ஆராய்வதும், அதில் நியாயமான கூறுகளை அதாவது தவறுகளை சுயவிமர்சனம் செய்வதும் மட்டும் தான், உண்மையானது நியாயமானது நேர்மையானது. மாறாக அதை செய்ய மறுப்பது என்பது, நேர்மையற்ற போராட்டத்தை துதிபாடி தக்கவைக்கும சொந்தக் குதர்க்கமாகவே வெளிப்படுகின்றது. நக்கித்தின்னும் தனது சொந்த விசுவாசத்தையே இது பறைசாற்றுகின்றது.


இப்படி நக்கியபடி புதுவை இரத்தினதுரை முக்கியமான விடையத்தை கூறுகின்றார். "நீதிக்கும் அநீதிக்கும் இடையே "நடு" என்ற ஒரு வார்த்தை உண்டா? சுத்தத்துக்கும் அசுத்தத்துக்கும் இடையே "நடு" என்ற ஒருவார்த்தை உண்டோ? அளவான சுத்தம் - அளவான அசுத்தம் என்று உள்ளதோ? அது போக்கிரித்தனம். இந்தப் போராட்டத்தை எதிர்க்கிறவர்கள் நேர்மையானவர்கள். நடுநிலைமை என்பதற்கு தமிழிலே வார்த்தைகளே இல்லை. தன்னுடைய இயங்கும் தன்மையை வைத்துக்கொண்டே நடுநிலைமையாளன் உருவாகிறான். எவன் தனியே எழுதிக் கொண்டும் பாடிக் கொண்டும் ஆடிக்கொண்டும் மட்டும்தான் இருப்பேன் என்பவர்கள்தான் நடுநிலை பற்றி பேசுவார்கள். காலாவதியான பொருட்களை கையில் எடுத்து வைத்திருப்பார்கள். அவர்கள் புதிதாகச் செய்வதே காலாவதியான பொருட்களை வைத்திருப்பதுதான்."


இந்த விமர்சனம் நேரடியாக எம்மை நோக்கி எமக்கு மட்டும் வைக்கப்படுகின்றது. காலாவதியான பொருள் என்பது மக்கள் என்று கூறுவதும், அவர்களின் விடுதலைத் தத்துவமான மார்க்சியத்தையே. சமாதானம் அமைதி என்று நடிக்கத் தொடங்கிய காலத்தில் புதுவை இரத்தினதுரை "நான் இன்றும் மார்க்ஸீயவாதியே" என்று பத்திரிகையில் அறிவித்தவர். அவர் இன்று அந்தக் கோட்பாடு காலாவதியானது என்கின்றார். சந்தர்ப்பவாதிகள் சந்தர்ப்பத்துக்கு ஏற்ப நக்கிப் பிழைப்பவர்கள் தான். முன்னர் புலம்பெயர் வாழ் தமிழனை வெள்ளையனை நக்கித்தின்னும் கூட்டம் என்றவர், பின் வெள்ளையனை நக்கித் திண்னும் கூட்டம் பணம் கொடுத்த போது, போராட்டத்தின் செம்மல்கள் என்றவர் இவர். இது போல் தான் காலாவதியான கோட்பாடு பற்றி அவரின் சந்தர்ப்பவாத பிதற்றலாகும். "நான் இன்றும் மார்க்ஸீயவாதியே" என்று கூறியதன் பின்னுள்ள போலித்தனத்தையம் நான் முன்பே விமர்சித்தேன். அதையும் பொருத்தமாகவே இணைத்துப் படிக்கவும்.


"சந்தர்ப்பவாதத்துடன் கூடிய பிழைப்புவாதம் பித்தலாட்டத்தை பிரகடனம் செய்கின்றது"


மக்களை வெறுக்கின்ற அவருக்கு மக்கள் கோட்பாடுகள் காலாவதியாகியிருக்கலாம். மக்களின் வாழ்வு சார்ந்து எவையும் காலாவதியாகிவிடுவதில்லை. இங்கு நடுநிலை என்பதை விடுதலைப்புலிகளை ஆதரிப்பது, எதிர்ப்பது என்ற எல்லைக்குள், வைத்து பேசுகின்றார். அவரின் பாசிச அறிவு அப்படி உள்ளது. விடுதலைப் புலிகளை விமர்சிக்கின்ற, புலியெதிர்ப்புக் கும்பலை எதிர்க்கின்றவர்களை குறித்துப் பேசுகின்றார். உண்மையில் இவர்கள் நடுநிலைவாதிகளல்ல.


