தமிழ் அரங்கம்

Wednesday, September 20, 2006

பெற்ற மகனை கொன்று எரித்த கொடூரம்

பெற்ற மகனை கொன்று எரித்த கொடூரம்!
சி.பி.எம்.காரனின் சாதிவெறியாட்டம்!


ஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியை அடுத்துள்ள பூதலூர் ஒன்றியத்தைச் சேர்ந்த மாரனேரி என்கிற கிராமத்தில் சுப்ரமணியன் என்ற சாதிவெறி பிடித்த மிருகம், தனது மகனையே கொன்று எரித்துள்ளது. இந்த மிருகம் ஆதிக்க சாதிகாரன் என்றோ, பெரும்பணக்காரன் அல்லது பண்ணையார் என்றோ கருதிவிட வேண்டாம். 20 ஆண்டுகளாக சி.பி.எம். கட்சியில் "தீவிரமாக' செயல்பட்டு வருபவர். தாழ்த்தப்பட்ட சாதியான பள்ளர் பிரிவை சார்ந்த, நிலம் ஏதும் இல்லாத கூலித் தொழிலாளி. இன்று வரை ஆதிக்கசாதியான உடையார் சாதிக்காரரான மகிமைராசு என்பவரிடம் பண்ணை வேலை செய்து வருபவர்தான் சுப்ரமணியன்.


சுப்ரமணியன் தனது மகனை கொலை செய்து எரிப்பதற்கான காரணம், தனது மகன் முருகராஜ், தாழ்த்தப்பட்ட சாதியின் மற்றொரு பிரிவான பறையர் வீட்டு பெண்ணான சித்ரா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொள்ள முடிவு செய்ததுதான். முருகராஜும், சித்ராவும் 6 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து வந்துள்ளனர். அதனடிப்படையில் சித்ரா 8 மாத கர்ப்பிணியாகி விட்டார். ஊருக்குத் தெரியும் முன்பே எங்கேயாவது சென்று திருமணம் செய்து கொள்ள இருவரும் முடிவெடுத்தனர். இதையறிந்து, அப்போது சி.பி.எம். கட்சியின் விவசாய தொழிலாளர் சங்கத்தின் பூதலூர் ஒன்றிய தலைவராக இருந்த கொலைகார சுப்ரமணியன் ""மாட்டு கறி திங்கிற பறச்சி எனக்கு மருமவளா வரமுடியாது'' என வெளிப்படையாக கூச்சல் போட்டுள்ளார். தனது மகன் முருகராஜை மிரட்டி கடத்தி சென்று உறவினர் வீட்டில் பதுக்கி வைத்துவிட்டார். இதனால் வெளியூர் ஓடிப்போய் திருமணம் செய்து கொள்வது என்கிற இருவரது ஆசையும் நிராசையானது.


இந்நிலையில் கர்ப்பிணியான சித்ரா, வீட்டில் உள்ளவர்களின் கடும் பேச்சுக்கு ஆட்பட்டு அவமானத்தால் என்ன செய்வது என்று அறியாமல் நிர்க்கதியான நிலைக்கு தள்ளப்பட்டார். மகனை கடத்தி பதுக்கி விட்டாலும் சித்ரா கர்ப்பமாக இருப்பது சுப்ரமணியனுக்கு அச்சுறுத்தலாக இருந்தது. உடனே ஆல்பர்ட் என்கிற இன்னொரு சி.பி.எம்.காரனிடம் ரூ. 500 கொடுத்து சித்ராவின் வயிற்றில் வளரும் கருவை கலைக்கக் கூறினான். ஆல்பர்ட்டும் சித்ராவிடம் நைச்சியமாக பேசி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளான். சித்ரா வயிற்றில் இருப்பது 8 மாத குழந்தை என்பதால் கலைக்க முடியாது என மருத்துவர்கள் கூறிவிட்டனர். ஆகவே, சுப்ரமணியனின் முயற்சி தோல்வியானது.


இதற்கிடையில் அவ்வூர்காரர்களான தலித் அரசியல் ஆர்வலரான திரு. ராஜேந்திரன், வி.வி.மு. தோழர் ஆண்ட்ரோஸ் ஆகிய இருவரும் இப்பிரச்சினை தொடர்பாக சுப்ரமணியனிடம் பேசி திருமணம் செய்து வைக்க முயற்சி செய்தனர். அதற்கு மறுத்துவிட சுப்ரமணியன், இப்பிரச்சினையில் தலையிட்டால் ""கொலை செய்து விடுவேன்'' என மிரட்டவும் செய்தார். இந்நிலையில் விவசாய தொழிலாளர் சங்கத்தின் பூதலூர் ஒன்றிய பேரவை கூட்டம் சுப்ரமணியன் தலைமையில் நடந்தது. இக்கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக தஞ்சை சி.பி.எம். மாவட்ட செயலாளராக அப்போது இருந்த சீனிவாசன் என்பவர் வந்திருந்தார்.


அக்கூட்டத்திற்குள் சித்ராவை அழைத்துக் கொண்டு சென்ற ம.க.இ.க. பு.மா.இ.மு. தோழர்கள் மற்றும் ஊர்ப் பொதுமக்கள் சிலர், இப்பெண்ணிற்கு ஏற்பட்ட பிரச்சினையை எடுத்துக் கூறி, இக்கூட்டத்திலேயே விசாரித்து நியாயம் வழங்க வேண்டும் என வலியுறுத்தினர். திருடனுக்கு தேள்கொட்டிய கதையாக முழித்தார் சுப்ரமணியன். சி.பி.எம். மாவட்டச் செயலாளர், ""ஒருவாரம் கால அவகாசம் கொடுங்கள்; நான் தீர விசாரித்து நல்ல முடிவினை கூறுகிறேன். என்னை நம்புங்கள்'' என்றார். சி.பி.எம். மாவட்ட செயலாளரின் பேச்சும், உறுதியும் அனைத்தும் நயவஞ்சகம், ஏமாற்று, சுப்ரமணியனைக் காப்பாற்ற எடுத்த முயற்சி என்பது பிறகுதான் தெரிய வந்தது. ஒருவாரம், பின் 10 நாட்கள் என அவகாசம் கேட்ட சீனிவாசன், ""சுப்ரமணியனை கட்சியிலிருந்து நீக்கி விட்டோம், எங்களுக்கும் அவருக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை. இப்பிரச்சினையில் நாங்கள் தலையிட முடியாது'' எனக் கூறி நழுவிக் கொண்டார்.


அட்டூழியங்களில் ஈடுபட்டு அம்பலமாகும் போலீசை இட மாறுதல் அளித்தோ, தற்காலிக பணி நீக்கம் செய்தோ காப்பாற்றும் போலீசுதுறையை போலவே, தேர்ந்த திறமையுடன் சுப்ரமணியனை காப்பாற்றியது சி.பி.எம். கட்சி. அக்கட்சிகாரர்கள் பலவகையில் சுப்ரமணியனுக்கு உதவியாக செயல்பட்டனர். கட்சிக்கு இது தெரிந்தே நடந்தது.


சித்ராவை சுப்ரமணியனின் வீட்டிற்கே அழைத்துச் சென்று 17.01.2001 அன்று நியாயம் கேட்ட ம.க.இ.க. வி.வி.மு. தோழர்களை சுப்ரமணியனுடன் சேர்ந்து கொண்டு தாக்க வந்தான் மெய்யழகன் என்ற சி.பி.எம்.காரன். பின்னர், சித்ரா கொடுத்த புகாரின்படி கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த சுப்ரமணியன், அவரது மனைவி இருவரையும் பிணையில் எடுக்க முயற்சி செய்தார் சி.பி.எம். கட்சியின் வழக்கறிஞர் ஒருவர். பிணையில் வந்த சுப்ரமணியன் கட்சி வேலைகள் செய்ய அனுமதிக்கப்பட்டார். ஒரு சில மாதங்களுக்குப் பிறகு கட்சியில் அதே தகுதியில் சேர்த்துக் கொள்ளவும் பட்டார். பூதலூர் வட்டாரத்தில் சி.பி.எம். கட்சி நடத்திய பல்வேறு பொதுக்கூட்ட பொது நிகழ்ச்சிகளின் துண்டு பிரசுரங்களே இதற்குச் சாட்சியமாக உள்ளது.


சாதாரண கூலி ஏழையான, இன்னமும் பண்ணை வேலை செய்யும் சுப்ரமணியனுக்கு தனது மகனையே கொலை செய்யும் துணிச்சல் ஏற்பட்டதற்கு சாதிவெறியே அடிப்படை என்றாலும், சி.பி.எம். கட்சிக்காரர்களின் சாதிவெறி ஆதரவு செயல்பாடும், சி.பி.எம். கட்சியின் சந்தர்ப்பவாதமும் முக்கிய காரணமாகும். சி.பி.எம். உண்மையாக, நேர்மையாக இவ்விசயத்தில் நடந்து கொண்டிருந்தால், சித்ராமுருகராஜ் இருவரும் திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்து இருப்பர். அது நடைபெறாமல் போய்விட்டது.


கர்ப்பமடைந்த சித்ராவிற்கு 2000மாவது ஆண்டின் இறுதியில் ஆண் குழந்தை பிறந்தது. முருகராஜை திருமணம் செய்து கொள்ள உத்தரவிட வேண்டும் என்றும் இதற்கு தடையாக இருக்கும் சுப்ரமணியன், அவரது உறவினர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் போலீசிடம் புகார் கொடுக்கப்பட்டு, நீதிமன்றத்தில் வழக்கு நடந்து கொண்டு இருந்தது. வழக்கு விசாரணையின்போதே வேறொரு பெண்ணை முருகராஜ்க்கு கட்டாயத் திருமணம் செய்து வைத்தார் சுப்ரமணியன். அப்பெண் மேற்கண்ட பிரச்சினை தெரிந்து வாழாமல் சென்று விட்டார். பூதலூரில், 2002ஆம் ஆண்டில் சி.பி.எம். கட்சியின் வி.தொ. சங்க மாவட்ட மாநாடு நடந்தபோது, சி.பி.எம். கட்சியின் சாதிவெறியையும், சுப்பிரமணியனின் அடாவடித்தனங் களை அம்பலப்படுத்தியும் வி.வி.மு. தோழர்கள் சுவரொட்டி பிரச்சாரம் செய்தனர். அதன்பிறகும்கூட வி.தொ. சங்க மாநிலத் தலைவரான வீரையன், சப்பிரமணியனை அவரது வீட்டிற்கே சென்று சந்தித்துப் பேசியுள்ளார். இதற்கிடையில், சித்ராவைக் காதலித்ததை ஒப்புக் கொண்டும் அவரையே திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்தும் எழுத்துப்பூர்வமாக நீதிமன்றத்தில் ஒப்புதல் அளித்தார் முருகராஜ். பின்னர் முருகராஜ் ஊருக்குத் திரும்பிவந்து, பெற்றோருடன் உறவை முறித்துக் கொண்டு, சித்ராவுடன் தனியே குடும்பத்தை நடத்தி வந்தார். முருகராஜ் ஒப்புதல்படி 16.6.06இல் இருவருக்கும் திருமணம் செய்து வைக்க நீதிமன்றம் முடிவு செய்திருந்தது.


இந்நிலையில், 12.6.06 அன்று இரவே, ஆல்பர்ட், சேட்டு என்கிற மாரிமுத்து ஆகிய இரண்டு சி.பி.எம். காரன்களை துணையாகக் கொண்டு, தனியாக சென்றுக் கொண்டிருந்த முருகராஜை கொலை செய்து வைக்கோல் போரில் வைத்து எரித்து விட்டான் சுப்ரமணியன். எதிர்பாராத விதமாக மழை பலமாக பெய்ததால் பாதி எரிந்த நிலையில் உடல் கிடந்தது. வேறு வழி தெரியாமல் புதரில் உடலை தூக்கியெறிந்துவிட்டு வீட்டிற்கு வந்து விட்டனர், போலி கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த மூன்று அயோக்கியர்களும்.


கொலைக் குற்றத்திலிருந்து தப்பிக்கும் வகையில், சித்ராவிற்கு உறுதுணையாக நின்ற திரு.ராஜேந்திரன் உட்பட மூவர் மீது பொய்யாக புகார் கொடுத்து நாடகமாடினான் சுப்ரமணியன். முதற்கட்ட விசாரணையிலேயே சுப்ரமணியன்தான் கொலையாளி என்பது அம்பலமானது. திருகாட்டுப்பள்ளியில் கட்சிக்காரர் ஒருவரின் திருமணத்திற்கு வந்திருந்த விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாநில தலைவர் கோ.வீரையன் தகவல் தெரிந்து மாரனேரி வந்துள்ளார். அவரிடம் சுப்ரமணியன் கொலை செய்ததற்கான ஆதாரங்களை அடுக்கி, ""சி.பி.எம். கட்சிக்காரர் என்று குறிப்பிடாமல் கொலை வழக்கைப் பதிவு செய்துள்ளோம். உங்கள் கட்சியைக் காப்பாற்ற இதற்குமேல் எங்களால் ஒன்றும் செய்ய முடியாது'' என்று கூறியுள்ளது போலீசு. வேறெதுவும் பேசாமல் வந்த வழியிலேயே திரும்பிவிட்டார் கோ.வீரையன்.


சுப்ரமணியன்தான் கொலை செய்தார் என அம்பலபட்டுள்ள போதிலும், சி.பி.எம். கட்சிக்காரர்கள் சுப்ரமணியனைப் பாதுகாக்க முயற்சிப்பதை நிறுத்தவில்லை. சுப்ரமணியனுடன் கூட்டுச் சேர்ந்துள்ள தமது கட்சியின் சாதி வெறியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கூட சி.பி.எம். முன்வரவில்லை. சுப்பிரமணியன் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட மூன்றாவது நபர் என்று கூறிக் கொண்டு, கணவனைப் பறிகொடுத்துவிட்டு நிற்கும் சித்ராவுக்கு நியாயம் கிடைக்க சட்டரீதியாகப் போராடக்கூட முன்வராமல் அக்கட்சித் தலைவர்கள் நழுவிக் கொள்கின்றனர்.


பூதலூர் வட்டாரத்தில் சி.பி.எம். கட்சியில் செயல்பட்டு, தாழ்த்தப்பட்ட மக்கள் மத்தியில் மட்டுமின்றி உழைக்கும் மக்களிடம் நீங்காத இடம் பெற்றவர் தோழர் வெங்கடாச்சலம். இவர் ஆதிக்க சாதியில் பிறந்திருந்தாலும், அச்சாதிவெறிக்கு எதிராக போர்க்குணத்துடன் செயல்பட்டவர். அதனால் சாதிவெறியர்களாலேயே கொலை செய்யப்பட்டு தியாகியானார். இன்னமும் இத்தியாகியின் பெயரை கூறியே அப்பகுதியில் கட்சியை தக்க வைத்துக் கொண்டுள்ள சி.பி.எம்., சாதிவெறியர்களின் கூடாரமாக மாறிவிட்டது என்பதையும், தலித் மக்களிடம் கூட பார்ப்பனியம் எவ்வளவு ஆழமாக வேரூன்றியுள்ளது என்பதையும் அம்பலப்படுத்தியுள்ளது முருகராஜின் கொலை!


ம.க.இ.க.பு.மா.இ.மு.வி.வி.மு.,


தஞ்சை.


2 comments:

மாசிலா said...

ஒரு பக்கம், மதம் இல்லை சாதி இல்லை என பகுத்தறிவாலர்கள் மாரடித்துக்கொண்டிருக்க, இன்னொரு பக்கம் கீழ் மட்டத்தில் உள்ளவர்களே தங்களுக்கு தானே இப்படி ஒருவருக்கு ஒருவர் அடித்தும் அழித்தும் கொண்டிருக்கின்றர். கட்சியின் பக்கபலம் இல்லாமல் ஒரு நாளும் சுப்பிரமணியால் இப்படி செய்து இருக்க முடியாது. சொந்த மகனையே கொலை செய்யும் அலவுக்கு தூண்டிவிட்ட அக்கட்சியனர்தான் இதற்கு பொறுப்பு. முடிந்த வரையில் இக்கொலையை நடக்காத அலவுக்கு தடுத்தாவது இருக்க முடியும்.

யார்தான் இவர்களுக்கு ஒரு உயிரை எடுப்பதற்கு உரிமை கொடுத்தார்களோ?

Osai Chella said...

In Palani, a cpi comrade was dead against his daughters love because of the caste issue. i went and interfered with the help of police and completed the marriage against their stiff resistance. i do think CPI(M) is more and more a diluted ideological party with cadres are becoming more and more sophisticated!