தமிழ் அரங்கம்

Monday, February 5, 2007

மருந்து விலை கட்டுப்பாடு சட்டம்: கொள்ளைக்காரனின் வள்ளல் வேடம்

மருந்து விலை கட்டுப்பாடு சட்டம் :
கொள்ளைக்காரனின் வள்ளல் வேடம்

த்தியாவசியப் பொருட்களின் விலைகள் கிடுகிடுவென உயர்ந்துவிட்ட நிலையில், மத்திய அமைச்சரான ராம்விலாஸ் பாஸ்வான் அத்தியாவசிய மருந்துப் பொருட்களின் விலைகளைக் குறைத்துள்ளதாகவும், இந்த விலைக் குறைப்பை மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் கடந்த நவம்பரில் அறிவித்தார். நாட்டை மீண்டும் காலனியாக்கி மக்களை மரணக் குழியில் தள்ளி வரும் காங்கிரசுக் கூட்டணி ஆட்சியாளர்களுக்கு மக்கள் நலனில் திடீரென அக்கறை வந்துவிட்டதோ என்று பலரும் ஆச்சரியப்பட்டனர். ஆனால், இந்த விலைக் குறைப்பு என்பது மோசடித்தனமானது என்றும் பன்னாட்டுஉள்நாட்டு ஏகபோக மருந்துக் கம்பெனிகளின் பகற்கொள்ளைக்குப் பச்சைக் கொடி காட்டும் நடவடிக்கைதான் என்பதும் வெகு விரைவிலேயே அம்பலமாகி விட்டது.


விலைக் குறைப்பு செய்யப்பட்டுள்ளதாக பட்டியலிடப்பட்டுள்ள 886 வகையான மருந்துகளும் 11 பன்னாட்டு ஏகபோக கம்பெனிகள் தயாரிக்கும் விலை அதிகமுள்ள மருந்துகளாகும். பெரும்பாலான மருத்துவர்கள் உள்நாட்டு மருந்துகளையே நோயாளிகளுக்குப் பரிந்துரைக்கின்றனர். அத்தகைய மருந்துகளின் விலைகளைக் குறைக்க மைய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. உபயோகத்தில் இல்லாத, பரவலாகக் கடைகளில் கிடைக்காத, விலை அதிகமாக உள்ள மருந்துகளின் விலையை மட்டுமே — அதுவும் 5 முதல் 10 சதவீத அளவுக்கு மட்டுமே அரசு குறைத்துள்ளது. அதிகம் பயன்பாட்டில் உள்ள மருந்துகளின் விலைகள் மிகமிக அற்பமான அளவுக்கே குறைக்கப்பட்டுள்ளன.


உதாரணமாக, இமிடேல் என்ற ஊசி மருந்து ஏற்கெனவே ரூ. 4.99க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது அதன் விலை ஒரு பைசா குறைக்கப்பட்டு ரூ. 4.98 என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல ரான்கோல்ட் பிளஸ் 10 மாத்திரைகளின் விலை


ரூ. 18.11க்கு விற்பனையாகி வந்தது. இதன் விலை தற்போது ரூ. 17.51ஆக குறைக்கப்பட்டுள்ளது. அதாவது, 10 மாத்திரைகளின் விலையில் 60 பைசா குறைந்துள்ளது. சாமானிய மக்கள் கடையில் ஒன்றிரண்டு மாத்திரைதான் வாங்குகின்றனர். ஒரு பைசா, இரண்டு பைசா சில்லறையுடன் போய் இரண்டு மாத்திரை வாங்கினால் மட்டுமே அமைச்சர் கூறியபடி இந்த விலைக் குறைப்பைப் பயன்படுத்திக் கொள்ள முடியும். இல்லையேல், இந்த விலைக் குறைப்பினால் சாமானிய மக்களுக்கு எந்தப் பயனும் கிடைக்காது. இதுதான் விலைக் குறைப்பின் பின்னேயுள்ள மோசடி.


உண்மைகள் மருந்தைப் போலவே கசப்பாகவே இருக்கின்றன. உலகின் பெரும் கோடீசுவரர்கள் வரிசையில் இந்தியத் தரகுப் பெருமுதலாளிகளும் இடம் பெறும் அளவுக்கு, இந்தியா "பணக்கார வல்லரசு' நாடாக வளர்ந்து வருவதாக ஆட்சியாளர்கள் பெருமிதம் கொள்கின்றனர். ஆனால், இந்நாட்டில்தான் ஏறத்தாழ 65 கோடி மக்கள் அத்தியாவசிய மருந்துகளைக் கூட வாங்குவதற்கான வாய்ப்பு வசதி இல்லாமல் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். பெரும் மருந்து உற்பத்தி ஆலைகளைக் கொண்ட நாடாக இந்தியா உள்ள போதிலும், கோடிக்கணக்கான மக்களுக்கு அத்தியாவசிய மருந்துகள் கூட கிடைப்பதில்லை என்று உலக சுகாதார நிறுவனம் (WTO) தனது 2004ஆம் ஆண்டின் அறிக்கையில் குறிப்பிடுகிறது.