புலிகளை ஆதரிக்க வெண்டும் அல்லது எதிர்க்க வேண்டும். இதேபோல் புலியெதிர்ப்புக் கும்பல் தம்மை ஆதரிக்க வேண்டும் அல்லது எதிர்க்க வேண்டும். இப்படித் தான் இந்த இரண்டு பகுதியும், தமக்கு இடையில் வேறுபாடின்றி மாற்றுக் கருத்தையே மறுதலித்து நிற்கின்றது. உள்ளடக்கத்தில் புலியை ஆதரிப்பது தேசியம் என்கின்றனர். புலியை எதிர்ப்பது ஜனநாயகம் என்கின்றனர். மிக நுணுகிப் பாhத்தால் புலியை ஒழிப்பது ஜனநாயகம் என்கின்றனர். புலியை ஆதரிக்க மறுப்பவர்களை கொல்வது தேசியம் என்கின்றனர். இப்படி உள்ள ஒரு நிலையில் புதுவை நடுநிலை பற்றி புலம்புகின்றார். உண்மையில் நடுநிலையை ஒன்றுக்கு சார்பாக மாற்றி எடுக்க கோருகின்றார். இவர்கள் தம்மையும் ஆதரிப்பதிலலை, புலியெதிர்ப்பு அணியையும் ஆதரிப்பதில்லை என்று கூறி புலம்புகின்றார். இவர்கள் ஒடுக்கப்பட்ட மக்களை ஆதரிப்பதாகவும், காலாவதியான கோட்பாட்டுக்கு விசுவாசமாக இருப்பதாகக் கூறுகின்றார்.


அவர் கூறுவது போல் "காலாவதியான பொருட்களை கையில் எடுத்து வைத்திருப்பார்கள். அவர்கள் புதிதாகச் செய்வதே காலாவதியான பொருட்களை வைத்திருப்பதுதான்" என்ற உளறுகின்றார். அதாவது ஒடுக்கப்பட்ட மக்களின் கோட்பாட்டை வைத்திருப்பதாக கூறுகின்றார். இதையே அவர் எள்ளி நகையாடுகின்றார். இதை வைத்திருப்பவர்கள் எப்படி நடுநிலைவாதிகள் என்று கூறமுடியுமா? இதை வைத்திருப்பவர்களைப் பற்றி முரண்பாடாகவே நடுநிலை என்று கூறுவது, உளறலாகவே வெளிவருகின்றது. நடுநிலைபற்றிய புதுவையின் உள்ளடகத்தில் தான், புலியெதிர்ப்பு அணியும் கருத்துரைக்கின்றது. காலாவதியான பொருளை வைத்து புதிதாக செய்வதைக் கண்டு, ஏன் மினக்கெட்டு அழவேண்டிக் கிடக்கு. நீங்கள் கருதும் காலாவதியான பொருள், மக்கள் வாழ்வு சார்ந்து புத்தம் புதிதாகவே இருக்கின்றது என்ற உண்மையே புதுவையை புலம்ப வைக்கின்றது.


உள்ளடகத்தில் பார்த்தால் நீங்கள் உங்களை அறியாமல் ஒத்துக் கொண்டது போல், நிங்கள் மட்டும் தனியாக உங்களுக்குள் பேசிக் கொண்டும் ஆடிக்கொண்டும் இருக்கின்றீர்கள் என்ற உண்மையை இது மறுதலித்துவிடவில்லை. அதை மாற்றக் கோரியே கருத்துரைக்கும் நீங்கள், மற்றவன் பற்றி புலம்புவது தான் முரண்பாடு.


