தமிழ் அரங்கம்

Wednesday, August 2, 2006

'வல்லரசாகும்" இந்தியா கையேந்தியாகும் மக்கள்

'வல்லரசாகும்" இந்தியா கையேந்தியாகும் மக்கள்

""ந்தியா ஒரு பொருளாதார மேல்நிலை வல்லரசாக உருவாகி வருகிறது'' என்ற செய்தி, ஊடகங்களில் நிரம்பி வழிகின்றது. குலுக்கித் திறக்கப்பட்ட ""பீர்'' பாட்டிலைப் போல இந்தியப் பொருளாதாரத்தின் ""வளர்ச்சி'' குறித்த மகிழ்ச்சியில் பத்திரிகைகள் புள்ளி விவரங்களால் பொங்கி வழிகின்றன.


தொடர்ந்து நான்காண்டுகளாக மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 7 சதவீதம். அடுத்தடுத்த மூன்றாண்டுகளாக ஏற்றுமதியின் அதிகரிப்பு 20 சதவீதம். கூட்டுப் பங்கு நிறுவனங்களின் கடன்கள் 30 சதவீதத்திற்கும் மேலாகும்.


முதலீடுகளின் அதிகரிப்பு 40 சதவீதம்; புதிய திட்டங்கள் பல்வேறு முக்கிய துறைகளையும் கடந்து பரவுகின்றன. 2006ஆம் ஆண்டுக்கான அடிப்படைக் கட்டுமானச் செலவுகள் 95,000 கோடி ரூபாய்கள் அதாவது இரண்டு மடங்கு.


கடந்த ஐந்தாண்டுகளில் உச்சபட்சமாக 2005இல் மட்டும் சம்பள உயர்வு 14 சதவிகிதம் அதிகரித்திருக்கிறது. 20052006 ஆம் ஆண்டில் மிகப் பெரும் அளவிலான வேலை வாய்ப்புகள் அதிகரிப்பு, நகர்ப்புறக் குடும்பங்களுக்கான வேலை மற்றும் நிதி உத்திரவாதங்களை அளித்துள்ளன.


வீட்டு வசதிக் கடன்களின் அதிகரிப்பு 56 சதவீதம்; நுகர்வோர் கடன் அதிகரிப்பு 40 சதவீதம்; பங்குச் சந்தையிலும் வீடு வீட்டுமனைத் தொழிலிலும் ஏற்பட்டுள்ள செழிப்பு, விருப்பம் போல செலவிடச் செய்துள்ளது.


உலகிலேயே இரண்டாவது பெரிய சந்தையாக இந்தியாவை மாறச் செய்யுமளவு செல்பேசிகளின் அதிகரிப்பு 53% சதவீதம். விமானச் சேவை மற்றும் மோட்டார் வாகன தொழில்களின் செழிப்பு, உலகிலேயே மிகவும் இளம்பிரிவு உழைப்புச் சக்தியும் இந்த முன்னேற்றத்தை சாதித்துள்ளன.


இந்தியப் பொருளாதாரத்தின் வளர்ச்சியைப் பத்திரிகையாளர்கள் மேற்கண்டவாறு தொகுத்துள்ளனர்.


உலகின் முன்னணிப் பன்னாட்டுத் தொழில் கழகங்களின் தலைவர்கள் அனைவரும் இந்தியப் பொருளாதார வளர்ச்சி குறித்துப் பிரமித்துப் போயிருக்கிறார்களாம்.


""கடந்த 15 ஆண்டுகளில் பொருளாதாரத்தில் இந்தியா காட்டிய வேகம் அசாதாரணமானது'' என்கிறார் உலக வங்கியின் தலைவர் பால் வுல்போ விட்ஜ்.


""உலகமயமாக்கத்தின் குவி மையமாக இந்தியமாறுவதற்குத் தகுந்தவாறு அதன் நட்சத்திர பலன்கள் கூடி வருகின்றன'' என்கிறார் சர்வதேச நிதி நிறுவனத்தின் பொருளாதார ஆலோசகர் ரகுராம் ராஜன்.


""மென்பொருள் தொழில் வித்தகர்களின் பிரமிக்கதக்க மையத்தை இந்தியா கொண்டிருக்கிறது. இதிலிருந்து உலகம் ஆதாயம் பெற வேண்டும்'' என்கிறார், உலக மென்பொருள் ஏகபோக முதலாளி பில்கேட்ஸ்.


