தீவிரமாகி வரும் மறுகாலனியாதிக்கம் கொத்தடிமைக் கூடாராமாகும் தமிழகம்
மாங்கல்ய திட்டம்; இது ஆட்சியாளர்கள் அறிவித்துள்ள புதியதொரு திருமண உதவித் திட்டம் அல்ல; நகைக்கடைக்காரர்கள் விளம்பரப்படுத்தியுள்ள புதியதொரு நகை சேமிப்புத் திட்டமும் அல்ல. மோசடி சீட்டுக் கம்பெனிக்காரர்கள் ""வாழ்க வளமுடன்'' என்ற பெயரில் தொழில் நடத்துவதைப் போல, இளஞ் சிறுமிகளைக் கொத்தடிமைகளாக்கிச் சுரண்ட பஞ்சாலைநூற்பாலை முதலாளிகள் உருவாக்கியுள்ள திட்டத்தின் பெயர்தான் மாங்கல்ய திட்டம்.
இத்திட்டத்தின் கீழ் கொத்தடிமைகளாகச் சேர்க்கப்படும் இளஞ்சிறுமிகள் நாளொன்றுக்கு 12 முதல் 15 மணிநேரம் வேலை செய்ய வேண்டும். மில் அருகிலுள்ள கொட்டகையில் தங்க வேண்டும். நாளொன்றுக்கு 25 முதல் 35 ரூபாய் கூலி; இதில் ஏறத்தாழ 10 முதல் 15 ரூபாய் உணவு தங்குமிடச் செலவுகளுக்காகப் பிடித்தம் செய்யப்படும். மீதித்தொகை முதலாளியிடம் சேமிப்பாக இருக்கும். 34 ஆண்டுகளுக்கப் பிறகு அதாவது அச்சிறுமிக்கு 1718 வயதாகும் போது அவரது திருமணச் செலவுகளுக்காக மொத்தமாக ஏறத்தாழ ரூ. 30,000 தரப்படும்.
இப்படி கணக்கற்ற சிறுமிகள் பழனி, தாராபுரம், புளியம்பட்டி பகுதிகளிலுள்ள மில்களில் கொத்தடிமைகளாக உழல்கின்றனர். மதுரை மாவட்டம் நாகமலை அருகிலுள்ள கீழகுயில்குடி கிராமத்திலிருந்து மட்டும் 10க்கும் மேற்பட்ட தாழ்த்தப்பட்ட சிறுமிகள் புரோக்கருக்கு ரூ. 1000 கமிசனாகக் கொடுத்து இத்திட்டத்தில் சேர்ந்துள்ளனர். இதேபோல வடிவேல்கரை, கரடிப்பட்டி கிராமங்களிலிருந்தும் சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பகுதியிலிருந்தும் கணிசமான சிறுமிகள் இத்திட்டத்தில் சேர்ந்து கொத்தடிமைகளாக உழல்கின்றனர்.
கீழகுயில்குடி கிராமத்தைச் சேர்ந்த 17 வயதாகும் சீதா, இப்படி கொத்தடிமையாக 3 ஆண்டுகள் வேலை செய்துவிட்டு தற்போது ரூ. 30,000 பணத்துடன் வீடு திரும்பியுள்ளார். எட்டாம் வகுப்பு வரை படித்துவிட்டு வறுமை காரணமாக மேற்கொண்டு படிக்க வழியில்லாமல் இத்திட்டத்தில் சேர்ந்ததாக அவர் வேதனையுடன் கூறுகிறார். இருப்பினும், பெற்றோருக்கு சிரமம் தராமல் திருமணச் செலவுகளுக்காக ரூ.30,000 சம்பாதித்துக் கொடுத்துள்ள மனநிறைவு அவரிடம் காணப்படுகிறது. சீதா மட்டுமின்றி, அவரது பெற்றோரும் இக்கிராமத்திலுள்ள தாழ்த்தப்பட்ட குடும்பங்களும் இந்தக் கொத்தடிமைத் திட்டத்தை விரும்பி ஏற்கின்றனர். ""எங்க புள்ளைங்க அங்கே இங்கேன்னு கூலி வேலை செஞ்சு சீரழியறதவிட இது எவ்வளவோ மேல்; புள்ளைங்க கல்யாண செலவுக்கும் பிரச்சினை இல்லாம இருக்கு'' என்று இக் கொத்தடிமைத்தனத்தை நியாயப்படுத்துகின்றனர்.
