அரசு தோட்டத்தில் விளைந்து கிடக்கும் ஏட்டுச் சுரைக்காய்கள்
* தகவல் அறியும் உரிமைச் சட்டம் ஆணையம்.
* மனித உரிமைகள் பாதுகாப்புச் சட்டம் ஆணையம்.
* நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் நடுவர் மன்றங்கள்.
* வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் சிறப்பு நீதிமன்றங்கள்.
* குடும்ப வன்முறைத் தடுப்புச் சட்டம்.
* வேலை உத்திரவாத அடிப்படை உரிமைச் சட்டம்.
* குழந்தைகள் உழைப்புத் தடுப்பு மற்றும் ஒழுங்குமுறை 1986 சட்டம் 2006ஆம் ஆண்டு தடை ஆணையம்.
* தாழ்த்தப்பட்டோர் பழங்குடியினர் மற்றும் பிற்பட்டோர் இடஒதுக்கீடு.
* தாழ்த்தப்பட்டோர் பழங்குடி மக்கள், மகளிர், சிறுபான்மையினர் நல ஆணையங்கள்.
* பழங்குடி மக்கள் வன உரிமைச் சட்டம்.
""அடேயப்பா'' — எத்தனை சமூக நீதி உரிமைகள் சட்டங்கள், சமூகநலத் திட்டங்கள்!
இத்தனையும் பார்க்கும்போது, இந்த நாடும் அரசும்தான் உலகிலேயே ஏழைஎளிய, ஒடுக்கப்பட்ட மக்கள் நலன்களில், ஜனநாயகத்தில் எவ்வளவு அக்கறை கொண்டுள்ளன என்று வியந்து போய்விடுவோம்!
ஆனால், சம்பந்தப்பட்ட மக்கள் எந்த அளவு இந்த உரிமைகளை அனுபவித்திருக்கிறார்கள், இந்தச் சட்டங்களால் பயன்பட்டிருக்கிறார்கள், இந்தத் திட்டங்களால் நன்மை பெற்றிருக்கிறார்கள் என்று அவற்றின் நேர்மறையான விளைவுகளை மதிப்பீடு செய்து தொகுத்தறியும் போது ஏமாற்றம்தான் மிஞ்சுகிறது.
இந்தச் சட்டதிட்டங்கள் ஒவ்வொன்றும் அவற்றின் நோக்கங்கள், அவசியம் குறித்த முகப்புரையோடுதான் நிறைவேற்றப்படுகின்றன. ஆனால் இந்த முகப்புரை வெறும் சொல்லலங்காரம் தானே தவிர, நடைமுறைக்கானதே கிடையாது என்பது அவற்றை வரைபவர்கள் நன்கறிவர்.
***
மனித உரிமைகள்
பாதுகாப்பு என்ற பம்மாத்து!
க்கிய நாடுகள் சபையின் மனித உரிமைச் சாசனத்தில் கையொப்பமிட்டு, அங்கீகாரம் வழங்கியிருப்பதோடு, மனித உரிமையின் இன்றியமையாமையை ஏற்றுக் கொண்டிருக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று.
ஆனால், உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடுகளில் ஒன்றாகப் பீற்றிக் கொள்ளும் இந்த நாடுதான் மனித உரிமையை அடிப்படை உரிமையாக அங்கீகரிக்கும் சட்டமியற்றி, அமலாக்குவதற்குப் பல ஆண்டுகளாக மறுத்து வந்தது.
இந்தியாவில் காலனி ஆட்சிக் காலத்தில் இருந்தே வழக்கமாக இருந்து வரும் போலீசு கொட்டடி (லாக்அப்) சித்திரவதை, போலீசு நிலையக் கற்பழிப்புகள், படுகொலைகள் ஆகியவற்றுக்கெல்லாம் சிகரம் வைத்தாற் போன்று, ""போலீசுடன் மோதல்'' என்கிற பெயரில் நக்சல்பாரிப் புரட்சியாளர்கள் நிராயுதபாணிகளாகப் பிடித்துச் சுட்டுக் கொல்லப்படுவது 1960களின் இறுதியில் இருந்து தொடங்கியது.