இந்த அவல நிலைக்குக் காரணம், தனியார்மயம். உலகின் தனியார்மயமாக்கப்பட்ட மருத்துவ சுகாதாரத் துறையில், ஏழை நாடான இந்தியா முன்னணியில் உள்ளது. மணற்கொள்ளை, நிலக் கொள்ளை, கடற்கொள்ளை முதலானவற்றையெல்லாம் விஞ்சும் வகையில் இந்தியாவில் மருந்துக் கொள்ளை கேள்விமுறையின்றித் தொடர்கிறது. இந்தியாவில் ஓராண்டுக்கு ஏறத்தாழ 45 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மருந்து மாத்திரை வியாபாரம் நடக்கிறது. இதில் பன்னாட்டு உள்நாட்டு ஏகபோக மருந்துக் கம்பெனிகள் ஏறத்தாழ 25 ஆயிரம் கோடிக்கு வியாபாரம் செய்கின்றன. இக்கம்பெனிகள் தயாரிக்கும் மருந்துகளின் விலை பலமடங்கு அதிகமாக உள்ளது. உதாரணமாக, அவந்திஸ் நிறுவனத்தின் லெவோப்ளாசசின் என்னும் ஆன்டிபயோட்டிக் மாத்திரையின் விலை ரூ.95. அதே மாத்திரையை, அதே தரத்துடன் உள்நாட்டு சில்பா மருந்து நிறுவனம் ரூ.6.80க்கு விற்கிறது. இந்திய அரசோ இப்படி அநியாய விலை விற்கும் அன்னிய நிறுவன மருந்துக்குத் தடையோ கட்டுப்பாடோ விதிப்பதில்லை.


அத்தியாவசிய மருந்துப் பொருட்களுக்கு விலைக் கட்டுப்பாடு விதிக்கும் கொள்கையைப் பின்பற்றி வந்த அரசு, தனியார்மய தாராளமயமாக்கலைத் தொடர்ந்து படிப்படியாக இக்கொள்கையை நீர்த்துப் போகச் செய்து விட்டது. 1977ஆம் ஆண்டில் 347 அத்தியாவசிய மருந்துகள் விலைக் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டிருந்தன. 1995இல் இது வெறும் 74 மருந்துகள் என்று சுருங்கிப் போனது. அதன்பிறகு கடந்த 12 ஆண்டுகளாக புதிதாக எந்த மருந்தும் விலைக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்படவில்லை. மருந்துக் கம்பெனிகள் தாறுமாறாக விலையேற்றி கேள்விமுறையின்றி கொள்ளையடித்தன.


முந்தைய பா.ஜ.க. அரசு 2002ஆம் ஆண்டில் விலைக் கட்டுப்பாட்டின் கீழ் வைக்கப்பட்டிருந்த இந்த 74 அத்தியாவசிய மருந்துகளின் பட்டியலை 30ஆகக் குறைக்கக் கிளம்பியது. கர்நாடக உயர்நீதி மன்றத் தீர்ப்பின்படி, இதை நடைமுறைப்படுத்தாமல் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இத்தீர்ப்பின்படி, அரசு உருவாக்கிய மருத்துவ நிபுணர்கள் குழு, தேசிய அத்தியாவசிய மருந்துகளின் பட்டியலை 2003ஆம் ஆண்டில் தயாரித்துக் கொடுத்தது. இதில் 354 வகையான மருந்துகள் பட்டியலிடப்பட்டிருந்தன. இருப்பினும், இப்பட்டியலின்படி விலைக் கட்டுப்பாட்டுக் கொள்கையை பா.ஜ.க. அரசு அறிவிக்கவோ, செயல்படுத்தவோ முன்வராமல் கிடப்பில் போட்டது.