ஆனால், மில்களில் கொத்தடிமைகளாகச் சேர்க்கப்படும் இச்சிறுமிகள் ஓய்வில்லாத வேலை, சத்தில்லாத உணவு, சிறிய அறையில் கும்பலாகத் தங்க வைப்பது, உடல்நிலை சரியில்லை என்றாலும் சிகிச்சை செய்ய மறுப்பது, ஆண்டுக்கு ஒருமுறை 5 நாட்கள் மட்டுமே விடுமுறை என கொத்தடிமைகளாக வதைபடுகின்றனர். இதுதவிர பல சிறுமிகள் பாலியல் கொடுமைகளையும் சந்திக்கின்றனர். கசக்கிப் பிழியப்படும் இச்சிறுமிகள் மூன்றாண்டுக ளுக்குப் பிறகு வீடு திரும்பும்போது காசநோய், ஆஸ்துமா, இரத்தசோகை, கருப்பை பாதிப்பு மாதவிடாய் கோளாறுகள் என எல்லா நோய்களுக்கும் சொந்தக்காரர்களாகி விடுகிறார்கள். பழனியில் கொத்தடிமையாக வேலைக்குச் சேர்க்கப்பட்ட தங்கம் என்ற சிறுமி, ""4 நாள் தான் வேலை செய்தேன். சின்ன ரூமில 15 பேர் தங்கியிருந்தோம். நல்ல சாப்பாடு இல்லை. நாள் பூரா ஓயாம வேலைதான். கைவலி தாங்க முடியல. என்னால வேல செய்ய முடியல. அதனால என்னை வீட்டுக்கு அனுப்பிட்டாங்க. சம்பளமும் தரல'' என்கிறார் வேதனையுடன்.
ஜூன் 12ஆம் நாள். சென்னை மெரீனா கடற்கரையில் சில இளஞ்சிறுவர்கள் மாலை வேளையில் கையில் தூக்குவாளியுடன் சுண்டல் விற்றுக் கொண்டிருந்தனர். அன்று அனைத்துலக குழந்தைத் தொழிலாளர் உழைப்புமுறை ஒழிப்பு நாள். அந்நாளில் தொழிலாளர் துறையைச் சேர்ந்த சில அதிகாரிகள் அங்கு சென்று சுண்டல் விற்கும் சிறுவர்களை அழைத்து விசாரித்தனர். அச்சிறுவர்களோ, தாங்கள் பகலில் பள்ளிக்குச் சென்றுவிட்டு மாலை வேளையில் சுண்டல் விற்பதாகக் கூறினர். இதை நீங்கள் எழுதிக் காட்டுங்கள் என்று அந்த அதிகாரிகள் பேப்பரையும் பேனாவையும் நீட்டியபோது, எந்தச் சிறுவனுக்கும் எழுதத் தெரியவில்லை; எந்தப் பள்ளியில் எந்த வகுப்பில் படிக்கிறீர்கள் என்ற கேள்விக்கும் அவர்களால் பதில் சொல்ல முடியவில்லை. பின்னர் அந்த அதிகாரிகள் இணக்கமாகப் பேசி அவர்களிடம் விசாரித்தபோது, அச்சிறுவர்கள் வறுமை காரணமாக கொத்தடிமைகளாக இந்த வேலையைச் செய்து வருகிறார்கள் என்ற உண்மை வெளிவந்துள்ளது.
இருப்பினும், ""எஜமானரிடமிருந்து மீட்டு எங்களை ஊருக்கு அனுப்பி விடாதீர்கள்; அங்கே ஒருவேளை கஞ்சி குடிக்கக்கூட எங்களுக்கு வழியில்லை; நாங்கள் இங்கே இருந்தால் பட்டினி கிடக்காமல் இருப்போம். எஙகள் பெற்றோருக்கும் காசு அனுப்ப முடியும்'' என்று அவர்கள் அதிகாரிகளிடம் கூறியுள்ளார்கள். அதிகாரிகள் அதன்பிறகு என்ன நடவடிக்கை எடுத்தார்கள் என்று தெரியவில்லை.
தமிழகத்தின் பல பகுதிகளில் இளஞ்சிறுவர்களும் சிறுமிகளும் கொத்தடிமைகளாக உழலும் கொடூரத்திற்கு இருவேறு சாட்சியங்கள்தான் இவை. முன்பெல்லாம் வறுமையில் உழலும் ஒருசில விவசாயக் குடும்பங்கள் பிழைக்க வழியின்றி இப்படி கொத்தடிமைத்தனத்தில் சிக்கிக் கொண்டு அவதிப்படுவதாக நிலைமை இருந்தது. இப்போது அது வேர்விட்டுப் பரவியுள்ளதோடு வறுமையில் உழலும் பெற்றோர்களும் சிறுவர்களும் வேறு வழியின்றி தாமே இக்கொத்தடிமை நுகத்தடியை பூட்டிக் கொள்வதாக நிலைமை மாறிவிட்டது.
அசோக் அகர்வால் என்பவர் தொடுத்த பொதுநல வழக்கின் அடிப்படையில், கடந்த 12.12.05 அன்று உச்சநீதி மன்றத்தின் 3 நீதிபதிகள் கொண்ட குழு மைய அரசுக்கு ஒரு எச்சரிக்கை நோட்டீசு அனுப்பியது. அதில், அரசியல் சட்டத்தின் 21ஏ பிரிவின்படி 6 முதல் 14 வயது வரையிலான ஒவ்வொரு குழந்தைக்கும் இலவச கட்டாயக் கல்வி அளிக்கப்பட வேண்டும். குழந்தைத் தொழிலாளர் உழைப்பை முற்றாக ஒழிக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும் என்று வலியுறுத்தியது. ஆனால் 1947க்குப் பிறகு கடந்த 58 ஆண்டுகளில் குழந்தைத் தொழிலாளர் உழைப்பு முறை ஒழிக்கப்படவில்லை; மாறாக, குழந்தைகள் பள்ளிக்கூடம் செல்லமுடியாமல் கொத்தடிமைகளாக்கப்படும் கொடூரம் தீவிரமடைந்து விட்டது. நாட்டின் 6 முதல் 14 வயது வரையிலான குழந்தைகளின் எண்ணிக்கை ஏறத்தாழ 20 கோடி. இவர்களில் பாதிப்பேர் பள்ளிப் படிப்பைத் தொடர முடியாமல், கூலிகளாகவும், கொத்தடிமைகளாகவும் உழல்வதாக உச்சநீதி மன்றமே ஒப்புக் கொள்கிறது. தற்போதைய சட்டங்கள் தோல்வியடைந்து விட்டதாகவும், குழந்தைகளை உடல் உழைப்பில் ஈடுபடுத்தும் மனித உரிமை மீறல் கேள்வி முறையின்றித் தொடர்வதாகவும் அது குறைபட்டுக் கொள்கிறது.
நகரங்களை விட கிராமப்புறங்களிலும் சந்தை நகரங்களிலும்தான் குழந்தை உழைப்பு மிக அதிகமாக உள்ளது. மொத்த குழந்தைத் தொழிலாளர்களில் ஏறத்தாழ 85% பேர் கிராமங்களில் விவசாயம்நெசவு சார்ந்த தொழில்களிலேயே கொத்தடிமைகளாக உழல்கின்றனர். பெரம்பலூர் மாவட்டக் கிராமப்புறங்களில் நிலப்பிரபுக்களின் பண்ணைகளில் சாணி அள்ள, ஆடுமாடு மேய்க்க, வரப்பு கழிக்க, களையெடுக்க, புல் பிடுங்க என கொத்தடிமைகளாகச் சிறுவர்கள் வதைபடும் அவலம் தொடர்கிறது. சிவகாசியில் தீப்பெட்டிபட்டாசுத் தொழில்களில் சிறுவர்கள் கொத்தடிமைகளாக உழலும் அவலம் இப்போது வேலூர் மாவட்டம் குடியாத்தத்திலும், தருமபுரி கிருஷ்ணகிரி மாவட்டங்களிலும் தீவிரமாகிவிட்டது. தீப் பெட்டி தொழிலில்தான் சிறுவர்களை வேலைக்கு அமர்த்தும் கொடுமை தொடர்கிறது என்றிருந்த நிலைமைக்குப் பதிலாக அப்பளக் கம்பெனிகள், சோப்புக் கம்பெனிகள், ஆட்டோ பணிமனைகள், டீக்கடைகள், கல்குவாரிகள், அரிசி ஆலைகள், பீடி சுற்றும் கூடங்கள், கம்பளம்தரைவிரிப்பு நெசவுக் கூடங்கள், பட்டு நெசவுத்தறிகள் என இன்று எல்லாத் தொழில்களிலும் சிறுவர்கள் கொத்தடிமைகளாக உழலும் அவலம் கேள்விமுறையின்றித் தொடர்கிறது. ஏறத்தாழ 20 லட்சம் சிறுவர்கள் உயிருக்கு ஆபத்தான தொழில்களில் ஈடுபடுத்தப்படுவதாகவும் பலர் பாலியல் வன்முறைக்கு ஆளாவதாகவும் தேசிய மனித உரிமை ஆணையகமே தெரிவிக்கிறது.
ஆந்திராவில் கல்குவாரிகள், கர்நாடகாவில் செங்கற்சூளைகள், மகாராஷ்டிராவில் கடலைமிட்டாய் தொழிற்கூடங்கள் என பிற மாநிலங்களுக்குச் சென்று கொத்தடிமைகளாகித் தவித்த தமிழ்க் குடும்பங்களை அங்கொன்றும் இங்கொன்றுமாக மீட்டுக் கொண்டு வந்த தன்னார்வக் குழுக்கள், இப்போது தமிழகத்தின் பல பகுதிகளில் கொத்தடிமைத்தனம் தலைவிரித்தாடுவதைக் கண்டு கையைப் பிசைந்து கொண்டு நிற்கின்றன. காஞ்சிபுரம் பட்டுத்தறிகளிலும் குடியாத்தம் தீப்பெட்டி தொழிற்சாலைகளிலும் கொத்தடிமைகளாக அவதிப்பட்ட சில சிறுவர்சிறுமிகளை முதலாளியிடம் காசு கொடுத்துமீட்டு, அவர்களுக்கு நோட்டுப்புத்தகம் வாங்கிக் கொடுத்துள்ளன, சில தன்னார்வக் குழுக்கள். ஒரு சிலரை இவ்வாறு காசு கொடுத்து மீட்கலாம். ஆனால், பல்லாயிரக்கணக்கான குழந்தைகளும் அவர்களது பெற்றோரும் இப்படி கொத்தடிமைகளாகச் சிக்கிக் கொண்டு சமுதாயமே இருண்ட காலத்திற்குள் தள்ளப்பட்டுள்ளபோது அவர்களை மீட்க, இத்தகைய வழிமுறைகள் பலன் தருமா?
குழந்தைத் தொழிலாளர் உழைப்பு முறையிலும் கொத்தடிமைத்தனத்திலும் முன்னணியில் நிற்கும் மாநிலங்களில் ஒன்றாக தமிழகம் திகழ்கிறது. தமிழகத்தில் 2003ஆம் ஆண்டில் 70,344 குழந்தைத் தொழிலாளர்கள் இருந்தனர் என்றும், கடுமையான நடவடிக்கைகளால் 2005ஆம் ஆண்டில் 25,679 பேராகக் குறைந்துள்ளனர் என்றும் தொழிலாளர்துறை ஆணையர் கணக்குக் காட்டுகிறார். இதுவும் நகர்ப்புறங்களிலுள்ள குழந்தைத் தொழிலாளர்களின் மேலோட்டமான கணக்குதான்! கிராமப்புற குழந்தைத் தொழிலாளர்களின் கொத்தடிமைகளின் எண்ணிக்கையைக் கணக்கிட்டால் இதைவிட 10 மடங்கு அதிகமாகவே இருக்கும்.
நாடெங்கும் சிறு விவசாயிகள் கடன் சுமையாலும் விவசாய உற்பத்திப் பொருட்களின் விலை வீழ்ச்சியாலும் தற்கொலைக்குத் தள்ளப்படுகிறார்கள். நெசவாளர்களோ வறுமையைப் போக்க வழி தெரியாமல் தங்கள் சிறுநீரகத்தையே விற்கிறார்கள். கூலிஏழை விவசாயிகளோ கொத்தடிமைகளாகிப் பரிதவிக்கிறார்கள். நகரங்களில் படித்த இளைஞர்கள் கால்சென்டர்களில் எவ்வித உரிமையுமின்றி நவீன கொத்தடிமைகளாக உழல்கிறார்கள். தொழிற்சங்க சட்டத்தைத் திருத்தி தொழிலாளர்களை சட்டபூர்வ கொத்தடிமைகளாக்க ஆட்சியாளர்கள் முயற்சித்து வருகின்றனர். பயங்கரவாத ""பொடா'' சட்டத்துக்கு இணையாக குற்றவியல் சட்டத் தொகுப்பையே மாற்றி எழுத ஆட்சியாளர்கள் கிளம்பியுள்ளனர். ஆட்சியாளர்களாலும் அனைத்து ஓட்டுக் கட்சிகளாலும் பெருமையாகப் பீற்றிக் கொள்ளப்படும் தனியார்மயமும் தாராளமயமும் நாட்டு மக்களுக்கு அளித்துள்ள "பரிசுகள்'தான் இவை.
இத்தகைய நாட்டுவிரோத மக்கள்விரோத ஏகாதிபத்தியக் கொத்தடிமைகள் ஆட்சியதிகாரத்தில் உள்ளவரை நாடெங்கும் பெருகிவரும் குழந்தைத் தொழிலாளர் உழைப்பு முறையையும் கொத்தடிமைத்தனத்தையும் ஒழித்துவிட முடியாது. கருகும் மொட்டுகளாக இளமையைத் தொலைத்துவிட்டு குழந்தைகள் கொத்தடிமைகளாகும் அவலத்தைத் தடுத்து நிறுத்திடவும் முடியாது. இந்த அவமானங்களுக்கும் கொடுமைகளுக்கும் காரணமான தனியார்மய தாராளமயக் கொள்கைகளையும் அவற்றைத் தீவிரமாகச் செயல்படுத்திவரும் பாசிச ஆட்சியாளர்களையும் எதிர்த்துப் போராடுவதா? அல்லது அந்த அவலங்களைக் கண்டு வேதனையில் புலம்பிக் கொண்டிருப்பதா? தன்மானமுள்ள ஒவ்வொரு தமிழனையும் உலுக்கும் கேள்விகள்தான் இவை.
மு தனபால்
3 comments:
இப்படி கிராம பொருளாதாரத்தை அடித்து நொறுக்கி மக்களை கொத்தடிமைகளாக நகரங்களுக்கு அனுப்புவதையும் அவர்களை சுரண்டி(மனித வளம்), இந்திய நீர், மண் மற்றும் இதர வளங்களை அழித்தும் ஏகாதிபத்திய சந்தை தேவையை(வேறியை) பூர்த்தி செய்வதை வளர்ச்சி, வேலை வாய்ப்பு என்று மாய்மாலம் செய்து ஒருவர் 'கோவைக்கு கோக்கை அனுப்புங்கள்' என்று பதிவு போட்டுள்ளார்.
(மனித வளத்தை சில முட்டாள் அறிவு ஜீவிகள் - வேலை வாய்ப்பு என்று வேறு பெய்ர் சொல்லி அழைப்பார்கள்)
அமேரிக்காவில் சந்தை பொருளாதார மாணவரான அவர் தனது சொந்த நகரத்தில் கோக் கம்பேனி இருந்தால வீட்டுச் சாப்பாடு சாப்பிட்டுக் கொண்டே கோக்கை சந்தைப்படுத்தும் மாமா வேலை செய்யலாம் என்று நினைத்திருக்கலாம்.
( நேபாளத்தில் விபச்சாரம் மிகவும் வேலை வாய்ப்பு கொடுக்கும் ஒரு விசயம் நமது அமேரிக்க சந்தை மாணவரின் வசதிக்காக அந்த விபச்சாரத்தை அழிக்கும் மாவோயிஸ்டுகளிடம் எப்படியாவது தொடர்பு கொண்டு அந்த வேலை வாய்ப்புகளை கோவையில் பயன்படுத்த ஒரு மாணவர் தாயாராக இருக்கிறார் என்று கூற வேண்டும்.)
மக்களுக்கு வேலை வாய்ப்பு கொடுக்கும் potentialஆன துறை விவசாயத்துறை, அதன் ஆதாரமான நீரையும், நிலைத்தையும் அழித்து ஒரு 300 பேருக்கு வேலை வாய்ப்பு(திருனெல்வேலியில் கோக் கம்பேனியில் வேலை பார்ப்பவர்கள் அவ்வளவே. அதுவும் பிளச்சிமேடா அனுபவத்துக்கு பிறகு உள்ளூர் ஆட்களி வேலைக்கு வைத்தால் ஆபத்து என்று, பீஹார், உ,பி போன்ற வளர்ச்சி அடைந்த(??!!) மாவட்டங்களிலிருந்து கூட்டி வருகிறாகள்- கொத்தடிமைகளாகவும் இருக்கலாம்) கிடைப்பதை ஏதோ ஒட்டு மொத்த சமூகத்துக்கும் நல்லது என்பதுபோல் திரித்து பேசும் இது போன்ற தேசதுரோகிகள். அவ்வப்பொழுது 'ஜெய் ஹிந்த்' என்று கூவுவார்கள். கூவினால் வாய்வலிக்கும் ஆனால் நாட்டு பற்றாளன் என்று பெயர் கிடைக்குமே. அமேரிக்காவில் உடகார்ந்து நாட்டு பற்றை கோக்கின் மூலம் ஏற்றுமதி செய்யும் இது போன்ற தேசத் தூரோகிகளை என்ன செய்ய??
நன்றி,
அசுரன்.
//தன்மானமுள்ள ஒவ்வொரு தமிழனையும் உலுக்கும் கேள்விகள்தான் இவை.//
ஆம், தன்மானமுள்ள.....
//இத்தகைய நாட்டுவிரோத மக்கள்விரோத ஏகாதிபத்தியக் கொத்தடிமைகள் ஆட்சியதிகாரத்தில் உள்ளவரை நாடெங்கும் பெருகிவரும் குழந்தைத் தொழிலாளர் உழைப்பு முறையையும் கொத்தடிமைத்தனத்தையும் ஒழித்துவிட முடியாது. கருகும் மொட்டுகளாக இளமையைத் தொலைத்துவிட்டு குழந்தைகள் கொத்தடிமைகளாகும் அவலத்தைத் தடுத்து நிறுத்திடவும் முடியாது. இந்த அவமானங்களுக்கும் கொடுமைகளுக்கும் காரணமான தனியார்மய தாராளமயக் கொள்கைகளையும் அவற்றைத் தீவிரமாகச் செயல்படுத்திவரும் பாசிச ஆட்சியாளர்களையும் எதிர்த்துப் போராடுவதா? அல்லது அந்த அவலங்களைக் கண்டு வேதனையில் புலம்பிக் கொண்டிருப்பதா? //
தன்மானமுள்ள தமிழர்கள் சிந்தித்து முடிவெடுக்க வேண்டும்......
தமிழர்கள் மட்டுமல்ல இந்தியாவிலுள்ள அனைத்து உழைக்கும் மக்களும் சிந்தித்து முடிவெடுக்க வேண்டும்
நன்றி,
அசுரன்
இதை பிரசுரிக்கவும்
கோக்கை வைத்து தமிழ்மணத்தில் விவாதங்கள் சென்று கொண்டிருக்கின்றன....
மக்கள் விரோத கும்பல் அம்பலமாகிறது.
நன்றி,
அசுரன்
Post a Comment