1970களின் தொடக்கத்தில் மேற்கு வங்கம் மற்றும் பீகாரில் சிறைச்சாலைச் சித்திரவதைகளும் படுகொலைகளும் ஏராளமாக நடந்தன. அதன் விரிவாகவும், தொடர்ச்சியாகவும் 197577ஆம் ஆண்டுகளில் அவசரநிலை பாசிச ஆட்சியில் ஆயிரக்கணக்கான அரசியல் போராளிகள் சிறையிலடைக்கப்பட்டுச் சித்திரவதைக்கு ஆளாகி, நூற்றுக்கணக்கில் கொல்லப்பட்டனர். கட்டாயக் குடும்பக் கட்டுப்பாடு அறுவைச் சிகிச்சை முதல் நகர்ப்புற குடிசைகள் இடிப்பு வரை அரசியல் செயல்வீரர்கள் போராளிகள் மட்டுமல்ல, சாதாரண ஏழைஎளிய மக்களின் வாழும் உரிமைகள் கூடப் பறிக்கப்பட்டன.
இந்தியாவில் பெருமளவில் நடக்கும் மனித உரிமை மீறல்கள் முதன்முறையாக அப்பொழுதுதான் உலக அளவில் வெளிச்சத்துக்கு வந்தன. அதுவரை, உலக மனித உரிமைகளை மதிக்கும் ஆன்மீகநெறி மிக்க ஜனநாயக நாடென்று முதலாளித்துவ ஏகாதிபத்திய நாடுகளின் நன்மதிப்பை பெற்றதாக இந்தியா கருதப்பட்டது. அவசரநிலைப் பிரகடனத்துக்குச் சில ஆண்டுகளுக்கு முன்னதாகவே நக்சல்பாரிப் புரட்சியாளர்களை போலீசுடன் மோதல் என்ற பெயரில் படுகொலைகள் செய்ததையும் அந்நாடுகள் கண்டுகொள்ளவில்லை.
பஞ்சாப், அசாம், காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் பிரிவினைவாத தீவிரவாத பயங்கரவாத இயக்கங்களை ஒடுக்குவது என்ற பெயரில் அரசு பயங்கரவாதம் 1980களில் கட்டவிழ்த்து விடப்பட்டது. நாட்டின் பல இடங்களில் இராணுவத்திடமும் துணை இராணுவத்திடமும் நேரடி அதிகாரம் அளிக்கப்பட்டது. சமூக விரோதிகள், தீவிரவாதிகளை ஒழிப்பது என்ற பெயரில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் படுகொலைகள் செய்யப்பட்டனர். அரசு பயங்கரவாதச் சட்டங்கள் அவற்றுக்குச் சட்டபூர்வ அங்கீகாரம் வழங்கின. பயங்கரவாத முத்திரைக் குத்தி சுமார் ஒரு இலட்சம் பேர் (7 வயது சிறுவர்கள் முதல், 65 வயதுக்கும் மேலான மூதாட்டிகள் வரை) பல ஆண்டுகள் சிறையிலடைக்கப்பட்டனர்.
""இந்திய அரசியல் நிர்ணயச் சட்டப்படி அவசரநிலை ஆட்சியைப் பிரகடனப்படுத்தி விட்டால் (1975இல் பாசிச இந்திரா அரசு இதைச் செய்தது). மனிதர்கள் உயிர்வாழும் உரிமையைக் கூடப் பறித்து விடும் அதிகாரம் இந்திய அரசுக்கு உண்டு'' என்று இந்த நாட்டின் உச்சநீதி மன்றம் பகிரங்கமாகவே அறிவித்திருக்கிறது. அவசரநிலைப் பிரகடனப்படுத்தப்பட்ட ஆட்சியின் கீழ் ஒரு போலீசு ஆய்வாளர் தன் சொந்தப் பகையின் காரணமாக, ஒரு குடிமகனைச் சுட்டுக் கொன்று விடுவதற்குக் கூட அனுமதி உண்டு என்று உச்சநீதி மன்றம் தீர்ப்பு வழங்கியுள்ள நாட்டில் மனித உரிமை என்பது வெறும் கேலிக் கூத்தாக இருப்பதில் வியப்பில்லை.