""இந்தியா ஒருநாள் உலகிலேயே அதிவேக வளர்ச்சியுடைய நாடாக இருக்கும்'' என்கிறார் வெர்ஜின் அட்லாண்டிக் விமான சேவை நிறுவனத்தின் தலைவர் சர் ரிச்சர்டு பிரான்சன்.


""இந்தியா மிக வேகமாகப் பொருளாதார வளர்ச்சியுடைய டுகளில் ஒன்று; ஆசியாவின் வளர்ச்சியை உந்திச் செல்லக் கூடியது'' என்கிறார், ஜெர்மனியின் சீமன்ஸ் நிறுவனத் தலைவர் லாஸ் லெயின்ஃபீல்டு.


""உலகின் முன்னணி தொழில்நுட்ப மையங்களில் ஒன்றாக இந்தியா உருவாகி வருகிறது'' என்கிறார் கணினித் தொழிலில் முன்னணி நிறுவனமான இண்டெல் தலைவர் கிரைக் பேரட்.


""ஏழை தேசங்களின் வளர்ச்சித் தீர்வுகளின் சோதனைச் சாலையாக இந்தியா விளங்க முடியும்'' என்கிறார் பிலிஃப்சு நிறுவனத் தலைவர் ஜிரார்டு லெய்ஸ்டர்லீ.


பன்னாட்டுத் தொழில் கழகங்கள் இந்தியப் பொருளாதாரம் குறித்து இவ்வாறான கருத்துக்கள் வைத்திருப்பதால் அந்நிய நேரடி முதலீடும், அந்நியத் தொழில் முதலீடும் ஏராளமாக வந்து குவிகின்றன. இதனால் பங்குச் சந்தைக் குறியீடு எண் 12,000 அளவைத் தாண்டிவிட்டது.


இதோடு அந்நியச் செலாவணிக் கையிருப்பு பல ஆயிரம் கோடி ரூபாயாகக் குவிந்திருக்கிறது. இதுவரை வெளிநாட்டிலவாழும் இந்தியர் அனுப்பி வைக்கும் தொகையே அந்நியச் செலாவணி கையிருப்பில் முக்கியமாக இருந்தது. இப்போது மொத்தக் கையிருப்பில் இது மிகச் சிறிய அளவாகி விட்டது; ஏற்றுமதி தொடர்ந்து அதிகரித்து வருவதால் முக்கியமாக அந்நியச் செலாவணி கையிருப்பு மலையளவு உயர்ந்துவிட்டது.


இந்த ஆண்டு மட்டும் மென்பொருள் ஏற்றுமதியால் டாடா கன்சல்டன்சி, இன்போசிஸ், சத்யம், விப்ரோ போன்ற மென்பொருள் ஏற்றுமதி நிறுவனங்கள் ஒரு இலட்சம் கோடி ரூபாய் இலாபமீட்டக் கூடும். தகவல் தொழில் நுட்பம் மற்றும் அது சார்ந்த தொழில்களில் மட்டும் அடுத்த ஐந்தாண்டுகளில் 60 இலட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு அதிகரிக்கக் கூடும்.


இவையெல்லாம் உலகில் மிக வேகமாக வளரும் பத்து பொருளாதாரங்களில் ஒன்றாக இந்தியப் பொருளாதாரம் வளர்ந்துள்ளதைக் காட்டுகின்றன.


இந்தப் புள்ளிவிவரங்கள் உண்மைதான் என்றாலும், இந்தியா உடனடியாக இல்லாவிட்டாலும், வளரும் நாடுகளில் முதலிடத்தைப் பிடிக்காவிட்டாலும், சீனாவுக்கு அடுத்து இரண்டாம் இடத்துக்கு உயர்ந்துவிடும் என்றாலும்இந்தியப் பொருளாதார வளர்ச்சி எத்தகையது? அதன் பலன்களை எந்தப் பிரிவினர் அறுவடை செய்து கொள்கின்றனர்? யாருடைய நலன்களுக்காக இந்தியப் பொருளாதாரம் திட்டமிடப்படுகிறது? என்பது முக்கியமானதாகும்.


