தமிழ் அரங்கம்

Sunday, October 29, 2006

புலிப்பொருளாதாரம் ஊரையே ஏமாற்றும் கானல் நீர் தான்

புலிப்பொருளாதாரம் என்பது ஊரையே ஏமாற்றும் கானல் நீர் தான்

பி.இரயாகரன்
22.10.2006


புலிகளின் காட்டுப்பிரதேசங்கள் மீதான பேரினவாதிகளின் பொருளாதார தடை, புலிகளையே நித்திரையில் இருந்து உலுப்பி எழுப்ப முனைகின்றது. அவர்களோ கனவு கண்டு எழுந்தவன் போல் புலம்புகின்றனர். உடனே புலிப் பொருளாதாரம் பற்றி பேசுகின்றனர். ஆனால் தமிழீழ மக்களின் தேசிய பொருளாதாரம் பற்றி அவர்களால் பேசமுடிவதில்லை. பேரினவாத பொருளாதார தடையை, தாம் வெற்றிகரமாக வென்றுவிடுவோம் என்று, ஊரையே ஏமாற்றும் ஒரு பரப்புரையை சுடுகாட்டில் நடத்துகின்றனர்.


ரி.ரி.என் தொலைக்காட்சியில் 'நிலவரம்" என்ற நிகழ்ச்சியில் 'பொருளாதார தடைகளும் பொருண்மிய போராட்டமும்" என்ற தலைப்பில் இதைச் செய்தனர். உப்புச்சப்பற்ற, நடைமுறைக்கு உதவாத, சுடுகாட்டில் எரிந்து சிதைந்து கிடக்கும் பிணங்களை நோக்கி ஒரு பரப்புரை நடத்தினர். புலித் தேசிய பொருளாதாரத்தை கட்டி, நாம் மக்களை மீட்டுவிடுவோம் என்கின்றனர். உலக பொருளாதாரம் பற்றி கரிகாலனும், பாலகிருஸ்ணனும் தம்பாட்டுக்கு பைத்தியம் போல், கவர்ச்சியாக அலட்டினர். இந்த அலட்டலை பதிவுகள் இணையத்தில் நீங்கள் பார்க்க முடியும். http://www.pathivu.com/?ucat=nilavaram


'பொருளாதார தடைகளும் பொருண்மிய போராட்டமும்" என்ற தலைப்பில் விவாதித்தவர்கள், விடையத்தை விவாதிக்க முடியாது விடையத்துக்கு வெளியில், விடையத்தை சிதைத்து வீங்க வைத்தனர். சிறிலங்கா பேரினவாத அரசு, உலகம் என்று சன்னி கண்டவன் போல் உளறியவர்கள், தங்களது பொருளாதாரம் பற்றி கூற முடிவதில்லை. இதை புலிகளின் தமிழீழ பொருண்மிய மேம்பாட்டு நிறுவன பொறுப்பாளர் கரிகாலனும், புலிகளின் பொருளாதார ஆய்வாளர் பாலகிருஸ்ணணும், தத்தமது வெள்ளை வேட்டி அறிவுப் புலமைக்கு ஏற்ப இதை பரப்புரையாக்கினர்.


புலிகளின் புலிப் போராட்டம் தொடங்கி 30 வருடம் கழிந்த நிலையில், பொருளாதாரம் பற்றி புலம்புவது மூலம், புலிகள் தாமே அதன் எதிரிகளாக இருந்ததை, இருப்பதை நிறுவுகின்றனர். தேசிய பொருளாதாரத்தின் முதல் எதிரியே புலிகள் தான். அதனை சிதைத்து சின்னாபின்னப்படுத்தியவர்களும் புலிகள் தான். தேசிய பொருளாதாரத்தை சிதைத்து, அந்த சாம்பல் மேட்டுச் சுடலையில் நின்று, இன்று ஞான உபதேசம் செய்கின்றனர். அதை தமது குறுகிய பாசிச சித்தாந்தத்துக்குள் நின்று, ஊரையே ஏமாற்ற புலுடா விடுகின்றனர்.


எல்லாம் வல்ல அந்த பிரபாகரனின் கடவுளின் பெயரில், பிள்ளையார் சுழியிட்டு கரிகாலன் தொடங்குகின்றார். பிரபாகரன் தீர்க்கதரிசனமாக எல்லாவற்றையும் முன்கூட்டியே உணர்ந்ததாகவும், அந்த மாபெரும் கடவுளின் பெயரில் இதை ஒப்புக்கு ஓப்புவிக்கின்றார். பாலகிருஸ்ணன் பொருளாதாரம் பற்றி தனது கல்விசார்ந்த அறிவியல் புலமை சார்ந்த, ஏகாதிபத்திய கோட்பாட்டுத் திரிபை உளறிக் கொட்டுகின்றார்.


'தமிழீழ உட்கட்டுமானம்" என்ற நூலை தமிழீழ பொருண்மிய மேம்பாட்டு நிறுவனம் 1997 இல் வெளியிட்டு இருந்தது. அதில் புலிகளின் தலைவர் பிரபாகரன் 'சுயநிறைவான தன்னில் தானே தங்கிநிற்கும் பொருளாதார வாழ்வுடைய சமூகமாக எமது சமூகம் உருவாகவேண்டும் என்பதே, எனது விருப்பம். மக்கள் தம்மைத்தாமே ஆளும் உரிமையுடைய சனநாயக ஆட்சி முறையையே நான் விரும்புகின்றேன். இந்த புதிய சமூகத்தில், உழைக்கும் மக்கள் மத்தியில் பொருளாதார சமத்துவம் நிலவவேண்டும்." என்கின்றார். இப்படி அவர் தனது விருப்பைக் கூறிய போதே தெரிந்தது, அங்கு தேசிய பொருளாதாரம் கிடையாது என்பதை உறுதி செய்தது. தலைவரின் மேற்கோள் விருப்பம் மட்டும் தான் அச்சில் பதிவாகியது, அவ்வளவே! இன்று மீண்டும் இதைப்பற்றி, அவர்களின் எடுபிடிகள் வாயளவில் பரப்புரை நடத்துகின்றனர். கறிக்கு உதவாத சரக்கு. வாழ்க்கைக்கு பொருத்தமற்ற அலம்பல்கள். தலைவரின் மேற்கோள் விருப்பத்தையே ப+ர்த்தி செய்யாத அவரின் போராட்டம். இன்று அவரின் பெயரில் மீண்டும் புலம்பல்.