பின்னர் ஆட்சிக்கு வந்த காங்கிரசு கூட்டணி அரசு, ஈராண்டு காலமாக இழுத்தடித்து விட்டு, கடந்த ஜூலையில் வழக்கத்துக்கு மாறாக தவணை முறையில் நகல் மருந்துக் கொள்கையை வெளியிட்டது. மைய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான், இக்கொள்கைப்படி விலைக் கட்டுப்பாடு பட்டியலில் 354 அத்தியாவசிய மருந்துகளைக் குறிப்பிட்டு அமைச்சரவையில் சமர்ப்பித்தார். ஆனால், அவரது அமைச்சரவையே இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, விலைக் கட்டுப்பாட்டிலுள்ள அத்தியாவசிய மருந்துகளின் பட்டியலைப் பெருமளவுக்குக் குறைக்கக் கோரியது. இதனைப் பரிசீலித்து விலைக் கட்டுப்பாடு பட்டியலைத் தயாரிக்க 14 பேர் கொண்ட கூட்டுக் கமிட்டியை மைய அரசு நிறுவியது. இந்தக் கமிட்டியிலுள்ள 14 பேரில் 11 பேர் ஏகபோக மருந்துக் கம்பெனிகளின் பிரதிநிதிகள். மீதி 3 பேர் மட்டுமே அரசாங்கத்தின் பிரதிநிதிகள். ஏகபோக மருந்துக் கம்பெனிகளின் ஆதிக்கத்தின் கீழுள்ள இந்தக் கமிட்டி மக்கள் நலனை முன்வைத்து அத்தியாவசிய மருந்துகளுக்கு விலைக் கட்டுப்பாட்டை கொண்டுவரும் என்று முட்டாள்கள்கூட நம்ப மாட்டார்கள்.


மைய அரசு ஜூலையில் வெளியிட்ட நகல் மருந்துக் கொள்கை அறிக்கையானது, மருந்துக் கம்பெனிகள் உற்பத்தி செலவுக்கு மேல் 200% வரை இலாபம் வைத்து விற்கலாம் என்று விலை நிர்ணய முறைக்கு ஆலோசனை கூறுகிறது. இதுவே மிக அநியாயமான பகற்கொள்ளைதான். ஆனால், ஏகபோக மருந்துக் கம்பெனிகள் இந்த விலை நிர்ணய முறையைக்கூட ஏற்க மறுத்துவிட்டன. இப்படிச் செய்தால் இலாபம் குறைந்து ஆலையை மூட நேரிடும்; ஏற்றுமதி வாய்ப்புகள் குறையும்; புதிய மருந்துக்கான ஆராய்ச்சியும் வளர்ச்சியும் குறைந்துவிடும்; நாட்டுக்கு மருந்துப் பற்றாக்குறை ஏற்பட்டு விடும் என்று முதலைக் கண்ணீர் வடிக்கின்றன. இருப்பினும், மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு, மருந்துகளை சில்லறை விற்பனை விலைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வராமல், பொதுவில் 5 முதல் 10 சதவீதம் வரை விலையைக் குறைப்பதாக இம்மருந்துக் கம்பெனிகள் அறிவித்தன. இதன்படியே 886 வகையான மருந்துகளின் விலையைக் குறைத்துவிட்டதாகவும், மக்கள் இதைப் பயன்படுத்திக் கொள்ளுமாறும் மைய அமைச்சர் அறிவித்துள்ளார்.


விலைக் கட்டுப்பாட்டுக்குள் அத்தியாவசிய மருந்துகள் இல்லாததாலும், மருந்துகளின் விலை தாறுமாறாக உயர்ந்துவிட்டதாலும் சாதாரண நோய்களுக்கே கூட சாமானிய மக்கள் நூற்றுக்கணக்கான ரூபாய்களைச் செலவிட வேண்டியுள்ளது. விலைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட வேண்டிய அத்தியாவசிய மருந்துகள் என அரசு முன்வைத்துள்ள நகல் கொள்கை அறிக்கையில் கூட, காசநோய், மலேரியா, ரத்தசோகை, சர்க்கரை வியாதி, இரத்தக் கொதிப்பு முதலான நோய்களுக்கான மருந்துகளே இல்லை. வாந்தி பேதியால் அவதிப்படும் நோயாளிகளுக்கு அவசியமான உப்பு சர்க்கரை கரைசல் பொடி கூட விலைக் கட்டுப்பாடு பட்டியலில் இல்லை. இதுதவிர இன்னும் ஏராளமான உயிர் காக்கும் மருந்துகள் இந்தப் பட்டியலுக்குள் கொண்டு வரப்படவில்லை. இதனால் அநியாய விலை விற்கும் மருந்துகளை வாங்க முடியாமல் கோடிக்கணக்கான மக்கள் அவதிப்படுகிறார்கள். அல்லது மருந்துக்காக பெருமளவில் செலவிட்டு கடனாளியாகி நிற்கிறார்கள். சாதாரண நோய்க்காக, ஒவ்வொரு புறநோயாளியும் தனது மொத்த மருத்துவ செலவில் மூன்றில் இரண்டு பங்கு தொகையை மருந்துமாத்திரைகளுக்காகச் செலவிடுவதாக, இந்திய அரசின் 55வது சுற்று தேசிய மாதிரிக் கணக்கெடுப்பு அறிக்கையே குறிப்பிடுகிறது. 1995இல் இரத்த சோகைக்கான மருந்தின் விலை 177 சதவீதம் உயர்ந்தது; காசநோய் தடுப்புக்கான மருந்தின் விலை 90 சதவீதம் உயர்ந்தது. இம்மருந்துகளும் இன்னும் பலவும் மேலும் விலை உயர்ந்துள்ளனவே தவிர, இன்றுவரை குறையவில்லை. உதாரணமாக சிட்ரிஜைன், நிமிசூலைடு, ஓமெப்ராஜோல் ஆகிய பரவலாக விற்கப்படும் மருந்துகளின் மூலம் 1000 சதவீதம் அளவுக்கு இலாபமீட்டி மருந்துக் கம்பெனிகள் கொள்ளையடித்துள்ளதாக இரசாயனத் துறை அமைச்சகமே கூறுகிறது.