கடந்த 2005ஆம் ஆண்டின் நவம்பருக்குள் 2.341 கோடி பேர் புதிதாக செல்பேசி வாடிக்கையாளர்களாகி இருக்கிறார்கள். இணையத் தளங்களில் மேயும் ஏழு இலட்சம் பேர் அகன்ற அலைவரிசை கணினி இணைப்புகள் பெற்றார்கள். 45 இலட்சம் கணினிகள் விற்கப்பட்டன. 53,982 கோடி ரூபாய் அளவு சேமிப்பு உயர்ந்திருக்கிறது. 9,000 பேர் புதிய கோடீசுவரர்களாகியிருக்கிறார்கள். கார்கள், இரண்டு சக்கர வாகனங்களின் உற்பத்தியும் விற்பனையும் பல்கிப் பெருகியுள்ளது.


தங்க நாற்கரச் சாலைகளால் இந்தியாவின் பெருநகரங்களை இணைப்பதும், விமான நிலையங்கள் நவீனப்படுத்தப்படுவதும், துறைமுகங்கள் விரிவுபடுத்தப்படுவதும் நிறைவுறும் நிலையை எட்டி விட்டன. சுற்றுலா, பொழுதுபோக்கு, ஃபாசன் பொருட்கள், கல்வி, மருத்துவம் எல்லாவற்றிலும் உலகத்தரம் வந்துவிட்டது.


எல்லாம் சரி; ஆனால் இவையாவும் நடுத்தர மேட்டுக்குடி மக்களுக்குச் சாதகமானவை, நாட்டின் மிகப்பெரும் தரகு அதிகார முதலாளிகள், பெரும் பண்ணையார்கள் ஆகியவர்களோடு, அந்நிய பன்னாட்டுத் தொழில், வர்த்தக மற்றும் நிதிக் கழகங்களின் கொள்ளையை விரிவுபடுத்தும் வகையிலானவைதாம்.


சீனா போன்ற நாடுகளில் பொருளாத வளர்ச்சி என்பது முதலீடு அடிப்படையிலானதாக இருக்கும் அதேசமயம், இந்தியப் பொருளாதார வளர்ச்சி நுகர்வோர் சந்தை சார்ந்ததாகவே இருக்கிறது. அதாவது, இந்தியாவின் 10 கோடி குடும்பங்களின் ஆண்டு வருமானம் இரண்டு முதல் 10 இலட்சம் ரூபாய் அளவுக்கு உள்ளது! இது பல ஐரோப்பிய நாடுகளின் சந்தையைவிடப் பெரியதாகும். இந்தக் குடும்பங்களின் நுகர்வுத் தேவைக்கான பொருளாதாரத் திட்டமிடுதல்கள் தாம் இப்போது நடக்கின்றன.


அதேபோல, கடந்த பத்தாண்டுகளில் உள்நாட்டு மொத்த உற்பத்தி வளர்ச்சி விகிதம்6.5 சதவீதத்திற்கு மேலிருந்தாலும், கிராமப்புற விவசாய வளர்ச்சி 2 சதவீதம் அளவுக்கு மிகக் குறைவாகவே உள்ளது. நாட்டின் 60 சதவீத உழைப்புச் சக்தியைக் கொண்டிருக்கும் கிராமப்புற விவசாய உற்பத்தி நாட்டின் மொத்த வருவாயில் 21 சதவீதம் மட்டுமேயாகும். மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 50 சதவீத அளவுள்ள வங்கி, இன்சூரன்ஸ், தொலைபேசி செல்பேசி, தகவல் தொழில் நுட்பச்சேவை ஆகிய சேவைத்துறையில் 27 சதவீதத்தினரே வேலை வாய்ப்புப் பெற்றுள்ளனர். ஆனால், விவசாயத் துறையில் இருந்து வேலையிழப்பவர்களை ஈர்க்கக் கூடிய ஆலை உற்பத்தியில் 17 சதவீதத்தினரே ஈடுபட்டுள்ளனர்.


இதுமட்டுமல்ல, இந்தியப் பொருளாதார வளர்ச்சி என்பது மக்கள் தொகை அதிகமுள்ள உத்திரபிரதேசம், மத்தியபிரதேசம், பீகார், ஜார்க்கண்ட், ஒரிசா போன்ற மாநிலங்களில் அற்ப அளவுகூட கிடையாது. அவை தொடர்ந்து பின்தங்கிய மாநிலங்களாகவே உள்ளன. ஏற்கெனவே அடிப்படைக் கட்டுமான வசதிமிக்க மாநிலங்களில்தான் முதலீடும், உற்பத்தியும், சந்தையும் உருவாகிக் கொண்டே போகின்றன. குஜராத், மராட்டியம், தமிழகம், ஆந்திரம், கர்நாடகா, அரியானா பஞ்சாப் போன்ற மாநிலங்களின் வளர்ச்சியிலேயே ஆளும் வர்க்கங்களும் பன்னாட்டு முதலாளிகளும் குறியாக உள்ளனர். பீகாரின் சராசரி வருமானம் அரியானா, மராட்டியம் போன்ற மாநிலங்களின் சராசரி வருமானத்தோடு ஒப்பிடும்போது கால்பங்கு கூடக் கிடையாது.


தகவல் தொழில்நுட்பம் மற்றும் சேவைத்துறையில் வேலைவாய்ப்புகள் பல்கிப் பெருகியுள்ளதாகக் கூறப்படும் அதேவேளையில், வேலை வாய்ப்பகங்களில் பதிவு செய்து வேலைதேடுபவர்களின் எண்ணிக்கை 4 கோடியாக உள்ளது. அரசு உட்பட அமைப்பு ரீதியிலான துறைகளில் வேலையோ கடந்த பதிமூன்று ஆண்டுகளாக 3 கோடி என்ற நிலையிலேயே தேங்கிப் போயிருக்கிறது. உலகிலுள்ள 177 நாடுகளில் மனித வளமேம்பாட்டில் இந்தியா 127வது இடத்தில் இருக்கிறது. 5 வயதுக்கும் குறைவான இந்தியக் குழந்தைகளிலபாதியளவு போதிய உணவின்றிக் கிடக்கின்றன. இந்தியப் பெண்களில் 46 சதவீதமானவர்கள் படிப்பறிவற்றவர்களாக உள்ளனர். அரசுப் புள்ளிவிவரப்படியே 25 கோடி இந்தியர்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழ்கின்றனர். அரசு சாரா நிறுவனங்களின் புள்ளி விவரப்படி இதுவே 40 கோடியாகும்.


ஆக, எப்படிப் பார்த்தாலும் இந்தியப் பொருளாதாரம் வட்டார ரீதியாக, வர்க்க ரீதியாக, பாலியல் ரீதியாக, நகர்ப்புறகிராமப்புற வேறுபாடு ரீதியாக ஒரு சார்பாகக் கோணித்துப் போகிறது. அனைத்துத் தரப்புகளின் வளர்ச்சி, முன்னேற்றத்துக்கானதாகப் பொருளாதாரம் திட்டமிடப்படுவதில்லை கருணாநிதியோ ஜெயலலிதாவோ, வாஜ்பாயோ மன்மோகன் சிங்கோ அவர்களது அக்கறையெல்லாம் ஒரு சார்பாகவே உள்ளது. இதற்கு ஈடுகட்டும் வகையில்தான் ஏழ்மைக் குறைப்பு, இலவசத் திட்டங்கள் வருகின்றவே தவிர, மக்களின் நலன்களுக்காக அல்ல.


மு ஆர்.கே.


10 comments:

Hariharan # 03985177737685368452 said...

நாட்டின் தேவை கல்வி...கல்வி அனவருக்கும் கல்வியென்பதே.

கல்வி கட்டாயமாக்கப்படவேண்டும்.

நிறைய அந்நியச்செலாவணி கையிருப்பு கூடியுள்ள சூழலில் கல்லூரிவரைக் கல்வி அனைவருக்கும் கட்டாயமாக்கப் படவேண்டும்.

ஏராளமான கல்லூரிகள், கல்விச்சாலைகள் ஏற்படுத்தத் தகுந்த திட்டங்கள் தீட்டி விரைவாக 5-10 ஆண்டுகளில் கல்விச்சாலைகளின் பற்றாக்குறை நீக்கி தன்னிறைவு காணவேண்டும்.

இது நடந்தால் தற்போது 115 கோடியில் 10% இந்தியர் வளமாய் இருப்பதுபோல் இன்னும் முன்னேறி 25% 50% என்று வளமான இந்தியர்தொகை தானே கூடும் 2020-2050க்குள் அடுத்த 40ஆண்டுகளில் இந்திய கல்வி,பொருளாதாரம்,கட்டமைப்பு என அனத்திலும் வளர்ந்த நாடாகும்.

மக்களுக்கு, நாட்டுக்குத் தேவை கல்வியெ அன்றி இலவசங்கள் அல்ல. இலவசத்திற்குக் கையேந்தி ஓடி,முட்டி, மோதி மிதிபட்டு 2000ரூக்காக உயிர் இழந்த்தாலும் பரவாயில்லை எனும் வெட்கக்கேடான மனோநிலைக்கு கல்வியற்று இருப்பதும், இருக்க வைத்திருப்பது மிக முக்கிய காரணிகள்.