10 வருடத்துக்கு முன் தீர்க்கதரிசனமிக்க தலைவரின் விரும்பம் நூலில் அச்சாகிய போதும், எதுவுமற்ற ஒன்றாகவேயுள்ளது. இதில் தலைவர் மக்கள் 'தம்மைத்தாமே ஆளும் உரிமை" பற்றியும் 'சனநாயக ஆட்சி முறையையே விரும்புகின்றேன்" என்று சன்னிக்காய்ச்சல் கண்டவன் போல் பலவாக புலம்பியுள்ளார். இதற்கு தடையாக இருப்பவரே, அதைக் கூறும் பிரபாகரன் தான். பிரபாகரனின் சர்வாதிகார பாசிசம் தான், மக்கள் தம்மைத்தாம் ஆள முடியாத நிலைக்கும், சனநாயகமற்று இருக்கவும் காரணமாகவுள்ளது. புலிப் பாசிச சர்வாதிகார சுரண்டல் அமைப்புத் தான் 'சுயநிறைவான தன்னில்தானே தங்கிநிற்கும் பொருளாதார வாழ்வுடைய சமூகமாக எமது சமூகம் உருவாகவேண்டும்" என்பதற்கு பிரதான தடையாக எதிரியாக உள்ளது. இதில் பொருளாதார சமத்துவம் பற்றி வேறு அலட்டல். முதல் மக்களை சமமாக பண்பாக மதிக்க கற்றுக்கொள்ளவே தெரியாத, அடாவடித்தனக் கும்பல் தான் புலிகள். பொருளாதார ரீதியில் சமத்துவம் என்பது இவர்களின் நல்ல நகைச்சுவை தான். இப்படி ஒரு புலித் தொகுப்பே வெளியிடலாம். மக்கள் வாழ்க்கை நிலைக்கு முன் , புலிகளின் வாழ்க்கை நிலையை மாற்றுங்கள் பார்க்கலாம். தலைவராலும் முடியாது, தலைவரை பின்பற்றும் எந்த புலிக் கொம்பனாலும் முடியாது.


இந்த நிலையில் கரிகாலன் தலைவரின் தீர்க்க தரிசனம் பற்றி புலுடா விடுகின்றார். கரிகாலன் ஒரு அசல் பச்சோந்தி என்பதால், இப்படி மக்கள் முன் புலுடா அடிக்க முடிகின்றது. மொத்தத்தில் இவர்களின் கருத்துக்கள் நடைமுறையற்ற வெற்றிடத்தில், நடைமுறையில் மக்களின் வாழ்வை சூறையாடுகின்ற எல்லைக்குள், இவர்கள் நல்ல கிளுகிளுப்புக் கதை சொல்லுகின்றனர்.


இன்று புலிப் பொருளாதாரம் பற்றி அலட்டுகின்றனர். பேரினவாதம் ஒரு பொருளாதார தடையை விதிக்கின்றது என்றால், அதற்கு எதிர்வினையை மட்டும் வார்த்தைகளால் வெளிப்படுத்துகின்றனரே ஒழிய நடைமுறையில் அல்ல. இதன் மூலம் ஒரு உண்மை அம்பலமாகின்றது. தமிழீழ புலிப் பொருளாதாரம் என்ற ஒன்று, இன்றுவரை இருக்கவில்லை என்பதை இது நிறுவுகின்றது, ஓத்துக் கொள்கின்றது. அதாவது தேசிய பொருளாதாரம் புலிநோக்கில் கூட உருவாக்கப்படவில்லை என்பதை எடுத்துரைக்கின்றது. இயல்பான மக்களின் வாழ்வு சார்ந்த, அவர்களின் தன்னியல்பான பொருளாதார உற்பத்தியைத் தாண்டி, தேசிய பொருளாதாரம் என்ற ஒன்று கிடையாது என்பதை இந்த விவாதம் மறுபடியும் உறுதி செய்துவிடுகின்றது.


புலிப்பொருளாதாரம் வரிப் பொருளாதரம் தான். தரகு வர்த்தகர்கள் தான். மக்களை ஏமாற்றியும், மிரட்டியும், சுருட்டியும், திருடும் பணப் பொருளாதாரம் தான். உற்பத்திப் பொருளாதாரத்தை சார்ந்து, புலிகள் மக்களை அணிதிரட்டியது கிடையாது. அந்த அரசியல் கிடையாது. 'சாவிலும் வாழ்வோம்" என்று கூறி புலம் பெயர் நாட்டில் நடத்தும் நிகழ்ச்சிகள், அவர்களின் எதார்த்தமான சரியான முன்மொழிவாகும். மக்கள் செத்தால் புலிகள் வாழ்வார்கள், இதையே அவர்கள் அன்றாடம் நடைமுறையில் நிறுவிக் காட்டுகின்றனர். சாவில் பணம் திரட்டி வாழ்கின்றது. சுனாமி முதல் எல்லா மரணங்களும், புலிக்கு சொகுசான வாழ்வை வழங்குகின்றது. மக்களின் பணம் சாவில் சூறையாடப்படுகின்றது. 'சாவிலும் வாழ்வோம்" என்று அவர்கள் கூறுவது சாலப் பொருந்துகின்றது.