இந்தப் பகற்கொள்ளை போதாதென்று, ""பொதுவான'' மருந்துகளை விலைக் கட்டுப்பாடு பட்டியலிலிருந்து விலக்கி விடுமாறு பன்னாட்டு ஏகபோக மருந்துக் கம்பெனிகள் இந்திய அரசை நிர்பந்தித்து வருகின்றன. கடந்த மார்ச் மாதத்தில் அமெரிக்க அதிபர் புஷ் இந்தியாவுக்கு வந்தபோது, பிரதமரிடம் இதுபற்றி வலியுறுத்தியுள்ளார். இதைத் தொடர்ந்து மருந்து மற்றும் ஒப்பனைப் பொருட்கள் சட்டத்தை (ஈஇஅ)த் திருத்தியமைக்க அரசு பரிசீலித்து வருகிறது. இச்சட்டப்படி, ஒரு புதிய மருந்து சந்தைக்கு வருமுன் அதன் பாதுகாப்புத் தன்மை, நோயைக் கட்டுப்படுத்தும் ஆற்றல், தரம் ஆகியவற்றுக்காக இந்திய மருந்துக் கட்டுப்பாடு ஆணையரிடம் (ஈஇஎஐ) அனுமதியும் சான்றிதழும் பெறவேண்டும். இந்த விதியை நீக்கி விடுமாறு பன்னாட்டு ஏகபோக மருந்துக் கம்பெனிகள் நிர்பந்திக்கின்றன.


மேலும், ""பொதுவான'' மருந்துகள் என்ற வகையின் கீழ் ஒரு புதிய மருந்து தயாரித்தால், அப்பொது மருந்தை உருவாக்கிய நிறுவனத்துக்கு புதிய மருந்தைத் தயாரித்துள்ள நிறுவனம் கப்பம் கட்ட வேண்டும் என்று புதிய விதியை உருவாக்குமாறு வலியுறுத்தி வருகின்றன. உதாரணமாக, ""பாரசிட்டமால்'' என்ற காய்ச்சலுக்கான பொதுவான மாத்திரையை, ஒரு உள்நாட்டு மருந்து நிறுவனம் புதிய கலவையுடன் புதிய பெயரில் விற்க முனைந்தால், அந்த நிறுவனம், பொது மருந்தைக் கண்டுபிடித்த ஏகாதிபத்திய நிறுவனத்துக்குக் கப்பம் கட்டவேண்டும் என்கின்றன. இதற்கேற்ப மருந்துப் பொருட்கள் சட்டம் திருத்தப்பட்டால், மருந்து விலைகள் தாறுமாறாக உயரும்; பன்னாட்டு ஏகபோக நிறுவனங்களின் ஆதிக்கமும் கொள்ளையும் கேள்விமுறையின்றித் தொடரும்; உள்நாட்டு மருந்துக் கம்பெனிகள் மலிவான விலையில் ""பொதுவான'' மருந்துகளை உற்பத்தி செய்ய முடியாமல் முடங்கிப் போகும். சாமானிய மக்கள் சாதாரண தலைவலி காய்ச்சலுக்கான ""பொதுவான'' மருந்துகளைக் கூட வாங்க முடியாதபடி அவற்றின் விலைகள் எட்டாத உயரத்தில் இருக்கும்.