காமராஜ் மாதிரி கல்வியை மிகப்பெரிய அளவில் நாடெங்கும் செயல்படுத்த ஆக்கமான தலைவன் வரவேண்டும்.

வெண்பா said...

மேல்தட்டு வர்க்கத்தினரின் வளர்ச்சியை ஒட்டுமொத்த இந்தியாவின் வளர்ச்சியாய் படம் காட்டும் வேலையைத்தான் அனைத்து செய்தி ஊடகங்களும் செய்து கொண்டு இருக்கின்றன. புதியதாய் பணம் பண்ண ஆரம்பித்துள்ள மத்திய வர்க்க தொழில் நுட்பத்துறை இளைஞர்கள் மத்தியில் திட்டமிடுதல் என்பதோ சேமிப்பு என்பதோ இல்லை. அன்னிய முதலீடுகளால் பிரதானப்படுத்தப்படும் நுகர்வோர் கலாசாரத்தால் அவர்களின் செல்வம் சுரண்டப்படுகிறது. குறைந்த சதவிகிதத்திலான இவர்களின் தற்போதைய வாங்கும் திறனைக் ஒற்றி அனைத்து விலைகளும் ஏறி இருக்கின்றன. இதனால் ஏனையோருக்கு பாதிப்பு. ஊடகங்கள் வெளியிடும் புள்ளி விவரங்கள் 'ஒரு ஊரில் பத்துப் பெண்களில் ஒருவர் கர்பமாயிருந்தால், ஒவ்வொரு பெண்ணும் 10% கர்ப்பமாயிருக்கிறாள்' என்பதைப்போன்றதுதான்.

அசுரன் said...

சிறப்பான கட்டுரை,

இங்கே ஹரிஹரன் என்பவர் கல்வி, கல்வி என்று கூறியுள்ளார்.
ஒரு பக்கம் கல்வி தனியாரமயம், மறுபக்கம் படித்தவருக்கு வேலை இல்லை, இன்னொரு பக்கம் சோத்துக்கே வழியின்றி மக்கள் கிராமங்களை விட்டு நவீன நாடோ டிகளாக(அவர்களது குழந்தைகளும்) லட்சக்கணக்கில் நகரங்களுக்கு படையெடுக்கும் சூழல்(internal diaspora) - இவற்றைப் பற்றி ஒன்றுமே பேசாமல் அனைவருக்கும் கல்வி, அனைவருக்கும் கல்வி என்று கூவுவது, நல்லவர் என்ற பெயர் கிடைக்க உதவுமே அன்றி வேறல்ல.

மாநகரங்களின் ஒட்டல்களில் வேலை பார்க்கும் சிறுவர்களிடம் ஹரிஹரன் பேசிப் பார்க்க வேண்டும். பல் கனவுகள் - அக்காவுக்கு திருமணம், அம்மா, அப்பா மருத்துவ செலவு, தம்பி, தங்கையின் படிப்பு, மீண்டும் விவசாயம் செய்யும் திட்டம்.......

கட்டிடத் தொழிலாளராக அழையும் நாடோ டி வர்க்கத்தின் குழந்தைகளின் சாம்பல் தூசி படிந்த முகங்களை மின்னும் நியான் விளக்குகளின் பிரகாசத்தையும் கடந்து என்றைக்காவது ஹரிஹரன் பார்த்திருந்தால் கல்வி ஒன்று மட்டுமே நாட்டுக்கு விடுதலை தந்துவிடும் என்று அரைகுறையாக பிதற்றியிருக்க மாட்டார்.

கல்வி விடுதலை தரும். இல்லை என்று சொல்லவில்லை. ஆனால் படிக்க வாய்ப்புள்ள குழந்தைகள் எத்தனை?

உலகிலேயே குழந்தைகளுக்கு அபாயகரமான நாடுகளின் தர வரிசையில் இந்தியா 6வது இடத்திலும், சொசியல் இன்டிகேட்டர் எனப்படும் தர வரிசையில் போன வருடத்தைவிட 20 இடங்களில் சறுக்கியிருப்பது, உலகிலுள்ள mal nutritioned குழந்தைகளில் 50% மேற்பட்டவர்கள் இந்தியாவில் இருப்பது தெரியாமல்தான் அல்லது தெரிந்தும் அதை பொருட்படுத்தாமல்தான் 10% வளமான் இந்தியா, 20% வளமான இந்தியா, 2020-50க்குள் வளர்ச்சியடைந்த நாடாகிவிடும் என்று அப்துல் காலாமுக்கு இனையாக காதில் பூ சுற்றுகிறார்.

இதில் உழைக்கும் மக்களை பிச்சைகாரர்களாக்கியிருக்கும் இந்த பொருளாதாரத்தை கண்டிக்க வக்கற்று அந்த நிலையை கேவலாமாக சித்திரப்பதில், பார்ப்பனர்களின் இடஒதுக்கீட்டு பிரச்சாரத்தை நியாபகப்படுத்துகிறார்.

ஒரு விசய்ம் சந்தோசம் தருகிறது.. இந்துத்துவவாதிகளின் தளங்களில் ஜல்லியடிக்கும் இவருக்கு இது போன்ற மக்கள் பிரச்சனைகளை பேசும் தளங்களும் தட்டுப் பட்டிருப்பது நல்ல விசய்மதான்.

நன்றி,
அசுரன்.

அசுரன் said...

//அன்னிய முதலீடுகளால் பிரதானப்படுத்தப்படும் நுகர்வோர் கலாசாரத்தால் அவர்களின் செல்வம் சுரண்டப்படுகிறது. குறைந்த சதவிகிதத்திலான இவர்களின் தற்போதைய வாங்கும் திறனைக் ஒற்றி அனைத்து விலைகளும் ஏறி இருக்கின்றன. இதனால் ஏனையோருக்கு பாதிப்பு. ஊடகங்கள் வெளியிடும் புள்ளி விவரங்கள் 'ஒரு ஊரில் பத்துப் பெண்களில் ஒருவர் கர்பமாயிருந்தால், ஒவ்வொரு பெண்ணும் 10% கர்ப்பமாயிருக்கிறாள்' என்பதைப்போன்றதுதான். //

Veebee,

சரியாகவே அடையாளம் காட்டியுள்ளார்,

வழ்த்துக்கள்

நன்றி,
அசுரன்

We The People said...

சூப்பரா இருக்கு உங்க ஆய்வு. தெளிவா சிந்திச்சு எழுதியிருக்கீங்க. வாழ்த்துக்கள். இதுபோன்ற சிந்தனைக்கு ஏனோ நம் தமிழ்மண மக்கள் பார்ப்பதும் இல்லை, யோசிப்பதும் இல்லை.

இந்த அரசியல்வாதிகள் இந்தியாவை வல்லரசு ஆக்கியது நான் தான் என்று மார்தட்டிக்கொள்ள சாதாரண ஏழை அடித்தட்டு மக்கள், நடுத்தர மக்கள் வயிற்றில் மண் அள்ளிப்போடுகிறார்கள் என்பதே வேதனையா விசயம்.

கார் லோனுக்கு வட்டி, வீட்டுக்கடன்க்கு வட்டி ஆகியவைகளை ஏற்றினால், CRR ஏற்றினால் பணவீக்கம் குறையும் என்று பிதற்றும் பொருளாதாரா ஞானிகள் உள்ளவரை ஏழையும், நடுத்தர மக்களும் மண் உண்ண வேண்டியது தான்.

Vetri Thirumalai said...

Good article.
For quiet sometime i have been also thinking in the same line about the real beneficiaries of this economic upsurge.
For example in Bangalore in last 5 years land prices have been increased to more than 10 fold and rents nearly three fold. Even a guy who earns ten lakh per annum couldnt afford an apartment in major residential areas then think of the plight of a common man like auto drivers,small merchants and other vendors. For those people nothing has changed much apart from getting excitements for new happenings. For them survival itself is a big thing inside the city. Eventhough there are a definite section of these kind of people in every developed country the percentage here is more which makes us still an under developed country only. Providing them the basic things like sanitation,good roads, opportunity for good education & health facilities will be good solution rather than promising them with unnecessary free commodities, which intends to make them as beggars.

And one morething which hinders our growth is population which no politician is considering. I always think people of tamilnadu are determined lot as they have progressed well in industrial sector inspite of worse politicians who were ruling us. And somehow most of our people has already stopped bearing more than 2 children but this awareness has to be spread to all section of people. I hope that more inspired minds will be coming out in future influencing more people to achieve that in some time in future.

Unknown said...

உபி,பிகாரில் தாண்டவமாடும் ஜாதிவெறி இதற்கு முக்கிய காரணமாக இருக்கலாம் என தோன்றுகிறது.ரண்வீர் சேனா போன்ற ஜாதிவெறி கும்பல்கள் அங்கே ஏராளம்.ஹரிஹரன் சொன்னதுபோல் கல்லாமை அதிகம் இருப்பதும் முக்கிய காரணம்.கல்வி ஜாதிவெறியை அழிக்காவிடினும் மட்டுப்படுத்த செய்யும்.ஆனால் அது நீண்டகால திட்டமாகவே இருக்கும்.குறுகிய காலதிட்டமாக அங்கு வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தப்பட வேண்டும்.உணவின்றி வாடும் மக்களுக்கு அரசின் களஞ்சியத்தில் தூங்கி வழியும் நெல்மூட்டைகள் இலவசமாக வினியோகிக்கப்படலாம்.முதல்கட்டமாக அங்கே சாலை வசதி மேம்படுத்தப்பட்டால் வேலைவாய்ப்புகள் அதிகமாவதுடன் பொருளாதார வளர்ச்சியும் அதிகரிக்கும்.

தமிழகம் வளர்வதை அறியும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது.இதுநாள் வரை 'வடக்கு வாழ்கிறது,தெற்கு தேய்கிறது" என்றார்கள்.தற்போது தெற்கு முன்னேறுகிறது.ஆனால் எப்போது அனைவரும் முன்னேறுவது?

நீண்டகால திட்டம் கல்வி மற்றும் தொழிற்சாலைகள்.குறுகிய கால திட்டம் ஜாதிவெறி அழிப்பு,சாலைகள் அமைத்தல்,அத்த்யாவசிய தானியங்கள் அளித்தல்,மாபியா கும்பல்கள் ஒழிக்கப்படல் என இருக்க வேண்டும்.உபியும்,பிகாரும் இந்தியாவின் அதிக ஜனத்தொகை கொண்ட மாநிலங்கள்.அவை முன்னேற வழிசெய்வது அவசியம்

அசுரன் said...

//அதேபோல, கடந்த பத்தாண்டுகளில் உள்நாட்டு மொத்த உற்பத்தி வளர்ச்சி விகிதம்6.5 சதவீதத்திற்கு மேலிருந்தாலும், கிராமப்புற விவசாய வளர்ச்சி 2 சதவீதம் அளவுக்கு மிகக் குறைவாகவே உள்ளது. நாட்டின் 60 சதவீத உழைப்புச் சக்தியைக் கொண்டிருக்கும் கிராமப்புற விவசாய உற்பத்தி நாட்டின் மொத்த வருவாயில் 21 சதவீதம் மட்டுமேயாகும். மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 50 சதவீத அளவுள்ள வங்கி, இன்சூரன்ஸ், தொலைபேசி செல்பேசி, தகவல் தொழில் நுட்பச்சேவை ஆகிய சேவைத்துறையில் 27 சதவீதத்தினரே வேலை வாய்ப்புப் பெற்றுள்ளனர். ஆனால், விவசாயத் துறையில் இருந்து வேலையிழப்பவர்களை ஈர்க்கக் கூடிய ஆலை உற்பத்தியில் 17 சதவீதத்தினரே ஈடுபட்டுள்ளனர்.//



செல்வன் என்பவர் சாலை வசதிகளை மேம்படுத்தினால் வேலை வாய்ப்புகள் பெருகும் என்று ஒரு அரிய கண்டுபிடிப்பை தீர்வாக சொல்கிறார். இவரது தீர்வை மொத்தமாக சுருக்கிச் சொன்னால் infrastructure டெவலப் செய்தால், ஊழலை ஒழித்தால் இந்தியா முன்னேறிவிடும் என்பதாக உள்ளது.

இவர் கட்டுரையை முழுமையாக படித்தாரா என்று தெரியவில்லை.

தற்பொழுதைய இந்திய பொருளாதார அமைப்புதான் இந்தியாவின் இந்த நிலைமைக்கு காரணம் என்பதை கட்டுரை தெளிவாக அம்பலப்படுத்துகிறது.

மேலும் செல்வன் சொல்லும் infrastructure டெவலப்மென்ட் ஏற்கனவே நாடு முழுவது நடந்துவரும் அதே வேளையில்தான் பட்டினி சாவுகள், அரைகுறை பட்டினி குழந்தைகள், வேலையின்மை, விவசாயிகள் தற்கொலை, வேலை நிரந்தரமின்மை, விலை வாசி உயர்வு என்று அத்தனை அவலங்களும் நடந்து வருகிறது.

திரு செல்வன் அவர்களால் ஒரே ஒரு அடிப்படை கொரிக்கை வைக்க முடியுமா?

உழுபவனுக்கு நிலம் சொந்தம், கூட்டுறவு வேளான் கழகங்கள் மட்டுமே விவசாய உற்பத்தியில் ஈடுபடுவது, கொள்முதல், விநியோகம் முற்று முதலாக அரசின் கையில் இருப்பது என்ற இந்த ஒரு விசயம் இந்தியாவின் ஆக பெரும்பான்மை மக்களின் மேல் விழுந்துள்ள ஏகாதிபத்திய நுகத்தடியை சுக்கு நூறாக்கி விடும்.


பிரச்சனை இந்தியாவின் சந்தையை, வளங்களை ஏகாதிபத்தியங்க்ளின் கொள்ளைக்கு திறந்து விட்டதுதான். இந்திய தொழில்களை நசுக்கி இருப்பதுதான். இதைப் பற்றி பேசுவதை வெகு கவனமாக செல்வன் தவிர்க்கிறார்.


நன்றி,
அசுரன்.

அசுரன் said...

veebee சொல்வதுபோல் மேல்தட்டு வர்க்கம் எனப்படும் இந்தியாவின் ஒரு 5% சதவீத மக்கள் அள்ளிக் கொழிப்பதற்க்கு அந்த மேல்தட்டு வாழ்க்கைக் கனவுகளுடன் உயர் நடுத்தர வர்க்கம் ஒரு 20% மக்கள் தொகையின் உத்திரவாதமில்லாத வாழ்க்கை வசதிகளுக்கும் (இது MNCக்களின் மார்க்கேட் இலக்கை அடிப்படையாக கொண்டு யுகித்த மக்கள் தொகை) இவர்களின் வீங்கிப் பெருக்கும் வசதிகளுக்காக ஒட்டு மொத்த இந்தியாவையும் அடகு வைக்கிறார்கள் தேசத் துரோக பன்றிகளான நமது அரசுகள்.

ஜனநாயகம் என்றால் என்னவென்றே ருசித்திராத மக்கள் இன்னமும் நேரடியாக ஏகாதிபத்திய, நிலபிரபுத்தவ சக்திகளின் ஆதிக்கத்தில்தான் தமது வாக்குகளையே குத்துகிறார்கள். இதையெ அங்கீகாரம் என்று மாய்மாலம் காட்டவும் சில தரகு விபச்சார அறிவுஜீவிகள் உள்ளனர்.

வோட்டுக் கட்சி கம்யுனிஸ்டுகளோ தங்களது கொள்கைகளை மக்களிடம் வைக்காமல் மற்ற வோட்டுப் பொறுக்கிகள் போலவே நய வஞ்சகமாக பிச்சை எடுக்கிறார்கள்.

இந்த சூழ்நிலையில் உழைக்கும் மக்கள் தங்களது அன்றாட வாழ்க்கை பிரச்சனை சகலவிதமாக வழிகளிலும் ஏகாதிபத்திய சுரண்டல் மறுகாலனியாதிக்க பொருளாதாரத்த்தோடு பிணைந்திருப்பதை உணர்ந்து புரட்சிகர அமைப்புகளில் இணைந்து போராட வேண்டும்.

நடுத்தர வர்க்கமும் கூட அதனது வாழ்க்கை உத்திரவாதமில்லாமல் இருப்பதை, இந்த சமூகத்தின் அழுத்தம் தன்மீதுதான் வன்முறையாக விடியும் என்பதை, தான் ஒரு எதிர்கால பாட்டாளி என்பதை உணர்ந்து இப்பொழுதே போராட வேண்டும.

நன்றி,
அசுரன்.

அசுரன் said...

சிரிநிதி, தன்னையே அந்த ஆறு அறிவுக் குருடர்களுடன் ஒப்பிட்டு ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்த நேர்மைக்கு அவரை பாராட்டுகிறேன்.

இங்கு முக்கியமாக ஒன்றை குறீப்பிட வேண்டும்,

எங்கு சீரியஸாக விவாதம் நடந்தாலும் அங்கு தனது நகைச்சுவையான கருத்துக்களை பதியவைத்து அந்த இடத்தையே வயிறு குலங்க சிரிக்க வைக்கும் அதிசய திறமை படைத்தவர் இந்த சிரிநிதி

நன்றி,
அசுரன்.