அப்போது அமெரிக்க மேல்நிலை வல்லரசின் நேரடி மேலாதிக்கத்தின் கீழ் இருந்த பல நாடுகளில் பாசிசக் கொடுங்கோன்மை ஆட்சி நடந்தபோதும் அது கண்டு கொள்ளவில்லை. அதேசமயம், அப்போது ரஷ்ய சமூக ஏகாதிபத்தியத்தின் செல்வாக்கில் நீடித்திருந்த நாடுகளையும், அமெரிக்க நேரடி மேலாதிக்கத்துக்கு வெளியிலிருந்த நாடுகளையும், மனித உரிமை மீறல்களைக் காட்டி உருட்டி மிரட்டி நிர்பந்தித்துத் தனது பிடிக்குள் கொண்டு வருவதற்குரிய ஆயுதமாக அது கையிலெடுத்தது. இந்தியா உட்பட உலகின் பல நாடுகளிலும் நடக்கும் மனித உரிமை மீறல்கள் பற்றி சர்வதேசப் பொதுமன்னிப்பு மற்றும் பிற அரசு சாரா தொண்டு நிறுவனங்களின் ஆய்வறிக்கைகள் அதற்குப் பயன்படுத்தப்பட்டன.
இந்தியாவில் மனித உரிமை மீறல்களே கிடையாதென்று அடியோடு மறுத்த இந்திய அரசு, இந்தியாவின் உள்விவகாரங்களில் தலையிடுவதாக குற்றஞ்சாட்டி ஐ.நா. குழு உட்பட வேறு எந்த வெளிநாட்டு நிறுவனங்களின் நேரடி ஆய்வுகளுக்கும், அனுமதியும் மறுத்தது. ஆனால், அதிகரித்து வந்த மனித உரிமை மீறல்களைப் பற்றிய செய்திகள் குவிந்த வண்ணமிருந்தன.
இந்த நிலையில்தான் இந்த நாட்டில் நடந்து வரும் மனித உரிமை மீறல்களைத் தானே கண்காணித்துத் தடுக்கவும், நடவடிக்கை எடுக்கவும் தேவையான அமைப்பு முறைகளை ஏற்படுத்திக் கண்துடைப்பு நாடகமாடும் வேலையிலும் இந்திய அரசு இறங்கியது. அதன்படி 1993இல் மனித உரிமைகள் பாதுகாப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இந்திய அரசின் ஆயுதந்தாங்கிய உறுப்புகளான போலீசு, துணைஇராணுவம், இராணுவம் முதலியவைதாம் மனித உரிமைகளைப் பறிக்கும் குற்றங்களை இழைக்கும் முக்கிய அமைப்புகள். இந்த மனித உரிமை மீறல்களைக் கண்டுபிடித்துத் தானே தண்டிக்கப் போவதாக இந்திய அரசே சட்டமியற்றி அமலாக்குவது என்பது எவ்வளவு பெரிய பித்தலாட்டம்!
காலனிய ஆட்சிக் காலத் திலிருந்தே மனித உரிமைகளைக் கொஞ்சமும் மதிக்காத பல்வேறு கொடுங்கோன்மைச் சட்டங்கள் தொடர்ந்து இருந்து வருகின்றன. அவற்றுள் ஒன்று, பிரிட்டிஷ் அரசாட்சியை தூக்கி எறிவதற்கான சதி செய்ததாகப் புனையப்படும் ராஜ துரோகக் குற்றச் சட்டம் (120ஆ). இது இப்போதும் அரசு துரோகக் குற்றச் சட்டமாக கருதி, அரசியல் இயக்கங்கள் மீது ஏவிவிடப்படுகிறது. மற்றொன்று இந்தியப் பாதுகாப்புச் சட்டம் (ஈஞுஞூஞுணஞிஞு ணிஞூ ஐணஞீடிச் கீதடூஞுண்). காஷ்மீர், வடகிழக்கு இந்தியா போன்ற பகுதிகளில் சந்தேகத்துக்குரிய நபர்களை சுட்டுக் கொல்லவும், அதற்குக் காரணமான அரசு வன்முறை அமைப்பு அதிகாரிகளுக்குச் சட்டப் பாதுகாப்புத் தரவும் பல கொடிய சட்டங்கள் உள்ளன.