ஏகாதிபத்தியங்களின் மறுகாலனியாதிக்கக் கொள்ளைக்கு ஏற்ப இந்திய ஆட்சியாளர்கள் ஏற்கெனவே கம்பெனிகள் சட்டம், ஏகபோக தடுப்புச் சட்டம், அந்நியச் செலாவணி முறைப்படுத்தல் சட்டம், விதைச் சட்டம் எனப் பல்வேறு சட்டங்களை மாற்றியமைத்து விட்டனர். எஞ்சியிருக்கும் மருந்துப் பொருட்கள் கட்டுப்பாடு சட்டத்தையும் மாற்றியமைக்க இப்போது முயற்சித்து வருகின்றனர். ஏற்கெனவே மருந்துகளின் விலையேற்றக் கொள்ளையால் தத்தளித்துக் கொண்டிருக்கும் கோடானுகோடி உழைக்கும் மக்கள் மீது, மிகக் கொடிய மறுகாலனியத் தாக்குதலை ஏவி விடுவதற்கான ஏற்பாடுகளை வேகவேகமாக காங்கிரசு ஆட்சியாளர்கள் செய்து வருகின்றனர். இந்நிலையில், பன்னாட்டு ஏகபோக மருந்துக் கொள்ளையர்களின் ராஜ்ஜியத்தை நாம் அனுமதிப்பதா? அல்லது இக்கொள்ளைக் கூட்டத்துக்கு கதவை அகலத் திறந்துவிடும் மறுகாலனியாக்கத்திற்கு எதிராகப் போராடுவதா? நாட்டுப்பற்றும் சமூக உணர்வும் கொண்ட ஒவ்வொரு வரையும் உலுக்கும் கேள்விகளே இவை.


· குமார்

1 comment:

அசுரன் said...

காப்புரிமைச் சட்டம் கொண்டு வந்ததின் பின்னணியே இப்படி இந்திய மருந்துச் சந்தையை முற்றாக கபளீகரம் செய்யும் வெறீதானே...

இப்போது இந்த சட்டத் திருத்த மாய்மாலஙகள் அந்த பெரிய திட்டத்தின் ஒரு அங்கமாகவே செயலப்படுத்தப்படுகின்றன.

இது குறித்து ஒரு தெளிவான புரிதலின்றி இருந்த நிலையில் இந்த கட்டுரை நல்ல கோணத்தில் பிரச்சனையை அணுகியிருக்கிறது.

// இந்திய ஆட்சியாளர்கள் ஏற்கெனவே கம்பெனிகள் சட்டம், ஏகபோக தடுப்புச் சட்டம், அந்நியச் செலாவணி முறைப்படுத்தல் சட்டம், விதைச் சட்டம் எனப் பல்வேறு சட்டங்களை மாற்றியமைத்து விட்டனர். எஞ்சியிருக்கும் மருந்துப் பொருட்கள் கட்டுப்பாடு சட்டத்தையும் மாற்றியமைக்க இப்போது முயற்சித்து வருகின்றனர். ஏற்கெனவே மருந்துகளின் விலையேற்றக் கொள்ளையால் தத்தளித்துக் கொண்டிருக்கும் கோடானுகோடி உழைக்கும் மக்கள் மீது, மிகக் கொடிய மறுகாலனியத் தாக்குதலை ஏவி விடுவதற்கான ஏற்பாடுகளை வேகவேகமாக காங்கிரசு ஆட்சியாளர்கள் செய்து வருகின்றனர். இந்நிலையில், பன்னாட்டு ஏகபோக மருந்துக் கொள்ளையர்களின் ராஜ்ஜியத்தை நாம் அனுமதிப்பதா? அல்லது இக்கொள்ளைக் கூட்டத்துக்கு கதவை அகலத் திறந்துவிடும் மறுகாலனியாக்கத்திற்கு எதிராகப் போராடுவதா? நாட்டுப்பற்றும் சமூக உணர்வும் கொண்ட ஒவ்வொரு வரையும் உலுக்கும் கேள்விகளே இவை.
///

ஆம், நாட்டுப்பற்றும் சமூக உணர்வும் கொண்டவர்களை உலுக்கும் கேள்விகள் இவை.... சில அறிவார்ந்த நேர்மையற்ற அறிவு ஜீவிக்களின் அடிமை மனநிலைக்கு இவை ஒரு பொருட்டல்ல....

மக்களின் வெஞ்சினமே இவர்களின் பொறுப்பற்ற மோனநிலைக்கு வேட்டு வைக்கும்......

அசுரன்