புலியின் பொருளாதாரம் மனித மரணங்களிலும், அமைதிப் பேச்சு வார்த்தையிலும், வரி மூலமும், மக்களை உருட்டி மிரட்டியும், மக்களை ஏய்த்தும் தான் திரட்டப்படுகின்றது. அண்மையில் புனர்வாழ்வுக் கழகம் மூலம் சுனாமி நிவாரணத்துக்கு இலங்கை வங்கி ஊடாக சர்வதேச நிறுவனங்கள் வழங்கயி பணம், மீண்டும் மேற்கு நோக்கி நகர்ந்த வித்தையை மக்கள் விரோத புலியால் மட்டும் தான் செய்யமுடியும் இந்த நிலையில் மேற்கில் சேர்க்கும் பணம் மக்களுக்கு செல்வது என்பது நினைத்தே பார்க்க முடியாத ஒன்று. மக்கள் பற்றி, புலிகள் வரலாற்றில் ஒரு துளிதன்னும் அக்கறை கொண்டது கிடையாது.


இந்த நிலையில் இந்த விவாதத்தில் ஒரு தர்க்கம் வைக்கப்பட்டது. பேரினவாதிகளின் வருடாந்த வரவு செலவின் பற்றாக்குறை உட்பட, பாதுகாப்பு செலவுக்கு ஒதுக்கிய நிதி பற்றி கூறப்பட்டது. ஆனால் ஏகாதிபத்தியத்துக்கு கொடுக்கும் வட்டி பற்றி வாய் திறக்கவில்லை. அது பாதுகாப்பு செலவைவிட அதிகம். ஆனால் பாதுகாப்பு செலவு பற்றி மட்டும் ஒருமுனைப்பாக வாதிட முனைகின்றனர். இதன் மூலம் தமக்கு பணம் திரட்டும் உத்தியாகவே இவை முன்வைக்கப்படுகின்றது.


ஒவ்வொரு மனிதனும் காலை எழுந்தவுடன் அன்றைய நாள் பாதுகாப்புச் செலவுக்கு ஒருவர் 20 ரூபா கொடுக்க வேண்டியுள்ளதாக கூறுகின்றனர். உண்மை தான். இதை தமிழ் தரப்பு கொடுக்கின்றதா, எப்படி கொடுக்கின்றது, அதை யார் பெறுகின்றனர், என்பது மற்றொரு பொருளாதார ஆய்வுக்கு வைத்துவிட்டு, இதை கூறுபவர்கள் இதை எப்படிச் செய்கின்றனர் என்று பார்ப்போம்.


புலியின் வரவு செலவு என்ன? அதில் எத்தனை சதவீகிதம் மக்கள் நலனுக்காக செலவு செய்யப்படுகின்றது. ஒரு சதவீதம் இல்லையென்றால் ஆகக் கூடியது 10 சதவீதம்? பாதுகாப்பு செலவுக்கு 99 சதவீதம் இல்லையென்றால் 90 சதவீதம், பாதுகாப்புக்கே புலிகளால் செலவு செய்யப்படுகின்றது. அப்படியாயின் ஒவ்வொரு தமிழனும் எவ்வளவு பணத்தை நாளொன்றுக்கு செலவு செய்கின்றான். இது மர்மம் தான். அந்த பொருளாதார சூரப்புலி ஆய்வாளருக்கே, இது தர்மசங்கடமான மர்மம் தான்.


சரி விழுந்தடித்து வந்து தேசிய பொருளாதாரம் என்கின்றீர்களே. உங்கள் இந்த தேசிய பொருளாதாரத்துக்கு எத்தனை சதவிகிதத்தை புலிகள் தமது செலவில் ஓதுக்கியுள்ளனர். எவ்வளவு பணம்? இப்படி பல விடையத்தை மக்கள் நலன் சார்ந்து அடுக்கிக் கொண்டு போகலாம். போலியாகவும், புரட்டாகவும், விதண்டாவாதமாகவும் கதைப்பதற்கு அப்பால், இதில் எந்த நேர்மையும் நடைமுறையில் கிடையாது. தேசிய பொருளாதாரத்துக்கு என்று ஏதாவது வரவு செலவு திட்டங்கள் உண்டோ? இராணுவ வெற்றி போல் அவற்றை எல்லாம் பிரசுரியுங்களேன். ஏன் ஓடி ஒளிக்கின்றீர்கள். ஏன் ஊரை ஏமாற்றுகின்றீர்கள்.


பேரினவாதம் பொருளாதார தடை விதித்த பின், எவ்வளவு பணம் கூடுதலாக தேசிய பொருளாதாரத்துக்கு ஓதுக்கினீர்கள்.? அதையெல்லவா வந்து கூற வேண்டும். யாரை ஏமாற்றுகின்றீர்கள். தமிழனை மந்தையாக வைத்துக் கொண்டு, உங்கடை பாட்டுக்கு அர்த்தமில்லாத வகையில் இவற்றையெல்லாம் ஓதலாம் என்பது உண்மை தான். அதைத் தான் செய்கின்றீர்கள். இதற்கென எந்த பெறுமதியும் இருப்பதில்லை.


மக்கள் தாங்களாகவே தமது அன்றாட வாழ்வையொட்டி உற்பத்தி செய்வதை, தேசிய பொருளாதாரம் என்பதும், அதை வைத்து தம்பட்டம் அடிக்க முடிகின்றது. அதற்குள் தலையிடவும், அதை சீர்குலைக்கவும் அல்லது தமக்கு தமது சுரண்டலுக்கு இசைவானதாக மாற்றவுமே, புலிகள் எப்போதும் முனைந்தவர்கள். உண்மையில் தேசியமும், தேசிய பொருளாதாரமும் புலிகளால் அழிந்து சிதைகின்றது.


இந்த வாதத்தில் பாலகிருஸ்ணன் என்ற புலிக்கு ஏற்ற பொருளாதார பிழைப்புவாத சாடி, ஏன் மேற்கு நாடுகள் தலையிடுகின்றது என்பதற்கு ஒரு கருத்தை துப்பிவிடுகின்றார். அவரின் கண்டுபிடிப்பு சனத்தொகைக்கும், உற்பத்திக்கும் இடையில் உள்ள சதவீகித இடைவெளியையே, அமைதிக்கான தலையீடாக காட்டுகின்றார். நல்ல பொருளாதார புலி நகைச்சுவை தான். இதையும் தலைவரின் பொருளாதார மேற்கோளாக்கலாம். உலக பொருளாதார உற்பத்தியில் மேற்கில் சனத்தொகை வீகிதத்துக்கு மிஞ்சிய உற்பத்தி வீகிதம் காணப்படுவதால், அதை சந்தைப்படுத்தவே இலங்கையில் அமைதி சமாதானத்தை இந்த நாடுகள் கோருகின்றதாம். அத்துடன் உலகமயமாதல் என்பது, சந்தையைத் திறந்து விடக் கோருவதாம். இப்படி உலக பொருளாதாரத்தை ஆய்வு செய்து விளக்கமளித்தால் இதற்கு சந்தோசமாக ஏகாதிபத்தியங்கள் பொருளாதார பட்டம் கொடுக்கும். தேசிய பொருளாதாரம் என்பதே தெரியாத ஏகாதிபத்திய சூனியங்கள் தான், புலிக்கு பின்னால் ஒட்டிக்கொண்டு இருப்பதைக் காட்டுகின்றது.


இந்த ஆய்வாளர் கூறிய உற்பத்தி வீகிதமே தவறானது. ஐp-7 நாடுகள் உலக உற்பத்தில் 60 முதல் 70 சதவீகிதத்தைக் கட்டுப்படுத்துகின்றது. இப்படி அரைகுறையான உண்மைகளை, தமது சொந்த தர்க்கத்துக்கு எடுத்து, மக்கள் விரோத புலிக்கு இசைவானதாக திரித்து புகுத்திவிடுகின்றனர். இந்த புள்ளிவிபர தர்க்கவாதத்தினை தகர்க்கும் மற்றொரு உண்மை உண்டு. அதாவது உலக நுகர்வை எடுத்தால், 20 சதவீதமானோர் உலக உற்பத்தில் 84 சதவீகிதத்தை நுகருகின்றனரே. அந்த 20 சதவீகிதம் மேற்கு நாட்டைச் சேர்ந்தவர்கள். இந்த புள்ளிவிபரம் புலி பொருளாதார பாலகிருஸ்ணனின் முழுவாதத்தையும், அதன் அரசியல் முடிவுகளையும் முழுமையாக தகர்த்து விடுகின்றது. ஓப்புக்கும், மக்களை ஏமாற்றவும் புள்ளிவிபரத்தை பயன்படுத்தும் போது இது நிகழத்தான் செய்யும்.


மேற்கின் நுகர்வு அவர்களின் சொந்த உற்பத்தி விகிதத்தையும் கடந்து, மற்றைய நாட்டு மக்களிடம் இருந்து அபகரித்தே நுகரப்படுகின்றது. அப்படியாயின் சந்தை என்றால் என்ன? திறந்து விடக் கோரும் சந்தை எது.? மேற்கின் அதிக உற்பத்தி அவர்களுக்கே போதாது. மற்றொரு புள்ளிவிபரம் 20 சதவீதமான மக்கள் உலக உற்பத்தியில் ஒரு சதவீகித்தையே நுகருகின்றனர். மிகுதி 60 சதவீகிதம் பேர் 15 சதவிகிதத்தையே நுகருகின்றனர். உற்பத்தி வீகிதத்தை அல்ல, நுகர்வு வீகிதத்தை அதாவது விளைவை நாம் காணவேண்டியவராக உள்ளோம். புள்ளிவிபரத்தை தமது குறுகிய நோக்கத்துக்கு புலிகள் திரித்துக் காட்டி, மேற்கத்தைய தலையீட்டின் நோக்கத்தை பூசிமெழுகி ஏகாதிபத்தியத்தையே பாதுகாப்பது நிகழ்கின்றது.


மனிதனை மனிதன் சுரண்டுவதற்காகத்தான் அனைத்தும் திரிக்கப்படுகின்றது. மேற்கின் தலையீடு இலங்கையைச் சுரண்டுவது தான். மனித உழைப்பை, தேசத்தின் வளத்தை, மக்களின் அறிவியலை சுரண்டுவது தான் அனைத்தும். அதற்காகவே உலகத்தையே அடிமைப்படுத்துகின்றனர். இந்த எல்லைக்குள் தான், இலங்கையில் தலையிடுகின்றனர். புலிகள் கூறுவது போல் மிஞ்சிப்போன பொருளை விற்பதற்காக அவர்கள் தலையிடுவதில்லை. மேற்கின் நுகர்வுக்கு அவர்களின் உற்பத்தியே போதாது. கடன், அதற்கு வட்டி அவை மூலம் ஏற்றுமதி, இப்படி பலவழிகளில் மேற்கு அதிதமாகவே மக்களிடம் பறித்து நுகருகின்றனர், புலிகளைப் போல். மனித சமூகத்தில் இல்லாமையும் ஏழ்மையும், இப்படி விதைக்கப்படுகின்றது. இதற்கு துணைபோகும் புலிகள், அதை மூடிமறைக்கின்றனர். சந்தைப் பொருளாதாரம், ஏற்றுமதி என்று புலம்புகின்றனர்.


கரிகாலன் புலம்பெயர் தமிழனுக்கு ஏற்றுமதி செய்வது பற்றி அலட்டுகின்றார். இதை உற்பத்தி செய்த மக்களுக்கு தேசிய உற்பத்தி மூலம் உணவிடுவதைப் பற்றி அல்ல, புலம் பெயர் தமிழனுக்கு ஏற்றுமதி செய்து காசு சம்பாதிப்பது பற்றி வக்கிரமாக புலிகளால் நினைக்க முடிகின்றது. அதைத் தான் அவர்கள் செய்கின்றனர். எல்லாவற்றிலும், எல்லாவுறவிலும் பணப் பேய்களாக சிந்திக்க முடிகின்றது.


புலிகள் கூறுவது போல் சந்தை என்பது மேலதிகமான மிஞ்சிய பொருளை விற்பதல்ல. தமிழ் மக்களுக்கு உணவிடுவதல்ல, புலம்பெயர் தமிழனுக்கு விற்பது தான் சந்தை. இதை கரிகாலன் உளறிக் கொட்டுகின்றார். இது தான் சந்தையின் எல்லை. உற்பத்தி என்பது சந்தை பொருளுக்கு மட்டுமாகி, மக்களுக்கு உற்பத்தி என்பது மறுக்கப்படுகின்றது. மக்களின் தேவை மறுக்கப்பட்டு, அவர்கள் பட்டினியில் வாழ்வதே தேசிய பொருளாதாரமாக காட்டப்படுகின்றது. மக்களின் தேசிய பொருளாதாரத்துக்கு பதில், புலிகள் கொண்டுள்ள பொருளாதாரக் கொள்கையும் இதுதான். மேலதிக உற்பத்தியை விற்பதாக கூறுவது, பொருளாதாரம் தெரியாத அரிவரிகளின் பணம் சம்பாதிக்கும் விளக்கமாகும்.


சந்தை என்பது தேவை மறுக்கப்பட்ட நிலையில், உற்பத்தியை தரகு வர்த்தகம் செய்யப்படும் இடமாகும். அங்கும் மனித தேவை புறக்கணிக்கப்படுகின்றது. உற்பத்தியைச் செய்பவனுக்கும், நுகர்பவனுக்கும் இடையில், புல்லுருவிகளாக உழையாது வாழும் ஒரு சமூகவிரோதக் கும்பல்கள் சுரண்டும் இடம் தான் சந்தை. சந்தை என்பது கொள்ளைக்காரர்கள் மனித உழைப்பை வைத்து, அதை சூதாடும் இடம். சந்தை என்பது உற்பத்தியாளன் நேரடியாக நுகர்பவனுக்கு விற்குமிடமில்லை. எஞ்சிக் கிடக்கும் கிராமிய சந்தைகள் கூட இதில் தத்தளிக்கின்றது. இப்படி சந்தை என்பது கொள்ளை அடிப்போரின் கூடாராமாகும். இங்கு உற்பத்தி அடிமாட்டு விலைக்கு வாங்குவதும், அதை நுகர்வோருக்கு மிக உயர்ந்த கொள்ளை விலையில் விற்கும் ஒழுக்கம் தான் வர்த்தகம்.


இரண்டாவதாக உலகமயமாதல் என்பது தரகு கும்பல் இன்றி உழைப்பை உறுஞ்சுவது. தேசிய உற்பத்தியை அழித்து, அதனிடத்தில் நேரடியாகவே உழைப்பை அபகரிப்பது. உலகமயமாதல் என்பது உற்பத்தியை, உழைப்பை உலகமயமாக்குவது. மலிவான கூலியை கொண்ட அதிக இலாபம் சம்பாதிப்பது. அதை சந்தைப்படுத்துவது. இது தனது தேச எல்லையை அடிப்படையாக கொள்வதில்லை. உதாரணமாக அமெரிக்கா தனது மேலதிக உற்பத்தியை விற்றல் என்ற புலிவாதம், உலகமயமாதலில் தவறானது. அமெரிக்கா முதலாளி அமெரிக்காவில் மட்டும் உற்பத்தி செய்வதில்லை, இலங்கையிலும் கூட உற்பத்தி செய்கின்றனர். இதைபற்றி புள்ளிவிபரக் கட்டுரை முன்பு எழுதியுள்ளேன். பார்க்க எமது இணையத்தை. பொருட்கள் அமெரிக்காவில் இருந்து மட்டும் சந்தைக்கு வருவதில்லை. அமெரிக்கா மற்றய நாட்டிலும் உற்பத்தி செய்கின்றது.


ஒரு மனிதனின் அடிப்படை தேவை மறுக்கப்படும் போது தான், சந்தையும் அதையொட்டிய வர்த்தகமும் உருவாகின்றது. உலகமயமாதலின் உயிர் என்பது, ஒரு மனிதனின் அடிப்படை வாழ்வுக்கு தேவையான கூலியையும், ஒரு மனிதன் மனிதனாக இருப்பதற்கான அடிப்படை மனித உரிமையை மறுக்கும் எல்லையில் தான் உள்ளது. இதையே உலகமயமாதல் உலகெங்கும் கோருகின்றது. மனிதன் மனிதனாக வாழ முடியாத வகையில், ஒரு பண்ணை மிருகமாக மக்களை மாற்றுவதையே அடிப்படையாக கொள்கின்றது.


மேற்கின் தலையீடுகள் என்பது மூலதனத்தின் சுரண்டல் நலன்கள் தான். இதை புரிந்து கொள்ளாமல் தேசியம்பேசுவது கடைந்தெடுத்த போக்கிரித்தனமாகும். இதையே புலிகள் செய்கின்றனர். அவர்கள் சனத்தொகை சதவீகிததுக்கு அதிகமான தமது உற்பத்தியை விற்க தலையிடுவதாக அவர்களுடன் சேர்ந்து புலுடா விடுகின்றனர்.


மேற்கின் தலையீடு என்பது ஒரு நாட்டின் தேசிய மூலப்பொருட்களை சொந்தமாக்குவதுடன், முக்கியமாக தேசிய உற்பத்தியை அந்த மக்களிடமிருந்து அழித்தலாகும். தேசிய உற்பத்திகள் மீதான தனது கட்டுப்பாட்டை பெறுதலாகும். தேசிய உற்பத்திக்கு மாறாக, மேற்கத்திய தனது உற்பத்தியை செய்வதும், அதைச் சந்தைப்படுத்துவதாகும். சந்தையை, அதன் உள்ளடகத்தை தனக்கும் தனது பொருளுக்கும் இசைவானதாக்குவதாகும். நுகர்வுக்கு வரும் பொருட்கள் அமெரிக்காவில் தான் உற்பத்தி செய்ய வேண்டும் என்பதல்ல, மாறாக இலங்கையில் அமெரிக்க முதலாளிகள் உற்பத்தி செய்து விற்கமுடியும். உதாரணம் கொக்கோகோல. தேசிய உற்பத்திகள் அழிதலாகும். இருக்கும் அரைக்காலனிய நவகானிய அமைப்பை தேவை ஏற்பட்டால் மறுகாலனியாக்குவதாகும். இப்படி தான் எமது பொருளாதார அழிகின்றது. இதற்கு புலிகள் துணைபோகின்றனர். தேசியம் பேசியபடி, தேசிய பொருளாதாரத்தை புலிகள் அழித்து வருகின்றனர்.


இப்படி துணைபோகும் புலிகள், தமிழர்கள் நாட்டில் இருந்து வெளியேறுவது பற்றி, அதிலும் அறிவித்துறையினரின் வெளியேற்றத்தை பற்றி அலட்டுகின்றனர். நாட்டைவிட்டு வெளியேற்றம் என்பது, அதுவும் அறிவுத்துறையினரின் வெளியேற்றம் என்பது, புலிகளால் தான் நிகழ்கின்றது. புலிப் பிரதேசத்தைவிட புலியல்லாத பிரதேசத்தில் வாழ்வது பாதுகாப்பானது என்ற அடிப்படையில், பத்து இலட்சம் தமிழர்கள் கொழும்பு நோக்கி புலம்பெயர்ந்துள்ளனர். புலிகள் திறந்துவிட்டால் புலிகள் மட்டுமே எஞ்சுவர் என்ற நிலை. சிறிலங்கா இராணுவ கெடுபிடியால் தான், தமிழன் புலம்பெயர்கின்றான் என்று அலட்டக்கூடாது.


புலம்பெயர் தமிழன் அனுப்பும் பணம் பேரினவாத அரசின் வெளிநாட்டு செலாவணியாகி, அவர்கள் ஆயுதம் வாங்க உதவுகின்றது என்கின்றனர். எனவே புலிக்கு அன்னியச் செலாவணி வரும் வகையில் பணத்தை சட்டவிரோதமாக உண்டியல் ஊடாக அனுப்பக் கோருகின்றனர். வடக்குகிழக்கு மக்களிடம் கொள்ளையடிக்கும் பணம் இப்படி அன்னியச் செலவாணியாகி மக்களுக்கு எதிரானதாக வீணாகின்றது. தேசத்தை, தேசியத்தை விட்டு அந்தப் பணம் கரைந்தோடுகின்றது. எம்மக்களிடம் புலிகள் அறவிடும் பணம், இப்படி ஆயுதம் வாங்க புலம்பெயர் தமிழனின் பணம் உதவுகின்றது. இப்படி பேரினவாதத்தின் பெயரில், தமிழனிடம் உண்டியல் மூலம் பணம் அனுப்ப அறை கூறவுகின்றது. மக்கள் பட்டினி கிடக்க, மக்களின் பணம் இப்படி வெள்ளமாக மேற்கு நோக்கி ஓடுகின்றது. நாட்டில் சிலர் சொகுசாக வாழும் எதிர்மறை அம்சம் இதன் மூலம் புகுகின்றது.


இப்படி பல வகையில் தமது பாசிச உள்ளடகத்தை வெளிப்படுத்துபவர்கள், உலகமயமாதல் பற்றி தமது நோக்குக்கு ஏற்ப திரிக்கின்றனர். சந்தையை திறந்துவிடல் என்பதும், உலகமயமாதல் என்பதும் பல அம்சங்களைக் கொண்டது. இதையொட்டி நான் ஐந்து பாகங்கள் கொண்ட நூலை எழுதி முடித்துள்ளேன். முதல் பாகம் விரைவில் அச்சில் வெளிவரவுள்ளது. சில கட்டுரைகள் இணையத்தில் வெளியிட்டுள்ளேன். பார்க்க.


உலகமயமாதல் என்பது புலிகள் கூறுவது போல் சந்தையை திறந்து மேலதிக உற்பத்தியை விற்பதல்ல. மேலதிக உற்பத்தி என்பதே, உற்பத்தியில் அராஜகத்தை அடிப்படையாகக் கொண்டது. மனித தேவையை கவனத்தில் எடுக்காத உற்பத்தி முறை. இதற்கு மனித தேவையை மறுத்து, ஏற்றுமதி உற்பத்தியைக் கொண்டு அராஜகம் புகுத்தப்படுகின்றது. மேற்கின் மிதமிஞ்சிய ஆடம்பரமாக நுகர்வதற்கென (உலக உற்பத்தியில் 80 சதவீகிதம்), ஏற்றுமதி பெருமெடுப்பில் நடத்தப்படுகின்றது. ஆபிரிக்காவின் சோளம் மேற்கின் ஆடுமாடுகளுக்கு உணவாகின்றது. மேற்கில் இறைச்சி உணவு இதன் மூலம் பூர்த்தியாகின்றது. ஆபிரிக்கா மக்கள் திறந்தவெளியில் பட்டினியில் செத்துப் போக, கழுகுகள் பிணங்களை உண்டு பசியாறுகின்றது. இப்படித் தான் இருக்கின்றது உலக பொருளாதாரத்தின் சுழற்சி விதி.


இப்படி பற்பல புலி அலட்டல்கள், புலி பொருளாதாரமாகின்றது. ஏகாதிபத்தியத்துக்கு இது சேவை செய்கின்றது. பேரினவாதம் புலிகளுக்கும், அங்கு வாழ்ந்த மக்களுக்கும் பொருளாதார தேவையை ப+ர்த்தி செய்த கட்டமைப்பில், புலிகள் என்ன செய்தனர். இலாபம் சம்பாதிக்கும் தரகு வர்த்தகராக, அதற்கு வரியறுவிடுபவராக செயல்பட்ட புலிகள், சொந்த உற்பத்தியை இதற்காகவே அழிப்பதில் துணைபோனார்கள். தேசிய பொருளாதாரத்தை அவர்கள் உருவாக்கவில்லை என்பதற்கு அப்பால், இருந்த மக்களின் பொருளாதார கட்டமைப்பையும் கூட அழித்தனர் என்பதே உண்மை. தரகுப்பணமும், வரிப்பணமும் புலிகளின் செல்வத்துக்கான ஆதாரமாகியது. இப்படித் தமிழ்தேசிய பொருளாதாரம் சிதைக்கப்பட்டது. இருந்த சமூக அடிப்படைக் கூறுகளும், சின்னாபின்னமாகி சிதைந்தது.


உண்மையில் தேசிய பொருளாதாரம் என்பது, அந்த மக்களின் பொருளாதார வாழ்வின் மீதான இருத்தல் சார்ந்த, ஓரு தேசிய போராட்டத்துடன் தொடர்புடையது. புலிப் போராட்டம் தேசிய பொருளாதார போராட்டமல்ல. அதாவது தேசிய மக்களின் அன்றாட வாழ்வு சார்ந்த, அவர்களின் பொருளாதார நலன் சார்ந்த போராட்டமல்ல. மாறாக குறுகிய எண்ணம் கொண்ட புலி நலன் சார்ந்த போராட்டத்துக்கு, மக்களையும் அவர்களின் வளங்களையும் பயன்படுத்துவது தான் புலிபோராட்டமாகவுள்ளது. புலிகள் தமது தமிழீழத்தில் மக்களுக்கு என்ன தான் தருவார்கள்?


வன்னியில் புலிகள் தேசிய விளையாட்டுப் போட்டியில் கொக்கோகோலாவின் மிகப் பெரிய விளம்பரத்தை வைத்து தேசிய பணத்தையே கழுவேற்றியவர்கள். தேசிய உற்பத்தியான குடிபானங்கள், கொக்கோகோலாவின் கால்களில் மிதிபட்டது. புலிகள் தமது பினாமிகள் மூலம், வடக்கின் கொக்கோகோலா ஏஜண்டானார்கள். புலிகள் அதற்கு பாதுகாப்பும் மகுடமும் சூட்டினர். இப்படி பல்துறை சார்ந்த வகையில், மக்கள் அன்றாட வாழ்வு சார்ந்த தேசிய பொருளாதாரம் புலிகளால் அழிக்கப்பட்டது.


இந்த நிலையில் இன்றைய பொருளாதார தடை கூட, மட்டுப்படுத்தப்பட்டதாகவே உள்ளது. புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசத்தில் அரசு ஊழியர்களின் சம்பளக் கொடுப்பனவு வழங்க மறுக்கப்படின், நிலைமை எப்படி இருக்கும்? புலிகள் அவர்களுக்கு சம்பளம் வழங்குவார்களா? அதற்கு என்ன தேசிய பொருளாதாரத்தை வைத்துள்ளனர். இந்த இடத்தில் யாழ்ப்பாண புலம்பெயர்வின் போது, வன்னி உணவு போட்டதாக கரிகாலன் பிதற்றுகின்றார். பலாத்காரமாக புலிகள் அந்த மக்களை குடிபெயர வைத்த நிலையில், அந்த மக்களுக்கு அரசே நிவாரணம் வழங்கியது. இதேபோல் முல்லையை புலிகள் கைப்பற்றிய போது, பாதிக்கப்பட்ட மீன்பிடி கிராமத்துக்கான நிவாரணத்தையும் அரசே வழங்கியது. இதை சூசை சுனாமிக் காலத்தில் வழங்கிய பேட்டியில் ஓத்துக் கொண்டவர். ஓவ்வொரு மீனவ குடும்பத்திடமும் புலிகள் சுருட்டியது 5000 ரூபா. இது மறுபக்கம் மறைந்து கிடக்கும் கதை.


இன்று புலிகள் கூறுவது போல் பேரினவாதம் தனது பொருளாதார தடை மூலம் தமிழ் சமூகத்தை பட்டினிக்குள் தள்ளியது என்றால், சிங்கள மக்கள் தமிழ் மக்களுக்கு தமது உழைப்பில் உணவிட்டதை ஓத்துக் கொள்வதாகின்றது. சிங்கள மக்கள் தமக்கும், மற்றய மக்களுக்கும் உணவிட முடிந்தது என்றால், தமிழ் மக்களால் தமக்கு கூட இதை ஏன் செய்ய முடியவில்லை? யார் தடையாக இருக்கின்றனர் என்றால், புலிகளைத் தவிர வேறு யாருமல்ல அல்லவா!


உண்மை இப்படி இருக்க, கரிகாலன் சொல்லுகின்றார் பொருண்மிய நிறுவனம் பற்றி. இது ஒன்றும் புலிகளின் கண்டுபிடிப்பல்ல. மாறாக புலிகளால் அபகரிக்கப்பட்டது தான். வேண்டுமென்றால் நாங்கள் மக்களை ஏமாற்றி புளுகு விட பிரபாகரன் தீர்க்கதரிசனமாக அபகரித்தார் என்று சொல்லுங்கள். அது பொருந்தும்.


இப்படித் தான் அனைத்தும். தமிழ் விவசாயிகளின் பிரச்சனை என்ன? அவர்களுக்கும் தமிழ் தேசியத்துக்கும் என்ன உறவு. இந்த விடையம் தான் தேசிய உற்பத்தியுடன் நேரடியாக தொடர்புடையது. அன்றாடம் உழைத்து வாழும் ஒரு மனிதனின் வாழ்வியல் சார்ந்த பிரச்சனையை தீர்க்க முனையும் அரசியலை முன்னெடுக்காத வரை, தேசிய பொருளாதாரம் என்பது ஊரை ஏமாற்றும் சொற்பதம் தான்.


புலித் தேசியம் உழைக்கும் மக்களின் பொருளாதார வாழ்வுடன் பின்னிப்பிணைந்ததல்ல. அவர்களுக்கு எதிரானதே அனைத்தும். மக்கள் விரோத உள்ளடகத்தில் அது செயலாற்றுகின்றது. புலிகளுக்கு உள்ள சுதந்திரம், மக்களுக்கு இல்லை. ஒரு விவசாயியின் சுதந்திரத்தை புலிகள் அனுமதிப்பதில்லை. அவனின் சிந்தனையை, அவனின் செயல்பாட்டை, அவனின் துயரத்துக்கான தீர்வை புலிகள் அனுமதிப்பதில்லை. இதுவே தேசிய பொருளாதாரம் என்பதை இல்லாதொழிக்கின்றது.