இவைதவிர மிசா, மினி மிசா, தடா, பொடா என்று அவ்வப்போது நிறைவேற்றப்படும் அரசு பயங்கரவாதச் சட்டங்கள், மாநில அளவில் ஏவிவிடப்படும் குண்டர்கள் சட்டங்கள் போன்றவை; சுவரெழுத்து, சுவரொட்டி, ஊர்வலம், பொதுக் கூட்டம் ஆகியவற்றுக்குக்கூட தடை விதிக்கும் போலீசு அராஜகம்; பயங்கரவாதி, சமூக விரோதி, தீவிரவாதி, நக்சலைட்டு என்று முத்திரை குத்தி போலீசுடன் மோதல் என்ற பெயரில் கேட்பாரின்றி சுட்டுக் கொல்வது — இப்படி அரசு வன்முறை அமைப்புகளிடம் வரைமுறையற்ற அதிகாரம் குவிக்கப்பட்டிருக்கிறது. மனித உரிமைகளை மீறுவதற்கென்றே தனிப்பயிற்சி பெற்ற இரகசிய உளவு கொலைப் படைகள் (ATS, Q, STF, GREYHOUND) என்று பல பெயர்களில் உள்ளன. அதற்கென்றே இரகசிய சித்திரவதைக் கூடங்களும், நவீன கருவிகளும், ஆயுதங்களும், கணக்கற்ற நிதியும் வழங்கப்படுகின்றன. இத்தனையும் இருக்கும்போது மனித உரிமைப் பாதுகாப்பச் சட்டம் ஆணையங்கள் என்ன செய்துவிட முடியும்!
சமீபத்தில் பேசிய உச்சநீதி மன்றத் தலைமை நீதிபதி சபர்வால் ""மாநில மனித உரிமை ஆணையங்களை உருவாக்குவதில் மாநில அரசுகள் மெத்தனப் போக்கைக் கடைப்பிடிக்கின்றன. மனித உரிமைப் பாதுகாப்புச் சட்டம் 1993இல் இயற்றப்பட்டு, கடந்த 13 ஆண்டுகளில் 14 மாநிலங்களே மனித உரிமை ஆணையங்கள் அமைத்துள்ள்ளன. இன்னமும் எஞ்சிய 17 மாநிலங்களில் மனித உரிமை ஆணையங்களை அமைப்பதற்கான எந்தவித முயற்சியும் கிடையாது. ஆணையங்கள் அமைக்கப்பட்ட மாநிலங்களிலும் நான்கில் முழுநேரத் தலைவர்கள் இல்லை. காலியாகவே இருக்கின்றன அல்லது பகுதிநேர மற்றும் தற்காலிக தலைவர்கள்தாம் உள்ளனர். மகாராட்டிரத்தில் மாநில மனித உரிமை ஆணையம் செயலிழந்து போய்விட்டது. மனித உரிமைகளைக் காப்பதில் அரசாங்கங்கள் உண்மையில் அக்கறை கொண்டிருக்கின்றனவா? மனித உரிமைகள் பற்றிய வரையறுப்பு கூட இன்னமும் செய்யப்படவில்லை'' என்கிறார்.
""மாநில மனித உரிமைகள் ஆணையங்களுக்கான வழிகாட்டுதல்களை தேசிய மனித உரிமைகள் ஆணையம் வகுக்க வேண்டும். மாவட்ட மற்றும் வட்ட அளவிலான மனித உரிமை அதிகார அமைப்புகளை நிறுவவேண்டும். பல்வேறு நலத்திட்டங்கள் பொதுமக்களைச் சென்றடைகின்றனவாவென்று மாநில ஆணையங்கள் உறுதிப்படுத்த வேண்டும். போலீசு நிலையக் கொட்டடிகளில் நடக்கும் அதிக்கிரமங்களை மட்டும் மனித உரிமை மீறல்களாகக் கருத முடியாது. சுத்தமான குடிநீரும் காற்றும் கிடைக்காததும், சுகாதாரம், குறைந்தபட்ச சத்துணவு கிடைக்காததும் கூட மனித உரிமை மீறல்கள்தான்'' என்று சபர்வால் கூறினார்.
இம்மாதிரி வழக்குகளிலும், கருத்தரங்குகளிலும் உச்சநீதி மன்றத் தலைமை நீதிபதி, "குடி'அரசுத் தலைவர், பிரதமர் போன்றவர்கள் ஆவேசமாகப் பேசுவதும், ஆலோசனைகள் வழங்குவதும் ஒன்றும் புதிதில்லை. பழங்குடி மக்களின் குழந்தைகள் சத்துணவின்றி மடிவதும், பயங்கரவாத ஒழிப்பு என்ற பெயரில் இசுலாமிய இளைஞர்கள் வேட்டையாடப்படுவதும் பெருமளவு நடக்கும் மகாராட்டிரத்திலேயே மனித உரிமை ஆணையம் காயடிக்கப்பட்டு விட்டது; அந்நிய பன்னாட்டுக் கம்பெனிகள் குளிர்பானங்கள் என்ற பெயரில் பூச்சிக் கொல்லி நஞ்சு கலந்து விற்பனை செய்கின்றன இதெல்லாம் அந்தப் பெரிய மனிதர்கள் அறியாதவை அல்லவே? இருந்தாலும் இந்த மனித உரிமை மீறல்களுக்கு எதிராக என்ன நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன?
மனித உரிமைகள் பாதுகாப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்ட பிறகு முதலாவதாக அதை அமலாக்குவதற்குரிய ஆணையம் அமைத்த மாநிலங்களில் ஒன்று தமிழ்நாடு. ஆனால், அதை முடக்கி வைப்பதில்தான் தமிழக அரசு கூடுதலான அக்கறையெடுத்துக் கொண்டது. பெரும்பாலும் ஆட்சியாளர்களின் நம்பகமான விசுவாசிகளே மனித உரிமை ஆணையத்தின் தலைமைக்கு நியமிக்கப்பட்டனர். ஆணையம் செயல்படுவதற்குரிய அதிகாரிகள், அலுவலர்கள், இடம், நிதி போன்ற வசதிகள் செய்து தரப்படவில்லை.
தமிழக மனித உரிமை ஆணையத்தின் தலைவராக இருந்த நைனார் சுந்தரம் 2001ஆம் ஆண்டு செப்டம்பரில் இறந்து போனார். அதன்பிறகு சுமார் ஐந்தாண்டு காலம் பாசிச ஜெயலலிதா ஆட்சியில் மனித உரிமை ஆணையத்துக்குத் தலைவரே நியமிக்கப்படவில்லை; ஐவர் இருக்க வேண்டிய ஆணையத்தில் ஒருவர் மட்டுமே உறுப்பினராக இருந்தார். அவரும் கொடைக்கானல் ஓட்டல் வழக்கில் ஜெயலலிதாவுக்குத் தண்டனை வழங்கிய நீதிபதி சம்பந்தம் என்பதால் அவர் மட்டுமே இயங்கிய ஆணையத்தின் மனித உரிமை மீறல் மீதான தீர்ப்புகளை ஜெயலலிதா அரசு மதிக்கவே இல்லை. அவரையும் நீக்கவிடத்தான் ஜெயலலிதா அரசு எத்தணித்தது. அவரும் ஓய்வு பெற்றபிறகு வேறு யாரையும் நியமிக்கவும் இல்லை. "டான்சி' ஊழல் வழக்கில் ஜெயலலிதாவுக்குச் சாதகமான தீர்ப்பு வழங்கிய, சிங்கப்பூர் சுற்றுலா புகழ் நீதிபதி தங்கராஜ் தற்காலிகத் தலைவராக கடைசி சில மாதங்கள் நியமிக்கப்பட்டிருந்தார்.
மனித உரிமைப் பாதுகாப்புச் சட்டத்தை வெறும் ஏட்டுச் சுரைக்காயாகவும், மனித உரிமை ஆணையத்தை முடக்கி வைப்பதும்தான் அரசின் செயல்பாடாக உள்ளதென்று கருதுவதற்கு வேறென்ன சான்று வேண்டும். ஒரு எலும்புக் கூடுபோல ஆகிவிட்ட மாநில மனித உரிமை ஆணையம் வழங்கும் தீர்ப்புகளும் என்ன கதியாக்கப்படுகின்றனவென்பதற்கு ஒரு எடுத்துக்காட்டுப் பார்ப்போம்.
சென்னை, தாம்பரம் அருகேயுள்ள கடப்பேரியில் தமிழக அரசின் வீட்டுவசதி வாரியக் குடியிருப்பில் திறந்து கிடந்த கழிவுநீர்த் தொட்டியில் ஏழு வயதுச் சிறுவன் விழுந்து இறந்து போனான். அதற்கு ஈட்டுத் தொகையாக ஐம்பதாயிரம் ரூபாய் தரும்படி மாநில மனித உரிமை ஆணையம் ஆணையிட்டது. மூன்றாண்டுகள் ஆகியும் சம்பந்தப்பட்ட அரசு நிறுவனங்கள் ஈட்டுத் தொகை வழங்கவில்லை. இறந்து போன சிறுவனின் தந்தை ஒரு ஆட்டோ ஓட்டுநர். தற்போது வாதநோய் தாக்கிச் செயலிழந்து கிடக்க, தாய் வீட்டு வேலை செய்து குடும்பம் பிழைக்கிறது. மீண்டும் நியாயம் கேட்டுப் போன அந்த ஏழைக் குடும்பத்தை உயர்நீதி மன்றத்தில் வழக்குப் போடும்படி வழிகாட்டியிருக்கிறது, மனித உரிமை ஆணையம். இவ்வளவுதான் அதற்கு அதிகாரம். இப்படி ஏராளமான சான்றுகள் கூற முடியும்.
மக்களுடைய அடிப்படைத் தேவைகள் கிடைக்கின்றனவா, மக்கள் நலத்திட்டங்கள் அவர்களைச் சென்றடைகின்றனவா என்று கண்காணிப்பது கூட மனித உரிமை ஆணையத்தின் பணிகள்தான் என்கிறார் உச்சநீதி மன்றத் தலைமை நீதிபதி. ஆனால் இத்தகைய பணிகளை விட்டுவிடுங்கள், மனிதர்கள் உயிர் வாழும் உரிமையைக் கூட கையிலெடுத்து உத்திரவாதப்படுத்த முடியாமல் மனித உரிமை ஆணையங்கள் முடக்கப்படுகின்றன என்பதுதான் உண்மை.
1975ஆம் ஆண்டு, நக்சல்பாரிப் புரட்சியாளர் சீராளன் போலீசால் கைது செய்யப்பட்டு மரத்திலே கட்டி வைத்து நுகத்தடியாலேயே அடித்துக் கொல்லப்பட்டார். முப்பதாண்டுகளுக்கு மேலாகி 2006ஆம் ஆண்டு அதற்குரிய நட்டஈடு வழங்கும்படி உயர்நீதி மன்றம் தீர்ப்புக் கூறியது. 1980களின் தொடக்கத்தில் வடாற்காடு தருமபுரி மாவட்டங்களில் போலீசுக் கொலைகாரன் தேவாரம் கும்பலால் பல இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டனர்; அவற்றுக்கு எதிரான வழக்குகள் விசாரிக்கப்படாமலேயே முடக்கப்பட்டன. அதே தேவாரம் கும்பலால் சந்தன மரக் கடத்தல் வீரப்பன் தேடுதல் வேட்டை என்ற பெயரில் மலைவாழ் மக்கள் சித்திரவதை கற்பழிப்பு படுகொலை செய்யப்பட்டனர். இந்த மனித உரிமை மீறல்களை விசாரித்த சதாசிவம் கமிசன் அறிக்கை எவ்வித மேல் நடவடிக்கையும் இன்றி கிடப்பில் போடப்பட்டது. ஆனால், வீரப்பனைக் கொன்றதற்காக தேவாரம் விஜயகுமார் கும்பலுக்கு உடனடியாக வீட்டுமனை, பரிசுத் தொகை, பதவி உயர்வு கொடுத்துப் பாராட்டப்பட்டது. சிதம்பரம் பத்மினி, அத்தியூர் விஜயா போன்ற பெண்களுக்கு எதிரான போலீசின் பாலியல் வன்முறைகள், ஏராளமான கொட்டடிக் கொலைகள், வாச்சாத்தி மற்றும் சின்னாம்பதி பெண்கள் மீதான அரசு ஊழியர் போலீசு கும்பல் பாலியல் வன்முறை வெறியாட்டம் போன்றவை மனித உரிமை ஆணையத்தால் கண்டு கொள்ளப்படவே இல்லை. காட்டுமிராண்டி ஆட்சி நடத்தும் குஜராத் நரேந்திரமோடி போன்றவர்கள் மனித உரிமை ஆணையத்தின் தீர்ப்புகளை கழிப்பறைக் காகிதமாகத்தான் மதிக்கிறார்கள்.
பெரும்பாலும் ஆளும் கட்சிகளின் எடுபிடிகள் என்று நிரூபித்துக் கொண்ட ஓய்வு பெற்ற நீதிபதிகள்தாம் மனித உரிமை ஆணையத்தின் தலைவர்களாக நியமிக்கப்படுகிறார்கள். தமது பதவிக் காலத்தில் மனித உரிமைகளைக் காலில் போட்டு மிதித்த போலீசு அதிகாரிகளே மனித உரிமை ஆணையத்தின் துணை உறுப்பு அதிகாரிகளாக நியமிக்கப்படுகிறார்கள். ராஜீவ்காந்தி கொலையை விசாரிப்பது என்ற பெயரில் பாசிச அதிகார வெறியோடு செயல்பட்டவரும், பின்னர் சி.பி.ஐ. இயக்குநராக பதவிப் பரிசு பெற்றவருமான கார்த்திகேயன், ஓய்வு பெற்ற பின்னர், தேசிய மனித உரிமை பாதுகாப்பு ஆணையத்தின் போலீசு அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.
ஆக, மனித உரிமை மீறல்களுக்கு எதிராகக் குரலெழுப்புபவர்களையும், அவர்களது நடவடிக்கைகளையும் அரசு அமைப்புகளுக்குள்ளும் அதன் சட்டதிட்டங்கள் செயல்பாடுகளுக்குள்ளும் இழுத்துக் கடிவாளம் போடுவதுதான் இந்த மனித உரிமைப் பாதுகாப்புச் சட்டத்தின் நோக்கம். இதன் மூலம் மனித உரிமைகள் மீறப்படும்போது அதைத் தடுப்பதும் அதற்குரிய நிவாரணத்தையும் இந்த அரசமைப்புக்குள்ளேயே பெற முடியும் என்ற நம்பிக்கை ஏற்படுத்தப்படுகிறது. இந்த அரசுக்கு எதிரான கொந்தளிப்புகளைச் சீர்படுத்தும் அதிர்ச்சித் தடுப்புகளாக இந்தச் சட்டமும் அதன் அமைப்புகளும் செயல்படும். அவை இந்த அரசின் மனித உரிமை மீறல்களுக்கு எதிரான உணர்வுகளுக்கு வடிகாலாக அமையும். இதற்கு மேலும் துணை புரியும் வகையில் மனித உரிமை மீறல்களைத் ""தட்டி கேட்க''வும், அதற்கு எதிரான மக்கள் உணர்வுகளை நெறிப்படுத்தி சட்ட வரம்புகளை மீறாமல் பார்த்துக் கொள்ளவும் அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் ஏகாதிபத்திய நிதி உதவியுடன் இயங்குகின்றன.
மனித உரிமைக் கண்காணிப்பகம் Human Rights Watch), மக்கள் சிவில் உரிமைச் சங்கம் (கஞுணிணீடூஞு'ண் க்ணடிணிண ஞூணிணூ இடிதிடிடூ ஃடிஞஞுணூtடிஞுண்) சர்வதேசப் பொதுமன்னிப்பு (ஐணtஞுணூணச்tடிணிணச்டூ அட்ணஞுண்tதூ) போன்ற அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் ஏகாதிபத்திய அமைப்புகளால் நிதி உதவியளிக்கப்படுவதோடு, கிரமமான அறிக்கைகள் பெற்று மேற்பார்வையிடப்படுகின்றன. இந்த நாட்டில் மனித உரிமைகளைக் காலில் போட்டு மிதிக்கும் போலீசு முதலிய அரசின் வன்முறை அமைப்புகளுக்கு எதிராக வெற்றுக் கூச்சல் போடுவதுதான் இந்த மனித உரிமை அமைப்புகளின் வேலை. ஜனநாயக வரம்புக்குட்பட்ட போராட்டங்கள் என்ற பெயரில் அரசின் வன்முறை அமைப்புகளுக்கு எதிராக நிழல் சண்டை போடுவதன் மூலம், ஒரு சில கண்துடைப்பு நிவாரணங்களைப் பெற்றுக் கொடுத்து, அவற்றுக்கு எதிரான மக்கள் உணர்வுகளை மழுங்கடிக்கின்றன.
""மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கான சட்டங்கள் இருக்கின்றன, அமைப்புகள் இருக்கின்றன, மக்கள்தாம் இவற்றை அறிந்து கொண்டு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஆனால், மக்கள் பாமரர்களாக இருக்கிறார்கள்; மனித உரிமை பற்றிய விழிப்புணர்வு மக்களுக்கு ஏற்பட வேண்டும், அதற்குரிய கல்வி போதிக்கப்படவேண்டும்'' என்று இந்தத் தொண்டு நிறுவனங்கள் கூறி வருகின்றன. மக்கள் தமது அரசியல், பொருளாதாரத் தேவைகளை அறிவதோடும் அவற்றை அடைவதற்கான போராட்டங்களோடும் நெருங்கிய பிணைப்புக் கொண்டுள்ளதுதான் மனித உரிமை. ஆனால், இந்தத் தொண்டு நிறுவனங்களோ அரசியல், பொருளாதாரக் கோரிக்கைகளுக்கான இயக்கங்கள் நோக்கங்களுக்கும் தமக்கும் எவ்வித உறவும் கிடையாது என்று வேண்டுமென்றே வரம்பிட்டுக் கொள்கின்றன.
அரசின் நிர்வாக இயந்திரத்துடன் ஒரு புரிந்துணர்வு அடிப்படையில்தான் இந்த மனித உரிமைத் தொண்டு நிறுவனங்கள் செயல்படுகின்றன. ஆனால், உள்ளூர் அளவில் அதிகாரம் செலுத்தும் போலீசு அதிகாரிகளின் அதிகாரவெறி காரணமாக சில ""மோதல்கள்'' ஏற்படுகின்றன. இவை தங்களின் வீரதீ ரச் செயல்கள் என்று மேற்படி தொண்டு நிறுவனங்கள் பீற்றிக் கொள்கின்றன.
ஆக, மனித உரிமைப் பாதுகாப்புச் சட்டம், அதை அமலாக்குவதற்காக நிறுவப்படும் (பல மாநிலங்களில் அப்படி ஒரு ஏற்பாடே கிடையாது) ஆணையங்கள் மட்டுமல்ல, மனித உரிமைகளுக்காகப் போராடுவதாகக் கூறிக் கொள்ளும் ஏகாதிபத்திய நிதி உதவி பெறும் தொண்டு நிறுவனங்களும் கூட மனித உரிமை மீறல்களுக்கு மறைமுகமாகத் துணை நிற்பவைதாம்.
(தொடரும்)
>
No comments:
Post a Comment