காலாவதியான ஒடுக்கப்பட்ட மக்களின் நலனை உயர்த்துகின்ற கோட்பாடு சார்ந்தோர் புதுவை கூறுவது போல் "போக்கிரி"களாகவே இருக்கட்டும். வரலாறும் காலமும் யார் போக்கிரிகள் என்பதற்கு பதிலளிக்கும். புதுவை கூறுவது போல் "தன்னுடைய இயங்கும் தன்மையை வைத்துக்கொண்டே நடுநிலைமையாளன் உருவாகிறான். எவன் தனியே எழுதிக் கொண்டும் பாடிக் கொண்டும் ஆடிக்கொண்டும் மட்டும்தான் இருப்பேன் என்பவர்கள்தான் நடுநிலை பற்றி பேசுவார்கள்" என்று நடுநிலைபற்றிக் கூறுவதை கண்டு நகைக்கத்தான் முடியும். "தனியே எழுதிக் கொண்டும் பாடிக் கொண்டும் ஆடிக்கொண்டும் மட்டும்தான்" இருப்பவனைக் கண்டு, ஏன் புகைந்து வெடிக்கின்றீர்கள். 40 மேற்பட்ட ஊடகத்தை வைத்துக் கொண்டு இயங்கும் நீங்கள், தனியாக பாடுபவனைக் கண்டும், ஆடுபவனைக் கண்டும், காலாவதியான கோடபாட்டைக் கண்டு ஏன் குமுறிப் புலம்புகின்றீர்கள். போராட்டத்தை எதிர்ப்பவர்களை நேர்மையாளன் என்று கூறும் நீங்கள், உங்களை "காலாவதியான" கோட்பாடு சார்ந்து விமர்சனம் செய்பவர்களை "போக்கிரித்தனம்" என்கின்றிர்களே, இதன் அரசியல் தாற்பரியம் தான் என்ன?


நடுநிலை என்பது சாராம்சத்தில் கிடையாது. உண்மையில் புலிகளை ஆதரிப்பது அல்லது எதிர்ப்பது என்று உலகத்தை இதற்குள் வரையறுத்து வைத்துக் கொண்டு கேட்பது நகைச்சுவையானது. தமிழ் மக்களின் அவலமான வாழ்வை வைத்து சூதாடுவது தான் நடக்கின்றது. விடுதலைப்புலிகள் என்றால், அதை ஏன் எதற்காக நாம் ஆதரிக்க வேண்டும்?


விடுதலைப் புலிகளுக்கும் தேசிய விடுதலைக்கும் என்ன சம்மந்தம்? தேசிய விடுதலை என்றால் என்ன? மக்களின் தேசியம் என்றால் என்ன? புலியின் தேசியம் தான் என்ன? மக்கள் போராடுகின்றனர் என்கின்றனர். மக்களுக்காகத் தான் போராடுகின்றோம் என்கின்றனர். ஆனால் அந்த மக்களுக்கு ஜனநாயகம் கிடையாது. மக்கள் வாய்பொத்தி, கண்ணைக் கட்டி, கையைக் கட்டியபின், சொல்வதை கேட்கும் அடிமைகள் தான் என்பது தான் புலியின் தேசிய சித்தாந்தம். மக்களின் சமூக பொருளாதார வாழ்வு சார்ந்த தேசியம் வேறு, புலித் தேசியம் வேறு.


போராட்டத்தை ஆதரிப்பது என்பது விடுதலைப் புலிகள் எந்தளவுக்கு மக்கள் நலனை முன்னெடுக்கின்றனர் என்பதுடன் தொடர்புடையது. அதை புதுவை விளக்க வேண்டும். அதை உலகுக்கு விளக்க வேண்டும். கிளிநொச்சி மருத்துவமனைக்கு ஒரு இலட்சம் தலைவர் கொடுத்ததை காட்டிப் பீற்றும் உங்கள் 40 ஊடகத்துறையும், ஒரு இலட்சத்தைப் போல் பல இலட்சங்களை தமிழ் மக்கள் கொடுத்துள்ளனரே அதைப்பற்றி நாம் இதனுடன் ஓப்பிட்டு சிந்திக்கின்றோம். போயும் போயும் ஒரு இலட்சத்தை பெரிதாக படம் பிடித்து காட்டுகின்றார்கள் என்றால், எப்படிப்பட்ட மக்கள் விரோதிகளாக இருக்கின்றனர் என்பதையே காட்டுகின்றது.


இராணுவம் செய்த நாலு கொலை, இனம் தெரியாத நபர்கள் செய்த சில கோரக் கொலைகள், இதைவிட்டால் புலம் பெயர்ந்தவன் பிரச்சாரம் செய்ய வேறு அரசியல் கிடையாது. அதாவது படுகொலையை விட்டால் புலிக்கு அரசியல் கிடையாது போல், மலிவான சில கோரப் புகைப்படங்களை விட்டால் பிரச்சாரம் செய்ய வேறு அரசியல் கிடையாது. இந்த நிலையில், இந்த நிலையைத் தக்கவைத்துக் கொண்டு, நிலத்துக்குள் தலையை புதைக்கத் தான் முடியும். இந்நிலையில் இவர்கள் காலாவதியான கோட்பாட்டின் நிழலைப் பற்றி புலம்புகின்றனர்.


நாங்கள் வைப்பது மக்கள் அரசியல். புலி ஆதரவுமல்லாத புலி எதிர்ப்பும் அல்லாத அரசியல். மக்களுக்கு எது தேவையோ, எதை அவர்கள் தமக்குள் சிந்திக்கின்றனரோ, அதை அரசியலாக நாம் முன்வைக்கின்றோம். நாங்கள் தனித்துவமாக மக்களின் பிரச்சனைகள் மீது போராடுகின்றோம். இதைப் புலிகளோ, புலியல்லாத புலியெதிர்ப்புக் கும்பலோ செய்வதில்லை. இது நடுநிலையல்ல. ஒரு சார்பானவையல்ல. மக்கள் சார்பானவை.


புதுவையின் குருட்டுக் கண் புலித் தேசியக் கண்ணாடிக் ஊடாக பார்ப்பது போல் அல்ல. அவர் "அப்படியான படைப்பாளிகள் எங்கும் இருப்பார்கள். நடுநிலைமை என்பது தப்பித்துக் கொள்ளுதல். நடுநிலைமையை மீறி பட்டுப்படாமல் செல்லும் போக்கும் உண்டு. பின்பக்கம் பார்த்தால் கிளிபோலும் முன்பக்கம் பார்த்தால் காகம் போலும் இருக்கும். அப்படியான படைப்பாளிகளும் இருக்கிறார்கள்." என்று இப்படி விளக்குவது அபத்தமாகும். அனைத்தையும் தமக்குள் சம்பந்தப்படுத்திவிடுவது இங்கு நிகழ்கின்றது. காலாவதியான கோட்பாடு பற்றி கூறும் இவர் தான், இப்படி கிளி காகம் பற்றி தனது சொந்தப் பார்வை கோளாற்றை இப்படி வெளிப்படுத்துகின்றார். அங்கு உண்மையில் காகமும் இருப்பதில்லை, கிளியும் இருப்பதில்லை என்ற உண்மையே நிதர்சனமானது. மக்கள் நலனை முன்னிலைப்படுத்தும் போக்கு, வாலும் மூஞ்சையும் விதவிதமாக தெரிவதில்லை. அப்படி யாருக்குத் தெரிகின்றது என்றால், மக்களை எதிரியாக கருதி அனுதினமும் செயற்படுகின்ற அனைத்து தரப்புக்கும் இப்படித் தெரிவது இயல்பு. சொந்த அரசியல் பலவீனம், எதிரியை அரசியல் ரீதியாக எதிர்கொள்ள முடியாத அவலம், மக்கள் சார்பான எமது நேர்மையான போராட்டத்தில் தமக்கு சார்பாக வாலையும் மூஞ்சையையும் கண்டு கொள்கின்றது.


அண்மையில் சத்தியக் கடதாசி விவாதத்தளத்தில் "இரயாகரன் அவர்களே! புலி எதிர்ப்புக்கும்பல் எதிர்ப்புக்கும்பல் என்று ஆரவாரிக்கிறீர்களே? நீங்கள் என்ன புலி ஆதரவுக் கும்பலா?" என்று கேட்கின்றனர். இப்படித் தான் புதுவையும் யோசிக்கின்றார். சற்று மேலே சென்று நடுநிலைவாதிகள் என்கின்றார். சொந்த போராட்டத்தின் நியாயத்தன்மையை சொல்ல முடியாத கையறுநிலை, தேசியத்தை புரிந்து விளக்கும் எமது நிலையை நடுநிலையாகக் காட்டத் தோன்றுகின்றது. புலிகளின் தேசியம் வேறு, தமிழ் மக்களின் தேசியம் வேறு. தமிழ் மக்களின் ஜனநாயகம் வேறு. புலியெதிர்ப்புக் கும்பலின் ஜனநாயகம் வேறு.


புலித் தேசியம் தமிழ் மக்களுக்கு ஜனநாயகம் அவசியமில்லை என்கின்றது. புலியெதிர்ப்புக் கும்பல் தமிழ் மக்களுக்கு தேசியம் அவசியமில்லை என்கின்றது. நாங்கள் இரண்டும் தமிழ் மக்களுக்கு அவசியமானது என்கின்றோம். இரண்டுபக்க உண்மையையும் ஏற்றுக் கொள்ளாதவர்கள், எம்மை அங்குமிங்குமாக தேடியலைவதும், நடுநிலை என்பதும் புலி ஆதரவு என்பதும் புலி எதிர்ப்புக்கு ஆதரவு என்பதும் இன்று பொதுவான கருத்தாக வைக்கப்படுகின்றது. மாற்றுக் கருத்தே இருப்பதை மறுதலிப்பதாகும். அவர் அவர் போட்டுள்ள குருட்டுக் கண்ணாடிக்கு ஏற்ற வகையில் அரங்கில் கூத்தாடுகின்றனர்.


புதுவை மேலும் கூறுகின்றார். "இந்த விடுதலைப் போராட்டத்தைப் பற்றியான விமர்சனங்கள் உண்டு. இந்த விடுதலைப் போராட்டம் சரிக்கும் பிழைக்கும் இடையேதான் ஓடுகிறது. ஏற்றுக் கொள்கிறோம். நாங்கள் தாயகத்திலே உட்கார்ந்து கொண்டு புல்லாங்குழல் வாசிக்கவில்லை. பூப்பறிக்கவில்லை. உயிரோடு விளையாடுகின்ற சாவோடு விளையாடுகின்ற போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறோம். இந்தப் போராட்டத்தின் நியாயத்தன்மையை கொஞ்சமாவது புரிந்து கொள்ள வேண்டும். சரியும் பிழையும் இருக்கலாம். விகிதாசாரத்தில் எது அதிகம் என்று பார்க்க வேண்டும்.


எல்லோருக்கும் சரியானதான ஒரு போராட்டத்தை - எல்லோரும் கூடி ஒரு விடுதலைப் போராட்டத்தை நடத்துவது என்றால் "விடுதலைப் புலிகள்" என்ற பெயரைக் கூட தலைவர் இன்னமும் வைத்திருக்க முடியாது. கதைத்துக் கொண்டே இருந்திருப்போம்.

இந்த விடுதலை என்பது வேண்டுமா இல்லையா? நாய்க்கும் மரத்துக்கும் இருக்கிற விடுதலை ஈழத் தமிழனுக்கும் வேண்டும் அல்லவா?"
புலிகள் பற்றிய விமர்சனத்தின் மீதான பொதுத் தன்மையை, அதன் உண்மையையும் மறுக்க முடியாத இன்றைய நிலையில் தான், விமர்சனம் உண்டு என்பது அண்மையில் முன்வைக்கப்படுகின்ற புலிகளின் அரசியல் மோசடியாகும். புலிகளின் மிதவாத பிரிவுகள் புதுவை இரத்தினதுரையைப் போல் கூற முனைகின்றனர். இதை ஒப்புக்கு பாடுவது நிகழ்கின்றது.


விமர்சனங்கள் உண்டு என்றால் அது என்ன? அந்த விமர்சனங்களை உங்கள் அமைப்பில் உள்ளவர்கள் எப்போது எங்கே ஏற்றுக்கொண்டார்கள்? அந்தத் தவறே என்னவென்று தெரியாத சூக்குமநிலை. உண்மையில் சூக்குமமாக நடுநிலையாக கருத்தை மையப்படுத்தி அங்குமிங்குமாக வெட்டியோடுவதே புலியின் அரசியல் மோசடியாகும். விமர்சனம் உண்டு என்றால், நேர்மையாக அதை சுயவிமர்சனம் செய்யுங்கள். அதன் அடிப்படையில் நாம் உங்களைச் சீர்தூக்கி ஆராயமுடியும்.


"சரிக்கும் பிழைக்கும் இடையேதான் ஓடுகிறது" என்றால் நடுநிலையாக ஒடுகின்றதோ? "அளவான சுத்தம் - அளவான அசுத்தம் என்று உள்ளதோ?" என்ன தடுமாறி முரண்படுகின்றீர்கள். உங்கள் சரி என்ன? பிழை என்ன? இடையில் அது என்ன? அது எப்படி ஒடுகின்றது. மற்றவனை நடுநிலை பட்டம் கட்டியபடி, ஊரையும் உலகத்தையும் ஏமாற்ற நடுநிலை வேஷம் தேவையாக இருக்கின்றது. நல்ல நடிப்பத் திறனும் மோசடித்தனம் உதவுகின்றது. சரி தவறு என்ற தெரிந்த பின்பு, எப்படி அதை வைத்துக் கொண்டு நடுவிலே ஒடுவது! தவறைச் சரி செய்ய மறுப்பது என்ன அரசியல்.


இப்படி தவறையே பாதுகாத்தபடி கூறுகின்றார் "நாங்கள் தாயகத்திலே உட்கார்ந்து கொண்டு புல்லாங்குழல் வாசிக்கவில்லை. பூப்பறிக்கவில்லை. உயிரோடு விளையாடுகின்ற சாவோடு விளையாடுகின்ற போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறோம். " போராட்டம் என்றால் என்ன என்பதையே இது மறுக்கின்றது. முன்பு பாலகுமார் அமைதி சமாதானம் பேசி நடித்தபோது யாழ். பல்கலைக்கழகத்தில் ஆற்றிய உரையில் "எமது போராளிகளுள் அநேகமானவர்கள் வயதில் கூடியவர்களாக உள்ளனர். அவர்கள் தமது மன உளைச்சல்களை ஆசைகளைக் கட்டுப்படுத்தியுள்ளனர். இங்குள்ளவர்கள் என்றால் சுதந்திரமாக விசில் அடிக்க, பீடிபிடிக்க, கள் குடிக்க முடியும். ஆனால், எமது போராளிகள் அப்படிச் செய்ய முடியாது" என்றார். என்ன மனநிலை. சுதந்திரம் பற்றி வக்கிரம். இதைத் தான் புதுவை இரத்தினதுரையும் கூறுகின்றார்.


புல்லாங்குழல் வாசிப்பதையும், பூப்பறிப்பதைக் கூட போராட்டத்தின் ஒரு அங்கமாக எற்றுக் கொள்ளாத வக்கிரம். மக்களின் வாழ்வுடன் சம்மந்தப்படாத தனிமையான மக்கள் விரோதப் போக்கு. அனைத்துவிடையமும், போராட்டதுடன் சம்பந்தப்பட்டதே. இதைப் புரிந்துகொள்ள முடியாதவர்களின் தலைமை முக்கினாலும், இலக்கியம் பற்றி பேசினால் எப்படி இருக்கும். அதன் அவலம் சமூக மயமாகிவிடும்.


புதுவை கூறுகின்றார் "இந்தப் போராட்டத்தின் நியாயத்தன்மையை கொஞ்சமாவது புரிந்து கொள்ள வேண்டும். சரியும் பிழையும் இருக்கலாம். விகிதாசாரத்தில் எது அதிகம் என்று பார்க்க வேண்டும்.


எல்லோருக்கும் சரியானதான ஒரு போராட்டத்தை- எல்லோரும் கூடி ஒரு விடுதலைப் போராட்டத்தை நடத்துவது என்றால் "விடுதலைப் புலிகள்" என்ற பெயரைக் கூட தலைவர் இன்னமும் வைத்திருக்க முடியாது." என்கின்றார்.


அந்த நியாயத்தை நீங்கள் சொல்லுங்கள்? நீங்கள் சொல்லும் நியாயம் தான் என்ன? நீங்கள் நியாயத்தை மதிக்கின்றீர்களா? மக்களின் நியாயத்தை அங்கீகரிக்கின்றீர்கள? மக்களை எப்படி நடத்துகின்றீர்கள்? விகிதாசாரத்தின் அடிப்படையில் எது அதிகம் என்று, உங்கள் சரிக்கும் பிழைக்கும் இடையில் வரையறுத்து எடுத்துக் காட்டுங்கள். எது கூட? எது குறைவு? என்று முன்வையுங்கள். தவறை ஏன் திருத்த முடியாது. பிழையை ஏன் திமிராக மறுக்கின்றீர்கள். அந்த பிழை தான் என்ன என்று நீங்கள் அடையாளம் காண்கின்றீர்களா?


"எல்லோரும் கூடி ஒரு விடுதலைப் போராட்டத்தை" ஏன் நடத்த முடியாது என்பது நகைச்சுவையான வாதத்துக்கு அப்பால், இது வெட்கக் கேடானது. மக்களின் நலனை முன்வைக்கும் படியே நாம் மீண்டும் மீண்டும் கோருகின்றோம். நிதர்சனம் டொட் கொம் நெருப்ப டொட் ஓர்க்கும் நடத்துகின்ற அரசியல் இழிநிலைக்கு நீங்கள் இணங்கி போகும் வரை, விடுதலைப் போராட்டம் மக்களுக்கு எதிரான அனைத்துடனும் சங்கமமாகின்றது.

"முழுமையான விடுதலைக்கான எல்லைகளைத் தொட்டு நிற்கும் தூரத்தில் நிற்கிறோம் நாம்.

உங்களது விமர்சனங்களை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள்.

விடுதலைப் போராட்டத்தின் பக்கத்தில் எரிகின்ற நெருப்புக்குப் பக்கத்தில் தயவு செய்து தண்ணீர் ஊற்றிவிடாதீர்கள். தீக்குளித்துக் கொண்டிருக்கிற தேசத்திலிருந்து நாம் இதைக் கேட்கிறோம்."


நீங்கள் விமர்சனத்தை ஏற்றுக் கொண்டு அதை நடைமுறைப்படுத்துங்கள், நாங்கள் உங்களை ஒருநாளும் அணையவிட மாட்டோம். "உங்களது விமர்சனங்களை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள்." என்ற சொல்லி மக்களை அடிமைப்படுத்துவதை, அவர்களின் வாழ்வை இழிவுபடுத்துவதை எப்படி நாம் அனுமதிப்பது.


மக்களுக்காக போராடுங்கள். தியாகங்களை மக்களின் சமூக பொருளாதார வாழ்வுடன் இணையுங்கள். அப்போது அதைப் புலிகள் செய்தால், அதன் தலைவர்கள் அதற்கு உண்மையாக இருந்தால் வாழ்வார்கள். இதைவிடுத்து புலிக்காக தனிமனிதனுக்காக மட்டும் சிந்தித்தால், அதை தமிழ் மக்கள் ஒருநாளும் ஆதரிக்க மாட்டார்கள். தமிழ்மக்களுக்காக அனைத்தையும் மாற்றுங்கள். மக்களின் சமூக பொருளாதார உறவுகளில் இருந்து தேசியத்தை முன்வையுங்கள்.


No comments: