நம்பிக்கையின் ஒளிக்கீற்று!
கடலூர், திருச்சி, மதுரை மாவட்டங்களில் செயற்பட்டு வரும் மனித உரிமைப் பாதுகாப்பு மையம் (ஏகீகஇ), ""மனித உரிமை காப்போம்! மக்கள் விடுதலைக்கு அணிவகுப்போம்!'' என்ற முழக்கத்துடன் தனது கோவை மாவட்டக் கிளை தொடக்க விழாவை கடந்த ஜூன் மாதம் 30ஆம் தேதியன்று நடத்தியது. மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் எஸ். ராஜு தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் மாநிலத் தலைவர் மதி.சோழர், செயலர் போஜகுமார், மூத்த வழக்குரைஞர் ப.பா. மோகன் உள்ளிட்ட பலர் பங்கேற்று வாழ்த்துரை வழங்க, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாநிலச் செயலர் தோழர் சுப.தங்கராசு சிறப்புரையாற்றினார். கோவை ம.உ.பா. மையத்தின் தலைவர் கார்க்கி, செயலாளர் மதி. ரமேஷ், பொருளாளர் சம்பத் ஆகியோரை ம.உ.பா. மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜூ அறிமுகப்படுத்தினார்.
கோவையைச் சுற்றியுள்ள ஆலைகளில் இளம் பெண்கள் ""கேம்ப் கூலி'' கொத்தடிமைகளாகச் சுரண்டப்படுவதை உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும்; கோவை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் கைதாகிச் சிறையில் வதைபடும் அப்பாவி இஸ்லாமிய இளைஞர்களுக்குப் பிணை வழங்க வேண்டும்; தாழ்த்தப்பட்ட மக்களுக்குத் தேநீர் கடைகளில் தனிக்குவளை முறை, ஆலயங்களில் வழிபாட்டு உரிமை மறுப்பு முதலான தீண்டாமைக் கொடுமைகளை முடிவு கட்ட வேண்டும்; வீரப்பன் தேடுதல் வேட்டையின் போது அதிரடிப் படையால் பாதிக்கப்பட்ட அப்பாவி மலைவாழ் மக்களுக்கு சதாசிவம் கமிஷன் பரிந்துரைப்படி உடனடியாக இழப்பீடு தொகை வழங்க வேண்டும்; ""பொடா'' சட்டம் ரத்து செய்யப்பட்டும், தருமபுரி மாவட்டம் ஊற்றங்கரையைச் சேர்ந்த 26 பேரை இன்னமும் ""பொடா'' கைதிகளாக நடத்துவதை ரத்து செய்ய வேண்டும்; பவானி, சிறுவாணி ஆற்றுநீரை வரைமுறையின்றி உறிஞ்சியும், கழிவுகளைக் கொட்டி ஆற்றை நாசப்படுத்தியும் வரும் காகித ஆலைதுணி ஆலைகளுக்கு எதிராகப் பிரச்சாரம் செய்வதைத் தடுக்கும் போலீசாரின் மனித உரிமை மீறல்கள் நிறுத்தப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
பாசிச இருள் சூழ்ந்துவரும் இன்றைய நிலையில், குறிப்பாக, பயங்கரவாத பீதியூட்டி ஜனநாயக உரிமைகள் மறுக்கப்பட்டு வரும் கோவை மாவட்டத்தில் இத்தகைய மனிதஉரிமை ஜனநாயக உரிமைகளுக்கான அமைப்புகள் மிக அவசியமானவை என்பதையும், மக்களைச் சார்ந்து நின்று மக்கள் உரிமைகளுக்காகப் போராடும் அமைப்புகளே இன்றைய தேவை என்பதையும் உணர்த்துவதாக இவ்விழா அமைந்தது.
பு.ஜ. செய்தியாளர்கள், கோவை.
No comments:
Post a Comment