கரிகாலன் புலம்புகின்றார். அவருக்கு என்ன தெரியும். பொருண்மிய மேம்பாட்டு நிறுவனத்துக்கு பொறுப்பாளராக திடீரென வந்தவர். அதற்கு முன்னம் அவர் என்ன செய்து கொண்டிருந்தவர். எல்லாம் தலைவர் என்று வரிக்குவரி கூறிக்கொண்டு மட்டக்களப்பில் படுகொலைகளையும், முஸ்லீம் விரோத படுகொலை வக்கிரத்தையும் கொட்டிக் கொண்டிருந்தவர். யாழ் முஸ்லீங்களை வெளியேற்றுவதில் முன்னணிப் பாத்திரம் வகித்தவர். இவர் மக்கள் பொருளாதாரம் பற்றி கதைக்கின்றார் என்றால் நல்ல வேடிக்கை தான். மக்கள் என்றால் என்னவென்று தெரியாத, அசலான ஒரு பாசிட்.


கருணா விவகாரத்தில் தப்பிப்பிழைத்து நசிந்து வாழும் ஓரு முடிச்சுமாற்றி மீண்டும் அரங்கில் வருகின்றார். எதற்கும் இசைந்து வளைந்து நழுவி வாழ்கின்ற ஒரு இழிவான பாசிட். இவர் தலைவரின் பெயரில் பொருண்மிய மேம்பாட்டைப் பற்றி கூறுகின்றார் என்றால், அதுவே போலித்தனமானது. இருப்பு சார்ந்த புலம்பல். அதுவே பதவியாகின்றது.


இவர் கூறுகின்றார், இங்கு சில பொருட்களின் மிகை உற்பத்தி உண்டாம். அதை பதப்படுத்தும் தொழில் நுட்பம் கிடையாதாம். அதை புலம்பெயர் தமிழனிடம் கோருகின்றார். தொழில் நுட்ப அறிவை மேற்கில் இருந்து திருடி வரக்கோருகின்றார். நவீன உற்பத்தி வடிவங்கள் அவசியம் என்கின்றார். இதை தலைவரிடம் அவரின் தீர்க்கதரிசன சிந்தனையிடம் கேட்க வேண்டியது தானே.


ஏன் தொழில் நுட்பம் என்றால், உற்பத்தியை புலம்பெயர் தமிழனுக்கு ஏற்றுமதி செய்து காசு பண்ணமுடியுமாம். அந்த பேப்பரை தமிழ் மக்கள் தின்பார்களாம்! இதில் மேற்கத்தைய தொழில் நுட்பம், எமது மக்களின் வாழ்க்கைக்கு எந்தவகையில் பொருந்தும். புலம்பெயர் தமிழன் வாழும் நாட்டின் உற்பத்தி முறைக்கும், வடக்கு கிழக்கு மக்களின் உற்பத்தி முறைக்கும் இடையில் உள்ள பாரிய ஏற்றத்தாழ்வை பற்றி அறிவற்ற மரமண்டைகள், தமது பொருளாதாரத்தைக் கட்டி தமிழ் மக்களை பாதுகாக்க போகின்றனராம்.


நம்புங்கள் இந்த புலுடா அரசியலை. கிட்டு பாப்பாய் முதல் எத்தனை திருட்டு விதைகள், வீரிய விதைகள் எல்லாம் போட்டு காட்சிப்படுத்திய முன்னாள் உங்கள் ஓளிப்பதிவுகளை (பார்க்க ஒளிவீச்சை) சற்று மீளப்பாருங்கள். அவை எல்லாம் எங்கே? அவைக்கு என்ன நடந்தது. தமிழ் மக்களின் காதுக்கு ப+வைத்து காட்டிய, அந்த விரிய திருட்டு விதைகளின் உற்பத்தியைக் காட்டியே, அன்று தேசிய உற்பத்தி பாருங்கள் என்றனர். அன்றைய புலிப் போலி வரலாறு எங்கே போனது. மேற்கத்தைய வீரிய விதைகள் மறு உற்பத்தி செய்யாது என்பதுடன், அது மலடாக்கப்பட்டது. அத்துடன் இருக்கும் பாரம்பரிய விதை முறையையே, இயல்பாக தனது மகரந்த சேர்க்கையூடாகவே அழிக்கும் ஆற்றல் கொண்டது. இதை எல்லாம் தெரியாத அறிவு சூனியங்கள், அன்று முதல் இன்று வரை தேசிய பொருளாதாரம் பேசுவது வேடிக்கையானது, ஆனால் இந்த கேலிக் கூத்து, மனித வாழ்வு சார்ந்து அது சோகமாக விளைவைக் கொடுக்கின்றது..


கிழக்கில் கொலைத் தொழிலையும், இன விரோதத்தையும் விதைத்து அதை அறுவடை செய்து கொண்டிருந்த கரிகாலன், அதை மீண்டும் பொருளாதாரத்தில் கோருகின்றார். உழைக்கும் மக்களிடம் உள்ள வாழ்வியல் அறிவை, அது சார்ந்த தொழில் நுட்பத் திறனை, அரசியல் ரீதியாக காணமுடியாத இந்த தேசிய பொருளாதார மீட்பாளர்கள், அன்னிய தொழில்நுட்பம் என்ற கானல் கனவை காட்டி மக்களை மலடாக்கி விதைக்கின்றனர். இப்படி கையாளப்படும் வாதங்களும், உற்பத்திகளும், தொழில் நுட்பங்களும் தேசிய பொருளாதாரத்தையே அழித்துவிடும் என்ற எதிர்மறை அம்சத்தை புரிந்து கொள்ள முடியாதவர்கள், மக்களை மந்தைத் தனத்தில் நிலைநிறுத்த பிரமைகளை விதைக்கின்றனர். அறிவற்ற தமிழனின் செக்கு மாட்டுதனத்தை தனக்கு இசைவாக பயன்படுத்தி, பாசிசத்தை பொருளாதாரத்திலும் அறைகின்றனர்.

No comments: